Skip to content
Post Views: 2,875
அன்பு – 27
“அம்மு!!! கண்ணை மூடு!!!” என்ற பிரபா, குழந்தையின் பிறை நுதழில் மெல்லிய கீற்றாய் குங்குமத்தை வைத்துவிட்டு, மெதுவாய் வாயைக் குவித்து ஊதி விட,
Advertisement
பட்டென நெற்றியைத் தீண்டிய குளுமை குழந்தைக்கு லேசாய் கூசச் செய்யவும்,
“பிரபு!!!” என அழகாய் சிணுங்கிச் சிரித்தது!!!
Advertisement
Advertisement
அதில் மயங்கிய மனதுடன் குழந்தையை வாகாய் தன்னுடன் அணைத்துக்கொண்டான் பிரபஞ்சன்.
வீட்டில் இருந்து இருவரையும் அழைத்துக் கொண்டு நேராய் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வந்திருந்தான் பிரபஞ்சன்.
Advertisement
அங்கே சிறப்பு தரிசனத்தை முடித்துக்கொண்டு, குளக்கரைக்கு வந்தனர் மூவரும்.
வழியில் பிரபாவை அடையாளம் கண்டுவிட்டு சிலர் வந்து பேசி, அவனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு செல்ல,
அதைக்கண்ட கவிக்கு மிகவும் பெருமையாக இருந்தது!!
அவள் ஆசைப்பட்டதும் இதைத்தானே!!!
எனவே மிதமான புன்னகையுடன் அவள் அவனைப் பார்த்தபடி அமர்ந்திருக்க, அதை கண்டுகொண்ட பிரபஞ்சனுக்கு, கவியின் மனதை விரைவில் மாற்றி விடலாம் எனும் நம்பிக்கை துளிர்விட்டது.
“எவ்ளோ பிக் டெம்பிள்ல ம்மா!!! இந்தத் தண்ணில கால் வைக்கவா??” என நிற்காமல் ஓடும் நதி போல், வாய் ஓயாமல், உற்சாகத்தில் சலசலத்துக்கொண்டே இருந்தாள் குழந்தை.
இதுவரை வேலை, வேலை என்று ஓடிய கவிக்கு, குழந்தையை இதுபோல் வெளியில் அழைத்துச் செல்லவெல்லாம் நேரம் கிடைத்ததே இல்லை.
எனவே முதன்முதலாக இப்படி வெளியில் சுற்றிப்பார்க்க என்று வந்ததும், குழந்தைக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.
கைக்கு எட்டாத பட்டாம்பூச்சி போல் சிறக்கில்லாமலே பறக்கத் துடித்துக்கொண்டிருந்த குழந்தையை வாஞ்சையாக கவி பார்த்திருக்க, ரசிகர்களுடன் பேசிவிட்டு வந்த பிரபஞ்சன், இயல்பாய் கவியின் அருகில் அமர்ந்தான்.
அவனின் அருகாமையை அவனைப்போல இயல்பாய் ஏற்க முடியாமல் கவிக்கு உள்ளே ஏதோ குறுகுறுக்க, பட்டென அவனிடமிருந்து இரு அடி தள்ளி நகர்ந்து அமர்ந்தாள்.
இருவருக்குமிடையே அவள் உண்டாக்கிய இடைவெளியில் பார்வையைப் பதித்த பிரபஞ்சன்,
தலையை இடவலமாக அசைத்து மெலிதாய் புன்னகைத்துக்கொண்டாலும், மேலும் அவளை நெருங்க முற்படவில்லை.
“ரொம்ப வருஷம் கழிச்சு மனசுக்கு ரொம்ப அமைதியா இருக்கு கவி!!!” என்றவனைத் திரும்பிப் பார்த்த கவிக்கும் கிட்டத்தட்ட அதே மனநிலை தான்.
ஆனாலும் அதை வெளிப்படையாக அவனிடம் பகிர்ந்துகொள்ள அவள் முயலவில்லை.
அவளின் அமைதி தன்னை பாதிக்கவே இல்லை என்பதைப் போல் பிரபஞ்சன் தொடர்ந்து பேசினான்.
“ஆறு மாசமா கோமால இருந்தேன் கவி!!!”
