Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அகல்கவி சிலையமுதே

அகல்கவி 03

 

அகல்கவி சிலையமுதே 03

 



Advertisement

“அண்ணே நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..” சாரதா தயங்கியபடிக் கேட்க, தேநீர் அருந்திக்கொண்டிருந்த சங்கரபாண்டியோ, “ம்ம் சொல்லு..” என்றார் ஒரு மிடறு அருந்தியபடி.

 

சாரதாவுக்கு எப்படி பேச்சை ஆரம்பிப்பதென்றே தெரியவில்லை.

Advertisement

 

Advertisement

“அது வந்துண்ணே.. மித்ராவ எங்க வீட்டு மருமகளா ஆக்கிக்க ஆசைப்படுறேன். உங்களுக்கு விருப்பம்னா…” என்று அவர் தயக்கமாக இழுக்க, சங்கரபாண்டிக்கோ புறை ஏறிவிட்டது.

 

“அய்யோ என்னங்க..” என்றபடி மேகலை கணவருக்கு தண்ணீர் க்ளாஸை நீட்ட, உடனே அதை வாங்கி அருந்தியவர் பக்கவாட்டாகத் திரும்பி தன் தங்கையை முறைத்துப் பார்த்தார்.

Advertisement

 

“இதை நான் எதிர்பார்த்ததுதான்” என்ற ரீதியில் அவர் ஒரு பார்வைப் பார்க்க, சிவலிங்கமோ எதுவும் பேசவில்லை.

 

இந்த சம்பந்தத்தில் விருப்பமில்லை என்று சொன்னால் மட்டும் என்னதான் நேர்ந்துவிடப் போகிறது!

 

தன் மகனின் ஆசையறிந்து அவர் அமைதியாய் இருக்க, தன் அண்ணனை பதற்றமாகப் பார்த்தார் சாரதா.

 

“என் பையனுக்கு என்ன அண்ணே குறைச்சல், டுபாய்ல வேலை பார்த்து வந்திருக்கான், கூடிய சீக்கிரம் இங்கேயும் நல்ல கம்பனில வேலை கிடைச்சிடும். உன் பொண்ண ராணி மாதிரி பார்த்துக்குவான். நான் பார்த்து வளர்த்த பொண்ணு மித்து, என் பொண்ணா நினைச்சுக்குவேன்”

 

எப்படியாவது இந்த திருமணத்தை நடத்தி வைக்க அவர் ஒரு முடிவோடு இருக்க, சங்கரபாண்டியின் பார்வையோ சிவலிங்கத்தின் மீதுதான் பதிந்தது.

 

“த்தூ.. இதெல்லா ஊராடா! மனுஷன் வாழுவானாடா இங்க? காட்டுமிராண்டிங்க. நீங்களே இங்கயிருந்து சாவுங்கடா!”

 

பல வருடங்களுக்கு முன் சிவலிங்கம் பேசிய அந்த வார்த்தைகள்தான் அவருக்கு ஞாபகத்திற்கு வந்தன.

 

அதை நினைத்துப் பார்த்தவரின் இதழ்கள் கேலியாக வளைய, “ஹ்ர்ம் ஹ்ர்ம்.. தாராளமா பேசி வைக்கலாம். ஆனா… மாப்பிள்ள எங்க ஊர்லதான் இருக்கணும். அதுக்கு சம்மதம்னா எனக்கும் சம்மதம்” என்று சொல்ல, சிவலிங்கமோ முறைத்துப் பார்த்தார்.

 

சாரதாவுக்கு கூட இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

 

அவர் தயங்கியபடி ஏதோ சொல்ல வர, “ஏங்க என்னங்க நீங்க, நம்ம பொண்ணும் இந்த ஊர்லயிருந்து கஷ்டப்படணுமா? பட்டணத்துல இருந்தாதானே மாப்பிள்ளை ஆஃபீஸ்ல வேலை பார்க்க முடியும், நம்ம பொண்ணயும் நல்லா பார்த்துக்க முடியும்! நீங்க பாட்டுக்கு உங்க இஷ்டத்துக்கு முடிவு பண்றீங்க.. நாம வேணா குடும்பமா பட்டணத்துக்கு போயிரலாம். என்ன சொல்றீங்க” என்று குறுக்கிட்டு கணவரை சமாளித்தார் மேகலை.

 

மனைவியின் வார்த்தைகளைக் கேட்டதும் சங்கரபாண்டியின் புருவங்கள் முடிச்சிட, சில கணங்கள் ஆழ்ந்து யோசித்தவர் “ம்ம்.. பார்க்கலாம்” என்றார் யோசனையோடு.

