Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Saaralaai Theendinaai Anbae

சாரலாய் தீண்டினாய் அன்பே – 19.1

சூரியாவும் சந்தியாவும் சென்னை வந்துச் சேர இரவு பன்னிரெண்டு மணி ஆகிவிட்டது. நல்லவேளையாக ஆரியா காருடன் காத்திருந்தான். மூவரும் விமானநிலையத்தை விட்டு வெளியேறிக் காரில் அமரும் போதே சந்தியா தூக்கக் கலக்கத்தில் தான் நடந்துவந்தாள்.

 

ஆரியா அவளிடம் “தியா! நீ இப்போ வீட்டுக்குப் போனா சரியா வராது… பிகாஸ் உன்னோட கண்டிஷன்ல தான் இப்போ உன் அக்கா ஜெகன்மோகினியும் இருக்கும். அதை எதுக்கு வேஸ்டா நடுராத்திரியில எழுப்பிக்கிட்டு… டேய் அண்ணா தியாவை நம்ம வீட்டுக்கு வரச் சொல்லு.. மார்னிங் அவளை வீட்டுல டிராப் பண்ணிடுவோம்” என்று கூறிவிடச் சந்தியாவும் தூங்கி விழுந்தபடியே அவன் சொன்னதற்கு எல்லாம் தலையாட்டி வைத்தாள்.

 



Advertisement

சூரியாவும் களைத்துப் போயிருக்கவே பின்னிருக்கையில் சந்தியாவுடன் அமர்ந்து கொள்ள, வீடு வந்த பிறகு காரை பார்க்கிங்கில் நிறுத்திய ஆரியா “ஹலோ தூங்குமூஞ்சி கபிள்ஸ்! எழுந்துக்கோங்கயா! வீடு வந்தாச்சு” என்று கூற சூரியா மட்டுமே சிரமத்துடன் கண்விழித்தான்.

 

“வீடு வந்துடுச்சாடா?”

Advertisement

 

Advertisement

“வீடு வந்து பத்து நிமிசத்துக்கு மேல ஆகுதுடா தூங்குமூஞ்சி நம்பர் ஒன்… தியாவை எழுப்பு”

 

“இல்லடா! அவ நல்லா தூங்குறா… தூங்கிறப்போ எழுப்ப வேண்டாம்” என்று தம்பியிடம் சூரியா கூறிவிட

Advertisement

 

ஆரியா “அப்போ காத்தாலே வரைக்கும் தியா காரிலேயே தூங்கட்டுமா? நல்லா பேசுறடா நீ” என்று சொல்லிவிட்டு அவளைத் தட்டி எழுப்பச் செல்ல, சூரியா சட்டென்று அவனது கரத்தைப் பிடித்து நிறுத்தினான்.

 

“டேய்! ஆர்வக்கோளாறு கொஞ்சம் நில்லுடா” என்று தடுத்த சூரியா உறங்கிக்கொண்டிருக்கும் சந்தியாவை மெதுவாகத் தனது கரங்களில் ஏந்திக்கொள்ள

 

ஆரியா கிண்டலாக “வாவ் ப்ரோ! யூ.எஸ் போயிட்டு வந்ததோட மாற்றமா?” என்று சொல்லிக் கண் சிமிட்டிவிட்டு அண்ணனுடன் நடந்தான்.

 

தன்னிடம் இருந்த சாவியைக் கொண்டு கதவைத் திறந்தவன் வீடு இருளில் மூழ்கியிருக்க மொபைல் டார்ச் மூலமாக சுவிட்சைத் தேடிக் கண்டுபிடித்து விளக்கைப் போட்டவன் அவனுக்கு பின்னே இருந்த மேஜையின் மீது இருந்த பூக்கிண்ணத்தைத் தள்ளிவிட்டுவிடவே அது உலோகத்தினாலானது என்பதால் தரையில் உருண்டு சத்தத்தை எழுப்பிவிட்டது.

 

அந்தச் சத்தத்தில் நாராயணனும், ஹேமாவும் விழித்துக்கொள்ள இருவரும் ஹாலில் தான் சத்தம் கேட்கிறது என்று ஹாலை நோக்கி விரைந்தனர். அங்கே அவர்களின் இளையபுத்திரன் கீழே விழுந்துக் கிடந்த பூக்கிண்ணத்தை எடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் ஹேமா இவனது சிறுபிள்ளைத்தனத்துக்கு ஒரு அளவில்லாமல் போய்விட்டது என்று தலையிலடித்துக் கொண்டவர், அவன் அருகில் அவரது மூத்தமகன் சந்தியாவைக் கரங்களில் ஏந்தியபடி நிற்பதைக் கண்டதும் இதயம் தாறுமாறாகத் துடிக்கக் கணவரைத் திரும்பிப் பார்த்தார்.

