Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அசுரனாய் மாறிய அன்பனே"

அசுரனாய் மாறிய அன்பனே 13

பகுதி 13

        இத்தனை வருடங்களாக ஒருநாளும் நிதானம் தவறாத ஹரியின் இதயம் இன்று வேகமாக துடித்தது. தன் டேபிளில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்தவன் வேகமாகப் பருகினான். எத்தனையோ வருடங்களாக பக்குவப்பட்டு அவளைக் கடந்து வந்து விட்டதாக எண்ணியவனுக்கு ஏன் இந்த படபடப்பு?

       சட்டென தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன்.. பதட்டப்பட வேண்டியவள் அவள். அவளே திடமாக அமர்ந்து இருக்கும் போது அவன் ஏன் தன்னிலை இழக்க வேண்டும்?

       இந்த அரக்கியால் எப்படி இப்படி வாழ முடிகிறது? அவளாகத் தான் அவனைத் தேடித் தேடி வந்து காதலித்தாள். உங்கள் வீட்டில் என்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனக்கு வசதி இல்லை பெற்றோர் இல்லை.. என்று எத்தனையோ சொன்னேனே. 



Advertisement

     அப்போது எல்லாம் நீ மட்டும் போதும். உன் அன்பு மட்டும் போதும் என்று உருகி உருகி காதலித்தவள்.. அப்படியே மாறிப் போனாளே. காதல் சலித்து விட்டது. பணம் தான் முக்கியம் என்றாளே.

       அவனும் எத்தனை முறை சொல்லி இருப்பான். கொஞ்சம் பொறுமையா இரு.. நிச்சயம் நீ ஆசைப்படும் வாழ்க்கையைக் கொடுப்பேன் என்று. ஆனால் அவள் தான் அவன் மீது எந்த நம்பிக்கையும் இல்லை என்று ஒரே வார்த்தையில் அவனைக் கொன்று விட்டாளே.

    மனமே இல்லாமல் அவள் தாயின் நச்சரிப்புக்காக விவகாரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுத்தான். அப்போது கூட என் அகல்யா சீக்கிரமே அவனைப் பிரிந்து வாழ முடியாமல் அவனைத் தேடி வந்து விடுவாள் என்று எத்தனை நாட்கள் காத்துக் கொண்டு இருந்தான்.

Advertisement

       ஆனால் சில மாதங்களில் அகல்யா மாணிக்கத்தை மறுமணம் செய்து கொண்டதாக கேள்விப்பட்டான். அப்போது கூட அவன் நம்பவில்லை. இது வெறும் தற்காலிக பிரிவு தான். என் அகல்யா நிச்சயம் என்னைத் தேடி வருவாள். என்று எண்ணினானே. ஆனால் சில நாட்களில் அகல்யா கையில் குழந்தையுடன் அந்த மாணிக்கம் அருகில் நிற்க. அகல்யா கழுத்தில் தாலியுடன் நின்று இருந்தாள். 

Advertisement

        அன்று தானே அவன் மனம் மொத்தமாக நொறுங்கிப் போனது. இப்படி ஒரு வேஷக்காரியா என்று மொத்தமாக அவளை வெறுத்துப் போனான். இப்படியும் ஒரு பெண் இருப்பாளா?.. பணம் தான் முக்கியம் என்று காதலித்து கை பிடித்தவனை விட்டு வேறு ஒருவனிடம் ஒட்டிக் கொள்வாளா??

 இருக்கிறாளே!!!.. அன்று பணம் இல்லை என்றதும் ஓடிச் சென்றவள்.. இன்று குபேரன் ஆகி விட்டான் என்று கேள்விப் பட்டு ஓடி வந்து இருக்கிறாள். என்ன ஒரு அசிங்கம். இப்போது அந்த மாணிக்கத்தைக் கழட்டி விட்டு அவனைத் தேடி வந்து இருக்கிறாளா?

         அல்லது அதற்கு நடுவில் எத்தனை ஆண்மகன்களோ??.. அவனுக்கு ஓடிச் சென்று அவள் தலை முடியை கொத்தாக பிடித்து அவள் கன்னத்தில் அறைந்து அவளை வெளியே தள்ளி விட வேண்டும் என்று தோன்றியது. 