 

சாரதாவுக்கு அந்த பதிலே போதுமாக இருந்தது.

 

ஆனால், இவர்கள் பேசுவதை பார்த்துக்கொண்டிருந்த பொன்னியின் மனம் தன் மகளை நினைத்து வேதனையில் துடித்தது.

 

அதேநேரம், நகைக் கடையிலிருந்து வெளியேறிய யுவன் அடுத்து அழைத்துச் சென்றது என்னவோ லட்சுமி டெக்ஸ்டைல்ஸுக்குதான்.

 

உள்ளே சென்றதுமே மித்ரா பெண்கள் பிரிவுக்கு சென்று பல விதமான ஆடைகளை வைத்துப் பார்ப்பதும் கையில் அடுக்குவதுமாக இருக்க, அவள் பின்னாலேயே குட்டி போட்ட பூனை போல திரிந்துக்கொண்டிருந்தான் யுவன்.

 

அகல்யாவோ ஒரு ஓரமாக நின்றுக்கொண்டவள் அமைதியாக யுவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

அவள் விழிகளில் ஏனென்று தெரியாத ஒரு ஏக்கம்.

 

“மாமா எனக்கு இது நல்லா இருக்கா?” என்று ஒரு சுடிதாரை மித்ரா அணிந்து வர, மேலிருந்து கீழ் அவளைப் பார்த்தவனின் விழிகள் அவளை அப்பட்டமாக ரசித்தன.

 

“செம்மயா இருக்க மித்து” அவள் அவள் காதருகே நெருங்கி கிறக்கமான குரலில் சொன்னவன், அவளையே இமை வெட்டாமல் பார்க்க, மித்ராவின் முகமோ குப்பென்று சிவந்தது.

 

“மாமா…” என்று போலிக் கோபத்தோடு அவன் மார்பில் கை வைத்து தடுத்தவள் ட்ரயல் ரூமிற்குள் செல்லப் போக, அவளையும் தாண்டி உள்ளே நுழைந்தான் அவன்.

 

“அய்யோ மாமா என்ன பண்றீங்க, யாராச்சும் பார்த்தா அவ்வளவுதான்” அவளுக்குள் பதற்றம் தொற்றியது.

 

ஆனால், யுவன் எதைப் பற்றியும் யோசிப்பதாக இல்லை.

 

“என் முறைப்பொண்ணு கூட நான் இருக்கேன், யார் என்ன சொல்லிட முடியும்?” என்று சொல்லிக்கொண்டே அவளை நெருங்கியவன் அவளிடையைப் பற்றி தன்னை நோக்கி இழுத்து தன்னோடு நெருக்கிக்கொண்டான்.

 

மித்ராவுக்கு உடல் சிலிர்த்தடங்கியது. அவளால் அவன் விழிகளை நேருக்கு நேராக பார்க்கக் கூட முடியவில்லை.

 

அவள் வெட்கத்தோடு முகத்தை திருப்பிக்கொள்ள, அவள் நாடியில் கை வைத்து தன் விழிகளை பார்க்கச் செய்தவனின் பார்வையோ மெல்ல அவளிதழின் மேல் பதிந்தது.

 

அடுத்தகணம் கொஞ்சமும் தாமதிக்கவில்லை அவன்.

 

சட்டென்று அவளிதழைக் கவ்விக்கொண்டு சுவைக்கத் தொடங்க, மித்ராவும் அவனுக்குள் மூழ்கிப் போக, இடம் பொருள் மறந்து முத்தப் போரில் ஈடுபட்டனர் இருவரும்.

 

அவனுடைய கரங்களும் அவளுடலில் அத்து மீற, இருவரையும் தேடி வந்த அகல்யாவோ சுற்றிமுற்றி பார்த்துவிட்டு ட்ரயல் ரூம் கதவை வேகமாகத் திறந்தாள்.

 

அவள் திறந்ததும்தான் தாங்கள் தாழிடாததை உணர்ந்த மித்ரா தனக்குத்தானே நொந்துக்கொண்டவாறு அகல்யாவை சங்கடமாகப் பார்க்க, யுவனுக்கும் ஒரு மாதிரியாகிப் போனது.

 

இப்படியொரு சூழ்நிலையை அகல்யாவும் எதிர்பார்க்கவில்லை.

 

“என்.. என்னை மன்னிச்சிருங்க! எனக்கு தெரியல அதான்…” அகல்யாவுக்கு அழுகை தொண்டையை அடைக்க, வார்த்தைகள் வர மறுத்தன.

