அத்தியாயம் 3.1_தேவனுக்கேற்ற தேவியோ_கார்த்திகா கார்த்திகேயன்
அத்தியாயம் 3
தனிமையில் என் இதயத்தை
வருடிச் செல்கிறது என் கற்பனைக்
Advertisement
காதலியின் அழகான நினைவுகள்!!!
சமையல் அறையில் நின்று எதையோ கிளறிக் கொண்டிருந்த திவ்யா கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. அவள் கையின் வேகம் கரண்டியை பிடிப்பது போல அல்ல. கத்தியை பிடிப்பது போல தான் இருந்தது.
Advertisement
Advertisement
ஏனென்றால் அவள் இப்போது சமையலை முடித்து விட்டு கடைக்குச் செல்ல வேண்டும். அவளது கணவன் பாண்டியன் நடத்திக் கொண்டிருப்பது ஒரு ஜூஸ் கடை. அங்கு செல்ல வேண்டும் என்றாலே ஒரு மாதிரி உடல் அருவெறுப்பில் சுருங்கிப் போகும் அவளுக்கு.
ஏனென்றால் கடைக்கு ஜூஸ் குடிக்க வருவது சாதாரண வாடிக்கையாளர்கள் மட்டும் அல்ல. பாண்டியனின் நண்பர்களும் வருவார்கள். அவர்களை நினைத்தாலே உடல் எல்லாம் கம்பளி பூச்சி ஊர்வது போல ஒரு உணர்வு தான் வரும்.
Advertisement
அவளை அவர்கள் பார்க்கும் பார்வை நிச்சயம் நல்ல மாதிரி இல்லை. எப்போதடா அவளது உடை விலகும் என்பது போல இருக்கும். “தங்கச்சி அண்ணனுக்கு ஒரு ஜூஸ் உன் கையால கொடு மா”, என்று சொல்பவனிடம் ஒரு சதவீதம் கூட சகோதர பாசம் இருக்காது.
இத்தனைக்கும் முதல் முறையே அதைப் பற்றி அவள் பாண்டியனிடம் “என்னங்க உங்க பிரண்ட்சை கடைக்கு வர வேண்டாம்னு சொல்லுங்க. அவங்க பார்வையே சரி இல்லை”, என்று சொல்லி இருக்கிறாள்.
“நீ அவங்களை காம பார்வை பாத்து படுக்கைக்கு கூப்பிடாம இருந்தா சரி? பெரிய உத்தமி மாதிரி பேசுற? நீ எப்படி பட்டவ உன் குடும்பம் எப்படி பட்டதுன்னு காட்டுறதுக்கு சாட்சி தான் உன் வீட்ல இருக்குற குழந்தை. வந்துட்டா பேச. சி பே”, என்று சொல்லி அவளைத் தான் அசிங்கப் படுத்தினான் பாண்டியன்.
அதற்கு பிறகு அவர்களின் தொல்லைகளுக்கு பழகிக் கொண்டாலும் நாளுக்கு நாள் அவர்கள் அராஜகம் அதிகம் ஆவது போல தான் இருக்கிறது.
டம்ளரை வாங்குவது போல அவள் கையைப் பற்றுவது திருப்பி கொடுப்பது போல அவளை கட்டி அணைக்க வருவது உரசுவது என நாளுக்கு நாள் எல்லை மீறுகிறது.
ஒரு நாள் தனியாக ஒருத்தன் அவளை சீண்ட அடுத்த நொடி அவனை அறைந்து விட்டாள். அவனோ “என்ன டி ஓவரா சீன போடுற? நான் கேட்டா உன் புருசனே உன்னை என் கூட அனுப்புவான் பாக்குறியா? அன்னைக்கு உன்னை வச்சிக்கிறேன் டி? அப்ப எப்படி அடிக்கிறேன்னு பாக்குறேன்”, என்று வேறு சொல்லி இருக்க உடல் எல்லாம் அனல் மேல் நிற்பது போல துடிக்க தான் செய்கிறது.