“நான் யாரு!! எங்க இருக்கேன்!! உயிரோடதான் இருக்கேனா இல்லையான்னு கூடத் தெரியாத மாதிரி, ஆறு மாசம் ஒரே இடத்தில படுத்தே கிடந்திருக்கேன்…” என மெதுவாய் கவிக்கு தன் பக்க கதையை அவன் சொல்லத் துவங்க,
கவிக்கு கொஞ்சம் குறைந்திருந்த குற்ற உணர்ச்சி மீண்டும் வந்து ஒட்டிக்கொள்ள, கலங்கிய கண்களுடன் அவனைத்தான் பார்த்திருந்தாள்.
“நான் எங்கேயோ எப்படியோ போயிருக்க வேண்டியவன் கவி!!! எங்க அம்மாக்கு கூட நான் பிரயோஜனமா இருந்தது இல்லை!! எதுக்கு டா இந்த பிறப்புன்னு நான் யோசிக்காத நாளே இல்லை தெரியுமா?? என்னைப் பார்க்குறவங்க பார்வையில ஒன்னு பரிதாபம் இருக்கும் இல்லையா, என் பிறப்பை நினைச்சு ஒரு கேலி இருக்கும்.. ஆனா நீ மட்டும் தான், என்னையை எல்லாரும் போல நானும் ஒரு சாதாரண மனுஷன் தான் அப்படின்ற மாதிரி பார்த்த!!!” என்று அவன் தன் மனதைத் திறக்க,
கவி, ‘ இப்போ இதெல்லாம் எதுக்கு??’ என்பதைப் போல் அவனைப் புரியாமல் பார்த்திருந்தாள்.
“உனக்கு நியாபகம் இருக்கான்னு தெரியலை!!! எங்க அம்மாவையும் என்னையும் ஸ்கூல்ல ஒருத்தன் ரொம்ப கேவலமா பேசுனான்.. எனக்கு அது புதுசு இல்லை.. அதைவிட மோசமான பேச்சுக்களை எல்லாம் நான் கேட்டு தான் வளர்ந்தேன்.. ஆனாலும் ஒவ்வொரு முறையும் இந்த மாதிரி பேச்சைக் கேட்கும்போது, இப்படி பேசுறவங்களை விட, அவங்களை பேச விட்டுட்டு வேடிக்கை பார்க்குற என் மேல தான் எனக்கு பயங்கர கோபம் வரும்.. ஆனா என்ன பண்ண?? என் கோபம் கூட கண்ணீரா தான் வெளிய வரும்.. எவ்ளோ தைரியசாலில நான்??” எனக்கேட்டு விரக்தியாக புன்னகைத்தவன்,
“அன்னைக்கும் அந்தப்பையனை பேசவிட்டுட்டு கையலாகதவனா நான் நின்னுட்டு இருந்தப்போ தான் நீ வந்த!!! நான் பண்ணனும்னு நினைச்சதை நீ பண்ணி முடிச்ச தைரியமா!!! அப்போ!! அந்த நிமிஷம் எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா கவி!!! நீ என் கண்ணுக்கு ஒரு சூப்பர் வுமனா தான் தெரிஞ்ச!!!” என அன்றைய நாளுக்கே சென்றுவிட்டதுபோல் ரசனையாக பிரபா சொல்ல,
கவிக்கு அதெல்லாம் ஏதோ முன் ஜென்மத்தில் நடந்தது போல் உணர்வு!!
“எல்லாமே தப்பா போயிட்டு இருந்த என் வாழ்க்கை, நீ வந்ததும் தான் கவி சரியான பாதையில பயணத்தை தொடங்குச்சு!!! எதுக்காக இந்த வாழ்க்கைன்னு புரியாம ஓடிட்டு இருந்த எனக்கு என் வாழ்க்கையோட அர்த்தமா நீ வந்து சேர்ந்த!!!” என காதல் வீச அவன் மெய்மறந்து பேசிக்கொண்டிருக்க, கவி தன்னை மறந்து அவனைப் பார்த்திருந்தாள்.
“இதை சொன்னா எங்க அம்மா நிச்சயம் கோச்சுக்க மாட்டாங்க!!!” என்றவன்,
“எங்க அம்மாவை விட நீ தான் எனக்காக ஒவ்வொன்னும் பார்த்து பார்த்து செஞ்ச கவி!!! நான் நல்லா வரணும்னு என்னைவிட உனக்கு தான் ரொம்ப ஆசைல்ல!!” என அவள் கண்களைப் பார்த்து அவன் கேட்க,
ஏதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல் கவியின் சிரம் தன்னாலே ஆம் என்றபடி ஆடியது.
