Skip to content
Post Views: 3,050
அன்பு – 26
பிரபாவின் கைகளில் சிறைபட்டிருந்த தன் அன்னையின் கைகளையே ஆதினி குழப்பமாக பார்த்துக் கொண்டிருக்க, அதை கண்டுகொண்ட பிரபஞ்சன் கவியின் கைகளை விட்டுவிட்டு,
Advertisement
“நீயும் உட்காரு!! நாமளே எடுத்து போட்டு சாப்பிட்டுக்கலாம்” என அவளை அமர வைத்தவன்,
மதுவின் பக்கத்தில் அமர்ந்திருந்த குழந்தையின் மறுபக்கம் சென்று அமர்ந்துகொண்டான்.
Advertisement
Advertisement
“அம்மு இன்னும் சாப்பிடலையா?? பாப்பாக்கு என்ன வேண்டும்?? அம்மா டொமேடோ ரைஸ் அண்ட் பொட்டேடோ செஞ்சிருக்காங்க.. கர்ட் இருக்கு!! ஹம் ரசம் கூட இருக்கே!!! ” என ஒவ்வொரு பதார்த்தங்களையும் திறந்து பார்த்து குழந்தைக்கு பிரபஞ்சன் விளக்கிக் கொண்டிருக்க,
“அவ காரம் ரொம்ப சாப்பிட மாட்டா!! தயிர்சாதம் போதும் அவளுக்கு!!” என மென்குரலில் கவியிடமிருந்து பதில் வந்தது.
Advertisement
“வெறும் தயிர் சாதத்துல என்ன சத்து கிடைக்கும்?? அதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டு பழகுவா!!” என்ற பிரபஞ்சன்,
“அம்முக்கு, நான் கொஞ்சமே கொஞ்சம் தக்காளி சாதம் தருவேனாம்.. பேபி சாப்பிட்டு பார்ப்பிங்களாம்.. பிடிக்கலைனா நம்ம தயிர் சாதமே சாப்பிட்டுக்கலாம்.. ஓகே வா??” என குழந்தையிடம் பிரபஞ்சன் கேட்க,
என்ன சொல்வது என தயக்கத்துடன் முழித்த குழந்தை, பதிலுக்காக தன் அன்னையைத் தேடியது.
கவியும் மகளின் மனதைப் புரிந்து கொண்டு,
“கொஞ்சம் சாப்பிட்டு பாரு அம்மு!! பிடிக்கலைனா அம்மா தயிர்சாதம் தரேன்” என அவளை ஊக்குவிக்க, பிரபஞ்சனிடம் தயக்கத்துடனே சம்மதமாய் தலையசைத்தது சின்னச்சிட்டு.
அதில் மென்முறுவலுடன் கொஞ்சமாக சாதம் எடுத்து அதை தயிர் பச்சடியுடன் சேர்த்து காரம் பெரிதாய் தெரியாதவாறு, குழந்தைக்கு அவன் ஒரு வாய் ஊட்டிவிட,
பயத்துடனே வாயைத் திறந்த ஆதினிக்கு, அந்த சுவை கொஞ்சம் கொஞ்சமாக பிடிக்கத் துவங்க, அவளின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது.
அதை வைத்தே குழந்தையின் மனதைக் கண்டுகொண்ட பிரபஞ்சன்,
“நல்லா இருக்குல அம்மு??” என உற்சாகத்துடன் கேட்க,
ஆம் என்பதாய் குழந்தை தலையசைத்தது.
மீதமிருந்த சாதத்தையும் அதே போல பிரபஞ்சன் ஊட்டிவிட, குழந்தையும் சமத்தாய் சாப்பிட்டு முடித்தது.
அதைக்கண்ட கவிக்கு இன்னும் ஆச்சர்யம் தான்.
இதுவரை எத்தனையோ முறை, அவளும் குழந்தைக்கு காரத்தை பழக்க முயற்சி செய்து, அது தோல்வியிலே முடிந்திருக்க, அவள் இஷ்டத்திற்கே இறுதியில் விட்டுவிட்டாள்.