இப்போதும் அதை நினைத்து தான் சமைத்துக் கொண்டிருந்தாள். அவள் நினைத்த வாழ்க்கையே வேறு. நிறைய படித்து வேதியியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்று ஆராய்ச்சியாளராக வேண்டும் என்ற கனவு இருந்தது. இப்படி ஒரு அலங்கோலமான வாழ்க்கையை வாழ்வோம் என்றெல்லாம் அவள் கனவில் கூட நினைக்க வில்லை.
இதற்கு காரணம் ரதியின் காதல் தான் என்றாலும் திவ்யாவுக்கு ரதி மேல் கோபம் எல்லாம் வரவில்லை. ஏனென்றால் ரதியின் காதல் திவ்யாவுக்கு அவ்வளவு பிடிக்கும். அது மட்டும் அல்ல அவளுக்கு காதலே அவ்வளவு பிடிக்கும்.
தனக்கு நேர்ந்த வாழ்க்கைக்காக ரதியையோ காதலையோ குறை சொல்லும் அளவுக்கு மனமுதிர்சி இல்லாதவள் அல்ல. ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம் என்ற தெளிவு அவளிடம் உண்டு. ஆனால் அவளுக்கு கோபம் உண்டு என்றால் அது ஒருவரின் மீது தான். அவளது அன்னை மஞ்சு மீது மட்டும் அளவிட முடியாத கோபம் உண்டு.
அது கூட சில நேரம் அன்னைக்காகவும் யோசிப்பாள். “ஒரு வேளை நானும் ஒரு பெண் குழந்தையின் அன்னையாக இருந்தால் அப்படி தான் முடிவு எடுத்திருப்பேனோ?”, என்றும் எண்ணிக் கொள்வாள்.
யார் என்ன செய்தாலும் எத்தனை தெய்வங்களைக் கும்பிட்டாலும் நடப்பது நடந்தே தீரும் என்று மட்டும் எண்ணிக் கொள்வாள்.
திருமணம் முடிந்து ஐந்து வருடம் ஆகிறது. ஆனால் குழந்தை என்ற ஒன்று வரவே இல்லை. அவள் அதற்காக அழுததே கிடையாது.
தன்னுடைய மனநிலை, தனக்கு கிடைத்த கணவனின் குணம், அத்தை என்ற அரக்கியின் பேச்சு, இந்த வீட்டு சூழ்நிலை அனைத்தையும் ஐந்து வருடமாக கவனித்துக் கொண்டிருந்தவளுக்கு இந்த வீட்டில் பிறக்கும் குழந்தையின் வாழ்வு நன்றாக அமையாது என்ற நம்பிக்கை இருக்கிறது. அதனால் தனக்கு குழந்தை இல்லை என்று கவலைப் பட்டதே கிடையாது. ஆனால் அதற்கு அவனது அன்னை அவளை பேசும் பேச்சுக்கள் எல்லாம் காதில் கேட்க முடியாததாக தான் இருக்கும்.
ரதி, அமர், சாணக்கியன் மூவரும் பழைய விஷயங்களை எண்ணிக் கொண்டிருந்த அதே நேரம் திவ்யா மற்றும் அரவிந்தும் பழைய விஷயங்களை தான் எண்ணிக் கொண்டிருந்தார்கள்.
ரதி மற்றும் திவ்யா இருவருக்கும் ஒரு வருட வித்தியாசம் உண்டு. திவ்யா பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது ரதி கலைக் கல்லூரியின் முதல் வருடத்தில் இருந்தாள்.
அந்த கல்லூரியில் அவளை சேர்த்து விட்டது அவளது அத்தை மகன் அரவிந்த் தான். ரதியை நன்கு பார்த்துக் கொள்வதாக சொல்லி அவளை தன்னுடைய கல்லூரியிலே சேர்க்க சொன்னான். அரவிந்த் ரதியை சிறு வயதில் இருந்தே விரும்பினான். ஆனால் ரதிக்கு அவன் நண்பன் மட்டுமே. அவனிடம் உரிமையாக பேசுவாள்.
உடன் பிறந்த அண்ணன் தம்பி இல்லாததால் ரதி மற்றும் திவ்யாவுக்கு அரவிந்த் தான் எல்லாமே. அவர்களுக்கு அரவிந்தின் அண்ணன் பாண்டியன் என்ற ஒருவன் இருக்கிறான் என்று தெரியுமே தவிர அவன் குணம் எல்லாம் தெரியாது.
