Skip to content
Post Views: 4,429
அன்பு – 33 (எபிலாக்)
ஐந்து வருடங்களுக்குப் பிறகு…
Advertisement
சென்னை மாநகரில் இருக்கும் அந்த காலைப் பரபரப்பிற்கு சற்றும் குறையாமல் காணப்பட்டது பிரபஞ்சனின் கவிதாலயம் இல்லம்.
Advertisement
“அம்மு!!! இப்போ நீ ஜடை பின்ன வரலைன்னா, அம்மா கிளம்பிடுவேன்.. லேட் ஆச்சு!!!” என்று கத்திக் கொண்டிருந்தது சாட்சாத் நம் கவியே தான்.
Advertisement
வயது முப்பத்தி மூன்றைக் கடந்துவிட்டாலும், அவள் முகத்தில் நிலைத்துவிட்ட மகிழ்ச்சியில் இன்னும் இளமையாகவே காணப்படுகிறாள்.
Advertisement
இடுப்பில் தூக்கி செருகிய சேலையும், கொண்டையுமாக, வேர்க்க விறுவிறுக்க மகளுக்கும், தங்களுக்குமான உணவை அவள் தயார் செய்து கொண்டிருக்க,
கையில் தங்களுடைய இரண்டு வயது மகனுடன் அறையில் இருந்து வெளியே வந்தான் பிரபஞ்சன்.
“கவி!!! இந்தா இவனுக்கு நீ தான் வேணுமாம்.. ஒரே அடம்!! இவ்வளவு நேரம் சமாளிச்சுப் பார்த்தேன்.. ம்ஹும்.. இதுக்கு மேல முடியலை!!” என்று அவன் உதட்டைப் பிதுக்க,
அன்னையைக் கண்டதும் பிரபஞ்சனிடமிருந்து துள்ளிக்கொண்டு இறங்கிய குழந்தை,
“ம்மா!! ம்மா!! தூக்.. தூ” என்று கையைத் தூக்கிக்கொண்டு கவியின் புடவையை பற்றி இழுத்து அழகாய் வம்பு செய்தது.
“ஓய் படவா!! வந்துட்டியா?? நீ எழுந்துக்கிறதுக்குள்ள வேலையை முடிச்சிடலாம்னு பார்த்தேன்.. இனி எங்க??” என சந்தோஷமாய் சலித்துக்கொண்டவள், கைகளைக் கழுவிக்கொண்டு, அந்த செல்ல வாண்டை கைகளில் அள்ளி முத்தம் பதித்தாள்.
அதில் குழந்தையும் அவளின் முகத்தை எச்சிலால் நனைக்க,
இந்த அழகான காட்சியை புன்சிரிப்புடன் பார்த்தபடி கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தான் பிரபஞ்சன்.
“பிரபா!! லஞ்ச் செஞ்சிட்டேன்.. பிரேக்ஃபாஸ்ட் மட்டும் பார்த்துக்கோ.. நான் இவனுக்கு பால் கலந்து கொடுக்குறேன்!!” என்று கவி சொன்ன நேரம்,
“அம்மா!!! ஜடை பின்னி விடுங்க” என இடுப்பு வரை இருந்த கூந்தல் அசைந்தாட அறையில் இருந்து வேகமாக ஓடி வந்தாள் பன்னிரெண்டு வயது ஆதினி.
அதில் மகளை முறைத்த கவியோ,
“உன்னை அப்போவே கூப்பிட்டேன் தான?? நீ நல்லா பாத்ரூம்ல பாட்டு பாடி நேரத்தை ஓட்டிட்டு இப்போ வந்தா.. என்னால முடியாது.. உன் தம்பி விட மாட்டான்..” என்று கவி சொல்ல,
அதற்கேற்றது போல் குழந்தையும் கவியின் கழுத்தை கெட்டியாக பற்றிக்கொண்டு ஆதினியை முறைத்தது.