இன்று பிரபஞ்சன், சட்டென குழந்தையின் மனதை மாற்றி காரத்தை பழக்கிவிட்டானே என அவள் ஆச்சரியமாக பார்த்திருக்க,
கவியின் பார்வையின் பொருளை உணர்ந்து கொண்டவன்,
“இந்தக்குளம் ஆழம்னு கரையில நின்னே பயந்துட்டு இருந்தா, என்னைக்கும் அதுல இறங்கி மீன் பிடிக்க முடியாது!!! நம்மளோட பயத்தை ஓரங்கட்டி வச்சிட்டு துணிஞ்சு இறங்குனா தான் நம்ம தேடிட்டு இருந்தது நம்ம கையில கிடைக்கும்!!!” என இருபொருள்பட கூறிய பிரபஞ்சன் கவியை அர்த்தமாகப் பார்க்க,
அது நிச்சயம் அவளுக்காக சொல்லப்பட்டது தான் என பெண்ணுக்கு புரிந்திருந்தாலும், வாழ்க்கை அவளுக்கு கொடுத்த அடிகளை மீறி, கரையைத் தாண்டித் தான் பார்ப்போமே எனும் தைரியம் இன்னும் அவளுக்கு வரவில்லை.
எனவே அவள் பதில் பேசாமல் மௌனமாக தன் உணவை அளந்து கொண்டிருக்க,
கவினும் மதுவும், பிரபாவின் இந்த அதிரடி மாற்றத்தில் வாயடைத்துப் போய் அமர்ந்திருந்தனர்.
குழந்தையுடன் பேசிக்கொண்டே அவளுக்கும் ஊட்டிவிட்டு தானும் உண்டு முடித்தவன், கவி இன்னும் சாப்பிடாமலே இருப்பதைக் கண்டு, மெதுவாய் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்,
“என்ன உனக்கும் ஊட்டி விடவா?? எனக்கு நோ அப்ஜெக்ஷன்!!” என்று கண்சிமிட்ட,
பதறிப்போன கவி, பட்டென தன் தட்டில் இருப்பதை காலி செய்ய ஆரம்பித்தாள்.
சிறு புன்னகையுடன் ஆதினியையும் தூக்கிக்கொண்டு அவன் கைகழுவச் செல்ல, அவன் தோள்களை தயக்கத்துடன் சுரண்டினாள் குழந்தையவள்.
“என்னடா அம்மு???” என வாஞ்சையாக பிரபா கேட்க,
“அம்மா!! அம்மா கை..” எப்படிக் கேட்பது என்று தெரியாமல் குழந்தை தடுமாற,
அவள் கேட்க வந்ததை சரியாக புரிந்து கொண்ட பிரபஞ்சன்,
“அதுவா!! இங்க கிட்ட வா!! பேபிக்கு ஒரு ரகசியம் சொல்றேன்” என்று குரலைத் தழைத்து பிரபா அழைக்க,
குழந்தையும் ஆர்வத்துடன் அவனருகே சென்றது,
“உங்க அம்மாவும் நானும் ஸ்கூல்ல இருந்து பிரண்ட்ஸ்!! காலேஜ் எல்லாம் ஒன்னா தான் படிச்சோம்!! அப்பறம் உங்க தாத்தா அம்மாவை வேற ஊருக்கு கூட்டிட்டு போயிட்டாரா, அதான் இத்தனை வருஷமா பேபியையும் பேபியோட அம்மாவையும், என்னால பார்க்க வரவே முடியலை!! என் பிரண்டை பார்க்க முடியாம நான் சேடா இருந்தேனா!! அதான் காட் வந்து உன் பிரண்டை நீயே வச்சுக்கோன்னு உங்களை இங்க அனுப்பி வச்சுட்டாரு!!!” என அபிநயம் பிடித்து அவன் ஒரு கதை சொல்ல,
“நிஜமாவா??” என அவன் சொன்னதை நம்பாமல் குழந்தை கேள்வி கேட்டது,
“நம்பலையா நீ??? இரு!!” என்றவன்,
தன் வாலெட்டில் பத்திரப்படுத்தி வைத்திருந்த, அவர்களின் கல்லூரிக்கால புகைப்படம் ஒன்றை குழந்தையிடம் எடுத்து நீட்டினான்.
அதை ஆர்வத்துடன் வாங்கிப் பார்த்த குழந்தைக்கு, புகைப்படத்தில் தன் அன்னையைக் கண்டதும் அப்படி ஒரு ஆனந்தம்.
கவலைகளற்ற கவியின் முகம் அத்தனை அழகாய் இருந்தது!!!!
