Skip to content
Post Views: 3,206
அலங்காரம் முடிந்ததும் “ரேகா அவ்வளவு அழகா இருக்க. என் கண்ணே பட்டுடும் போல இருக்கு”, என்றாள் காயத்ரி.
“ஆமா ரேகா, உன் முகத்துக்கு எல்லா அலங்காரமும் சூட் ஆகுது. ரிசப்ஷன் முடிஞ்சதும் அம்மாவை உனக்கு திஷ்டி சுத்தி போடச் சொல்லணும்”, என்றாள் மஞ்சு.
Advertisement
“ரேகாவுக்கு மட்டும் இல்லை மஞ்சு. விக்ரமுக்கும் சுத்தணும். அவனும் இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கான். சரி சரி நேரம் ஆச்சு வாங்க போகலாம்”, என்று காயத்ரி சொன்னதும் மற்ற இருவரும் அவளுடன் சென்றார்கள்.
இவர்கள் வெளியே போன போது அங்கே ஆதித்யாவும் சுதாகரும் கிளம்பி இருந்தார்கள். சுதாகர் கையில் இருந்த அஞ்சலியை வாங்கிக் கொண்டே “போகலாமாங்க?”, என்று கேட்டாள் மஞ்சு.
Advertisement
Advertisement
“கல்யாணப் பொண்ணு தயாரா வந்துருச்சு. ஆனா உன் தம்பியை இன்னும் காணுமே? நாங்களும் அப்ப இருந்து நிக்குறோம். இவன் மட்டும் வரலை. அப்படி தானே மச்சான்?”, என்று ஆதியிடம் கேட்டான் சுதாகர்.
“ஆமா மஞ்சு, அப்பவே சீக்கிரம் கிளம்பி கீழ வாடானு சொல்லிட்டு தான் வந்தேன். பய இன்னும் காணலை. அம்மாடி ரேகா உன் புருசனுக்கு நீ என்ன சொக்குப் பொடி போட்ட? இன்னைக்கு முழுக்க ஒரு மார்கமாவே இருக்கான்”, என்று ஆதி சொன்னதும் ரேகாவுக்கு தான் அவர்கள் பேச்சு இம்ஸையாக இருந்தது.
Advertisement
இத்தனை நாள் வெட்கம் என்றால் எப்படி இருக்கும் என்று தெரியாதவள் இன்று முழுவதும் அவர்களின் கிண்டல் கேலிக்கு முகம் சிவந்து கொண்டே இருந்தாள்.
“காயத்ரி அண்ணி என்ன சொக்குப் பொடி உனக்கு போட்டாங்களோ அதையே தான் என் வீட்டுக்காரியும் எனக்கு போட்டுருக்கா போதுமா அண்ணா? அப்படி தானே ரேகா?”, என்று கேட்ட படியே அங்கே வந்த விக்ரம் ரேகா அருகில் நின்று அவளைப் பார்த்தான்.
தன்னிடம் பேசியவுடன் அவனை ஆவலாக நிமிர்ந்து பார்த்த ரேகாவுக்கு அவனை விட்டு கண்களை எடுக்கவே முடியவில்லை. அவனுடைய ஷெர்வாணி உடை அவனுக்கு அவ்வளவு அழகாக இருந்தது. அவன் தலை கலைத்து விளையாடும் முன் முடியை கலைத்து விளையாட ஆசை கொண்டாள் ரேகா.
அவள் பார்வையில் விக்ரமுக்கே மூச்சடைத்தது. இமைக்க மறந்து தன்னை வெறித்து பார்த்தவளை அப்படியே இழுத்து அணைக்க வேண்டும் போல இருந்தது அவனுக்கு.
“அம்மாடி, இவ இப்படி ஒரு பார்வை பாத்தான்னா கோபமாவது ஒன்னாவதுன்னு இவ கிட்ட சரண்டர் ஆகிருவேன் போலயே?”, என்று எண்ணியவன் அப்போது தான் அவள் முகத்தில் இருந்து பார்வையை விலக்கிப் அவளைப் பார்த்தான்.
எப்போதுமே அவளை அவனுக்கு பிடிக்கும் தான். ஆனால் இப்போது அவள் அழகு பிரம்மாண்டமாக இருந்தது. காலையில் திருமண சேலையில் இருந்ததை விட இப்போது அழகாக இருந்தவளை பார்த்து ரசித்துக் கொண்டே இருந்தான்.
