Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அன்பில் இணைந்த இதயங்கள்

அன்பில் இணைந்த இதயங்கள்….15

அன்பில் இணைந்த இதயங்கள்…..15

மருத்துவமனையில் இருந்து குருமூர்த்தி வீடு வந்து இரு வாரம் கடந்திருந்தது.வீட்டில் யாரிடமும் அதிகமாக பேசுவதில்லை குரு.பார்வதியும்,கயலும் ஏதாவது கேட்டால் மட்டுமே பதில் அளிப்பார்.மற்ற நேரங்களில் ஏதோ சிந்தனை வாய்ப்பட்டவராகவே இருந்தார்.பார்வதிக்கு தான் கணவரின் இந்த மாறுதல் சற்று பயத்தை கொடுத்தது.

“என்னடி இது அப்பா இப்படி அமைதியா இருக்காரு….”என்று பார்வதி புலம்ப கயலுக்குமே வருத்தமாக தான் இருந்தது.அவளும் இரண்டு,மூன்று முறை அவரிடம் பேசி பார்க்க அவரோ,

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லடா….நீ வீணா மனசை போட்டு குழப்பிக்காத….”என்று கயலின் தலையை செல்லமாக ஆட்டிவிட்டு செல்வார்.இதோ இன்று காலையில் சென்றவர் மாலை ஆகிவிட்டது வீடு வரவில்லை.



Advertisement

“கயலு….உங்க அப்பாக்கு போனை போடுடீ….எங்க போனாரு….” என்று திட்டியபடி பார்வதி கயலிடம் வர,

“ஏன்மா நீங்க போன் போட வேண்டியது தான….”என்று கயல் தாயைக் கடிந்து கொள்ள,

“அடியே இதோட நாலு தடவை போட்டுட்டேன்….மனுஷன் போனை கட் பண்ணி வைச்சுட்டார்….காலையில போனவர் இன்னும் வரலை….எங்க போறேன்னும் சொல்லல….”என்று பார்வதி புலம்ப,

Advertisement

“ச்சு….இருமா நீ டென்ஷன் ஆகாத….நான் போன் பண்ணுறேன்…”என்று தாயை சமாதானம் செய்துவிட்டு பேசியை எடுக்கும் நேரம்,

Advertisement

“பாரூ….பாரூ….”என்று கத்தியபடியே உள்ளே வந்தார் குரு,

“என்னங்க….”

“என்னப்பா…..”என்று கயலும்,பார்வதியும் பதறியபடி வர,

Advertisement

“ஏன் இப்படி பயந்து ஓடி வரீங்க….நான் நல்லா தான் இருக்கேன்….என் பொண்ணுக்கு ஒரு நல்லதை செய்யாம நான் போகமாட்டேன்….”என்று குரு கூற,

“ப்பா….எதுக்கு இப்படி எல்லாம் பேசுறீங்க….”என்று கயல் அவரைக் கண்டித்தாள்.

“நல்லா சொல்லுடீ….இப்பெல்லாம் இப்படி தான் பேசிக்கிட்டு திரியுறாரு….”என்று பார்வதியும் கடிந்து கொள்ள,கயல் தந்தையை கோபமாக முறைத்தாள்.

“அட கயலம்மா….நான் ஏதோ மன கஷ்டத்துல பேசினா….உன் அம்மா அதை பிடிச்சிக்கிட்டு பேசுறா….”என்று குரு மகளிடம் சமாதான கொடியை பறக்கவிட்டார்.

“ஆமா…ஆமா…பொண்ணுகிட்ட மட்டும் தான் பணிஞ்சு போறது….இதே நான்னா இந்த நேரம் குதி குதினு குதிச்சிருப்பார்….”என்று பார்வதி அதற்கும் குட்டு வைக்க,கயல் வெகு நாட்களுக்கு பிறகு தாய்,தந்தையின் இந்த செல்ல சண்டையை ரசித்துக் கொண்டிருந்தாள்.

“அட சும்மா இரேன்டீ….எப்ப பாரு…அவ கிட்ட ஏடாகூடமா பேச வேண்டியது….”என்று குரு கூற,

“ஏன் உண்மையை சொன்னா உங்களுக்கு கோபம் வருதா….”என்று பார்வதி விடுவதில்லை என்பது போல பேச,ஒருகட்டத்தில் கயல் தான் இருவருக்கும் இடையில் வந்தாள்.

