Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கடல் நீ கரையும் நீ -29

Advertisement

Geetha Boopesh

Well-known member
Member
அத்தியாயம் -29


ப்ரித்விக்கு முதுகு காட்டி படுத்திருந்த சம்யுவின் மனதுக்குள் ப்ரித்வியை பற்றிய எண்ணங்கள் தான்.

இந்த சில நாட்களாக அவன் மீதான அபிப்ராயம் மாறிவிட்டது. எப்போதும் இவளோடு கோபித்து சண்டையிடும் திமிர் பிடித்த பணக்காரனாக இப்போது தெரியவில்லை.

உண்மையில் அப்படி ஒரு சாயத்தை அவன் மீது அவள் மனம் பூசியிருந்து. அதற்கேற்றாற்போல் அவனும் இவளிடம் சண்டையிட்டுக் கொண்டே இருக்க ..அது மேலும் மேலும் ஒரு வீண் விரோதத்தை அவன் மேல் உண்டாக்கிவிட்டது. இப்போது யோசிக்கையில் .. எதற்காக அவனிடம் இத்தனை வருடங்கள் சண்டையிட்டோம் ? அவனோடு எல்லாவற்றிற்கும் ஏன் போட்டியிட்டோம் ? என்று நினைத்து பார்த்தால் காரணமே இல்லை என்று தான் தோன்றியது.

வெளியில் முள்ளோடு உள்ளே இனிப்பாக இருக்கும் பலாப்பழம் போன்று தான் அவன் என்று புரியும் வேளையில் அவன் மீதான அன்பு மலர்ந்து மணம் வீசியது .
அவனது சீண்டல்கள்.. அவனோடான வாய்சண்டைகள் எல்லாமே ஒரு உற்சாகத்தை கொடுக்க.. மனம் மிக லேசாக இருப்பது போல் இருந்தது.
இப்படி ஏதேதோ நினைத்தபடி நேரத்தை போக்கிக் கொண்டிருந்தவள் தன்னையறியாமல் உறக்கத்தில் ஆழ ..அதுவரை இவளையே நோட்டமிட்டுக் கொண்டிருந்தான் ப்ரித்வி. அவனுக்கு தூக்கம் வருவேனா என்று கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தது.

அவனுக்குள் பொங்கி கொண்டிருந்த காதல் பிரவாகம் ஹார்மோன்களை எக்குத்தப்பாக எகிற வைக்க.. அவளை அந்த அறையிருளில் அவ்வளவு அருகில் பார்ப்பது என்னன்னவோ எண்ணங்களை தூண்டியது .
மனதில் நினைக்கும் எதையும் தடையின்றி சொல்லவும் செய்யவும் பழகியவன் இன்று தன் மனதோடு சேர்த்து கைகால்களுக்கும் விலங்கிட்டுக் கொண்டு தன் மனம் கவர்ந்தவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

வெகு நேரம் சென்று அவனும் தூக்கத்தில் ஆழ்ந்துவிட ..ஏதோ கனமாக வந்து அவன் மீது விழுந்தது.
திடுக்கிட்டு விழித்துப்பார்த்தவனுக்கு அது சம்யுவின் கால் என்று புரிபட ..உள்ளுக்குள் சிரிப்பு வந்தது.

சம்யுவுக்கு உள்ளூர உதறல் தான். எப்போதும் தனியாக தான் படுப்பாள். ஏனெனில் யாரும் இவளோடு படுக்க மாட்டார்கள். தனுஜா அலறியடித்து ஓடிவிடுவார். அம்ரிதா.. "நான் தரையில் கூட படுத்துக்குறேன் சம்யு .ஆனால் உன் பக்கத்தில படுக்க மாட்டேன் " என்று எஸ்ஸாகி விடுவாள். அவ்வளவுக்கு அவளது பறந்து விரிந்த கிங் சைஸ் கட்டிலில் உருண்டு புரள்வாள்.

இப்போது ப்ரித்வி அருகே படுக்க ரொம்பவுமே பயம் தான்.
ஏற்கனவே ரொம்பவும் ஓட்டித் தள்ளுகிறான். இந்த விஷயம் வேறு கிடைத்தால் அவ்வளவுதான்.

அந்த பயத்தில் அவளுக்கு தூக்கமே வரவில்லை. கைகால்களை குறுக்கிக் கொண்டு, உறங்கிவிட கூடாதென்று மனதுக்குள் வேண்டியபடி படுத்திருந்தவளால் வெகு நேரம் தாக்கு பிடிக்கமுடியவில்லை..

