அகல்கவி Final Episode

அகல்கவி சிலையமுதே
Advertisement
FINAL EPISODE
Advertisement
“யாருக்குமே என்னை பிடிக்கல, யுவா மாமா இப்படி பண்ணுவாருன்னு நான் நினைச்சும் பார்க்கல. மித்ராக்காவ பார்த்ததும் என்னை கண்டுக்கவே மாட்டேங்குறாருல்ல! ஒருவேள.. என்னை நிஜமாவே அவருக்கு பிடிக்கலையோ! அதனாலதான் அன்னைக்கு கூட வேற நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணுங்கன்னு சொன்னதும் டப்புன்னு சரின்னு சொன்னாரோ!”
Advertisement
என்று தனக்குத்தானே வேதனையோடு யோசித்தவாறு திரும்பிப் பார்த்தவளுக்கு பக்கத்தில் உறங்கிக்கொண்டிருந்த தன் கணவனைப் பார்க்கப் பார்க்க அழுகை பெருக்கெடுத்தது.
Advertisement
எத்தனை நேரம் அழுகையில் கரைந்தாளோ!
அழுதே களைத்துப் போய் அவள் உறங்கியிருக்க, சில மணித்தியாலங்கள்தான் கடந்திருக்கும்.
திடீரென்று, “அகலு.. அகலு..” என்ற குரல் காதில் ஒலிக்க, மெல்ல விழிகளைத் திறந்துப் பார்த்தவளுக்கு அரைத் தூக்கத்தில் யுவனின் முகம் மங்கலாகத் தெரிய, “அதுக்குள்ள விடிஞ்சிருச்சா?” என்று கேட்டாள் புரியாமல்.
“ம்ம்.. விடிஞ்சிருச்சு, சீக்கிரம் வா.. எல்லாரும் உனக்காகதான் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க” என்று அவன் சொன்னதும் பதறியபடி எழுந்தமர்ந்தவள், “அய்யோ மாமா, என்ன சொல்றீங்க? எல்லாருமே எழுந்துட்டாங்களா அப்போ நான்தான் லேட்டா.. போச்சு போச்சு..” என்றாள் பதற்றமாக.
யுவனோ அமைதியாக வாசலை நோக்கிச் செல்ல, தன் நீண்ட கூந்தலை கொண்டையிட்டவாறு எழுந்து அவன் பின்னாலேயே வந்தவள் சட்டென காதிற்கருகே கேட்ட, “சர்ப்ரைஸ்…” என்ற மித்ராவின் குரலில் அரண்டுபோய் நின்றுவிட்டாள்.
அரவிந்தும் பர்த்டே பொப்அப் வெடித்து, “ஹேப்பி பர்த்டே அகல்யா..” என்று சொல்ல, சுற்றி நின்றிருந்த அத்தனை பேரையும் பெக்கபெக்கவென விழித்த வண்ணம் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் அவள்.
கூடவே அவள் கண் முன்னே செய்யப்பட்டிருந்த பிறந்தநாள் அலங்காரம் அவள் விழிகளைப் பறிக்க, எதையும் கிரகிக்க முடியாமல் நின்றிருந்தவள் தன் தோளில் உணர்ந்த தொடுகையில் திரும்பி யுவனின் முகத்தை குறையாத அதிர்ச்சியோடு பார்த்தாள்.
“மா.. மாமா…” என்றவளின் குரல் தடுமாற, “ஹேப்பீ பர்த்டே அகலு, என்ட் ஐ அம் சாரி.. உன்ன ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்ல” என்றான் விழிகளால் கெஞ்சியபடி.
அகல்யாவுக்கு இது கனவோ என்று கூட தோன்றியது.
“மாமா, நான் இன்னும் தூக்கத்துல இருக்கேனா என்ன..” என்று அதிர்ச்சியில் அவள் கேட்க, அவள் முழங்கையில் நன்கு கிள்ளியெடுத்த மித்ரா, “பார்த்தியா.. இது கனவில்ல நெசம்தான்” என்றாள் சிரிப்போடு.