“போதும்….போதும்….நிறுத்துங்க இரண்டு பேரும்….”என்று கயல் கத்த,அப்போது தான் இருவரும் அமைதியாகினர்.

“இப்ப எதுக்கு என் பெயரை ஏலம் போட்டுக்கிட்டே வந்தீங்க….”என்று பார்வதி கேட்க,

“என்னது…..ஏலம் போட்டேனா….ஏன்டீ நான் எவ்வளவு முக்கியமான விஷயம் சொல்ல உன்னை கூப்பிட்டா….நீ ஏலம் போட்டேன்னு சொல்லுர….”என்று குரு மீண்டும் ஆரம்பிக்க,

“அச்சோ….அப்பா….இப்ப நீங்க ஏன் ஆரம்பிக்கிறீங்க….முதல்ல என்ன விஷயம் அதை சொல்லுங்க…”என்று கயல் கேட்க,

“ப்ச்….பார்த்தியா….ஒரு சந்தோஷமான விஷயத்தை சொல்ல வந்தேன்….அதை மறந்து இவ கிட்ட சண்டை போட்டுக்கிட்டு இருக்கேன்….கயல் இங்க வாடா….அப்பா கிட்ட வா….”என்றவர்,கயலை தன் பக்கத்தில் அமர்த்தி,

“உனக்கு ஒரு வரன் பார்த்திருக்கேன்டா….”என்று கூற,கயலின் முகம் இருண்டது.அதைக் கண்ட குரு,

“ஏன் கயலம்மா….கல்யாணம்னு பேச்சை எடுத்தாலே உன் முகம் இப்படி ஒளியிழந்து போகுது….”என்று கேட்க,தந்தை தன்னை கண்டு கொண்டதில் அதிர்ந்தவள்,

“ப்பா….அது….அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா….இப்ப உடனே ஏன்னு தான் யோசிச்சேன்….”என்று மழுப்பலாக கூற,அவளின் தலையை ஆதரவாக தடவியவர்,

“என்கிட்ட சொல்லமாட்ட அப்படிதான…”என்று தந்தை கேட்க

“இல்லப்பா….அப்படியெல்லாம் எதுவும் இல்லை…..”என்று பதட்டமாக வந்தது மகளின் பதிலில்,

“ம்ம்…சரிடா…அப்ப நாளைக்கு மாப்பிள்ளை வீட்டுலேந்து வராங்க உன்னை நிச்சயம் பண்ண….ரெடியாகிக்க….”என்று ஒரு குண்டை தூக்கி போட,

“என்னங்க இது….இப்படி திடீர்னு நிச்சயம்னு சொல்லுரீங்க….மாப்பிள்ளை யாரு…அவளுக்கு பிடிச்சிருக்கானு கேட்கலை….”என்று பார்வதி குறைபட,

“அவ தான் நான் பார்த்தா போதும் சொன்னா….அதான் நானே முடிவு பண்ணிட்டேன் பாரூ…”என்று குரு கூற,

“இருந்தாலும்????”என்று பார்வதி இழுக்க,

“பாரூ….நான் எல்லாம் விசாரிச்சு தான் முடிவு பண்ணியிருக்கேன்…..அதனால நீ எதுவும் மனசை போட்டு அலட்டிக்காத….நாளைக்கு சாய்ந்தரம் வருவாங்க….”என்று தகவல் போல கூறியவர் கயலிடம் திரும்பி,

“என்ன கயலம்மா….நீ எதுவும் பேசமாட்டேங்குற….அப்பா உன்கிட்ட சொல்லனு கோவமா….”என்று கேட்க,

“இல்லப்பா…அப்படியெல்லாம் இல்ல….நீங்க பார்த்தா சரியா தான் இருக்கும்….எனக்கு சம்மதம்….”என்றவள் எழுந்து தனது அறைக்குள் போய்விட்டாள்.போகும் மகளையே பார்த்துக் கொண்டிருந்த குருமூர்த்திக்கு சற்று கோபம் தான் இருந்தும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவர்,

“பாரூ…நாளைக்கே நிச்சயம் நான் ஏற்கனவே வனி,நந்துகிட்ட தகவல் சொல்லிட்டேன்….இரண்டு பேரும் நாளைக்கு காலையிலேயே வந்துடுவாங்க….”என்று கூற,பார்வதிக்கு ஒன்றும் புரியவில்லை ஏன் இவ்வளவு அவசரம் என்று நினைத்தவர் அதைக் கேட்கவும் செய்தார்.