“போடா பொட்டேடோ!! உங்க அம்மாவை நீயே வச்சுக்கோ.. நான் என்னோட பிரபு கிட்ட போறேன்” என்று பிரபஞ்சனிடம் சென்ற ஆதினி,
“பிரபு!! இந்த தலையைக் கட்டி விடுங்க.. லேட் ஆச்சு!!” என்று உரிமையாக அவன் கைகளில் சீப்பைக் கொடுத்துவிட்டு, தலைவார வாகாய் திரும்பி நின்று கொண்டு, தன் அன்னைக்கும் தவிக்கும் பழிப்பு காட்டினாள்.
அவர்களின் குறும்பில் உண்டான புன்னகையுடனே, மகளுக்கு வலிக்காமல் பொறுமையாய் தலைவாரி முடித்த பிரபஞ்சன்,
“ஓகேவாடா அம்மு??? டைட்டா ஏதும் பின்னலையே?? வலிச்சா சொல்லு!! நம்ம கழட்டிட்டு பின்னலாம்” என்று வேறு கேட்க,
“வேண்டாம் பிரபு.. பெர்ஃபக்ட்!!!” என தன் ஜடையைத் தொட்டுப் பார்த்து உறுதிசெய்து கொண்ட ஆதினி,
“தேங்க் யூ பிரபு!!!” என அவன் கன்னத்தில் எக்கி மென்முத்தம் பதிக்க, பதிலுக்கு அவனும் தன் மகளைக் கொஞ்சிக் கொண்டான்.
என்றும் போல் இன்றும் அவர்களின் பந்தத்தை தன்னை மறந்து ரசித்தபடி கவி நின்றுவிட,
“ம்மா!! பசிக்கி!!!” என கவியின் கன்னத்தைப் பற்றி தன்புறம் கவனத்தைத் திருப்பிக் கொண்டான் அந்த சின்ன வாண்டு.
அவன் சரியான அம்மா கோண்டு!!!
சற்று நேரம் கூட அவளை விட்டு அங்கு இங்கு அசைந்துவிட மாட்டான்.
“ரொம்ப பண்ற டா!! அவளைத் தொடக் கூட விட மாட்டேங்குற!!!” என பிரபஞ்சன் கூட அடிக்கடி புலம்பும் அளவிற்கு அய்யாவின் அலும்பல்கள் இருக்கும்.
மகனின் குரலில் கலைந்த கவியும், அவனுக்காக பால் கலக்கிக்கொண்டு மகனுடன் ஐக்கியம் ஆகிவிட,
இங்கே பிரபஞ்சன் தன் மகளுக்கு பிடித்தபடி காலை உணவு தயாரித்து, ஆதினியை சாப்பிடவும் வைக்க, பதிலுக்கு மகளும் தந்தைக்கு உணவூட்டி விட்டே கிளம்பினாள்.
“கவி!! நீ சாப்பிட்டு இரு!! நான் அம்முவை ஸ்கூல்ல ட்ராப் பண்ணிட்டு வரேன்..” என்று மனைவியிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டுவிட்ட பிரபா, அங்கே எதிர்த்த வீட்டில் தயாராகியிருந்த மதுவின் மகள் வர்ஷினியையும் அழைத்துக்கொண்டு பள்ளிக்கு விரைந்தான்.
போகும் வழியில், சலசலக்கும் நீரோடை போல் ஆதினி பேசிக்கொண்டே வர, மென்னகையுடன் அவளின் பேச்சை ரசித்தபடி வண்டியை செலுத்திக்கொண்டிருந்தான் பிரபஞ்சன்.
“பிரபு!!! இன்னைக்கு ஈவ்னிங் சாங் பிராக்டிஸ் இருக்கு.. அதுனால முடிய லேட் ஆகும்..” என்று நியாபகம் வைத்து தகவல் சொன்ன ஆதினி,
பின் தான் பாடப்போகும் பாடல் பற்றி பிரபாவிடம் கலந்தாலோசிக்க, அதற்குப் பின்னான நேரங்கள் எல்லாம் இசையோடு இனிமையாகக் கழிந்தது.
