Skip to content
Post Views: 3,897
அன்பு – 6
“அஞ்சலி!! எப்போமா வருவ?? எங்களுக்கு ஒரு பங்ஷனுக்கு போகணும்னு காலையிலேயே உன்கிட்ட சொன்னேன் தான?? இன்னும் வராம என்ன பண்ற?? உன்னால தான் லேட் எனக்கு!!!” என சிடுசிடுத்தார் அந்த பெண்மணி!!
Advertisement
“இதோ கிளம்பிட்டேன் சரளா மா!! இன்னைக்கு ஹாஸ்பிடல்ல கொஞ்சம் லேட் பண்ணிட்டாங்க.. இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவேன்.. சாரி மா” என எதிர்ப்புறம் தவிப்புடன் மொழிந்தாள் அஞ்சலி.
“ம்ம்.. ம்ம்… சீக்கிரம் வரப்பாரு!! என்னோட கொழுந்தனோட மச்சினன் கல்யாணம்.. நாங்க தான் முன்னால போய் நின்னு எல்லாம் செய்யணும்!!” என உத்தரவு போல் கூறியவர், அஞ்சலியின் பதிலுக்கு காத்திராமல் அழைப்பைத் துண்டித்திருந்தார்.
Advertisement
Advertisement
“அண்ணய்யா!! கொஞ்சம் வேகங்கா வெல்லு!!!” என அந்த ஆட்டோ ஓட்டுனரிடம் சொல்லியவளின் நினைவெல்லாம் மகளிடமே!!
நிச்சயம் தான் சீக்கிரம் வராததற்கு, வார்த்தைகளால் அந்தப் பிஞ்சை வதைத்திருப்பார் அந்த சரளா அம்மாள் என அஞ்சலிக்குத் தெரிந்திருந்தாலும், அவரை விட்டாலும் மகளை பார்த்துக் கொள்வதற்கு நம்பிக்கையானவர்கள் வேறு யாரும் இல்லையே அவளுக்கு!!!
Advertisement
உயிரென நினைத்தவனை என்றோ பிரிந்திருக்க, உறவென இருந்த பெற்றவர்களும் ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு விபத்தில் தவறியிருந்தனர்!!
என்னதான் பெற்றவர்கள் மீது, கடலளவு கோபமும், ஆதங்கமும் இருந்தாலும், அவர்களின் இழப்பு பெண்ணவளை மிகவும் பலவீனப்படுத்தியிருந்தது.
அவர்கள் இருந்தவரையில் அம்முவின் பொறுப்பை முழுமையாக பொற்கொடியே ஏற்றுக்கொள்ள, அஞ்சலி நிம்மதியாக வேலைக்குச் சென்று வந்து கொண்டிருந்தாள்.
ஆனால் திடீரென ஒரு நாள் அனைத்தும் முடிந்து போக, இடிந்து போய் அமர்வதற்குக் கூட அவளுக்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை இந்த சமுதாயம்!!
அழுது கொண்டிருக்கும் மகளை சமாளிக்கவா?? இல்லை கடனை இப்போதே கொடுக்க வேண்டும் என கழுத்து மேல் கத்தி வைப்பது போல் வந்து நின்று அச்சுறுத்தும் கடன்காரர்களை சமாளிக்கவா?? என அஞ்சலி துவண்டு போய் இருந்த சமயம், அவளைத் தாங்கிப்பிடித்து அவளுக்கு உறுதுணையாக இருந்தது இந்த சரளா அம்மாவின் கணவர் கைலாசம் தான்.
சேதுராமனும் இவரும் பால்ய நண்பர்கள் என்பதனால், நண்பரின் மகள் இக்கட்டில் நிற்கும் போது கை கட்டி வேடிக்கை பார்க்க மனிதருக்கு மனம் வரவில்லை.
எனவே மனைவியின் வசைபாட்டுகளை பொருட்படுத்தாமல், தன்னுடைய பென்ஷன் தொகையைக் கொண்டு கடன்காரர்களை சரிகட்டியவர், அஞ்சலியிடம் அவர் கொடுத்த பணத்திற்கு மாதம் ஒரு ரூபாய் வட்டி என கணக்கிட்டு ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் வாங்கிக் கொள்வார், அதுவும் அவர் மனைவியின் கடுஞ்சொற்களுக்கு பயந்தே!!!
