Skip to content
Post Views: 2,984
அன்பு – 16
“அஞ்சலி!!! இன்னைக்கு எப்போ வரைக்கும் கிளாஸ் இருக்கு உனக்கு??” என மகளிடம் கேட்டுக்கொண்டே அவளுக்கான உணவுடன் சமையற்கட்டில் இருந்து வெளியே வந்தார் பொற்கொடி.
Advertisement
ஊஞ்சலில் சாவதானமாக அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே, பொற்கொடி கொண்டு வந்த தோசையை கொஞ்சம் கொஞ்சமாய் உண்டு கொண்டிருந்த கவி,
“எதுக்கு மா??? எப்பயும் போல தான்.. அஞ்சு மணி ஆகிடும்!! அப்பறம் என் ப்ரெண்ட்ஸ் எல்லார் கூடவும் கேண்டீன் போயிட்டு வீட்டுக்கு வர ஆறு மணி ஆகிடும்!!!” என்றவள்,
Advertisement
Advertisement
“ம்மா!! பெப்பர் கொஞ்சம் தூக்கலா போட்டு ஒரு முட்டை தோசை!!!” என்று சப்தமாக குரல் கொடுத்தாள்.
அப்போது தன் அறையில் இருந்து குளித்துத் தயாராகி வந்த சேதுராமன்,
Advertisement
“என்ன?? காலேஜ் எல்லாம் எப்படி போகுது!?? செட் ஆகிருச்சா உனக்கு??” என விசாரித்துக்கொண்டே அன்றைய தினசரியை எடுத்துப் புரட்டினார்.
“ரொம்ப சீக்கிரம் கேட்டுட்டீங்க!!!” என மகள் முணுமுணுத்தது காதில் விழுந்தாலும், மனிதரின் கவனமெல்லாம் தினசரியின் மீது தான்.
“நல்லா தான் போகுது!!! நிறைய பிரண்ட்ஸ் செட் ஆகிட்டாங்க.. சீனியர் எல்லாம் கூட ஜாலியா பழகுறாங்க!!” என இயல்பாய் கவி பகிர்ந்து கொள்ள,
“நல்லது!!!” என்ற சேதுராமன்,
“பார்த்து பழகணும் அஞ்சலி!!! கூடப் படிக்கிறவங்க எல்லாரும் உனக்கு ஃப்ரெண்ட்ஸ் ஆகிட முடியாது!!! நம்மகிட்ட பழகுறதுக்கு கூட தகுதி, தராதரம் முக்கியம்.. ஸ்கூல்ல இருந்த மாதிரி இன்னும் விளையாட்டுப் பிள்ளையாவே இருக்காத!!!” என குரலில் கொஞ்சம் கடுமையைக் கூட்டி அவர் எச்சரிக்க,
அதுவரை இதமாய் இருந்த மனநிலை சட்டென மாறிப்போனது கவிக்கு!!
‘ இவரெல்லாம் திருந்தவே மாட்டாரா??’ என கடுப்புடன் மனதிற்குள் நினைத்துக்கொண்டவள், அவருக்கு பதிலேதும் சொல்லவில்லை.
“ஆமா, அந்தப்பையன் இப்போ எங்க படிக்கிறான்??” என பிரபஞ்சனைக் குறிப்பிட்டு சேதுராமன் கேட்க,
கவிக்கு அதிர்ச்சியில் விழிகள் விரிந்து கொண்டது!!
‘ இப்போ உண்மையை சொன்னா அதுக்கு வேற ஏதாவது அட்வைஸ் கொடுப்பாரே!! உண்மையை சொல்லலாமா வேண்டாமா??’ என அவள் தனக்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்த நேரம்,
கையில் மகள் கேட்ட முட்டை தோசையுடன் வந்த பொற்கொடி,
“ஸ்கூல் விட்டு போனதும், பெரிசா யார்கூடவும் அவ காண்டேக்ட்லயே இல்லை.. அவளுக்கு எப்படித் தெரியும்.. அந்தப்பையன் வாங்குன மார்க்குக்கு இந்நேரம் சென்னை போயிருப்பான் படிக்க!!” என அவருக்குத் தோன்றியதைச் சொல்லி, அவரை அறியாமலே மகளைக் காப்பாற்றி இருந்தார்.