“ஐய்!!! எங்கம்மா!!! சூப்பரா இருக்காங்க.. ” என ரசித்து அந்த புகைப்படத்தை தடவிக் கொடுத்த குழந்தை,
“இந்த மாதிரி அம்மா சிரிச்சு நான் பார்த்ததே இல்லை!!!” என அன்னையின் சிரிப்பை ஏதோ எட்டாவது அதிசயம் போல் பார்த்தபடி குழந்தை கூற,
பிரபஞ்சனுக்கு துக்கத்தில் தொண்டை அடைத்தது!!
“இங்க வந்துட்டாங்கல!! இனி இந்த மாதிரி என்ன, இதை விட நல்லாவே சிரிப்பாங்க!! ஓகே வா அம்மு!!” என குழந்தைக்கு சொல்வதைப் போல் தனக்கும் சொல்லிக்கொண்டவன்,
“இப்போவாச்சும் நம்புறியா?? நானும் உங்க அம்மாவும் ஃப்ரெண்ட்ஸ் தான்னு!!” என்று கேட்க,
ஆம் என்பதாய் தலையசைத்த ஆதினி,
“ஆனா அம்மா ஏன் இத்தனை நாளா சொல்லவே இல்லை?? ” என்று அறிவாய் கேள்வி கேட்க,
“அதுவா!! என்கிட்ட சொல்லாம உங்க அம்மாவை உங்க தாத்தா ஊருக்கு கூட்டிட்டு போயிட்டாரா?? அதான் உங்க அம்மாகிட்ட கொஞ்சம் சண்டை போட்டேன்.. அதுல கோவமா இருந்தாங்களா.. அதான் உன்கிட்ட சொல்லலை.. இனி சொல்லுவாங்க” என்று சமாளித்தான் பிரபஞ்சன்.
“ஓஹ்!! ஆனா அம்மா கிட்ட சண்டை எல்லாம் போடாதீங்க.. அம்மா பாவம்!!” என அந்த பிஞ்சு சொல்ல, பாகாய் உருகிவிட்டது பிரபஞ்சனின் உள்ளம்.
“இனி நோ சண்டை!!!” என அவன் மென் சிரிப்புடன் சொல்ல, குழந்தையும் அழகாய் புன்னகைத்தது.
“இந்த போட்டோவை நான் வச்சுக்கவா???” என ஆசையுடன் ஆதினி கேட்க,
“அச்சோ!!! உங்களுக்கு வேண்டுமா???” என பாவமாய் உதட்டைப் பிதுக்கிய பிரபஞ்சன்,
“சரி தரேன்!!! ஆனா ஒரு டீல்!!” என அவளிடம் பேரம் பேச,
என்ன என்பதாய் விழி மலர்த்தி அவனை நோக்கிய ஆதினியை,
“ஒரே ஒரு முத்தம் மட்டும் உங்க பிரபுவுக்கு வேண்டுமே!!!” என கண்ணைச் சுருக்கி பாவமாய் அவன் கேட்க,
தயக்கத்துடன் அவன் முகத்தின் அருகே குனிந்த குழந்தை, அந்தி நேர தென்றல் காற்று இதமாய் உடலை வருடிச் செல்வதுபோல், பட்டும் படாமல் தன் ரோஜா இதழ்களால் ஒரு முத்தம் வைத்துவிட்டு நிமிர, பிரபஞ்சனின் இதயத்தில் அப்படி ஒரு நிறைவு!!!
அவன் அடைந்த அத்தனை துன்பங்களும் இந்த ஒற்றை முத்தத்தில், சூரியனைக் கண்ட பனித்துளியாக கரைந்து போவதை உணர்ந்தவன் முகத்தில் தான் எத்தனை மகிழ்ச்சி!!!
“தேங்க் யூ டா அம்முமா!!!” என லேசாய் கசிந்துவிட்ட ஆனந்தக்கண்ணீருடன் பிரபஞ்சனும் குழந்தையை நன்றாய் அணைத்துக்கொள்ள,
சாப்பிட்டு முடித்து கைகழுவ எழுந்து வந்த கவியின் கண்களில், இந்தக்காட்சி விழ, அப்படியே சப்தம் செய்யாமல் அங்கிருந்து சென்றுவிட்டாள்.
***
“கவி!!! இன்னும் கிளம்பலையா நீ???” என்று கேட்டுக்கொண்டே தன் சட்டையின் கைகளை மடித்துவிட்டுக்கொண்டே மதுவின் வீட்டினுள் நுழைந்தான் பிரபஞ்சன்.
