Skip to content
Post Views: 2,798
அன்பு – 17
“பயமா இருக்கு கவி!!! நான் போகலை!!”
Advertisement
என அங்கே திரண்டிருந்த மாணவர் கூட்டத்தைக் கண்டு மிரண்ட விழிகளுடன் நின்றிருந்த பிரபஞ்சனின் கைகளை ஆதரவாய் பற்றிய கவி,
“பிரபா!!! என்னைப்பாரு!!!” என அதட்டி அவனின் கவனத்தை தன் புறம் திருப்பியவள்,
Advertisement
Advertisement
“உன்னால முடியலைனா வேற யாரால முடியும்??? ஃபர்ஸ்ட் உன்னை நம்பு நீ!!! உன்னால முடியும் டா பிரபா!!!” என அவன் கண்களைப் பார்த்து தைரியம் அளித்தவள்,
“இங்க இருக்க எல்லாரோட திறமையும் கண்டுபிடிக்க தான் நம்ம ரிஜிஸ்டர் பண்ண பாட்டை பாடாம, வேற பாட சொல்லியிருக்காங்க.. உன் திறமை மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு!!! அதே நம்பிக்கையை நீயும் உன்மேல வை!!! கண்டிப்பா நல்லா பாடுவ!! நான் உன் கூடவே இருக்கேன்.. பயப்படாம போய் பாடு!!!” என மென்மையாக புன்னகைத்தாள்.
Advertisement
கவியின் வார்த்தைகள் அவனுக்கு கொஞ்சம் தெம்பளித்தாலும்,
“திடீர்னு பாடச்சொன்னா என்ன பாட்டு பாட நான்??” என கலக்கமாகவே கேட்டான்.
“என்னைப்பத்தி பாடு!!!” என கவி குறும்புடன் கண்ணடிக்க,
“ப்ச்!! விளையாடாத கவி!! எனக்கு ரொம்ப பயமா இருக்கு!!” என பிரபா முதலில் இருந்து ஆரம்பித்து விட,
“விளையாடுறேனா?? டேய் நான் சீரியஸா கேட்கிறேன்.. எனக்காக ஒரு பாட்டு பாடு!!!!”
“ஹம்ம்!! உன்னை நினைச்சா, பைத்தியம் பைத்தியம், பாத்துக்கோ வைத்தியம்ன்னு தான் பாடணும்!!” என சிரியாமல் பிரபா கேலி செய்ய,
“அடிங்!! உன்னை!!!” என அவனை தன் கைப்பையை வைத்து அடி போட்டவள்,
“வாய் கூடிருச்சு பிரபா உனக்கு!!!” என முறைத்துக்கொண்டே சொன்னாள்.
அதற்குள், அடுத்து பாடுவதற்காக பிரபாவை அழைப்பு விடுத்திருக்க,
அதுவரை புன்னகை பூசியிருந்த பிரபாவின் முகத்தில் இப்போது பயம் ஒட்டிக்கொண்டது.
“கவி!!!!” என விட்டால் அழுதுவிடுபவன் போல் தயக்கம் கலந்த பயத்துடன் நின்றிருந்த பிரபாவை ஒரு முடிவுடன் பார்த்தவள், அடுத்த நொடி அவனை மெதுவாய் அணைத்திருந்தாள்.
நிச்சயம் காதல் கொண்ட அணைப்பு அல்ல!!!
ஒரு தாய்ப்பறவை தன் குஞ்சுகளை தனக்குள் அடைகாத்து பாதுகாத்துக்கொள்வது போல் ஒரு அரவணைப்பு அது!!!!
அவனின் பயத்தைப் போக்கி, உனக்காக நான் இருக்கிறேன் என நம்பிக்கையை அவனுள் விதைக்கும் விகல்பமில்லா ஒரு அணைப்பு!!!
