தன் நாயகனின் அணைப்புக்குள் இருந்த அகல்யாவுக்கு அன்றைய பசுமையான நினைவுகள் கண் முன் படமாக விரிந்தது. இயற்கை எழில் கொஞ்சும் அழகான மாங்குடி கிராமம். அரசுப் பள்ளியில் அவள் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தாள்.
அவள் அப்பா முத்துசாமி டாஸ்மாக்கில் வேலை பார்ப்பதாலோ என்னவோ மதுப்பிரியர் ஆக இருந்தார். ஆனால் பணம் செலவழித்து எல்லாம் வாங்கிக் குடிக்க மாட்டார். அங்கே மிஞ்சிப் போவதை சேகரித்து குடித்துக் கொள்வார்.
அவர் மனைவி.. அவள் தாய் வீரலட்சுமி அதற்காகப் பெரிதாக எல்லாம் அலட்டிக் கொள்ள மாட்டார். அதற்கு ஒரே காரணம் அவர் சம்பளம் முழுமையாக வீடு வந்து சேர்ந்து விடும். இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாலோ என்னவோ சம்பளத்தை சரியாக கொண்டு வந்து கொடுத்து விடுவார்.
Advertisement
அது மட்டும் அல்ல மனைவி வீரலட்சுமி மேல் அத்தனை பயமும் கூட. பின்னே இருக்காதா.. வீர்லட்சுமியின் அண்ணன் தானே அவருக்கு இந்த வேலை வாங்கிக் கொடுத்ததே. அரசியல் பலமும் சாதி பலமும் கொண்டவர்.
வீரலட்சுமிக்கும் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை வாங்கிக் கொடுத்து இருந்தார். அதனால் வீர்லட்சுமியின் அப்பா மற்றும் அண்ணனின் ஆதிக்கம் தான் அவர்கள் வீட்டில் அதிகம். பணம் தட்டுப்பாடு கிடையாது.
அதனால் அகல்யாவுக்கும் கவுசல்யாவுக்கும் கேட்ட உடை, உணவு, அலங்கார பொருட்கள் எல்லாம் கிடைத்து விடும்.
Advertisement
கவுசல்யா எட்டாவது படித்துக் கொண்டு இருந்தாள். வீரலட்சுமி சுட்டு வைத்துச் சென்ற தோசையை இருவருமாக சாப்பிட்டு முடித்து சகோதரிகள் இருவருமாக பேசிக் கொண்டே தான் பள்ளிக்கு நடந்து போவார்கள்.
Advertisement
“அக்கா.. உனக்கு நெஜமாவே ஊசி, ரத்தம் எல்லாம் பார்த்தா பயமா இல்லையா?.. நீ கண்டிப்பா நர்சுக்கு தான் படிக்க போறியா?.. என்று அவள் தங்கை கேட்க.
“ஆமா கவுசி. எனக்கு என்னமோ நம்ம மேலத் தெரு வள்ளி அக்காவைப் பார்த்து அதுவும் அவங்க போட்டு இருக்க யூனிஃபார்ம் பார்த்து அப்படி ஒரு ஆசை வந்திடுச்சு” என்றாள் அகல்யா.
. “என்னவோ போ. எனக்கு எல்லாம் டீச்சர் ஆகணும்பா!!”.. என்றாள் சின்னவள்.
Advertisement
அதே நேரம் அவர்கள் பள்ளி நெருங்கி விட.. மற்ற தோழிகளுடன் கவுசல்யா முன்னே நடக்க.. அகல்யாவும் அவள் தோழி காவேரியுடன் பின்னே நடக்கத் துவங்கி இருந்தாள்.
“லீவு எப்படி இருதுச்ச்சு டீ”.. என்று காவேரி கேட்க.. அப்போது அவர்களை இடித்து விடுவது போல சைக்கிளில் சீனியர் மாணவர்கள் அவர்கள் வெகு அருகில் கத்தியபடியே வந்து சென்றனர். நொடிப் பொழுதில் மரண பயத்தைக் காட்ட.. அதிர்ச்சியில் பெண்கள் இருவரும் உறைந்து போய் நின்று விட்டனர்.
அகல்யா அவள் கையில் வைத்து இருந்த புத்தகத்தை தவற விட்டு இருந்தாள். “எருமைகளா!! நல்லாவே இருக்க மாட்டீங்க!”.. என்று பெண்கள் இருவருக்கும் மனதுக்குள் மட்டும் தான் சபிக்க முடிந்தது.
அதே நேரம் அவர்கள் பின்னால் தொடர்ந்து வந்த ஒரு மாணவன் மட்டும் சைக்கிளை நிறுத்தி.. “சாரி சிஸ்டர்.”.. என்றவன் கடகட வென்று அகல்யா தவற விட்டு இருந்த புத்தகத்தை எடுத்து தூசி தட்டி அவளிடம் நீட்டினான்.
