Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அகல்கவி சிலையமுதே

அகல்கவி 05

 

அகல்கவி சிலையமுதே 05

 



Advertisement

கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் கழிந்துவிட்டன,

 

பொன்னியும் முத்துப் பாண்டியும் ஆளுக்கு ஒரு மூலையைப் பிடித்து அமர்ந்து சோகத்தைப் போக்க, அகல்யா அறைக்குள்ளேயே முடங்கிக்கொண்டாள்.

Advertisement

 

Advertisement

இதில் மேகலையும் சாரதாவுக்கும் பேச்சுக்கு நல்ல கன்டென்ட் கிடைத்தது போலத்தான் இருந்தது.

 

அன்று மண்டபத்தில் யுவன் மறுத்தானோ இல்லையோ சாரதா முடியாதென்று ஒரு ஆட்டம் ஆடிவிட்டார் என்பதுதான் உண்மை.

Advertisement

 

அகல்யா தன் மருமகளா என்று நினைக்கும் போதே அவருக்குள் ஒரு ஆத்திரம்..

 

“இதுக்குமேல இங்கயிருந்து என்ன பண்றது.. அப்போ கெளம்பலாமே!” சிவலிங்கத்திற்கு இந்த ஊரை விட்டு போனால் போதுமென்றிருந்தது.

 

“ஊருக்கு போனதுக்கப்பறம் நிச்சயதார்த்தத்துக்கு ஒரு நல்ல நாளா பாருங்க. மித்ரா யுவனோட கல்யாணத்த சீக்கிரம் பண்ணிடலாம். எப்போ என்ன நடக்கும்னு தெரியாதுல்ல அதான்…” என்று மேகலை சொல்ல, பொன்னியும் முத்துப்பாண்டியும் அமைதியாக நின்றிருந்தனர்.

 

மித்ராவோ அகல்யாவின் பக்கத்தில் அமர்ந்திருந்தவள், “என்ன அகலு, இந்த சம்பந்தம் விட்டு போச்சுன்னு கவலையா இருக்கா? ஆனா எனக்கு ஒன்னுதான் புரியல. உன் கூட பேசினதுக்கப்பறம் தான் அந்த மாப்பிள்ளையோட முகமே சரியில்ல. நீ ஏதாச்சும் சொன்னியா என்ன!” என்று கேட்டாள் சந்தேகப் பார்வையோடு.

 

அகல்யாவோ தடுமாறும் விழிகளை மறைக்க திரும்பிக்கொண்டவள், “அது.. அது எனக்கு தெரியல மித்து. என்கிட்ட சாதாரணமாதான் பேசினாரு. அப்பறம் என்னாச்சுன்னு தெரியல..” என்று திணற, சரியாக உள்ளே நுழைந்தான் யுவன்.

 

“எனக்கென்னவோ உனக்கு நல்லது நடந்த மாதிரிதான் தோனுது” என்றுக்கொண்டே வந்தவன், “நாங்க ஊருக்கு போறோம் அகல், நீ எதை பத்தியும் யோசிக்காத. உனக்கு பிடிச்சத பண்ணு. இந்த ஆள விட உனக்கு பொருத்தமா உன்ன புரிஞ்சு நடந்துக்குற ஒருத்தன் உனக்கு கிடைப்பான்” என்றான் உறுதியான குரலில்.

 

அந்த வார்த்தைகளில் அகல்யாவின் இதழ்கள் விரிய, அதை ஆச்சரியமாகப் பார்த்தவன், “அம்மணிக்கு சிரிக்க கூட தெரியுமா..” என்று கேலி செய்தபடி மித்ராவின் புறம் திரும்ப, அவளோ அவன் விழிகளைப் பார்க்க தயக்கப்பட்டு எங்கோ பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

யுவனுக்கு எதுவுமே புரியவில்லை.

 

“மித்து, நீ நல்லாதானே இருக்க?” என்று அவள் கன்னத்தை தாங்கியபடி அவன் கேட்க, “ம்ம் ஆமா மாமா.. நீங்க பத்திரமா போயிட்டு வாங்க, சீக்கிரம் மீட் பண்ணலாம்” என்றாள் அவள் வரவழைக்கப்பட்ட புன்னகையோடு.

 

யுவனுக்கு அவளுடைய வார்த்தைகளிலும் முகபாவனையிலும் ஏதோ ஒன்று சரியில்லை என்று மட்டும் தோன்றியது.