“சரி!! சரி!! சீக்கிரம் சாப்பிட்டு கிளம்ப சொல்லு உன் மகளை!! எனக்கு இன்னைக்கு ஒரு ரிஜிஸ்ட்ரேஷன் இருக்கு!! நான் கிளம்புறேன்” என சொல்லிக்கொண்டு சேதுராமன் கிளம்பிவிட,
“அப்பாடா!!” என நிம்மதிப் பெருமூச்சுவிட்ட கவியும் வயிறார உண்டுவிட்டு, தன் ஸ்கூட்டியில் கல்லூரிக்குக் கிளம்பினாள்.
எப்படி கடந்தது என்று தெரியாமலே, அவர்கள் கல்லூரியில் சேர்ந்து மூன்று மாதங்கள் ஓடி விட்டிருக்க, எப்போதும் போல் உற்சாகத்துடன் கவி அந்த கல்லூரி வளாகத்திற்குள் வந்து தன் வண்டியை நிறுத்தினாள்.
“ஹேய் அஞ்சலி!!!”
“ஹாய் அறுந்த வாலு!!!”
என எதிர்ப்பட்ட தெரிந்த முகங்களைக் கண்டு இரண்டு நொடிகள் பேசிவிட்டு முன்னேறிய கண்கள், அவளின் கனவுகளுக்கு சொந்தக்காரனைத் தான் நாலாபுறமும் தேடியது!!
இன்னும் ஒரு வாரத்தில், அவர்கள் கல்லூரியில் இன்டர் காலேஜ் கல்ச்சுரல்ஸ் நடைபெற இருக்க, பல மாவட்டங்களிலும் இருந்து மாணவர்கள் அதில் கலந்து கொள்ள இருந்தனர்.
அதில் நடைபெறும், பாட்டுப் போட்டியில் பிரபா வெற்றி அடைய வேண்டும் என விரும்பியவள், அவர்களின் கல்லூரியில் முறையாக சங்கீதம் கற்றுக்கொண்டிருந்த ஒரு சீனியர் மாணவியிடம் பிரபாவை இந்த போட்டிக்கு தயார்படுத்த உதவி கேட்டதன் பயனாய், கடந்த ஒரு வரமாக, காலையும் மாலையும் பிரபாவிற்கு பயிற்சி நடந்து கொண்டிருக்கிறது!!
இன்றும் அதற்குத் தான் அவனைத் தேடியபடி கவி முன்னேற,
“கவி!!!!” என மென் புன்னகையுடன் அவளைக் கண்டு ஓடி வந்தான் பிரபஞ்சன்.
“பிரபா!!! சீக்கிரமே வந்துட்டியா நீ??”
“ஆமா கவி!! இன்னைக்கு பேப்பர் போடுற வேலை கொஞ்சம் சீக்கிரமே முடிஞ்சது!! அதான் வந்துட்டேன். நிரோஷா அக்கா மேத்ஸ் டிபார்ட்மெண்ட் பேக்சைட் வர சொன்னாங்க!!! வா போகலாம்” என அவன் முன்னே நடக்க,
“ஒழுங்கா வீட்டுக்கு போய் பிராக்டிஸ் பண்றியா நீ??” என கேட்டுக்கொண்டே கவியும் அவனைப் பின் தொடர்ந்தாள்.
“ம்ம்!! பண்றேன் கவி!! எங்க நான் பாடுறதைப் பார்த்து பழசெல்லாம் ஞாபகம் வந்து அம்மா எங்க பீல் பண்ணுவாங்களோன்னு நினைச்சேன்.. பட் நீ சொன்னது தான் சரி கவி!! அவங்க ரொம்ப சந்தோஷப்பட்டாங்க.. அவங்களை விட நல்லா பாடுறேன்னு சொல்லி பாராட்ட கூட செஞ்சாங்க தெரியுமா??” என சிறுபிள்ளையின் உற்சாகத்துடன் கண்கள் மின்ன கூறிய பிரபாவை, கண்கள் மிளிரப் பார்த்த கவி,
“ஆண்ட்டி மட்டும் இல்லை பிரபா!! இந்த உலகமே உன்னை பாராட்டும்!! நீ நல்லா வருவ டா!!!” என்றாள் மனதார.