அவர்கள் புரியாமல் அவனைப் பார்க்க.. “தே ஆர் மை ஃப்ரென்ட்ஸ் ஐ அப்பாலஜைஸ் ஃபார் தெம்.” .. என்று ஸ்டைலான ஆங்கிலத்தில் அவன் கூற.
“என்ன ?”.. என்று அகல்யா விழிக்க.
“சாரி.. டேக் கேர்”.. என்றபடி சைக்கிளில் பறந்து விட்டான்.
“யாரு டீ இவன்?”.. நம்ம ஸ்கூலா?”.. என்று அகல்யா நம்ப முடியாமல் கேட்க.
“ஆமா பா.. இந்த வருஷம் தான் பண்ணண்டாவது சேர்ந்து இருக்கான்.”
“ஓ.. வசதியான பையன் மாதிரி தெரியுறான். இவ்வளவு அழகா இங்கிலீசு பேசுறான். அப்புறம் எப்படி டீ நம்ம ஸ்கூல் ல”.. என்று அகல்யா கேட்க.
“அதெல்லாம் தெரியாது டீ. ஆனா நம்ம பிள்ளைங்க ஏகப்பட்ட பேரு அவனுக்கு ப்ரொபோஸ் பண்ணி இருக்காளுங்க. யாருக்கு கொடுத்து வச்சி இருக்கோ”. என்று காவேரி ஒரு ஏக்க பெருமூச்சு விட.
அகல்யா இதயம் அந்த செய்தியைக் கேட்டு ஏனோ சீர் இல்லாமல் துடிக்கத் துவங்கியது. “ஒரு பையன் ஸ்டைலா வந்துறக் கூடாதே.. உடனே அவனை வளைச்சுப் போட ரெடியாய் விட வேண்டியது. படிச்சு முன்னேறனும் என்ற பொறுப்பு எல்லாம் ஒருத்திக்கும் கிடையாது” என்று அகல்யா ஆவேசமாக சொல்ல..
அவளை விசித்திரமாக பார்த்த காவேரி.. “நீ ஏண்டி இப்ப நம்ம ஹெட் மாஸ்டர் மாதிரி பாடம் எடுக்கிற”.. என்று சொல்ல.
“அது எல்லாம் ஒன்னும் இல்லை. வா நடக்கலாம்”.. என்று நடக்கத் துவங்கிய அகல்யா மனமோ “யார் ப்ராப்பர்ட்டி மேல யாரு ஆசைப்படுறது” என்று தான் உரிமை கொண்டாடத் துவங்கி இருந்தது.
அவனைப் பார்த்து பத்து நிமிடம் கூட இருக்காது. அதுவும் அவன் பெயர் கூடத் தெரியாது. அதற்குள் அவன் வேண்டும் என்று மனம் போட்டியிடச் சொல்கிறது. “சீ.. மானங்கெட்ட மனமே”.. என்று மனதுக்குள் காரித் துப்பிவிட்டு.. அவன் நினைப்பை ஒதுக்கி தோழியுடன் சாதாரணமாக பேசத் துவங்கி இருந்தாள்.
அதே நேரம் அவர்கள் பள்ளி வந்து விட.. அவர்கள் வகுப்பு அறை நோக்கி ஓடி இருந்தனர்.
காலாண்டுத் தேர்வு முடிந்து அன்று தான் பள்ளி திறந்து இருந்தது. எல்லாருக்கும் ஒரே பரபரப்பு. தேர்வு விடைத்தாள்கள் கொஞ்ச நேரத்தில் கொடுக்கத் தொடங்கி விடுவார்கள் என்ற பதற்றம்.
அகல்யாவுக்கு அடுத்த பீரியடை நினைத்து தான் பயம். அது ஆங்கில வகுப்பு. அவளுக்கு தான் ஆங்கிலம் சுட்டுப் போட்டாலும் வராதே. அறிவியலில் எண்பத்து ஐந்து மார்க் வாங்கி இருந்தாள். ஆனால் அதை எண்ணி சந்தோஷப்பட முடியவில்லை.
அடுத்த கண்டத்தை நினைத்து மனம் பதறியது. அடுத்த வகுப்பும் துவங்கி விட.. ஆங்கில டீச்சர் கையில் பேப்பர் கட்டுடன் உள்ளே நுழைந்தார். அகல்யா இதயம் நின்று துடித்தது.
அவர் ஒவ்வொருவரையும் அழைத்து, அதிலும் அவர்கள் செய்த சொதப்பல்களையும் தவறுகளையும் வர்ணிக்க.. மாணவர்களிடையே ஒரே சிரிப்பு ஒலி. அடுத்ததாக அகல்யா என்று அவள் பெயரை அழைக்க..