ரதி மற்றும் அரவிந்த் படிக்கும் கல்லூரியில் தான் அமர் படித்துக் கொண்டிருந்தான். ரதி அந்த கல்லூரியில் சேர்ந்து முதல் ஆறு மாதம் அமர் ரதியை பார்த்தது கூட கிடையாது.
சாணக்கியன் அதே கல்லூரியில் ஒரு டிகிரி முடித்து விட்டு தந்தைக்கு அடியாளாக சென்று விட அமர் வேதியியல் பிரிவில் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்தான்.
அப்போதெல்லாம் இரண்டு மகன்கள் மீதும் தருமர் பாசமாக தான் இருந்தார். அவரின் தப்புக்கள் தெரியாத சாணக்கியன் மற்றும் அமர் இருவரும் தந்தை மீதும் அன்பாக தான் இருந்தார்கள். அண்ணன் தம்பிக்குள் ஒரு தோழமையும் உண்டு. சாணக்கியன் மட்டுமே அமரா என்று அழைப்பான். அந்த அழைப்பு அமருக்கு மிகவும் பிடிக்கும். ஏனோ அமர் அவனது அண்ணனை அந்த அளவுக்கு நேசித்தான். சாணக்கியனுக்கு ஒன்று என்றால் துளியும் யோசிக்க மாட்டான்.
அதே போல ரதியும் திவ்யாவுமே நண்பர்கள் போல தான். ரதி மிகவும் மென்மையானவள், அதிர்ந்து கூட அவளுக்கு பேச தெரியாது. அந்த பெயருக்கு ஏற்ற அழகும் அவளிடம் கொட்டிக் கிடந்தது. ஆனால் திவ்யா அழகு தான் என்றாலும் கொஞ்சம் நிறம் குறைவாக இருப்பாள். ஆனால் தைரியமானவள்.
மஞ்சு மற்றும் தாமோதரன் இருவருமே மகள்கள் மீது உயிரையே வைத்திருந்தனர். மகன் இல்லையே என்று அவர்கள் வருத்தப் பட்டதே இல்லை.
தாமோதரன் மற்றும் மஞ்சுவுக்கு திருநெல்வேலியில் இருந்த அணைத்தலையூர் என்ற கிராமம் தான் சொந்த ஊர். ஆனால் அவர்கள் சிறு வயதிலே சென்னையில் செட்டில் ஆகி விட்டார்கள்.
டிநகரில் இருந்த ஒரு பிரைவேட் லைப்ரேரியில் தான் தாமோதரன் பணிபுரிந்தார். மஞ்சு ஒரு டெய்லர். அதனால் அவர்கள் அந்த வாழ்வில் எப்படி சிக்கனமாக இருக்க முடியுமோ அப்படி இருந்து நிறைவான ஒரு வாழ்வைத் தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். சென்னையில் ஒரு வீடும் வாங்கி விட்டார்கள்.
அன்று அமர் கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தான். அவன் முகம் புன்னகையால் மலர்ந்தே இருந்தது. அந்த வயதுக்கே உரிய மிடுக்கும் துருதுருப்பும் அவனிடம் கொட்டிக் கிடந்தது.
கண்ணாடியில் தன்னைப் பார்த்து தன்னம்பிக்கையாக புன்னகைத்துக் கொண்டவனுக்கு தன்னாலே ரதியின் நினைவு வந்தது. இன்று அவளைப் பார்ப்பேனா என்று சிறு எதிர்பார்ப்பும் மிளிர்ந்தது.
அமர் எந்த அளவுக்கு அழகனோ அந்த அளவுக்கு பிடிவாதம் குணம் கொண்டவன். அவனுக்கு ஒன்று வேண்டும் என்றால் வேணும் என்று நிற்பவன். சாணக்கியன் எப்போதும் அவனுக்கு செல்லம் கொடுத்து விட்டுக் கொடுத்தே பழகியதால் அமர் அப்படியே வளர்ந்து விட்டான்.