Advertisement

       அப்படிச் செய்யலாம் தான். ஆனால் அவளுக்கு அது எல்லாம் பாதிப்பாக இருக்குமா?.. சுதாரிச்சிட்டியா.. பரவாயில்லை நான் வேறு ஒருவனைத் தேடிப் போகிறேன் என்று அசால்ட்டாக கிளம்பி விடுவாள். ம்ஹம்ம்.. இவளுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். அப்போது தான் என்னைப் போல் இனி யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். 

       அவனை எத்தனை மன வேதனைக்கு ஆளாக்கினாள். இவள் மட்டும் சொகுசாக வாழ்வதா?.. கூடாது நான் பட்ட துன்பத்தை உணர்த்தியே ஆக வேண்டும். அவளால் பாதிக்கப்பட்ட கடைசி ஆண்மகன் அவனாகத் தான் இருக்க வேண்டும்.

     அவன் காரியதரிசியை அழைத்தவன் “முதல்ல யார் வந்தாங்க??” .. என்று ஹரி வினவ..

        “அகல்யா என்ற பெண் தான் சார். “.. என்றாள் அவள்.

    “ஒகே. அப்போ அவளையே முதல்ல அனுப்புங்க”.. என்றான். 

       ஹரி மனதுக்குள் அவளை சந்திக்கப் போகிறோம் என்று எண்ணும்போதே ஒரு படபடப்பு. அது நிச்சயம் அவளைப் பார்க்கப் போகிறோம் என்ற ஆவலில் இல்லை. இவளுக்கு உண்மையில் இது இவன் வீடு என்று தெரிந்து தான் வந்து இருக்கிறாளா?.. அல்லது.. ஹ்ம்ம்.. எப்படியும் அவனைப் பார்த்ததும் அவள் முகம் போகும் போக்கை பார்த்ததும் தெரிந்து விடுமே”.. என்று நினைக்கையில் அவன் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. 

    அவனும் “எஸ் கம் இன்” என்றான்.

    அகல்யா கையில் ஒரு ஃபைலுடன் உள்ளே நுழைந்தாள்.

         “குட் மார்னிங் சார்”.. என்ற படி உள்ளே நுழைந்தாள். 

    குட் மார்னிங் டேக் யுவர் சீட் என்றபடி அவன் கைகாட்ட.. அவளும் உட்கார்ந்து கொண்டாள். 

      உள்ளே நுழைந்த போது அவனை ஒரு முறை பார்த்தவள் தலை குனிந்து கொண்டாள். ஆனால் அவள் முகத்தில் புதிதாக எந்த ஆச்சரியமும் பயமும் இல்லை. அப்போ அவனை எதிர்பார்த்தே தான் வந்து இருக்கிறாள். 

            சீ.. எப்படிப்பட்ட கீழ்த் தரமான பெண் இவள். இவன் கூட அவன் வீடு என்று தெரியாமல் வந்து விட்டாளோ என்று ஒரு நிமிடம் தப்பாக நினைத்தான். இவள் தெரிந்தே தான் வந்து இருக்கிறாள். செவிலியர் வேலைக்கு எப்போதும் தட்டுபாடு இருக்கும். அப்படி இருக்க.. என்ன துணிச்சல் இருந்தால் அவன் இடம் என்று தெரிந்தும் வந்து இருப்பாள்?

        இப்படிப் பட்ட கீழ்த்தனமான பெண்ணையா இவன் அத்தனை வருடங்கள் உருகி உருகிக் காதலித்தான்?

     அவள் கொடுத்த ஃபைலில் கவனம் செலுத்தியவன். “சோ அஞ்சு வருஷம் கோவையில் ஒரு பெரிய மருத்துவமனையில் வேலை பார்த்து இருக்கீங்க. அந்த வேலையை விட்டு இங்க எதுக்கு வந்தீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா மிஸஸ் அகல்யா மாணிக்கம்”.. என்றான் அவளையே பார்த்தபடி. 

    அவன் மாணிக்கத்தில் ஒரு அழுத்தம் கொடுக்க.. 

   அவள் முகம் இப்போது லேசாக கருத்தது. ஆனாலும் அதைக் கண்டு கொள்ளாதவள் போல.. 

            “அங்க நல்ல வேலை தான். ஆனா சம்பளம் ரொம்ப கம்மி. இங்க நல்ல சம்பளம் என்று விளம்பரம் பார்த்தேன். எனக்கு இப்போ பணத் தேவை வேறு அதிகம்”.. என்றாள்.

     “அது எனக்கு தெரியுமே”.. என்றான் அவன் குத்தலாக. 

