Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அகல்கவி சிலையமுதே

அகல்கவி 20

 

 

அகல்கவி சிலையமுதே 20



Advertisement

 

 

நெற்றி வியர்வையை புறங்கையால் துடைத்தவாறு சமையலறையில் வேலையில் மூழ்கியிருந்தாள் அகல்யா.

Advertisement

 

Advertisement

“அம்மா இன்னைக்கு மித்ரா அக்காவுக்கு நம்ம வீட்டுல விருந்துக்கு ஏற்பாடு பண்ணலாம்மா, மதியத்துக்கு வர சொல்லியிருக்கேன். இப்போவே அப்பாட்ட சொல்லி நல்ல கறிகோழியா வாங்கிட்டு வர சொல்லுங்க” என்று அவள் பேசிக்கொண்டே போக, “எல்லா சரிதான்.. இருந்தாலும் கவனமா இருந்துக்கோ!” என்றார் பொன்னி குத்தலாக.

 

தன் தாயை கேள்வியாயய் பார்த்தவள், “எதுக்கு?” என்று புரியாமல் கேட்டு வைக்க, “பின்ன.. பழைய குருடி கதவ திறடீ கதையா உன் வாழ்க்கையில ஆகிறக் கூடாதுல்ல அதை சொல்றேன்” என்றவரின் வார்த்தைகளுக்கான அர்த்தம் அவளுக்கு இன்னமும் புரியவில்லை.

Advertisement

 

தன் வேலையை வைத்துவிட்டு தன் தாயை முறைத்துப் பார்த்தவள், “அம்மா, எதுன்னாலும் தெளிவா பேசுங்க” என்று சிறு கடுப்போடு சொல்ல, “ஆமாடீ உனக்கு எதுவுமே தெரியாது நானே எல்லாத்தையும் வெளாவரியா சொல்லணும்” என்று கடுப்படித்தவர், “நான் உன் பெரியப்பா மகள பத்திதான் பேசுறேன்” என்று சொன்னார் எரிச்சலாக.

 

அப்போதும் புரியாமல் புருவத்தை நெறித்த அகல்யா, “மித்ரா அக்காவா.. அவங்களுக்கு என்ன?” என்று கேட்க, தலையை சரித்து வெளியே எட்டிப் பார்த்த பொன்னி மெல்ல மகளை நெருங்கினார்.

 

“அடியே உன் புருஷனும் மித்ராவும் ஏற்கனவே காதலிச்சிருக்காங்க.. நிச்சயம் வரைக்கும் போய் நின்னிருக்கு. இப்போ மித்ராவோட வாழ்க்கையில ஏதோ பிரச்சனையாம் உன் புருஷன ஏதோ சொன்னாளே.. ஆங்… மிஸ்ஸு மிஸ்ஸு பண்றாளாம். எனக்கென்னவோ சரியா படல. மறுபடியும் பழைய மாதிரி ஒன்னுக்கு மண்ணா ஆகிருவாங்களோன்னு பயமா இருக்குடீ. நீதான் ஜாக்கிரதையா இருக்கணும்”

 

என்று பொன்னி சொல்லி முடித்து தான் கேட்டதை பார்த்ததையும் சொல்லிவிட்டு வேலையில் கவனமாக, அகல்யாவுக்கு பயத்தில் மனம் பிசைந்தது.

 

தன் தாயின் வார்த்தைகளைக் கேட்டு ஏனென்று தெரியாத பயம் அவளுக்குள் உருவாக, அதை யோசித்தவாறு சமையலறையிலிருந்து வெளியே வரவும் வீட்டிற்குள் மித்ரா நுழையவும் சரியாக இருந்தது.

 

“அட அகலு, வாசனை மூக்க துளைக்குதே! இங்கயிருந்து போறதுக்குள்ள வெயிட் போட்டுதான் போக போறேன் போல..” அவள் கேலியாக சொல்லிவிட்டு சுற்றிமுற்றி விழிகளை சுழலவிட்டு தேட, “யார தேடுற மித்து?” என்று கேட்டாள் அகல்யா கூரிய பார்வையோடு.

 

“வேற யார? யுவா மாமாவதான்..” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே மாடியிலிருந்து யுவனும் இறங்கி வர, “மாமா…” என்று அவனிடம் ஓடிச் சென்றாள் மித்ரா.

 

அகல்யாவும் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அவள் பின்னாலேயே செல்ல, “மாமா, வெளியில எங்கேயாச்சும் போலாமா?” என்று மித்ரா கேட்டதும், நேரத்தைப் பார்த்தவன், “ம்ம்.. கெளம்பலாம் மித்து எங்க போகணும்?” என்று கேட்டான் கொஞ்சமும் மறுக்காமல்.