சுற்றி இருந்தவர்களை மறந்து இருவரும் ஒருவரை ஒருவர் தின்று விடுவது போல பார்த்துக் கொண்டிருக்க ஆதி, சுதாகர், மஞ்சு, காயத்ரி நால்வரும் வந்த சிரிப்பை அடக்க முடியாமல் சத்தமாக சிரித்து விட்டார்கள்.
அவர்கள் சிரித்ததும் தான் இருவரும் தங்கள் பார்வையை விலக்கிக் கொண்டு அவர்களைப் பார்த்தார்கள்.
“அத்தை மாமா எல்லாம் மண்டபத்துக்கு போயிட்டாங்க. நாங்க நேரம் ஆச்சுன்னு புலம்பிட்டு இருந்தா நீங்க என்னடான்னா இப்பவே ரொமான்ஸ் ஆரம்பிச்சிட்டீங்க? ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வந்துருவோம். அதுக்கு அப்புறம் இப்படி பருகு பருகுன்னு பாத்துட்டு இருங்க போதுமா? இப்ப வாங்க கிளம்பலாம்”, என்று காயத்ரி சொன்னதும் விக்ரம் மற்றும் ரேகா இருவரும் அசடு வழிந்தவாறே காரில் ஏறினார்கள்.
முதலில் ஆதி கார் அங்கிருந்து செல்ல அவர்களுக்கு பின்னே மணமக்கள் அமர்ந்திருந்த கார் சென்றது. இப்போது விக்ரம் தனக்கு அருகில் இருந்த ரேகாவை திரும்பி பார்க்க வில்லை. அவன் பார்வை வெளியே நோக்கியே இருந்தது.
ஆனால் ரேகாவின் பார்வையோ விக்ரம் மேலேயே இருந்தது. தன்னை ஒரு பார்வை பார்த்து விட மாட்டானா? ஒரு வார்த்தை தன்னிடம் பேசி விட மாட்டானா? என்று எண்ணி தவித்துப் போனாள்.
“எல்லாரும் இந்த டிரஸ் நல்லா இருக்குன்னு சொல்றாங்க? ஆனா இவன் எதுவுமே சொல்லலையே?”, என்று அவளுக்கு வருத்தமாக இருந்தது.
மண்டபத்துக்கு வந்ததும் அனைவரும் அவள் உடையை அழகாக இருக்கிறது என்று பாராட்டினாலும் அவளைப் பாராட்ட வேண்டியவனோ திரும்பி கூட பார்க்க வில்லை. காலையில் ஜீப்பில் வைத்து அவன் பார்த்த காதல் பார்வைக்காக அவள் மனம் ஏங்கியது. தன்னுடைய அலங்காரத்தை அவன் ரசிக்க வேண்டும் என்று அவள் மனம் எதிர் பார்த்து ஏங்க, அவனோ அவள் புறம் திரும்பக் கூடாது என்று தன்னுடைய மனதுக்கு தடை போட்டிருந்தான்.
அவளை பார்த்து திரும்பச் சொல்லி, அவளை ரசிக்கச் சொல்லி, அவளிடம் அழகா இருக்கிறாய் என்று சொல்லச் சொல்லி அவன் மனது அவனை தூண்டி விட்டுக் கொண்டிருக்க அதை தடுத்து வைப்பதற்குள் திண்டாடிப் போனான் விக்ரம்.
“இருந்தாலும் இந்த ராட்சசி இவ்வளவு அழகா இருந்து தொலைக்க கூடாது. மனுசனுக்கு எவ்வளவு இம்ஸையாகுது தெரியுமா?”, என்று எண்ணிக் கொண்டு பெருமூச்சு விட்டான் விக்ரம்.
அவளோ அவனுடைய ஒற்றைப் பார்வைக்காக தவம் இருந்தாள். ஒரு பெண்ணின் அலங்காரம் அவளுடைய மனம் கவர்ந்தவனை மயக்க தானே? ஆனால் அவன் அவளைத் திரும்பிப் பார்க்கவே இல்லை என்னும் போது இதெல்லாம் வீண் என்று தோன்றியது.
