Skip to content
Post Views: 5,002
அந்தியூரான் – 13
இரு தினங்களுக்கு முன் குமாரியின் விஷேசம் எளிமையாக,வெகு நிறைவாக நடந்து முடிந்திருக்க.அடுத்த நாள் முழுமையும் அவளுக்கு வித, விதமான அலங்காரங்கள் செய்வதில் கழிந்தது.உறவினர்கள் எல்லாம் இன்று காலையில் தான் விடைபெற்று சென்று இருந்தார்கள்.தற்பொழுது சிவராமன்,சிவகாமி அவரது மகன்,மகள்கள் மட்டுமே இருந்தனர்.
இந்த இரு தினங்களும் விசாலாட்சி தனது கடமையை மட்டுமே செய்து விட்டு ஒதுங்கி கொண்டாள்.தேவைக்கு மீறி ஒருவரிடமும் அவள் பேசவில்லை. அதற்காக முகத்தைச் சுளித்துக் கொண்டும் இருக்கவில்லை.எப்படி சொல்வது? ஹ்ம்ம்!.. ஒதுக்கம் கொள்ளாமல் ஒதுங்கி நின்றாள் என்று தான் சொல்ல வேண்டும்.
Advertisement
சிவகாமிக்கு அவளது ஒதுக்கம் கருத்தில் நின்றாலும் சுற்றிலும் உறவுகளை வைத்துக் கொண்டு மருமகளிடம் பேச முடியவில்லை.
Advertisement
கிட்டிய தனிமையில் தான் சிவராமனிடம் புலம்பி கொண்டார்.அவரோ அதற்கும் மேல் மனைவியிடம் புலம்பி தள்ளினார், ‘சிவா இந்தப் பொண்ணுகிட்ட மட்டும் நம்பச் சறுக்கி தான் போறோம் போ’ தலையில் கை வைக்காத குறை தான்.
Advertisement
இப்போது எல்லாரும் கூடத்தில் அமர்ந்திருக்கச் சிவராமன், “தணிகா!..” மகன் இருக்கும் அறையை நோக்கி சத்தம் கொடுத்தார்.
Advertisement
“வரேன்ப்பா” என்றவன் கூடத்துக்கு வந்து அவரது அருகில் அமர்ந்து கொள்ள, சிவகாமியை பார்த்து வைத்தார் சிவராமன். அவரது பார்வை உணர்ந்து அடுக்கலைக்குள் வேலை செய்து கொண்டிருந்த விசாலாட்சியை அழைத்தார் சிவகாமி.
“விசாலாட்சி!”
“ஹான் சொல்லுங்க அத்தை”
“இங்க வா ” என்றதும் அடுப்பில் எதையோ செய்து கொண்டிருந்தவள். அருகில் வேலை செய்யும் ஆட்களிடம் அதனைக் கவனிக்கச் சொல்லிவிட்டுக் கூடத்திற்கு வந்தாள்.
“சொல்லுங்க அத்தை” அவரது கண் பார்த்து கேட்க அவளது நேர் கொண்ட பார்வையை கண்டு தடுமாறி, தனது கணவனைப் பார்த்து வைத்தார்.
“இங்க வாம்மா! இப்படி உட்காரு கொஞ்சம் பேசனும்” என்றதும் மாமியாருக்கும், நாத்தனார்களுக்கும் இடையில் உள்ள இடத்தில் அமர்ந்து கொண்டவள் சிவராமனை பார்த்து.
“சொல்லுங்க மாமா?”