அதில் தன் தமக்கையை முறைத்தவள் பின் புன்னகையோடு அவளை அணைத்துக்கொண்டு, “இதுவரைக்கும் என் பொறந்தநாள கொண்டாடினதே கிடையாது. இதுதான் முதல் தடவை மித்ராக்கா..” என்று சொல்லிக்கொண்டு யுவனை திரும்பிப் பார்க்க, “கேக் கட் பண்ணலாமா?” என்று கேட்டான் அவன் அங்கு மேசை மீதிருந்த கேக்கை காண்பித்து.
அகல்யாவும் ஆர்வமாக தலையசைக்க, உடனே யுவனும் அரவிந்தும் அலங்காரத்தின் முன்னே வைக்கப்பட்டிருந்த கேக்கில் மெழுகுவர்த்தியை எறிய வைக்க, மற்றவர்களும் சுற்றி நின்றுக்கொண்டனர்.
“ஏன்டீ பொன்னி, பொறந்தநாளே கொண்டாடினது இல்லன்னு சொல்றாளே, நாம என்ன இவ பொறந்தநாளுக்கு கேக் வெட்டினதே இல்லையா?” என்று முத்துப்பாண்டி நாடியை நீவி விட்டவாறு கேட்க, “பின்ன.. கேக்கு வாங்கினா செலவாகும்னு டவுன் பேக்கரில இருக்குற பத்து ரூவா பன்னு வாங்கிட்டு வந்து கேக்குன்னு சொல்லி வெட்ட சொல்லுவீங்க, பாவம் என் பொண்ணு” என்று சொன்னார் அவர் மனைவி.
அகல்யா கேக்கின் மீதிருந்த மெழுகுவர்த்தியை ஊத, அவளை நோக்கி சிறு கத்தியை நீட்டினான் யுவன்.
அதை கையில் வாங்கிக்கொண்டவள் கேக்கை வெட்டி முதலில் தன்னவனுக்கே ஊட்டிவிட, அவனும் அவளுக்கு ஊட்டிவிட்டவன் மெல்ல அவளின் காதருகே குனிந்து, “ஐ லவ் யூ..” என்றுவிட்டு குறும்பாக சிரிக்க, இதை அகல்யா கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
அந்த வார்த்தைகளை கேட்டதும் ஏனென்று தெரியாத பதற்றம், வெட்கம் அவளை தொற்றிக்கொள்ள, “மா.. மாமா அது.. அது வந்து.. நா..” என்று உளறியவளின் கரத்தில் அழுத்தம் கொடுத்தவன், “ஒன்னு அவசரம் இல்ல, நீ பொறுமையாவே காதலிக்க ஆரம்பி.. உன்ன ஃபார்ஸ் பண்ண மாட்டேன்” என்றான் மெல்லிய புன்னகையோடு.
பெண்ணவளுக்கு தன் மனதிலுள்ளதை இப்போதே சொல்லிவிட மனம் துடித்தது. ஆனால் இது அதற்கான சந்தர்ப்பம் இல்லையென்பதை உணர்ந்து அவள் அமைதியாக, ஆனால் அவள் மனதிலுள்ளதை அப்பட்டமாகக் காட்டிக் கொடுத்தது அவளின் முகச்சிவப்பும் பார்வையும்.
அதை கண்டுகொண்ட யுவனுக்கும் லேசாக வேட்கம் எட்டிப் பார்க்க, இதைப் பார்த்துக்கொண்டிருந்த மித்ராவின் விழிகளில் யுவனை இழந்து விட்டோமோ என்ற வலி அப்பட்டமாக தெரிய, அதை காட்டிக்கொள்ளாமல் தன் உணர்வுகளை மறைத்துக்கொண்டாள் அவள்.