“எல்லாமே உன்னால தான் கவி!!” என உளமாற அவனும் கூற,
போலியாய் சலித்துக்கொண்ட கவி,
“ஆரம்பிச்சுட்டியா?? விட்டா இந்த பூமி சுத்துறதே என்னாலன்னு சொல்லுவ நீ!!” என்றாள் கேலியுடன்.
பேசிக்கொண்டே இருவரும் கணித துறை வளாகத்தின் பின்புறம் வந்திருக்க, அங்கே அவர்களுக்காக காத்திருந்தாள், அவர்களின் கல்லூரியின் தற்போதைய இசைக்குயில் நிரோஷா.
“அடடே!!! சொல்லும் பொருளும் போல உங்க ரெண்டு பேரையும் பிரிக்கவே முடியாது போலயே பசங்களா!!! எப்போப்பாரு ஒன்னா தான் சுத்த வேண்டியது!!” என கேலியுடன் அவர்களை வரவேற்றவள்,
“என்ன பிரபா!! நான் சொன்ன சாங், பிராக்டிஸ் பண்ணியா?? அந்த பல்லவியில கொஞ்சம் இம்ப்ரூவைஸ் பண்ண சொன்னேனே!!” என பொறுப்பான ஆசிரியையாக விசாரித்தாள்.
“பண்ணேன் அக்கா!!” என்ற பிரபஞ்சன், பாடியே காண்பிக்க,
அதில் திருப்தியாக புன்னகைத்த நிரோஷா,
“சூப்பர் மேன்!!! கண்டிப்பா இந்த முறை கப் நமக்குத் தான்!!” என பிரபாவின் குரலில் மீதுள்ள நம்பிக்கையில் உறுதியிட்டு கூறினாள்.
மற்றவர்களிடம் இருந்து பிரபாவிற்கு கிடைக்கும் பாராட்டில் அவனை விட கவியே அதிகமாய் அகமகிழ்ந்து போக, அதை கவனித்த நிரோஷா,
“அவனைப் பாராட்டுனா உன் மூஞ்சி எதுக்கு சுவிட்ச் போட்ட லைட் மாதிரி இவளோ பிரைட் ஆகுது!!! என்ன சம்திங் சம்திங்கா??” என சரியாக நூலைப் பிடித்தாள்.
“அதெல்லாம் எதுவும் இல்லை அக்கா.. கவியை தப்பா நினைக்காதீங்க!!” என கவியை முந்திக்கொண்டு பிரபா அவசரமாய் மறுக்க,
இருவரையும் ஒரு மார்க்கமாக பார்த்து வைத்த நிரோஷாவும், அந்த விஷயத்தை விட்டுவிட்டு பாட்டிற்கு தாவினாள்.
“பிரபா!! ஐ அம் சோ சாரி!! கப்பில் ரவுண்ட்ல உன்கூட என்னால பாட முடியாது.. சீனியர்ஸ் எல்லாம் ஒன்னா பாடுறதா பிளான்.. சோ உனக்காக உன் கூட சேர்ந்து பாட, உங்க இயர்லயே பிரீத்தின்னு ஒரு பொண்ணு செலக்ட் பண்ணியிருக்கேன்.. உன் அளவு இல்லைனாலும் அவளும் நல்லாவே பாடுறா.. இந்த ஒன் வீக் டிரெய்னிங் கொடுத்தா இன்னும் பெட்டரா பெர்ஃபார்ம் பண்ணுவா!! ஈவ்னிங் அவளும் வருவா.. அப்போ உங்களுக்கு இன்ட்ரோ தரேன்.. இப்போ எனக்கு லேப்க்கு லேட் ஆச்சு நான் கிளம்புறேன்!!” என கடகடவென விஷயத்தை ஒப்பித்தவள், தன் பையை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட,
கவியும் பிரபாவும் மெதுவாக தங்கள் வகுப்பிற்கு நடைபோட்டனர்.
மாலை எப்போதும் போல், ஆடிட்டோரியத்தில் பிரபாவிற்கு பயிற்சி போய்க் கொண்டிருக்க, கவியும் அங்கேயே அமர்ந்து ரசனையுடன் அவளின் பிரபா பாடுவதை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது,
“சாரி சீனியர்!! லேட் ஆகிடுச்சு!!!” என ஓடிவந்ததில் மூச்சுவாங்க ஒரு பெண் வந்து நிற்க,
“எவ அவ??” என மெதுவாய் திரும்பிப் பார்த்த கவிக்கு,
அங்கே அழகே பொறாமைப்படும் பேரழகுடன் ஒருத்தி வந்து நிற்பதைக் கண்டு புருவங்கள் வியப்பில் உயர்ந்தது!!