மதுவின் பிடிவாதத்தில், அவளிடம் நகப்பூச்சு வைத்துக்கொண்டிருந்த கவி, பிரபஞ்சனின் திடீர் வருகையில் உண்டான கூச்சத்தில் பட்டென மதுவிடமிருந்து தன் கைகளைப் பின்னிழுக்க முயல,
“ப்ச்!! இவன் என்ன பெரிய இவனா?? எதுக்கு இவனுக்கு பயந்துட்டு கையை இழுக்குற?? அசைக்காம வை ஒழுங்கா!!” என அதட்டல் போட்ட மது, கவியின் கைகளை அழகுபடுத்துவதில் மும்முரமாக இருந்தாள்.
அதற்குள் இவனின் சப்தம் கேட்டு அறைக்குள் இருந்து ஓடி வந்த ஆதினி,
“பிரபு!!! நான் ரெடி!!!” என உற்சாகமாக அவன் முன் வந்து நின்று தன் உடையை விரித்துக்காட்டி,
“அழகா இருக்கா??” என்று ஆவலுடன் கேட்க,
அந்த அழகில் மொத்தமாய் சொக்கித் தான் போய்விட்டான் பிரபஞ்சன்.
‘ தெய்வங்கள் பெண் பிள்ளைகளின் ரூபத்தில் பூமியை தரிசிப்பதுண்டு!!’ என எங்கோ படித்தது நினைவில் வர, மென்முறுவலுடன் குழந்தைக்கு கைகளால் திருஷ்டி கழித்தவன்,
“உங்களுக்கென்ன, எப்பவும் போல தேவதை மாதிரி இருக்கீங்க அம்மு!!” என்று பாராட்ட வேறு செய்ய,
வெட்கத்துடன் அவன் கைகளை பற்றிக்கொண்ட ஆதினி,
“எங்க போறோம்???” என்று கேட்க,
“அது சர்ப்ரைஸ்!!!” என பிரபா கண்ணடித்தான்.
“பிளீஸ் பிரபு!! சொல்லுங்களேன்!!” என ஆர்வம் தாங்காமல் குழந்தை கெஞ்சுவதும், அவன் மிஞ்சுவதுமாக இருக்க,
இருவரின் அன்பையும் பார்க்க அழகான கவிதையாகக் காட்சியளித்தது!!!
கவி கண்ணிமைக்காமல் அந்தக் காட்சியை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஆதினி பிறந்ததிலிருந்து தந்தையின் அன்பு என்ற ஒன்றை உணரும் பாக்கியம் அவளுக்கு கிடைத்ததே இல்லை. சேதுராமனுக்கு பேத்தி மீது பாசம் தான் என்றாலும், சூழ்நிலை காரணமாக குழந்தையுடன் அவர் அதிக நேரம் செலவழித்திருக்கவில்லை.
எனவே கிட்டத்தட்ட ஆண்வாசனையே இல்லாமல் வளர்ந்திருந்த ஆதினிக்கு, அனைத்துமாக பிரபஞ்சன் இருப்பதைக் கண்டு ஒருபக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், பின்னாளில் பிரபஞ்சனை விட்டு பிரிய நேரும்போது ஆதினி இவன் அன்பிற்கு மிகவும் ஏங்கிப் போய்விடுவாளே என வருத்தமும் இல்லாமல் இல்லை.
கலவையான மனநிலையில் இருந்த கவியின் தோளில் பட்டென ஒரு அடி வைத்த மது,
“அவனை சைட்டடிச்சது போதும்!! இங்க வச்சிட்டேன் காலைக்காட்டு!!” என்றாள்.
மதுவின் இயல்பான கேலிப்பேச்சைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாத கவி,
“அச்சோ அக்கா!! அதெல்லாம் ஒன்னும் இல்லை!! நான் சும்மா தான் பார்த்தேன்!!” என பதற்றமாக,
அதில் கவி பக்கம் கவனத்தைத் திருப்பிய பிரபா,
“கவி!! நீ இன்னும் கிளம்பலயா??” என்று பேச்சை மாற்ற,
கவி அவனை வெளிப்படையாக முறைக்கவும் முடியாமல் தவிப்புடன் பார்க்க, அவள் பார்வைக்கான அர்த்தத்தை சரியாக உள்வாங்கிக் கொண்டவனின் அதரங்கள் சிரிப்பில் லேசாய் விரிந்தது.