    அவள் அதிர்ந்து அவனைப் பார்க்க.. “உங்க கணவன் மிஸ்டர் மாணிக்கம் தான் நிறைய காசு வச்சு இருப்பாரே. அது பத்தலை என்று இந்த வேலைக்கு வந்து இருக்கீங்களா? இல்லை அவரால் உங்களை திருப்திப்படுத்த முடியலை என்று என்னைத் தேடி வந்து இருக்கீங்களா ’’.. என்று அவன் விஷ்மப் புன்னகையுடன் அவளைப் பார்த்தபடி கேட்க.

     அவன் சொல்ல வந்த அர்த்தம் புரிந்த அகல்யா முகம் மாறியது. உதடுகளைக் கடித்து கோபத்தை அடக்கினாள். “இந்த கேள்விக்கு எல்லாம் பதில் சொன்னா தான் வேலை கொடுப்பீங்களா?”.. என்று தவிப்புடன் தான் கேட்டாள். 

     இந்த முகம்.. இதே பாவம் போல் ஒரு பாவம். இதைப் பார்த்து எத்தனை நாட்கள் தவித்து.. சாரி கண்மணி.. மன்னிச்சிடு டா.. என்று எத்தனை தடவை செய்யாத தப்புக்குக் கூட அவனே பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டு இருப்பான். அன்று அந்த அப்பாவி ஹரியை எத்தனை கொடுமைப் படுத்தி இருப்பாள். 

      அவன் ஆசைப் பட்ட படிப்பை படிக்க விடாமல் அப்ளிகேசனையே கிழித்துப். போட்ட கீழ்த் தரமானவள். இவளுக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும். அதற்கு அவளை வேலைக்கு எடுக்க வேண்டும். என்று எண்ணிக் கொண்டவன்.

        “ ஹ்ம்ம்.. உங்க பெர்சனல் எனக்கு தேவை இல்லை. ஆனா இங்க வேலை பார்க்கணும்னா என்னோட ரூல்ஸ் அன்ட் ரெகுலேசன்ஸ் மிகக் கடுமையா இருக்கும். நான் எப்ப நினைச்சாலும் உங்களை வேலையை விட்டு தூக்குவேன். ஆனா உங்களுக்கு இங்க இருந்து வேலையை விட்டு போகணும்னா குறைஞ்சது மூன்று மாத நோட்டீஸ் கொடுக்க வேண்டும். பட் சம்பளம் சரியா வரும்”.. என்றான் அவன்l.

       “சரி ஹரி”.. என்று பழக்கத்தில் சொன்னவள் தன் உதட்டை கடித்துக் கொள்ள.. ஹரி அவளை எரிப்பது போல பார்த்தான். 

     “சாரி சார்.. தெரியாம சொல்லிட்டேன். ஏதோ பழக்கத்தில் வாய் தவறி வந்துருச்சு”.. என்றாள்.

       “பார்த்து நடந்துக்கோங்க அகல்யா. அப்புறம் என் கைகளும் பழக்கத்துல முன்னமாதிரி பழைய நினைவுகளில் ஏதோ ஏதோ செய்ய போய்.. நானும் இதே மாதிரி சாரி என்று சொல்லி விட்டு போய் விடலாம்”.. என்றான்.

   அதிர்ந்து போனாள் அகல்யா. அவள் கண்கள் நிலைகுத்தி நிற்க. 

    “இதுக்கு எதுக்கு இவ்வளவு ஷாக் ரியாக்ஷன். ஓ.. உங்க கணவன் தப்பா நினைப்பாரோ என்ற கவலையா?. அவ்வளவு அக்கறைப் படுபவர் எதுக்கு என்கிட்ட வேலைக்கு அனுப்பனும்? இல்ல நீங்க அவரையும் துரத்திவிட்டு இப்போ மூணாவதா ஆள் தேடிட்டு இருக்கீங்களா?”.. என்று அவன் கேட்க..

     அவள் விழிகளில் இரு கண்ணீர் துளிகள் உருண்டு ஓடின. அதை வேகமாக துடைத்துக் கொண்டவள். “என்னோட பெர்சனல் தேவை இல்லை என்று சொன்னீங்களே சார்”.. என்றாள் தவிப்புடன். 