“உன்னால முடியும்!!! நீ நல்லா பண்ணுவ பிரபா!! நான் எப்பவும் உன் கூட தான் இருக்கேன்.. பயப்படாம நீ போ!!!” என அவனுக்கு தைரியமளித்தவள்,
அங்கு திக்பிரம்மை பிடித்தது போல் நின்றிருந்த பிரபாவை நகர்த்திக்கொண்டு மேடைக்கு சென்றவள், அவனை அங்கே விட்டுவிட்டு மீண்டும் கண்களால் அவனுக்கு தைரியம் வழங்கியவள், அவன் பார்வையில் படும்படி கீழே முதல் வரிசையில் சென்று நின்று கொண்டாள்.
பிரபாவிற்கு உள்ளுக்குள் ரயில் ஓடுவது போல் பயத்தில் இதயம் தடத்தடப்பது வெளியே கேட்க, எதிரே நின்ற மாணவர் திரளைக் கண்டு கண்ணைக்கட்டிக் கொண்டு வந்தது!!!
இறங்கி ஓடி விடுவோமா என்று கூட அவனுக்குத் தோன்றிவிட்டது, இருந்தும் கவியின் வார்த்தைகள் அவனுக்குள் ரீங்காரமாய் கேட்டுக்கொண்டே இருக்க, முயன்று மனதை அமைதிப்படுத்தியவன், அவனின் கவிக்காக, அவனின் வெற்றியை காண ஏங்கும் அவனின் கவிக்காக மட்டுமே, தன் பயத்தையும் மீறி அன்று அங்கு பாடத் துவங்கினான்!!!
“நெஞ்சோடு கலந்திடு
உறவாலே காலங்கள் மறந்திடு
அன்பே”
என்று கவியைப் பார்த்துக்கொண்டே மெதுவாய் அவன் பாடத்துவங்க, கவிக்கு உற்சாகம் தாளவில்லை!!!
“சூப்பர் பிரபா!! பாடு பாடு!!!” என கீழே இருந்தே அவள் கத்தி ஊக்கப்படுத்த,
பிரபாவும் கவியைப் பார்த்துக்கொண்டே, அவனின் கவிக்காகவே அந்த பாடலை மேலும் பாடினான்.
“ஒரு பார்வை
பார்த்து நீ நின்றால்
சிறு பூவாக நான்
மலர்வேனே ஒரு
வார்த்தை இங்கு நீ
சொன்னால் வலி போகும்
என் அன்பே அன்பே”
என அவன் உணர்ந்து பாட, கவிக்குள் மெதுவாய் ஒரு மழைச்சாரல் தூவியது!!!
“என் வாழ்க்கை
நீ இங்கு தந்தது அடி உன்
நாட்கள் தானே இங்கு
வாழ்வது காதல் இல்லை
இது காமம் இல்லை இந்த
உறவுக்கு உலகத்தில் பெயரில்லை“
என கவிக்கும் அவனுக்குமான உறவை அவன் பாட்டாகவே பாடி கவிக்கு புரியவைத்துவிட, அவனின் மனது புரிந்தாலும் தனக்கு அவன் மேல் இருப்பது காதல் தான் என்பதில் கவி மிகத் தெளிவாகவே இருந்தாள்.
மற்ற யாரையும் பார்த்தால், பயத்தில் எங்கே பாடுவதை நிறுத்திவிடுவோமோ என நினைத்த பிரபா, முழுப்பாடலையும் கவியைக் கண்டு மட்டுமே சிறப்பாய் பாடி முடித்திருக்க,
அவனின் திறமைக்கு பரிசாய் அரங்கம் அதிரும் கைத்தட்டுக்களை பெற்றான் பிரபா.
“யாஹூ!!!!!” என கவி உற்சாக மிகுதியில் விசிலடித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவள், யாரைப்பற்றியும் கவலை கொள்ளாமல்,
“சூப்பர் டா பிரபா!!! கலக்கிட்ட!!! வேற லெவல் டா!!!” என கத்திக்கொண்டே மேடையை நோக்கி ஓடினாள்.