“பார்ரா!! நம்ம காலேஜ்ல இவ்வளவு அம்சமான பொண்ணா?? இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்லையே!!!” என கவி யோசித்துக் கொண்டிருக்க,
“ஹேய் பிரீத்தி!! வா வா வா!! ஏன் இவ்வளவு லேட்??” என புன்னகையுடன் அந்தப்பெண்ணை லேசாய் கட்டிப்பிடித்து வரவேற்ற நிரோஷா,
“ஹேய் பிரபா!! இதான் பிரீத்தி!! நீங்க ரெண்டு பேரும்தான் கப்பிலா சேர்ந்து பாடப் போறீங்க!!” என கவியின் தலையில் இடியை இறக்கினார் அவர்!!
“என்ன!!! இவ என் பிரபா கூட ஜோடியா பாடப் போறாளா???” என காதலுக்கே உரிய இயல்பான பொறாமை உணர்வு தலைதூக்க,
வியப்பில் விரிந்திருந்த கவியின் கண்கள் இப்போது கடுப்பில் சுருங்கியது.
அதிலும், பிரபஞ்சன் ஒரு மரியாதைக்காக அந்தப் பெண்ணைப் பார்த்து மெலிதாய் சிரித்து வைக்க,
அவ்வளவு தான், கவிக்கு இங்கு வயிறு பற்றி எரிந்தது!!!
‘ என்கிட்ட சிரிக்கணும்னா மட்டும் காசு கேட்பான்.. இப்போ பாரு அவளைப் பார்த்ததும் பல்லைக் காட்டுறதை!!’ என பொறாமையில் பொசுங்கியவாறு கவி அமர்ந்திருக்க,
அவளின் பொறுமையை சோதிப்பதைப் போல், பிரீத்தியும் சிரிப்புடன் பிரபாவின் கைகளைப் பற்றி குலுக்கி தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.
“இதோ!! இது கவி!! என் பெஸ்ட் பிரண்ட்!!” என அப்போதும் பிரபஞ்சன் மறக்காமல் கவியையும் அவளுக்கு அறிமுகப்படுத்திவைக்க,
“ஓஹ் அப்படியா!! ஹாய்” என பேருக்கு கவியிடம் சொன்ன ப்ரீத்தியின் கண்கள் இன்னும் ஆர்வமாய் பிரபாவின் மீது தான் படிந்திருந்தது.
அதைக்கண்டு கவியின் மனம் கொந்தளிக்க, கொஞ்சம் கொஞ்சமாக தன் நிதானத்தை இழந்து கொண்டிருந்தாள் அவள்.
சற்று நேரத்தில், நிரோஷாவின் வழிகாட்டுதலில் பிரபாவும் பிரீத்தியும் அந்த காதல் பாடலை அவ்வளவு அழகாய்ப் பாடியிருக்க,
இருவரின் குரலும் சேர்ந்து செய்த மாயத்தில், நிச்சயம் யாராய் இருந்தாலும் மெழுகாய் உருகியிருப்பர்.
ஆனால், கவிக்கு தான் நெருப்பில் அமர்ந்திருப்பது போல் உடலெல்லாம் எரிந்தது!!
என் பிரபா, என்னை விட்டு எங்கே போய்விடப்போகிறான் என இத்தனை நாளும் இறுமாப்புடன் சுற்றிக் கொண்டிருந்த கவிக்கு, இன்று அத்தனை பயம்.
ப்ரீத்தியின் அதீத அழகா, இல்லை அவ்வப்போது பிரபாவின் மீது ஆர்வமாகப் பதியும் அவள் பார்வையா? இல்லை இருவருக்கும் பொதுவாக இருக்கும் பாடும் திறமையா?? எதுவெனத் தெரியாவிட்டாலும், கவியின் காதல் கொண்ட மனதை மிகவும் பதித்தாள் பிரீத்தி என்பது மறுப்பதற்கல்ல!!!
“இந்த நிரோஷா அக்காவே பாடுனா தான் என்ன?? எங்கிருந்து இவளை வேற பிடிச்சிட்டு வந்து என் உயிரை வாங்குறாங்க!!!” என முறைப்புடன் மேடையில் பாடிக்கொண்டிருந்த பிரீத்தியை முறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் கவி.