“அவன் பாக்கலைன்னா என்ன? உனக்கு புடிச்ச அவனை நீ பாரு”, என்று அவள் மனது எடுத்துக் கொடுக்க சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் அவள் அவனை நிமிர்ந்து ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் ஆசைப் பார்வையை உணர்ந்தாலும் உணராதது போலவே இருந்தான் விக்ரம்.
விக்ரம் ரேகா திருமண வரவேற்பு மிகவும் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. மணமக்கள் இருவரும் அனைவரின் கண்ணையும் கவரும் படி, அழகான ஜோடியாக மேடையில் நின்றிருந்தார்கள்.
இருவர் மனதிலும் பல எண்ணங்கள் இருந்தாலும் அதை எல்லாம் தள்ளி வைத்து விட்டு அடுத்தவருக்காக புன்னகை முகமாக நின்றார்கள். திருமணத்திற்கு வந்த அனைவருமே பெர்பெக்ட் கப்புள், மேட் பார் ஈச் அதர்ஸ், அருமையான ஜோடி, என்று வித்தியாசமான வார்த்தைகளால் புகழும் போது இருவருக்குள்ளும் சந்தோஷ ஊற்று கொப்பளிக்கத் தான் செய்தது.
உறவினர்கள் மேடைக்கு வருவதும் அவர்களுக்கு பரிசு பொருள் கொடுத்து வாழ்த்தி விட்டு போட்டோ எடுப்பதுமாக இருந்தார்கள். அப்போது ஆதித்யா மற்றும் சுதாகர் இருவரும் மணமக்கள் பெயர் போட்ட கேக்கை கொண்டு வந்து மேடையில் வைத்து அவர்களை வெட்டச் சொன்னார்கள்.
ஒரு கத்தியை இருவரும் பிடிக்கும் போது அந்த தொடுகையில் இருவருக்குமே சிலிர்த்தது நிஜம். அதன் பின் ஆதி அவர்களிடம் ஒருவருக்கொருவர் ஊட்டி விடச் சொன்னான்.
ஒரு துண்டை எடுத்து அவள் உதட்டருகே கொண்டு சென்ற விக்ரமுக்கு அவளின் சிவந்த இதழ்களை தொட்டு தடவ ஆசை எழுந்தது.
“விக்ரம் உன் பீலிங்க்ஸ் அளவுக்கு மீறி போயிட்டு இருக்கு. கண்ட்ரோல் பண்ணு”, என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு அவள் உதட்டில் விரல் படாமல் ஊட்டி விட்டான்.
அதே போல் ஒரு துண்டை எடுத்து அவன் வாயில் வைத்த ரேகாவின் விரல் அவன் உதட்டை ஒரு முறை தொட்டு மீண்டது. அவள் விரல் தன்னுடைய உதட்டை தொட்டதும் ஒரு சிலிர்ப்பை உணர்ந்தான் விக்ரம்.
அதன் பின் மற்றவர்கள் அங்கிருந்து அகன்றதும் அவளை திரும்பி பார்த்தான். அவன் ஊட்டி விட்ட கேக்கில் ஒரு துளி அவள் உதட்டில் இருக்க “வாய்ல கேக் இருக்கு பார். அதை துடை”, என்றான் விக்ரம்.
கர்சீப் இல்லாமல் அவள் விரலால் எங்கே என்று தடவி தடவி அவனைப் பார்க்க, அதைப் பார்த்துக் கொண்டிருந்த விக்ரம் தன்னுடைய விரலால் அதை துடைத்தான். அவன் விரல் பட்டதும் தீப் பட்ட உணர்வு எழுந்தது ரேகாவுக்கு.
அவளுடைய கண்களில் அந்த மயக்கத்தை அவன் காண இருவருக்குமே அந்த முத்த நிகழ்வு நினைவில் வந்தது. அடுத்து உறவினர்கள் மேடைக்கு வர அவர்கள் உணர்வு தடை பட்டது.
அனைவரும் வந்து சென்றதும் மணமக்களின் அழகான தருணங்களை புகைப்படம் எடுத்த புகைப்படக் காரரும் கிளம்பி விட்டார். கடைசி வரை சங்கரன் குடும்பம் அங்கே வரவே இல்லை. அதை யாரும் கண்டு கொள்ளவும் இல்லை. ஊரில் இருந்து வந்த ரேகாவின் சொந்தங்களும் கிளம்பி விட்டனர். மற்ற படி இருந்த அனைவருமே விக்ரம் சொந்தங்கள் மட்டும் தான்.