அதேநேரம் தன் மகனையும் மருமகளையுய் பார்த்துக்கொண்டிருந்த சாரதாவுக்கும் மனதுக்குள் தவறு செய்துவிட்டோமோ என்ற குற்றவுணர்ச்சி மெல்ல எழுந்தது.
ஏற்கனவே மித்ராவும் அகல்யாவை பற்றி பேசியதிலிருந்து மனம் மாற ஆரம்பித்தவருக்கு நேற்று அகல்யா மனம்விட்டு பேசியதுமே இருந்த கோபம் காற்றாய் கரைந்திருந்தது.
கூடவே இப்போது இருவரின் விழிகளில் தெரிந்த காதலைப் பார்த்ததும் ஒரு தாயாக உள்ளுக்குள் அத்தனை சந்தோஷம் அவருக்கு.
ஆனால், மகனிடமும் மருமகளிடமும் பேசுவதற்குதான் அவருக்குள் சங்கடமும் தயக்கமும்.
யுவனையே பார்த்துக்கொண்டிருந்த தன் மனைவியை கவனித்த சிவலிங்கமோ, “அம்மாடி அகல்யா, யுவனோட வந்து எங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோ, அப்போதான் இன்னும் நூறு வருஷத்துக்கு பர்த்டே கொண்டாட முடியும்” என்று சொல்ல, தன் தாயை தயக்கமாக பார்த்தவாறு மனைவியை அழைத்து வந்தான் யுவன்.
“அங்கிள், இது என்ன புது டெக்னிக்கா?” என்று கேட்ட அரவிந்தை முறைத்த சிவலிங்கம் மனைவியோடு நெருங்கி நின்று, யுவனிடம் சாரதாவை விழிகளால் காண்பிக்க, அவனும் தன் தாயின் காலில் மனைவியோடு விழுந்தான்.
சாரதா இதை எதிர்பார்க்கவில்லை.
“ந.. நல்லா இருங்க” என்றவருக்கு வார்த்தைகள் திணற, வழக்கத்திற்கு மாறாக கேட்ட தாயின் மென்மையான குரலில் அகல்யாவை அதிர்ச்சியாக பார்த்த யுவன் வேகமாக எழுந்து, “சாரிம்மா..” என்றவாறு அவரை அணைத்துக்கொண்டான்.
“கடவுளே..” என்று அதிர்ந்த பெரியவரோ மகனை விலக்கவும் முடியாமல் அணைக்கவும் முடியாமல் திணற, யுவனோ இன்று சமாதானப்படுத்தியே தீருவேன் என்று கங்கணம் கட்டியது போல அணைப்பை விட்டபாடில்லை.
“போதும்டா.. வயசான காலத்துல உசுர வாங்காதீங்க, மொதல்ல தள்ளி நில்லு..” என்று மகனை தள்ளிவிட்டு முறைத்துப் பார்க்க, “அத்தை…” என்று விழிகள் கலங்க அழைத்தாள் அகல்யா.
அவளிள் அழைப்பில் புன்னகைத்தவர், “மன்னிச்சிரும்மா” என்று அவள் தலையை வாஞ்சையோடு வருடியவாறு, “டேய் யுவா, உன் பொண்டாட்டி உனக்கு வேற பொண்ண பார்த்து கட்டி கொடுக்கட்டுமாமே! பார்த்துரலாமா..” என்று கிண்டலாகக் கேட்க, மனைவியை முறைத்துப் பார்த்தான் அவன்.
அவளோ நாக்கைக் கடித்துக்கொண்டு குனிந்துக்கொண்டவள் அப்படியே யுவனின் மார்பில் முகத்தை புதைத்துக்கொண்டு, “சாரிங்க.. அது.. நான்.. தப்பா புரிஞ்சுக்கிட்டு..” என்றாள் அசடுவழிந்தபடி.
