Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

92. பவித்ரா புருஷோத்தமன் - இருளில் தொலைத்தேன் ஒளியாய் வந்தனை

இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை-7

இரவின் இருளை நீக்கும் பொருட்டு முழுமதியாய் ஜொலித்து கொண்டிருந்தாள் நிலவுமகள். ஆழினியை‌ அழைத்து செல்வதற்காக மருத்துவமனையின் வாயிலில் ஆதவ் கிருஷ்ணனுடன் காத்து கொண்டிருந்தான் இன்பன்.

மருத்துவமனையிலிருந்து வெளியில் வந்த ஆழினியை கண்டதும்

“அம்மா….” என்று கத்தியவாறு கன்னக்குழி தெரியுமளவிற்கு அழகாய் சிரித்து கையசைத்த ஆதவ் கிருஷ்ணனின் அருகில் வந்தவள்

“ஆது கண்ணா….” என்று கூறி அவனது கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு



Advertisement

“சாப்பிட்டியா குட்டி? ஹோம் வொர்க் முடிச்சியா? நைட்ல அதுவும் இந்த பனியில ஏன் இன்பா இவனை உன் கூட கூட்டிட்டு வந்த? இவ்வளவு நேரம் முழிச்சிருந்தா எப்படி நாளைக்கு ஸ்கூல் போறது?” என்று ஆழினி ஆதவ் கிருஷ்ணனிடம் ஆரம்பித்த வினாவை இன்பனிடம் முடிக்க, அவளது தமயனோ தன் தமக்கையை தீயாய் முறைத்து கொண்டிருந்தான்.

“உன் புள்ள என் கூட வரலன்னா ‘ஏன் கூட்டிட்டு வரலன்னு’ கேட்க வேண்டியது? கூட்டிட்டு வந்தா ‘ஏன் வந்தன்னு’ கேட்குறது? இதெல்லாம் உனக்கே ஓவராயில்ல? இந்த பப்பாளியை கூட்டிட்டு நைட்ல ஊர் சுத்தனும்னு எனக்கு ஆசை பாரு…. இவன் தான் ‘அம்மாவை கூப்பிட நானும் வருவேன்னு’ ஒரே அடம்…. முக்கியமா உன் பாட்டை கேட்காம அவன் என்னிக்கு ஆழினி தூங்கியிருக்கான்?” என்று வினவிய இன்பனை கண்டு சிரித்தவள்

“சரிடா சரிடா…. ஓவரா வாய் பேசாத…. வண்டியை எடு…. நாளைக்கு நான் பருவதம்மா வீட்டுக்கு சீக்கிரமே டியூட்டிக்கு போகனும்….”

Advertisement

“அவங்களை டிஸ்சார்ஜ் பண்ணிட்டாங்களா?”

Advertisement

“நாளைக்கு காலையில டிஸ்சார்ஜ் பண்ணிட்டுவாங்க இன்பா…. நான் நேரா அவங்க வீட்டுக்கு போயிருவேன், அவங்க ஹாஸ்பிடலிருந்து வரதுக்கும் நான் அங்க போறதுக்கும் சரியா இருக்கும்….” என்று ஆழினி கூறியதை கேட்டு சரியென்பதை போல் தலையசைத்தவன் இல்லத்தை நோக்கி தன் இருச்சக்கர வாகனத்தை செலுத்தியிருந்தான்.

ஆதவ் கிருஷ்ணனை தூக்கி கொண்டு ஆழினியுடன் இல்லத்திற்குள் நுழையும் இன்பனை சிரித்த முகத்துடன் வரவேற்றிருந்தாள் நீலவேணி.

“வாங்க அண்ணி, போய் ரெஃப்ரெஷாகிட்டு வாங்க சாப்பிடலாம்…. டின்னர் ரெடியா இருக்கு…. உங்களுக்கு பிடிச்ச சப்பாத்தியும் பாலக் பன்னீர் கிரேவியும் செஞ்சிருக்கேன்….” என்று கூறிய நீலவேணியிடம்

Advertisement

“உனக்கெதுக்குடா சிரமம்? நான் வந்து சமைக்கப்போறேன்…. நீயே ஸ்கூல்ல ரொம்ப நேரம் நின்னுட்டு வர, ரெஸ்ட் எடுக்கலாம்ல?” என்று ஆழினி வினவ

“நீங்க நைட் பத்தரை மணிக்கு வந்து குளிச்சிட்டு எப்போ சாப்பிடுறது? ஏற்கனவே டைமாகிடுச்சு போய் குளிச்சிட்டு வாங்க அண்ணி சாப்பிடலாம்… நானும் இன்னும் சாப்பிடல, பசிக்குது….” என்று பாவமாக கூறிய நீலவேணியின் கூற்றை கேட்டதும் வேகநடையுடன் குளியலறைக்குள் புகுந்திருந்தாள் ஆழினி.

