Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கடல் நீ கரையும் நீ -26

Advertisement

Geetha Boopesh

Well-known member
Member
அத்தியாயம் - 26

அவளது அதிர்ச்சியை உள்ளூர ரசித்தபடி காரை செலுத்திக் கொண்டிருந்தான் ப்ரித்வி.

சம்யுவோ வாயை இறுக்கமாக மூடிக் கொண்டிருந்தாள்.. பொதுவாக மது அருந்திவிட்டால் உளறி கொட்டுவார்கள் என்பார்களே .. சும்மாவே இவன் தலைக்கேறுவான். ஏதாவது உளறி விட்டால்..அவ்வளவுதான் ! நாம் வேறு கோக் என்று எண்ணி முழு பாட்டிலையும் குடித்துவிட்டோமே!

லேசாக தலை சுற்றுவதுபோல் இருக்க .. மதுவின் தாக்கத்தை பற்றி புத்தகங்களில் படித்திருந்ததெல்லாம் நினைவு வந்தது.

"இங்கே பாரு.. நான் இப்போ ஆல்கஹால் எடுத்துருக்கேன்னு என்கிட்டே அட்வான்டேஜ் எடுக்கலாம்னு மட்டும் நினைக்காதே . புரியுதா ?"

இதழோரம் சிறு புன்னகை நெளிய அவளை திரும்பி பார்த்தவன்.."அப்படி என்ன உன்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துப்பன்னு நினைக்கிற ?" என்று புரியாதவனை போல கேட்க ..

"தெரியாத மாதிரி நடிக்காத! நான் கராத்தேல ப்ரவுன் பெல்ட் !"

"நான் ப்ளாக் பெல்ட் மா ! அன்னிக்கு தான் டெமோ காட்டினேனே. மறுபடியும் வேணுமா?"

"ஒரு லாயர் கிட்ட வேலையை காட்டாதே . உன்னை உள்ளே தூக்கி போட்டுடுவேன்"

"அடிச்ச சரக்குல உனக்கு நானும் லாயர்தானு மறந்துடுச்சுன்னு நெனைக்கிறேன். சட்டத்தில் இருக்கிற எல்லா ஓட்டையும் எனக்கு அத்துப்படி."

எந்த பக்கம் போனாலும் கேட் போடுறானே! கொஞ்ச நேரம் அமைதி காப்போம் என்று முடிவெடுத்தவளாய் வாயை ஜிப் போட்டு மூடிக் கொண்டாள் சம்யு.

சிறிது நேரத்தில் வீடு வந்துவிட ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்தவளை பார்த்தவன் " இறங்க போறியாஇல்லை நான் தூக்கிட்டு போய் விடணுமா ?" எனவும் பதறி இறங்கியவள் அவனுக்கு ஒழுங்கு காண்பித்துவிட்டு உள்ளே சென்றாள்.

அவளது சேட்டைகளை ரசித்தபடி நின்றான் ப்ரித்வி!

வீட்டிற்குள் நுழைந்தவள் நேராக உள்ளே சென்று உடை மாற்றி வர , சற்று நேரம் குறைந்திருந்த மழை வலுக்க தொடங்கியது. நிறைந்த தண்ணீர் பானையை யாரோ கவிழ்த்து விட்டதுபோல் வானில் இருந்து மழை கொட்டிக்கொண்டிருக்க மாலை நான்கு மணிக்கே கும்மிருட்டாக இருந்த்து.

ஷாந்தினியும் ராக்கியும் இன்னும் வரவில்லையே என்று கவலை கொண்டவள் அலைபேசியை எடுத்து பார்க்க சுத்தமாக சிக்னலே இல்லை. ப்ரித்வியிடம் சென்று கேட்க ..அந்நேரம் இவர்கள் வந்ததை பார்த்துவிட்டு அவுட் ஹவுசிலிருந்து, வேலை செய்யும் வஜ்ரவேல் தன் குழந்தையை தோளில் தூக்கியபடி வந்தான்.

“ சார் .. இன்னைக்கு ரொம்ப மழையா இருக்கும்னு சொல்ராங்க.. ஊட்டியில் இருந்து வரும் பாதையில் நிலச்சரிவுன்னு பக்கத்து எஸ்டேட் சாமுவேல் சொன்னான் சார்.”