 

மித்ராவும் தன் பாட்டிற்கு ஊரில் தான் சுற்றித் திரிந்த இரண்டு மூன்று இடங்களை அடுக்க, அதை அதிர்ச்சியாகப் பார்த்துக்கொண்டிருந்த அகல்யாவோ அப்படியே திரும்பி சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த தன் தாயை பாவமாகப் பார்த்தாள்.

 

அவரோ கண்களால் விடாதே என்பது போல மிரட்ட, உடனே யுவனின் புறம் திரும்பியவள், “மா.. மாமா, அது… நாம ஊருக்கு போகணும்ல, இங்க செய்ய வேண்டிய வேலைங்கள முடிக்கணும். நீங்க பாட்டுக்கு போனீங்கன்னா அதையெல்லா யாரு பார்க்குறது ஹிஹிஹி…” என்றாள் அசடுவழிந்தவாறு.

 

“என்னத்த பெரிய வேலை! நாளைக்கு காலையிலதானே கெளம்புறோம், அதையெல்லா முடிச்சிரலாம்” என்று சொன்னவன், “வா மித்து போகலாம்..” என்றுவிட்டு முன்னே செல்ல, ‘என்னை ஒரு வார்த்தை கூப்பிட தோனுச்சா..’ என உள்ளுக்குள் குமுறிக்கொண்டாள் அகல்யா.

 

இருவரும் காரில் ஏறிக்கொள்ள, ஏதோ ஒன்றை யோசித்து வேகமாக காரை நோக்கி ஓடி வந்த அகல்யா, பொனெட்டில் கை வைத்து “நா.. நானும் வர்றேன்” என்று சொல்ல, யுவனினதும் மித்ராவினதும் முகம் அதிருப்தியில் சுருங்க ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

 

இருவரின் முக மாற்றத்தை அகல்யா கவனிக்காமலில்லை. அவளுக்குள் பக்கென்று இருக்க, அதற்குமேல் அவளை சிந்திக்க விடாது, “ஓகே அகலு.. நீயும் வந்து ஏறிக்கோ!” என்றான் யுவன் வரவழைக்கப்பட்ட புன்னகையோடு.

 

அதையும் உணர்ந்தவளாக ஒருவித வலியோடும் வேதனையோடும் காரின் பின்சீட்டில் அமர்ந்திருந்தவளுக்கு உள்ளுக்குள் ஏகப்பட்ட குழப்பமும் யோசனையும்.

 

‘என்ன இது.. எனக்கு ஏன் எல்லாமே தப்பா தோனுது? நான் வரேன்னு சொன்னதும் மாமாவோட முகம் ஏன் மாறிச்சு? நான் இவங்களுக்கு இடையில வர்றது இவங்களுக்கு பிடிக்கலையோ? ஆனா… மாமா மேல எனக்.. எனக்குதானே உரிமை இருக்கு’

 

தனக்குத்தானே யோசித்துக்கொண்டு முன்னே அமர்ந்து சிரித்துப் பேசியவாறு வந்த இருவரையும் வெறித்துப் பார்த்திருந்தவளுக்கு தனக்குள் எழும் வலிக்கும் கோபத்துக்குமான காரணம் கொஞ்சம் கொஞ்சமாக மூளைக்கு உரைக்க ஆரம்பித்தது

 

யுவனாதித்தனை எப்போது பிடிக்க ஆரம்பித்ததென்று கேட்டால் அவளிடமே பதிலில்லை. ஆனால், மனைவியாய் உரிமைக் கோபம் கொள்ள ஆரம்பித்துவிட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும்.

 

சட்டென ஒரு கடைக்கு முன் யுவன் நிறுத்தியதும், ‘இங்க எதுக்கு…’ என அந்த இடத்தை கார் கண்ணாடி ஜன்னல் வழியே பார்த்தவாறு அகல்யா புரியாமல் பார்க்க, “அய்யோ எனக்கெதுக்கு மாமா?” என்று செல்லம் கொஞ்சியவாறு காரிலிருந்து இறங்கினாள் மித்ரா.

 

“பரவாயில்ல, வருஷா வருஷம் உனக்காக வாங்கி கொடுக்குறதுதானே! உனக்கு என்ன வேணுமோ வாங்கிக்கோ மித்து” என்று சொன்னவாறு அகல்யா பக்கமிருந்த கதவைக் கூட திறக்காமல் மித்ராவோடு முன்னே சென்றவன் அப்போதுதான் ஞாபகம் வந்தவனாக, “கதவை திறந்து வா அகல்யா, எல்லா தனியா சொல்லணுமா..” என கடுப்பாக சொல்லிவிட்டு செல்ல, அகல்யாவுக்கு அழுகையே வந்துவிட்டது.