 

ஆனால் அதை அப்போது பொருட்படுத்தாமல் அங்கிருந்து அவன் நகர்ந்துவிட, நாட்களைக் கடந்து மாதங்களும் உருண்டோடின.

 

கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கழிந்த நிலையில்,

 

அப்போதுதான் குளித்து முடித்து வேலைக்கு தயாராகிக்கொண்டிருந்தான் யுவனாதித்தன்.

 

அறை கண்ணாடிக்கு முன்னே நின்று சட்டை பட்டன்களை போட்டபடி இருந்தவனின் பார்வை கட்டிலின் மேலிருந்த அலைப்பேசியின் மீதுதான் அடிக்கடி பதிந்து மீண்டது.

 

காரணம், வேற யாராக இருக்க முடியும்? சாட்சாத் மித்ராவேதான்.

 

ஊருக்கு சென்று வந்த நாளிலிருந்து மித்ரா அவனோடு பேசுவது என்னவோ குறைந்துதான் போயிருந்தது.

 

பேசும் ஒருசில நேரங்களில் தேவையில்லாத சண்டைகள் வேறு..

 

‘மித்ராவுக்கு என்னாச்சு, ஊருல இருக்கும் போது கூட நல்லாதானே இருந்தா.. இப்போ என்னாச்சு? எதுன்னாலும் அவள நேர்ல போய் மீட் பண்ணிதான் சார்ட் அவுட் பண்ணணும். ஆனா… அதுவும் வேணாம்னு சொல்றாளே! அப்பப்போ என்னை ப்ளாக் வேற பண்றா ச்சே!’

 

எரிச்சலில் நெற்றியை நீவி விட்டுக்கொண்டவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

 

ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டு உள்ளுக்குள் இருக்கும் குழப்பங்களை ஓரந் தள்ளியவன்,  நேரத்தைப் பார்க்க, தூக்கி வாரிப்போட்டது அவனுக்கு.

 

‘ஆத்தாடி ஆத்தா! இன்னைக்கு ஆஃபீஸ்ல ஒரு சம்பவம் இருக்கு’ என்று பதற்றமாக நினைத்தபடி வேகவேகமாக தயாராகி ஓடியவன் சாரதா சொல்வதைக் கேட்டுக்கொண்டே அவர் ஊட்டிய நான்கைந்து வாய் இட்லியை வாங்கிக்கொண்டான்.

 

“அம்மா, இதை பத்தியெல்லா எனக்கு எதுவுமே தெரியாது. நீங்களே பார்த்து பண்ணுங்க.. ஆனா செலவுக்கு எவ்வளவு வேணும்னு முன்னாடியே சொல்லிக்கோங்க, அப்போதான் மேனேஜர்கிட்ட அதை பத்தி பேச முடியும்” என்று சொன்னவன் அதன்பின் சொல்ல வந்த எதையும் காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் வேகமாக வெளியேறினான்.

 

சிவலிங்கத்தின் பழைய காரை விற்று வந்த பணத்தில், மிச்சமாக இருந்த கொஞ்சநஞ்ச கடன்களை அடைத்துவிட்டு இந்த வேலைக்காக சிலபல செலவுகளையும் செய்துவிட்டு அவனுக்கென்று வாங்கிய புதிய பைக் அவனைப் பார்த்தபடி இழித்துக்கொண்டு நின்றிருந்தது.

 

அதில் ஏறிக்கொண்டு மின்னல் வேகத்தில் அவன் வண்டியை பறக்கவிட, இங்கு சாரதாவோ தன் அண்ணன் சங்கரபாண்டிக்குதான் அழைத்தார்.

 

“ஹெலோ.. ஹெலோ அண்ணே, எங்களுக்கு தெரிஞ்ச புரோகிதரோட பேசிட்டேன். இந்த மாசம் நல்ல நாள் இருக்கு, அப்போவே நிச்சயாதார்த்தத்த வச்சுக்கலாம்னு சொல்லிட்டாரு. நீங்க என்ன சொல்றீங்க”என்று சந்தோஷத்தோடு சொல்ல,  மறுமுனையில் சற்று அமைதியாக காத்தார் சங்கரபாண்டி.

 

“ஹெலோ அண்ணே… ஹெலோ இருக்கீங்களா?” தன் அண்ணனின் மௌனத்தில் குழம்பிப் போனவரோ மீண்டும் அழைத்துப் பார்க்க, “ஆங் சாரதா.. நல்ல விஷயம்தான். நான் மித்ரா கூட பேசிட்டு உனக்கு கால் பண்றேன்” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.