கால் மணிநேர பயணத்தில் அவர்களின் பள்ளி வந்துவிட, ஆதினியையும் வர்ஷினியையும் அங்கே இறக்கி விட்டு, புன்னகையுடன் விடைபெற்று மீண்டும் தன் மனைவியைத் தேடி ஓடினான்.
இந்த ஐந்து வருடங்களில் எத்தனையோ மாற்றங்கள் அவன் வாழ்வில்!!! ஆனால் இந்த முறை அனைத்தும் நல்ல விதமாகவே!!!
தெளிவான மனதுடன் கவி திருமண பந்தத்தில் கால் எடுத்து வைத்திருந்தாலும், சட்டென அனைத்தும் எதிர்பார்த்ததைப் போல் சீராகப் போய்விடவில்லை அவர்களுக்கு.
பல வருடங்களாக காதலித்தார்கள் என்றாலும், தாம்பத்தியம் என்று வருகையில், இருவரும் தயங்கி தான் நின்றனர்.
எங்கே அவளைக் காயப்படுத்திவிடுவோமோ என அவன் தயங்கி நின்றால், எங்கே அவன் அருகில் வந்தால், பழசை எண்ணி இவனை வருத்தி விடுவோமோ என மற்றவர்களுக்காக யோசித்தே பல மாதங்கள் திருமணமாகியும் தள்ளி நின்றே உறவாடினர்.
தாம்பத்யம் தான் இல்லையே தவிர, மனதளவில் ஒருவரை ஒருவர் மிகவும் நெருங்கியிருக்க, அவர்களுக்குள் இருந்த பந்தம் மேலும் வலுவானது.
அதிலும், ஆதினிக்கும் பிரபஞ்சனிற்குமான உறவு, யாரின் கட்டாயத்தின் பேரிலும் நிகழாமல், ரவிவர்மன் ஓவியத்தைப் போல் அவ்வளவு அழகாய் நாளுக்கு நாள் வளர்ந்து, அவர்களின் பிணைப்பு இறுகியது!!!
இருவரின் மனநிலை அறிந்த மது தான், ஆதினியை தன்னுடன் ஒருவாரம் போல் சுற்றுலா அழைத்துச் சென்று, இவர்களுக்குத் தனிமை வழங்கி, சில பல திட்டுக்களோடு அறிவுரையும் சேர்த்து வழங்க, பலப்பல தயக்கங்களையும் தடைகளையும் உடைத்துக்கொண்டு இரு உடலும் ஒரு உயிரென கலக்கவே பல மாதங்கள் எடுத்துக்கொண்டது.
மெல்ல மெல்ல மொட்டு மலர்வது போல், இயல்பாய் அதே சமயம் தன் இணையைக் காயப்படுத்தாதபடி பிரபஞ்சன் அவளைத் தன் காதலால் மலர வைக்க, அவனின் அன்பில் உருகித் தான் போனது பெண்ணின் மனது.
கணவன் மனைவியாக வாழ்ந்துவிட்டாலும், ஆதினியைத் தவிர வேறு குழந்தை வேண்டாம் என்பதில் பிரபஞ்சன் உறுதியாக இருக்க, இறுதியில் கவியின் பிடிவாதத்தின் பெயரில், பல மருத்துவ சிக்கல்களை தன் அன்னைக்கு பரிசளித்து அவர்களின் மூன்றாவது திருமண நாளன்று இந்த பூமியில் வந்து ஜனித்தான் ஜனார்த்தனன், சுருக்கமாக ஜனா.
தந்தையைப் போலவே அன்னை மீது அதீத காதல் கொண்டு பிறந்ததாலோ என்னவோ, கவியை விட்டு இம்மியும் அசைய மாட்டான்.
தனிப்பட்ட வாழ்க்கை தெளிந்த நீரோடை போல் சென்றாலும், தொழில்முறை வாழ்க்கையிலும் இருவரும் இணைந்து வெற்றி பெற்றிருந்தனர்.