தனக்காக அவள் கண்களில் தெரியும் அந்த மகிழ்ச்சியில் பிரபா இதமாய் கரைய,
“தேங்க் யூ கவி!!!” என ஓடிவந்தவளின் கரம் பற்றி அவளை நிதானத்திற்கு கொண்டுவர முயன்றான் அவன்.
நினைத்தது போலவே, அந்த போட்டியில் பிரபா வெற்றி பெற்று விட, அதற்கு கவி செய்த ஆரவாரத்தை அந்த கல்லூரி வளாகம் என்றைக்கும் மறக்காது!!!
பிரபாவை தலையில் தூக்கி வைத்து சுற்றாதது தான் குறை!! அந்த அளவு அவனை கொண்டாடித் தீர்த்துவிட்டாள்.
அடுத்து ஜோடியாக சேர்ந்து பிரீத்தியும், பிரபாவும் பாடுவதைக் காணும்போது, பொறாமையில் பொசுங்கினாலும், அந்த போட்டியிலும் பிரபா வெற்றி பெற்றுவிட, கவியைக் கையில் பிடிக்கமுடியவில்லை!!
பிரபா வெற்றி பெற்றதற்காக தெரிந்தவர்கெல்லாம் கவி உணவு வாங்கிக் கொடுத்து கொண்டாட,
கவி செய்யும் அலப்பறைகளை கனிவுடன் பார்த்துக்கொண்டிருந்த பிரபாவிற்கு, இத்தனை அன்பைப் பெறுவதற்கு நான் என்ன செய்தேன் இந்தப் பெண்ணிற்கு எனும் கேள்விக்கு விடை தான் தெரியவில்லை.
கவியை தன் வாழ்வில் அனுப்பியதற்காக மீண்டும் மனதார கடவுளுக்கு நன்றி தெரிவித்தபடி பிரபா அவளையே பார்த்தபடி நின்றிருக்க, அவன் அருகில் நெருங்கிய நிரோஷா,
“அவளை விட்டுடாத பிரபா!!” என்றாள் கவியின் மீது பார்வையைப் பதித்தபடி!!
அவரின் கூற்று விளங்காமல் பிரபா பார்க்க,
“ஷி இஸ் சம்திங் ஸ்பெஷல்!!! அவ கண்ணுல உனக்கான காதல் அப்பட்டமா தெரியுது!!! உனக்காக என்ன வேணும்னாலும் செய்வா பிரபா அவ!!! இப்படி ஒரு பொண்ணு கிடைக்கிறது!! ரொம்பவே ரேர்!! அவளை விட்டுடாத!! அட் எனி காஸ்ட்!!!” என உறுதியாக அவள் சொல்ல,
“அச்சோ நீங்க தப்பா புரிஞ்சிட்டு இருக்கீங்க கா!! நாங்க வெறும் ப்ரெண்ட்ஸ் தான்!!” என பிரபா அவசரமாய் மறுத்தான்.
மெலிதாய் புன்னகைத்த நிரோஷா,
“நான் பொண்ணுடா பிரபா!! எனக்குத் தெரியும்!! கவி உன்னை நிச்சயம் பிரண்டா மட்டும் பார்க்கலை!!! ஷி லவ்ஸ் யூ டீப்லி!!! கொஞ்சம் யோசி அதைப்பத்தி!!” என தெளிவாய் இருந்த பிரபாவின் மனதில் கல் எறிந்துவிட்டு சென்றுவிட்டாள்.
குழம்பிய மனதுடன் பார்வையைத் திருப்பிய பிரபாவின் கண்களில்பட்டது,
“டேய்!! மங்கூஸ் மண்டை!!! சொன்னேன்ல பிரபா தான் வின் பண்ணுவான்னு!! என் பிரபா ஜெய்ச்சுட்டான் பார்த்தியா??” என கண்கள் மின்ன அவர்கள் வகுப்பு மாணவனிடம் பிரபாவின் புகழ் பாடிக் கொண்டிருந்த கவி தான்.