மெல்ல அவள் காலை நகர்த்தி வைத்தவன் மறுபடியும் உறக்கத்தில் ஆழ.. இம்முறை அவளது கரம் ஒன்று அவனது நெஞ்சில் வந்து விழ... மனதுக்குள் சாரல் அடித்தாலும் மெல்ல அவளது கரத்தை விலக்கி ஓரமாக படுக்க வைத்தான்.

ஓரிரு நிமிடங்கள் கூட ஆகியிருக்காது ..மொத்தமாக உருண்டு இவன் மேல் படுத்துவிட.. 'இதென்னடா ப்ரித்வி..உனக்கு வந்த சத்திய சோதனை' என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவன் ..அவளை மெல்ல நகர்த்தி மறுபடியும் படுக்க வைக்க .. நல்ல உறக்கத்தில் இருந்தாள் சம்யு.

திரும்ப திரும்ப அவள் உருள தொடங்க ..' இப்போதே பின்னிரவாகி விட்டது. காலை எழுந்தால் தான் சுற்றி எத்தனை பாதிப்புகள் ..சாலைகள் சேதமின்றி இருக்குமா ? இங்கே இருந்து ஊட்டிக்கு எப்படி போவது? என்று பல விஷயங்கள் பார்க்க வேண்டியிருக்கும். போதாதற்கு ஒரு சிறு பிள்ளை வேறு.. தாய் தந்தை இருவருக்கும் என்ன ஆனது என்று தெரியவில்லை. கொஞ்சமாவது உறங்கினால் தான் நாளை வருவதை சமாளிக்க தெம்பு இருக்கும். இப்படியே போனால் இரவு முழுக்க உறங்க முடியாது . என்ன செய்வது ?' என்று ஒரு கணம் யோசித்தவன் அவளை அடைகாக்கும் கோழியை போல இருகரமும் கால்களும் கொண்டு இறுக்கமாக அணைத்துக்கொண்டுவிட அதற்குமேல் நகரமுடியாதவளாய் அமைதியாக உறங்கிவிட்டாள் சம்யு.

பொழுது புலரும் நேரம் மழையும் காற்றும் சற்று அடங்க .. வெளியே புயலுக்கு பின்னான அமைதி.

எப்போதும் விடிகாலையில் எழுந்து விடுவாள் சம்யு. இன்றும் அதே பழக்கத்தில் லேசாக விழிப்பு தட்ட .. அவளுக்கோ எழவே மனமில்லை. நேற்றைய தினத்தின் அயர்ச்சி உடலில் இருக்க கதகதப்பான கம்பளியின் உள்ளே சுருண்டு கிடந்து தூங்குவது சொர்க்கமாக இருக்க .. முகத்தை லேசாக திரும்பியவள் .. கன்னத்தில் ஏதோ குத்துவது போல் இருக்க.. இவ்வளவு நேரம் மென்மையாக இருந்த கம்பளி இப்போது ஏன் உறுத்துகிறது ? என்று இமைப்பிரித்து பார்த்தவளுக்கு ப்ரித்வியின் முகம் க்ளோசப்பில் தெரிய ..உரசியது அவனது தாடிதான் ..என்று புரிந்ததில் மொத்தமாக உறக்கம் கலைந்துவிட அலறியடித்து எழுந்துகொண்டாள்.

ன் கைகளுக்குள் அசைவு உணர்ந்து ப்ரித்வியும் கண்திறந்து பார்க்க .. அவனை முறைத்தபடி நின்றிருந்தாள் சம்யு.

சாவதானமாக எழுந்து முகம் கழுவி வந்தவனை பார்த்து அப்படியே நின்றுகொண்டிருந்தவள்..
"ஒரு பொண்ணுகிட்ட இப்படியா மிஸ்பிஹேவ் பண்ணுவே? உன்னை நம்பி தானே பக்கத்துல படுத்தேன் ?" என்றாள் கோபமாய்.

"ஹலோ.. இது நான் கேட்க வேண்டிய கேள்வி. உன்னை நம்பி தானே உன் பக்கத்துல படுத்தேன். ஒரு பையனோட கற்புக்கு இந்த நாட்டில உத்திரவாதம் இல்லாம போயிடுச்சி. இது வரைக்கும் ஒரு பெண்ணோட விரல் நுனி கூட என் மேல பட்டதில்லை. இன்னிக்கு ஏன் கற்புக்கே களங்கம் வந்திடுச்சு உன்னால "

உள்ளுக்குள் உதறலெடுக்க "நான் என்ன செஞ்சேன்?" என்று ரோஷமாய் கேட்டாலும் ஸ்ருதி இறங்கிவிட்டது அவள் குரலில்.

