Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 6

Advertisement

SHALU shalu

Well-known member
Member
மாலை வீட்டிற்கு வந்து சேர்ந்த ஸ்வரூபனுக்குச் சிற்றுண்டிரைத் தந்து விட்டு, அவனிடம் மெழுகுவர்த்திகளைக் காட்டினார் கவிபாரதி.

தானே மறந்து விட்டிருந்தாலும், தன்னுடைய அன்னை ஞாபகமாக எடுத்துக் காட்டுகிறாரே, என்றபடி, அவற்றைப் பார்வையிட்டான் மகன்.

அதன் வடிவமைப்பும் கண்களைக் கவர்ந்து இழுத்தது, வாசனையும் நாசிக்கு விருந்தாக அமைந்தது.

அவற்றைக் கைகளில் வைத்துக் கொண்டு, அப்படியே சிறிது நேரம் மெய்மறந்து அமர்ந்து விட்டான் ஸ்வரூபன்.

அவை நல்ல நறுமணத்தைக் கொடுத்து, தன்னுடைய மனதையும், உடலையும் திருப்திப்படுத்திக் கொண்டு இருப்பதை உணர்ந்தான்.

“நீங்க சொன்ன மாதிரியே இதோட வடிவமும், மணமும் ரொம்பவே நல்லா இருக்கு ம்மா! மூனு தான் வாங்குனீங்களா?” என்றான் மகன்.

“ஆமாம் ப்பா. நீ தான் கொஞ்சமாக வாங்க சொன்னியே? அதான்” என்று அவனிடம் கூறினார் கவிபாரதி.

“இன்னும் கூட வாங்கலாம் மா. காசுக்குத் தக்க, மதிப்பான பொருள் தான்!” என்று அதன் நறுமணத்தை முகர்ந்து கொண்டே உரைத்து விட்டு,

அந்தச் சாயங்கால வேளையிலேயே, அவளிடமிருந்து வாங்கிய மெழுகுவர்த்திகளுள், ஒன்றைப் பொருத்தி வைத்தான் ஸ்வரூபன்.

ஒரு ஊரிலேயே இருந்து கொண்டு, அப்பொருளை வடிவமைத்தப் பெண்ணின் முகத்தை அவன் பாரத்தது இல்லை என்றால், அது பொய்யாகத் தான் இருக்கும்.

அவனும், அவ்வூரின் நூலகத்தில் பணிபுரியும், மெழுகுவர்த்திகளைச் செய்து விற்கும் பெண்ணான ருத்ராக்ஷியை, வெகு அரிதாகப் பார்த்திருக்கிறான் தான். ஆனால், பேசியது கிடையாது. பார்ப்பதோடு சரி. அதுவும், நூலகத்திற்குச் சென்று ஏதாவதொரு புத்தகத்தை எடுக்கும் போது தான், அந்தச் சிறிய சந்திப்பு நிகழும்.

அதற்குப் பிறகு, அந்தச் சந்திப்பையும் மறந்து விடுவான் ஸ்வரூபன்.

ஆனால், இப்போதோ, அவள் தங்கள் வீட்டிற்கு வரவில்லை என்றாலும், சுகந்த மணத்தைக் கொடுத்து, தாய்க்கும், மகனுக்கும் ஏன் அவளுக்குமே தெரியாமலேயே, அவர்களது மனதினுள் இடம் பிடித்து விட்டாள் ருத்ராக்ஷி.

அவளது கை செய்த மாயாஜாலத்தில், அன்று முழுவதும், தாயும், மகனும் ஏகாந்த மணத்தில், லயித்துப் போயினர்.

இதையெல்லாம் அறியாமல், வழக்கம் போல, தனது அன்றாட வேலையை முடித்தவள், தன் உடன் பிறந்தவனுக்கு அலைபேசி வழியாக, அழைத்துப் பேசினாள் ருத்ராக்ஷி.

“ஹாய் ம்மா” என்று தங்கையிடம் கனிவாகப் பேசினான் காஷ்மீரன்.

“அண்ணா, பொண்ணை ஓகே பண்ணிட்டியா?” என்று அவனிடம் வினவினாள் தங்கை.