அவன் பெயரை உச்சரிக்கும் போதே பெண்ணவளின் கண்களில் தோன்றும் மின்னல், பிரபாவின் மனதில் ஏதோ தடம் புரளச்செய்ய, பட்டென பார்வையைத் திருப்பிக் கொண்டான்.
அவளின் காதல் புரிந்தாலும், நிதர்சனமும் அவனின் நிலைமையும் மேலும் அதைப்பற்றி சிந்திக்கவிடாமல் தடைசெய்ய,
‘ இனி கண்ட சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது!! கவி என்றும் என் தோழி தான் ‘ என தனக்குள் மீண்டும் அழுத்தமாக பதிய வைத்துக்கொண்டான் பிரபஞ்சன்.
இரண்டு வருடங்கள் எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல் இனிமையாகவே கடந்துவிட,
மூன்றாம் வருடத்தில் கால் எடுத்து வைத்திருந்தனர் பிரபாவும் அவன் கவியும்.
இந்த இரண்டு வருடத்தில், கவியின் வற்புறுத்தலில் கல்லூரியில் நடக்கும் பாடல் போட்டியில் பிரபா பங்குகொண்டாலும், அதைத்தாண்டி வெளியே சென்று முயற்சிக்க அவனின் பயம் அனுமதிக்கவில்லை.
ஆனாலும், பிரபாவின் திறமையை உலகிற்கு காட்டிவிடும் தன் முயற்சியைக் கைவிடாத கவியும், எங்கு பாடல் போட்டி என கேள்விப்பட்டாலும் அங்கே பிரபாவை அழைத்துச்செல்ல மிகவும் போராடிக் கொண்டுதான் இருக்கிறாள் இன்றுவரை!!
பாடல் ஒருபுறம் சென்றாலும், படிப்பில் இங்கேயும் முதலிடம் வகிக்கும் பிரபாவைக் கண்டு ஏக பெருமை தான் பெண்ணுக்கு!!
இன்னும் கவியின் காதலை பிரபா ஏற்றுக்கொள்ளா விட்டாலும், நாளுக்கு நாள் அவளின் அன்பிற்கு அடிமையாகிக் கொண்டிருந்தான் அந்த ஆண்மகன்.
நாட்கள் எப்போதும் போல அழகாகச் செல்ல, அவர்களின் மகிழ்வுக்கு ஆயுள் குறைவு என்பது போல் வந்தது அந்த செய்தி!!!
அன்றும் எப்போதும் போல் கல்லூரிக்கு உற்சாகத்துடன் கிளம்பி வந்த கவி, பிரபாவிற்காக வாசலிலேயே வெகுநேரம் காத்துக்கொண்டிருந்தாள்.
பிரபாவிடம் கைபேசி இல்லாத காரணத்தால், எப்போதும் போல், முக்கியமாக ஏதாவது பேச வேண்டுமென்றால், பிரபாவின் வீட்டின் எதிர்ப்புறம் இருக்கும் கடைக்கு அழைத்து பேசுவது தான் கவியின் வழக்கம் என்பதனால், அந்த எண்ணுக்கே அழைப்பு விடுக்க எண்ணி அவள் கைபேசியை எடுத்த நேரம், ஒரு புதிய எண்ணில் இருந்து அவளுக்கு அழைப்பு வந்தது!!
“ஹலோ!!! யாருங்க???”
“க.. க.. கவி!! நான்.. நான் தான் பிரபா கவி!!!” என அழுகையுடன் தெளிவில்லாமல் வந்து விழுந்த பிரபாவின் குரலில், கவிக்கு நிமிடத்தில் ஏதேதோ எண்ணங்கள் தோன்றி பதைபதைக்க வைக்க,
“பிரபா!! பிரபா!! என்னாச்சு .. என்னாச்சு டா?? உனக்கு ஒன்னும் இல்லைல?? எங்க இருக்க நீ இப்போ??” என்றாள் பதற்றத்துடன் கவி.