“உன்னோட சேர்த்து எல்லாத்தையும் தொலைச்சிட்டு நின்னப்போ என் மனசுல இருந்ததெல்லாம் ஒன்னே ஒன்னு தான் கவி!!! மறுபடி உன்னை நான் பார்க்குறப்போ, நீ ஆசைப்பட்ட மாதிரி நான் நல்ல ஒரு நிலைமையில இருக்கணும்னு நினைச்சேன்..உன்னை நினைச்சிட்டு என் வாழ்க்கையை நானே அழிச்சிருந்தா அது உனக்கு எவ்வளவு கஷ்டத்தைத் தரும்னு எனக்குத் தெரியும்.. அதான் என்னை நீ எப்படி பார்க்கணும்னு ஆசைப்பட்டியோ, அந்த உயரத்துக்கு வந்துட்டு உன் முன்னாடி வர நினைச்சேன் கவி!!! இப்போ நீ ஹேப்பி தான??” என கண் சிமிட்டி பிரபா கேட்க,
தன்னை எந்த அளவு இவன் புரிந்து வைத்திருக்கிறான் என கவி வியந்து போனாள்.
“நீ எப்பயுமே கரெக்ட் கவி!!! நீ அப்போவே அத்தனை தடவை சொன்ன, எனக்கு உன் மேல இருக்கது லவ் தான்னு!!! நான் தான் மடையன்.. கடைசி வரை அதை புரிஞ்சுக்கவே இல்லை.. ” என தன் தலையில் தட்டிக்கொண்ட பிரபா,
“உன் வார்த்தையில புரியாத காதலை, நீ இல்லாத வாழ்க்கை எனக்கு வலிக்க வலிக்க புரிய வச்சிடுச்சு கவி!!! நீ இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்லைன்னு அப்போ தான் இந்த மரமண்டைக்கு புரிஞ்சது!!!”
“புரிஞ்சு என்ன பண்ண?? அதை உன்கிட்ட சொல்றதுக்கு கூட ஒரு வாய்ப்பை கடவுள் எனக்கு கொடுக்கவே இல்லை.. இவ்வளவு பெரிய உலகத்துல நீ எங்க இருக்கன்னு கூட கண்டுபிடிக்க அப்போ இருந்த பிரபாவுக்கு முடியலை!!! அதுக்கு கூட பணம் வேண்டும்னு அப்பறம் தான் புரிஞ்சுது!!! உங்க அப்பா எதுக்கு என்னை வீட்டுக்குள்ள கூட விட யோசிச்சாருன்னு ரொம்ப லேட்டா புரிஞ்சுது கவி!!! அதான் என் கஷ்டம் என்னோட போகட்டும், என் கவிக்கு என்னைக்கும் அந்தக்கஷ்டம் வரக்கூடாதுன்னு வாழ்க்கையில முன்னேறிட்டு உன் முன்னாடி வந்து நிக்கணும்னு நினைச்சு ரொம்ப லேட் பண்ணிட்டேன்”
“ரொம்பவே லேட்ல நான்??” என அவன் கேள்வியாக அவளைப் பார்க்க,
பதில் சொல்லத் தெரியாமல் தடுமாறினாள் பெண்ணவள்.
“உண்மை தெரிஞ்ச பின்னாடியாச்சும் நான் ஒருமுறை உன்னை வந்து பார்த்திருக்கணும் கவி!! தப்பு பண்ணிட்டேன்!!” மீண்டும் அவன் கவியின் வாழ்வை எண்ணி வருந்த,
“பிரபா பிளீஸ்!!!” என அதற்கு மேல் அதை யோசிக்கவேண்டாமே என இறைஞ்சும் பார்வை பார்த்தாள் பெண்ணவள்.
“இல்லை கவி!!! ஜஸ்ட் சொன்னேன்.. நடந்து முடிஞ்சதை பேசி மாறப்போறது ஒன்னும் இல்லை.. இருந்தாலும் தோணிச்சு!!!”