இதைக் கேட்டு சம்யு கவலை கொள்ள .. அவள் முகத்தை படித்தவனாய் “ டோன்ட் வர்ரி ..அவங்க ஊட்டியிலேயே தங்கிட்டதாக மெசேஜ் பண்ணியிருக்காங்க.. “ என்றதும் சமாதானமானாள் சம்யு.

“ எப்பவும் இந்த மாதிரி மழை பெய்வது இங்கே சகஜம் தான் சம்யு. இதை எதிர்கொள்றதுக்கான எல்லா ஏற்பாடுகளும் நம்ம வீட்டில் இருக்கும்”

ஒருபுறம் ஷாந்தினியும் ராக்கியும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்ற நிம்மதி இருந்தாலும் ..இவனுடன் இங்கே தனியாக இருக்க வேண்டுமே என்று மனதுக்குள் சிறு தவிப்பு இருந்தது. அதுவும் வந்ததில் இருந்தே இவன் சரியில்லையே!

அப்போதுதான் கவனித்தாள்... அவர்கள் இருந்த பங்களாவை தவிர்த்து எல்லா இடமும் கும்மிருட்டாக இருக்க ..தூரத்தில் அங்கங்கு வெளிச்ச புள்ளிகள் தென்பட்டன.

"ஏன் வெளியே ரொம்ப இருட்டா இருக்கு ?" என்றாள் ப்ரித்வியை நோக்கி.

அவளது கேள்விக்கு பதிலாய் ஒரு டி வீ எஸ் பிப் டியில் வந்திறங்கினான் ஒரு இளம் வயதினன்.

அவன் முகத்தில் பதட்டம் இருக்க .."சார் ..மழையில நம்ம எஸ்டேட் வீடுகளுக்குள்ள தண்ணி வந்திருச்சு. கரண்டும் இல்லை.எல்லாரையும் நம்ம தொழிற்சாலைக்கு கூட்டிட்டு போய் விட்டிருக்கோம். அங்கேயும் கரண்ட் இல்லை சார் ..ஜெனெரேட்டர் டீசல் கொஞ்சமாகத்தான் இருக்குன்னு சூப்பர்வைசர் சொன்னாரு ..டீசல் கிடைக்குமான்னு பாக்க வந்தேன்.டவுனு பக்கம் போற வழியில நிலச்சரிவாம் ..அங்க போய் வாங்கி வர முடியாது. எல்லாரும் குளிர்லயும் இருட்டிலயும் படுத்திருக்காங்க சார்" சொன்ன அவன் அணிந்திருந்த மழைக்கோட்டையும் தாண்டி தொப்பலாக நனைந்திருந்தான். கையிலும் நெற்றியிலும் ஒரு இடத்தில் ரத்தக்கசிவு தென்பட .."என்னாச்சு முருகா ?" என்று பதறினான் வஜ்ரவேல்.

"வழியில ஒரு மரம் சாஞ்சிடுச்சி அண்ணே! மயிரிழையில் தப்பிச்சேன். கீழ விழுந்ததில் லேசான அடி."

அவ்வளவு ஆபத்திலும் தன் மக்களுக்காக துணிந்து வந்த அந்த இளைஞனை ஆச்சரியமாய் பார்த்தாள் சம்யு. இப்படி உதவ முன்வருபவர்கள் வெகு அபூர்வம் அல்லவா?.

"வீடுகள் பாதுகாப்பாக தானே இருக்கும் ? எப்படி தண்ணீர் வந்தது ?" சம்யு கேள்வியெழுப்ப ..

"மலைப்பகுதியில் சின்ன சின்ன ஓடைகள் இருக்கும். அவை பெருமழை பெய்தால் காட்டாற்று வெள்ளங்களாக மாறிவிடுவதுண்டு . அப்போது அவை போகும் பாதையும் நாம் கணிக்க முடியாது." என்று விளக்கினான் ப்ரித்வி. சொன்னவன் வேகமாக உள்ளே சென்று திரும்ப அவன் கையில் முதலுதவி பேட்டி.