இரண்டாம் வகுப்பு பயிலும் அம்முவிற்கு, மாலையே பள்ளி முடிந்துவிடும் என்பதால், இரவு அஞ்சலி வேலை முடித்துவிட்டு வரும் வரையில் குழந்தையையும் அவர்களே கவனித்துக்கொள்வதாகக் கூறிவிட, அதைவிட்டாலும் அவளுக்கு வேறு வழி இல்லை என்பதால், அஞ்சலியும் முடிந்தளவு விரைவாக வந்து குழந்தையை அழைத்துக் கொள்வாள்!! என்றாவது ஒருநாள், இன்று போல் சற்று தாமதமாகி விட்டால், சரளாவை சரி கட்டுவது மிகவும் சிரமமாகிப் போகும்!!
இன்றும், சரளா குழந்தையை என்னென்ன பேசி வைத்தாரோ என பயந்து கொண்டே அவள் பயணிக்க, சரியாக இருபது நிமிடத்தில் அவள் இறங்க வேண்டிய இடம் வந்திருந்தது.
ஆட்டோக்காரருக்கு பணம் செலுத்திவிட்டு அஞ்சலி இறங்க, அங்கு வாசலிலே கன்னத்தில் இரு கைகளையும் முட்டுக்கொடுத்து சோக சித்திரமாய் அமர்ந்திருந்தாள் அம்மு என்றழைக்கப்படும் ஆதினி!!
“அம்மு!!!” என அன்னையின் குரல் கேட்டதும் குழந்தையின் கண்களில் அப்படி ஒரு வெளிச்சம்.
“ம்மா!!!!” என பசுவைத் தேடும் கன்று போல், வேகமாக தன்னை நோக்கி ஓடி வந்த மகளை அள்ளி அணைத்து உச்சி முகர்ந்த அஞ்சலியின் நெஞ்சில் அப்படி ஒரு பாரம்!!!
தன்னுடன் இருக்கும் நேரத்திற்கு மகள் மிகவும் ஏங்குகிறாள் என்று உணர்ந்தும், அவளுக்கான நேரத்தை சரிவர கொடுக்க முடியாத தன் நிலையை அறவே வெறித்தாள் அஞ்சலி!!
இருந்தும் முகத்தில் அதைக்காட்டாமல்,
“அம்மு!! ஸ்நாக்ஸ் எதுனா சாப்பிட்டியா??? பசிக்குதா??” என கேட்டுக்கொண்டே மகளையும் தூக்கிக்கொண்டு முன்னே நடக்க,
“பாட்டி தோசை ஊத்தி கொடுத்தாங்க!!!” என்ற மகளின் பதிலில் அன்னையுள்ளம் திருப்தியடைந்தது.
யோசிக்காமல் வார்த்தையை விட்டுவிட்டாலும், குழந்தையின் பசியறிந்து சரியான நேரத்தில் அன்னமிட்டு விடுவதில் சரளாவைக் குறை கூற முடியாது!!
“இதான் நீ சீக்கிரம் வர லட்சணமா??” என கேட்டுக்கொண்டே அம்முவின் பள்ளிப்பையுடன் வெளியே வந்த சரளா சர்வ அலங்காரத்துடன் காட்சியளித்தார்.
“மன்னிச்சிடுங்க சரளா மா!!! இன்னைக்கு ஷிஃப்ட் மாத்தி விடுற அக்கா வரதுக்கு கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.. அதான்” என காரணம் சொன்ன அஞ்சலியை கண்டுகொள்ளாமல்,
“அடியே சின்னக்கழுதை!!! வெறும் தோசையை சாப்பிட கஷ்டப்படுவியேன்னு உனக்காக சட்னி செஞ்சு கொடுத்தா, அதைத் தொட்டு கூட பார்க்காம, வேஸ்ட்ல போட்டிருக்க!!!” என அம்முவின் கதைப் பிடித்து வலிக்காமல் திருகினார் சரளா.
“எனக்கு தான் தேங்காய் சட்னி பிடிக்காதுல!!” என உதட்டை பிதுக்கிக் கொண்டு கூறிய குழந்தையை பொய்யாய் முறைத்த சரளா,
“கொழுப்புடி ஆனாலும் உனக்கு!!!” என குழந்தையின் குமட்டில் இடித்தவர், பின் முத்தம் வைத்து கொஞ்சிக் கொண்டார்.