அதிலும், பாடல் பயிற்சி எல்லாம் முடிந்து, சம்பிரதாயமாக பிரபாவை லேசாய் கட்டியணைக்க பிரீத்தி முற்பட, தன் இருக்கையில் இருந்து கோபத்தில் எழுந்தே விட்டாள் பெண்!!!
ஆனால் அவளை முந்திக்கொண்ட பிரபா, சங்கோஜத்துடன் கட்டியணைக்க வந்தவளை தடுத்து கைமட்டும் குலுக்கிவிட்டு இறங்கிவிட,
பிரபாவை சுவாரசியமாக தொடர்ந்த ப்ரீத்தியின் பார்வையில் கவிக்கு பற்றிக்கொண்டு வர,
சுற்றத்தை சுத்தமாக கருத்தில் கொள்ளாமல்,
“வா பிரபா!!” என அவன் கைகளைப் பற்றி கிட்டத்தட்ட இழுத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டாள்.
“ஹேய் இரு கவி!! சொல்லிட்டு போகலாம்!!” என பிரபா கத்தியது எல்லாம் அவள் காதிலே விழுகவில்லை.
கிட்டத்தட்ட வெளிவாசல் வரைக்குமே பிரபாவின் கத்தல் எதற்கும் பதிலளிக்காமல் இழுத்துக்கொண்டு வந்துவிட்ட கவிக்குள் அத்தனை தவிப்பு!!!
ஒரு சூழ்நிலையை சரியாக யோசித்து, கையாளும் பக்குவமும் வயதும் இல்லாத கவிக்கு, ஏதோ இப்போதே பிரபா அவளை விட்டு கைநழுவிச் சென்றுவிடுவது போல் பயம் தோன்ற, பின் விளைவுகள் பற்றி சிறிதும் சிந்திக்காமல்,
“ஐ லவ் யூ பிரபா!!!” என தேங்காய் உடைத்ததைப் போல் பட்டென தன் காதலை வெளிப்படுத்திவிட்டு பதிலுக்காக அவன் முகத்தைப் பார்த்திருந்தாள்!!
அவள் செய்கையை விளங்கிக்கொள்ள முடியாமல் இருந்த பிரபாவிற்கு, சில நொடிகள் சென்றே அவள் கூற்று உரைக்க, அதிர்ச்சியில் விதிர்விதிர்த்து போய்விட்டான்.
“கவி!! என்ன சொன்ன இப்போ!!!” என மீண்டும் உறுதிபடுத்திக்கொள்ள பிரபா வினவ,
“நான் உன்னை லவ் பண்றேன்னு சொல்றேன்டா மடையா!! புரியுதா இல்லையா உனக்கு??” என கோபத்தில் தன்னை மீறி கத்திவிட, அங்கு சென்று கொண்டிருந்த சில மாணவர்களின் கவனம் இவர்களின் மேல் திரும்பியது.
“ப்ச்!! கவி!! மெதுவா பேசு!!!” என அதட்டிய பிரபா,
“என்னாச்சு உனக்கு?? நல்லாதான இருந்த??” என தன் அதிர்ச்சியை சமாளித்துக்கொண்டு அவன் சாதாரணமாக வினவ முனைய,
“நல்லாதான் இருந்தனா?? என்ன சொல்ல வர?? இப்போ பைத்தியமா ஆகிட்டேனா?? அந்த பிரீத்தையை பார்த்ததும் நான் உனக்கு பைத்தியமா தெரியுறேனா??”
தான் பேசுவது அபத்தம் என்று உணர்ந்தும், உணர்ச்சிவசத்தில் வார்த்தைகளை விட்டாள் கவி.
“கவி!! என்னம்மா?? எனக்கு நிஜமா ஒன்னுமே புரியலை!! நீ ஃபர்ஸ்ட் ரிலாக்ஸ் ஆகு.. தண்ணி குடி!!!” என தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்த பிரபாவை, வெட்டவா குத்தவா என்பதுபோல் பார்த்துவைத்த கவி,
“எனக்குத் தேவை உன்னோட பதில்!! இந்த பாட்டில் இல்லை!! ஒழுங்கா பதில் சொல்லு!!” என இப்போதே பதில் தெரிந்தாக வேண்டும் என கைகளைக் கட்டிக்கொண்டு நின்றுவிட்டாள் கவி.