“பன்னு, என்னை கீழ இறக்கிவிடு நான் போய் கலர் பண்ணப்போறேன்….” என்று இன்பனின் கைகளில் தவழ்ந்திருந்த ஆதவ் கிருஷ்ணன் கூற, அவன் கூறியது போல் செய்தவனின் அருகில் சென்றவள்

“இன்பா, விஜய் சார் பார்க்க காஃபி ஷாப் போனியே என்னாச்சு?” என்று இரகசியமாக வினவிய நீலவேணியை கண்டு தன் தலையை இல்லை என்பதை போல் இடவலமாக அசைத்தவன்‌ அங்கு நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறியிருந்தான்.

“ச்சே, அவன் புத்தி என்ன இப்படியிருக்கு? அண்ணிக்காக மட்டுமில்லாம ஆதவ்க்கு ஒரு நல்ல அப்பா கிடைக்கனும்னு தான நம்ம ஆசைப்பட்டோம், இவன் என்னென்னா இப்படி பேசுறான்….” என்று நீலவேணி இன்பனிடம் கோபமாக கூற

“அவனுக்கும் ஒரு குழந்தை இருக்கு வேணி…. அந்த குழந்தையையே இவன் பார்த்துக்கல போல, இதுல எங்கிருந்து அவன் ஆதவ் குட்டியை பார்த்துக்கப்போறான்? அதான் நான் அவனை வேண்டாம்னு சொல்லிட்டேன்….”

“ப்ச்ச், நம்ம என்னவோ நினைச்சோம் இப்போ என்னமோ நடந்துடுச்சு…. அப்பா வேற நமக்கு இன்னும் மூணு மாசத்துக்குள்ள கல்யாணம் பண்ணிடனும்னு ஆழினி அண்ணி கிட்ட சொல்லிட்டாங்க…. அப்போ நமக்கு இன்னும் மூணு மாசம் தான்‌ டைமிருக்கு, அதுக்குள்ள ஆழினி அண்ணிக்கு கல்யாணம் பண்ணிடனும்…. ஒருவேளை அவங்களுக்கு முன்னாடி நமக்கு கல்யாணமாகிடுச்சுன்னா அதுக்கு அப்புறம் ஆழினி அண்ணி கல்யணாத்துக்கு சம்மதிக்கமாட்டாங்க இன்பா…. அவங்க பிடிவாதம் உனக்கே தெரியும்ல?”

“தெரியும் வேணி, அதுக்கு தான நான் எல்லா இடத்துலையும் மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்கேன்…. எனக்கு ஆழினி வாழ்க்கையும் நல்லாயிருக்கனும் அதேசமயம் ஆதவ் குட்டிக்கு நல்ல அப்பாவும் கிடைக்கனும்…. ஒரு வயசுக்கு மேல ‘என் அப்பா யாரு, அவரை நான் பார்க்கனும்னு’ அவன் கேட்டா நாம என்ன சொல்றது வேணி? அதெல்லாம் இந்த ஆழினி யோசிக்கவேமாட்டுறா….”

“எனக்கும் அதே யோசனை தான் இன்பா…. என்ன பண்றது? நம்ம ஒரு பிளான் பண்ணா இங்க வேறொரு பிளான் நடக்குது….” என்று நீலவேணி கூறியதை கேட்டு மெலிதாக சிரித்தவன்

“நாம நினைச்சதெல்லாமே நடந்துடுச்சுன்னா வாழ்க்கையில ஒரு பிணைப்பே இருக்காது…. இப்போ நீ ஒரு பிளான் பண்ணலாம், அதே மாதிரி நான் ஒரு பிளான் பண்ணலாம் ஆனா காட்’ஸ் பிளான்னு ஒன்னு இருக்கு…. அந்த பிளான் தான் எப்பவும் வர்க்கவுட்டாகும்…. அதை நம்பு, எல்லாம் நல்லதாவே நடக்கும்….” என்று கூறிய இன்பனை நீலவேணி புரியாமல் பார்த்து கொண்டிருந்தாள்.