 

அலைப்பேசி திரையை பார்த்துவிட்டு சோஃபாவில் அமர்ந்திருந்த தன் மகள் மித்ராவை பார்த்தவர், அவளுக்கெதிரே சென்றமர்ந்தார்.

 

பேச்சை ஆரம்பிக்கும் முன் சமையலறையிலிருந்த தன் மனைவியை எட்டிப் பார்த்தவர், “மித்ராம்மா, உன் அத்தை ஃபோன் பண்ணா, இந்த மாசமே நிச்சயதார்த்தத்த வச்சுக்கலாம்னு சொல்றா.. ஆனா…” என்று நிறுத்த, அவளோ ‘நிச்சயதார்த்தம்’ என்ற வார்த்தையிலேயே திடுக்கிட்டவள் பின் தந்தை தயக்கமாக இழுப்பதைப் பார்த்து கேள்வியாக புருவத்தை நெறித்தாள்.

 

“எனக்கு சாரதா கூட சம்பந்தம் பண்றதுல கொஞ்சமும் இஷ்டம் இல்ல, ஆனா நான் உன்ன வற்புறுத்தல. ஒரு அப்பாவா என் பொண்ண நல்ல வசதியான குடும்பத்துக்கு கட்டிக் கொடுக்கணுங்குறது என்னோட ஆசை.. இதுவரையும் நீ கேட்டது எதையும் நான் இல்லன்னு சொன்னதில்ல. ஆனா அவன்…” என்றவரின் முகம் அதிருப்தியில் சுருங்கியது.

 

“இப்போ கொஞ்சநாள் முன்னாடி கூட கேள்விப்பட்டுச்சு, மச்சான் எவனையோ நம்பி பணத்த போட்டு அவன் இவர ஏமாத்திபுட்டான். அதோட இருந்த கார வித்துட்டாராம், கடன அடைச்சு இருந்த மிச்ச மீதில பையன் போய் வரதுக்கு செகன்ட் ஹேன்ட்ல வண்டி எடுத்து கொடுத்திருக்காராம்.

 

அதுமட்டுமில்லாம யுவா வேலை பார்க்குற ஃபேக்டரி லாஸ்ல போய்கிட்டு இருக்குன்னு கேள்விப்பட்டேன், வேலை கூட நிரந்தரம் இல்லயாம்.. எனக்கு என்னவோ இது சரியா வரும்னு தோனல” என்று நிறுத்த, ஆழ்ந்து யோசித்தாள் மித்ரா.

 

தான் பேச வேண்டியதை பேசிவிட்டு அவர் எழுந்து சென்றுவிட, சரியாக மித்ராவின் எண்ணிற்கு யுவனிடமிருந்து அழைப்பு வந்தது.

 

அதை வெறித்துப் பார்த்தவள் அழைப்பைத் துண்டித்த மறுகணம் இன்னொரு எண்ணிலிருந்து அழைப்பொன்று வர, தன் தந்தை சென்ற திசையைப் பார்த்துவிட்டு அந்த அழைப்பையேற்று காதில் வைத்தாள்.

 

ஆனால், இங்கு அவளுக்கு தொடர்ந்து அழைத்துக்கொண்டிருந்த யுவனுக்கு தலையை பிய்த்துக்கொள்ளலாம் போல்தான் இருந்தது.

 

அந்த எரிச்சலோடு ஃபேக்டரி வாசலில் பைக்கை நிறுத்தியவன், உள்ளே நுழைய, அங்கு அவனோடு பிரச்சனை செய்வதற்கென்றே காத்திருப்பது போல நின்றிருந்தார் மேனேஜர் சுந்தரம்.

 

“தம்பி பார்த்து பார்த்து இன்னும் கொஞ்சம் ஆடி அசைஞ்சு வந்திருக்கலாமே! என்ன அவசரம்..” என்று அவர் வேண்டுமென்றே ஒரு மாதிரிக் குரலில் பேச, கை முஷ்டியை இறுக்கி கோபத்தை கட்டுப்படுத்தியவன், “சொல்லுங்க சார், ஏதாச்சும் பிரச்சனையா?” என்று கேட்டான் இறுகிய குரலில்.