“ஹாங். ஒரு பொண்ணோட ஃபோட்டோ பார்த்தேன், அவங்களே ஃபோன் பண்ணாங்கப் பேசினேன், இப்போ மீட் பண்ணலாம்ன்ற வரைக்கும் வந்திருக்கோம்” என மொத்தத்தையும் அவளுக்கு விவரித்துக் கூறினான் தமையன்.

“ஹைய்! சூப்பர் ண்ணா!! அது யாருன்னு சொல்லுங்க?” என்று ஆர்வ மிகுதியில் அவனிடம் கெஞ்சிக் கேட்டாள் தங்கை.

“வெயிட் ம்மா. நான் போய் மீட் பண்ணிப், பேசிப் பார்த்துட்டுக் கன்ஃபார்ம் ஆனதும் சொல்றேன் டா” என்று அவளைக் கையமர்த்தி வைத்தான் காஷ்மீரன்.

“அட்லீஸ்ட், அவங்கப் பேரையாச்சும் சொல்லுங்க அண்ணா” என்று விடாமல் கேட்டவளிடம்,

“மஹாபத்ரா!” என்ற பெயரைச் சொன்னான்.

“வாவ்! யூனிக் நேம்! அவங்க கிட்டப் பேசிட்டு வந்து சொல்லுங்க” என்றாள் ருத்ராக்ஷி.

“ஷ்யூர் டா”

“அவங்களோட புரொஃபஷன் என்ன ண்ணா?” என்று மேற்கொண்டு, விவரங்களைக் கேட்டாள்.

“ஒரு ஃபேமஸான ஸ்கூலில், பிஹேவியரல் டெக்னீஷியனாக (Behavioral technician) இருக்காங்க” என்று தங்கையிடம் தெரிவித்தான் காஷ்மீரன்.

“ரெண்டு பேரோட புரொஃபஷனுமே செட் ஆகுது ண்ணா, இவங்களோட கேரக்டரும், உங்களுக்கு மேட்ச் ஆகும்ன்னு ஷூயராகத் தோனுது. ஆல் தி பெஸ்ட்” என்று தமையனுக்கு வாழ்த்துக் கூறினாள் ருத்ராக்ஷி.

“ஹாஹா, தாங்க்ஸ் மா” என்று தன் இளையவளுக்கு, நன்றி கூறி விட்டு, வேலை நிமித்தமாக அழைப்பை வைத்து விட்டான் அவளது அண்ணன்.

_________________

“அவருக்கு வொர்க் இருக்கிறதால், மீட்டிங் தள்ளிப் போகுது ம்மா” என்று தன் தாய்க் கனகரூபிணியிடம் கூறிக் கொண்டு இருந்தாள் மஹாபத்ரா.

“அப்போ, நேரடியாகப் பொண்ணுப் பார்க்க வர சொல்லி, சந்திரதேவ் சார் கிட்டச் சொல்லிடலாம்” என்றார்.

“வேணாம் மா. நானும், அவரும் எப்படியாவது, டைம் ஃப்ரீயாக்கிட்டு, மீட் பண்றோம்” என அவர்களிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டவள், அதைக் காஷ்மீரனிடமும் அறிவித்து விட்டாள்.

அவனோ,”ஐயையோ! அப்போ நம்ம மீட்டிங்கை எக்ஸிக்கியூட் செய்திடலாம்” என்று இரண்டாவதாக ஒரு நாளையும், நேரத்தையும் தேர்ந்தெடுத்தவர்கள், அதை தள்ளிப் போடாமல், அன்றே தங்களது சந்திப்பைச் சாத்தியப்படுத்திக் கொண்டார்கள் இருவரும்.

அவர்களது சந்திப்பு மாலை நேரத்தில் நிகழ்வதால், பூங்கா ஒன்றில், ஆசுவாசமாக உட்கார்ந்துப் பேசலானார்கள் காஷ்மீரனும் மஹாபத்ராவும்.

“ம்ஹ்ம். இப்போ சொல்லு ம்மா”

“குழந்தைகளோட ப்ராடெக்ட்டை விற்கிறதால், ரொம்ப பொறுமைசாலியாக இருப்பீங்களா?” என்று அவனிடம் வினவினாள்.