முருகனின் காயத்திற்கு மருந்திட்டவன் .. அவர்களை வீட்டின் பின்புறம் அழைத்து சென்றான்.. அங்கு டீசல் கேன்கள் சில இருக்க ...அவற்றில் ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு மீதியை முருகனிடம் தந்தவன் வீட்டின் உள்ளே சென்று ஒரு மூட்டையில் அரிசியும் பருப்பும் எடுத்து வந்தான். "இதை வைத்து மழை விடும் வரை எதையாவது சமைத்து எல்லாருக்கும் கொடுக்க சொல் " என்று பணிக்க ..."சார்..உங்களுக்கு ?" என்று தயங்கினான் முருகன் .

"தயங்காதே முருகா ! எங்களுக்கு தேவையான எல்லாம் இருக்கு. பாதுகாப்பாக பங்களாவுக்குள் இருக்க போகிறோம் . நீ கவலை படாதே." என்றவன் வஜ்ஜிரவேலை பார்த்து .."நீயும் இவனோடு போய் வா வேலு. தனியாக இவ்வளவும் அவனால் எடுத்து செல்ல முடியாது" என்றான்.

சற்று யோசித்த வஜ்ரவேல் "என் பொஞ்சாதி அவள் அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு அவ பிறந்த வீட்டுக்கு , பாக்க போயிருக்கா.. பாதை துண்டிக்கப்பட்டதால் அவளால வரமுடியலையா ? அவளுக்கு ஏதும் ஆபத்தானு தெரியலையே அய்யா " என்று கலங்கியவன் "பிள்ளை வேற தாயை நெனச்சு அழ ஆரம்பிக்குது . சரி இங்கேயே நின்னு என்ன ஆகப்போகுது ? நான் இவங்களுக்கு உதவியா போறேன்.”

“பிள்ளை இங்கேயே இருக்கட்டும்வேலு. இந்த மழையில எப்படி தூக்கிட்டு போவ ? நீ வரும்வரை நான் பாத்துக்கிறேன்” என்று ப்ரித்வி கூறவும் பிள்ளையை விட்டு கிளம்பினான் வஜ்ஜிரவேலு.


குழந்தை உறங்கி கொண்டிருக்க சம்யு வாங்கி தன் தோளில் சாய்த்துக் கொள்ள ..குழந்தையும் தன் உறக்கத்தை தொடர்ந்தது.

உள்ளே சென்று அமர்ந்தனர் இருவரும்.. வீட்டிற்கு தெரிவித்துவிடுவோம் என்று நினைத்துத்தன் அலைபேசியை எடுத்து பார்த்தாள் சம்யு. உதட்டை பிதுக்கியவளின் அழகை ரசித்தவனாய் "என்ன சம்யு ?" என்றான் ப்ரித்வி.

"சுத்தமா சிக்னல்இல்லை. அம்மாப்பாவுக்கு சொல்லலாம்னு பார்த்தேன். தினமும் இரவு நான் பேசலைன்னா கவலை படுவாங்க."

"ஷாந்தினி மேம் சொல்லியிருப்பாங்க ..கவலை படாதே." என்றதும் ஆறுதல் அடைந்தாள்.

அந்நேரம் திறந்திருந்த ஜன்னல் வழி ஒரு பெரும் காற்று வீச உடல் ஒருமுறை சிலிர்த்து அடங்கியது சம்யுவுக்கு.

அவளுக்கு இவ்வளவு குளிர் பழக்கமேயில்லை. பிறந்தது மதுரையில் .. பள்ளி பருவத்தில் இருந்து சென்னை தான். எப்போதாவது சுற்றுலா சென்றது தான் மலைப்பிரதேசங்களுக்கு ! அதுவும் கடும் கோடையில் என்பதால் இதமான குளிரையே அனுபவித்து பழகியிருந்தாள்.இப்படி எலும்பை துளைக்கும் குளிர் புதிது.