வெளி ஆட்கள் அனைவரும் கிளம்பிச் சென்று விட வீட்டு ஆட்களும், முக்கியமான உறவினர்களும் மட்டுமே அங்கு இருந்தனர். கடைசியாக பாட்டு கச்சேரி போல அமைத்து இரண்டு குருப்பாக பிரிந்து பாட ஆரம்பித்தார்கள்.
காயத்ரியின் தங்கை உஷா, காயத்ரியின் சித்தி பெண்கள் இருவர், அதன் பின் சுதாகர் குடும்பத்தில் இருந்து வந்த இளைஞர்கள் ஆட ஆரம்பித்தனர். குட்டீஸ் அனைவரும் கூட டேன்ஸ் ஆடினார்கள்.
“சரி சரி நேரம் ஆயிருச்சு. இப்ப கடைசியா நம்ம பொண்ணும் மாப்பிள்ளையும் நமக்காக ஒரு சூப்பர் டேன்ஸ் ஆடுவாங்க”, என்று சுதாகர் அறிவிக்க அனைவரும் அவர்களை “ஆடுங்க ஆடுங்க”, என்று சொன்னார்கள்.
முதலில் எழுந்து கொண்ட விக்ரம் அவளை ஆசையாக பார்த்தான். அவன் எழுந்ததால் அவளும் எழுந்து அவன் அருகே நின்றாள். ஆனால் ரேகாவுக்கு கூச்சமாக இருக்க “எனக்கு டேன்ஸ் ஆடத் தெரியாது. இதெல்லாம் வேண்டாமே”, என்று அவனிடம் முணுமுணுத்தாள்.
“எப்பவுமே நீ உண்மையா இருக்க மாட்டியா? நீ நல்லா ஆடுவேன்னு எனக்கு தெரியும். வா, எல்லாரும் கேக்குராங்கள்ல?”, என்று சொல்லி தன்னுடைய கையை அவளை நோக்கி நீட்டினான் விக்ரம். “நான் டேன்ஸ் ஆடுறது இவனுக்கு எப்படித் தெரியும்? காலேஜ்ல வச்சு பாத்திருப்பானா? முதல்ல இவன் கிட்ட எங்க காலேஜ் தானான்னு கேக்கணும்”, என்று எண்ணிக் கொண்டே அவன் கையில் தன்னுடைய கரத்தை வைத்தாள் ரேகா.
அவள் கையோடு ஒரு கையை கோர்த்த விக்ரம் மற்றொரு கை கொண்டு அவள் இடையை பற்றினான். ரேகா அவன் இழுத்த இழுப்புக்கு சென்று ஆடினாள். அவர்களது ஆட்டத்தை அனைவரும் வியந்து பார்த்தார்கள்.
“வாராயோ வாராயோ காதல் கொள்ள……
பூவோடு பேசாத காற்றும் இல்லை…..
ஏன் இந்த காதலோ நேற்று இல்லை…..
நீயே சொல் மனமே….”, என்ற பாடல் அங்கே ஒலி பரப்ப பட்டது.
முதலில் தயங்கிய ரேகா கூட இந்த சந்தர்ப்பம் இனி வாழ்வில் திரும்ப வராது என்று உணர்ந்து சந்தோஷமாகவே அவனுடன் நடனம் ஆடினாள்.
அவர்கள் சுழன்று சுழன்று ஆட அனைவரும் மெய் மறந்து அவர்கள் நடனத்தை ரசித்தார்கள். சிறிது நேரத்தில் விக்ரமும் ரேகாவுமே அவர்களையே அறியாமல் ரசித்து ஆட ஆரம்பித்தார்கள். ஆடும் போது நடந்த அவனுடைய சிறு சிறு தொடுகை அவள் முகத்தில் வெட்கத்தை பூச, அவள் வெட்கத்தை கண்டவன் கண்களில் மின்னல் தெறித்தது.
பாட்டு முடிந்ததும், அவர்கள் நடனம் நின்றது தான். ஆனால் பாட்டு முடிந்தது கூட தெரியாமல் இருவரும் கைகளைப் பிடித்த படி அசையாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க அனைவரும் கை தட்டும் சத்தம் தான் அவர்களை நடப்புக்கு கொண்டு வந்தது. படக்கென்று விலகிக் கொண்டார்கள். அதன் பின் ஒவ்வொருவராக அவர்களைப் பாராட்ட அனைவருக்கும் புன்னகையை பதிலாக கொடுத்தான் விக்ரம். ரேகாவுக்கு யாரையும் நிமிர்ந்து பாக்க முடியாத படி கூச்சம் வந்தது.