அதற்குள், கைலாசம் வீட்டை அடைத்துவிட்டு வெளியே வந்திருக்க,
“எல்லாம் ஆஃப் பண்ணிருக்கான்னு செக் பண்ணிட்டீங்க தானே??” என கணவரிடம் கேட்டு சரி பார்த்துக்கொண்டவர்,
“நாங்க போயிட்டு வர ரெண்டு, மூணு நாள் ஆகும் அஞ்சலி!!! என் மகன் வேற, அங்க வந்து ரெண்டு நாள் இருந்துட்டு போன்னு ஒரே கரைச்சல் பண்றான்.. அதுனால கல்யாணத்தை முடிச்சிட்டு இன்னும் ரெண்டு, மூணு நாள் கழிச்சி தான் வருவோம்.. அதுவரைக்கும் இந்த சின்னக்கழுதையை ஒழுங்கா பார்த்துக்கோ!! வேலை வேலைன்னு இவளை ஒத்தையில விட்டுடாத!!!” என அதட்டல் போல் சொல்லியவரின் குரலில் மறைந்திருந்த அக்கறையை அஞ்சலியும் அறிந்தே இருந்தாள்.
கைலாசமும் தன் பங்கிற்கு சில அறிவுரைகளை அவளுக்கு வழங்கியவர், அங்கே தங்களுக்காக காத்திருந்த வாகனத்தை நோக்கி விரைந்தார்.
“சரிம்மா பார்த்து இருங்க!! எதுனாலும் கால் பண்ணு!! நாங்க வரோம்!!” என்று அவர்கள் விடைபெற்று கிளம்பிச் செல்ல,
தாயும் மகளும் இரண்டு வீடுகள் தள்ளி இருந்த அவர்களின் வசிப்பிடத்திற்கு மெதுவாய் நடைபோட்டனர்.
“ம்மா!! இன்னைக்கு ஸ்கூல்ல என்னாச்சு தெரியுமா???” என்று ஆரம்பித்த சின்னசிட்டுக்கு, தன் அன்னையிடம் பகிர்வதற்கு ஆயிரம் கதைகள் இருக்க,
வீடு வந்து, முகம், கை, கால் கழுவி, உடைமாற்றியபின்பும் குழந்தையின் பேச்சு ஓயவில்லை!!!
மகளின் முகத்தையே வாஞ்சையாக பார்த்திருந்த அஞ்சலி,
“அம்மு!!! உனக்கு பிடிச்ச சேமியா கிச்சடி செய்வோமா??” என நேரமாவதை உணர்ந்து கேட்க,
“வேண்டாம்மா!! பாட்டி டூ தோசா சுட்டு தந்தாங்க!! அதை ஃபுல்லா சாப்பிடலைனா அந்த ஓல்ட் லேடி என்னை திட்டிட்டே இருப்பாங்கன்னு ஃபுல்லா சாப்பிட்டேன்… எனக்கு எதுவும் வேண்டாம் ம்மா!!” என அழகாய் மறுத்துவிட்டது குழந்தை.
“அம்மு!! பாட்டியை மரியாதை இல்லாம என்ன ஓல்ட் லேடி அது இதுன்னு பேசுற?? இது ரொம்பத் தப்பு!! உன்னை பாட்டி தான ஈவ்னிங் ஃபுல்லா கேர் பண்ணிக்கிறாங்க.. அவங்களை இப்படி மரியாதை இல்லாம பேசலாமா??” என அஞ்சலி கண்டிக்க,
அம்முவின் முகம் அன்னையின் கோபத்தில் அணிச்ச மலராய் வாடிப் போய்விட்டது.
“அவங்க மட்டும் உங்களை எப்போப்பாரு திட்டிட்டே இருக்காங்க.. எனக்கு அது சுத்தமா பிடிக்கலை” என சின்னக்குரலில் தன் கோபத்தை மகளும் வெளிப்படுத்தினாள்.
அஞ்சலிக்கு மகளை அள்ளிக் கொஞ்ச கைகள் பரபரத்தது.