“ஏங்க இவ்வளவு அவசரம்???கொஞ்சம் நாள் போகட்டுமே….”என்று கேட்க,

“இல்லை….பாரூ….இனி தாமதிச்சா சரி வராது….இப்பவே அவ கூட்டுக்குள்ளே அடங்குறா…..இப்படியே விட்டோம் அப்புறம் அவளை நாம அந்த கூட்டுளேந்து வெளிய கொண்டுவரவே முடியாது….”என்று கூற,

“நீங்க என்ன சொல்லுரீங்க….எனக்கு புரியலை….”

“உனக்கு இப்ப புரிய வேண்டாம்….நான் அப்புறம் சொல்லுறேன்….இப்ப போ….நாளைக்கு விஷேத்துக்கு உண்டான வேலையை பாரு….”என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.பார்வதியும் கணவர் கூறியதை போல் நாளை விஷேத்திற்கு உண்டான வேலைகளை பார்க்க சென்றிவிட்டார்.

தனது அறையில் கட்டிலில் அமர்ந்திருந்த கயலுக்கு மனது சமன் படவேயில்லை.தீபக்கின் வீட்டில் கல்யாணத்தை நிறுத்தியதை பற்றி அவளுக்கு எந்த கவலையும் இல்லை.அவளது மனது முழுவதும் திருமணம் என்றவுடன் சத்யாவின் நினைவுகள் ஆக்கரமிக்க தொடங்கியது.

மனதில் ஒருமுறை சத்யாவிடம் பேசிவிடலாமா என்று கூட யோசித்துவிட்டாள்.ஆனால் பயமாகவும் இருந்தது.அவனிடம் கேட்டு அதற்கு அவன் வார்த்தைகளை விட்டுவிட்டாள் அவளால் உயிருடன் இருக்க முடியாது.வேண்டாம் எதுவும் வேண்டாம் இனி எனக்கு வாழ்வு என்பது அவனுடன் இல்லை.நான் அவனுக்கு சரியில்லை என்று மீண்டும் எனக்கு தனக்குள் கூறிக் கொண்டாள்.நினைவுகளால் அவளை துரத்திக் கொண்டு இருந்தான் சத்யா.

காலை கயல்விழியின் வீடே பரபரப்பாக இருந்தது.வனிதாவும்,ராகவும் வந்திருந்தனர்.வனிதா மாமியாரை நினைத்து வரவில்லை என்று தான் முதலில் கூறினாள்.

“இங்க பாரு வனி கயல் உன் தங்கை….அவ தப்பு செஞ்சிட்டா தான் அதுக்காக அதையே பிடிச்சி தொங்கிட்டு இருந்தா நல்லா இருக்காது…..என்னை பொறுத்தவரை கயல் தன் மனசுல இருந்ததை சொன்னா….இதுல என்ன தப்பு இருக்கு….எத்தனையோ பேரு மனசுல பல அழுக்கை வச்சிக்கிட்டு வெளியில நல்லவங்க போல நடிக்கிறாங்க அவங்களை எல்லாம் நாம என்ன செய்யமுடியும்….அதனால நீ இதை இதோட விடு….”என்று ராகவ் பொறுமையாக எடுத்துரைக்க வனிக்கும் அப்போது மனது தெளிவடைந்ததை போல் இருந்தது.

“ம்மா….நந்து பக்கத்துல வந்துட்டாளாம்…போன் பண்ணா….”என்று வனி முன் வாசலில் இருந்து கத்த,

“சரிமா….வந்தானா கூப்பிடு…”என்று விட்டு சமையலில் கவனமாகிவிட்டார்.சற்று நேரத்திற்கு எல்லாம் நந்துவும் அவள் கணவன் ரவிகுமாரும் வந்துவிட்டனர்.நந்திதா வந்தவுடன் வீடு கலைக்கட்டியது.

“ம்மா….எங்கமா கல்யாண பொண்ணு….ஆளைக் காணும்….”என்று அவள் கயலை தான் வந்தவுடன் தேடினாள்.

