“நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற் குப்பாதல் சான்றோர் கடன் மு.வ விளக்க உரை: நட்பிற்க்கு உறுப்பாவது நண்பனுடைய உரிமைச் செயலாகும், அந்த உரிமைச் செயலுக்கு உடன்பட்டவராதல் சான்றோரின் கடமையாகும்.”
“இப்போ தான் உடம்பு சரியாகியிருக்கு. இன்னும் இரண்டு நாள் லீவு எடுக்க கூடாதா?”, என்று முணுமுணுத்த தாயை லேசாய் நிமிர்ந்து பார்த்த படி உணவை உண்ண ஆரம்பித்திருந்தான்.
“நீ வாத்தி யா இருக்கலாம் டா அதுக்காக எங்ககிட்டேயே இந்த முறைப்பெல்லாம் வைச்சுக்காத சொல்லிட்டேன்.”, என்றதில் லேசான புன்னகை அவனிடத்தில்.
அடுத்து ஜானகி ஏதோ கூற வருவதற்குள் அவரது கணவன் கோபாலனும் அவர் அண்ணன் ஸ்ரீதரும் வந்து அமர இருவருக்குமாய் தட்டை வைத்து உணவைப் பரிமாறினார்.
“என்ன ஜானகி பிள்ளையை என்ன சொன்ன அமைதியா சாப்பிடுறான்?”
“உங்க புள்ளையை யாரும் ஒண்ணும் சொல்லலை மாமா.. நீங்க சாப்பிடுங்க.”, என்றவர் கணவரை ஒரு பார்வை பார்த்து விட்டு தண்ணீர் எடுத்து வரச் சென்றார்.
“காய்ச்சல் குறைஞ்சுருக்கா இளா?”
“ஆமா பெரியப்பா இப்போ ரொம்பவே ஓகே தான்.”
“ஹாய் ஹாய் சித்தப்பூ..”, என்றபடி வந்து அமர்ந்தான் மகிழ்வேலன்.
“வாடா மகனே..”, என்ற தம்பியை முறைத்தவராய் ஸ்ரீதர்,
“ஏன் டா படிச்ச குடும்பம் மாதிரியா டா இருக்கு நீங்க பேசுறதெல்லாம். சித்தப்பூ மகனே.. ஏன் டா..”
“சும்மா அவனை எதாவது சொல்லாதீங்க ண்ணே.. சாப்பிடுங்க..”
“என்ன டா தம்பி காலேஜுக்கு கிளம்பிட்ட போல..”
“ம்ம் நாலு நாளுக்கே செம போர்..”
“இருக்காதா பின்னே காலேஜுக்கு போனோமா கலர் கலரா..”, என்றதில் இப்போது இளன் தன் அண்ணனை முறைத்தான்.
“உன்கிட்ட போய் பேசினேன் பாரு..”, என்றவன் தட்டோடு தலையை குனிந்து கொண்டவனாய் கடகடவென உணவை முடித்து கை கழுவி வந்த நேரம் ஜானகி அவனுக்கான காபியை நீட்ட தனது கையையும் வாயையும் அவரது புடவை தலைப்பில் துடைத்துக் கொண்டவனாய் காபியை குடித்து விட்டு அவருக்கு கையசைத்து சமையலறைக்குள் தன் அன்னையை பார்க்க ஓடினான்.
“ம்மா நான் கிளம்புறேன்.”
“சரி வேலா வரும் போது அந்த கடையில் பிள்ளைக்கு சூப் வாங்கிட்டு வா என்ன வாயெல்லாம் கசந்து கிடக்கும்.”
“நல்ல அம்மா.. இப்போ பாரு அவனையே கொஞ்சிட்டு இரு நீ..”
“டேய்..”
“சரி சரி நோ டென்ஷன் செல்ல மம்மி..”, என்றவன் தாயின் கன்னம் கிள்ளி கையசைத்து கிளம்பியிருந்தான்.