"கட்டில்ல படுத்து தூங்காமல் இப்படியா கபடி ஆடுவ ? எவ்வளவு நேரம் தான் நானும் டிஃபென்ஸ் ஆடுறது. அதுதான் அஃபென்ஸ் ஆடிடலாம்னு .." என்று இழுத்தவன் அவள் விழிகளில் பயம் தெரிய .. மெல்ல அவளருகில் வந்து " அப்படியே உன்னை இறுக்கமாய் கட்டி பிடிச்சி .." என்று மேலும் ஏதோ சொல்ல வர ..
"போதும் போதும் நிறுத்து. இங்கே பாரு ஒரு பொண்ணோட விருப்பம் இல்லாமல் அவளை நெருங்கறது ரொம்ப தப்பு .."

"அதேதான் நானும் சொல்றேன். ஒரு பையனோட விருப்பம் இல்லாமல் அவனை நெருங்குறதும் தப்புதான். செக்க்ஷன் 375 படி.."

"எங்களுக்கும் எல்லா செக்ஷனும் தெரியும் . நீ ஒன்னும் பாடம் எடுக்க வேண்டாம். நான் பாட்டுக்கு ஒரு ஓரமா படுத்திருந்தேன். . நீதான் ஏதோ பண்ணியிருக்க "

"அப்படியா? இரு இப்போவே மிஸ்ஸஸ் தனுஜா மோகனுக்கு ஃபோன் பண்ணி கேக்குறேன். உங்க பொண்ணு ராத்திரில பக்கத்துல படுக்கிறவங்களை என்ன செய்வான்னு ?"

"அடப்பாவி அப்படி எதுவும் செஞ்சிடாதடா .. அப்புறம் நான் செத்தேன். உன் கூட தனியா இருக்கறதுக்கே என்ன சொல்வாங்கன்னு தெரியாது. இதுல ஒரே ரூம்ல தூங்கினேன்னு தெரிஞ்சிது எங்கம்மா என்ன கொன்னே போட்டுருவாங்க . உனக்கு புண்ணியமா போகும்டா ப்ரித்வி. போனை உள்ளே வை. "
சிக்னலே இல்லை என்பது நினைவில்லாமல் அவனை கெஞ்சினாள் சம்யு.

அவள் கெஞ்சுவதை உள்ளூர ரசித்தவனாய்.."என்னது டாவா? ஒழுங்கா அத்தான்னு கூப்பிடு. " என்று மிரட்டலாய் கூற "சரிங்கத்தான்" என்று மெல்லிய குரலில் கூறியவளை ரசித்துக் கொண்டிருந்தது ப்ரித்வியின் உள்மனம்.


அவனிடமிருந்து தப்பிக்க குளியலறைக்குள் இவள் புகுந்து கொள்ள... குழந்தை லேசாக புரண்டது.

கீழே சென்று குழந்தைக்கு பாட்டிலில் பாலும் ..இவர்கள் இருவருக்கும் கடுங்காப்பியும் எடுத்து வர .. முகம் கழுவி வந்தவள் அமைதியாக வாங்கி பருகினாள்.
அவனை நிமிர்ந்து பார்க்கவே கூச்சமாக இருந்தது சம்யுவிற்கு.
குழந்தையை மடியில் தூக்கி வைத்து அவன் பாலை புகட்ட.. அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

"இதெல்லாம் எப்படி தெரியும் ப்ரித்வி?" என்றாள் ஆச்சரியமாய்.

"அப்பப்போ .. ஒரு ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்துக்கு நானும் அப்பாவும் போவோம் .. சும்மா காசு மட்டும் குடுத்து உதவறது எல்லாரும் செய்வாங்க.. ஞாயிற்று கிழமைகள்ல அங்க வேலை பாக்கிறவங்க ஊருக்கு போவதுண்டு. அப்போ பிள்ளைங்களை பார்த்துக்க ஆள் கம்மியா இருக்கும். அப்போ இந்த மாதிரி சில உதவிகள் செய்வோம். இலவசமா டியூஷன் கூட எடுக்கிறோம் ..நம்ம காலேஜ் பிரெண்ட்ஸ் சிலர் கூட செய்றாங்க. ஜஸ்டின் ஷபானா எல்லாரும் அப்பப்போ வருவாங்க "

இதெல்லாம் நமக்கு தெரியவில்லையே .. ஷபானா கூட சொன்னதில்லையே என்று நினைத்தவள்..அவள் சொல்லியிருந்தாலும் இவள் எங்கே கேட்டிருப்பாள். ப்ரித்வியை பற்றி என்றாலே காதையும் புலன்களையும் அடைத்துக் கொள்பவளுக்கு..அந்நேரம் இது வெட்டி ஜம்பமாக தான் தெரிந்திருக்கும்.