“அம்மா.. அம்மா கவி!!!” என அதற்கு மேல் கூற முடியாமல் அழுகையில் தொண்டையடைக்க அவன் திணறுவது கவிக்கும் கண்கள் கலங்க செய்ய,
“பிரபா!! ரிலாக்ஸ் டா!! ஆண்ட்டிக்கு என்ன?? “
அழுகையைக் கட்டுப்படுத்த அவன் மிகவும் போராடுவதை கவியால் உணர முடிந்தது இங்கே.
“பிரபா!! நான் வீட்டுக்கு வரவா?? ஆண்ட்டிக்கு என்ன?? “
“அம்மா.. ஹாஸ்பிடல்.. ஒரே ரத்தம் கவி!! பயமா இருக்கு கவி!!” என கோர்வையில்லாமல் அவன் பிய்த்து பிய்த்து கூறியதில் பிரபாவின் அம்மாவிற்கு ஏதோ என ஓரளவு விஷயத்தை யூகித்த கவி,
“ஒன்னும் இல்லை!! ஒன்னும் இல்லை பிரபா!! ஆண்ட்டிக்கு சரி ஆயிடும்.. நான் வந்துட்டே இருக்கேன்.. எந்த ஹாஸ்பிடல்?” என கேட்டுக்கொண்டே வண்டியை எடுத்த கவிக்கு இப்போதே பிரபாவிடம் சென்று அவனை மடிதாங்கிக் கொள்ளும் உத்வேகம்.
“கவர்மென்ட் ஹாஸ்பிடல்” என அவன் சொல்வதற்குள்ளேயே அத்தனை அழுகை!!!
“ஓகே பிரபா!! நான் பத்து நிமிஷத்துல வந்துடுவேன்!!!” என்றவள், தன் வாழ்நாளிலே அத்தனை வேகமாய் அன்று தான் வண்டியை செலுத்தியிருந்தாள்.
செல்லும் வழியெங்கும்,
“ஆண்ட்டிக்கு ஒன்னும் ஆகக்கூடாது!! பிரபா நல்லா இருக்கணும்!!” எனும் வேண்டுதல் மட்டும் தான் பெண்ணிடம்.
விரைவாகவே மருத்துவமனையை அடைந்துவிட்டவளுக்கு, எங்கே சென்று பிரபாவைத் தேடுவது என சுத்தமாக பிடிபடவில்லை.
அவள் வாழ்நாளில் முதன்முறையாக அரசு மருத்துவமனைக்குள் காலெடுத்து வைத்திருக்க, அதன் சூழல் எல்லாம் சுத்தமாக கருத்தில் பதியவில்லை, மாறாக அவளின் பிரபா இந்நேரம் எப்படித் துடித்துக்கொண்டிருப்பானோ எனும் எண்ணம் தான் அவள் மனதெங்கும் வியாபித்துக்கிடந்தது.
எங்கெங்கோ விசாரித்து அவசர சிகிச்சைப் பிரிவை கவி அடைந்த சமயம், வேரொடிந்த மரமாய் தரையில் சரிந்து அமர்ந்து அழுது கொண்டிருந்தான் பிரபா!!!
அவனின் அந்தத் தோற்றம் பெண்ணவளின் நெஞ்சைப் பிசைய,
“பிரபா!!!” என அழைத்துக்கொண்டே அவனிடம் சென்று மண்டியிட்டு அமர்ந்தவள்,
“ஒன்னும் இல்லை!! ஆண்ட்டி வந்துடுவாங்க பாரு!!!” என ஆறுதலாய் பேச,
தன் துக்கத்தைப் பகிரக்கூட துணையின்றி தவித்தவனுக்கு, கவியின் வரவு மேலும் கண்ணீரை உண்டுபண்ண,
“கவி!!!!” என பெரும் கேவலுடன் ஆறுதல் தேடும் சிறு மழலைப் போல அவளிடம் தஞ்சமடைந்திருந்தான் பிரபஞ்சன்.