“ஒன்னுமில்லைம்மா கொஞ்சம் மனசு விட்டு பேசலாம்னு தான்” அவருக்கும் குற்ற உணர்வு போலும் தடுமாறி கொண்டே பேசியவர் ஒரு பெருமூச்சுடன். குமாரி வயசுக்கு வந்த செய்தி வரவும்.எங்களுக்கு அப்படி ஒரு சந்தோஷமும், துக்கமும். அந்நேரம் எங்களுக்கு செல்வியை ரொம்பத் தேட வச்சுருச்சு. எங்க வீட்டுக்கு முதல் வாரிசு அவ தானே. அவளோட இழப்பை இன்னுமே எங்களால ஜீரணிக்க முடியல”
இன்றும் பெரிய பேத்தியின் அழகு வதனம் கண் முன் நின்று அவரை வதைத்தது போலும், கண்களை இறுக்க மூடி கொண்டார்.ராணியும் அவளைத் தொடர்ந்து அனைவரும் செல்வியின் நினைவில் மௌனமாகக் கண்ணீர் விட்டனர்.தணிகாசலத்துக்குப் பேச்சே வரவில்லை.அவனுக்கும் இந்த இரு தினங்களாக அவளது எண்ணம் தான்.குமாரி வேறு தற்போது அவளைக் கொண்டே இருக்க இன்னும் அதிகம் செல்வியைத் தேடினான்.
ஒருபெருமூச்சுடன் மேலும் தொடர்ந்தார்,”நீ குமாரிய பத்தி செய்தி சொல்லி அனுப்பவும் எங்களுக்குக் கையும் ஓடல காலும் ஓடல.உன் அத்தைக்கு சொல்லவே வேணாம்.இருந்த பரபரப்புல அவ எழுதுன சிட்டையில உன் அம்மா வீடு விட்டுப் போச்சும்மா.அவங்களுக்குச் சொல்ல கூடாதுனு எந்த எண்ணமும் இல்லை” சலனம் இல்லாமல் பார்த்தவள்.
“அதனால என்ன மாமா? “
“நீ சங்கடப்படாத மா”
“எனக்கு ஒன்னும் சங்கடம் இல்லை மாமா”பட் பட்டெனப் பதில் கொடுக்க அவளைப் புருவம் சுருக்கி பார்த்த அன்பு.
“சங்கடம் இல்லனா அப்புறம் ஏன் குமாரிக்கு முன்னுக்கு வந்து நிக்கல. பழைய சீலைய வேற உடுத்திகிட்டு யாரோ மாதிரி வேலை செய்யிற சாக்குல ஒதுங்கி, ஒதுங்கி போற” அன்பு கொஞ்சம் கோபம் போலவே கேட்டாள்.
அதுவரை அமைதியாக இருந்த விசாலாட்சி தனது சின்ன நந்தனாரை பார்த்து, “இதுக்கு பதில் சொன்னா பொல்லாப்பு தான் அண்ணி எதுக்கு விடுங்க”
“ஏய் இந்தா பொண்ணு! என்ன பேசுற நீ? அது என்ன பெரியவங்க கிட்ட படக்கு படக்குன்னு பேசி வைக்கிறது” பவளம் இன்னும் கொஞ்சம் குரலை உயர்த்தி நிற்க.
“உண்மைய தான் சொன்னேன். நான் எதாவது உங்ககிட்ட கேட்டேனா? இல்ல ஏன் என் வீட்டுக்கு சொல்லன்னு சண்டை கட்டி வச்சேனா? இல்ல தானே.நான் பாட்டுக்கு இருக்கேன். நீங்க தான் என்னை பேச்சுக்கு இழுக்குறீங்க.நீங்க பேச, பேச எனக்கு நல்லா கேட்கனும் போல இருக்கு” என்றதும் தணிகாசலத்துக்கு அத்தனை கோபம் வந்து.
“என்ன பேசுற நீ? பெரியவங்க கிட்ட எப்படி பேசனும்?”
“நான் யார்கிட்டையும் மரியாதைக் குறைவா பேசல நீங்க எல்லாரும் தான் கூப்பிட்டு வச்சு பேசி என் பொறுமைய சோதிக்கிறீங்க”
“விசாலாட்சி!” சிவகாமி அவளைக் கண்டிக்கும் தொனியில் அழைக்க.
“உங்களுக்கு என்ன அத்தை?” என்றதும் தான் தாமதம் தணிகாசலம் நாற்காலியை தள்ளி விட்டுக் கோபமாக எழுந்து கொள்ள.அவனது கையைப் பிடித்து அமர வைத்தார் சிவராமன்.தணிகா எழுந்த வேகத்தில் உண்மையில் விசாலாட்சி பயந்து விட்டாள்.