“ப்ச்!! நான் ஒரு இடியட்!! எங்கேயோ ஆரம்பிச்சு, எங்கேயோ கொண்டு போறேன்!!” என தலையைத் தட்டிக்கொண்டவன்,
“நீ என் வாழ்க்கையில இல்லைன்ற உண்மையை ஏத்துக்க முடியாம, இதோ இந்தக் கடவுள்கிட்ட நான் வந்து சண்டை போட்டு மனசுக்குள்ளேயே அழுத நாட்கள் ஏராளம்!!!”
“ஆனா, இன்னைக்கு!! என் கண் பார்க்கும் தூரத்துல நீ, என் கைக்குள்ள நம்ம அம்மு!!! வாழ்க்கை சட்டுனு அழகா மாறிட்ட மாதிரி தோணுது கவி!!! அதான் சண்டை போட்ட கடவுள்கிட்ட சமாதானம் பேசலாம்னு உன்னையும் கூட்டிட்டு வந்தேன்.. மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு!!” என ஆத்மார்த்தமான புன்னகையுடன் கூறியவனுக்கு, மனதில் இருந்த பாரமெல்லாம் இறக்கி வைத்துவிட்ட உணர்வு.
அவன் மனம் கவிக்குத் தெளிவாய் விளங்கினாலும், ‘ இது ஒத்துவராது, அவனிடம் பேசி புரிய வை!!’ என கவிக்குள் ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருக்க,
“பிரபா!!! நான் சொல்றதை நீ புரிஞ்சுக்கவே மாட்டியா??” என பரிதவிப்புடன் கவி ஆரம்பிக்க,
“பிளீஸ் கவி!!! ரொம்ப வருஷமா என் மனசுல பூட்டி வச்சிருந்த காதலை உன்கிட்ட சொல்லிட்ட நிம்மதியில நான் இருக்கேன்.. தயவுசெஞ்சு எதையாவது பேசி என் நிம்மதியைக் கெடுக்காத!! உன் முடிவு இல்லாம எதுவும் நடக்காது!! சோ எதையும் நெகட்டிவா பேசாத பிளீஸ்!!!” என பட்டென அவளைத்தடுத்துவிட்டான் பிரபஞ்சன்.
அவனின் மனநிலையை கெடுக்க விரும்பாத கவியும், அதற்கு மேல் அவனிடம் பேசவில்லை என்றாலும், அவனின் அன்பு அவளை கொஞ்சம் கொஞ்சமாக பலவீனமாக்கிக் கொண்டிருப்பதை உணர்ந்து, தன் மனதிற்கு கடிவாளமிட்டாள்.
அதன் பின் ஆதினி விளையாட்டு சலித்துப் போனதால் மீண்டும் இவர்களிடம் வந்துவிட, அடுத்து இருவரும் பேசிக்கொள்ள வாய்ப்பில்லாமல் போனது.
அதன் பின் மூவரும் அருகில் உள்ள உயர்தர உணவகத்தில் உணவருந்துவிட்டு, அடுத்ததாக அவர்கள் வீட்டின் அருகில் உள்ள உலகத்தரம் வாய்ந்த அந்தப்பள்ளிக்கு சென்றனர்.
“இன்டர்நேஷனல் ஸ்கூல்லா?? இங்கலாம் வேண்டாம் பிரபா!!! என்னால ஃபீஸ் கட்ட முடியாது!!” என கவி பள்ளியின் முகப்பைக் கண்டதுமே தன் மறுப்பைத் தெரிவித்திருக்க,
அவளைத் திரும்பி அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தான் பிரபஞ்சன்.
அவன் பார்வையில் இருந்த கடுமையில் கவியின் அதரங்கள் பூட்டிக்கொண்டாலும், வீட்டிற்கு போய் இதைப்பற்றி பிரபாவிடம் பேச வேண்டும் என நினைத்து அப்போதைக்கு அமைதி காத்தாள் கவி.
முன்பே, இங்கே வந்து அனைத்தையும் விசாரித்துவிட்டுச் சென்றிருந்த பிரபா, ஆதினியைத் தன் கைகளில் அள்ளிக்கொண்டு அவளுக்கு ஒவ்வொன்றாய் விளக்கியபடி நடந்தான்.
மிகவும் நேர்த்தியாக, பசுமை சூழ இருந்த அந்தப்பள்ளி குழந்தைக்கு மிகவும் பிடித்துவிட,
“சூப்பர் பிரபு!!!” எனத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது குழந்தை.