அதிலும் அன்று மழையில் நனைந்தது வேறு உடலில் லேசான நடுக்கத்தை கொடுத்தது. அதை உணர்ந்தவனாய் கதவு ஜன்னல்களை இழுத்து சாத்தியவன் ..ஹீட்டர் அளவை கூட்டி வைக்க கொஞ்சம் உடலில் உஷ்ணம் கூடியது.குழந்தையை கட்டிலில் கிடத்தியவள் ஸ்வெட்டர் குல்லா என்று எல்லாவற்றையும் மாட்டிக் கொண்டு வெளியே வர ..அதிலும் அந்த உடை வெள்ளை நிறத்தில் புலி தோல் போன்று வரிவரியாக , ஃபர் கொண்டு செய்யப்பட்டிருக்க .. பார்த்த ப்ரித்விக்கு சிரிப்பு பொங்கியது.

அவனோ எப்போது போல் ஜீன்சும் டி ஷர்ட்டும் தான் அணிந்திருந்தான். இவனுக்கு மட்டும் குளிராதோ இல்லை என் முன் காட்டிக் கொள்ளாமல் நிற்கிறானோ என்று சந்தேகமாய் பார்த்தாள் சம்யு. அவன் அடிக்கடி குளிர் நேரங்களில் கூட இங்கு தங்குவான் என்பதால் அவனுக்கு பெரிதாக குளிர் உரைக்கவில்லை. அதிலும் அறை ஹீட்டர் தயவில் கதகதப்பாக இருந்தது.

"உனக்கு குளிரவேயில்லையா ப்ரித்வி ?"

வேண்டுமென்றே அவளை வெறுப்பேற்றும் விதமாய் அருகில் இருந்த கோக் பாட்டிலை எடுத்து காண்பித்தான் ப்ரித்வி.

அவள் முறைத்து பார்க்க "அம்மா பயந்து வருதே " என்று போலியாய் பயந்து காட்ட ..அவளது முறைப்பு கூடியது.

"போதும்..உன் சேட்டையெல்லாம் நிறுத்து. இரவு உணவுக்கு என்ன செய்வது?"

"எனக்கு சிக்கன் பிரியாணி ..மட்டன் சுக்கா " என்றான் மிதப்பாக !

"நான் என்ன ஹோட்டல் நடத்துறேன்னு நினைச்சியா ? ஆர்டர் குடுக்கிற ? என்னை பார்த்தா வெயிட்ரஸ் மாதிரி இருக்கா? "

அவள் கோபத்தை ரசித்தவன் மெல்ல முணுமுணுத்தான் "ஆக்சுவல்லி யூ லுக் லைக் எ செக்ஸி டைகிரஸ்"

அரைகுறையாய் அது அவள் காதில் விழ "என்னது?" என்று வெகுண்டெழுந்தாள் சம்யு.

"இந்த உடையில் பெண் புலி போல் இருக்கிறாய் என்று சொன்னேன் சம்யு" அவன் குரலே அவன் அப்படி சொல்லவில்லை என்று அடித்து கூறியது.

"ராணி அக்கா இன்னும் வரலையே ..அவங்களுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ ..நிலச்சரிவுன்னு சொன்னாங்களே ..அதில மாட்டியிருப்பாங்களோ " என்றாள் கவலையாய் .உறங்கி கொண்டிருந்த குழந்தையை பார்க்கையில் 'இக்குழந்தையின் தாய் பத்திரமாக வந்து சேர்ந்துவிட வேண்டுமே ' என்று வேண்டுதல் எழுந்தது மனதினுள்.

"இந்த புயல் மழையெல்லாம் கடவுள் என் தர்றார் ? இதெல்லாம் இல்லாம இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்?" என்றாள் ப்ரித்வியை நோக்கி.

சாதாரண மழை என்று நினைத்திருக்க புயல் மழையாய் அது உரு மாறி இருக்க .. சிறு வீடுகளில் வாழும் மக்களுக்கு பெரும் உபத்திரவம் தான். ஆயினும் இயற்கையோடு இயைந்துவிட்ட அந்த மலையின் மக்கள் அதனை பழிக்க மாட்டார்கள்.