“அம்மா தப்பு பண்றேன்.. அதுனால சரளா பாட்டி திட்டுறாங்க.. அதுக்காக அவங்களை மரியாதை இல்லாம பேசுவியா நீ?? இனிமேல் அப்படி பேச மாட்டேன்னு சொல்லு அம்மு!!” என மீண்டும் குழந்தையின் மனதில் பதியுமாறு அழுத்தி அறிவுறுத்தினாள் அஞ்சலி.
“சரி பேச மாட்டேன்” என அன்னையின் சொல்படி கேட்டுக்கொண்ட குழந்தை கைகளை கட்டிக்கொண்டு, முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டது!!
கோபமாக இருக்கிறாளாம்!!!
அஞ்சலிக்கு மகளின் செய்கையில் சிரிப்பு பொத்துக்கொண்டு வர, குழந்தையை அப்படியே தன் கைகளில் அள்ளிக்கொண்டு, முத்தமழையில் மழலையை நனைத்து, குழந்தையின் கோபத்தைப் போக்கினாள்.
அதன்பின் இருவரும் சேர்ந்து ஏதேதோ கதைகள் பேசிக்கொண்டு, சமைத்து, சாப்பிட்டு உறங்க இரவு பத்து மணியை நெருங்கிவிட்டது.
விளையாட்டுப்பிள்ளையான ஆதினிக்கு படுத்ததும் உறக்கம் வந்துவிட, அவளின் அன்னைக்குத் தான் உறக்கம் என்பது அருகிலாவது வருவேனா என பல வருடங்களாய் போக்கு காட்டிக் கொண்டிருக்கிறது.
முன்பு கூட ஏதேதோ எண்ணங்களில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த அஞ்சலிக்கு, இப்போது எல்லாம் அவளின் மகள் மட்டுமே உலகமாகிப் போனாள்!!!
அவளின் உலகமே ஆதினியைச் சுற்றியே சுழல, பிரபஞ்சனின் எண்ணம் கூட பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது!!!
அதற்காக அவனை மறந்துவிட்டாள் என்றெல்லாம் இல்லை, அவனின் நலனுக்காக இன்றளவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டு தான் இருக்கிறாள் என்றாலும், முடிந்து போன அத்தியாயத்தை மீண்டும் மீண்டும் பிரித்துப் படிக்க அவள் முயல்வதில்லை இப்பொழுது.
அவளைப் பொறுத்தவரை பிரபஞ்சன் முடிந்து போன அத்தியாயம்!!! ஆனால் அவர்களின் கதைக்கு முற்றும் போடாமல், தொடரும் போட விதி ஆவலாகக் காத்திருப்பதை பாவம் காரிகையவள் அப்போது அறிந்திருக்கவில்லை…
***
“வெல் டன் பிரபஞ்சன்!!! சூப்பரா பாடியிருக்கீங்க!!! நிச்சயம் இந்த சாங், உங்க கேரியர்ல பெஞ்ச்மார்க்கா அமையும்!!” என அவனை கட்டியணைத்து வாழ்த்தினார் இசையமைப்பாளர் தேவன்.
“தேங்க் யூ சோ மச் சார்!!! நீங்க வாய்ப்பு கொடுக்கலைனா இது எதுவுமே சாத்தியம் ஆகிருக்காது” என முதன்முதலில் திரையுலகிற்கு அவனை அறிமுகப்படுத்தியதை குறிப்பிட்டு பிரபஞ்சன் நன்றி உரைக்க,
“நோ மேன்!!! நான் இல்லைனாலும் நீ கண்டிப்பா ஷைன் ஆகிருப்ப!! உன் திறமை அப்படி!!” என்ற தேவா அவனின் தோளில் தட்டிக்கொடுக்க,
சரியாக அதே நேரம் அந்தப்படத்தின் தயாரிப்பாளர் வந்திருப்பதாக தேவனுக்கு அழைப்பு வந்தது.
“ஓகே பிரபா!! நான் சாங் முடிச்சிட்டு உனக்கு சென்ட் பண்றேன்.. இப்போ பிரோடியூஸர் எனக்காக வெயிட் பண்றாரு.. பார்க்கலாம்” என அவனிடம் சொல்லிக்கொண்டு, ரெக்கார்டிங் அறையில் இருந்து வெளியேறி, கீழ்தளத்தில் இருந்த தன்னுடைய அலுவல் அறைக்கு சென்றுவிட்டார் தேவன்.