“அவ ரூமை விட்டு வெளியில வந்தாதான…..அங்க தான் இருப்பா போய் பாரு….”என்று கூற,

“அக்கா…..”என்ற கூவலுடன் நந்து கயல் இருந்த அறைக்குள் நுழைந்தாள்.கயல் குளித்து முடித்து அப்போது தான் வெளியில் வர அறையின் உள்ளே ஆர்ப்பாட்டமாக வர,

“ஏய் நந்து குட்டி…எப்படா வந்த….”என்று கயல் கேட்க,பாய்ந்து வந்து அவளைக் கட்டிக் கொண்ட நந்து,

“சாரிக்கா….சாரி…அன்னைக்கு எனக்கு எவ்வளவு கஷ்டமா போயிருச்சு தெரியுமா….நான் உன்கிட்ட அப்படி பேசியிருக்க கூடாது….சாரிக்கா….”என்று உடைந்து அழ,

“டேய் நந்து….என்னதிது….அழதாடா….எனக்கு உன் மேல எந்த கோபமும் இல்லை…”என்று சமாதானப்படுத்த,அவளோ அழுகை நிறுத்தவேயில்லை.

“நந்து…இப்ப நிறுத்த போறீயா இல்லையா…..இப்படி அழுதுகிட்டே இருந்தா…நான் பேசவேமாட்டேன்….”என்று சற்று அதட்டவும் தான் நந்துவின் அழுகை சற்று மட்டுபட்டது.

“க்கா….க்கா…..சரி நான் அழலை….இங்க பாரு…என்னை பாரு….”என்று கயலை தன்னை நோக்கி திருப்பி,

“என்னை பார்க்கனும்…நான் தான் அழமாட்டேன்னு சொல்லிட்டேன்ல…”என்று சிறுபிள்ளை போல கூற,அவளை பார்த்த கயலுக்கு சிரிப்பு தான் வந்தது.

“நீ இன்னும் மாறவேயில்லை நந்து குட்டி….”என்று அவளின் கன்னத்தை பிடித்து ஆட்ட,

“என்ன அக்காவை பார்த்தவுடன் என்னை மறந்துட்ட போல….”என்று கேட்டப்படி உள்ளே வந்தான் ரவி,அவன் வந்தவுடன் வேகமாக எழுந்த கயல்விழி,

“வாங்க…”என்று பொதுவாக அழைத்தாள்.அவளுக்கு எங்கே நந்து தன்னிடம் பேசியது கோபமாக இருக்குமோ என்று பயம் இருந்தது.அதனால்,

“அது அவ எப்போதும் போல உள்ள வந்துட்டா…என்கிட்ட பேசலை…”என்று ஏதோ உலற,பார்த்துக் கொண்டிருந்த நந்திதாவிற்கு கண்கள் மீண்டும் உடைப்பெடுத்தது.எதற்கும் அஞ்சாமல் பதலிக்கும் தன் அக்கா இன்று தன்னிடம் பேசியதை கூட மறைக்க நினைக்கிறாள் என்று நினைத்தவளுக்கு மனது வலிக்க அவள் தன் கணவனை பார்க்க,மனைவியின் பார்வை உணர்ந்த ரவி,

“அட என்னங்க நீங்க…உங்களை பத்தி தான் நந்து நிறைய என்கிட்ட சொல்லியிருக்கா….எனக்கு உங்க மேல எந்த கோபமோ,வருத்தமோ இல்லை….அது முடிஞ்சு போன ஒரு விஷயம் அதையே நாம ஏன் நினைக்கனும்….விடுங்க…நீங்க எப்போதும் போல உங்க தங்கச்சிக்கிட்ட இருங்க…இல்லை எனக்கு தான் கஷ்டம்…”என்று கூறிவிட கயல்விழியின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.

“ப்பா…இப்ப தான் என் அக்காவுக்கு முகமே மலர்ந்து இருக்கு…..”என்று அவளை கட்டிக் கொண்டாள்.

“அக்கா…அப்புறம் அத்தான் எப்படி இருக்காங்க….எங்க போட்டோ வச்சிருப்பியே….காட்டு…”என்று நந்து கேட்க,ரவியோ இருவரையும் தனியே விட்டுவிட்டு வெளியில் வந்துவிட்டான்.கயல்விழி திருதிருவென முழித்துக் கொண்டு நின்றாள்.

