Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அகல்கவி சிலையமுதே

அகல்கவி சிலையமுதே 01

அகல்கவி சிலையமுதே 01

 

அன்று இலையுதிர் காலம் போல..



Advertisement

 

சூரிய பகவான் சுட்டெரிக்காமல் மேகங்களுக்குள் ஒளிந்திருந்தாரோ என்னவோ, வழக்கத்திற்கு மாறாக வெப்பம் சற்று தணிந்திருந்தது.

 

Advertisement

காற்றின் வேகத்தில் காய்ந்த இலைகள் தன் தாய் வீட்டைவிட்டு பிரிந்து கார் முன் பெரிய கண்ணாடியில் மோதி விழ, காலநிலையை ரசித்தபடி ஊருக்குள் நுழைந்தான் யுவனாதித்.

Advertisement

 

அவனுக்குள் பல உணர்ச்சிப் போராட்டங்கள்..

 

Advertisement

பள்ளிப் பருவம் முடிந்ததுமே சிலபல பிரச்சனைகளால் இந்த ஊரை விட்டே குடும்பத்தோடு வெளியேறியவன் இன்றுதான் மீண்டும் ஊருக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறான்.

 

ஊருக்குள் கார் நுழைந்ததுமே அவனிதழ் எதையோ நினைத்து தானாக விரிந்துக்கொண்டன.

 

“ஹ்ர்ம் ஹ்ர்ம்… பார்த்து வாய்ல இருக்குற முத்து கொட்டிர போகுது” பக்கத்திலிருந்த அவனுடைய தந்தை சிவலிங்கம் உர்ரென்ற முகத்தோடு சொல்ல, அவரைப் பார்த்தவனோ இதழுக்குள் சிரிப்பை அடக்கிக்கொண்டு பின்சீட்டிலிருந்த தன் தாய் சாரதாவைப் பார்த்தான்.

 

“எத்தனை வருஷத்துக்கப்பறம் அழைச்சுட்டு வந்திருக்கீங்க, என் அண்ணனுங்க என்னை பார்க்காம ஏங்கி போயிருப்பாங்க. அப்போவே என் அண்ணன் சொல்லிச்சு, இவன் உனக்கு வேணாம்மா, குடும்பத்தை பிரிக்கிறவன் மாதிரி இருக்கான்னு.. நான்தான் கேக்கல. காதல்தான் வேணும்னு பிடிவாதம் பிடிச்சு கட்டிக்கிட்டேன். ஆனா இப்போ…”

 

என்று அவர் மூக்கை உறிஞ்சியபடி வராத கண்ணீரை வரவழைத்து அழுகுவது போல நாடகமாட, தன் காதல் மனைவியை உக்கிரமாகப் பார்த்து வைத்தார் பெரியவர்.

 

“அடிங்க… நானாடீ காரணம் உன் அண்ணணுங்கதான்…” என்று ஆரம்பித்தவர், “அப்பா விடுங்க ப்ளீஸ்!” என்ற மகனின் வார்த்தையில் அமைதியாகி அவனை முறைத்துப் பார்த்தார்.

 

“டேய் யுவா, அந்த குடும்பத்து பொண்ணேதான் உனக்கு வேணுமா?  நம்ம ஊர்ல இல்லாத பொண்ணுங்களாடா? அந்த குடும்பத்த பத்தி தெரியாம அந்த ஃபேமிலி ப்ராடெக்ட்ட வாங்கி நான்தான் ஏமாந்துட்டேன், ரிவ்யூ பார்த்தும் நீயும் ஏன்டா ஏமாற போற” என்று கோபம் சிறிது கேலி கலந்து அவர் சொன்ன விதத்தில் சாரதா விழிகள் சிவக்கப் பார்த்தார்.

 

அவரால் கொஞ்சமும் ஜீரணிக்க முடியவில்லை.

 

“என் புள்ள மனச கலைக்காதீங்க, அவன் வாழ்க்கையில பண்ண உருப்படியான காரியம் என் பெரிய அண்ணன் பொண்ண காதலிச்சதுதான். ஆனா ஒன்னு, இப்போ நாம போறது என் சின்னண்ணன் பொண்ணு அகல்யாவோட கல்யாணத்துக்கு. இதை பத்தி பேசி கூடி வர காரியத்த கெடுத்துராதீங்க. நானே எல்லாத்தையும் பார்த்துக்குறேன். டேய் உனக்கும் சேர்த்துதான் சொல்றேன்”

 

என்று சாரதா எச்சரிக்கும் குரலில் சொல்ல, அவரின் வார்த்தைகள் அவன் காதில் விழுந்தால்தானே!