“என்னடா புதுசா கருத்தெல்லாம் சொல்ற? எந்த போதி மரத்துக்கு அடியில உட்கார்ந்த? எங்க கிடைச்சது இந்த ஞானோதயம்?” என்று நீலவேணி நக்கலாக வினவ, அவளை பொய்யாக முறைத்தவன் காலையில் விஜய சிவமாறனுடன் நடந்த சந்திப்பை கூறிவிட்டு

“அவர் மட்டும் வரலன்னா ஒரு வாரத்துக்கு நான் டிஸ்டர்ப்பாகியிருப்பேன் வேணி…. அவரை பார்த்ததுக்கு அப்புறம் என் மைன்ட்செட் டோட்டலா செஞ்சாகிடுச்சு தெரியுமா? ரொம்ப நல்ல கேரக்டர்….” என்று இன்பன் கூறி முடிக்கவும்

“யாரோட கேரக்டர் பத்தி பேசிட்டு இருக்க இன்பா? எதுனால டிஸ்டர்ப்பா இருந்த? என்னாச்சு?” என்று வினவியவாறு அவ்விடத்திற்கு ஆழினி வரவும் சரியாக இருந்தது.

ஆழினியின் வரவை சற்றும் எதிர்பாராதவன் என்ன கூறுவதென்று அறியாமல் திருதிருவென முழித்து கொண்டிருக்க அவனருகில் நின்றிருந்தவள்

“ஒன்னுமில்ல அண்ணி, இன்னிக்கு மீட்டிங்ல நடந்ததை பத்தியும், அங்க வந்தவங்களை பத்தியும் பேசிட்டு இருந்தான்…. வேறொன்னுமில்ல…. நீங்க வாங்க அண்ணி சாப்பிடலாம்….” என்று நீலவேணி கூறியதை கேட்ட ஆழினியும் அவளுக்கு பார்வையால் நன்றி கூறிய இன்பனும் இரவு உணவை முடித்துவிட்டு அவரவர் அறையில் உறங்க சென்றிருந்தனர்.

பறவைகளின் இன்னிசை கச்சேரியை இரசித்தவாறு துயில் கலைந்த சூரியதேவன் தன் வழமையான பணியை செழுமையாக ஆரம்பித்திருந்தார். சுற்றியெங்கும் பூந்தோட்டமும் ஆங்காங்கே மரங்களும் அமைந்திருக்க அவ்வழகான பச்சை நிற இயற்கை கொஞ்சும் இடத்திற்கு நடுவிலிருந்த இல்லத்திற்குள் நுழைந்திருந்தாள் ஆழினி.

இல்லத்தின் வாயிலில் நின்றிருந்தவள் அழைப்பு மணியை அடிக்க, அச்சத்தத்தை கேட்டதும் இல்லத்தில் வேலை செய்யும் நாற்பது வயது தொடக்கத்திலிருக்கும் ஓர் பெண்மணி வந்து ஆழினியை வரவேற்றிருந்தார்.

இல்லத்திலிருந்து வெளியில் வந்தவரை கண்டு மெலிதாக புன்னகைத்தவள்

“நான் ஆழினி…. பருவதம்மாவோட ஹோம் நர்ஸ்….” என்று ஆழினி கூறி முடிப்பதற்குள்

“வாங்கம்மா, உள்ள வாங்க…. சிவா தம்பி சொன்னாரு…. அவங்க இன்னும் ஹாஸ்பிடலிருந்து வரல…. நீங்க வந்து உட்காருங்க…. என்ன சாப்பிடுறீங்க டீயா காபியா?” என்று கூறியவரை கண்டு மெலிதாக சிரித்தவள் இல்லத்தின் கூடத்திலிருந்த நீள்சாய்விருக்கையில் அமர்ந்தவாறு

“அதெல்லாம் வேண்டாங்க, நான் வீட்டிலிருந்து சாப்பிட்டு தான் வந்தேன்….” என்று ஆழினி கூறிவிட்டு கூடத்தில் ஆளுயர உயரத்திற்கு சுவற்றில் மாட்டியிருந்த படத்திலிருப்பவரை பார்க்க, அவளருகில் நின்றிருந்தவர்

“இவரு சிவா தம்பியோட அப்பா…. ஒரு வருசத்துக்கு முன்னாடி தவறிட்டாரு….” என்று கூறியவரிடம்

“உங்க பெயரென்ன அக்கா?”

“நான் செல்வி, இந்த வீட்ல பத்து வருஷமா வேலை பார்த்துட்டு இருக்கேன்….”

“பருவதம்மா ரூம் எங்கிருக்கு செல்வி அக்கா?”

“பூஜை அறைக்கு இடதுபக்கமிருக்கு…. ஏன்ம்மா கேக்குறீங்க?”