இருவருக்கும் திருமணம் முடிந்த கையோடு, கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான சுயதொழில் அமைப்பு ஒன்றை உருவாக்கிய பிரபஞ்சன், அங்கே அப்படியான பெண்களுக்கு, கைத்தொழிலையும் கற்றுக் கொடுத்து அவர்களுக்கு வாழ்வாதாரத்திற்கும் வழிவகை செய்யும்படி ஏற்பாடு செய்திருந்தான். பண முதலீடு செய்தது பிரபஞ்சனாக இருந்தாலும், அந்த அமைப்பின் முழு நிர்வாகமும் கவியின் கைகளில் தான்.
ஏழு கைம்பெண்களோடு ஆரம்பித்தது, இந்த ஐந்து வருடங்களில் முன்னூற்றி ஐம்பது பெண்களைக் கொண்டு வளர்ந்து கொண்டே சென்று வருகிறது.
பிரபஞ்சனின் திரைத்துறை நண்பர்களும் இதற்கு பணஉதவி செய்து வருவதால், இந்த அமைப்பின் வளர்ச்சி எந்த தங்கு தடையுமின்றி நன்முறையில் வளர்ந்து கொண்டே போகிறது.
இதுமட்டுமல்லாமல், கவி டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் ஸ்டாக் முதலீடுகள் மூலம் வேறு, தனக்கென மாதமாதம், கணிசமான தொகையை சம்பாதிக்க, அதுவே அவளுக்கு பெரும் தைரியத்தையும் தன்னம்பிக்கையும் வழங்குகிறது.
மறுபுறம் பிரபஞ்சன் பாடல் பாடுவதோடு நிற்காமல், தன் திறமையை இசையமைப்பதிலும் வெளிப்படுத்த, விளைவு இதுவரை ஐந்து படத்திற்கு இசையமைத்துவிட்டான்.
அதில் இரண்டு படங்களுக்கு தென்னிந்திய திரைப்பட விருதுகள் சார்பில் சிறந்த இசையமைப்பாளர் விருது வேறு கிடைத்தது கூடுதல் சிறப்பு.
பலப்பல இன்னல்களையும் இடர்களையும் கடந்து, வாழ்க்கையில் ஒன்றாய் இணைந்த அந்த இரு இதயங்களை, இறுதியில் இறைவன் கைவிடவில்லை.
வாழ்க்கையை வெறுத்துவிட்ட நிலையில் இந்த சென்னையில் காலெடுத்து வைத்த பிரபஞ்சனுக்கு, அவன் காத்திருப்புக்கு பரிசாய் அழகான குடும்பமும் அன்பான மனைவியும் அமைந்து விட,
பிடித்தவருடன் வாழத் துவங்கியப்பின் இந்த பொல்லாத வாழ்க்கை கூட மிகவும் பிடித்துப் போனது பிரபஞ்சனுக்கு..
கடந்த காலத்தை அசைபோட்டபடி பிரபஞ்சன் புன்னகையுடன் வாகனத்தை அதன் இடத்தில் நிறுத்திவிட்டு, வீட்டிற்குள் நுழைய,
அங்கே இன்னமும் கவியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்த மகனைக் கண்டு அவனின் புன்னகை பெரிதாய் விரிந்தது.
“அன்பு செய்யுறதுல என்னை மிஞ்சிடுவ போலயே டா மகனே!!!” என வலுக்கட்டாயமாக அவனை கவியிடமிருந்து பிரித்து எடுத்த பிரபஞ்சன்,
அவன் அழுவதையும் பொருட்படுத்தாது,
“நீ ஃபர்ஸ்ட் சாப்பிடு!! இவனை நான் பார்த்துக்கிறேன்” என மனைவிக்கு ஓய்வு கொடுத்துவிட்டு,
அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் மகனுடன் மதுவின் வீட்டிற்கு சென்றுவிட்டான்.