அவரைத் தொடர்ந்து பிரபாவும் வெளியேறி, தன் காரை நோக்கி நடைபோட்டுக்கொண்டே, தன் கைபேசியை எடுத்துப்பார்க்க, மதுவிடம் இருந்து ஐந்து தவறிய அழைப்புகள்!!
“என்ன இத்தனை டைம் கூப்பிட்டுருக்காங்க!!!” என பதற்றத்துடன் மீண்டும் அவளுக்கு முயற்சிக்க,
அவன் மீது கடுப்பில் இருந்த மதுவோ அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.
“ப்ச்!! எல்லாத்துக்கும் கோவம் வந்திடும் இவங்களுக்கு!!” என நொந்து கொண்டவன், கவினுக்கு அழைக்க,
அழைப்பு முடியும் தருவாயில் அதை ஏற்றவன்,
“சொல்லுடா பிரபா!! ரெக்கார்டிங் எப்படி போச்சு?? நல்லா பாடுனியா?? நீ நல்லா தான் பாடியிருப்ப!!” என இயல்பாகப் பேசவும் தான், அங்கு ஏதும் பிரச்சனையில்லை என்று உணர்ந்து ஆசுவாசமானான் பிரபஞ்சன்.
“நல்லாப்போச்சு கவின் ண்ணா!!! மது ஓகே தானே!! எனக்கு நிறைய டைம் கால் பண்ணிருக்காங்க.. ரெக்கார்டிங்ல இருந்ததினால சைலண்ட்ல இருந்தது போன்.. இப்போதான் முடிச்சிட்டு வந்து பார்த்து, திரும்ப கூப்பிட்டேன்.. கட் பண்ணி விட்டாங்க” என புகார் அளிப்பதைப் போல் பிரபஞ்சன் கூற, கவினிடம் மிதமான புன்னகை!!
“டாம் அண்ட் ஜெர்ரி விட மோசமா போயிட்டு இருக்கு டா உங்க அக்கப்போர்!!” என போலியாய் சலித்துக்கொண்டவன்,
“மதுகூட அவளை பார்த்துக்க இருந்தாங்கல, பங்கஜம் மாமி, அவங்க பிரஷர் கூடிப்போய் மயங்கி விழுந்துட்டாங்களாம்.. அவளால தனியா அவங்களை லிப்ட் பண்ண முடியாதுல இந்த சமயத்துல, அதான் நீ ரெக்கார்டிங் போனதை மறந்துட்டு உனக்கு கால் பண்ணிருக்கா.. நீ எடுக்கலைனதும் வாட்ச்மேனை கூப்பிட்டு எல்லாம் பாத்துகிட்டா போல.. பங்கஜம் மாமியோட சன் இப்போ வந்துட்டாங்களாம் ஹாஸ்பிடலுக்கு.. சோ மது இப்போ வீட்டுக்கு போயிட்டு இருப்பான்னு நினைக்கிறேன். ..” என அவனுக்கு தகவல் அளித்தான் கவின்.
“இவங்க எதுக்கு ஹாஸ்பிடல் எல்லாம் அலையுறாங்க.. டாக்டர் தான் இன்னும் ஒரு ரெண்டு மாசத்துக்கு ரெஸ்ட்ல இருக்க சொல்லியிருக்காங்க தான?? பேபிக்கு ஏதாவது ஆச்சுன்னா என்ன பண்றது?? ” என மதுவின் செயலில் ஆதங்கம் அடைந்த பிரபாவின் பேச்சில், குழந்தையின் மீது அவன் வைத்திருக்கும் அன்பை உணர்ந்து கொண்ட கவின்,
“எங்களை விட, எங்க குழந்தை மேல நீதான் டா ரொம்ப பாசமா இருக்க!!” என சிரித்துக் கொண்டான்.
“அய்யோ அண்ணா அப்படியெல்லாம் இல்லை!!” எங்கே தவறாக நினைத்து விட்டாரோ என பிரபஞ்சன் பதற,
“அட!! எல்லாத்தும் பதறாத டா பிரபா!!!”
