Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அமிழ்தும் அணங்கும்

அமிழ்தும் அணங்கும் – 8

“ஹே வாட்ஸ்அப் ஷேடோ?

இந்த கிறு கிறு கிறுக்கு கிருஷ்ணவேணி கிழவி தொல்லை தாங்கலை! எங்க போற? எப்படி போற? யார் கூட போற? என்ன ட்ரெஸ் போடுற? இப்படி உட்காராத! அப்படி நடக்காத! ஷப்பா சாமி!! முடியல டா!!! பேசாம காலேஜ்ல டூர்னு பொய் சொல்லிட்டு எங்கேயாவது ஓடி போய்டலாமா? ஆனா அடுத்த வாரம் பைனல் எக்ஸாம் வர போகுதுன்னு மம்மிக்கு தெரியுமே? இப்போ எப்படி டூர் கூட்டிட்டு போவாங்கனு கரெக்டா கேட்பாங்களே? ஏதாவது செமினார்னு பொய் சொல்லிட்டு எஸ் ஆயிடலாமா? ஏதாவது ஐடியா கொடேன்! ம்ச்….உன் கிட்ட போய் சொல்றேன் பாரு!!நீ என்ன சொல்லிட போற? ‘இப்படியெல்லாம் செய்யக் கூடாது. உன் நல்லதுக்கு தானே சொல்றாங்க? அவங்க சொல்றத கேட்டு நட. அம்மா கூட பேசு. தம்பியை பார்த்துக்கோ’ இது தானே சொல்லுவ? உனக்கு அதிப்பா பெட்டர். அவன் அட்வைஸ் செய்ய மாட்டான். ஆனா அமைதியா அழுத்தமா இருந்தே நான் செய்யறதை தடுத்திடுவான்.. ஆனா ஒரு விஷயம் , என்ன தான் நீங்க ரெண்டு பேரும் எனக்கு மாறி மாறி அட்வைஸ் பண்ணினாலும் எனக்கு உங்க ரெண்டு பேர் மேல மட்டும் கோபமே வர மாட்டேங்குது. எனக்கு என்னமோ நீங்க ரெண்டு பேரும் ஒன்னு தானோங்கிற டவுட் இப்பவும் இருக்குது. கேட்டா நீயும் ஒன்னும் சொல்ல மாட்ட, அவனும் இல்லேன்னு சொல்லுவான்”

முகநூல் மெசெஞ்சரில் செய்தி அனுப்ப, ஷேடோ ஆன்லைன் இருப்பதாக காட்டியது. சட்டென்று அவளுக்குள் ஒரு பொறி தட்டியது. ஒருவேளை இந்த ஷேடோ அந்த…..? இருக்குமோ?

ஓடிச்சென்று ஹாலில் பாட்டி என்ன செய்கிறாரென்று பார்க்க, தன் அலைபேசியில் ஏதோ பார்த்துக் கொடிருந்தார். அருகில் அமர்ந்து அபியும் அலைபேசியை நொண்டிக் கொண்டிருந்தான். இவள் நோட்டமிடுவதை  பார்த்ததும் பாட்டி அலைபேசியை அணைத்துவிட்டு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தார். பாட்டியை உறுத்து விழித்தபடி, அபி பின்னால் சென்று நின்றவள் அவன் அலைபேசியில் என்ன பார்கிறானென்று உற்று பார்த்தாள்



Advertisement

அவள் பார்ப்பதை உணர்ந்தவன் திரும்பி என்னவென்று புருவம் உயர்த்தினான்.

“என்னடா பார்த்துட்டு இருந்த?”

“ஏன்?”

Advertisement

“சொல்லு என்ன பார்க்கிற?”

Advertisement

“நான் என்னவோ பார்த்துட்டு போறேன். உனக்கு என்ன?”

“ம்ம். எதோ பெரிய யோக்கியன் மாதிரி பேசுற? அந்த கேடு கெட்ட டி.டி.வி. நேசன் விடீயோஸ் தானே பார்க்கிற? அதை பார்த்து தானே ஸ்டேஷன் வரைக்கும் போய் நின்ன? உன்னால நம்ம குடும்ப மானம் கெட்டது பத்தாதா?”