 

நாராயணனின் நிலையும் கிட்டத்தட்ட அதுவே. ஆனால் அவர் பதறியதற்கான காரணம் சந்தியாவுக்கு எதுவும் உடல்நலமில்லாமல் போய் மகன் இப்படி கையில் ஏந்தியிருக்கிறானா என்ற கவலை தான்..

 

கேள்வியுடன் பார்த்துக் கொண்டிருந்த பெற்றோரைக் கவனித்துவிட்ட சூரியா தந்தையிடம் “டாட்! அவ ஜர்னியில டயர்ட் ஆகிட்டா! அதான் கார்ல வர்றப்போவோ தூங்கிட்டா… தூங்கிறவளை டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேனு தூக்கிட்டு வந்துட்டேன் டாட்” என்று அவன் ஏதோ துணிமூட்டையைத் தூக்கிக்கொண்டு வந்ததைப் போலச் சொல்லவே ஹேமா அழுவதா சிரிப்பதா என்று புரியாமல் நின்றுகொண்டிருக்க, அவரைக் கண்டு கொள்ளாமல் சூரியா மாடிப்படியேறியவன் தந்தைக்கு குட் நைட் சொல்லிவிட்டு சந்தியாவையும் கையில் ஏந்திச் சென்றான்.

 

ஹேமா கணவரின் கையைச் சுரண்டியவர் “என்னங்க உங்க கண்ணு முன்னாடியே அவன் அந்தப் பொண்ணைத் தூக்கிட்டுப் போறான், பார்த்துட்டு சும்மா நிக்கிறிங்க… அப்பா அம்மா முன்னாடி எப்பிடி நடந்துக்கணும்னு கூடவா அவனுக்குத் தெரியாது?” என்று படபடக்க,

 

அதைக் கண்ட ஆரியா “ஓ மை கடவுளே! இந்த மதர் இந்தியாவோட டிராமாவுக்கு ஒரு புல்ஸ்டாப்பே இல்லையா?” என்று மனதிற்குள் கடுகடுத்தபடி மாடிப்படியை நெருங்கினான்.

 

பதைத்துப் போயிருந்த அன்னையின் முகத்தைக் கண்டதும் அவரைக் கொஞ்சம் சீண்டினால் என்ன என்று அவனது மனசாட்சி அவனைத் தூண்டிவிடவே “வாட் இஸ் திஸ் மாம்? அவன் யாரைத் தூக்கிட்டுப் போறான்? உங்க வருங்கால மருமகளைத் தானே! அதுக்குள்ள டிபிக்கல் இந்தியன் மாமியாராட்டம் பேச ஆரம்பிச்சிட்டிங்களா?” என்று அவரைச் சீண்டவே ஹேமா எரிச்சலைந்துவிட்டார்.

 

“போதும் நிறுத்துடா! சும்மா என்னைத் தூண்டிவிட்டுப் பேசவைக்காதே… அவ என்னோட வருங்கால மருமகளா? வாய்ப்பே இல்லை” என்றார் ஹேமா தீர்மானமாக.

 

ஆரியா தந்தையிடம் ரகசியமாகச் சைகை காட்டிவிட்டு “ம்ம்…வருங்கால மருமகளுக்கே இப்பிடி டென்சன் ஆனா எப்பிடி மாம்? அவன் யூ.எஸ்சுக்கு தியாவைக் கூட்டிட்டுப் போனது, அங்கே அவளோட டைம் ஸ்பெண்ட் பண்ணி அவளைப் புரிஞ்சுகிட்டு, அவ கிட்ட அவனோட காதலைச் சொல்லுறதுக்குத் தான்.. அவன் போற தோரணையைப் பார்த்தா கட்டாயம் லவ்வைச் சொல்லிருப்பான்…கூடிய சீக்கிரமே நீங்க மாமியார் ஆகப் போறிங்க மிசஸ் நாராயணன்… இனிமே இப்பிடி அடிக்கடி எரிச்சலாகப் பழகிக்கோங்க” என்று கிண்டல் செய்துவிட்டுத் தனது அறையை நோக்கிச் சென்றான்.