 

காரை செலுத்திபடி அவன் கனவுலகத்தில் மிதக்க, அதேநேரம் ஊருக்குள் அந்த பாரம்பரிய வீட்டின் அறையொன்றில் கைகளைப் பிசைந்தபடி கண்ணீர் மல்க நின்றிருந்தாள் அகல்யா.

 

அவளுடைய உடல் தன் முன்னே ஆஜானுபாகுவான தோற்றத்தில் பெரிய மீசையோடு நின்றிருந்த தன் தந்தை முத்துப்பாண்டியின் கோபத்தில் நடுங்கிக்கொணடிருந்தது.

 

அவள் கால்கள் தானாக தன் தாயின் பின்னே மறைந்து தன்னை ஒளித்துக்கொள்ள முயற்சிக்க, தைரியத்தை வரவழைத்து பேசினார் அவர் மனைவி பொன்னி.

 

“ஏங்க..  அகலுக்கு இந்த கல்யாணம் பிடிக்கலயாங்க. மேல படிக்கணும்னு ஆசைப்படுறா. நாம வேணா கொஞ்ச நாளைக்கப்பறம்…” என்று அவர் தயக்கத்தோடு இழுக்க, மகளை அவர் பார்த்த பார்வையில் அவளுக்கு சர்வமும் அடங்கிவிட்டது.

 

“எதே உன் பொண்ணுக்கு.. மேல படிக்க…” என்று கோபத்தை அடக்கிய குரலில் ஏளனமாகக் கேட்டவர், “மேடம் பன்னடாங் க்ளாஸு பெயிலு, கணக்கு வாத்தியார் திட்டாத நாளில்ல. படிப்புக்கும் உன் பொண்ணுக்கும் ஏழாம் பொருத்தம். இதுல அம்மணிக்கு இப்படியொரு சாக்கு” என்றார் பற்களைக் கடித்துக்கொண்டு.

 

அகல்யாவுக்கு சப்பென்று ஆகிவிட்டது. ஆனால் எதிர்த்து பேசும் தைரியம்தான் துளியளவும் இல்லையே!

 

“இல்லங்க… அந்த மாப்பிள்ளைக்கு முப்பத்தைஞ்சு வயசாகுது. நம்ம பொண்ணுக்கு இன்னும் இருபது கூட முழுசா ஆகல. அதாங்க…” என்று பொன்னி மீண்டும் ஏதோ சொல்ல வர, அடிப்பது போல ஒரு அடி முன்னே வைத்தார் முத்துப்பாண்டி.

 

“என்னலே பயம் விட்டு போச்சா? இந்த கல்யாணத்த நிறுத்தலாம்னு நினைச்சீங்க ஆத்தாளையும் மகளையும் கொன்னுடுவேன் சொல்லிட்டேன். உன் கூட படிச்சாளே அந்த பொட்ட சிறுக்கி காதலிச்சு ஓடி போன மாதிரி இவளும் எவனையாச்சும் இழுத்துட்டு போவா, அதை நான் பார்த்துட்டு நிக்கணுமா? என் மானம் போறதுக்கு முன்னாடி எவன் தலையிலயாச்சும் இவள கட்டி வச்சா போதும் எனக்கு. ஒழுங்கா போய் கல்யாணத்துக்கு ஆக வேண்டிய வேலைய பாரு!”

 

அவர் சொல்லிவிட்டு திரும்ப, விழி விரித்தபடி கதவு நிலையில் சாய்ந்து நின்றிருந்தாள்  மித்ரா. அகல்யாவின் பெரியப்பா சங்கரபாண்டியின் மகள்.

 

அவளைப் பார்த்ததும் புன்னகைத்தவர், “அட மித்து கண்ணு உன் தங்கச்சி கல்யாணத்துக்கு வர நேரமா இது, சரி சரி போய் அவளுக்கு புத்தி சொல்லிக்கொடு!” என்றுவிட்டு அறையிலிருந்து வெளியேறிச் செல்ல, மகளை ஏமாற்றத்தோடு பார்த்துவிட்டு கணவரின் பின்னே ஓடினார் பொன்னி.