“ஆமா நான் குடும்ப மானத்தை கெடுத்தேன். இவ தான் அப்படியே குடும்ப மானத்தை கட்டி தூக்கி காப்பாத்திட்டு இருக்கா! என்னை சொல்றதுக்கு உன்னை நீயே முதல கண்ணாடியில பார்த்துக்கோ. ட்ரெண்டுனு சொல்லிட்டு ரீல்ஸ், யுடியுப்னு நீ பழியா கிடைக்கலை? ஃபேஷன்ங்கிற பேர்ல நீ பண்ற ட்ரெஸ் ஒன்னு போதும், நம்ம குடும்ப மானத்தை கப்பல் ஏத்த!  அப்புறம் உன் ப்ரெண்ட்ஸ் இருக்காளுங்களே, ஆளுக்கு ஒரு பாய் பெஸ்ட்டி, பாய் ப்ரெண்டு, கிரஷ், ஆளுனு நாலு பேரு கூட சுத்துறாங்க. நீ அந்த மாதிரி எத்தனை பேர் கூட சுத்துறியோ யார் கண்டா?”

Advertisement

“அபி! அவ உனக்கு அக்கா. பார்த்து பேசு” பாகீரதி அபியை கடிந்துக் கொள்ள,

“ஏன் அவன் பேசக்கூடாது? தம்பியா இருந்தாலும் அவன் ஆம்புளை புள்ளை? கேட்க தான் செய்வான்? இவ பொட்ட புள்ளையா அடங்கி ஒடுங்கி இருந்தா அவன் ஏன் கேட்க போறான்?” பாட்டி அபி பக்கம் நியாயம் கூட்டி பேச,

“ஏன் பாட்டி, அன்னைக்கு இவன் போலீஸ் ஸ்டேஷன் போயிட்டு வந்து நின்னப்போ நீங்க ஒரு வார்த்தை பேசல, ஆனால் ஒண்ணுமே செய்யாத என்னை குறை சொல்ல மட்டும் கரெக்டா வந்ததுடுறீங்க இல்லை, ஏன்னா நான் பொம்பளை புள்ளை அது தானே?”

“ஆமான்டி, ஆம்பளை புள்ளை தப்பு செஞ்சா அரை நாள் பேசுவாங்க, அடுத்த வேலையை பார்க்க போய்டுவாங்க. பொம்பளை புள்ளை தப்பு செஞ்சா காலம் பூரா உலகமே பேசும். பொம்பளை புள்ளையை பொத்தி பொத்தி தான் வளர்க்கனும்”

“புல் ஷிட்! இன்னும் எத்தனை காலம் தான் இதையே சொல்லுவீங்க?”

“எத்தனை காலம் ஆனாலும் வைரத்தோட மதிப்பு குறையாது. நீ வைரம் மாதிரி, உன்னை பொத்தி பாதுகாக்காட்டி பறிக்கொடுத்துட்டு தான் நிக்கணும். புரிஞ்சு நடந்துக்கோ. பாகீரதி! முதல இவளுக்கு கைச்செலவுக்கு பணம் போடுறதை நிறுத்து. அந்த காலத்துல எங்க அப்பா எங்களுக்கு பாக்கெட் மணியா பத்து ரூபா தருவாங்க. அதையும் பத்திரமா சேர்த்து வச்சு, எனக்கு சைக்கிள் வாங்குறப்போ சைக்கிள்கான  பாதி காசை கொண்டு நீட்டினேன். எங்க அப்பா முகத்துல அப்போ வந்துட்டு போன பெருமை அப்படியே என் கண்ணுல நிக்குது. அப்படி வளர்த்தா தான் புள்ளைங்களுக்கு காசோட அருமை தெரியும். நீ என்னடானா பேங்க்ல அவ பேருல அக்கவுன்ட் ஆரம்பிச்சு அதுல மாசா மாசம் காசை போட்டு கார்டை அவ கையில கொடுத்து அவ என்ன செலவு பண்றான்னு கேட்க கூட மாட்டிக்கிற? இனிமேல் ஒத்த பைசா கொடுக்காதே. அப்போ தான் அடங்குவா”

“யார் காசை யாருக்கு தர வேண்டாம்னு சொல்றது? இதுல எங்க டாடி சேர்த்து வச்ச சொத்தும் இருக்குது. அதுல எனக்கு முழு உரிமை இருக்குது. நீங்க என்ன எனக்கு காசு தர மாட்டேன்னு சொல்றது?”

