Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அந்தி சாயும் நேரம்

அந்தி சாயும் நேரம் 6 3

“இனி இப்படி பண்ணாத உமா. நீ பண்ணுறதுக்கு எல்லாம் உங்க அப்பா என்னைத் தான் திட்டுறார். சரி ரூம்ல போய் ரெஸ்ட் எடு”, என்று சொல்ல “சரி மா”, என்று சொல்லி விட்டு சென்றவள் கடைசி வரை தந்தையை நிமிர்ந்து பார்க்க வில்லை. அவரிடம் அவளால் பொய்ச் சொல்ல முடியாது என்பதால் தான் தாயைப் பார்த்து சொன்னாள்.

தன்னை நிமிர்ந்து கூட பார்க்காமல் செல்லும் மகளைப் பார்த்துக் கொண்டே இருந்தார் ராதாகிருஷ்ணன். உமா சொன்னது அனைத்தும் பொய் என்று அவருக்கு தெரியும். ஏனென்றால் அவள் தான் போனை அறையில் விட்டுச் சென்றிருக்கிறாளே?



Advertisement

மகள் சொன்ன பொய்யைப் பற்றி கேட்கவா வேண்டாமா என்ற யோசனையில் ஆழந்தார் ராதாகிருஷ்ணன். அறைக்குள் வந்த உமாவோ அங்கிருந்த போனைப் பார்த்தாள். “ஐயோ போனை வச்சிட்டு போய்ட்டோமே? அப்பா போனைப் பாத்திருந்தா நாம சொன்னது பொய்ன்னு கண்டு பிடிச்சிருப்பாங்க? கால் வேற பண்ணிப் பாத்துருக்காங்க. ஆனா ஒரு வார்த்தை கூட கேக்கலையே? ஏன்? ஒரு வேளை போனைப் பாக்கலையோ?”, என்ற குழப்பத்தில் ஆழ்ந்தாள்.

Advertisement

மகளுடைய மனம் புண் பட்டுவிடுமோ என்று எண்ணி அவர் கேட்காமல் விட அவளோ அவர் தான் சொன்ன பொய்யை நம்பி விட்டார் என்று எண்ணி நிம்மதியாக இருந்தாள்.

Advertisement

தந்தை மீதிருந்த பயம் போய் சிவனின் நினைவு வந்தது. மீண்டும் நாளை சென்று அவனைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்குள்ளே வந்தது. ஒரு வேளை அவள் இன்று மன்னிப்பு கேட்ட போது அவன் ஏதாவது திட்டி இருந்தால் விட்டிருப்பாளோ என்னவோ?

Advertisement

ஆனால் அமைதியாக இருந்த அவனுடைய உதாசீனம் அவனிடம் மீண்டும் பேச வேண்டும் என்ற எண்ணத்தை அவளுக்குள் விதைத்தது. அது மட்டும் அல்ல வெகு அருகாமையில் அவனைக் கண்ட போது அவன் கண்களில் இருந்த ஏதோ ஒன்று மீண்டும் அவனைப் பார்க்க வேண்டும் என்று அவளை முடிவு எடுக்க வைத்தது.

ஆனால் இது சரியா தவறா என்ற குழப்பத்தில் இருக்க அப்போது அவளுக்கு ஒரு புது எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.

யாரென்று தெரியாமல் குழப்பதில் அதை எடுத்து காதில் வைத்தாள் உமா. “நினைச்சேன் டி, வேற நம்பர்ல இருந்து கூப்பிட்டா எடுப்பேன்னு? அதான் அவங்க நம்பர்ல இருந்து கூப்பிடுறேன். பெரிய இவளா நீ? என்னமோ நாங்க யாருமே நீயா பேசுற வரைக்கும் பேசக் கூடாதுன்னு சொன்னியாமே?”, என்று கோபமாக கேட்டாள் அனிதா.

“அனிதா… சாரி டி. ஒரு டென்ஷன்ல?”

“என்ன டென்சனா இருந்தாலும் எங்க கிட்ட தானே சொல்லணும்? எங்களையே பேசக் கூடாதுன்னு சொல்லுவியா?”

“எம்மா தாயே தெரியாம சொல்லிட்டேன் போதுமா? மன்னிச்சிக்கோ”

“சரி பொழைச்சி போ. உனக்கு என்ன டென்ஷன்? அதைச் சொல்லு முதல்ல?”