"புயலும் மழையும் வேணுமானால் இயற்கையோட செயல்களா இருக்கலாம் ..ஆனால் இந்த வெள்ளம் நிலச்சரிவு இதெல்லாம் அதோட பாதையில் நான் குறுக்கிடுவதால் தான். நம்ம சௌகரியத்துக்காக மரங்களை வெட்டிவிடுகிறோம்..சாலைகளை அமைத்துக் கொள்கிறோம் ..வீடுகள் கட்டிக் கொள்கிறோம் .. சூழலை பாதிக்கிறதா என்ற சிந்தனை இல்லாமல் சுயநலமாய் இதையெல்லாம் செய்கிறோம் அதுதான் இதற்கு காரணம். சூழல் நலமாய் இருந்தால் நாமும் நலமாய் இருப்போம் என்று புரியாமல் செய்கிறோம் . இதில் சாமி பூதம் இதெல்லாம் இல்லை " வழக்கமான தோள் குலுக்கலோடு சொன்னான் ப்ரித்வி.

அப்போது அவனைஏறிட்டு பார்த்த சம்யுவிற்குள் ஏதோ ஒரு மாற்றம்..எத்தனை தெளிவாக பேசுகிறான்.. அரைவேக்காடு என்று தான் அவனை நினைத்திருக்க அவனுக்குள் இருக்கும் ஆழந்த சிந்தனைகள் அவளுக்கு ஆச்சரியமூட்டின. ஒரு திமிர் பிடித்த பணக்கார இளைஞன் என்பதை தாண்டி அவனை பற்றி வேறொரு பிம்பம் இருந்ததில்லை இதுவரை! இப்போது அதெல்லாம் மாறுவது போல் இருந்தது.

அவள் தன்னையே உற்று நோக்குவதை கண்டவன் லேசாக இமை சிமிட்ட தூக்கி வாரி போட்டது சம்யுவுக்கு. சட்டென்று பார்வையை திருப்பி கொண்டவள் வேறு பேச வேண்டுமே என்று நினைத்தவளாய் "ரொம்ப பசிக்குது . என்ன செய்றது ?" என்றாள்.

"பசிச்சால் என்ன செய்வாங்க ? சாப்பிடத்தான் செய்யணும் " என்றான் எகத்தாளமாக.

"அதுக்குதான் என்ன செய்ய ? மதியம் கூட சமைக்க வேணாம்னு சொல்லிட்டோம். வெளியே சாப்பிட்டோம். இப்போ என்ன செய்வது ? பழங்கள் ஏதாவது இருக்கான்னு பார்க்கிறேன் " என்று குளிர் சாதன பெட்டியை திறந்தாள்.

"சமையலறையில் எல்லா பொருட்களும் இருக்கு ..ஏதாவது சமைத்து உண்ணலாம் . என்ன இருக்குன்னு பாப்போம் வா " என்று அவளை அழைத்து சென்றவன் ஒவ்வொரு டப்பாவாக திறந்து என்ன இருக்கிறது என்று பார்க்க ..எட்ட நின்று வேடிக்கை பார்த்தாள் சம்யு.

அவள் முகத்தை நோக்கியவனுக்கு புரிந்துவிட்டது அவளுக்கு சமையலில் ஆனா ஆவன்னா கூட தெரியாது என்று .

சிரிப்பு பொங்க அவளை ஏறிட்டு பார்த்தவன் "சம்யு அந்த அடுப்பை கொஞ்சம் பற்ற வை " என்றான்.

'அய்யய்யோ நமக்கு சமைக்க தெரியாது என்று தெரிந்தால் ரொம்ப ஓட்டுவானே.. என்ன செய்வது ?' தனுஜா எப்போதும் சமையல் கற்று கொள்ள சொல்வார் ..ஆனால் மோகன் தன் பெண்களை அடுக்களை பக்கமே விடமாட்டார் "அவங்க நல்லா படிக்கறதில கவனம் செலுத்தட்டும் தனு. ஏன் அவங்களை டிஸ்ட்ராக்ட் பண்றே ? இதெல்லாம் பின்னாலே கத்துக்கிட்டா போச்சு. உனக்கு உதவி வேணுமானால் ஆள் போட்டுக்கோ " என்று தடுத்துவிடுவார்.

அம்மா எப்படி அடுப்பை பற்ற வைப்பார் என்று யோசித்தவள் கண்களில் லைட்டர் பட ..வேகமாக அதை எடுத்தவள் பர்னர் அருகே வைத்து அடிக்க .. தீ பற்றுவேனா என்று இருந்தது.