அதில் பிரபஞ்சனுக்கு பெரும் திருப்தி!!
அதன் பின் கவியைக் கூட்டிக்கொண்டு பள்ளியின் அலுவலக அறைக்குள் நுழைந்தவன், முன்பே சொல்லி வைத்திருந்ததால், அட்மிஷனுக்கான வேலைகளில் இறங்க,
“பிரபா!! ஜஸ்ட் விசாரிக்க தான வந்தோம்.. என்ன இப்போவே அட்மிஷன்!! வீட்டுக்கு போய் பேசிக்கலாம்” என அடிக்குரலில் கண்டனம் தெரிவித்தாள் கவி.
அதை கண்டுகொள்ளாத பிரபஞ்சன், முன்பே மதுவிடம் கவி கொடுத்து வைத்திருந்த குழந்தையின் ஆவணங்களை அங்கே கொடுத்து, ரொக்கமாக சில லட்சங்களையும் கட்டி அங்கே ஆதினிக்கு அட்மிஷன் போட்டிருந்தான்.
“குழந்தையோட பேரண்ட் இங்க சைன் பண்ணுங்க!!!” என அங்கு இருந்த அதிகாரி சொல்லவும் தான் கவி பக்கம் கண்களைத் திருப்பிய பிரபா,
“கவி!! உன்னைத்தான்.. சைன் பண்ணு!!” என்றான்.
அவனை கண்களாலே சுட்டுப் பொசுக்கிய கவி, கைகளைக் கட்டிக்கொண்டு சட்டமாக அசையாமல் அங்கேயே நின்றுவிட,
“பிளீஸ் கவி!!” என கண்களால் இறைஞ்சினான் அவன்.
அவனை முறைத்துக்கொண்டே கையெழுத்திட்ட கவி, அதற்குமேல் அங்கு காத்திராமல் விடுவிடுவென வெளியே நடந்துவிட,
ஒரு பெருமூச்சுடன் அவளைப் பார்த்திருந்த பிரபஞ்சன், அங்கே அனைத்து வேலைகளையும் முடித்துக்கொண்டு, குழந்தையின் வகுப்பு எங்கே எனக்கேட்டு, ஆதினிக்கு அவளின் வகுப்பை காண்பித்துவிட்டே அங்கிருந்து நகர்ந்து காருக்கு விரைந்தான்.
குழந்தையின் முன்பு அவனை எதுவும் சொல்ல முடியாத கவி, முறைப்புடன் காரின் பின் புறம் ஏறிக்கொள்ள,
‘ கொஞ்சம் கஷ்டம் தான் போல ‘ என சிறு சிரிப்புடன் பிரபஞ்சனும் வந்து காரை எடுத்தான்.
அதன் பின் குழந்தையின் ஆசைக்கிணங்க, கடற்கரைக்கு வண்டியை விட,
முதன்முதலாக கடலைக் கண்ட குழந்தைக்கு உற்சாகம் தாளவில்லை.
மடை திறந்த வெள்ளம் போல், காரின் கதவைத் திறந்ததும், துள்ளி ஓடிய குழந்தையின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி பிரபாவிற்கும் ஒட்டிக்கொள்ள,
தன் வயதை மறந்து, குழந்தையோடு குழந்தையாய் மாறி விளையாடத் துவங்கினான் அவன்.
கவி என்ற ஒருத்தி உடன் வந்ததையே இருவரும் மறந்துவிட்டு, தங்களின் உலகில் உற்சாகமாக விளையாடிக்கொண்டிருக்க,
கரையில் அமர்ந்து அவர்களைக் கண்ட கவியின் உள்ளம் அந்த கடலலை போல் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.
பிரபாவும் ஆதினியும் தங்களை அறியாமலே மனதளவில் மிகவும் நெருக்கமாகிவிட்டதை உணர்ந்த கவிக்கு, ஏதோ சொல்லத் தெரியாத பயம் வந்து நெஞ்சை ஆக்கிரமித்துக்கொண்டது.
‘ இது சரியே இல்லை!!! அம்மு பிரபாகிட்ட இவ்வளவு ஒட்டிக்கிட்டா, நாளைக்கு அவனைப் பிரியிறப்போ ரொம்பவே ஏங்கிப் போயிடுவா!!!..’ என்றவளின் எண்ணமெல்லாம் இன்னும் அவனை விட்டு விலகிச் செல்வதில் தான் இருந்தது.