 

கீழுதட்டைக் கடித்து அழுகையை அடக்கியவாறு கதவைத் திறந்துக்கொண்டு அவன் பின்னாலேயே சென்றவளுக்கு இதயத்தை ஈட்டியால் குத்திக் கிழிப்பது போல வலி.

 

‘அப்போ அவள பார்த்ததும் நான் வேணாம்னு போயிட்டேன்ல மாமா.. எல்லா அவ்வளவுதானா?’ என தனக்குள் வேதனையோடு நினைத்துக்கொண்டவள் ஒரு மூலையைப் பிடித்து அமர்ந்து யுவனையும் மித்ராவையும் வலி நிறைந்த பார்வைப் பார்த்துக்கொண்டிருத்ததாள்.

 

“மாமா, இது ரொம்ப அழகா இருக்கு.. வாவ்! அவங்க வீட்டுல அவர் அம்மா சொல்றத தான் நான் உடுக்கணும், இல்லன்னா அவ்வளவுதான். இந்த மூனுநாள்தான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதுக்கு நீங்களும் ஒரு காரணம்..” அவள் சொல்லிக்கொண்டே ஒவ்வொரு ஆடையாக  பார்க்க, யுவனும் ஒவ்வொரு ஆடையாக கொண்டு வந்து அவளுக்கு வைத்துப் பார்த்தான்.

 

இதைப் பார்த்துக்கொண்டிருந்த அகல்யாவுக்கு வயிறு பற்றியெறிந்தது. கூடவே இதற்குமுன் இதே ஆடைக்கடையில் வைத்து அவர்கள் முத்தமிட்டுக்கொண்டதை பார்த்த தருணம் வேறு அவளின் ஞாபகத்திற்கு வர, விழிகள் கலங்கி கண்ணீரும் வந்துவிட்டது.

 

“ஹேய் அகலு.. அங்க என்னடீ உக்கார்ந்துட்டு இருக்க. இங்க வா.. எனக்கு எது நல்லா இருக்குன்னு சொல்லு..” என்று மித்ரா உற்சாகமாக அழைக்க, அழுகையை அடக்கிக்கொண்டவள் மெல்ல எழுந்து தன் தமக்கையின் முன்னே சென்று நின்றாள்.

 

யுவனோ அப்போதும் தீவிரமாக மித்ராவுக்கான ஆடைகளை தேர்ந்தெடுத்துக்கொண்டிருக்க, அவனை ஒரு பார்வைப் பார்த்தவள், “ம்ம்.. நல்லா இருக்கு மித்ராக்கா” என்றாள் வரவழைக்கப்பட்ட புன்னகையோடு.

 

தன்னை கண்ணாடியில் மேலும் கீழும் அதிருப்தியோடு மித்ரா பார்த்துக்கொள்ள, “அகலுக்கு ட்ரெஸ்ஸிங் சென்ஸ்ஸே இல்ல மித்தும்மா, இரு நான் உனக்கு செலக்ட் பண்ணியிருக்குறத ட்ரை பண்ணு..” என்ற யுவன் சில ஆடைகளை அவள் கரத்தில் திணித்தான்.

 

அவளும் அதை ஒவ்வொன்றாக அணிந்துக்கொண்டு வர, அவனும் “சூப்பர்… சூப்பர்..” என்று பாராட்ட, இவளுக்கு அடிவயிறு பற்றியெறிந்தது.

 

“அப்படிலாம் இல்ல, இது ரொம்ப சுமாராதான் இருக்கு. இதுதான் உங்களுக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும் மித்ராக்கா..” பற்களைக் கடித்துக்கொண்டு அகல்யா ஒன்றைக் காண்பிக்க,  ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்ட யுவனும் மித்ராவும் அசடுவழிய அவளைப் பார்த்தனர்.

 

“அது.. அது வந்து.. நீ வேணா அந்த ட்ரெஸ்ஸ உனக்கு எடுத்துக்கோ, எனக்கு அவ்வளலா பிடிக்கல. மாமா செலக்ட் பண்ணதுதான் ரொம்ப பிடிச்சிருக்கு” என்றுவிட்டு மித்ரா யுவனோடு முன்னே செல்ல, தான் காண்பித்ததை பார்த்தவளுக்கு முகமோ அஷ்டகோணலாக சுருங்கிவிட்டது.