 

“நாங்கதான் மன்னிப்பு கேக்கணும்” என்று பின்னந்தலையை சொரிந்தபடி சொன்னவன், “மித்து, சீக்கிரம் ட்ரெஸ் சேன்ஞ் பண்ணிட்டு வா, வீட்டுக்கு போகலாம்” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று முன்னே சென்றுவிட, சகோதரியை முறைத்துப் பார்த்தாள் மித்ரா.

 

“மேன்னர்ஸ்னா என்னன்னே தெரியாதா அகல் உனக்கு? இப்படிதான் கதவ திறப்பியா? படிக்காத முட்டாள்னு நல்லாவே நிரூபிக்குற” பற்களைக் கடித்தபடி சொன்னவள், ட்ரயல் ரூமிற்குள் நுழைந்துக்கொள்ள, மித்ரா பேசியதெல்லாம் அவளுடைய காதிற்குள் விழவே இல்லை.

 

பின் மூவரும் வீட்டிற்கு வர, நடை பிணம் போல உள்ளே வந்த அகல்யாவோ தனதறைக்குள் சென்று கதவை சாற்றிக்கொண்டாள்.

 

அவளுக்கு தலையே வெடித்து விடும் போல இருந்தது. கத்தி அழக் கூட முடியாத நிலை.

 

சத்தமே வராது வாயைப் பொத்திக்கொண்டு விம்மி விம்மி அழுதவளின் பார்வை மேசை மீதிருந்த கத்தியின் மீது பதிய, அவள் கால்களும் தானாக அதை நோக்கிச் சென்றன.

 

தீர்க்கமான பார்வையோடு அதை கையிலெடுத்தவள், தன் மணிக்கட்டில் வைத்து ஒரு முடிவோடு தயாராகி விழிகளை மூடிக்கொண்டாள்.

 

இன்னும் கொஞ்சம் கத்தியை அழுத்தினால் கூட தோலைக் கிழித்துவிடும். இறுதி நிமிடங்களுக்காக தயாராகி கொஞ்சம் கொஞ்சமாக அவள் அழுத்தம் கொடுக்க, திடீரென ஒரு குரல் அவள் செவியில் விழுந்தது.

 

அவள் விழிகள் அறை ஜன்னல் புறம் திரும்ப, அதனருகே சென்றவள் சிறிய இடைவெளியினூடே வெளியில் நின்றுக்கொண்டிருந்த யுவனைதான் பார்த்தாள்.

 

அலைப்பேசியில் யாருடனோ சிரித்துப் பேசிக்கொண்டிருக்கிறான் போலும்!

 

அந்த புன்னகை பெண்ணவளின் இதழிலும் புன்னகையை வரவழைக்க, விழிகளிலிருந்து கண்ணீர் மட்டும் விடாமல் ஓடியது.

 

கையிலிருந்த கத்தியை தூக்கிப் போட்டவள் கண்ணீரைத் துடைத்தபடி அப்படியே தொப்பென்று கட்டிலில் அமர்ந்துக்கொண்டாள்.

 

இப்போது அவளிதழிலிருந்து ஒரு விரக்திப் புன்னகை மட்டும் வெளிப்பட்டது.

 

அந்த புன்னகைக்கு பின்னால் அத்தனை வலி புதைந்திருக்க, அன்றைய நாளும் கழிந்து அடுத்தநாளும் விடிந்தது.

 

காலையிலேயே பொன்னியின் குடும்பத்தினர் தூரத்து சொந்தம் என அனைவரும் வீட்டில் கூடிவிட, பம்பரம் போல் சுழன்றுக்கொண்டிருந்தனர் வீட்டிலுள்ளவர்கள்.

 

அகல்யாவுக்கும் பெரியவர்கள் சேர்ந்து நலங்கு வைக்கும் சடங்கை செய்ய, எதிலும் ஒட்டாமல் இழுத்த இழுப்பிற்கு இசைந்துக்கொடுத்தாள் அவள்.

 

“அடியே மித்து, உனக்கு முன்னாடி உன் தங்கச்சி கட்டிக்க போறா.. அவளுக்கப்பறமாச்சும் நீ கல்யாணம் பண்ணிப்பியா இல்லன்னா சன்னியாசி வேசமா…” அங்கிருந்த பெரியவர் ஒருவர் கேலியாகக் கேட்க, “க்கும்!” என்று நொடிந்துக்கொண்டவாறு ஆண்கள் குழுவுக்குள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த யுவனைதான் வெட்கத்தோடு பார்த்தாள் மித்ரா.