இப்போது தொண்டைக்குள் கசப்பாக இறங்கும் காபியோடு அவன் மேலான அபிமானமும் துளித்துளியாய் இறங்க ..புத்துணர்ச்சி பொங்கியது மனதினுள்.

வீட்டின் வெளியே சலசலப்பு கேட்க ..இருவரும் வெளியே வந்து பார்த்தனர்.
சுற்றிலும் பல இடங்களில் மரங்கள் வீழ்ந்து கிடக்க.. பாதைகள் தெரியவில்லை. ஒரே சகதியும் கூளமுமாக இருக்க..வீட்டிலிருந்து வெளியே செல்லும் பாதையும் முழுக்க அடைபட்டிருந்தது. வீடு சற்று உயரத்தில் இருக்க அதற்கொன்றும் சேதமில்லை.

மற்றொரு புறம் மலை உச்சியில் இருந்து சிலர் இறங்குவது தெரிய முன்னே வஜ்ரவேல் வந்து கொண்டிருந்தான்.
அவனை கண்டதும் சம்யுவுக்குள் ஆசுவாசம் ..தோளில் இருந்த பிள்ளையும் சந்தோசத்தில் தாவி குதிக்க .. வேகமாக வந்தவன் பிள்ளையை தூக்கிக் கொண்டான்.

" அய்யா .. நம்ம தொழிற்சாலை போனுக்கு அதிகாரிங்க பேசினாங்க . நம்ம இடத்துக்கு வர்ற பாதையெல்லாம் நிலம் சரிஞ்சி அடைபட்டிருக்காம். ரெண்டு நாள்ல சரி பண்ணிருவோம்னு சொன்னாங்க " என்றான் வஜ்ரவேல்.

"உங்க வீடுகல்லாம் எப்படி இருக்கு ?" கவலையுடன் கேட்டாள் சம்யு.

"இனிதான்மா போய் பாக்கணும். " என்று முருகன் கூற .. "இங்குள்ள வீடுகள் இதெல்லாம் தாங்கும் வண்ணம் தான் இருக்கும் சம்யு. இந்த மழை காத்து எல்லாம் இங்கே பழக்கம் தான் . மழை நின்றதும் தண்ணீரெல்லாம் வடிந்துவிடும் . இவர்களும் மறுநாளே இயல்பு வாழ்விற்கு திரும்பி விடுவார்கள். நிலச்சரிவு ஏற்பட்டதுதான் கொஞ்சம் கஷ்டம்" என்று விளக்கினான் ப்ரித்வி.

போனை எடுத்து பார்க்க லேசாக சிக்னல் தெரிந்தது.

"உன் மனைவியை பத்தி ஏதும் தகவல் தெரிஞ்சிதா வேலு ?" இவன் கேட்கையிலேயே வேலுவின் கைபேசி ஒலிக்க.. எடுத்து பார்த்தவனின் முகம் மலர்ந்தது. பேசிவிட்டு வந்தவன் " அவதாங்க.. அவங்க அம்மாவீட்டில தான் இருக்காளாம். அவங்க அம்மா இந்த நிலையில அனுப்ப மாட்டேன்னுட்டாங்களாம் . பிள்ளை என்ன செஞ்சிச்சோன்னு ஒரே அழுகை .பிள்ளை அம்மானு கூப்பிட்டப்புறம்தான் சமாதானமானாள். பிள்ளை ரொம்ப தொல்லை குடுத்திச்சுங்களா ?"

"அதெல்லாம் ஒண்ணுமில்லை வேலு. சமத்தா தூங்கிட்டா . " என்று குழந்தையை நோக்கி கை நீட்ட அது இவனிடம் தாவி வந்தது.

குழந்தையை இவன் தூக்கி விளையாட்டு காட்ட அதை ரசித்து பார்த்தபடி நின்றிருந்தாள் சம்யு.
 
Top