அவளும் கால்கள் நடுங்க.. ஆசிரியரை நோக்கி நடக்கத் துவங்கினாள். “ எல்லாரும் கை தட்டுங்க.. அகல்யா மாதிரி ஒரு அறிவாளிப் பெண்ணை நான் பார்த்ததே இல்லை.”.. என்று அவர் நக்கலாகச் சொல்ல.. அப்போதே அகல்யாவுக்கு புரிந்து போனது. “இந்தம்மா பெருசா அசிங்கப்படுத்தப் போவுது. அய்யோ கடவுளே காப்பாத்து என்று வேண்டிக் கொண்டாள்.”
“வாங்க மேடம். இவங்களுக்கு எப்பவும் இங்கிலீசு வராது. அது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தான். ஆனாலும் மேடம் இந்த வட்டம் எப்படியாவது பாஸ் ஆகிடனும்னு முடிவோட வந்து இருப்பாங்க போல.
முன்னாடி இருக்க பொண்ணு பேப்பரை பிடுங்கியோ வாங்கியோ காப்பி அடிச்சு எழுதிட்டாங்க. சரி.. அதையாவது ஒழுங்கா செஞ்சாளா?. லீவ் லெட்டர் அப்ளிக்கேஷன் ல அகல்யான்னு அவள் பேருக்கு பதிலா அபிராமி ன்னு அந்த பொண்ணு பேரை அப்படியே காப்பி அடிச்சு போட்டு இருக்கா”.. என்று சொன்னதும் அத்தனை பேரும் சிரித்து விட..
அகல்யா தான் அவமானத்தில் தலை கவிழ்ந்து நின்று இருந்தாள்.
“இந்த ரேஞ்சில் நீ போனா பொது தேர்வில்ஸ் முட்டை தான் வாங்கனும்”.. என்றவரை நிறுத்தி இருந்தது “எக்ஸ்கியூஸ் மீ மேடம்”.. என்ற ஒரு ஆண் குரல்.
அகல்யா யார் என்று பார்க்க.. அது காலையில் பார்த்த அதே மாணவன். அது வரை அவமானத்தில் துடித்து நின்றவளுக்கு இப்போது செத்து விட மாட்டோமா என்று ஆகிவிட்டது. இவன் முன்னால் இப்படி அவமானப்பட்டு நின்று விட்டோமே என்று நினைக்க கண்கள் கலங்கி விட்டன.
அவன் ஹெட் மாஸ்டர் உடனே வரும்படி சொன்னதாக சொல்ல.. டீச்சரும் சென்று விட.
அகல்யா தன் கண்ணீரை மறைத்த படி தன் இருப்பிடம் வந்து அமர்ந்து கொண்டாள். தன் தோழியின் கண்ணீரைப் பார்த்த காவேரி தான் பதறி.. “ஏண்டி அழுகுற.. நம்ம கிளாஸ்ல பாதி பேரை அது இப்படி தான அசிங்கப்படுத்துது “.. என்று சொல்ல..
தோழி என்றாலும் அவளிடம் அந்த புது வாலிபன் முன்னால் அவமானப்பட்டு விட்டேனே என்று சொல்ல சங்கடமாக இருந்தது. எங்காவது தனியாக சென்று ஓ என்று கத்தி அழ வேண்டும் போல் இருந்தது.
அடுத்த வகுப்பு ஆரம்பிக்கும் முன் “நான் பாத்ரூம் போய் விட்டு வரேன் டீ. கொஞ்சம் நேரம் ஆனா தேடாத”.. என்று அகல்யா சொல்ல.. காவேரி சிறு கலவரத்துடன் பார்த்தாள்.
“பீரியட்ஸ் டீ. வந்துருவேன்” . என்று ஏதோ பொய் சொல்லி சமாளித்து அவர்கள் பள்ளியின் பின் தோட்டம் பக்கம் சென்று அமர்ந்து விட்டாள். அதற்கு மேல் அடக்க மாட்டாமல் கண்ணீர் கரை புரண்டு விட்டது.
“ எனக்கு மட்டும் எதுக்கு இப்படி. “.. என்று அவள் நொறுங்கி அழுது விட.
அகல்யா என்று ஒரு குரல் அருகில் கேட்க.. அவள் தலை உயர்த்தி பார்க்க.. அதே வாலிபன்.
அகல்யாவுக்கு ஐயோ என்று ஆகி விட்டது. இவன் முன்னால் எத்தனை முறை தான் இப்படி அசிங்கப்படுவதோ. அவன் இவளைப் பற்றி நிச்சயம் ஒரு கேவலமான முடிவுக்கு வந்து இருப்பான் என்று நொந்து கொண்டவள்.. என்ன என்பது போல பார்த்தாள்.