 

அவனும் அவளையே காதலோடு பார்த்து புன்னகைத்தபடி இதழை வருட, சிரித்தவாறு குனிந்துக்கொண்டவளின் அலைப்பேசி பெரிய சத்தத்தோடு ஒலித்தது.

 

திரையைப் பார்த்தவளின் முகம் மறுகணம் பேயறைந்தது போலாக, யுவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு மாடிக்கு ஓடினாள் மித்ரா.

 

அதேநேரம் அகல்யாவும் வந்தமர்ந்துக்கொள்ள, “பொதுவா எல்லா பொண்ணுங்களுக்கும் கல்யாணம் நெருங்கும் போதே கல்யாண கலை வந்துடும், இவ என்னலே மூஞ்ச உம்முண்ணு வச்சுக்கிட்டு… அம்மணிக்கு சந்தோஷம் இல்லயோ?” என்று கேட்டார் சொந்தங்களில் ஒருத்தி.

 

“அய்யோ இல்ல அத்தை, அகலோட நிறத்துக்கு எந்த மேக்கப் போட்டாலும் கலையே இல்லாத மாதிரிதான் இருக்கும் ஹாஹாஹா…” என்று ஒருத்தி நக்கலாக சொல்லி சிரிக்க, அவர்கள் பேசுவதை கவனித்துக்கொண்டிருந்த யுவனுக்கோ கோபம் புசுபுசுவென்று  எகிறியது.

 

“அகலோட நிறம்தான் அவளுக்கு அழகே, அவ எப்படியிருந்தாலும் அழகாதான் இருப்பா” அவன் தன் முறைப்பொண்ணை விட்டுக்கொடுக்காமல் பேச, அவளை கேலி செய்தவர்களோ கப்சிப்பென்று வாயை மூடிக்கொண்டனர்.

 

ஆனால், நிமிர்ந்து அவனைப் பார்த்தவளின் முகத்தில் மருந்துக்கும் புன்னகையில்லை. அதை யுவனும் உணராமலில்லை.

 

அவனுக்குள் குழப்பம் சூழ்ந்துக்கொள்ள, புருவ முடிச்சுகளோடு அவளையே பார்த்திருந்தவன் ஏதோ யோசித்து சமையலறையிலிருந்த பொன்னியை தேடிச் சென்றான்.

 

“அத்தை…” அவனுடைய அழைப்பில் திரும்பியவர், “என்னப்பா, ஏதாச்சும் வேணுமா?” என்று வேலை செய்தபடிக் கேட்க, “நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் அவன் வேகமாக.

 

தான் செய்துக்கொண்டிருந்த வேலையை நிறுத்தியவர், அவனை கேள்வியாக நோக்க, “அது… அகலுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லயா?” என்று தயங்கியபடிக் கேட்டான்.

 

பொன்னி இதை எதிர்பார்த்ததுதான்.

 

சங்ககத்தோடு அவனை ஏறிட்டவர், “எல்லாமே உன் மாமாவோட வற்புறுத்தல்தான் யுவா கண்ணா, மாப்பிள்ளைக்கு முப்பெத்தெட்டு வயசு எந்த பொண்ணுதான் கட்டிக்கணும்னு விருப்பப்படுவா? இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணம், நடக்குறது நடக்கட்டும்னு விட வேண்டியதுதான்.” என்று விரக்தியாக சொல்ல, யுவன் இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

 

“என்ன!” அவனுக்கு அதிர்ச்சி வேறு..

 

இடது பக்க புருவத்தை நீவி விட்டவாறு யோசனையோடு நகரப் போனவன், “யுவா தம்பி..” என்ற பொன்னியின் அழைப்பில் சட்டென்று நின்று அவரை கேள்வியாகப் பார்க்க, “அது.. நான் உன்கிட்ட..” என்று ஏதோ சொல்ல வந்தவர் பின் என்ன நினைத்தாரோ!

 

“அது ஒன்னுஇல்ல.. நீ போப்பா” நாக்கு நுனி வரை வந்த வார்த்தைகளை விழுங்கிவிட்டு அவர் திரும்பிக்கொள்ள, அவர் எதையோ சொல்ல வந்து தன்னிடம் மறைத்ததை உணர்ந்துக்கொண்டான் யுவன்.

 

அதே யோசனையோடு அவன் மாடிக்கு செல்ல, “உனக்கு எத்தனை தடவை சொல்றது, என்னால வர முடியாது” என்ற மித்ராவின் குரல் அறைக்குள்ளிருந்து கேட்டது.