பரிவாய் அவன் முதுகை தட்டிக் கொடுத்துக்கொண்டே மெதுவாக என்ன நடந்ததென்று விசாரித்திருந்தாள் கவி.
தமிழினி என்றும் போல வேலைக்குச் செல்லக் கிளம்பி அவர்களுக்கான வேனில் ஏறக் காலெடுத்து வைத்த சமயம், தமிழினி ஏறுவதை கவனிக்காத ஓட்டுனர் வண்டியை எடுத்திருக்க, அதில் நிலைதடுமாறிய தமிழினி அப்படியே பின்னால் சாய்ந்திருந்தார்.
அவரின் கெட்ட நேரம் அங்கே கூரிய கல் ஒன்று கிடக்க, அது தமிழினியின் பின் மண்டையை பதம் பார்த்திருந்தது. சம்பவ இடத்திலேயே ரத்தம் அதிகமாய் போயிருக்க, கொஞ்சம் கொஞ்சமாக நினைவிழந்திருந்தார் அவர்.
என்ன செய்வது எனத்தெரியாமல் அதிர்ச்சியில் திக்பிரம்மை பிடித்ததைப் போல் நின்றிருந்த பிரபாவை, தமிழினியுடன் வேலை செய்யும் சிலர் தான் இங்கே கொண்டு வந்து சேர்க்க உதவியிருந்தனர்.
இங்கு வந்து சேர்த்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, எவ்வித சரியான பதிலும் மருத்துவரிடத்தில் இருந்து இன்னும் வரவில்லை.
அனைத்தையும் அழுகையினூடே கொஞ்சம் கொஞ்சமாக சொல்லி முடித்த பிரபா,
“பயமா இருக்கு கவி!!! அம்.. அம்மா வேணும் எனக்கு!!!” என சிறுபிள்ளையாய் தேம்ப, கவிக்கு நெஞ்சடைத்தது.
‘ கடவுளே!!! என் பிரபாக்கு மட்டும் எதுக்கு இத்தனை கஷ்டத்தைக் கொடுத்துட்டே இருக்க… அவன் பாவம்!!! என்ன கஷ்டம்னாலும் எனக்கு கொடு!! அவன் நல்லா இருக்கணும்!!’ என கடவுளுக்கு கோரிக்கை வைத்தவள், பின் அங்கே வேலை செய்யும் செவிலியரிடம் தமிழினியின் நிலைபற்றி விசாரித்தாள்.
“இப்போதைக்கு ரத்தம் வராம நிப்பாட்டிருக்காங்க மா.. ஆனா பொழைக்கிறது கஷ்டம் தான்.. நீங்க வேணா பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போங்க..” என அவர் கூறவும், எதைப்பற்றியும் கவலை கொள்ளாத கவியின் எண்ணம் முழுவதும் தமிழினியை மீட்டு பிரபாவிடம் கொடுத்துவிட வேண்டும் என்பதிலே இருந்தது.
“கவி!! பிரைவேட் ஹாஸ்பிடல்ல பார்க்க. .. காசு இல்லை கவி!!!” என பெற்ற அன்னையைக் காப்பாற்றக்கூட முடியாத தன் நிலையை அறவே வெறுத்தவனாக பிரபாவின் முகம் வேதனையில் கசங்கிப் போனது!!
“காசெல்லாம் பிரச்சனை இல்லை!! நான் பார்த்துக்கிறேன்!!” என அவனை சமாளித்தவள், தமிழினியை மதுரையில் அமைந்திருந்த அந்த மிகப்பிரபலமான மருத்துவமனையில் அடுத்த ஒரு மணி நேரத்தில் சேர்த்தவள், தன்னுடைய கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த மூன்றரை பவுன் செயினை விற்று, அதன் மூலம் சிகிச்சைக்கான தொகையை செலுத்தியிருந்தாள்.