ஸ்ரீதரும் கோபாலனும் உடன் பிறந்தவர்கள். நடுத்தர குடும்பம் அவர்களுடையது.
இருவருமாய் படிப்பை முடித்து ஸ்ரீதர் ரயில்வேயில் பணியில் அமர கோபாலன் ராணுவத்தில் சேருவதாய் கூறினார்.
பெற்றவர்களுக்கு விருப்பமே இல்லை எனினும் தம்பியின் விருப்பத்திற்காக அவர்களிடம் பேசி சம்மதிக்க வைத்திருந்தார் ஸ்ரீதர்.
ஸ்ரீதருக்கு ரங்கமணியோடு திருமணம் முடிய அடுத்த வருடமே மகிழ் வேலன் பிறந்திருந்தான்.
அடுத்ததாய் கோபாலனுக்கும் ஜானகிக்கும் திருமணம் முடிய அந்த சிறு வயதிலேயே ராணுவ உடையில் பார்க்கும் தன் சித்தப்பா என்றால் அவனுக்கு அத்தனை பிடித்தம்.
விடுமுறையில் வந்தால் கோபாலனோடு தான் அவனது பொழுதுகள் அனைத்தும்.
தோளை விட்டு இறங்கவே மாட்டான். சித்தப்பாவோடே இருப்பதால் சித்தியும் அவனுக்கு செல்லம்.
இப்படியான காலத்தில் அவனை விட மூன்று வயது இளையவனாய் கோபாலன் ஜானகிக்கு அந்த குடும்பத்தின் கடைக்குட்டி இளன் பிறந்தான்.
எப்போதுமே தன் அண்ணன் பிள்ளைகளின் மேல் சித்தப்பாக்கள் காட்டும் அன்பில் ஒரு சதவிகிதம் கூட பெரியப்பாக்களால் தம்பி பிள்ளைகளுக்கு கிடைக்காது.
ஆனால் இங்கு ஸ்ரீதருக்கு தன் தம்பி மகன் தான் அத்தனைப் பிடித்தம். தம்பியே தனக்கு பிள்ளை போன்றவன் இதில் அவனுக்கே குழந்தையாய் வந்திருப்பவனை அவ்வளவு பிடித்தது.
தன் பிள்ளையைப் போலவே அவன் தவழுவது நிற்பது நடப்பது என அனைத்தையும் பார்த்து பார்த்து பூரித்து போவார்.
இளனிற்கு இரண்டரை வயதாய் இருந்த போது விடுமுறைக்கு வந்து ஊர் திரும்ப தயாராகிய தந்தையை விடாமல் அழுது தீர்க்க அது காய்ச்சலில் கொண்டு போய் விட்டிருந்தது.
ஒரு வாரமாய் அப்பா அப்பா என பிள்ளை அனத்துவதைத் தாங்காதவராய் தம்பிக்கு அழைத்து விட்டிருந்தார் ஸ்ரீதர்.
“கோபாலா..”
“சொல்லுங்கண்ணே..”
“நீ வேலையை விட்டுட்டு இங்கேயே வந்துரு..”
“என்னண்ணே திடீர்னு.. இது..”
“இங்கே பாரு பிள்ளை உன்னை காணாம ஏங்கி போறான். உனக்கு பிடிச்சுதுனு இத்தனை வருசமும் விட்டாச்சுல. இனியும் இப்படி விருந்தாளி மாதிரி வந்து போறதெல்லம் வேண்டாம்.
குடும்பத்தையும் பார்க்கணுமா இல்லையா? ஜானகியும் பாவம் பிள்ளையை சமாளிக்க திணறிப் போறா. நீ யோசிச்சு சீக்கிரமே இங்கே வரப் பாரு..”
“அண்ணே.. இளா சின்ன பிள்ளை.. வளர வளர சரியாகிருவான். இதுக்காக அவசரப்பட்டு..”