அவள் பேச்சில் பாகீரதி அதிர்ந்து விட்டாள். இதற்கு மேல் அவளை பேச விட்டால், ரசபாசமாகிவிடும்!!

“ரிபு! அவங்க உன் பாட்டி, உன் அப்பாவை பெத்து வளர்த்தவங்க. அவங்களுக்கு இதை சொல்ல எல்லா உரிமையும் இருக்குது. அதோட மட்டுமில்லாம இதுல உங்க அப்பா சம்பாத்தியம் மட்டும் அடங்கலை. இதுல என் சம்பாத்தியமும் அடங்கியிருக்குது. இதை உனக்கு எப்படி கொடுக்கணும், அல்லது கொடுக்கனுமா இல்லையானு கூட நான் தான் முடிவு செய்யணும். அதை மனசுல வச்சிக்கோ”

எதுவும் பேசாமல் தாயை உறுத்து விழித்தவள் மடமடவென்று உள்ளே சென்று தன் கைப்பையை எடுத்துக் கொண்டு  வெளியேச் செல்ல, “சுந்தரி! எங்க போற?” கத்திய பாட்டியையும், பின்னாலே வந்த அம்மாவையும் உதாசீனபடுத்திவிட்டு தெருமுனையில்  ஒரு ஆட்டோ பிடித்தாள்.

 தலைமை விஞ்ஞானிகள் நிரம்பிய அந்த ஹாலில் முக்கிய ஆலோசனை கூட்டமொன்று நடந்துக் கொண்டிருக்க, வைப்ரேட் மோடில் போட்டிருந்த அவனின் அலைபேசி அதிர்ந்தது. அபி காலிங் என்று வர, ஒரு சாரியை முனுனுத்துவிட்டு அழைப்பை துண்டித்தான். சில நிமடங்களில் மறுபடியும் அழைப்பு வர, அவன் உயர் அதிகாரி அழைப்பை ஏற்று பேசுமாறு சைகை செய்ய, வெளியே வந்து அழைப்பை ஏற்றான்.

“இனியா! ரிபு கோவிச்சுகிட்டு வீட்டை விட்டு போனா, எங்க போனான்னு தெரியல. அரை மணி நேரமா தேடிட்டு இருக்கேன். எங்கேனு தெரியல”

அடுத்த அரை மணி நேரத்தில் அவனும் ரிபுவை தேடும் பணியில் இறங்கியிருந்தான். அவனது மேலதிகாரியான தலைமை விஞ்ஞானிக்கு பணியைக் கடந்த நட்பு உண்டு. இவன் அவசரம் என்று வந்து நின்றவுடன் “என்ன உங்க ஃப்ரெண்டு ரிபு தானே?” எனவும், இன்னும் பட்சிகளுக்கும், பிராணிகளுக்கும் மட்டும் தான் தான் ரிபுவுக்காக ஓடுவது தெரியவில்லை என்று நினைத்துக் கொண்டான்!!

அவள் அலைபேசிக்கு சென்ற அனைத்து அழைப்புகளும் ஏற்கப்படாமால் போனது.

“எங்க போனான்னு தெரியல. வீட்ல பாட்டி கூட சண்டை. அம்மா அழுவுறாங்க. இல்லேனா விட்டுடலாம். அவளே நைட் வந்துடுவா”

கேட்டுக்கொண்டிருந்த அமிழ்தினியனுக்கு அசாத்திய கோபம் வந்தது!! எவ்வளவு சாதாரணாமாக சொல்கிறான்!!!