இதற்கு மேல் எவ்வளவு செலவானாலும், தன் தந்தையிடமிருந்து வாங்கியாவது தமிழினியைக் காப்பாற்றிவிடலாம் என அவள் பெரும் நம்பிக்கையுடன் காத்திருக்க,
அவளின் செய்கையில், வாயடைத்துப் போயிருந்த பிரபா,
“கவி!! உனக்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரியலை!!” என நன்றியுணர்வில் கையெடுத்துக் கும்பிடப் போக,
“ப்ச்!! பிரபா!! என்னைத் திட்ட வைக்காத!! நான் என்ன யாரோவா?? உனக்கு நான் செய்யாம வேற யாருடா செய்வா??” என உரிமையுடன் அதட்டலாக ஒலித்த கவியின் குரல் பிரபாவின் மனமெங்கும் எதிரொலித்துக்கொண்டே இருக்க, தனக்காக ஒருத்தி இருக்கிறாள் எனும் எண்ணத்தை அவன் மனதில் அழுத்தமாக பதித்திருந்தது.
அங்கும் ஸ்கேன் செய்ய, மருந்து வாங்க என ஒவ்வொன்றுக்கும் கவி தான் பம்பரமாய் சுழன்று கொண்டிருக்க, அவனுக்காக கவி துடிக்கும் துடிப்பு பிரபாவின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திச் சென்றிருந்தது.
சேதுராமன் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருப்பதால், நேரமாவதைத் தொடர்ந்து பொற்கொடி தான் அவளை அழைத்திருந்தார்.
“பிரண்ட் அம்மாக்கு ஆக்சிடென்ட் மா.. ஹாஸ்பிடல்ல இருக்கேன்.. வந்துடுறேன்” என எட்டு மணி வரை சமாளித்தவளுக்கு, அதற்கு மேல் பொற்கொடி அவகாசம் வழங்கவில்லை.
எனவே அவர்களின் கல்லூரி நண்பர்களை அழைத்து பிரபாவிற்கு துணையாய் இருக்கவைத்தவள், அவனின் தெம்பிற்காக பழச்சாறை மட்டும் எப்படியோ கொஞ்சம் பருக வைத்திருந்தாள்.
“நான் காலையில சீக்கிரம் வந்துடுவேன் பிரபா!!! ஆண்ட்டிக்கு ஒன்னும் இல்லை!! சரி ஆய்டுவாங்க.. பயப்படாத!! நான் இருக்கேன்.. எதுனாலும் பார்த்துக்கலாம்!!!” என அவனுக்கு தைரியமளித்துவிட்டு அவள் மனமே இல்லாமல் அங்கிருந்து கிளம்பிச் செல்ல,
விடியற்காலை ஐந்து மணிக்கே, தமிழினி பிரபாவை விட்டு நிரந்தமாக பிரிந்து சென்று விட்ட செய்தி வந்து பெண்ணவளை இடியாய்த் தாக்கியது!!!
“ஐய்யோ பிரபா!!!!” என அவளின் நெஞ்சம் பிரபாவிற்காக கதறித் துடிக்க,
அங்கே பிரபாவோ, தனக்கென இந்த அகண்டு விரிந்த உலகில் இருந்த ஒரேயொரு உறவும் இல்லாமல் போனதில் பித்துப் பிடித்தவன் போல் இடிந்து அமர்ந்துவிட்டான்!!!
“உறவென இருந்த உயிர், உலகை விட்டுப் பிரிந்திருக்க
கண்ணீரால் கூட நிரப்பி விட முடியவில்லை அவன் கொண்ட சோகத்தை!!”
error: Content is protected !!