“க்கா…..க்கா…போட்டா தான காட்ட சொன்னேன்….இப்படி பிரிஸ்ஸாகி நிக்கற….”என்று நந்து கேட்டு கொண்டிருக்க,

“அவ கிட்ட இருந்தா தான காட்ட…”என்றபடி வந்தனர் வனியும்,பார்வதியும்.

“என்ன….”என்று நந்து அதிர்ச்சியாக,பார்வதி கயலுக்கு முதல் வரன் தடைப்பட்டதால் குரு அவசரமாக கயலுக்கு மாப்பிள்ளை பார்த்து முடிவும் செய்துவிட்டார் என்று கூற,

“என்ன அப்பாவே பார்த்து முடிவு பண்ணிட்டாரா….என்னக்கா….நீ இதுக்கு எப்படி ஒத்துக்கிட்ட….”என்று நந்து ஆதங்கமாக கேட்க,

“விடுடா….அப்பா பார்த்தா எல்லாம் சரியா தான் இருக்கும்….எனக்கு நம்பிக்கை இருக்கு…..”என்று விட்டு கயல் எழுந்து சென்றுவிட,நந்துவும் வனியும் ஒருவரை ஒருவர் பார்த்து,

“இது நம்ம கயல் போலவே இல்லை….”என்று கூற,

“அதே தான்டி நாங்களும் நினைக்கிறோம்….”என்று பார்வதியும் கூறினார்.

மாலை கயல்விழியின் வீட்டில் வரவேற்பறையில் பல குரல்கள் கேட்டது.அறையின் உள்ளே அமர்ந்திருந்த கயலுக்கு தான் நெஞ்சம் எல்லாம் நடுக்கம் எடுத்தது மனதெங்கு ஒருவித வலி,

“என் மனசுல உன்னை தான் மனைவியா நினைச்சுட்டேன் கயல்….”என்ற சத்யாவின் வார்த்தைகளே மீண்டும் மீண்டும் ஒலிக்க ஏதோ மூச்சடைப்பது போல் இருந்தது கயல்விழிக்கு.அப்போது சரியாக உள்ளே வந்த வனிதா,

“ஏய் கயல்…மாப்பிள்ளை சூப்பர்டீ….வா உன்னை கூப்பிடுறாங்க….”என்று கூப்பிட,

“க்கா….”என்ற கயலின் கைகள் நடுங்கியது,

“ஏய் கயல் என்னடா…ஏன் இப்படி பயப்படுற….வா….”என்று அழைக்க,தன் மனதை திடப்படுத்திக் கொண்டு வனியுடன் சென்றாள்.வரவேற்பறை சென்றதும் கயலின் கால்கள் பின்னிக் கொண்டது அவள் தயங்கி நிற்க,

“அட என் பொண்ணு வந்துட்டா….கயல் இங்க வாடா….”என்று குருமூர்த்தி அழைக்க அவரின் அருகே சென்றாள்.எதிரில் சிலர் அமர்ந்திருந்தனர் ஆனால் கயலின் பார்வை மேலே எழும்பவேயில்லை தரையை மட்டும் பார்த்தபடி நடந்து வந்து தந்தையின் அருகில் நின்று கொண்டாள்.

“எங்களுக்கு பொண்ணை பிடிச்சிருக்கு….”என்று ஒருவர் கூறிவிட்டு,

“என்ன ரஞ்சி….நீ என்ன சொல்லுற….”என்று அவர் கேட்க,

“எனக்கும் பிடிச்சிருக்கு….”என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது.

“உங்களுக்கு பிடிச்சா என்ன பிடிக்கலை என்ன….என் மாப்பிள்ளைக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அது தான் முக்கியம்….என்ன பெரியப்பா நான் சொல்லுறது சரிதான….”என்று ஒருவர் கேட்க,அங்கே ஒரு சிரிப்பொலி பரவியது.கயலோ எதிரில் தெரிந்த காலடிகளை மட்டும் தான் பார்த்து கொண்டு நின்றாள்.பின் பொதுவாக பேச்சுகள் சென்றது.