கணவனது தீடீர் செயலில் விசாலாட்சி கண்ணில் நீரை கண்டதும் சிவராமன் நொந்து கொண்டார்.அவர் பிள்ளையார் பிடிக்க எண்ணி வைக்க. இங்குச் சூழ்நிலை அதனை குரங்காக மாற்றிக் கொண்டு இருந்தது.
“அம்மாடி!” சிவராமன் எதுவோ சொல்ல போக.
“இப்போ என்ன மாமா? நீங்க கேட்டதுக்கு நான் பதில் சொல்லனும் அதானே? எல்லாத்துக்கும் பதில் சொல்றேன். அதுக்கு முன்னாடி ஒரு விஷயம் நல்லா கேட்டுக் கோங்க நீங்க தொடங்கி வைச்சீங்க நான் பேசுறேன்.அப்புறம் என்னை குறை பேசி சண்டை கட்டுறேன்னு என்னைச் சொல்ல கூடாது.
என்ன கேட்டிங்க? ஏன் நல்ல புடவை உடுதல்ன்னு தானே.உங்க பேத்தி என்னைப் படுத்தி வைக்கிற பாட்டுக்கு நான் தினமும் மூணு சேலை மாத்தி வைக்கிறேன்.
அவளுக்குக் குளிக்க நான் வேணும்.சாப்பாடு ஊட்டி விட நான் வேணும் இல்லனா காய் எல்லாம் சாப்பிட மாட்டா.நல்லா திருட்டுத் தனம் பண்ணி ஆள் அந்த பக்கம் போன உடனே சாப்பாட்டை கொட்டி வச்சுடுவா. அதுக்கு பயந்தே அவ கூட இருந்தேன்.அவளை தொட்டுட்டா எல்லாரும் குளிக்கச் சொல்லி சொல்றாங்க.
எல்லாத்துக்கும் மேல பச்சை முட்டை குடிக்க வச்சு இரண்டு நாள் வாந்தியான வாந்தி எடுத்து வச்சுட்டா.எதுக்கு வம்புனு தான் வீட்டுக்கு உடுத்துற மாதிரி உடுத்தி வச்சேன்.நீங்க எல்லாம் ஒவ்வொரு வேலையைப் பார்க்கறீங்க.அப்பா நான் தானே அவளைக் கவனிக்க முடியும்” என்றவளது விளக்கம் கேட்டுப் பவளம் கப்பென வாய் மூடி கொள்ள.
மற்ற பெண்கள் ஒருவரை, ஒருவர் பார்த்து கொண்டனர் “அம்மாவா நிக்கலன்னு சொல்றீங்க.முதல யாரு என்னை சபையிலே அம்மாவா நிக்க வச்சா? அத்தனை உறவும், உறுத்தும் நிக்கிற இடத்துல பெண்ணோடு அம்மா, அப்பா வந்து ஆசீர் வாதம் பண்ணுங்க சொன்னாங்க.
அப்போ கூட யாருமே என்னைக் கூப்பிடல.யாரோ ஒரு பெரியவர் சொன்னதை காதுல கேட்டு வேலை செஞ்சிட்டு இருந்தவ ஓடி வரேன். அதுக்குள்ள இவர் மட்டும் தனியா ஆசீர்வாதம் பண்ணிட்டு இருந்தார்.அதுக்கு மேல நான் போனா நல்லாவா இருக்கும்.
சாட்டை மட்டும் தான் இல்லை.முகத்தில் எந்த உணர்வையும் காட்டி கொள்ளாமல் சிறு சுணக்கம் கூட இல்லாமல் அனைவரையும் சுழட்டி அடித்தாள் விசாலாட்சி.
“அம்மாடி தங்கம்?” சிவகாமி சமாதானம் செய்ய முயல.
“அத்தை தப்பாவே நான் கேட்கல. நீங்க என் வீட்டுக்கு சொல்லாதது கூட எனக்குப் பெருசே இல்லை, ஆனா அதுக்கு உங்க மகன் அலட்சியமா ஒரு பதில் கொடுத்தார் பாருங்க. அந்த இடத்துல எப்படி முகத்தை திருப்பாம இருக்க முடியும் சொல்லுங்க?