இப்போது அமருக்கு பிடித்த விஷயம் ரதி ரதி ரதி மட்டுமே. ஒரு நாள் கல்லூரி முடிந்து போகும் போது ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தாள் ரதி. அப்போது தான் முதல் முறை அவளைப் பார்த்தான்.
பார்த்தவுடன் அவளை அவ்வளவு பிடித்தது. அவளைப் பற்றி ஒரு தகவலும் தெரியாது. ஆனால் அவளை ரசித்தான். அவளைப் பற்றி முழுத் தகவலும் தேடி அலைந்தான். ஒரு நாளில் எல்லாத் தகவலும் கண்டு பிடித்து விட முடியும் தான். ஆனால் அவளைப் பற்றி யாரிடமாவது விசாரித்தால் இருவரையும் சேர்த்து வைத்து பேச வாய்ப்பிருக்கிறதே?
தன்னால் அவளுக்கு எந்த கெட்ட பெயரும் வரக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தான். கொஞ்சம் கொஞ்சமாக அவளைப் பற்றி விசாரித்து தெரிந்து கொண்டான். அவள் அவ்வளவு அமைதி என்றும் புரிந்தது.
அவளிடம் நேருக்கு நின்று பேசி அவள் மனதில் சலனத்தை உருவாக்க எல்லாம் அவன் நினைக்க வில்லை. தள்ளி நின்று ஆராதித்தான். அவளே அறியாமல் அவளுக்கு நிழலாக நின்றான். ரதியை ஒரு மாதத்துக்கும் மேலாக சைட் அடித்து வருகிறான்.
ஆனால் அவளுக்கு இப்படி ஒருவன் இருப்பது தெரியாது. அவளிடம் தன்னை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கூட அவனுக்கு இல்லை.
ஆனால் நாளுக்கு நாள் அவள் மீதான ஆசையும் அவளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பதை உணர்ந்தே இருந்தான்.
முதலில் அவள் அழகில் கவரப் பட்டு சைட் அடித்துக் கொண்டிருந்தவன் மனதில் அவள் மீதான நேசம் லேசாக பரவத் துவங்கி இப்போது விருட்சமாக வேர் ஊன்றி இருந்தது. அவளைக் கண்டு விட்டால் அவன் உடல் மொழியில் ஒரு பரபரப்பு வந்து விடும். சலனமில்லாமல் இருக்கும் இதயம் லேசாக படபடப்பாகும். அதை நண்பர்கள் முன்னிலையில் காட்ட முடியாமல் தடுமாறினான். என்றாவது ஒரு நாள் தன்னை மீறி அவளிடம் தன்னுடைய நேசத்தை வெளிப்படுத்தி விடுவோமோ என்ற பயமும் அதற்கு அவள் எதிர்வினை என்னவாக இருக்கும் என்ற பீதியும் அவனுக்குள் இருந்து கொண்டே இருந்தது.
அன்று அவள் நினைப்பில் அமர் கல்லூரிக்கு கிளம்பி சிறு சிரிப்புடன் டைனிங் ஹால் வர ஏற்கனவே பூரியை உள்ளே தள்ளிக் கொண்டிருந்த சாணக்கியன் அவனை குறுகுறுப்பாக பார்த்தான்.
“என்ன டா அண்ணா? லுக் ஒரு மார்க்கமா இருக்கு?”, என்று கேட்ட படியே அண்ணன் அருகில் அமர்ந்தான்.
“நீ ஒரு மார்க்கமா இருக்கியே? அதான். ஏதோ ஒளி வட்டம் தெரியுது டா அமரா”, என்று இருவரும் ரகசியம் பேசிக் கொள்ள “என்ன ரெண்டு பேரும் குசுகுசுன்னு பேசிக்கிறீங்க?”, என்று கேட்டார் தருமர்.
“இல்ல பா, வர வர ரொம்ப அழகாய்ட்டே போறீங்களா? அதான் உங்களுக்கு வேற பொண்ணு பாக்கலாம்னு பேசிட்டு இருக்கோம்”, என்று அமர் சொல்ல சாணக்கியனும் தருமரும் சிரித்தார்கள் என்றால் அமரின் காதை திருகிய சகுந்தலா “சந்தோஷமா உன் அப்பாவுக்கு கல்யாணம் பண்ணி வை டா. நான் வேணா டைவர்ஸ் கேசை ஈஸியா முடிச்சு கொடுத்துறேன். பீஸ் கூட வேண்டாம்”, என்று சிரித்தாள்.