 

“பின்ன.. இதென்ன உன் அப்பன் வீட்டு இடமா! இஷ்டத்துக்கு நீ வந்து போக.. நேத்து சொல்லாம கொல்லாம கெளம்பிட்டியாமே, இதுதான் உனக்கு லாஸ்ட் வார்னிங், இதுக்கப்பறம் இந்த மாதிரி பண்ணேன்னா ஐயாகிட்ட சொல்லி உன் சம்பளத்துலதான் கைய வைப்பேன்” என்று அவர் மிரட்ட, எகிறிய பிபியை கட்டுப்படுத்த பெரும்பாடு பட்டான் யுவனாதித்.

 

இப்போது இருக்கும் குடும்ப சூழ்நிலையில் வேலையை விட்டால் சோற்றுக்கு திண்டாட வேண்டியிருக்கும் என்பது மட்டும் தெரிந்திருந்தது அவனுக்கு.

 

“சாரி சார்..” அமைதியாக சொன்னவன், தன் வேலை செய்யும் இடத்திற்கு சென்று வேலையை ஆரம்பிக்க, அந்தோ பரிதாபம்.

 

அவன் இயக்கும் மிஷன் ‘இயங்க மாட்டேன்’ என்பது போல விதண்டாவாதம் செய்ய, மீண்டும் மேனேஜர் முன்னே சென்று நின்றான் அவன்.

 

“சார் நானும் ஒரு வாரமா சொல்லிட்டு இருந்தேன், மிஷின்ல ஏதோ சத்தம் கேக்குது. உள்ள ஏதோ பிரச்சனை இருக்கு. அதை பாருங்கன்னு நீங்க கொஞ்சமும் கண்டுக்கல. இப்போ பாருங்க மிஷின் வர்க் ஆக மாட்டேங்குது. இப்போ.. இப்போ நான் என்ன பண்றது?” என்று கேட்டான் இயலாமையோடு.

 

சுந்தரமோ வாயில் வெற்றியை மென்றபடி எட்டிப் பார்த்தவர், “ஐயா வந்ததும் சொல்லிக்குறேன், நீ போய் வேற வேலை இருந்தா பாரு” என்றுவிட்டு அலைப்பேசியை நோண்ட ஆரம்பிக்க, இவனுக்கோ ஆத்திரம் உச்சத்தை தொட்டது.

 

“சார் இன்னைக்கு மிஷின் வேலை செய்யலன்னா என் டார்கட்ட நான் முடிக்க முடியாது, ஏற்கனவே சம்பளம் ரொம்ப கம்மி, இதுல இதுவும் இல்லன்னா அவ்வளவுதான்” அவன் பேசுவது எதுவும் அவர் மண்டைக்கு ஏறுவதாக இல்லை.

 

காற்றில் கரைந்த கற்பூரமாய் அவன் வார்த்தைகள் கரைந்து போக, கோபத்தோடு காலை தரையில் உதைத்தவன் தன் மிஷின் முன்னே சென்று அமர்ந்துக்கொண்டான்.

 

சுற்றியிருந்தவர்களும் அவனை பாவமாக பார்த்துவிட்டு தத்தமது வேலைகளை கவனிக்க, முட்டியில் கைககளைக் கோர்த்து அமர்ந்திருந்தவனோ அந்த மிஷினை கூர்ந்து கவனித்தான்.

 

விழிகளை சுருக்கி அதை கூர்ந்து பார்த்தவன் திடீரென என்ன நினைத்தானோ!

 

வேகமாக எழுந்து அந்த மிஷினில் என்ன பிரச்சனையென்று சரிபார்க்கத் தொடங்க, “டேய் யுவா, என்னடா பண்ற? அவன்தான் உன்ன எதுவுமே செய்யாதன்னு சொன்னானே, அப்பறம் என்னடா? நீ ஏதோ பண்ண போய் உன்னாலதான் மிஷின் ரிபேர் ஆச்சுன்னு அந்த வெத்தலவாய் சொல்லிச்சுன்னா அவ்வளவுதான் ஆறு மாசம் நீ முழுசா வேலை பார்த்தாலும் இந்த மிஷினுக்கான காச கொடுக்க முடியாது” என்றான் அவனின் நண்பன் அரவிந்த்.

 

ஆனால் யுவன் எதையும் கேட்பதாக இல்லை.

 

நண்பனை நிமிர்ந்து ஒரு பார்வைப் பார்த்துவிட்டு, அவன் தன் வேலையை தொடங்க அடுத்த கொஞ்ச நேரத்தில் தகவலறிந்து வேகமாக வந்தார் மேனேஜர் சுந்தரம்.