அவளின் செய்கையில் அத்தனை பேரும் வாய்விட்டு சிரிக்க, அடுத்தநாளும் விடிந்தது.
காலையிலேயே கௌத்தம் மித்ராவை அழைத்துச் சென்றிருக்க, போக மனமே இல்லையென்றாலும் இதுதான் தான் தேடிக்கொண்ட விதியென தன்னைத்தானே தேற்றி அவனோடு சென்றாள் அவள்.
இங்கு அகல்யாவோ வேகவேகமாக உடைகளை அடுக்கிக்கொண்டிருந்தவள், “ச்சே! நானே எல்லாத்தையும் பண்ண வேண்டியதா இருக்கு. இந்த மாமா எங்க போனாரு?” என்று வாய்விட்டு புலம்பிக்கொண்டே அவள் அறை ஜன்னல் வழியே எதேர்ச்சையாக வெளியே எட்டிப் பார்க்க, அவளுடைய புருவங்கள் யோசனையில் முடிச்சிட்டன.
அடுத்த சில நிமிடங்களில் வீட்டிற்கு பக்கத்திலிருந்த குளத்திற்கருகே அவள் செல்ல, அந்த குளத்து நீரை வெறித்தபடி நின்றிருந்தான் யுவனாதித்.
அன்று பார்த்தது போல இன்றும் நீரில் தெரியும் தன் விம்பதையே அவன் இறுகிய முகமாக பார்த்துக்கொண்டு நிற்க, சட்டென தன் கரத்தில் உணர்ந்த ஸ்பரிசத்தில் விருட்டென்று திரும்பிப் பார்த்தான் அவன்.
“அகலு..” அவனுடைய குரலில் இருந்த வலியை அகல்யாவும் உணர, பற்றியிருந்த அவன் கரத்தில் மேலும் அழுத்தத்தைக் கூட்டினாள்.
“அது.. அது வந்து அகல்.. நீ இன்னும் யுகாவ காதலிக்கிறியா?” என்று யுவன் சட்டென தன் சந்தேகத்தை கேட்டுவிட, ‘இவனை என்ன செய்தால் தகும்?’ என்ற ரீதியில் அவனை முறைத்துப் பார்த்தாள் அவன் மனைவி.
“அன்னைக்கு உங்க ஊருல இருக்கும் போது இதே கேள்வியதான் கேட்டீங்க.. ஆனா என் பதில மட்டும் முழுகா கேக்கல. அப்போவே கேட்டிருந்தீங்கன்னா நமக்குள்ள இவ்வளவு குழப்பம் வந்திருக்காது மாமா” என்று சிறு சிரிப்போடு அவள் சொன்னதும், “புரியல அகலு..” என்று கேட்டான் அவன் புருவ முடிச்சுகளோடு.
அதில் அவன் விழிகளை ஊடுருவும் பார்வை பார்த்தபடி அவனை நோக்கித் திரும்பியவள் அவனை மேலும் நெருங்கி, “அன்னைக்கு சொன்னதுதான். நான் யுகா மாமாவ காதலிச்சேன், அவர எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா.. இப்போ என் மனசு முழுக்க நீங்கதான் மாமா இருக்கீங்க. ஆரம்பத்துல யுகா மாமாவோட நினைப்புல உங்கள பார்த்துட்டு இருப்பேன். ஆனா இப்போ எனக்கு நீங்க யுவனாதித்தனா மட்டும்தான் தெரியுறீங்க. இப்போ பதில் கிடைச்சிருச்சா?” என்று கேட்டாள் ஆழ்ந்த குரலில்.
யுவனாதித்தனுக்கு இப்போதுதான் தனக்குள்ளிருந்த மொத்த குழப்பமும் விலகிய உணர்வு. தான் எதிர்பார்த்த பதில் கிடைத்த மிகுதியில் அகல்யாவின் இடையைய் பற்றி தன்னை நோக்கி இழுத்தவன் அவளிதழை முத்தமிடப் போக, “எவன்டா அது… என் டவுசர எடுத்துட்டு போனது.. ஒரு மனுஷன் நிம்மதியா குளிக்க முடியல” என்று பக்கத்தில் கேட்ட பெரியவரின் குரலில் பதறியபடி விலகி நின்றாள் அவள்.
