உறவாடும் கனவே தொடருதே – அத்தியாயம் -2
அத்தியாயம் -2
வெள்ளைநிலவன் கருப்பு சாலையில் பவனி வந்துகொண்டிருந்த இரவு வேளையில், இன்னமும் பெரிய வீட்டில் வேலை பார்த்து கொண்டிருந்தாள் வெண்பா. அந்த வீட்டில் உள்ள அனைவரும் இரவு உணவை உண்டு விட்டு படுக்கவே சென்றுவிட்டிருந்தனர். ஆனால் அவளுக்கு மட்டும் இன்னும் வேலை முடிந்தபாடில்லை.
வேலையாட்கள் கூட சென்றுவிட்டிருந்தனர். வள்ளியும், லட்சுமியும் செல்லும் பொழுது கூட அவளிடம்,
Advertisement
“பாப்பா, இன்னும் எவ்வளவு நேரம் தான் வேலை பார்ப்ப? விடு, மீதியை நாளைக்கு பார்த்துக்கலாம். முதலில் வீட்டுக்கு கிளம்பு” என அக்கறையாய் கூறிய பொழுதும்,
“அக்கா, இன்னும் கொஞ்ச வேலை தான் இருக்கு. முடிச்சுட்டா நிம்மதியா போலாம். இல்லைனா, இதையே நினைச்சு எனக்கு உறக்கமே வராது. நீங்க போங்க கா. நான் முடிச்சுட்டு கிளம்புறேன்” என்பவளை என்ன தான் செய்வது என்று அவர்களுக்கு தெரியவில்லை.
“சொன்னா கேட்க மாட்டியே! சரி சீக்கிரம் முடிச்சுட்டு கிளம்பு. அங்க உங்க அம்மா தனியா இருக்கும். ஒருவேளை முடிக்க முடிலைனாலும் பரவாயில்லை, அப்படியே வச்சுடு. காலையில் நாங்க வந்து செஞ்சு தரோம்”
Advertisement
எனக் கூறிவிட்டு அவர்கள் வெளியேற, வெண்பாவோ நேரம் போவதே தெரியாமல் வேலை பார்த்து கொண்டிருந்தாள்.
Advertisement
நேரம் பதினொன்றை தொட்டு கொண்டிருக்க, அவள் இன்னும் இல்லம் வராமல் இருக்கவே, அவளது தந்தை சண்முகம் அவளுக்கு அழைத்திருந்தார்.
“மா, வெண்பா, என்ன டா இன்னும் வீட்டுக்கு வராம இருக்க? என்னாச்சு டா ” என அன்பொழுக கேட்க,
“ப்பா வீட்டுக்கு வந்துடீங்களா? எப்போ ப்பா வந்தீங்க?” என்றவளுக்கு,
Advertisement
“சீக்கிரமே வந்துட்டேன் மா, நாளைக்கு பக்கத்து ஊர் வரைக்கும் போக வேண்டி இருக்கு, சீக்கிரம் போகணும் அதான் சீக்கிரமே வந்துட்டேன்’ என்றார் சண்முகம்.
“சீக்கிரம் போகணும்னு சொல்லிட்டு இன்னும் தூங்காம என்ன பண்ணிட்டு இருக்கீங்க? தூக்கம் இல்லாமல் போனா உடம்பு என்னத்துக்கு ஆகுறது ப்பா?” என அவரை இவள் கடிந்து கொண்டிருந்தாள்.
“ஏன் மா, நான் உன்னை கேட்டா, நீ என்னை கேட்டுட்டு இருக்க? நீ இல்லாமல் அப்பா என்னைக்கு டா தூங்கி இருக்கேன். இவ்வளவு நேரமா வா வேலை பார்த்துட்டு இருக்க? காலையில் போய் பார்க்கலாம்ல டா” என்றவருக்கு
“இல்ல ப்பா, இன்னும் கொஞ்ச வேலை தான், முடிஞ்சுடும். நீங்க போய் தூங்குங்க” என்றாள் அக்கறையாக.