நான் இப்படி உட்காரலாமா என்றவன் அவள் பதிலுக்கு காத்திராமல் அவள் அருகில் அமர்ந்து கொண்டான். “அகல்யா.. அந்த டீச்சர் உன் கிட்ட ரொம்ப ரூடா நடந்து கிட்டாங்க இல்ல. பட் டோண்ட் வொர்ரி. இங்கிலீஷ்க்கு ட்யூஷன் போ. ஐ ஆம் சுயர் யூ வில் கெட் பெட்டர்”.. என்றான்.
அகல்யாவுக்கு ஆச்சர்யம்.. யார் இவன்.. இவன் எப்படி அவளிடம் அவ்வளவு எளிதாக பேசுகிறான். அவள் அருகில் வேறு உட்கார்ந்து கொள்கிறான். அதுவும் அவள் துயரத்தை உணர்ந்து ஆறுதல் சொல்கிறான். என்று அதிசயித்து இருக்க..
“இந்தா அகல்யா கண்ணீரை துடைச்சுக்கோ.”.. என்று தன் கைக்குட்டையை நீட்டினான்.
அவளும் மறுக்காமல் வாங்கி தன் முகத்தை துடைத்துக் கொண்டாள். “ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு கிளாசுக்கு போ அகல்யா. யூ வில் பி ஃபைன்” .. என்றான் அவளைத் தேற்றும் விதமாக.
யார் முன்னால் அவமானப்பட்டு விட்டோம் என்று தவித்தாளோ அவனே வந்து சமாதானப்படுத்தும் போது.. மனம் ஏற்காதா என்ன. அதுவும் அவன் அவளிடம் இத்தனை கரிசனமாக பேசிய நொடியில் மனம் மொத்தமாக அவனிடம் சாய்ந்து விட்டது.
அவன் எழுந்து கொண்டு.. அவளுக்கும் உதவியாக கை நீட்டினான். அவளாகவே எழுந்து கொள்ள முடியும் தான். இருந்தாலும் அவன் கரத்தை பற்றும் வாய்ப்பை விட மனம் இல்லாமல் பிடித்துக் கொண்டாள்.
“வேகமா கிளாசுக்கு போ. பை”.. என்று அவன் கிளம்பப் போக.
“ஒரு நிமிஷம்”. என்றவளுக்கு அவனை எப்படி அழைப்பது என்று யோசனையாக இருந்தது. தவறியும் அண்ணா என்று அழைக்க அவள் தயாராக இல்லை.
“ஹரி. ஐ ஆம் ஹரி கிருஷ்ணா”.. என்று அவன் மலர்ந்த முகத்துடன் சொல்ல.
அகல்யாவோ அந்த அழகுப் புன்னகையில் தன்னை மொத்தமாக அவனிடம் தொலைத்து இருந்தாள்.
அவன் போகத் துடிக்க.. “ஹரி.. எனக்கு நீ இங்கிலிஷ் சொல்லி கொடுக்க முடியுமா? நீ இங்கிலிஷ் சூப்பரா பேசுற”.. என்று அவள் மனதில் தோன்றியதை அது எப்படி சாத்தியம் என்று எல்லாம் யோசிக்காமல் கேட்டு இருந்தாள்.
ஹரி எதுவும் சொல்லாமல் சிறு அதிர்ச்சியுடன் அவளைப் பார்க்க. “இல்ல .. எங்க ஊர்ல நான் ஏற்கனவே இங்கிலீசு டியூஷன் போனேன். ஆனா அவங்க நல்லாவே சொல்லித் தரலை அதான் உங்க கிட்ட கேட்டேன்”.. என்றாள் தயங்கிய படி.
“நான் யோசிச்சு நாளைக்கு சொல்றேன் அகல்யா”
“ம்ம்.. ஆமா உனக்கு எப்படி என் பேர் தெரியும்.”.. என்று அவள் குழப்பமாக கேட்க..
“காலையில் உன் நோட்டில் பார்த்தேன். பை”.. என்று அவன் கிட்டதட்ட ஓடத் துவங்கி இருந்தான்.
அகல்யா மனம் லேசாகி இருந்தது. அவள் வகுப்புக்குச் செல்ல.. தோழியின் முகம் தெளிந்து இருப்பதைப் பார்த்து நிம்மதி கொண்ட காவேரி .. “நல்லவேளை டீ ஹிஸ்டரி டீச்சருக்கு ஏதோ மீட்டிங் இருக்காம். கொஞ்சம் லேட்டா வருவாங்களாம். நீ எங்க டீ இவ்வளவு நேரம் போய்ட்ட. நான் பயந்தே போயிட்டேன். என்றாள் உண்மையான வருத்தத்துடன்.
ஒன்னும் இல்ல காவேரி. இப்போ நல்லா இருக்கேன்.. என்றாள் மலர்ந்த முகத்துடன். அவளுக்கு ஹரியைப் பார்த்ததே அத்தனை உற்சாகத்தை கொடுத்து இருந்தது.