 

அதன்பிறகு ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை அகல்யா. அவர்கள் அழைத்துச் சென்ற இடங்களுக்கு அமைதியாக சென்றவள் இறுகிய முகமாக வெளியே வெறித்துக்கொண்டு காருக்குள்ளேயே அமர்ந்திருந்தாள்.

 

தன் உணர்ச்சிகளை வெளிக்காட்ட அவளுக்கு விருப்பமில்லை. ஆனால் வெளியில் காண்பிக்காமல் இருக்கவும் முடியவில்லை.

 

எப்படியோ மூவரும் வீடு வந்து சேர, வீட்டிற்குள் நுழைந்ததுமே தன் மகளை தனியாக அழைத்துக்கொண்டு சென்ற பொன்னி, “என்னடீ ஆச்சு.. அவங்க கூட போனியே? சந்தேகப்படுற மாதிரி எதுவும் ஆகலல்ல” என்று கேட்டார் ரகசியமாக.

 

சில கணங்கள் தரையையே வெறித்திருந்தவள், கஷ்டப்பட்டு முகபாவனையை மாற்றி, “அப்படிலாம் இல்லம்மா, நீங்கதான் தேவையில்லாம பயப்படுறீங்க” என்று சொல்ல, நிம்மதி பெருமூச்சு விட்டவர், “அப்பாடா! இப்போதான்டீ நிம்மதியா இருக்கு. இந்த ஆம்பிளைங்களோட மனசு இருக்குல்ல குரங்கு மாதிரி தாவிட்டே இருக்கும். நாமதான்டீ ஜாக்கிரதையா நம்ம கைக்குள்ளயே அவங்கள வச்சுக்கணும்” என்றார் எச்சரிக்கும் விதத்தில்.

 

அவர் பேசுவதை அமைதியாக கேட்டிருந்தவள் தொண்டையை அடைத்த அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் அறைக்குள் ஓடி வர, அலைப்பேசி திரையை இதழில் புன்னகையோடு பார்த்தவாறு டைப் செய்துக்கொண்டிருந்தான் யுவன்.

 

அதைப் பார்த்தவளுக்கு இதயத்தில் மேலும் பாரத்தை ஏற்றி வைத்தது போலிருக்க, குளியலறைக்குள் புகுந்து ஒரு மூச்சு அழுது தீர்த்தவள் குளித்து உடை மாற்றிவிட்டு அறையிலிருந்து வெளியேறியிருந்தாள்.

 

‘என்னை ஒரு தடவை கூட திரும்பி பார்க்கலல்ல நீங்க. இப்போதான் மாமா புரியுது, நான் உங்களுக்கு ஒன்னுமே இல்லன்னு, மித்ராக்கா வந்ததும் நான் உங்க கண்ணுக்கே தெரியாம போயிருக்கேன்னா நான் உங்க மனசுல எந்த இடத்துல இருக்கேன்னு நல்லாவே புரியுது..’

 

தனக்குள் வேதனையோடு நினைத்துக்கொண்டவள் ஆக வேண்டிய வேலைகளை முடித்துவிட்டு தாயின் அறையிலேயெ புகுந்துக்கொண்டாள்.

 

மதிய உணவுக்காக அனைவரும் வீட்டிற்கு வர, மித்ராவோடு சிரித்துப் பேசியவாறு வந்த சாரதாவைப் பார்த்ததும் அகல்யாவுக்கு உலகமே இருண்டது போல ஆகிவிட்டது.

 

“ஹேய் அகல்..” என்று அவள் பக்கத்தில் ஓடி வந்தவள், “அத்தை என் கூட பேசிட்டாங்க, நான் மன்னிப்பு கேட்டேன் அதுக்குமேல அவங்களால என்மேல கோபத்த காமிக்க முடியல, பேசிட்டாங்க..” என்றாள் சந்தோஷமாக.

 

அதைக் கேட்டவளுக்கு தன்னிலையை நினைத்து மனம் கனத்தாலும், “ஓ.. அப்படியா மித்ராக்கா ரொம்ப சந்தோஷம்” என்று மட்டும் சொன்னவள், அமர்ந்திருந்த அனைவருக்கும் உணவை பரிமாறினாள்.