 

“மீண்டும் மீண்டுமா…” என்று கேலியாக சொல்லிக்கொண்டே மித்ரா அகல்யாவின் அருகில் வர, உடலில் திராணி இல்லாதவள் போல சோர்ந்துப்போய் தொப்பென்று மெத்தையில் அமர்ந்துக்கொண்டாள் மற்றவள்.

 

“அப்போ அவ்வளவுதானா! எல்லாமே முடிஞ்சு போச்சா… நா.. நான் என்ன பண்ணுவேன்?” தலையைத் தாங்கியபடி அமர்ந்திருந்தவளின் மனதில் ஏதேதோ எண்ணங்கள் புரண்டோட, ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டாள் மித்ரா.

 

“சித்தப்பாவ பத்தி உனக்கு நல்லாவே தெரியும்ல, கண்டிப்பா இதை நிறுத்த முடியாது. பேசாம அந்த கிழட்டையே கட்டிக்கோ! அம்மணி படிச்ச படிப்புக்கும் அழகுக்கும் அவன் சம்மதிச்சதே பெரிய விஷயம்தான்”

 

வழக்கமாக அவள் சொல்வதுதான். ஆனால், அந்த வார்த்தைகளை எப்போதும் வலியை அடக்கிய புன்னகையோடு கடப்பவளுக்கு இன்று விழிகளில் தெரியும் வலியை மறைப்பது முடியாத காரியமாகிப் போனது.

 

அகல்யாவின் விழிகள் கலங்கி வலியை அப்பட்டமாக பிரதிபலிக்க, அதை கண்டுகொண்டாலும் அலட்சியமாக தோளைக் குலுக்கியபடி அவளருகே அமர்ந்துக்கொண்டாள் மித்ரா.

 

“அடக்கடவுளே! என்ன இது அகல், இதுக்கெல்லா போய் அழுவாங்களா, அந்த ஆளுக்கு மாசம் மூனு லட்சம் வருமானமாம், சொந்தமா ரெண்டு கார் இருக்கு. இதுக்குமேல வயசா புள்ள முக்கியம்?

 

அதுமட்டுமில்லாம மறுபடியும் சொல்றேன்னு கோச்சிக்காத அகலு! படிப்பும் உன் மண்டைக்கு ஏறல சரி வேற ஏதாச்சும் திறமை இருக்கான்னு பார்த்தா எதுவும் உருப்படியா பண்ண முடியல. அப்படி இருக்குறப்போ சித்தப்பாவ குத்தம் சொல்ல முடியாது”

 

என வேண்டுமென்றே குத்தலாக வந்தன மித்ராவின் வார்த்தைகள்.

 

அகல்யாவின் மனம் வேதனையில் துடித்தது. தன் அக்காவிடம் அவள் இத்தகைய வார்த்தைகளை எதிர்பார்த்ததுதான்.

 

ஜாடையில் அகல்யாவும் மித்ராவும் இரட்டை சகோதரிகள் போலத்தான். ஆனால், குணத்தில் மலையளவு வித்தியாசம்.

 

சிறு வயதிலிருந்தே மித்ரா தன் சகோதரியோடு ஏட்டிக்கு போட்டியாக இருப்பது என்னவோ உண்மைதான். தன்னை விட அவளுக்கு எதுவும் கிடைத்துவிடக் கூடாதென்று மும்முரமாய் இருப்பவளுக்கு இந்த சந்தர்ப்பம் கூட நல்ல வாய்ப்பாகத்தான் இருந்தது.

 

அதுமட்டுமல்லாமல் குடும்பத்தின் மூத்த வாரிசின் மகள் என்ற பெருமை வேறு மித்ராவுக்கே சேர, அனைவரும் அவளை தலையில் தூக்கி வைத்து கொண்டாடாத குறைதான்.

 

ஆனால், அகல்யா எதையும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அவளுக்கென்று பெரிதாய் எந்த ஆசைகளும் இல்லை. அந்த ஒருவனைத் தவிர..

 

இப்போது அவள் வேதனையில் புழுகுவது கூட அந்த ஒருவனுக்காகத்தானே!