“அடடா!!! நல்லா அலாரத்தை முழுங்குன மாதிரி ஆரம்பிச்சிட்டியா?? நானே நைட் ஷூட்டிங் முடிஞ்சு இப்போ தான் வந்து படுத்தேன்.. அது பொறுக்காதே உனக்கு!!” என தூக்கக் கலக்கத்துடன் எழுந்து வந்த மது, ஜனாவை முறைக்க,
பதிலுக்கு குழந்தையும் தன் அழுகையை நிறுத்திவிட்டு மதுவை நன்றாக முறைத்தது.
“ஓய்!! என்ன முறைப்பு?? கண்ணை நோண்டி உன் கரடி பொம்மைக்கு குடுத்திடுவேன்!!” என்று கண்ணை உருட்டி மிரட்டிய மதுவை, இன்னும் பலமாய் முறைத்த குழந்தை,
“அடி பிச்சி!! அம்மாட்ட சொல்லி!!” என ஒற்றை விரல் நீட்டி தன் பங்கிற்கு மிரட்டியது.
எப்போதும் போல் இவர்களின் சண்டையை சுவாரசியமாக பார்த்தபடி பிரபஞ்சன் அமர்ந்துவிட,
அவனுக்கும் சேர்த்து காபி தயாரித்து கலக்கி வந்த கவின்,
“ஏன் மது அவனைப் போட்டு வம்பிழுத்துட்டே இருக்க?? குழந்தையைக் கூட விட மாட்டியா நீ??” என செல்லமாய் சலித்துக்கொண்டே,
“இந்தா டா நல்லவனே!!” என பிரபஞ்சனின் கைகளில் காபிக் கோப்பையைத் திணித்தான்.
“காலையிலேயே என் புருஷன் கிட்ட எனக்கு திட்டு வாங்கிக் கொடுக்கத் தான் உன் புள்ளையைத் தூக்கிட்டு வந்தியா டா பிரபா??” என அடுத்து அவள் பிரபாவைப் பிடித்துக் கொள்ள,
அவர்களின் பஞ்சாயத்தை தீர்த்து வைப்பதற்குள் கவினுக்குத் தான் கண்ணைக்கட்டிவிட்டது.
அதற்குள் கவியும் உண்டு முடித்து வந்திருக்க,
மீண்டும் அன்னையைக் கண்டுவிட்ட உற்சாகத்தில் அவளிடம் தாவிவிட்டான் ஜனார்த்தனன்.
“நீ எதுக்கு அதுக்குள்ள வந்த?? கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க வேண்டிதான கவி?? நான் பார்த்துக்க மாட்டேனா” என பிரபா அக்கறையாகக் கேட்க,
“நல்லா பார்ப்பியே!! அவனையும் என்னையும் சண்டை போட விட்டுட்டு நல்லா வேடிக்கை பார்ப்ப நீ!!” என்று மது இடைபுகுந்தாள்.
அதில் பட்டென சிரித்த கவி,
“உனக்கு இன்னைக்கு அந்த டைரக்டர் கூட மீட்டிங் இருக்குல.. நீ கிளம்பலையா??” என்று விசாரிக்க,
“இல்லை கவி!! அவருக்கு இன்னைக்கு ஏதோ எமர்ஜென்சியாம்.. சோ மீட்டிங் கேன்சல் பண்ணிட்டாரு.. நான் இன்னைக்கு ப்ரீ தான்” என தளர்வாக சோபாவில் காலை நீட்டி அவன் சாய்ந்து விட,
“எனக்கும் இந்த வீக் எண்ட் ஷூட்டிங் இல்லை.. போஸ்ட் பிரடக்ஷன் வேலை தான் அடுத்து.. பேசாம பீச் ரிசார்ட் போவோமா?? மது உனக்கு ஓகே வா??” என்று கவின் சட்டென தோன்றிய யோசனையைப் பகிர,
மற்றவர்களுக்கும் அந்த ஓய்வு அவசியமானதாகவே இருந்தது.
வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருக்காமல், அவ்வப்போது இப்படி குடும்பத்துடன் வெளியே சென்று விடுமுறையைக் கழித்து விட்டு வருவது இவர்களுக்கு வழக்கம் தான் என்பதால், சட்டென அனைவரும் உற்சாகமாக சம்மதித்துவிட,
“அம்முக்கு இன்னைக்கு சாங் பிராக்டிஸ் இருக்கு.. சோ நீங்க எல்லாம் முன்னாடி போயிடுங்க.. நான் அம்முவை அழைச்சுட்டு உங்க கூட ஜாயின் பண்ணிக்கிறேன்.” என மகள் கூறியதை நினைவு வைத்து பிரபா முடிவெடுக்க,
அவனின் கூற்றுப்படி, மூன்று மணி போல் வர்ஷினி வந்ததும், கவின் குடும்பத்துடன் கவியும் ஜனாவும் ஈ.சி. ஆரில் அமைத்திருந்த அந்த பிரைவேட் பீச் ரிசார்ட்டிற்கு கிளம்பிச் சென்றனர்.
பிரபாவோ, பொறுமையாக மகளை அழைத்துக்கொண்டு, அவளுக்குப் பிடித்த உணவகத்திற்கு அழைத்துச் சென்று, சாப்பிட வைத்த பின்பே வண்டியைக் கிளப்பினான்.
அதிலும் போகும் வழியெங்கும் தந்தையும் மகளும் சேர்ந்து பாட்டு கச்சேரி வேறு நடத்திக்கொண்டு, தங்களுக்கென தனி உலகில் மிகவும் அனுபவித்து அந்த பயணத்தை ரசித்தபடி ரிசார்டை வந்தடைந்தனர்.
அதிலும் அவர்கள் வந்த சமயம், மற்ற அனைவரும் இரவு உணவையே உண்டு முடித்திருக்க,
“நான் சொல்லலை!! அவரும் அவரோட பொண்ணும் நல்லா ஊர் சுத்திட்டு பொறுமையா தான் வருவாங்கன்னு.. ” என்று கவி பொய்யாய் சலித்துக்கொண்டாலும், அவர்களின் பிணைப்பைக் கண்டு உள்ளுக்குள் அதிகத்திற்கும் அதிகம் மகிழ்ந்தாள்.
“ப்பா!!! தூக்கி!!” என்று ஜனா அதிசயமாக பிரபஞ்சனிடம் தாவ,
அவனின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது.
“என்னடா அதிசயமா என்கிட்ட எல்லாம் வர?? கீழ எதுவும் விழுந்துட்டியா?? அடி எதுவும் பட்டிருச்சா??” என்று குழந்தையின் தலையைத் திருப்பி வேறு பிரபஞ்சன் ஆராய,
அவன் தோள்களில் பட்டென ஒரு அடி வைத்த கவி,
“ஈவ்னிங் இருந்து தூக்கியே வச்சது கை வலிக்குதுன்னு சொன்னேன்.. அதான் என் சமத்து சக்கரக்கட்டி அதை புரிஞ்சுட்டு, என்னைத் தொல்லை செய்யக்கூடாதுன்னு உங்கிட்ட வந்தா ஓவரா பேசற நீ அவனை!!” என்று மிரட்ட,
ஜனாவும், இன்னும் ரெண்டு அடி சேர்த்து போடு மா என்பது போல் பார்த்து வைத்தான்.
அதன் பின் பிரபாவும் ஆதினியும் அளவாய் சாப்பிட்டுக்கொண்டு எழ, அனைவருமாக கடலுக்கு நடை போட்டனர்.
சிறுவர்கள் மூவரும் ஓடி ஆடி விளையாட, பெரியவர்கள் அப்படியே தளர்வாக அமர்ந்து, குழந்தைகளை கவனித்தபடி, தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.