 

சட்டென்று நின்றவன் அறைக் கதவைத் தட்டி, “மித்து…” என்று அழைக்க, திடீரென ஒரு மௌனம்.

 

சில கணங்கள் கழித்து கதவை மெல்ல திறந்தவள், “நீ.. நீங்களா மாமா, நான் என் ஃப்ரென்டு கூட பேசிட்டு இருந்தேன்…” என்று திக்கித்திணற, அவனோ அதையெல்லாம் கவனிக்கவே இல்லை.

 

அப்போதே சிலவற்றை உணர்ந்திருந்தால், சில ஏமாற்றங்களை சந்திக்காமல் இருந்திருப்பானோ என்னவோ!

 

“அது மித்து.. முத்து மாமா பண்றது கொஞ்சம் கூட சரியில்ல, அகலுக்கு பார்த்திருக்குற மாப்பிள்ள, அவளுக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாதவன். அவ.. அவ எப்படி சந்தோஷமா இருப்பா, இதை பத்தி மாமாகிட்ட பேசணும்டீ, எப்படியாச்சும் நிறுத்தணும்”

 

தீவிரமாக சொன்னபடி உள்ளே வந்தவன் அங்கிருந்த இருக்கையில் தோய்ந்துப் போய் அமர்ந்துக்கொண்டான்.

 

மித்ராவுக்கு அப்போதுதான் நிம்மதி பெருமூச்சு வெளியானது. கூடவே, அகல் திருமணத்தை பற்றி அவன் பேசுவதை எண்ணி சிறு எரிச்சலும் எட்டிப் பார்த்தது.

 

“அய்யோ மாமா, அந்த ஆளு இந்த ஊர்ல பெரிய மனுஷன், எம்புட்டு சொத்து இருக்கு தெரியுமா? அகல் கொடுத்து வச்சவ, இப்போலாம் யாரு மாமா வயச பார்க்குறாங்க, பணத்த தான் பார்க்குறாங்க. இதை போய் நிறுத்துறேன்னு முட்டாள்தனமா பேசிக்கிட்டு…” என்று மித்ரா சலித்த வண்ணம் சொல்ல, அவளை அதிர்ச்சியோடு பார்த்தான் யுவன்.

 

“மித்ரா, அவ உன்னோட தங்கச்சி, நீ புரிஞ்சுதான் பேசுறியா?” என்றவனின் வார்த்தைகள் கோபம் கலந்த அழுத்தத்தோடு வர, “அதெல்லா தெரிஞ்சுதான் பேசுறேன், நீங்கதான் தேவையில்லாம யோசிக்கிறீங்க. இதுல நம்ம குடும்ப மானமும் அடங்கியிருக்கு. அதுமட்டுமில்லாம இப்போதுதான் பல வருஷத்துக்கு அப்பறம் நம்ம குடும்பம் ஒன்னு சேர்ந்திருக்கு, நீங்களே அதை கெடுத்துறாதீங்க” என்று பொரிந்துவிட்டு வெளியேறினாள் மித்ரா.

 

யுவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

 

தலைமுடியை அழுந்தக் கோதி கோபத்தை அடக்கிக்கொண்டவன், அடுத்து சென்று நின்றது என்னவோ வீட்டிலிருந்து சற்று தொலைவிலிருந்த குளத்திற்கருகே தான்.

 

ஊரிற்கு வந்ததிலிருந்து அந்த பக்கம் அவன் செல்லவே இல்லை, சொல்லப்போனால் தவிர்த்தான் என்றுதான் சொல்ல வேண்டும்.

 

ஆனால் இப்போது, தன் உணர்வுகளை வெளிப்படுத்த அவன் அந்த குளத்தினருகே வந்து நின்றுக்கொள்ள, பழைய நினைவுகள் அவனை சுழற்றியடித்தன.

 

அந்த ஒரு குரல் அவனுக்குள் மீண்டும் மீண்டும் ஒலிக்க, தன் விம்பத்தையே குளத்து நீரில் நிமிடங்கள் கடக்க வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் யுவனாதித்.

 

அவன் விழிகள் கலங்கி சிவந்துப் போயிருக்க, உடல் இறுகி ப் போயிருந்தது.

 

அதேநேரம் தன் அறை பால்கனியில்  நின்று சிறிய உருவமாக தெரிந்த யுவனின் விம்பத்தையே உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட முகத்தோடு பார்த்திருந்தாள் அகல்யா.

 

 

-Sheha zaki

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!