“இங்கே பாரு நான் சொல்றதை சொல்லிட்டேன். அப்பறம் உன் இஷ்டம்”, என்றவர் அழைப்பைத் துண்டித்து விட கோபாலனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
சரி அண்ணன் ஏதோ கோபத்தில் கூறியிருப்பார் சரியாகி விடுவார் என்று பார்த்தால் அடுத்த பத்து தினங்களுக்கு தம்பியோடு பேசவே இல்லை ஸ்ரீதர்.
இங்கு ரங்கமணியும் ஜானகியுமே கூட எடுத்துக் கூறியும் ஒன்றும் வேலைக்காகாமல் போனது.
இறுதியில் ஸ்ரீதர் தான் வெற்றி பெற்றார். கோபாலன் வேலையை விடுவதாய் ஒப்புக் கொள்ள அதன் பின்னரே இயல்பானார்.
இங்கு வந்த பின் இருந்த பணத்தில் சிறியதாய் ஒரு சூப்பர் மார்கெட் ஒன்றைத் திறந்து கவனிக்க ஆரம்பித்திருந்தார் கோபால்.
தன் அண்ணன் தன் மகனின் மீது காட்டும் பாசத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சியிருக்கும் கோபாலுக்கு.
அந்த வீட்டில் இளன் அப்பா என்று அழைத்ததை விட பெரியப்பா என்று அழைத்தது தான் அதிகம்.
இப்படியாய் வருடங்கள் கழிய மகிழ்வேலன் தனது சித்தப்பாவைப் போலவே ராணுவ பணிக்குச் செல்வதாய் கூற ஜானகியும் ரங்கமணியும் அவனை ஒரு வழியாக்கி விட்டிருந்தனர்.
அதுவே இப்போது அவன் சர்கிள் இன்ஸ்பெக்டராய் இருக்க காரணம். தனக்கு பிடித்த வேலையை விட குடும்பம் தான் முதன்மை என்று எண்ணியவனுக்கு அது அத்தனை கடினமாகவும் தெரியவில்லை.
இளன் பிச் டி முடித்து கல்லூரியில் விரிவுரையாளனாய் இருக்கிறான். ஏகத்துக்கும் அமைதி மகிழ்வேலன் பட்டாசு எனில் இளன் சாந்த ஸ்வரூபன்.
மொத்தத்தில் கடைக்குட்டி வீட்டின் மூத்த பிள்ளை போல் இருக்கும். பெரியவன் அதிலும் காவலன் கல்லூரி பையனாய் சுற்றித் திரிவான் வீட்டில்.
ஆனால் எல்லாம் வாசல் படியைத் தாண்டும் வரை தான். வெளிவுலகில் தங்கள் பிள்ளைகளின் மதிப்பு எப்போதுமே பெருமையூட்டுவதாய் பெரியவர்களுக்கு.
“ம்மா போய்ட்டு வரேன். பெரியம்மா வரட்டுமா..”
“பாத்து போயிட்டு வா டா..”, என்ற அன்னைகளின் பதிலில் புன்னகைத்தவனாய் கூடத்திற்கு வந்தவன் தந்தையிடமும் பெரியப்பாவிடமும் கூறி விட்டு கிளம்பியிருந்தான்.
“அண்ணே அந்த பொண்ணு வீட்டுக்கு பதில் சொல்லணுமே?”
“ஆமா கோபாலா நமக்கும் பெருசா எந்த குறையும் தெரிலையே. ஆனால் இவனை நினைச்சா தான் கவலையா இருக்கு எனக்கு. முப்பது வயசு ஆகுது இன்னும் சின்ன பையன் மாதிரி திரியுறான்.”
“வேலா அதெல்லாம் பொறுப்பா இருப்பான்ணே..”
“ம்ம் அவனை விட்டுக் கொடுத்துருவியா நீ. சரி நீ அவன்ட்ட பேசிட்டு சொல்லு அப்பறம் பொண்ணு வீட்டுக்கு கூப்பிட்டு பேசுறேன்.”
“காலையிலேயே பேசிருக்கலாம் ணே.”