 

“அத்தை உங்களுக்கு இது ரொம்ப பிடிக்கும்ல, சாப்பிட்டு பாருங்க..” என்று சொல்லிக்கொண்டே அகல்யா அவருக்கு பிடித்த பொறியலை இலையில் வைக்க, அவளை நிமிர்ந்தும் பார்க்காமல் முகத்திற்கடித்தாற் போல அதை தள்ளி வைத்தவர், “மித்ராம்மா, நல்லா சாப்பிடு!” என்றார் மித்ராவின் புறம் திரும்பி.

 

அவரின் செயலில் அகல்யாவின் முகம் இருண்டு போனது. சுற்றி எல்லோரும் சிரித்துப் பேச, தனியே விடப்பது போல உணர்ந்தாள் அவள்.

 

யுவனும் அவள் புறம் திரும்பவே இல்லை.

 

“என்னம்மா மசமசன்னு நின்னுட்டு இருக்க, போய் உன் புருஷன் பக்கத்துல உக்கார்ந்து சாப்பிடு..” என்று சிவலிங்கம் சொன்னதும் விருப்பமே இல்லாமல் யுவன் பக்கத்தில் சென்றமர்ந்தவள் தனக்கு தேவையானதை வைத்து உண்ண ஆரம்பிக்க, உணவோ தொண்டையில் இறங்க மறுத்தது.

 

மற்றவர்களோ உணவை முடித்துவிட்டு இரவு வரை முத்துப்பாண்டியின் வீட்டிலேயே இருக்க, யுவனும் மித்ராவும் சிரித்துப் பேசுவதை பொறுக்க முடியாமல் அறைக்குள் சென்று முகத்தை மூடி குலுங்கிக் குலுங்கி அழுதாள் அகல்யா.

 

‘நான் என்ன தப்பு பண்ணேன், எனக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது? யுகா மாமாவ காதலிச்சேன் அவரும் எனக்கு கிடைக்கல, நான் கொஞ்சமும் எதிர்பார்க்காம யுவா மாமா என்னை கட்டிக்கிட்டாரு.. ஆனா மித்ராக்கா வந்ததும் அவருக்கும் நான் கண்ணுக்கு தெரியல..

 

சாரதா அத்தை என்னன்னா மித்ராக்கா கூட பேசிட்டாங்க ஆனா என்னை பார்த்தா ஏதோ துரோகிய பார்க்குற மாதிரி ஒதுங்கி போறாங்க. அப்படி நான் என்ன தப்பு பண்ணேன்?’

 

என்று வாய்விட்டு முணங்கியவாறு அவள் கதறியழ, திடீரென அறையின் மின்விளக்கு சட்டென ஒளிரப்பட்டது.

 

அகல்யா பதறிக்கொண்டு கண்ணீரைத் துடைக்க, “ஹ்ர்ம் ஹ்ர்ம்..” என தொண்டையை செருமியவாறு அறைக்குள் நுழைந்த சாரதா தான் எடுக்க வந்த பொருளொன்றை எடுத்துக்கொண்டு செல்லப் போக, “அத்தை…” என்று அழைத்து நிறுத்தினாள் அகல்யா.

 

அவளின் அழைப்பல் சட்டென நின்றார் பெரியவர், ஆனால் கொஞ்சமும் திரும்பிப் பார்க்கவில்லை.

 

“அது அத்தை… உங்.. உங்களுக்கு என்னை பிடிக்கலன்னு எனக்கு தெரியும். நீங்க சொன்ன மாதிரி மாமாக்கு நான் எந்த வகையிலும் பொருத்தம் இல்லாதவதான். அது எனக்கு இப்போ நல்லாவே புரியுது” என்றாள் அவள் வலி நிறைந்த குரலில்.

 

இப்போது சாரதா திரும்பி அவளை புரியாமல் பார்க்க, “நா.. நானே மாமாவ விட்டு போயிடுறேன் அத்தை, நீங்க உங்களுக்கு பிடிச்ச, மாமாக்கு பொருத்தமான பொண்ணா பார்த்து கட்டி வைங்க நடந்த தப்புக்கு என்னை மன்னிச்சிருங்க அத்தை” என்று அழுகையில் உதடு பிதுங்க சொன்னாள் அவள்.

 

அவளை ஏற இறங்க பார்த்த சாரதாவின் முகத்தில் எந்த உணர்ச்சியும் பிரதிபலிக்கவில்லை.

 

அவருடைய முகம் கொஞ்சம் கொஞ்சமாக கோபத்தில் சிவக்க, அவளை முறைத்துப் பார்த்தவர் மு கத்திற்கடித்தாற் போல முகத்தைத் திருப்பிக்கொண்டு செல்ல, போகும் அவரை பாவமாக பார்த்து நின்றாள் அகல்யா.

 

 

-Sheha zaki

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!