“அது வந்து….”

“உண்மையைச் சொல்லணும் பேபி. நேர்ல இல்லைன்னு கதை விடக் கூடாது”

“ஒரு பெரிய தப்பு பண்ணிட்டேன் டி”, என்று ஆரம்பித்து அவள் செய்தது, அதன் பிறகு நடந்தது என அனைத்தையும் சொன்னாள் உமா.

“ஏன் டி இப்படி பண்ணின? நீ செஞ்ச சின்ன விஷயம் தான் அந்த அண்ணாவோட வாழ்க்கையில அவ்வளவு பெரிய பிரச்சனையை கிளப்பிருக்கு”

“தெரியாம செஞ்சிட்டேன் டி”

“அந்த அண்ணா மட்டும் அன்னைக்கு என் மாமனார் கிட்ட இந்த விஷயம் சொல்லிருந்தா என்னையும் எங்க வீட்ல திருடின்னு தானே யோசிச்சிருப்பாங்க?”, என்று அனிதா கேட்க உமாவுக்கே ஆம் அதில் அப்படி ஒரு கோணம் இருக்கிறது என்ற எண்ணமே வந்தது. கூடவே அவன் ஏன் தன்னைக் காட்டிக் கொடுக்க வில்லை என்ற கேள்வியும் அவளுக்குள் எழுந்தது.

“மன்னிச்சிரு அனிதா. நான் செஞ்சது தப்புன்னு புரிஞ்சிருச்சு டி. உன் வாழ்க்கையையும் கெடுக்க பாத்தேன்”

“சரி விடு, இனி கவனமா இரு”

“அவங்க கிட்ட மன்னிப்பு கேக்கணும் அனிதா”

“அதான் அப்பா  இதை இதோட விடுன்னு சொல்லிருக்காங்க தானே? நீ அப்பா பேச்சை மீறி அங்க போனதே தப்பு. எனக்கு தெரிஞ்சு நீ இதை விட்டுரு உமா. அந்த அண்ணா பக்கம் இருந்தும் நாம யோசிக்கணும்”

“இல்லை டி, எனக்கு ரொம்ப குற்ற உணர்வா இருக்கு. நாளுக்கு நாள் என்னோட குற்ற உணர்ச்சி அதிகமாய்ட்டு தான் போகுது. அன்னைக்கு மட்டும் அவங்க நான் தான் பர்சை எடுத்தேன்னு உன் மாமனார் கிட்ட சொல்லிருந்தா உன் வாழ்க்கையும் சேந்து கெட்டுருக்கும். நான் செஞ்ச தப்புக்கு அவங்க கிட்ட மன்னிப்பு கேக்கணும் டி”

“அதான் மன்னிப்பு கிடைக்காதுன்னு தெரியும் தானே? அப்புறம் என்ன? விடு”

“இல்லை, அவங்க வாயால மன்னிச்சிட்டேன்னு சொன்னதுக்கு பிறகு தான் எனக்கு நிம்மதி ஆகும்”

“உமா அவங்க திட்டின பிறகு அங்க போக கூடாது டா. உனக்கும் சுயமரியாதை இருக்கு தானே? நீ தப்பு செஞ்ச தான். ஆனா ஒண்ணுக்கு நாலு தடவை மன்னிப்பு கேட்டுட்ட? அதோட விட்டுரு”

“இல்லை அனிதா எனக்கு சுயமரியாதையை விட அவங்க கிட்ட இருந்து கிடைக்குற மன்னிப்பு தான் வேணும்”, என்று உமா சொல்ல அனிதா அவளையே அறியாமல் அந்த வார்த்தையை கேட்டாள்.

“ஏன் டி அந்த அண்ணாவை லவ் பண்ணுறியா என்ன? ஏன் கேக்குறேன்னா பொண்ணுங்க சுயமரியாதையை கூட தியாகம் செய்யுறது லவ்வர் கிட்டயும் புருஷன் கிட்டயும் மட்டும் தான்”, என்று அவள் கேட்க “சே சே அப்படி எல்லாம் இல்லை”, என்று அவசரமாக பதில் சொன்னாள் உமா. ஆனாலும் உள்ளுக்குள் ஏதோ ஒரு குறுகுறுப்பு எழுந்தது.