அதன் பின் அனைவரும் உணவருந்த சென்றனர். உணவு நேரமும் கலாட்டாவாகச் சென்றது.
ஆதித்யாவும் சுதாகரும் அங்கேயும் அவர்களை மாற்றி மாற்றி ஊட்டி விடச் சொல்லி தங்களின் போனில் போட்டோ எடுத்தனர்.
ஒன்பது மணிக்கு பங்ஷன் முடியும் என்று நினைத்திருக்க அவர்கள் வீட்டுக்கு வரும் போது மணி பத்து ஆகியிருந்தது. அதன் பின் ரேகாவை குளிக்க சொன்னார்கள் மஞ்சுவும் காயத்ரியும். பின் அவளை கிண்டல் அடித்த படியே இருவரும் சேர்ந்து மிதமாக அலங்கரித்தார்கள்.
“போன உடனே கடிச்சு குதறப் போறான். இதுக்கு இந்த அலங்காரம் தேவையா?”, என்று எண்ணினாள் ரேகா. “உனக்கு நாங்க எதுவும் சொல்ல வேண்டியது இல்லை ரேகா. உனக்கே எல்லாம் தெரிஞ்சிருக்கும். ஆல் தீ பெஸ்ட்”, என்று சொல்லி அவள் கையில் பால் சொம்பைக் கொடுத்தாள் மஞ்சு.
“எந்த சேதாரமும் இல்லாமல் காலையில் வெளிய வர என்னோட வாழ்த்துக்கள் ரேகா”, என்று சொல்லி சிரித்தாள் காயத்ரி.
“அண்ணி, என் தம்பியை கிண்டல் பண்ணுறீங்களா? எங்க அம்மா காதுல விழுந்துரப் போகுது. அப்புறம் இன்னைக்கு நீங்க எங்க அண்ணன் கூட படுக்க முடியாது. எங்க அம்மா உங்களுக்கு நைட் முழுக்க என் விக்ரம் இப்படி, என் மகன் அப்படின்னு கிளாஸ் எடுப்பாங்க”, என்று சொல்லி சிரித்தாள் மஞ்சு.
“அட போ மஞ்சு, ஏற்கனவே விக்ரமுக்கு ரேகான்னா பைத்தியம். இப்ப அவனுக்கு லைசன்ஸ் வேற கிடைச்சிருச்சு. மேடைலே எப்படி கண்ணாலே ரெண்டு பேரும் பேசிக்கிட்டாங்கன்னு பாத்த தானே? அதனால தான் சொன்னேன்? அத்தை இருந்தா அத்தை கிட்டயே கேப்பேன்”, என்று சொல்லி சிரித்தாள் காயத்ரி.
“ஐயோ அக்கா, எனக்கே பயங்கர டென்சனா இருக்கு. பிளீஸ் நீங்க வேற ஓட்டாதீங்க?”, என்று சொன்ன ரேகாவுக்கு ஆறுதல் சொல்லி அவளை விக்ரம் அறைக்கு வெளியே விட்டார்கள்.
உள்ளே போவதற்கு முன் அவர்களைப் பார்த்து புன்னகைத்தாலும் சிங்கத்தை அதன் குகையிலே சந்திக்க சென்றால் என்ன உணர்வு வருமோ அப்படி ஒரு உணர்வு வந்தது ரேகாவுக்கு. மெதுவாக அந்த கதவை திறந்து உள்ளே சென்றாள். அறைக்குள் வந்தவளுக்கு பயம் தொண்டையில் அடைத்தது. கூடவே முதலிரவைப் பற்றிய எதிர்பார்ப்பும் கிளர்ந்தது.
சுற்றி அனைவரும் இருந்த அந்த ஹோட்டலில் வைத்தே தன்னை கட்டி அனைத்து முத்தமிட்டவன் தனி அறை கிடைத்தால் சும்மா விடுவானா என்ற எதிர்பார்ப்பு ரேகாவுக்கு எழுந்தது.
விழி பேசும்….
error: Content is protected !!