 

“என்னப்பா நீ, சும்மாவே இருக்க மாட்டீயா? என் வேலைக்கு உலை வைக்கிறதுக்குன்னே வருவீங்கடா.. மொதல்ல அதை நோண்டுறத விட்டுட்டு ஓரமா போ.. ஐயாவுக்கு தெரிஞ்சா பிரச்சனை ஆகிரும்”

 

அவர் பதற்றமாக சொல்ல, அவனோ எவர் பேச்சையும் கேட்பதாக இல்லை.

 

சரியாக இத்தனை நேரம் மாடியில் அறைக்குள் இருந்த அந்த ஃபேக்டரி ஓனர் ரவீந்திரன் அப்போதுதான் அறையிலிருந்து வெளியே வந்து கீழே   ஒரு இடத்தில் அத்தனை பேரும் குவிந்திருப்பதை புரியாமல் பார்த்தார்.

 

‘என்ன நடக்குது இங்க?’ அவர் புருவ முடிச்சுகளோடு யோசித்தபாடி மாடியிலிருந்து நடப்பதை கவனித்துக்கொண்டிருக்க, பல நிமிட போராட்டத்திற்கு பின் மிஷினை சரிசெய்து ஒரு பெருமூச்சோடு நிமிர்ந்து நின்றான் யுவன்.

 

எல்லோரும் அவனையே உற்றுப் பார்த்துக்கொண்டிருக்க, அந்த மிஷினை ஆன் செய்ததும்தான் தாமதம் சிறு சத்தங்களை எழுப்பிவிட்டு வழமைப் போல அந்த மிஷின் இயங்க ஆரம்பிக்க, சுற்றியிருந்த மொத்தப் பேருக்குமே ஆச்சாரியம்தான்.

 

“என்னால முடிஞ்ச வரைக்கும் பண்ணியிருக்கேன், கொஞ்ச நாளைக்கு எந்த பிரச்சனையும் இல்லாம ஓடும். அதுக்குள்ள புதிய மிஷின எடுக்குற வழிய பாருங்க”

 

மேனேஜரிடம் கெத்தாக சொன்னவன் அன்றைக்கான டார்கட்டை அடிக்கும் தன் முயற்சியில் இறங்க, வாயைப் பிளந்த வண்ணம் நின்றிருந்தார் சுந்தரம்.

 

இத்தனை நேரம் நடப்பதை மாடியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ரவீந்திரனின் இதழ்கள் மெல்ல விரிய, யுவனை மெச்சுதலாக ஒரு பார்வைப் பார்த்தார்.

 

இப்படியே சில நாட்கள் செல்ல, அன்று வேலை முடித்து களைப்போடு படுக்கையில் விழுந்தவன் அலைப்பேசியிலிருந்த வாட்சப்பிற்கு சென்று வெறுமையாக இருந்த மித்ராவுடனான உரையாடல்களைதான் பர்த்தான்.

 

அவனுடைய இதழ்கள் விரக்திப்புன்னகை புரிய, “மித்ரா.. ஏன்டீ இப்படி பண்ற, என்ன பிரச்சனைன்னாலும் பேசி தீர்த்துக்கலாம்டீ, ஏன் பேச மாட்டேங்குற?” என்று மட்டும் அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டவன் ஒருவித வலியோடு அவளுடனான பழைய நினைவுகளையும் உரையாடல்களையும் மீட்டிக் கொண்டிருந்தான்.

 

திடீரென ஒரு புது எண்ணிலிருந்து, “குட் நைட்” என்ற ஒரு குறுஞ்செய்தி.

 

உடனே அந்த உரையாடலுக்குள் வந்தவன், யாரென்று யோசித்தவாறு, “வூ இஸ் திஸ்?” என்று கேட்டு வைக்க, அந்த கேள்விக்கு பதிலே இல்லை.

 

சிறிது நேரம் யோசித்தவனை அவனுடைய களைப்பும் தூக்கமும் கட்டியி ழுக்க அப்படியே அலைப்பேசியை அணைத்துவிட்டு உறங்கிப் போனான்.

 

ஆனால், ஆடவன் அப்போது அறியவில்லை அவனுடைய வாழ்க்கையே தலைகீழாக மாறப் போவதை.

 

 

-Sheha zaki

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!