“கவி!! ஷோல்டர் ரொம்ப பெயினா இருக்கா?? டாக்டர் கிட்ட வேணும்னா போவோமா??” என்று பிரபா கவியிடம் கேட்க,
“யப்பா டேய்!! உன் அலும்பு தாங்கலை டா!!” என்று மது கேலி செய்ய,
அதையெல்லாம் கண்டுகொள்ளாத பிரபா, கவிக்கு வலிக்கவில்லை என்று பலமுறை கேட்டு உறுதிப்படுத்தியபின்பு தான் இயல்பானன்.
காலங்கள் கடந்தும் அவர்களுக்குள், ஒருவரின் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பும் அக்கறையும் நாளுக்கு நாள் அதிகரிப்பதை கண்கூடாக கண்ட மதுவிற்கு, அவர்கள் காதலே அழகாய்த் தோன்றும்.
அதிக ஆர்ப்பாட்டம் இல்லாத, தாய்மடி தரும் இதத்தை போல இனிமையான ஒரு காதல் அவர்களுடையது என அவர்களின் காதலை இன்று போல் அவ்வப்போது அவள் ரசிப்பதும் உண்டு.
குழந்தைகளுக்கு அதற்குள்ளே ஏதோ சண்டை வந்திருக்க,
“ம்மா!! வஷி அக்கா அடி!!” என அழுதுகொண்டே வந்துவிட்டான் ஜனா.
“அவ தொட்டாலே அடிச்சிட்டான்னு சொல்லிடுவானே உன் மகன்!!” என்று சிரித்த மது,
“டேய் இங்க வா!! என் பொண்ணு உன்னை அடிச்சாளா??” என்று பஞ்சாயத்து வைக்க அழைக்க,
“வத மாட்டேன்!!” என கவியின் கழுத்தைக் கட்டிக்கொண்டான் சிறுவன்.
“ஜனா!! அப்பாகிட்ட வா.. அம்மாக்கு வலி இருக்குள்ள.. ” என்று ஜனாவைத் தூக்கி சமாதானம் செய்த பிரபா,
குழந்தைகளை தன்னருகில் அமர்த்திக்கொண்டு கதை சொல்லத் துவங்கிவிட்டான்.
“டேய் பிரபா!! சொன்ன கதையே எத்தனை தடவை சொல்லுவ!! பேசாம பாட்டு பாடேன்!!” என்ற கவின் அந்த கடற்கரை மணலிலே படுத்துவிட்டான்.
“என் பாட்டை தான அடிக்கடி கேட்கிறீங்க.. அம்மு பாடி கேட்டதில்லையே.. இப்போ எனக்கு பதிலா என் பொண்ணு சூப்பரா ஒரு பாட்டு பாடுவா.. ” என்று பெருமையாக பிரபா சொல்லிவிட்டு,
“அம்மு பாடுடா!!” என்று மகளை ஊக்கப்படுத்த,
அவளும் புன்னகையுடன் குரலை சரி செய்து கொண்டு பாடத் துவங்கினாள்.
“கனவுகள் தேய்ந்ததென்று கலங்கிட கூடாதென்று
தினம்-தினம் இரவு வந்து தூங்கச் சொல்லியதே
எனக்கென உன்னை தந்து உனக்கிரு கண்ணை தந்து
அதன் வழி எனது கனா காணச் சொல்லியதே
நீ அடம் பிடித்தாலும் அடங்கி போகின்றேன்
உன் மடி மெத்தை மேல் மடங்கி கொள்கின்றேன்
உனக்கென்ன வேணும் சொல்லு? உலகத்தை காட்டச் சொல்லு”
மிருதுவான குரலில் ஆதினி பாடி முடிக்க, அந்த இரவின் நிழலும், கடலின் ரீங்காரமும், ஆதினியின் குரலும் சேர்ந்து செய்த மாயத்தில் அனைவரும் சொர்க்கத்தில் இருப்பதைப் போல் உணர்ந்தனர்.
பாடல் முடிந்து இரண்டு நிமிடங்கள் கழித்தே அதன் தாக்கத்தில் இருந்து வெளிவந்த பிரபஞ்சன்,
“அம்மு!!! கலக்கிட்ட டா!!!” என பெருமிதத்துடன் அவளைக் கட்டிக்கொண்டு முத்தம் பதிக்க,
“ரொம்ப நல்லா பாடின அம்மு!!” என கவியும் மகளைப் பாராட்டினாள்.