“அவனும் நீயும் சேர்ந்து இருக்கும் போது என்னத்த டா மனுசன் பேச முடியும். நீயே கேட்டு சொல்லு.”, என்ற அண்ணனின் பதிலில் லேசான மென்னகை கோபாலனிடத்தில்.
அதே மனநிலையில் மகிழ் வேலனிற்கு அழைத்து விட்டு அவன் அழைப்பை ஏற்பதற்கு காத்திருந்தார்.
“சொல்லுங்க சித்தப்பா..”, என்ற மகனின் கணீர் குரலில் அவனருகில் ஆள் இருப்பது புரிந்து விட,
“சரி டா நீ ஃப்ரீயா இருக்கும் போது கூப்பிடு.”, என்று அழைப்பைத் துண்டித்திருந்தார்.
அடுத்த அரை மணி நேரத்தில் அவனே அழைக்க கோபாலன் தனதறைக்கு வந்து அமர்ந்த வண்ணம் பேச ஆரம்பித்தார்.
“வேலா முக்கியமான விஷயம்..”
“என்ன சித்தப்பூ குரலை கேட்டா ஆப்பு எனக்கு தான் போல.”
“டேய் மனுசனை பேச விடு.”
“சரி சொல்லுங்க கேட்போம்.”
“உனக்கு ஒரு வரன் பார்த்துருக்கோம்.”
“எதே!!”
“ஏன் டா கத்துற..”
“கத்துறேனா? நேத்து லீவுனு வீட்டில் இருந்தேன். காலையிலேயும் உங்க பக்கத்துல உட்காந்து தான் சாப்ட்டேன். அப்போ எல்லாம் சொல்லாம..”
“ஜோசியர் நேத்து நைட் தான் டா பொருத்தம் பார்த்து சொன்னார். காலையிலே அண்ணே பேசுவார்னு பார்த்தா நீ அவரை டென்ஷனாக்கி விட்டுட்ட..”
“…”
“என்ன டா கல்யாணத்தை பத்தி பேசுறேன்.. பொண்ணு யாரு என்ன எதுவும் கேட்க மாட்டியா?”
“ம்ம் இல்ல என் குடும்பத்துக்கு இப்போவாவது என் மேல இரக்கம் வந்துதேனு நினைச்சு பீல் பண்ணிட்டு இருக்கேன்..”
“இப்போ தான் தெரியுது அண்ணே ஏன் என் தலையில் பொறுப்பை கட்டுனாருனு. ஏன் டா இரண்டு வருஷம் முன்னாடியே கேட்டதுக்கு நீ தான இப்போ வேண்டாம்னு சொன்ன?”
“சொன்னேன் அதுக்காக இப்படி அம்போனு விடுவீங்கனு யாரு நினைச்சா. நானாவே வந்து கல்யாணத்துக்கு ரெடினா சொல்ல முடியும்?”
“உன்னோட ரோதனை டா.. சரி பொண்ணு போட்டோ அனுப்புறேன் பார்த்து சொல்லு..”
“உங்களுக்கு எல்லாமே ஓகே வா?”
“ம்ம் ஆமா டா நல்ல குடும்பம் பொண்ணும் லட்சணமா இருக்கா. பெங்களூரில் ஐடியில் வேலை பார்க்குதாம். கல்யாணத்துக்கு அப்பறம் வேலையை விட்டுடும் போல.”
“ஓ…”
“டேய் ரொம்ப சோதிக்காத..”
“சித்தப்பூ நீங்க எல்லாம் பார்த்துட்டா எனக்கும் சம்மதம் தான். நீங்க ஆக வேண்டியதை பாருங்க..”
“நல்லது டா வேலா. நான் அண்ணன் கிட்டே பேசுறேன். வைச்சுரட்டுமா..”
“ம்ம் போட்டோவை மறந்துறாதீங்க..”, என்றபடி வேலன் அழைப்பைத் துண்டித்திருக்க அவரை மறந்து சற்று அதிகமாகவே சிரித்திருந்தார் கோபாலன்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.