      அவளையே பார்த்தவன் என்ன நினைத்தானோ இன்று இது போதும். அப்புறம் வேலைக்கு வராமல் ஓடி விடுவாள் என்று நினைத்தவன.. *ஒகே அகல்யா.. லெட்ஸ் கெட் பேக் டூ தி ஒர்க். என்னோட பெரியம்மாவைத் தான் நீங்க பார்த்துக் கொள்ளணும். “.. என்றான்.

       அவள் மனதில் யார் இந்த பெரியம்மாவாக இருக்கும் என்று யோசித்தாள். அவள் அறிந்து அவனுக்கு எந்த சொந்தமும் இல்லை. அவனிடமே கேட்கலாம் தான். ஆனால் அவன் அதற்குப் பதிலாக் மேலும் நாலு வார்த்தை அவள் நெஞ்சைக் குத்திக் கிழிப்பது போல் பேசுவான். அவனிடம் இடி சொல் வாங்குவதை விட.. அமைதியாக இருந்து விடலாம். அந்த பெரியம்மா யார் என்று இப்போது தெரிந்து என்ன ஆகப் போகிறது?

                “ஒகே சார். அவங்களுக்கு என்ன பிரச்சனை சார். அவங்களால் நடக்க முடியுமா?”.. என்ற கேட்க.

    “அவங்களுக்கு நடக்க முடிஞ்சா உங்களை எதுக்கு வேலைக்கு எடுக்கப் போறேன்”.. என்றான் அதற்கும் குத்தலாக. 

   ஒரு பெருமூச்சு எடுத்து கொண்டவள். “ ஓ.. சாரி சார். ஸ்ட்ரோக் எதுவும் வந்து இருக்கா? இல்லை முதுமை காரணமாக நடக்க முடியலையா” என்று வார்த்தைகளை வெகு கவனமாக தேடிப் பேசினாள்.  

         “ஸ்ட்ரோக் அட்டாக் தான். வந்து இருக்கு. கேண்டிடேட்ஸ் ல உனக்கு மட்டும் தான் அனுபவம் அதிகம். அந்த ஒரு தகுதிக்காக மட்டும் தான் உன்னை தேர்வு செய்கிறேன். உன்னை தேர்ந்து எடுக்க வேறு எதுவும் காரணம் இருக்கும் என்று தேவை இல்லாமல் கற்பனை எதுவும் செய்து கொள்ள வேண்டாம்.

       நாளைக்கே வேலைக்கு வர வேண்டும். இங்க இருந்து ரிலீவ் ஆகி போகப் போகிற நர்ஸ் உங்களுக்கு ஒரு வாரம் பயிற்சி கொடுத்து விட்டு தான் போவாங்க. எனி கொஸ்டின்ஸ்?”.. என்று அவன் அவளைப் பார்க்க.

       இங்கு இருந்து போனால் போதும் என்று எண்ணியவள்.. இல்லை என்பது போல தலை ஆட்டினாள்.

     அப்போ நீங்க போகலாம் என்றவன் அந்த பெல்லை அழுத்த.. அவன் காரியதரிசி உள்ளே ஓடி வந்தாள். “,சுமதி.. அகல்யாவை செலக்ட் பண்ணி இருக்கேன். மத்தவங்களை அனுப்பி விட்டுடுங்க. இவங்களுக்கு தங்குறதுக்கு வசதி பண்ணி கொடுத்து விடுங்க”.. என்றவன் அவளுக்கு முன்னதாகவே அங்கு இருந்து சென்று விட்டான்.

       பஸ்சில் பயணித்து கொண்டு இருந்த அகல்யா மனம் இன்னமும் குழப்பத்தில் இருந்தது. அவள் எடுத்தது சரியான முடிவு தானா? ஹரியின் இந்த குத்தல் பேச்சை எத்தனை நாட்கள் அவளால் தாக்கு பிடிக்க முடியும்? பழைய ஹரி என்றால் தைரியமாக வேலை பார்க்கலாம். 

     ஆனால் இப்போது இருக்கும் ஹரி பழி தீர்க்க காத்து நிற்கும் வேங்கை போல் அல்லவா காட்சி அளிக்கிறான். அவன் கண்களில் இம்மி அளவுக்கும் இரக்கம் என்பது இல்லையே. அவள் எடுத்திருப்பது சரியான முடிவுதானா? யாரிடமாவது பேசி தெளிவு பெற்றால் நன்றாக இருக்கும் என்று தோன்ற தன் தங்கை கவுசல்யா எண்ணுக்கு அழைத்தாள். 

தொடரும்.

   

  

     

     

     

           

        

          

    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!