அது என்ன எங்க குடும்பத்தைக் கொண்டு அத்தனை அலட்சியம் அவருக்கு.இராண்டாந்தரம் தானே அதை கொண்டு ரொம்பவே இளக்காரம் இருக்கு போல” என்றதும் அத்தனை பேரிளம் பெண்களும் அதிர்ந்தனர்.
“ஏன்மா என்ன பேச்சு பேசுற நீ? என் தம்பி ரொம்ப நல்லா மாதிரி.இந்த எண்ணமெல்லாம் அவனுக்கு கிடையாது நீயா கற்பனை பண்ணிக்காதா “வைரம் பதறிக் கொண்டு பேசினால்.
“அவரைப் பத்தி எனக்கு என்னங்க தெரியும்? இப்போ கொஞ்ச நாளா தான் பேச்சுப், பழக்கம், தொட்டு, தொடங்கினு போகுது.அதுக்கு முன்னாடி அவர் முகம் கூட என் மனசுல பதியல” இன்று ஒரு முடிவுடன் இருந்தால் போலும் அரிவை பேச்சோடு பேச்சாக குத்தி தான் வைத்தாள்.
“பேச்சுன்னு வந்தாச்சு இத்தனை நாள் என் மனசுல இருக்குறதை கொட்டி வச்சுடுறேன்.நான் சில கேள்விகள் கேட்டு என்னை விளக்கி வைக்கிறது நல்லதுன்னு தோணுது” எங்கே வார்த்தை முத்தி போயி விடுமோ என்று பயந்த சிவராமன்.
“அம்மாடி தப்பு எங்க மேல தாண்டா நீ எதுவும் பேச வேணாம்” சிவராமன் மருமகளை சமாதானம் செய்ய முயல.
“மாமா எனக்குப் பேசனும், கேட்கனும். அன்னைக்கு ஒரு பிரச்சனை என்னை வெளில போகச் சொன்னீங்க காரணமே தெரியாம போனேன் திரும்ப வந்த வான்னு சொன்னீங்க அதுக்கும் நான் எதுவும் பேசல.அதுக்காக எல்லா விஷியத்தலையும் நான் அப்படி இருக்க முடியுமா சொல்லுங்க? பேச்சுன்னு வரும் போதே பேசிடுறது நல்லது” என்றதும் மௌனமாகி போனார்.
“ஏன் மாமா? நீங்க கல்யாணம் பண்ணும் போது எதை எண்ணி என்னைப் பொண்ணு கேட்டீங்க?” என்றதும் சிவராமன் சங்கடமாக உணர.எப்படி என் தந்தையைக் கேள்வி கேட்கலாம் என்று தோரணையில் மனைவியை முறைத்து வைத்தான் தணிகாசலம்.
“சொல்லுங்க மாமா?”
“என் பேத்தியை நல்லா பார்த்துக்கனும், என் பையனும் நல்லா வாழனும்” என்றவர் விசாலாட்சியின் கண்ணைப் பார்க்க தவிர்த்து மறுபுறம் பார்வையை திரும்பி கொண்டார்.
“அது மட்டுமா மாமா? , ஆனா எங்க மாமா என்ன சொன்னார் தெரியுமா? நல்ல குடும்பம் வசதியா பொண்ணு வந்தா அவர் பேத்தியை விட்டுருமோனு பயம். அதான் உன்னைக் கேட்கறாரு சொன்னாரு.அப்போ இதுக்கு என்ன அர்த்தம்?”
மருமகள் பேச்சை கேட்டு சிறு அதிர்வு கொண்டு சிவகாமி கணவனைப் பார்க்க.அவர் பேச முடியாமல் திணறி கொண்டிருந்தார்.உண்மையில் அவரது எண்ணம் பேத்தி, மகன் மட்டுமே.அவர்களுக்கு தோதாகத் தான் பெண் தேடினார்.