“நீ எப்படி மா தனியா வருவ?” நான் வேணும்னா வந்து கூட்டிட்டு வரவா?” என கேட்டவருக்கு,
“இல்ல ப்பா, வேண்டாம். இதோ இருக்கு நம்ம வீடு. அதுவும் நம்ம ஊரில் எனக்கு என்ன ப்பா பயம்? நான் வந்துருவேன். நீங்க தூங்குங்க” என்றாள் மீண்டும்.
“சரி மா. நீ வர வரை அப்பா திண்ணையிலேயே உட்கார்ந்துட்டு இருக்கேன். சீக்கிரம் வந்துடு” என அப்பொழுதும் அவள் வரவிற்காக காத்திருப்பேன் என்றார் சண்முகம்.
“சொன்னா கேட்க மாட்டீங்களே! சரி, நான் சீக்கிரம் வந்துறேன்” என கூறி அலைபேசியை அணைக்க, வீட்டு வாசலில் வாகனம் நிறுத்தும் சத்தம் கேட்டது.
யாரென்று அவள் லேசாக எட்டி பார்க்க, வெற்றிதிருக்குமரன் தான் அவனது புல்லட்டை நிறுத்திவிட்டு, ஒற்றை கையால் வேட்டியை மடக்கி பிடித்தப்படி வேகமாக உள்ளே நுழைந்தான்.
அவனது பார்வை நேராக சமையலறை வாசலில் நின்றிருந்த வெண்பா மீது படிய, அவளோ அவனை கண்டதும் தலைதாழ்த்தி கொண்டாள். அவளுக்கு அவன் மாமன் மகன் தான் இருந்தாலும் ஒட்டி உறவாடியது இல்லை. அவனை பார்த்தாலே உள்ளுக்குள் கொஞ்சம் உதறல் எடுக்கும் தான் அவளுக்கு.
அவளை பார்த்து கொண்டே,அவன் கை கடிகாரத்தை பார்த்து, ‘இவ்வளவு நேரம் என்ன பண்றா?’ என மனதுக்குள் கூறிக்கொண்டவன் நேராக அவளருகே வந்தான்.
“இன்னும் நீ வீட்டுக்கு கிளம்பலையா தமிழ்?” என கேட்க,
“இல்ல, கொஞ்ச வேலை இருந்தது. ஒரு அஞ்சு நிமிஷம் தான் முடிஞ்சுடும். கிளம்பிடுவேன்” என தயங்கி தயங்கி கூற, அவனோ அவளை முறைத்து பார்த்தான்.
அவன் பார்வையை வேகமாக தவிர்த்தவள்,
“சாப்பிடீங்களா?” என பேச்சை மாற்றினாள். பயத்தை விட எல்லோர் மீதும் அவளுக்கு அக்கறை அதிகம்.
“நான் சாப்பிட்டேன். நீ” என கேட்டவனுக்கு,
“ஆன்.., சாப்பிட்டேன். ஆ.ஆன்.. இல்ல”
என இரண்டையும் கூற, வெற்றிக்கோ உதட்டோரோம் லேசாக புன்னகை அரும்பியது.
அவள் உண்டாளா? இல்லையா? என்பது அவளுக்கே மறந்து போனது.
“சரி வா சாப்பிடலாம்” என வெற்றி உணவு மேஜைக்கு அழைக்க,, வெண்பவோ,
“இல்ல வேண்டாம். நேரமாச்சு. வீட்டுக்கு போகணும்” என்றாள் அவசரமாக.
“எனக்கு பசிக்குதே!” என அவன் கண்களை சுருக்கி கேட்க,
“பசிக்குதா? முன்னமே சொல்லலாம்ல மாமா. உட்காருங்க. அஞ்சே நிமிஷத்தில் உங்களுக்கு சுட சுட தோசை போட்டு கொண்டு வரேன்”
என பரப்பரப்பானாள். அவள் பதற்றமாக இருக்கும் போது அவளையும் மீறி அவன் மீதான உரிமையான அழைப்பு வந்துவிடும். அது அவளுக்கே தெரியாத ஒன்று. மற்ற நேரங்களில் கட்டுப்படுத்தி கொள்வாள்.
கல்லை அடுப்பில் வைத்து, அவனுக்கு வேக வேகமாக தோசை ஊற்றி, தொட்டு கொள்ள பொடியை எடுத்து வைத்து, அவனுக்கு உண்ண கொண்டு வந்து கொடுத்தாள்.