 

ஆனால் அந்த ஒருவனின் காதலுக்கும் தகுதியற்றவளாய் போனதுதான் அவளுடைய துரதிஷ்டவசமாகிப் போனது.

 

இங்கு ஹாலில் அமர்ந்திருந்த சங்கரபாண்டியோ தன்னெதிரே வந்தமர்ந்த முத்துப்பாண்டியை அலட்சியப் பார்வைப் பார்த்து, “இதெல்லா நல்லா இல்ல முத்து, நல்லது கெட்டதுக்கு கூப்பிடதான் குடும்பம் இருக்கு. வீட்டுல நடக்குற கல்யாண வேலைங்கள பத்தி ஒரு வார்த்தைக் கூட என்னை பெரிய மனுஷன்னு மதிச்சு சொல்றதே இல்லயே!” என்றார் குத்தலாக.

 

அந்த வார்த்தைகளில் தன் அண்ணனை எரிச்சலாகப் பார்ததார் முத்துப்பாண்டி.

 

“அப்படியெல்லா இல்லண்ணே, மாப்பிள்ளயே எல்லா வேலையும் பார்த்துட்டாரு, எங்களுக்கு எதுவும் மிச்சம் வைக்கல” என்று வெளியில் சொல்லிக்கொண்டாலும் உள்ளுக்குள் கரித்துக்கொட்ட, வீட்டை சுற்றிமுற்றி பார்த்த சங்கரபாண்டியோ, “வந்தவங்களுக்கு குடிக்கிறதுக்கு எதுவும் கொடுக்க மாட்டீயாலே?” என்று கேட்டார் வேண்டுமென்று.

 

சாதாரணமாக செலவு செய்ய பத்தாயிரம் தடவை யோசிப்பவர் இப்போது மட்டும் மகளின் திருமணமென்று வாரி இறைத்துவிடுவாரா என்ன!

 

“குடிக்கதானே! இதோ சொல்றேன்” என்றவர், மனைவி இருக்கும் திசைக்கு எட்டிப் பார்த்து, “அடியேய், அண்ணனுக்கும் அண்ணிக்கும் ஜூஸு போட்டு எடுத்து வா! ஒரு டம்ளர் போதும். அண்ணனுக்கு வயசாகிருச்சுல்ல அதான் ஹிஹிஹி…” என்று வெட்கமே இல்லாமல் சொல்லிவிட்டு எழுந்துச் செல்ல, அவரை ஒரு மார்கமாகப் பார்த்து வைத்தனர்  சங்கரபாண்டியும் அவர் மனைவி மேகலையும்.

 

“பார்த்தீங்களாங்க, உங்க தம்பிய, அவரோட கஞ்சத்தனம் போகப் போக எல்லை மீறி போகுது.. ச்சே! நான் முன்னாடியே சொன்ன மாதிரிதான் தம்பி பொண்ணுக்கு கல்யாணம் அப்படி இப்படின்னு பணத்த அள்ளி கொடுத்தீங்கன்னா அவ்வளவுதான். நமக்கும் ஒரு பொண்ணு இருக்கு நியாபகம் வச்சுக்கோங்க..”

 

என்று மேகலை சொல்லிக்கொண்டிருக்கும் போதே வாசலில் வந்து நின்றது அந்த கார்.

 

ஹாலிலிருந்தவர்களோ யாரென்று ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருக்க, காரிலிருந்து இறங்கினான் யுவனாதித்.

 

சிவலிங்கத்தின் முகமோ உர்ரென்று இருக்க, தாய் வீட்டைப் பார்த்த சந்தோஷத்தில் விழிகள் கலங்கிய சாரதா கணவரைக் கூட கண்டுகொள்ளாமல் விறுவிறுவென்று உள்ளே ஓடினார்.

 

யுவனின் இதயத்துடிப்பு ஹாலில் அமர்ந்திருந்த சங்கரபாண்டியை கண்டதும் படபடவென அடித்துக்கொள்ள, அவன் மனம் ‘மித்ரா… மித்ரா…’ என்று மீண்டும் மீண்டும் அவள் பெயரையே சொல்லிக்கொண்டிருந்தது.

 

அலைப்பேசியிலேயே தொடர்ந்த சிறுவயது காதல் அல்லவா இது!