என் வீட்டுல நல்ல சம்மந்தமா மட்டும் தான் பார்த்தாங்க.முதல், இரண்டுன்னு பார்க்கல.எனக்கும் பெரியவங்க சொல்றது தான். அதுனால நானும் எண்ணிக்கை கணக்கை பார்க்கல சரினு சொல்லிட்டேன். அதுக்கு பிறகான கல்யாண வாழ்க்கையை பத்தி நான் யோசிக்கவே இல்லை.
“ப்ச்! இந்தா பொண்ணு இரண்டு, இரண்டுன்னு ஏன் சொல்லுற”, அழகி சிவராமன் இளைய மகள் விசாலாட்சியை கடிந்து கொள்ள.
“அது தானே அண்ணி உண்மை” என்றவள் மீண்டும் மாமனாரிடம் திரும்பி அவருக்கு இரண்டாவது கல்யாணத்துக்கு விருப்பம் இல்லன்னா ஏன் மாமா என்னை கல்யாணம் பண்ணி வச்சீங்க? அப்படியே அவருக்கு நல்லது பண்ண எண்ணி வச்சா.
அவன் இப்படி தான் எந்த எதிர்பார்ப்பும் வச்சுக்காதீங்கன்னு சொல்லியே கல்யாணம் பண்ணிருக்கலாமே . இல்லையா கல்யாணத்துக்குப் பிறகாவது பேசி இருக்கலாம்.அவர் குணம் கண்டாவது என்னை நான் மாத்திட்டு இருந்துருப்பேன்.
எதுவுமே சொல்லாம நான் என்ன செய்யிறது சொல்லுங்க? கல்யாணம் பண்ணி விட்டுட்டு போனவர் ஒரு மாசம் கழிச்சு தான் வந்தார்.ஏன்னா அவருக்கு நான் பொருட்டே இல்லை.என்னைக் கொண்டும், என் குடும்பத்தைக் கொண்டும் ரொம்பவே அலட்சியம்.
அவர் மரியாதை கொடுத்தா தானே மாமா அவரைக் கொண்டு எல்லாரும் கொடுப்பாங்க.அவரே என்னைப் பொருட்டா பார்க்காத போது. உங்க கிட்ட பேசி என்னத்துக்குச் சொல்லுங்க?
ஊருல நீங்க பெரிய தலைக்கட்டு மருமக, மருமகன், பேரன், பேத்தி, கொள்ளு பேத்தின்னு அத்தனை சம்மந்தம் போட்டு இருக்கீங்க.
ஊருக்கே நல்லது பொல்லது பார்த்து இருக்கீங்க. அதுவும் போக அத்தனை பொண்ணுகளை கரையேத்தி இருக்கீங்க. நீங்க என் வீட்டை மறந்து வச்சது அதுவும் சம்மந்திய சிட்டையில விட்டதை எண்ணி வேடிக்கையா இருக்கு மாமா. என்னால நம்பவே முடியல” என்றதும் தாங்கவே முடியவில்லை சிவராமனுக்கு.
உண்மை சுடும் என்பதை தாண்டி அத்தனை கொதிப்பை வாரி தலையில் கொட்டி நின்று, அவருக்குக் காந்தியது போலும்.விசாலாட்சி பேச்சுக்கு கோபம் காட்டிய நாத்தனார் குழுவே இதற்கு என்ன பதில் என்பது போலத் திணறி நின்றது.
“சரி போனது போகட்டும் விடுங்க மாமா. இந்த பேச்ச இதோட நிறுத்திக்குவோம்.நீங்க பேச போயி தான் நான் பேசி வச்சேன் அப்பவும் சமாளிச்சுப் பார்த்தேன், ஆனா முடியல நானும் மனுசி தானே மாமா” என்றவள் எழுந்து கொண்டு.
“அடுப்புல கொஞ்சம் வேலை இருக்கு நான் பாக்குறேன்” என்றுவிட்டு செல்ல. அத்தனை அமைதி அங்கு.மௌனமும், மனைவியும் தணிகாசலத்தை சரியாக குறி பார்த்து தாக்கி நிற்க.அதன் கணம் தாளாமல் வெடுக்கென எழுந்து வெளியில் சென்று விட்டான்.
error: Content is protected !!