Skip to content
Post Views: 1,826
part-2
இரண்டு நாட்கள் கடந்த நிலையில், இரவு உணவை அனைவரும் உண்டு முடித்து ஹாலில் அமர்ந்து பேசி கொண்டிருக்க, நாச்சியாரோ,
Advertisement
“இன்னு ரெண்டு நாள் தான் இருக்கு திரு, எல்லாரையும் கூப்பிட்டுடல” என கேட்க,
“இன்னும் ஒரே ஒருத்தரை தவிர எல்லாரையும் கூப்பிட்டுட்டேன் ம்மா. யாரும் விட்டு போகல” என திருநாவுக்கரசு பதிலளித்தார்.
“இன்னும் ஒருத்தரா? யாரு பா அது? ஏன் கூப்பிடல” என நாச்சியார் கேட்க,
Advertisement
“எல்லாம் நம்ம கனகவல்லியை தான். நம்ம வீட்டு பொண்ணு அவ, அவளை நீங்க கூப்பிடவே இல்லையே” என கூறியதும் முகம் மாறிப்போனது நாச்சியாருக்கு.
Advertisement
“கூப்பிட கூடாதுனு இல்ல ப்பா, இப்போ தான் ஒரு பெரிய பிரச்சனை நடந்து முடிஞ்சுருக்கு. நாமளே அதை மறந்துட்டு நல்ல விஷயத்தில் ஈடுபட்டு இருக்கோம். அவகிட்ட பேசினாலே சண்ட தான் வரும். அன்னைக்கே சொல்லிட்டாளே, இனி எனக்கும் அவளுக்கும் சம்மந்தம் இல்லைன்னு.
அப்புறம் எப்படி நான் கூப்பிட முடியும். உனக்கு உன் தங்கச்சி வேணும்னா நீயே கூப்பிட்டுக்கோ” என கூற, திருநாவுக்கரசோ,
“ம்மா, நான் கூப்பிறது பெரிய விஷயம் இல்ல. நீங்க கூப்பிறது தான் முக்கியம். நம்ம வீட்டில் நல்ல விஷயம் நடக்குதுன்னு நீங்களே சொல்றீங்க, அப்புறம் அவ வராமல் எப்படி ம்மா? அவ இல்லாமல் எப்படி விஷேஷம் பண்றது? நமக்கே கஷ்டமா இருக்கும். எல்லாரும் கேட்க மாட்டாங்களா?” என எடுத்துரைக்க அசையவே இல்லை நாச்சியார்.
Advertisement
“எனக்கு அவளை கூப்பிட இஷ்டம் இல்ல திரு. என்னை வற்புறுத்தாதே!!. என திட்டவட்டமாக கூறினார் நாச்சியார்.
திருநாவுக்கரசு அதிருப்தியாய் முகத்தை திருப்பி கொள்ள, அனைத்தையும் வேடிக்கை பார்த்த வெற்றி, தற்பொழுது பேச ஆரம்பித்தான்.
“அப்பத்தா, எனக்கு ஒரு விசேஷம் நடக்கும் போது, என்னோட அத்த மாமா, தமிழ் இல்லைனா, அந்த விசேஷமே எனக்கு தேவையில்லை. எல்லாத்தையும் நிறுத்திடுங்க” என முடிவாக கூறியவன் எழுந்து கொள்ள, திக்கென்று இருந்தது நாச்சியார்.
“ராசா என்னைய சொல்ற?” என அவர் பதற,
“பின்னே, அவங்க யாரு? என்ன தூக்கி வளர்த்த என் அத்த குடும்பம். அவங்க இல்லாமல் எப்படி? நடந்த பிரச்சனைக்கு அவங்களா காரணம். நீங்களும், உங்க மூத்த மாப்பிள்ளையும் தானே கரணம்.
அவங்களை கூப்பிட முடியாதுன்னு எப்படி சொல்வீங்க? கூப்பிட முடியாதுன்னா எதுவுமே வேண்டாம்” என அவன் கோபபப்பட, நாச்சியாரோ,
“அப்படியெல்லாம் சொல்லாதே ராசா. நல்ல காரியம் நடக்கும் போது எதுக்கு இப்படி அபசகுணமா சொல்ற? இப்போ என்ன அவளை கூப்பிடனும் அவ்வளவு தானே!! நான் இப்பவே கூப்பிறேன்” என அவர் உடனே அலைபேசியை எடுத்தார்.
“இருங்க அப்பத்தா, இப்படி போன்ல கூப்பிட்டா வருவாங்களா? நேரில் போய் அவங்களை சமாதானப்படுத்தி, இருங்க வரேன்” என்றவன்
நேராக அறைக்குள் சென்று ஒரு பையை கொண்டு வந்து அவரிடம் கொடுத்தான்.