அதனை வாங்கி வைத்து கொண்டவன், அவள் அடுத்த தோசை கொண்டு வரும் வரை காத்திருந்தான். அவன் உண்ணாமல் இருப்பதை கண்டு,
“சாப்பிடலையா?” என கேட்க,
“நீ ஒரு அஞ்சு தோசை போட்டு மொத்தமா எடுத்துட்டு வா. அப்புறம் சாப்பிட்டுகிறேன்”
என்று வெற்றி கூறியதும், வெண்பாவும் அதேபோல செய்து கொண்டு வந்து கொடுக்க, அவனோ அவளை எதிரே அமரு என கையை ஆட்ட, அவளோ புரியாமல் விழித்தாள்.
“உட்காருன்னு சொன்னேன்” என இப்பொழுது வாய் மொழியாகவே கூற, அவளோ யோசனையுடன் எதிரே அமர்ந்தாள்.
அவளுக்கென்று தட்டில் இரண்டு தோசையை வைத்து, அவளின் அருகே வைத்து, “சாப்பிடு” என வெற்றி கூற,
“இல்ல, எனக்கு வேண்டாம். நீங்க சாப்பிடுங்க” என வேகமாக மறுத்தவளை அழுத்தமாக பார்த்தான் வெற்றி.
அவன் பார்வையை அப்படியே தொடர, வெண்பாவோ, அவன் பார்வையின் அழுத்தத்தை தாங்க முடியாது, தோசையை எடுத்து உண்ண ஆரம்பித்தாள்.
அவளால், அங்கு உட்கார்ந்து உண்ணவே முடியவில்லை. என்ன தான் மாமன் வீடாக இருந்தாலும், அவள் இப்படி உணவு மேஜையில் அமர்ந்தெல்லாம் உண்ணதில்லை. அவளுடைய இடம் என்னவென்று உணர்ந்து அதற்கேற்றார் போல் தான் எப்பொழுதும் நடந்து கொள்வாள். வெற்றி மாமன் மகன் தான் என்றாலும் அவ்வளவு உரிமையாக அவள் பழகியதில்லை அவனிடம். என்ன என்றால் என்ன? என்பதோடு தான் அவளின் பழக்கம் வழக்கம்.
அவன் முன் உட்கார்ந்திருப்பது அவஸ்தை என்றால், அவனின் பார்வை அதைவிட அவஸ்தையாக இருந்தது வெண்பாவிற்கு.
எப்படியோ மென்று, விழுங்கி என அவள் உண்டு முடிக்க, அவள் உண்டு முடிக்கும் வரை அமைதி காத்தவன், அவள் தட்டு காலியானதும், மீண்டும் ஒரு தோசையை வைக்க போனான்.
“இல்ல வேண்டாம், போதும் மாமா” என பதறியவளிடம்,
“ஒன்னு தான் சாப்பிடு. மீதி நான் சாப்பிறேன்” என்றவன், உண்ண ஆரம்பித்தான்.
இருவரும் உண்டு முடித்ததும், அனைத்தையும் எடுத்து ஒதுங்க வைத்தவள், நேரமாவதை உணர்ந்து வீட்டிற்கு கிளம்ப, இன்னும் உறங்க செல்லாமல் ஹாலிலே அமர்ந்து அலைபேசியை பார்த்து கொண்டிருந்தான் வெற்றிதிருக்குமரன்.
‘என்ன இன்னும் தூங்க போகாம இருக்காங்க?’ என யோசனையுடன் அவனருகில் சென்றவள்,
“உங்களுக்கு வேற ஏதாச்சும் வேணுமா?” என கேட்க,
“இல்ல எதுவும் வேண்டாம்” என பதில் கூறினான் அவளை நிமிர்ந்து பார்க்காமலே.