 

பல வருட குடும்ப பிரச்சனைகளுக்கு பிறகு இப்போதுதான் அகல்யாவின் திருமணமென்று மொத்தக் குடும்பமும் கூடியிருக்கின்றனர்.

 

“அட யுவனா இது.. எப்படிப்பா இருக்க? மாப்பிள்ள ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டான்ல!” என்று சங்கரபாண்டி ஆச்சரியத்தோடு கேட்க, “வணக்கம் மாமா” என்றபடி அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியவன், விழிகளை சுழலவிட்டு அந்த ஒருத்தியைதான் தேடினான்.

 

“யாரப்பா தேடுற, மித்துவதானே! அவ உள்ள இருக்கா” என்று மேகலை தன் மகளின் காதல் அறிந்து யுவனின் காதருகே மெல்ல சொல்ல, விழிகள் மின்ன உள்ளே ஓடியவனை அழைத்த அழைப்புக்கள் எல்லாம் காற்றில் கரைந்த கற்பூரம்தான்.

 

ஒவ்வொரு அறையாக எட்டிப் பார்த்த வண்ணம் உள்ளே சென்றவனின் கால்கள், அங்கு ஜன்னல் வழியே வெளியே வெறித்தபடி  நின்றிருந்த அந்த ஒருத்தியைப் பார்த்துவிட்டு அப்படியே நின்றன.

 

“மித்ரா…” அவனிதழ்கள் மெல்ல முணுமுணுக்க, சுற்றிமுற்றி பார்த்துவிட்டு மெல்ல அவளை நெருங்கினான்.

 

சட்டென அந்த பெண்ணவளே எதிர்பார்க்காது அவள் இடையை வளைத்துப் பிடித்தவன் பின்னாலிருந்து அணைத்தபடி அவள் வாயை வேகமாக மூடிக்கொண்டான்.

 

எங்கு கத்திவிடுவாளோ என்ற பயம் வேறு அவனுக்குள்!

 

“ஷ்ஷ் நான்தான், கத்தாத!” என்று தன் மீசை முடி அவள் காது மடலில் உரசச் சொன்னவன், அவளை அணைத்தபடியே தன்னை நோக்கித் திருப்பிய மறுகணம் அவள் கன்னத்தில் தன்னிதழை அழுந்தப் பதித்தான்.

 

ஒருசில கணங்கள்தான். நிமிர்ந்து தான் முத்தமிட்டவளின் முகத்தைப் பார்த்தவனுக்கு உலகமே சுற்றிவிட்டது.

 

அவனுடைய முகம் மட்டுமல்ல அவனெதிரே நின்றிருந்த அகல்யாவின் முகமும் பேயறைந்தது போல இருக்க, வார்த்தைகள் கூட வரவில்லை இருவருக்கும்.

 

இப்படியொரு தருணத்தை சுத்தமாக எதிர்பார்க்கவில்லையென்று அவர்களுடைய அதிர்ந்த முகமே அப்பட்டமாகக் காட்ட, அதிர்ச்சியில் சிலை போல உறைந்துப்போய் நின்றிருந்தனர் யுவனும் அகல்யாவும்.

 

இருவருடைய பார்வையும் ஒருவரையொருவர் பார்த்தபடி அப்படியே இருக்க, “மாமா…” என்ற குரலிலேயே நடப்புக்கு வந்தான் ஆடவன்.

 

குரல் வந்த திசையை நோக்கி அவன் விருட்டென்று திரும்பிப் பார்க்க, அங்கு இருவரின் நெருக்கத்தைப் பார்த்து முகம் சிவக்க நின்றிருந்தாள் மித்ரா.

 

அவளைப் பார்த்துவிட்டு வேகமாக தன்னை நெருங்கியிருந்த அகல்யாவைப் பார்த்தவன், துள்ளிக் குதித்து விலகி நின்று, “சா.. சாரி, மித்து நான் வேணும்னு பண்ணல அது…” என்று தடுமாறியபடி அகல்யாவை நோக்கி ஒற்றை விரலை நீட்டி, “அகல்?” என்று கேட்டான்  கேள்வியாக.

 

அவளுக்கோ நா எழவில்லை. இன்னும் அதிர்ச்சியிலிருந்து வெளியிலேயே வராதது போல சிலையாகி நின்றுக்கொண்டிருந்தாள் அகல்யா.

 

-Sheha zaki

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!