“சர்ஜரி முடிஞ்சு குறைஞ்சது ரெண்டு மாசமாவது பருவதம்மாவுக்கு ரெஸ்ட் வேணும் அதான் அவங்களுக்கு ஏத்தது போல ரூம் இருக்கா பார்க்கனும்…. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம், நான் உங்களை விட சின்ன பொண்ணு தான் அதுனால என்னை ‘வாங்க போங்கன்னு’ கூப்பிடாம உங்க தங்கச்சி போல ‘வா போன்னு’ கூப்பிடுங்க…. எனக்கு அதுதான் பிடிக்கும்….” என்று கூறியவளை கண்டு புன்னகைத்தவர்

“சரிம்மா…. என்னோட வா பருவதம்மா ரூம் காட்டுறேன்….” என்று செல்வி கூற, அவருடன் பருவதம்மாவின் அறைக்கு சென்றவள் அறையில் சிறுசிறு மாற்றங்களை செல்வியின் உதவியுடன் செய்திருந்தாள்.

இருவரும் அறையை சுத்தம் செய்து முடிக்கும் நேரத்தில் இல்லத்திற்குள் மகிழூந்து வரும் சத்தம் கேட்க, தன்னருகில் நின்றிருந்தவளிடம்

“பருவதம்மாவும் சிவா தம்பியும் வந்துட்டாங்க போல…. நீ போய் அவங்களை வெளியவே நிக்க சொல்லு ஆழினிம்மா…. நான் போய் ஆரத்தி கரைச்சி எடுத்துட்டு வந்துடுறேன்….” என்று செல்வி கூறிவிட்டு பூஜை அறைக்குள் சென்றுவிட, அவர் கூறியதை கேட்டு வெளியில் சென்ற ஆழினி பருவதம்மாவை நகரும் நாற்காலியில் உட்கார வைப்பதற்கு சிரமப்படும் விஜய சிவமாறனின் அருகில் வேகமாக சென்றிருந்தாள்.

முதல் நாள் ஆழினியை சந்திக்க நேரும்போது நிகழ்ந்த அதே படப்படப்பு விஜய சிவமாறனின் மனதில் இன்றும் நிகழ அதை கண்டுக்கொள்ளாதவாறு நடித்தவன் அழினியின உதவியுடன் தன் அன்னையை நகரும் நாற்காலியில் அமர வைத்தான்.

தன்னருகில் நின்றிருந்தவளை கண்டு மெலிதாக சிரித்தவன்

“தாங்க்ஸ்….” என்று சிவமாறன் கூற, அவனை கண்டு புன்னகைத்தவளிடம்

“நீ எப்போ ஆழினி வீட்டுக்கு வந்த?” என்று மகிழ்ச்சியாய் வினவிய பருவதம்மாவிடம்

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வந்தேன்…. இங்கேயே வெய்ட் பண்ணுங்கம்மா செல்வி அக்கா ஆரத்தி எடுத்துட்டு வராங்க….” என்று ஆழினி கூற, சற்று நேரத்தில் ஆரத்தி தட்டுடன் செல்வி அக்கா இல்லத்தின் வாயிலுக்கு வருகை புரிந்திருந்தார்.

சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த பருவதம்மாவின் வலதுபுறத்தில் சிவமாறனும் இடதுபுறத்தில் ஆழினியும் நின்றிருக்க, அவர்களுக்கு ஆரத்தி எடுத்தவர் புன்னகையுடன்

“உள்ள போங்கம்மா…. நான் ஆரத்தியை வெளிய ஊத்திட்டு வரேன்….” என்று செல்வி கூறிவிட்டு வெளியில் செல்ல, சிவமாறனும் ஆழினியும் பருவதம்மாவை அழைத்து கொண்டு அவரின் அறைக்கு சென்றனர்.

அறையிலிருந்த மெத்தையில் பருவதம்மாவை படுக்க வைத்தவனின் அருகில் ஆழினி நின்றிருக்க, மெத்தையில் படுத்திருந்தவரின் பார்வை எதேச்சையாக அவ்விருவரின் பக்கம் திரும்பிய அந்நொடியே விஜய சிவமாறன் மற்றும் ஆழினியின் ஜோடி பொருத்தத்தை பருவதம்மாவின் கண்கள் இரசிக்க தொடங்கிவிட்டது.

அதேபோல் விதியின் ஆட்டமும் அந்நொடியிலிருந்து தான் ஆரம்பமாக தொடங்கியிருந்தது.

 

ஒளி வீசும்….

     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!