யுவனோ அந்த வயதானவரை முறைத்துப் பார்க்க, அவனின் முகபாவனையில் முட்டிக்கொண்டு வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு வீட்டை நோக்கி ஓடினாள் அகல்யா.
அடுத்த சில நிமிடங்களில் யுவனின் குடும்பம் செல்வதற்கு தயாராகி வாசலில் நிற்க, “டேய் நாளைக்கு மட்டும் நான் வேலைக்கு போகலன்னா அம்புட்டுதான் என்னை வேலையவிட்டே தூக்கிருவாய்ங்கடா” என்றான் யுவன் பதற்றமாக.
ஆனால் அவன் பக்கத்திலிருந்த அரவிந்த்திற்கு தன் தோழன் பேசுவது காதில் விழவே இல்லை. அவன் நினைவு முழுக்க துர்காதான்.
அன்று வீட்டிற்கு சென்று பேசிவிட்டு வந்ததிலிருந்து வேலாயுதம் தன் மகளை வெளியே விடவே இல்லை. இப்போது ஊருக்கு செல்வதற்காக அனைவரும் தயாராகி இருக்க, அவனுக்கோ செல்வதற்கு மனமே இல்லை.
அதை யுவனாலும் நன்கு புரிந்துக்கொள்ள முடிந்தது.
“என்ன மசமசன்னு நின்னுட்டு இருக்கீங்க, மாமா கொடுத்ததெல்லா கார்ல ஏத்துங்க. இப்போ கெளம்பினாதானே சரியா இருக்கும்” என்று சாரதா கத்த, யுவனும் பொருட்களை எடுக்கவென முன்னே செல்ல, திடீரென ஒரு சத்தம்.
அரவிந்தின் கவனத்தோடு சேர்த்து மொத்தத் பேரின் பார்வையும் அத்திசைக்கு திரும்ப, அங்கு வேகமாக வந்த காரோ அவர்களுக்கு முன்னே சட்டென நின்றது.
விழிகளை சுருக்கிப் பார்த்த அரவிந்திற்கு உள்ளே இருப்பது யாரென்று நன்றாகவே புரிய, “துர்கா..” என்று அவன் சொல்லி முடிக்கும் முன் காரிலிருந்து இறங்கியவள் அரவிந்தை நோக்கி புன்னகையோடு செல்லப் போய் பின்னரே தன் தந்தை இருப்பதை உணர்ந்து நின்றுக்கொண்டாள்.
“ஹ்ர்ம் ஹ்ர்ம்..” என்று குரலை செருமிய வேலாயுதமோ தன் மகளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, அரவிந்தின் முன் சென்று நிற்க, அவனோ பதற்றமாக எச்சிலை விழுங்கியபடி அவரைர் பார்த்தான்.
“உன்ன எனக்கு அவ்வளவா பிடிக்கலதான். ஆனா… வேற வழி! உன் வீட்டுல பேசிட்டு சொல்லு. ஒரு நல்ல நாளா பார்த்து முடிவு பண்ணலாம்” என்று வேண்டா வெறுப்பாக வேலாயுதம் பேசியதைக் கேட்டவனுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சிதான்.
எங்கு மூத்த மகளை இழந்தது போல இரண்டாவது மகளையும் இழந்துவிடுவோமோ என்ற பயம் அவருக்குள்.
அவரின் வார்த்தைகளை நம்ப முடியாமல் அவன் துர்காவை பார்க்க, அவளோ விழிகள் கலங்க அவனையே சந்தோஷத்தோடு பார்த்திருந்தாள்.