அதைக் கேட்டதும், திடுக்கிட்டுப் பார்த்தவனோ,”என்னம்மா நீ இப்படியெல்லாம் யோசிச்சிக் கேள்வி கேட்கிற?” என்றான் காஷ்மீரன்.

“யெஸ். இன்னும் நிறைய இருக்கு. முதல்ல இதுக்குப் பதில் சொல்லுங்க” என்று கூறிச் சிரித்தாள் மஹாபத்ரா.

“ஹாங்…! அவ்வளவு பொறுமைசாலி இல்லை. கொஞ்சமாக இருக்கு” என்று கையில் அந்த அளவையும் காட்டிக் கூறினான்.

“ம்ம். அடுத்து, அந்தக் கொஞ்ச பொறுமையும் போச்சுன்னா, கோபம் எந்தளவுக்கு வரும்?” என்று அடுத்தக் கேள்விக் கணையைத் தொடுத்தாள்.

“அது அளவுக்கு மீறி வரும்” எனப் பளிச்சென்று உரைத்தான் காஷ்மீரன்.

“எதே?” என்றவளது வாய் ஆவெனப் பிளந்து விட்டது.

“ஆமாம். எல்லாருக்குமே கோபம் வரும் தானே?” என்று தோள்களைக் குலுக்கிக் கொண்டு கேட்டான்.

“வரும் தான். ஆனால், அளவோட இருக்கனும்” என்று கறாராக சொன்னாள் மஹாபத்ரா.

“உனக்கும், அதே தான்!” என்று மறைமுகமாக மிரட்டினான் காஷ்மீரன்.

“சரிங்க. சம்மதம்!” என ஆமோதித்துக் கொண்டாள்.

மஹாபத்ரா,“அப்பறம், நீங்க சொந்தமாக கம்பெனி வச்சு, அங்கே வேலை பார்க்கிறதால், எப்போ, எத்தனை மணிக்கு, வீட்டுக்கு வருவீங்கன்னுத் தெரியாதுல்ல? அப்போ நான் என்ன செய்யனும்?” என்று அவனிடம் கேட்டாள்.

“உனக்கு இன்ஃபார்ம் பண்ணிடுவேன் மா, இல்லைன்னா, நீயே என்னைக் கான்டாக்ட் பண்ணிக் கேட்கலாம். ஆனால், நான் ஃப்ரீயாக இருந்தால் தான், எல்லாத்துக்கும் ரிப்ளை அண்ட் ரியாக்ட் செய்வேன்” என்றான் காஷ்மீரன்.

“ஓகே - ங்க.கல்யாணத்துக்கு அப்பறம், நான் வேலைக்குப் போகனும், போகக் கூடாதுன்னுக் கண்டிஷன் போடவே கூடாது!” என்று கவனமாக கூறினாள் மஹாபத்ரா.

“அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன். உனக்கும் பிடிக்கலைன்னா, நீ போகாமல் இருக்கலாம்” எனக் கூறி, அவ்விடயத்தையும் ஒன்றுமில்லாமல் தூசி தட்டி விட்டான்.

“சூப்பர். அப்பறம், உன் பேரன்ட்ஸைப் பார்க்கப் போக, அவங்க இங்கே வர்றது எல்லாம் வச்சுக்கக் கூடாதுன்னுக், கண்டிப்பாக சொல்லவே கூடாது!” என்று தனது நிபந்தனையை, அவனிடம் தெளிவாகச் சொல்லி விட்டாள்.

“எங்க வீட்டில் அப்பாவும், தங்கச்சியும் மட்டும் தான், அப்படியிருக்கும் போது, உன் பேரன்ட்ஸ் வந்தால், அது எங்களுக்கு சந்தோஷமாகத் தான் இருக்கும். தொந்தரவாக நினைக்க மாட்டோம்” என்று அவளுக்கு உறுதி அளித்தான் காஷ்மீரன்.

- தொடரும்

அடுத்தடுத்தப் பதிவுகள், உடனுக்குடன் வரவிருப்பதால், சிறிய அளவிலான பதிவுகளாகத் தான் வரும் நண்பர்களே!
 
எப்படியோ காஷ்மீரன், மஹாபத்ரா ஒரு முடிவுக்கு வந்துட்டாங்க. அருமை 😍😍😍😍
 
Top