“பால் கொண்டு வரட்டுமா? குடிக்கிறீங்களா?” என மீண்டும் கேட்க,
“இல்ல வேண்டாம்” என்றான் அதே போல. அதற்கு மேல் அவனிடம் என்ன கேட்பது என்பது தெரியாது, திருத்திருத்தவள்,
“அப்போ, நா… நான்… கிளம்பட்டுமா? அப்பா எனக்காக காத்துட்டு இருப்பார்” என தயங்கி தயங்கி கூறியவள் அவனையே பார்க்க, அவளை நிமிர்ந்து பார்த்தவன், சரியென தலையாட்டி விட்டு அவளுடனே எழுந்து நடந்தான்.
அவளோ புரியாமல் அவனை பின் தொடர, வெற்றியோ தன் புல்லட்டின் மீது ஏறி அமர்ந்து கொண்டு, பின்னிருக்கையை காட்டி
“உட்கார் தமிழ். வீட்டில் விட்டுறேன்” என்றதும் அவளுக்கோ நெஞ்சே அடைத்து கொண்டு வந்தது. அவனுடன் தனியாக அமர்ந்து செல்வதா? நினைக்கவே படப்படவென வந்தது.
“இல்ல.. இல்ல மாமா. நானே போய்கிறேன்” என வேகமாக மறுக்க,
“நான் உன்னை உட்காருன்னு சொன்னேன் தமிழ்” என மீண்டும் அதே அழுத்தமான பார்வை பார்த்ததும், அவளோ கைகளை பிசைந்து கொண்டு நின்றிருந்தாள்.
அவனுடன் செல்வதற்கு அத்தனை பயமாக இருந்தது. யாரேனும் பார்த்து விட்டால், என்ன சொல்வார்களோ? என படப்படப்பாக வர,
“சொன்னா கேளுங்க, இங்க தானே இருக்கு வீடு, நான் நடந்தே போய்டுவேன். யாராச்சும் பார்த்தா, ஏதாச்சும் சொல்ல போறாங்க”
என மளமளவென பேசியவளை அழுத்தமாக பார்த்தப்படியே இருந்தான் வெற்றி.
“இப்போ என்ன பிரச்சனை உனக்கு. ஒழுங்கா வண்டியில் ஏறு” என அவன் அதட்ட, அடுத்த நொடி வண்டியில் ஏறி அமர்ந்து இருந்தாள் வெண்பா. அவனது ஆளுமை கண்டு எப்பொழுதும் அவளுக்கு பயம் உண்டு.
இமைகள் படப்படக்க, அவள் அமர்ந்ததும், அவளின் இந்த பயத்தை கண்டு அவனுக்கோ சிரிப்பு தான் வந்தது. உதடு மடக்கி சிரிப்பை அடக்கி கொண்டவன், அங்கிருந்து வண்டியை கிளப்பினான்.
இரவின் தனிமையில் குளிரின் இனிமையில் அந்த பயணம் நடைபெற, சீரான வேகத்தில் வண்டியை செலுத்தி கொண்டிருந்தவன்,
“தமிழ், அத்தைக்கு இப்போ உடம்பு எப்படி இருக்கு? ரெகுலரா செக் அப் கூட்டிட்டு போறீயா? டாக்டர் என்ன சொன்னாங்க?” என அவளின் தாயான கனகவல்லியின் உடல்நிலையை பற்றி விசாரிக்க, அதற்கு வெண்பாவோ,
“மாசா மாசம் கூட்டிட்டு போறேன். முன்னத்துக்கு ஏதோ இப்போ கொஞ்சம் பரவாயில்லை” என பெருமூச்சுடன் பதில் கூறினாள்.
“ஒஹ்ஹ், சரி அடுத்த தடவை செக்அப் கூட்டிட்டு போகும் போது சொல்லு, நானும் வரேன்” என வெற்றி கூறியதும்,
“எது? நீங்க வரீங்களா? எதுக்கு?” என பதறினாள் வெண்பா. அந்த நிசப்தமான இரவில் அவளின் பதற்றம் கொஞ்சம் அதிகமாகவே கேட்க, அதில் சட்டென்று வண்டியை நிறுத்தி விட்டான்.
திடீரென்று வேகமாக வண்டி நின்றதும், அவளும் அதே வேகத்தோடு அவன் முதுகின் மீது மோதி கொண்டாள்.