இப்படித்தானே அம்மா செய்வார்கள் என்று தனக்குள் யோசித்தவளாய் லைட்டரை திருப்பி திருப்பி பார்த்தவள்.."இதில ஏதோ ஃபால்ட் இருக்கு ப்ரித்வி "என்றாள் ஒரு விஞ்ஞானியின் முக பாவனையோடு!

சிரிப்பு பொங்கியது ப்ரித்விக்கு. அவளிடமிருந்து லைட்டரை வாங்கியவன் "மொதல்ல பர்னரை திருப்பனும்" என்று பர்னரை திருகி லைட்டரை அடிக்க அடுப்பு எரியத் தொடங்கியது.

"ஆமாம் ப்ரித்வி.. எரியுது! ” என்று ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு குதித்தவளை ரசித்தவன் ..அவள் தலையில் லேசாக குட்டி .."எடிசன் விளக்கை எரிய வச்சப்போ கூட இப்படி குதிச்சிருக்க மாட்டார் சம்யு .ஆக மொத்தம் உனக்கு உணவை பற்றி தெரிஞ்ச விஷயம்னா ..அது சாப்பிடறது மட்டும் தான்னு சொல்லு " என்று கலாய்த்தவன்.. மடமடவென இரு முட்டைகளை உடைத்து வெங்காயம் நறுக்கி தூவி பாக்கெட்டில் இருந்த ப்ரெட்டை சூடாக்கி கலக்கிய முட்டையை ஊற்றி பிரெட் ஆம்ப்லேட் தயாரிக்க ..கண்ணிமைக்காமல் அவனையே பார்த்திருந்தாள் சம்யு.
இருவருமாக உண்டு முடித்ததும் சம்யுவுக்கு தெம்பாக இருந்தது.

"பரவாயில்லை ப்ரித்வி .சமையலெல்லாம் கத்து வச்சிருக்கியே. உங்க வீட்டிலேயே எத்தனை சமையலாள் இருக்காங்க?! " என்று சிலாகித்தாள் சம்யுக்தா.
"எல்லாத்தையும் தெரிஞ்சி வசிக்கிறது நல்லதுதானே சம்யு? எப்பவும் மத்தவங்களை சார்ந்தே இருக்கறது எனக்கு பிடிக்காது "

"நல்லதுதான்... ஆனால் எங்கப்பா தான் எங்களை சமையல்கட்டிலேயே விட மாட்டார். எப்போவுமே படிப்பு ..மத்த எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்ட்டிவிட்டிஸ் மட்டும் தான் . சமையல் தேவையில்லை. அது கல்யாணத்துக்கு முன்னாடி பாத்துக்கலாம்னு சொல்லிடுவார். அவரும் ஒரு நாள் கூட சமைச்சு நான் பாத்ததில்லை. எப்பவும் எங்கம்மா தான் சமைப்பாங்க"

"சமையல் கூட ஒரு கலை தான் சம்யு. சும்மா ரெசிபி பார்த்து செய்யற விஷயம் இல்லை. ஒவ்வொரு பொருளையும் எந்த பதத்தில் சேர்க்கணும், எவ்வளவு சேர்க்கணும், எப்பெப்போ சேர்க்கணும்னுகிறது எல்லாம் ரொம்ப நுணுக்கமான விஷயங்கள்.
இப்போ நான் செஞ்ச பிரெட் ஆம்லெட்டையே பத்து விதமான டேஸ்ட்ல செய்ய முடியும் . அதுக்கும் மேல கொஞ்சம் அக்கறை பிரியம் லவ்...இதெல்லாம் சேர்த்து " என்றவன் என்ன என்பது போல் அவள் முறைக்க " அன்புன்னு சொன்னேன்மா . இதெல்லாம் சேர்க்கும் போது இன்னும் ரொம்ப சுவையா இருக்கும். இப்போ சாப்பிட்ட உணவு கூட உனக்கு ரொம்ப சுவையா இருந்ததில்லை?" என்று கேள்வியெழுப்ப ..மறுக்க முடியாமல் ஆமோதித்தாள் சம்யு.
 
Top