“இதையும் கொடுத்து கூப்பிடுங்க” என கூற, அந்த பையை திருப்பி திருப்பி பார்த்தவர்,
“என்ன இது?” என கேட்க,
“அவங்க எல்லாருக்கும் ட்ரெஸ். நமக்கு எல்லாம் எடுத்தோம். அவங்களுக்கு எடுக்கவே இல்லையே! அதான் நானே எடுத்துட்டு வந்துட்டேன். இதை கொடுத்துட்டு அவங்களை கண்டிப்பா வர சொல்லுங்க. அவங்க வரலைனா நான் கோவிலுக்கு வரவே மாட்டேன்” என முடிவாக கூறியவன் எழுந்து அவனறைக்கு சென்றான்.
நாச்சியார் யோசனையுடன் அமர்ந்திருக்க, அவர் கையில் இருந்த பையை எடுத்து பார்த்தார் விசாலாட்சி.
உள்ளே இருந்த புடவையை எடுத்து பார்த்தவர்,
“ஏங்க, இங்க பாருங்களேன், எவ்வளவு நல்ல இருக்குன்னு, பரவாயில்ல என் பையன் நல்ல தான் தேர்ந்தெடுக்கிறான்” என சிலாகித்து கூற, அதனை கண்ட நாச்சியாருக்கு யோசனையாக இருந்தது.
இத்தனை பிடிவாதம் எதற்கு? அவர்கள் வந்தே ஆக வேண்டும் என்கிறானே!! இதற்கு உள்ளே வேறு ஏதாவது இருக்கிறதா? என பலவாறு அவர் மனம் யோசிக்க ஆரம்பித்தது. இருந்தாலும் கனகவல்லி குடும்பத்துடன் வந்தால் தான் அவனும் வருவேன் என்கிறான். அந்த ஒரு காரணத்திற்காகவே கனகவல்லியை அழைக்க முடிவெடுத்தார்.
அவர்கள் வராமல் போனால் எங்கே வெற்றி இந்த திருமணத்தை நிறுத்தி விடுவானோ என்ற பயம் அவரை கனகவல்லியை அழைக்க தூண்டியது.
அதனால் மறுநாள் விடிந்ததும் முதல் வேலையாக அவர் கனகவல்லியின் இல்லத்திற்கு சென்றார்.
உள்ளே நுழைந்தவரை கண்ட வெண்பா,
“வாங்க அம்மாச்சி, வாங்க ” என வரவேற்று, அவரை அமர சொல்ல, வெண்பாவின் குரல் கேட்டு படுந்திருந்த கனகவல்லி எழுந்து அமர்ந்தார். நாச்சியாரை கண்டதும் அவர் முகத்தை திருப்பி கொள்ள, நாச்சியாருக்கு உள்ளே பொங்கியது.
இருவரையும் பார்த்த வெண்பா,
“சொல்லுங்க அம்மாச்சி, என்ன விஷயம்? இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க” என அவளே பேச்சை ஆரம்பிக்க,
“நாளைக்கு வெற்றிக்கும் ராகினிக்கும் கல்யாணம் பேசி முடிவு பண்ண போறோம். அதுக்கு உங்க எல்லாரையும் கூப்பிட வந்தேன்” என வந்த விஷயத்தை கூறினார்.
“வெண்பா, யாரோட விசேஷத்துக்கும் நம்ம வீட்டில் இருந்து யாரும் வர மாட்டாங்கனு சொல்லிடு” என திட்டவட்டமாக கூற, கோபமாய் வந்தது நாச்சியாருக்கு.
“இதோ பாரு வெண்பா, நானா விருப்பப்பட்டு ஒன்னும் கூப்பிட வரல” என ஆரம்பித்ததும்,
“அதானே பார்த்தேன். இவங்களுக்கு நாம என்ன வேண்டபட்டவங்களா? அப்புறம் எதுக்கு இங்க வந்து வரணும்” என்று வெடுக்கென்று கூறினார் கனகவல்லி.
நாச்சியார் அவரை முறைக்க, வெண்பாவோ,
“அம்மா, கொஞ்ச நேரம் சும்மா இருங்களேன். அம்மாச்சி சொல்ல வந்ததை சொல்லட்டும்” என அன்னையிடம் கூறியவள், நாச்சியாரிடம்,
“நீங்க சொல்லுங்க அம்மாச்சி” என்றாள்.
“இதோ பாரு வெண்பா. உன் அம்மா மேலே எனக்கு கோபம் இருக்கு தான். அது காலத்துக்கும் மாறாது. அன்னைக்கு நடந்த பிரச்சனைக்கு நான் உன் கிட்ட மன்னிப்பு கேட்டுட்டேன். அது ஏதோ தெரியாம நடந்த தப்பு. திரும்ப திரும்ப அதையே பேச எனக்கு விருப்பம் இல்ல.