“என்ன பதில் கவி தெரியணும்!! புரிஞ்சு தான் பேசுறியா கொஞ்சமாச்சும்!!” என இழுத்துவைத்த பொறுமையுடன் பிரபா கேட்க,
“நான் புரிஞ்சு தான் பேசுறேன்.. எனக்கு நீ வேணும்.. அவ்ளோதான்!!” என்றவள், பிரபாவின் கண்ணுக்கு பொம்மைக்கு அடம்பிடிக்கும் சிறுமியாகவே தெரிய, நெற்றியைத் தேய்த்துக் கொண்டவன்,
“கவி!! என் கதை எல்லாம் கேட்டும் எனக்கு காதல் மேல எல்லாம் நம்பிக்கை இருக்கும்னு நீ நினைக்கிறயா??”
“என்ன பெரிய பொல்லாத கதை!!! அந்த பூமேஷ் நாதாரி மாதிரி நீ யாரையும் ஏமாத்திட்டு போக மாட்ட.. அண்ட் நானும் ஆண்ட்டி மாதிரி யாரும் ஏமாத்திட்டு போனா அழுதுட்டு இருக்க மாட்டேன்.. அதுனால ஆண்ட்டி கதையை வச்சு, உன் லைஃபை நீ டிசைட் பண்ணாத.. உனக்கு என்னைப் பிடிக்கும் தான??” என அவள் அவனை சரிகட்டிவிட முயல,
“அய்யோ கவி!! உனக்கு எப்படி புரிய வைக்கன்னு தெரியலை!! எனக்கு இந்த காதல் மேல எல்லாம் சுத்தமா நம்பிக்கை இல்லை கவி!!! அண்ட் உனக்கும்.. எனக்கும்.. செட் ஆகாது.. புரிஞ்சுக்கோ.. இது என்னைக்கும் நடக்காது!!” என அவன் சேதுராமனை மனதில் வைத்துக் கூற,
அதை உணர்ந்து கொண்ட கவியும்,
“என் அப்பா பேசுனது எல்லாம் மனசுல வச்சுக்காத!! அவர் கிடக்காரு.. அதெல்லாம் கொஞ்சம் நான் அழுதா என் விருப்பத்துக்கு சம்மதிச்சிருவாரு.. நீ உனக்கு என்னை பிடிச்சிருக்கா இல்லையான்னு மட்டும் சொல்லு!!” என அவள் அதிலேயே நிற்க,
சேதுராமனை அவள் தவறாக எடைபோடுகிறாள் என உணர்ந்த பிரபாவிற்கும், இப்போது என்ன சொன்னாலும் கவியின் மண்டையில் ஏறாது எனப் புரிந்தது.
“உன்னைப் பிடிக்காம இருக்குமா கவி!!! ஆனா அது வேற..” என அவன் ஏதோ சொல்லப் போக,
“பிடிக்கும்ல.. அது போதும்!!!” என புன்னகையுடன் அவன் கைகளைப் பற்றிக்கொண்ட கவி,
“வேற யாரையும் என்னை பிடிச்ச அளவுக்கு பிடிக்குமா??” என பதில் தெரிந்தாலும் அவனிடம் மீண்டும் கேட்க,
என்னாயிற்று இவளுக்கு என குழம்பிப் போன பிரபாவும் இல்லை என்பதாய் தலையசைக்க,
“இது போதும்!!!!” என்றவளின் புன்னகை இன்னும் பெரிதாய் விரிந்தது.
“நான் உன்னை லவ் பண்றேன்.. உனக்கும் என்னைப் பிடிக்கும்.. அந்த பிடித்தம் ஒருநாள் காதலா மாறும்.. அதுவரைக்கும் நம்ம இப்படியே இருக்கலாம்.. ” என அவனுக்கும் சேர்த்து அவளே முடிவெடுத்துக் கூற,
இவளை என்ன செய்து மாற்றுவது எனப் புரியாமல் பிரபாவும் மையமாக தலையை ஆட்டிவைத்தான்.
“காதல் தான் என்கிறாள் காரிகை!!
நட்பு தான் என்கிறான் நாயகன்!!
இறுதியில் வெல்லப்போவது காதலா?? நட்பா??”
error: Content is protected !!