இப்படி பேசி உணவு வேளை சந்தோஷமாக கழிய அனைவரிடமும் சொல்லி விட்டு வண்டியை எடுத்துக் கொண்டு கல்லூரிக்கு வந்தான் அமர்.
இன்னும் கிளாசுக்கு நேரம் இருப்பதால் நண்பர்களுடன் மரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவனின் கண்கள் அவனது தேவதையை தேடியது. எப்போது வருவாளோ என்று அலைப்புறுதல் அவனிடம். நண்பர்கள் அனைவரும் கிண்டலாக பேசிக் கொண்டிருந்தாலும் ரதி வரும் நேரம் வந்துவிட்டதால் அவன் கவனம் அங்கு இல்லை.
“நான் எல்லாம் முப்பது வயசுக்கு மேல தான் டா கல்யாணம் பண்ணுவேன்”, என்று ஒருவன் சொல்ல “டேய் இப்படி சொல்றவன் தான் டா முதல் ஆளா கல்யாணம் பண்ணுவான். அது மட்டும் இல்லாம வருஷத்துக்கு ஒண்ணு ரிலீஸ் பண்ணுவீங்க? அதே வேலையா எப்படி தான் சுத்துறாங்களோ?”, என்றான் மற்றொருவன்.
ஆனால் இது எதுவுமே அமரின் காதில் விழ வில்லை. அவன் கண்கள் முழுக்க அவனது தேவதை மீது மட்டுமே. ரதிக்குமே தன்னை யாரோ உற்று பார்ப்பது போன்று வித்தியாசமாக தோன்றியது. சுற்றும் முற்றும் பார்த்தாள் ஆனால் தெரிய வில்லை. ஆனால் அவள் உள்ளுணர்வு ஏதோ அவளுக்கு உணர்த்தியது. ஆனாலும் சுற்றிலும் ஆண்களாக இருக்க அதற்கு மேல் அவளால் பார்க்க முடிய வில்லை. சிறிது நேரம் பார்த்தவள் உண்மையிலே பிரம்மை தானா என்று எண்ணிக் கொண்டு சென்று விட்டாள்.
அடுத்த ஆறு மாதம் கழித்து திவ்யாவும் அதே கல்லூரியில் தான் படிக்க சேர்ந்தாள். இன்னும் சொல்ல போனால் அமரைப் போலவே அவளும் வேதியியல் பிரிவை தான் தேர்ந்தெடுத்தாள். திவ்யா கல்லூரிக்கு வந்த பிறகுமே அமர் என்ற ஒருவன் தன் பின்னே பைத்தியமாக சுற்றுகிறான் என்று ரதி அறிய வில்லை. அதே போல அரவிந்தின் மனதையும் அவள் அறிய வில்லை. அவன் மனதில் அமரைப் போலவே ஒரு நேசம் பூத்திருக்கிறது என்று தெரியாமல் தான் இருந்தாள்.
ரதிக்கு தன்னுடைய குடும்பம் தான் முதல். அவர்களை தவிர வேறு உலகம் இல்லை. அதுவும் அன்னை என்றால் கொஞ்சம் பயமும் கூட. திவ்யா கூட அன்னையை எதிர்த்து பேசுவாள். ஆனால் ரதி மஞ்சு என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வாள். ஆனால் உரிமையாக அன்னையிடம் செல்லம் கொஞ்சுவாள்.
ரதி அம்மா செல்லம் என்றால் திவ்யா அப்பா செல்லம். அக்கா தங்கை இருவரும் ஒன்றாக தான் கல்லூரிக்கு வருவார்கள் போவார்கள். அன்றும் இருவரும் கல்லூரி முடிந்ததும் பேருந்து நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள்.