“நல்ல நேரம் முடியறதுக்குள்ள….ஆரம்பிகப்பா…”என்று ஒரு பெரியவர் கூற,

“கொஞ்சம் பொறுங்க…பொண்ணு இன்னும் நிமிர்ந்து கூட என் மாப்பிள்ளையை பார்க்கலை….”என்று ஒருவர் குறைபட,அப்போது தான் குருமூர்த்தி மகளை பார்த்தார்.அவள் குனிந்த தலை நிமிராமல் நிற்க,

“என்ன கயல் இது….இது தான் எனக்கு நீ கொடுக்குற மரியாதையா…”என்று கோபமாக கேட்க,

“ப்பா இல்லைப்பா….”என்று பதட்டத்துடன் கூறியவள் நிமிர அங்கே கால் மேல் கால் போட்டபடி அமர்ந்திருந்தான் சத்யா.அவனை பார்த்ததும் அனைத்தும் மறந்து பார்த்தாள் பார்த்துக் கொண்டே இருந்தாள்.அவனோ அவளையை அளவிடும் பார்வை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

“என்ன பெரியப்பா….பொண்ணு பார்க்கலை பார்க்கலைனு சொன்னீங்க….என் தங்கச்சி பார்த்துடுச்சு போதுமா….”என்று சத்யாவின் அக்கா கணவன் பிரசாத் கூற,

“ஆமா பார்த்துடுச்சு….பார்த்துடுச்சு….”என்று கலைவாணன் கூற குரல் வந்த திசையை பார்த்த கயல்விழிக்கு மூச்சடைத்தது என்று தான் கூற வேண்டும்.அவளுக்கு பயம் ஒருபக்கம் அதோடு சத்யா தன்னை பெண் கேட்டு வந்தது ஒருபக்கம் என்று மனதின் அலைக்கழிப்பில் மயங்கி சரிய,வந்ததில் இருந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்த சத்யா வேகமாக வந்து அவளை தாங்கினான்.

“கயல்….கயல்….பெட்ரூம் எங்க இருக்கு….”என்று பொதுவாக கேட்டு,அவளை அருகில் உள்ள அறைக்குள் தூக்கி சென்று படுக்க வைத்தான்.அதற்குள் பார்வதி தண்ணீருடன் வர அதை வாங்கி கயலின் முகத்தில் தெளித்து அவளின் கன்னங்களை தட்டினான்.சற்று நேரத்தில் நினைவு திரும்பியது கயல்விழிக்கு.அவள் கண்விழிக்கும் போது அவளின் அருகே அமர்ந்திருந்த சத்யாவைக் கண்டு அதிர்ந்து,

“சத்யா…சத்யா…”என்றவளுக்கு வார்தைகள் பஞ்சமாகிவிட்டது.நடப்பது எல்லாம் கனவா இல்லை நினைவா என்று மனது ரீங்காரமிட கயல்விழி பரிதவிப்புடன் சத்யாவையே பார்க்க,அவனும் அதை உணர்ந்தான் போலும்,

“கொஞ்ச நேரம் வெளியில இருங்க….நான் அழைச்சிட்டு வரேன்….”என்று அங்கு நின்ற மற்றவர்களை பார்த்து கூற அவர்கள் வெளியில் சென்றனர்.அவர்கள் சென்றவுடன் எழுந்து கதவை அடைத்துவிட்டு வந்தவன் கயலின் முன் அமர்ந்து,

“இது கனவு எல்லாம் இல்லை கயல்…நிஜம் தான்…என்ன குடையுது உன்னை சொல்லிடு….உன் மனசை இப்பவாவது திறந்து சொல்லுடீ….உனக்கு இதுல விருப்பம் இல்லையா…..”என்று கேட்கும் போதே சத்யாவின் குரல் கரகரத்துவிட,

“இல்ல….அப்படி இல்ல…சத்யா….எனக்கு உன்னை….உங்களை….பிடிக்கும் இப்ப இல்ல முன்னாடி…அது நாம காலேஜ் படிக்கும் போதே….ஆனா நான் அதை உணரும் முன்பே எல்லாம் முடிஞ்சு போச்சு….”என்று கயல்விழி தன் மனதை திறந்து கூறிவிட்டாள்.அதை கேட்ட சத்யா எப்படி உணர்ந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை.

ஆனால் சத்யாவிற்கு மனதெங்கும் ஆர்பரித்து கொண்டிருந்த பல எண்ணங்கள் எல்லாம் அப்படியே அமுங்கி அடங்கியதில் ஒருவித நிம்மதி பரவியது.நடுங்கி கொண்டிருந்த சத்யாவின் கைகள் கயல்விழியின் கைகளில் தஞ்சம் அடைந்தது.கயல்விழியும் சத்யாவின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள் இனி விடப்போவதில்லை என்பது போல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!