ஆனால் இப்போ நடக்க போறது அவ மருமகனோட விசேஷம். அவன் சின்ன பிள்ளையா இருக்கும் போது, அவ தான் அவனை வளர்த்தது.
அந்த பாசத்தை அவன் மறக்கல. என் அத்தை வந்தா தான் நாளைக்கு கோவிலுக்கு வருவேன். இல்லைனா எனக்கு எதுவுமே வேண்டாம் சொல்லிட்டான்.
அவனுக்கு நல்லது நடக்கிறதும், நடக்காமல் போறதும் உங்க அம்மா கையில் தான் இருக்கு.
இதோ உங்களுக்காக அவனே பார்த்து பார்த்து துணியெல்லாம் எடுத்துட்டு வந்து இருக்கான்.
இதுக்கு மேலே என்ன வேணும் உங்களுக்கு? எனக்காக ஒன்னும் வர வேண்டாம். அவனுக்காக வாங்க போதும்.
இதுக்கு மேலே நான் சொல்றதுக்கு எதுவும் இல்ல. கிளம்புறேன்” என அவர் கூறிவிட்டு புறப்பட அமைதியாகவே இருந்தார் கனகவல்லி.
“அம்மாச்சி, காபி குடிச்சுட்டு போங்க” என வெண்பா உபசரிக்க,
“இல்ல வேண்டாம்” என அவர் புறப்பட தயாரானார்.
“அம்மாச்சி, ரெண்டு நிமிஷம் தான். உட்காருங்க. எவ்வளவு நாள் ஆச்சு, என் கையாள உங்களுக்கு வர காபி போட்டு கொடுத்து. இதோ வந்துறேன்” என்றவள் உள்ளே ஓட, நாச்சியார் இப்போது மறுக்கவில்லை. அமைதியாக அமர்ந்து கொண்டார்.
சொன்னது போல் இரண்டே நிமிடத்தில் அவருக்கு காபியை தயாரித்து எடுத்து வந்தவள் அவரிடம் கொடுக்க, அதனை வாங்கி பருகியவருக்கு, அத்தனை திருப்தியாய் இருந்தது.
அவளது கைவண்ணம், அவரை மெய்மறக்க வைத்தது. மிச்சம் வைக்காமல் குடித்து முடித்தவர்,
“நாளைக்கு வந்துருங்க வெண்பா” என கூறிவிட்டு புறப்பட்டார்.
வெண்பா, அன்னையை பார்க்க, அவரோ யோசனையுடன் அமர்ந்திருந்தார்.
சிறிது நேரம் அப்படியே இருந்தவர், அருகிலிருந்த துணி பையை எடுத்து பிரித்து பார்க்க, அவருக்கு பிடித்த நிறத்தில் புடவை இருப்பதை கண்டவர் நெகிழ்ந்து போனார்.
அவர் பிள்ளை போல வளர்ந்தவன் வெற்றி, அவனுக்கு ஒரு நல்ல விஷயம் நடக்கும் போது தான் போகாமல் இருப்பது நல்லதல்ல, என அவர் மனம் அவருக்கு எடுத்துரைக்க, நாளை செல்ல வேண்டும் என முடிவெடுத்தார்.
“வெண்பா, ட்ரெஸ்லாம் எடுத்து உள்ள வை. காலையில் கிளம்பி கோவிலுக்கு போகணும். நீயும் வெற்றி எடுத்து கொடுத்த சேலையை கட்டிட்டு ரெடி ஆகிடு. அப்பா கிட்ட நான் சொல்லிறேன்” என கூற, வெண்பாவிற்கோ அத்தனை மகிழ்ச்சி.
“சரி ம்மா” என உற்சாகமாக தலையாட்டியவள், துணி பையை எடுத்து கொண்டு அவளறைக்கு சென்றாள்.
ஆர்வமாக, வெற்றி அவளுக்காக எடுத்து கொடுத்த புடவையை எடுத்து பார்க்க, கண்கள் கலங்கி நின்றது அவளுக்கு.
அவளுக்கு பிடித்த வண்ணத்தில் இருந்தது அந்த புடவை.
அதனை காண காண மேலும் மேலும் கண்ணீர் சுரந்தது அவளுக்கு.
அவளுக்கு பிடித்த எல்லாமே அவனுக்கு அத்துப்படி. ஆனால் அவளுக்கு எல்லாவற்றையும் விட அவனை தான் அதிகம் பிடிக்கும் என்பதை அவன் அறியாமல் போனானே!! என அவள் மனம் வெம்பி துடித்தது.
அவனை வருடி செல்லும்
காற்றின் ஈரப்பதம்,
சொல்லுமோ, அதில்
கலந்திருப்பது என் கண்ணீர் தடம் தான் என்பதை!!
கனவுகள் தொடரும்
error: Content is protected !!