அப்போது பார்த்து அருகில் சென்ற ஒரு வண்டி திவ்யாவை இடிப்பது போல சென்றது. அவள் சட்டென்று விலக நினைக்கும் முன் அவளது துப்பட்டா அந்த வண்டியில் இருந்தவனிடம் மாட்டிக் கொள்ள அது அவன் கையோடு பறந்து போனது. அவள் தோளில் பின்னும் குத்தி லேசாக அவள் தோலைக் கிழித்தது. ரதியுமே இதை எதிர் பார்க்க வில்லை.
அதிர்ச்சியில் “ஏய்”, என்று திவ்யா சத்தம் கொடுக்கும் போது அவன் துப்பட்டாவுடன் சற்று தள்ளி சென்று பிரேக் பிடித்திருந்தான். அவன் மீதும் தவறு இல்லை தான். ஒரு பேருந்து எதிரே வர அதற்கு வழி விட நினைத்தவன் இந்த பக்கம் வந்த அவர்களை நெருங்கி இருந்தான்.
துப்பட்டா அவனது வண்டியில் மாட்டியது கூட அவனே அறியாமல் தான். ஆனால் இது தெரியாத திவ்யாவோ வேகமாக அவனை நோக்கி வந்தவள் “பொறுக்கி கண்ணை என்ன பின்னாடியா வச்சிருக்க? பாத்து ஓட்ட மாட்ட?”, என்று கத்திய படியே அவனை இடுப்பில் கை வைத்து முறைத்தாள். ரதி என்ன செய்வதென்று தெரியாமல் சிறு பயத்துடன் திவ்யா அருகில் நின்றாள்.
ஒன்றும் புரியாமல் அமைதியாக ஹெல்மெட்டைக் கழட்டிய படி அவளைப் பார்த்தான் சாணக்கியன். மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கிய படியே அவள் நிற்க அவள் கீச்சுக் குரலிலும் அவளது அழகிலும் ஒரு நொடி அவளையே ஆர்வமாக பார்த்தான்.
ரதி மற்றும் திவ்யா கூட அவனை திகைத்து தான் பார்த்தார்கள். வண்டியில் இருந்து அவன் இறங்கி நிற்க அவனது ஆறடி வளர்த்தியும் வளர்ச்சிக்கு ஏற்ற உடம்புமாக முறுக்கிய மீசையும் தங்க காப்பும் என பயம் கலந்த மரியாதையான தோற்றத்தில் தான் இருந்தான். அவனைக் கண்டால் நிச்சயம் பொறுக்கி என்றெல்லாம் தோன்றாது. அதுவும் அவன் அணிந்திருந்த வெள்ளை சட்டையும் கருப்பு பேண்ட்டும் அவனுக்கு அழகாக பொருந்தி இருந்தது.
ஆனால் அவன் பார்வை வரம்புக்கு மீறி ரசனையாக திவ்யா மீது படிய அவன் கையில் இருந்த துப்பட்டாவை பிடுங்கி தன் மேலே போட்டாள் திவ்யா. வண்டியில் சிக்கி இருக்கும் போது அவள் இழுத்ததால் லேசாக அது கிழிந்தும் போனது.
“ஏய் திவி வா டி போகலாம். வம்பு வேண்டாம்”, என்று அவள் கை பற்றி இழுத்தாள் ரதி.
“நீ இரு டி, இவனை எல்லாம் சும்மா விடக் கூடாது”, என்ற படி அவள் அவனை முறைக்க “ஹலோ மேடம், நான் ஒண்ணும் உங்க ஷாலை வேணும்னு பிடிச்சு இழுக்கலை. நீங்க ரோட்ல போகும் போது ஒழுங்கா போகணும். அதை விட்டுட்டு என் மேல பழி போடுவீங்களா? இந்த பொறுக்கி அது இதுன்னு மரியாதை இல்லாம பேசினா என்னோட பொறுக்கித் தனத்தை உன் கிட்ட காட்ட வேண்டியது இருக்கும். என்ன காட்டவா?”, என்று சாணக்கியனும் எகிறினான்.
உண்மையான கோபமா இல்லை அவர்களை போக விடாமல் செல்ல பேச்சு கொடுப்பதற்காக பேசினானா என்று அவனே அறிய வில்லை.