“அப்படின்னா சந்தோஷம் தான். சரி டென்ஷன் ஆகாம இரு. கால் பண்ணினா அட்டன் பண்ணு. இல்லைன்னா வேற நம்பர்ல இருந்து கூப்பிடுவோம்”, என்று சொல்லி விட்டு அவள் போனை வைத்ததும் உமா யோசனையில் ஆழ்ந்தாள்.

“நான் அவங்களை லவ் பண்ணுறேனா? லவ்னா ஒருத்தங்களைப் பிடிக்குதுன்னு அர்த்தம். எனக்கு அவங்களை பிடிச்சிருக்கா? நான் அவங்க கிட்ட மன்னிப்பு கேக்குறது நான் செஞ்ச தப்புனால தானே? இதுல லவ் எங்க இருந்து வந்துச்சு?”, என்று குழம்பி தலையைப் பிடித்துக் கொண்டாள்.

ஏனோ அவனைப் பார்க்க வேண்டும் போல ஒரு எண்ணம் வந்தது அவளுக்கு. அவசரமாக அனிதாவின் திருமணப் புகைப்படங்களில் அவன் உருவத்தை தேடினாள்.

“லூசு இந்த போட்டோக்களை எல்லாம் எடுத்ததே அவன் தான். அப்புறம் எப்படி அவன் போட்டோ இதுல இருக்கும்?”, என்று அவளை கேள்வி கேட்டது மனசாட்சி.

“அதானே?”, என்று எண்ணியவளுக்கு ஒரு எண்ணம் வர அவசரமாக தனலட்சுமிக்கு அழைத்தாள்.

அவள் போனை எடுத்த தனலட்சுமி அவளை திட்ட ஆரம்பிக்க அனைத்தையும் பொறுமையாக வாங்கிக் கொண்டவள் “அனிதா வீட்ல இருக்கும் போது உன் போன்ல நிறைய போட்டோ  எடுத்தோமே? அதை எல்லாம் எனக்கு அனுப்பு”, என்றாள்.

“அதெல்லாம் எதுக்கு டி? அதான் அனி கல்யாண போட்டோவையே அனுப்பிட்டாளே?”

“லூசு, சொல்றதை செய். அனிதா வீட்ல, அவ கல்யாணத்துல எடுத்தது எல்லாம் வேணும். நீ எடுத்த செல்பி எல்லாம் கூட எனக்கு வேணும். ஒண்ணுமே மிஸ் ஆகக் கூடாது. எல்லாத்தையும் எனக்கு உடனே அனுப்பு”, என்று சொல்லி போனை வைத்தாள். அதற்கு பின் அவள் அனுப்புவது வரைக்கும் பரபரப்பாக இருந்தாள்.

அவனது ஒரு புகைப்படமாவது கிடைத்து விடாதா என்று அவளுக்கு ஆசையாக இருந்தது.

தனலட்சுமி அனுப்பிக் கொண்டே இருக்க இவள் அனைத்திலும் அவனை தேடிக் கொண்டிருந்தாள். அவனை எதற்காக இப்படி தேடுகிறோம் என்று கூட அவள் உணர வில்லை.

ஒரு வழியாக அவள் அனைத்தையும் அனுப்பி முடிக்க அதில் ஒரே ஒரு புகைப்படத்தில் மட்டும் அவன் தெளிவாக விழுந்திருந்தான். “யாகூ”, என்று கத்திய படி துள்ளி அமர்ந்தாள் உமா. அவள் கண்கள் அந்த புகைப்படத்தை சந்தோசமாக பார்த்தது.

அந்த புகைப்படத்தில் தோழிகள் நால்வரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு பின்புறம் சிறு சிரிப்புடன் நின்றிருந்தான் சிவன். அவன் யாரைப் பார்த்து சிரித்தான் என்றெல்லாம் தெரியாது. ஆனால் அவன் முகம் ஏனோ அந்த சிரிப்பில் அவ்வளவு அழகாக இருப்பது போல பட்டது.

அன்று அவன் அவளைத் தாங்கிப் பிடித்து விட்டு அவள் அங்கிருந்து சென்றதும் அவனுக்கு அவளைப் பார்க்க வேண்டும் போல இருந்ததால் அவசரமாக அவள் போன பாதையில் சென்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!