அவன் மெதுவாக தலையை திருப்பி பார்க்க, அவனிடமிருந்து வேகமாக தள்ளி அமர்ந்தவள் தலையை குனிந்து கொண்டாள். அவளது நெஞ்சுக்கூடு சற்று அதிகமாகவே ஏறி இறங்க, அதை பார்த்தவன் எதுவும் பேசாது அங்கிருந்து வண்டியை கிளப்பினான்.
அடுத்த சில நிமிடங்களில் வெண்பாவின் இல்லம் வர, அவளை இறக்கி விட, அவளுக்காய் திண்ணையில் காத்திருந்த சண்முகம் இவர்களை கண்டதும் அருகில் வந்தார்.
“வாங்க தம்பி எப்படி இருக்கீங்க?” என அன்பாக வெற்றியிடம் கேட்க, அவனும்,
“நல்ல இருகேன் மாமா நீங்க எப்படி இருக்கீங்க? வேலையெல்லாம் எப்படி போது? உடம்பு எப்படி இருக்கு?” என நலம் விசாரித்தான்.
“ஏதோ போது தம்பி, உடம்புக்கு என்ன? நல்ல தான் இருக்கு? என்றவர்,
“ஏன் மா, நான் தான் வரேன் சொன்னேன்ல அப்புறம் ஏன் இந்த நேரத்தில் தம்பியை தொந்தரவு பண்ணி இருக்க? என அவனுக்கு பதிலுரைத்தபடியே மகளை கடிந்து கொண்டார் சண்முகம்.
“அப்பா, நான் கூப்பிடல, அவர் தான்.. என வெண்பா பதிலுரைக்கும் முன்பே, வெற்றியோ,
“அவளை எதுவும் சொல்லாதீங்க மாமா, நானா தான் கூட்டிட்டு வந்தேன். நேரம் ஆகிடுச்சே தனியா எப்படி அனுப்புறது தான் விட வந்தேன்” என்றான் அவளை பார்த்தப்படியே.
“சரி தம்பி, சந்தோஷம். உள்ளே வாங்க” என சண்முகம் அழைக்க,
“இல்ல மாமா, நேரம் ஆகிடுச்சு. இன்னோரு நாள் சாவகாசமா வரேன். இப்போ கிளம்புறேன்” என விடைபெற்று கொண்டவன் அங்கிருந்து புறப்பட்டான்.
வீட்டுக்குள் தந்தையும் மகளும் நுழைய, “அம்மா, தூங்கிடங்களா ப்பா,” என வெண்பா கேட்க,
“ஆமாம் மா, மாத்திரை போட்டதும் தூங்கிட்டா” என்றார் சண்முகம்.
“அப்பா இன்னைக்கு கடைக்கு போனேனே அங்கே உங்ககு பிடிச்ச இலந்தை வடை வித்துச்சு. உடனே வாங்கிட்டு வந்துட்டேன். இந்தா” என் மகளிடம் தான் வாங்கி வந்ததை கொடுக்க, அவளுக்கோ அத்தனை ஆனந்தம்.
“ஐ.., இலந்தை வடை. தேங்க்ஸ் ப்பா” என முகமெல்லாம் பூரிப்பாக சொன்ன மகளை வாஞ்சையுடன் பார்த்தார் சண்முகம். அவளின் பூரிப்பான முகத்தை காண காண அவருக்கு உள்ளுக்குள் ஆனந்தம் ஆர்ப்பரித்தது. அப்பாக்களுக்கு மகள்கள் என்றுமே இளவரசி தானே!
சின்னதாய் ஒரு ஓட்டு வீடு தான் சண்முகத்தின் இல்லம். அதன் முற்றத்தில் உள்ள, ஒற்றை ஆள் படுக்க கூடிய கயிற்று கட்டிலில், அவள் அன்னை உறங்கி கொண்டிருக்க, அவர் அருகில் கீழே பாய் விரித்து சண்முகம் படுத்து கொண்டார்.
இலந்தை வடையை ரசித்து சாப்பிட்டப்படியே, உள்ளே உள்ள சின்ன அறையில், தரையில் பாய் விரித்து படுத்து கொண்டாள் வெண்பா.
நாள் முழுதும் செய்த வேலையின் களைப்பு அப்பட்டமாய் உடலில் தெரிந்த போதும். உறக்கம் வருவேன என அடம் பிடித்தது.