“சரி!! எனக்கு இங்க லோகேஷன் பார்க்க போகணும்.. நான் கிளம்புறேன்.. நீ வீட்டுக்கு போயிட்டு மது எப்படி இருக்கான்னு எனக்கு மெசேஜ் பண்ணு!! ” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டான்.
படப்பிடிப்பிற்காக ஊட்டி வரை சென்றிருந்த பிரபா, திரும்பி வர இன்னும் ஒரு மாதம் ஆகும் என்பதால், அதுவரை மதுவை இன்னும் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு தனக்குள்ளது என நினைத்த பிரபஞ்சன், விரைவாக வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினான்.
நினைத்ததைப் போலவே, மது கோபமாக இருக்க, அமைதியாக அவளின் பேச்சுக்களை எல்லாம் வாங்கிக்கொண்டு, அவளின் கோபத்திற்கு வடிகாலாய் மாறிப்போனான் பிரபஞ்சன்.
இயல்பிலேயே படபடவென பேசிவிடும் மதுவிற்கு, இப்போது உடல் நிலை மாற்றங்கள், மருத்துவரின் அறிவுரையின் பெயரில் கட்டாய ஓய்வு என தனக்குப் பிடித்த வேலைக்குக் கூடச் செல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடப்பது, பெற்றவர்களின் புறக்கணிப்பு, கவினின் பிரிவு, எல்லாம் ஒன்றாய் சேர்ந்து கொள்ள, ஒரு நிலையில்லாமல் தொட்டதிற்கெல்லாம் கோபம் கொண்டு வெடித்துச் சிதறினாள்.
அவளின் நிலையில் இருந்து அனைத்தையும் புரிந்து கொண்ட பிரபஞ்சன், மௌனமாகவே அனைத்து பேச்சுக்களையும் வாங்கிக்கொண்டு, அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்துச் செய்ய, மதுவிற்குத் தான் குற்றவுணர்வாகிப் போனது.
“ப்ச்!! போடா பிரபா!!! இவளோ திட்டுறேன்.. பதிலுக்கு நீயும் திட்டலாம்ல.. என்ன பெரிய தியாகியா நீ?? நீ இப்படி அமைதியா இருந்து, என்னை வில்லி மாதிரி ஃபீல் பண்ண வைக்கிற!!” என அதற்கும் குற்றம் சாட்டிய மதுவை எப்படி கையாள்வது என சுத்தமாக பிரபஞ்சனுக்குப் புரியவில்லை.
நாளுக்கு நாள் மதுவின் மனநிலை மிகவும் மோசமாகிக் கொண்டே தான் போனது. அதுவும், உடல்நிலையை காரணம் காட்டி பங்கஜம் மாமி வேறு வேலையை விட்டு நின்றிருக்க, பிரபஞ்சனால் அவளைத் தனியாக சமாளிக்க முடியவில்லை.
வேலை விஷயமாக சென்றிருக்கும் கவினிடமும் இதைச்சொல்லி அவனை வருத்தப் பிடிக்காத பிரபா, வேறு ஒரு நல்ல ஏஜென்சியிடம் சொல்லி, மதுவின் வீட்டிலே தங்கி, அவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்வதற்காக ஒரு ஆளை தேடிக் கொண்டிருந்தான்.
பிரபாவிற்கும், வாரத்தில் பாதி நாட்களுக்கும் மேல் ரெக்கார்டிங் இருப்பதால், கூடிய விரைவில் மதுவை உடனிருந்து பார்த்துக்கொள்ள ஒரு ஆளை கண்டுபிடிக்கச் சொல்லி அந்த நிறுவனத்தை கேட்டுக் கொண்டிருக்க,
ஒரு வாரம் கழித்து, பிரபாவின் எதிர்பார்ப்புப்படி ஒருத்தி கிடைத்தாள்!!! விஷயமறிந்து நிம்மதியடைந்த பிரபாவிற்குத் தெரியவில்லை, கிடைத்தது அவன் தொலைத்த பொக்கிஷம் என்று!! தெரியும் போது அவன் நிலை???
“முடிந்து விட்டது என நினைத்து நகரும் போது,
தொடர்ந்து வந்து, முடிவிலியாய் நீண்டு கொண்டு போகுதே இந்தப் பொல்லாத காதல்!!!”
error: Content is protected !!