அவர்களைத் தொடர்ந்து அனைவரின் பாராட்டு மழையிலும் நனைந்த அம்மு, பிரபஞ்சனைத் தான் புன்னகையுடன் பார்த்திருந்தது.
அந்த பார்வைக்கான அர்த்தம், அவன் மட்டுமே அறிந்தது!!!
இரத்த பந்தம் இல்லை என்றாலும், அதை விட ஆழமான சொந்தம் இருவருக்குமிடையில் இருப்பது!!!
அதற்குள்ளாகவே ஜனாவிற்கு தூக்கம் வந்திருக்க, அவனைத் தொடர்ந்து ஒவ்வொருவராய் எழுந்துகொள்ள, இரு குடும்பமும் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட காட்டேஜிற்குள் நுழைந்து குழந்தைகளை சுத்தம் செய்து தூங்க ஆயத்தம் செய்தனர்.
விளையாடிய களைப்பினில் குழந்தைகளும் விரைவிலேயே உறங்கிவிட,
“கவி!! வரியா?? ஒரு வாக் போயிட்டு வரலாம்!!!” என பிரபா அழைக்க,
ஜனா இப்போதைக்கு எழுந்து கொள்ள மாட்டான் என்பதால், அவன் உருளாமல் தலையணை வைத்துவிட்டு, பிரபஞ்சனின் கரம் கோர்த்துக்கொண்டு கடலோரம் நடை போட்டது அவனின் கவி.
நிலவின் குளுமை இருவரையும் சிலிர்ப்பூட்ட, கடல் காற்று முகத்தில் மோத, காதலியுடன் அந்த ஏகாந்த இரவில் கைகோர்த்து நடப்பது ஏதோ அழகான கனவு போல் இருந்தது பிரபஞ்சனிற்கு.
“ரொம்ப தூரம் வந்துட்டோம்ல!!!” என அவர்களின் வாழ்க்கைப் பயணத்தைத் திரும்பிப் பார்த்தபடி பிரபா சொல்ல,
“துணையா நீ இருந்தா, எதுவுமே தூரமில்லை பிரபா!!!” என்றாள் கவி அவன் கண் பார்த்தபடி!!!
அதில் மென்னகை புரிந்த பிரபஞ்சன், கோர்த்திருந்த கைகளில் அழுத்தம் கொடுக்க,
கவி வாகாய் அவனின் தோள் சாய்ந்து கொண்டாள்.
எங்கெங்கோ ஓடி திரிந்து, அவளுக்கான இடத்தை அடைந்துவிட்ட நிம்மதி பெண்ணின் மனதில்.
புன்னகையுடன் அவளின் பாரத்தை சுகமாய் சுமந்து கொண்டான் பிரபஞ்சன்.
அவர்கள் முன் நீண்டு கிடந்த கடற்கரை போல், அவர்களுக்கான வாழ்க்கையும் இன்னும் நீளமாய் அவர்களுக்கான அதிசயங்களை தனக்குள் புதைத்து வைத்துக் காத்திருந்தது.
இன்று போல குறையாத அன்புடனும், நிறைவான காதலுடனுடன் இவர்கள் மீதமிருக்கும் வாழ்க்கையைக் கடப்பார்கள் எனும் நம்பிக்கையுடன் அவர்களிடமிருந்து விடைபெறுவோம்.
“தோள் சாயும் போதும், துவண்டு போகும் போதும்,
பிடித்துக்கொள்ள ஒரு கரம் இருந்தால் போதும்,
இந்த பிறவியை கடப்பதற்கு!!!”
நன்றி!!
error: Content is protected !!
சூப்பர் ஸ்டோரி வாழ்த்துக்கள் 💐🥰
Thank you ma ❤️
Super story sister
அருமை அருமை
Thank you ma ❤️