அப்போது அவள் சிந்தனையைக் கலைப்பதைப் போல்,
“அம்மா!! வாங்க ஒரு வாக் போகலாம்..” என ஆதினி வந்து கவியைப் பற்றி எழுப்ப,
அவளும் குழந்தைக்காக மற்றதை தற்காலிமாக மறந்து மெதுவாக நடக்கத் துவங்கினாள்.
பிரபஞ்சனும் அவர்களுடன் சேர்ந்து கொள்ள, ஆதினி தான் வலவலத்துக்கொண்டே வந்தாள்.
பெரியவர்கள் இருவரும் மெதுவாக நடந்து வர, ஆதினி சற்று வேகமாய் முன்னே ஓடத் துவங்கிவிட்டாள்.
குழந்தையின் மீது கண்ணை வைத்துக்கொண்டே,
“என்மேல என்ன கோபம் உனக்கு??” என பிரபா பேச்சைத் துவங்கினான்.
“தெரியாதா உனக்கு??” என்பது போல் கவி பார்த்து வைக்க,
“ப்ச் கவி!! அம்முக்கு செய்ய எனக்கு உரிமை இல்லையா??”
“என்ன உரிமை இருக்கு பிரபா???” என கைகளைக் கட்டிக்கொண்டு அவனை நன்றாக திரும்பிப் பார்த்தாள் கவி.
“என்ன உரிமை இல்லை… என் கவியோட பொண்ணு!! அவளுக்கு நான் செய்யாம வேற யாரு செய்வா?? செய்யக்கூடாதுன்னு சொல்லுவியா நீ??” என எகிறிக் கொண்டு வந்தான் பிரபஞ்சன்.
“பிரபா!! உனக்கு புரியுதா இல்லையா?? நீ நினைக்கிறது எதுவும் எப்பயும் நடக்காது”
“ப்ச்!! சும்மா எல்லாத்தையும் அதோடவே போய் கனெக்ட் பண்ணாத!! உன்னை என்கூட வச்சுக்கத்தான் நான் இப்படியெல்லாம் பண்றேனா???” என வெடித்தவன்,
“கவி!! நீ என் காதலை ஏத்துக்கிட்டாலும், ஏத்துக்கலைனாலும் எனக்கு அம்மு மேல இருக்க அன்பு மாறப்போறது இல்லை.. அவ என்னைக்கும் என் பொறுப்பு தான்.. நீ என் லவ்வை ஏத்துக்குட்டா அவளுக்கு அப்பாவா எல்லாம் செய்வேன்… ஏத்துக்கலைனாலும் ஒரு கார்டியனா அவளுக்கு எல்லாம் செய்யத்தான் போறேன்.. சோ எங்களுக்குள்ள நீ வராத!! ” என அவன் உறுதியாக கூறிவிட,
அவனை இயலாமையுடன் ஏறிட்ட கவி, ஒன்றும் சொல்லாமல் மீண்டும் தன் நடையைத் தொடர,
“நான் உன்னை எந்த விதத்துலயும் கம்பெல் பண்ணலை கவி!!! ஆனா ஒருநாள் உனக்கா என் காதல் புரியும்!! அப்போ உன்னை சுத்தி நீ இந்த உப்பு சப்பில்லாத காரணத்தை வச்சு நீ போட்டிருக்க வேலியை உடைச்சிட்டு நீயா என்னைத்தேடி வருவ!! அதுவரைக்கும் நான் காத்திருப்பேன்.. எனக்கு நம்ம காதல் மேல நம்பிக்கை இருக்கு!!!”
என்று என் காதல் என்று சொல்லாமல் நம் காதல் என்றவன், அவள் உணராத காதலையும் அவளுக்கு நினைவுபடுத்திவிட்டு, மௌனமாய் அங்கிருந்து சென்றுவிட்டான்.
செல்லும் அவனையே அமைதியாகப் பார்த்திருந்த கவி, அவளின் காதலை உணர்ந்து கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை!!
“இதமாய் உடலைத் தீண்டிச் செல்லும் தென்றலைப் போல்!!
சுகமாய் உன் நினைவுகள் இதயத்தை தீண்டிக் கொல்லுதே!!
error: Content is protected !!