 

ஹேமா அவன் சொல்லுவதைக் கேட்டுச் சிரிக்கும் நாராயணனை முறைத்துவிட்டு தங்களின் அறையை நோக்கி விறுவிறுவென்று சென்றுவிட்டார்.

*******************

மறுநாள் காலையில் சந்தியா விழித்தபோது அவளை எழவிடாமல் தடுத்தது அந்த மெத்தையின் மென்மை. எழுந்திருக்க விரும்பாமல் கண்ணை மூடி அந்த மென்மையை ரசித்துக்கொண்டிருந்தவள் “உன்னோட ப்ளெயின் ஃபேஸ் கூட அழகு தான் பிரவுனி” என்ற சூரியாவின் குரலில் அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்தாள்.

 

எழுந்தவளின் பார்வையில் விழுந்தான் அவளது படுக்கைக்கு எதிர்ப்புறத்தில் கிடந்த சோபாவில் அமர்ந்திருந்த சூரியா. அவனைக் கண்டதும் குழம்பியவள் “நீ இங்கே என்ன பண்ணுற மார்ஸ்மாலோ?” என்று கேட்டபடி படுக்கையிலிருந்து கீழே இறங்கினாள்.

 

சூரியா கால் மேல் கால் போட்டபடி அமர்ந்திருந்தவன் “உன் கிட்ட பேசுறதுக்காக வந்தேன் பிரவுனி… நான் வர்றப்போ நீ அசந்து தூங்கிட்டிருந்தியா, நானும் உன்னை டிஸ்டர்ப் பண்ணவேண்டாமேனு கொஞ்சநேரம் உன் பக்கத்துல உக்காந்து நீ தூங்குற அழகை ரசிச்சிட்டிருந்தேன்… இப்போ ஒரு கால் வந்துச்சு.. சோ என்னோட பேச்சுச்சத்தம் உன் தூக்கத்தைக் கலைச்சிடும்னு இங்கே உக்காந்திருக்கேன்… விளக்கம் போதுமா?” என்று மூச்சுவிடாமல் பேச சந்தியா தலையாட்டியபடி குளியலறையை நோக்கி நகர்ந்தாள்.

 

பல் துலக்கி, முகம் அலம்பிவிட்டு வந்தவளுக்கு ஆவிபறக்க காபி தயாராக இருக்கவே அதை எடுத்து மிடறு மிடறாகச் சுவைத்து அருந்தியவள் “லெட்சுமிம்மா போடுற காபிக்கு ஈடு இணையே இல்லடா… என்ன ஒரு டேஸ்ட்!  குடிச்சு பத்து நிமிசம் வரைக்கும் காபியோட டேஸ்ட் நாக்கில இருந்துப் போகாது” என்று லெட்சுமிம்மாவைப் பாராட்டிவிட்டு சூரியாவின் புறம் திரும்பினாள்.

 

அவன் எதுவும் பேசாமல் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி சோபாவில் சாய்ந்து அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருக்க சந்தியா இவனுக்கு என்னவாயிற்று என்ற ரீதியில் அவனைப் பார்த்தபடி சோபாவிலிருந்து எழுந்து தனது உடைமைகளைத் தேட அவை எதுவுமே அங்கில்லை.

 

சூரியா “உன்னோட லக்கேஜ் எல்லாமே கார்ல இருக்கு பிரவுனி… கொஞ்சம் உக்காரு.. உன் கிட்ட பேசணும்” என்று அழுத்தமானக் குரலில் கூறச் சந்தியா மறுப்பேதும் கூறாமல் அமர்ந்தாள்.

 

சூரியா சுற்றி வளைக்காமல் “பிரவுனி நான் உன் கிட்ட பிரபோஸ் பண்ணுனதுக்கு நீ இன்னும் பதில் சொல்லலையே! இப்போ சொல்லு! எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்?” என்று கேட்க

 

சந்தியா கேலியாக “இன்னைக்கு பத்து மணிக்கு மேலே பண்ணிக்குவோமா? பிகாஸ் அப்போ தான் ரிஜிஸ்டர் ஆபிஸ் ஓபன் ஆகுமாம்” என்று கூற

 

சூரியா “ப்ச்.. பிரவுனி நான் சீரியஸா பேசிட்டிருக்கேன்.. ஐ லவ் யூ அண்ட் ஐ வான்ட் டு மேரி யூ.. சோ விளையாடாம பதில் சொல்லு” என்று அழுத்தம் திருத்தமாகப் பேசியவனின் குரல் அந்த அறைக்கு வெளியே ஏதோ வேலையாக நடந்துச் சென்று கொண்டிருந்த ஹேமாவின் காதில் விழுந்து வைத்தது.