அமைதியாக, அவளது பொக்கிஷமான அந்த டைரியை எடுத்து வைத்து பார்த்து கொண்டிருந்தாள். அவளின் மனத்திற்கினிய அந்த ஜீவனின் நினைவுகளின் பொக்கிஷங்கள் ஒவ்வொன்றும் அதில் மிளிர்ந்து கொண்டிருந்தது. அதை காண காண அவளது களைப்பு அனைத்தும் பறந்து போனது.
மெல்ல அதனிடம், இன்று நாள் முழுவதும் நடந்தவற்றை கூறி கொண்டிருந்தாள் வெண்பா. காலையில் இருந்து செய்த வேலைகள், சந்தித்த நபர்கள் என அனைத்தையும் கூறி கொண்டிருக்கையில் கடைசியாக அவள் பேச்சு வெற்றியிடம் வந்து நின்றது.
“இன்னைக்கு அம்மாச்சி வீட்டில் இருந்து கிளம்பவே ரொம்ப நேரமாகிடுச்சு. அப்புறம் வெற்றி மாமா தான் கூட்டிட்டு வந்து வீட்டில் விட்டாங்க. நான் வேண்டாம் தான் சொன்னேன், அவங்க கேட்கவே இல்ல. என்னை அதட்டி கூட்டிட்டு வந்துட்டாங்க” என அதையும் சேர்த்து கூறி கொண்டிருந்தவள், அப்படியே உறங்கி போனாள்.
வழக்கம் போல அடுத்த நாளும் விடிய, வெண்பா நாச்சியார் வீட்டிற்கு சென்றிருந்த நேரம், நாச்சியார் கனகவல்லியை காண அவர் இல்லத்திற்கு வந்திருந்தார்.
வந்தவரை கனகவல்லி, “அம்மா, வாங்க ம்மா, எப்படி இருக்கீங்க? உடம்புலாம் பரவாயில்லையா?” என பாசமாக அழைக்க, அவரோ முகத்தை கடுகடுவென வைத்திருந்தார்.
அவர் முகமே சரியில்லாமல் இருப்பதை கண்டு, கனகவல்லியோ,
“என்ன ம்மா? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? ஏதாவது பிரச்சனையா?” என கேட்டதும்,
“பிரச்சனையே உன்னால தானே! உன்னால மட்டும் தானே எனக்கு பிரச்சனை வரும்” என அவர் கோபமாய் கத்தியதும், அவரை அதிர்ந்து பார்த்தார் கனகவல்லி.
“என்ன ம்மா? என்னால் பிரச்சனையா? நான் என்ன பண்ணேன்?” என புரியாமல் கேட்க,
“ஒன்னும் தெரியாத மாதிரிலாம் என்கிட்ட நடிக்கிற வேலையெல்லாம் வேண்டாம். உன்னோட திட்டமெல்லாம் எனக்கு தெரியாதுன்னு நினைக்கிறீயா? மீண்டும் அவர் கடிந்து கொள்ள, கனகவல்லிக்கு ஒன்றுமே புரியவில்லை.
“ம்மா, என்ன சொல்றீங்க? எனக்கு ஒன்னுமே புரியல. புரியுற மாதிரி சொல்லுங்க” என அவரிடம் கெஞ்சினார் கனகவல்லி.
“புரியலையா.., நேத்து உன் பொண்ணு என் பேரன் வெற்றி கூட வண்டியில் வந்து இறங்கி இருக்கா? என்ன தைரியம் அவளுக்கு? நீதானே சொல்லி கொடுத்து அனுப்பின, அவளை இப்படியெல்லாம் பண்ண சொல்லி. உன் திட்டம் எதுவும் பலிக்காது”
என அவர் வரைமுறை இல்லாது பேச, அதில் உறைந்து போனார் கனகவல்லி.
தண்ணீர் துளிகளில் கூட
உன் பெயரை எழுதி பார்க்கும்
இனிமையை என்னவென்று
சொல்ல?!!
அதற்கு கூட தெரியும் என் எண்ணங்களின் மொத்த
உருவமும் நீ என்பது?
உனக்கு எப்பொழுது தெரியவரும்?!!
தொடரும்…