குழந்தையிடம் தாங்கள் இருவரும் நண்பர்கள் என பிரபஞ்சன் சொன்ன அன்றே, தன் அன்னையிடம் அதைக் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டிருந்தது குழந்தை.
வேறு ஏதாவது மாற்றிப் பேசி, குழந்தையின் சந்தேகத்திற்கு வழிவகுக்காமல் கவியும் பிரபாவின் பேச்சையே வழிமொழிந்தாள்.
அன்று தொடர்ந்து, கவி பிரபாவை முறைத்தாலோ இல்லை அவனிடம் பேச மறுத்தாலோ,
“பிரபு பாவம் மா!! எதுக்கு அவர்கிட்ட ஒழுங்கா பேச மாட்டேங்குறியாம் நீ??” என பிரபாவிற்கு ஏந்துகொண்டு வந்து நிற்கும் மகளிற்கு பயந்தே அவள் முன்பு பிரபாவை எதுவும் சொல்வதில்லை கவி.
இப்போதும் அவன் அவளை வெளியே செல்ல வேண்டும் என முன்னரே கிளம்பச் சொல்லியிருக்க அவள் அப்போதே வர மறுத்துவிட்டாள்.
ஆனால் விடாக்கொண்டன் மீண்டும் சரியாக குழந்தையின் முன் வைத்து கேட்க, அவனை என்ன செய்வது என்று புரியாமல் கவி கடுப்புடன் அமர்ந்திருக்க,
“என்னம்மா நீங்க வரலையா?? சீக்கிரம் கிளம்புங்க!!” என ஆதினி அன்னையைக் கிளப்பும் பணியை தன் கைகளில் எடுத்துக்கொண்டாள்.
குழந்தையின் முன்பு வைத்து தன்னை ஒன்றும் செய்ய முடியாததில் அடிக்கண்ணில் தன்னை முறைத்துவிட்டுப் போன கவியை பிரபஞ்சன் ரசனையுடன் பார்த்தபடி அமர்ந்துவிட,
“என்ன டா பிரபா!! அம்பி மோட்ல இருந்து ரெமோவா மாறிட்ட போல!!!” என மது அவனை கவனித்துக் கிண்டல் தொனியில் கேட்டாள்.
“என்னைக் கிண்டல் பண்ணாம போய் கவின் அண்ணாவை பாருங்க.. இன்னும் வீட்டுக்கு வரலை பாருங்க” என அவன் திருப்பிக் கொடுக்க,
“பார்ரா!!! கிளிக்கு எல்லாம் கொடுக்கு முழைச்சிடுச்சு!! பிழைச்சுக்குவ டா பிரபா!! உனக்கு என் ஹெல்ப் தேவைப்படாதுன்னு நினைக்கிறேன்” என்று மது சிரிக்க, பிரபாவின் அவள் சிரிப்பில் இணைந்துகொண்டான்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கையிலே ஆதினி, கவியைக் கிளப்பிக் கூட்டிக்கொண்டு வந்திருக்க,
“போலாம் பிரபு!!!” என அவனையும் அழைக்க,
நெஞ்சம் நிறைந்த புன்னகையுடன் எழுந்து கொண்ட பிரபஞ்சன், ஆதினியின் இன்னொரு புறம் வந்து அவள் கைகளைப் பற்றிக்கொள்ள,
வெளியே செல்லப்போகும் ஆவலுடன் குழந்தையும், விலக நினைத்தால் விரட்டிப் பிடிக்கிறானே என கடுப்புடன் கவியும், தொலைந்த நிம்மதி, கைவந்து சேர்ந்த நிறைவுடன் பிரபஞ்சனும் அங்கிருந்து ஒன்றாக தங்கள் பயணத்தைத் தொடங்கினர்.
இந்தப்பயணம் முடிவில்லா முடிவிலியாய் அவர்கள் வாழ்வின் எல்லை வரை நீண்டு
கொண்டே போகுமா??
“மகளைக் கொண்டு அவனை விலக்க நினைக்கும் அவள்!!
மகளை வைத்தே அவளை நெருங்கிவிட முயலும் அவன்!!
அவளா?? இல்லை அவனா??? இல்லை இறுதியில் அவளும் அவனுமா??
விடை காலத்தின் கையில்!!!”
error: Content is protected !!