 

மகன் சந்தியாவைத் திருமணம் செய்யும் அளவுக்கு வந்துவிட்டானா என்று அதிர்ந்தவர் மேற்கொண்டு இருவரும் என்ன பேசுகிறார்கள் என்று மறைந்திருந்து கேட்க ஆரம்பித்தார்.

 

உள்ளே சூரியா சந்தியாவிடம் பதிலை எதிர்பார்த்திருக்க அவள் தயக்கத்துடன் பேச ஆரம்பித்தாள்.

 

“சூரியா ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட்… பட் என்னால இப்போதைக்கு உன்னைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது” என்று சூரியாவுக்கு அதிர்ச்சியையும் ஹேமாவுக்குச் சந்தோசத்தையும் ஒருசேர அவளது பதிலின் மூலம் அளித்தாள் சந்தியா.

 

அதைக் கேட்டு ஹேமாவின் உள்ளம் துள்ளிக் குதிக்க சூரியா அவள் மேலும் பேசட்டும் என்று கையைக் கட்டிக்கொண்டு காத்திருந்தான்.

 

“சூரியா மூனு வருசத்துக்கு முன்னாடி நான் உன்னைக் கண்மூடித்தனமா காதலிச்சேன்.. ஆனா அதே காதல் இப்போவும் இருக்குதானு கேட்டா நான் இல்லைனு தான் சொல்லுவேன்…

 

அது நான் ஸ்கூல் முடிச்சு டீனேஜ்ல இருந்த டைம்… அப்போ என் கண் முன்னாடி ஹீரோ மாதிரி ஒருத்தன் வந்துச் சிரிச்சுப் பேசுறதைப் பார்த்ததும் மனசுக்குள்ள அப்பிடியே பட்டாம்பூச்சி பறக்கிற மாதிரி இருந்துச்சு…

 

டீனேஜ் கேர்ளா இருந்தப்போ வாழ்க்கையை வாழக் காதல் மட்டுமே போதும்னு நினைச்சிட்டிருந்தேன்…. ஆனா இப்போ வாழ்க்கையை வாழக் காதல் மட்டுமே போதாது, அதை விட நமக்குனு ஒரு லட்சியம், நம்மளோட புரொஃபசன் இதெல்லாம் தான் வாழ்க்கைக்கு முக்கியம்னு நான் நினைக்கிறேன்.. என் புரொஃபசனோட முதல் படியில நான் நிக்கிற இந்த டைம்ல எனக்கு காதல், கல்யாணம்னு நேரத்தை வீணாக்க விருப்பமில்லை” என்று தெளிவாக இயம்பிவிட்டுச் சூரியாவைப் பார்க்க, அவனோ இலக்கின்றி வெறிக்க ஆரம்பித்தான்.

 

வெளியே நின்று இந்த உரையாடல் முழுவதையும் கேட்டுவிட்ட ஹேமா சந்தியாவின் தெளிவான விளக்கத்தில் மனம் நிறையவே யாரும் பார்க்கும் முன்னர் அங்கிருந்து மெதுவாக நழுவினார்.

 

சூரியா உணர்ச்சியற்ற முகத்துடன் இருப்பதைக் கண்ட சந்தியா அவனிடம் சென்று அவன் தோளில் தட்டி அழைத்து “என்னாச்சுடா? ஏன் ஒரு மாதிரியா இருக்க நீ? நான் சொன்னதைக் கேட்டு என் மேல கோவமா?” என்று ஆதுரத்துடன் வினவ

 

சூரியா தலையை உலுக்கிவிட்டு அவளின் மறுப்பு கொடுத்த அதிர்ச்சியை விலக்க முயற்சித்தபடி “நோ வே! நானே நினைச்சாலும் என்னால உன் மேல கோவப்பட முடியாது பிரவுனி… ஓகே.. நம்ம உங்க வீட்டுக்குக் கிளம்பலாமா?” என்று சாதாரணமாகப் பேச முயலச் சந்தியாவும் அதற்கு மேல் அவனுக்கு ஆறுதல் சொல்கிறேன் பேர்வழியாக அவனது வருத்தத்தை அதிகரிக்காமல் அவனுடன் வீட்டுக்குக் கிளம்பத் தயாரானாள்.

*****************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!