“டேய் மச்சா…” என்று யுவன் அரவிந்தின் முதுகில் தட்ட, துர்காவின் அருகில் சென்றவன் அவளை அணைக்கவும் முடியாமல் விலகிச் செல்லவும் முடியாமல் தத்தளித்தான் என்றுதான் சொல்ல வேண்டும்.
அவளுக்கும் அதே தவிப்புதான். ஆனால் வேலாயுதம் குறுகுறுவென்று அவர்களையே பார்த்துக்கொண்டிருக்க, இதிலெங்கு தன்னவனை நெருங்குவது!
கரத்தை மட்டும் பற்றிக்கொண்டவள், “சீக்கிரமா உங்க வீட்டுல பேசுங்க, நான் காத்துட்டுருக்கேன்” என்று காதலோடு சொல்ல, அவள் கரத்தில் அவன் கொடுத்த அழுத்தமும் அவனின் காதல் பார்வையுமே அவளுக்கு போதுமாக இருந்தது.
அடுத்த சில நிமிடங்களில் அரவிந்தோடு யுவனின் குடும்பம் சென்னைக்குத் திரும்பிச் செல்ல, சென்னைக்கு வந்ததுமே முதல் வேலையாக தன் மகனையும் மருமகளையும் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார் சாரதா.
நீண்ட நாட்கள் கழித்து தன் வீட்டில் சிரித்துப் பேசி இரவுணவை முடித்த யுவனின் மனமோ சந்தோஷத்தில் திளைக்க, அதே மனநிலையோடு அறைக்குள் நுழைந்தான் அவன்.
முன்னர் இருந்தது போல அவனுடைய பொருட்கள் அதே இடத்தில் அப்படியே இருக்க, தன் அறையை சுற்றிப் பார்த்தவனின் விழிகள் ஒரு இடத்தில் நிலைக்குத்தி நின்றன.
புதிதாய் ஒரு மலர் அவனின் அறைக்குள். அவனுடைய இதழ்களில் மர்மப் புன்னகை பூத்தது.
அறைக் கதவை சாற்றி தாழிட்டவன், மெல்ல சென்று பின்னாலிருந்தவாறு அந்த ஒருத்தியை அணைத்துக்கொண்டான்.
அவனின் பிடியிலிருந்ந அகல்யாவுக்கு ஆரம்பத்தில் மித்ரா என நினைத்து அவன் தன்னை அணைத்த சம்பவம் ஞாபகத்திற்கு வர, வெட்கப் புன்னகையோடு அவனை நோக்கித் திரும்பியவள் அவன் மார்பில் முகத்தை புதைத்துக்கொண்டாள்.
“மாமா…” அவள் சிணுங்கிக்கொண்டு அழைத்த விதத்திலும் அவளின் ஸ்பரிசத்திலும் ஒரு ஆண்மகனாக அவனுக்கு உணர்ச்சிகள் தூண்ட, அவளை இடையோடு வளைத்து தன்னோடு நெருக்கிக்கொண்ட யுவன் அவள் காது மடலில் தன் மீசை முடியை உரசினான்.
“நீதான் எனக்கு இன்னும் லவ் யூன்னு சொல்லலயே அகலு, நாம வேணா நீ ப்ரொபோஸ் பண்ணதும் இதை வச்சுக்கலாமா, இல்லன்னா…” என்று இழுத்தான் அதிமுக்கிய கேள்வியாக.
அதில் அவனை மூக்கு விடைக்க முறைத்துப் பார்த்தவள், அவன் சட்டைக் காலரைப் பற்றியிழுத்து அவனிதழைக் கவ்விக்கொள்ள, அதில் சிலையான ஆ டவனோ தான் நடப்புக்கு வந்ததும் மூச்சுக்காக விலகச் சென்றவளை விலக விடாது அந்த இதழ் முத்தத்தை தன்வசப்படுத்திக் கொண்டான்.
****சுபம்****