கோபத்துடன் வண்டியை கிளப்பியவனை பார்த்து, “எங்க போய் பார்க்க போற இனியா? இரு நானும் வரேன்”

“இல்லை வேண்டாம், உனக்கு ஆயிரம் வேலை இருக்கும் நீ அதை பாரு. எப்படியும் அவ எங்க போவா,வருவா, அவ ப்ரெண்ட்ஸ் யாரு எதுவுமே உனக்கு தெரியாது! என் ரிபுவை நானே தேடிக்கிறேன்” என்றபடி வேகமாக காரை கிளப்பிக்கொண்டு செல்ல, அவன் கிளப்பிய புழுதி அபியின் மனதில் மண்டியது!!

அவள் வழக்கமாக செல்லும் இடங்கள், அவள் நடுப்புக்களின் வீடு எல்லாவற்றிலும் விசாரித்து விட்டான். முகநூலிலும், வாட்ஸ்அப்பிலும் அவள் ஆன்லைன் இருப்பதாக காட்ட, ஓராயிரம் மெசேஜ் அனுப்பி விட்டான். பாகீரதி, பாட்டி, மகாலிங்கம் என மாற்றி மாற்றி அவனுக்கு போன் போட்டு அவள் கிடைத்து விட்டாளா என்று விசாரிக்க, ஒவ்வொரு முறை இல்லையென்று கூறும்போது மனம் கனத்து போனது!

சந்திரா மகாலிங்கத்திடம் புலம்பி தீர்த்துவிட்டார், “உலகத்துல இப்படியும் ஒரு புள்ளை இருக்குமா? எதுக்கெடுத்தாலும் வீம்பு பண்ணிட்டு, மூஞ்சை தூக்கி வச்சிட்டு. என் புள்ளையும் தான் இன்னும் எத்தனை காலத்துக்கு அவ பின்னாடியே ஓடுவான்?! அவனுக்குனு ஒரு வாழ்க்கையே இல்லாம ஆயிடுச்சு” மூக்கை சிந்தி அழுதுவிட்டு மறுநிமிடம் பாகீரதிக்கு போன் போட்டு, “நீ ஒன்னும் கவலைப்படாத! புள்ளைக்கு ஒன்னும் ஆயிருக்காது. அந்த திரிபுரசுந்தரி ஆத்தா காப்பாத்திடுவா. அதான் இனியன் பார்க்க போயிருக்கான்ல. அவன் கண்டுபுடிச்சிடுவான்”  என்று ஆறுதல் கூறும் அவரை பார்த்து மகாலிங்கம் மனதிற்குள் சிரித்துக் கொண்டார்!

அமிழ்தினியன் அனுப்பிய மெசேஜ் எல்லாம் ப்ளூ டிக் காட்ட, எங்கோ இருந்துக் கொண்டு அவள் மெசேஜை படித்துக் கொண்டு தானிருக்கிறாள் என்ற செய்தி அவனுக்கு கோபத்தை தருவிப்பதற்கு பதிலாக பெரு நிம்மதியை தருவித்தது. அவளுக்கு ஆபத்தேதும் இல்லை, அவள் பத்திரமாக தான் இருக்கிறாள்.பதறிய மனதை சாந்திப்படுத்த இந்த செய்தியை அவன் மூளைக்கு கடத்திக்கொண்டே அவளுக்கு செய்தி அனுப்பிக் கொண்டே இருந்தான். அவளை மிரட்டி, கெஞ்சி, விளையாட்டாய் என்று பல மாடுலேஷனில் அனுப்பிக் கொண்டே இருந்தான்.

வண்டி தானாக ‘பசவேஷ்வர் கானாவாலி’யில் நின்றது. போன தடவை அவள் வந்தபோது அவளுடன் சண்டை போட்டு பேசாமல் இருந்தது, பாதி சாப்பிட்டு அவள் தந்து, இவன் மறுத்தது, பின் டிவியில் பேட்டி கொடுத்தது என்று ஒன்றொன்றாய் நினைவு வந்தது.

அங்கிருந்த டேபிளில் அமர்ந்தவனுக்கு, அவள் ஆறு வயது, பத்து வயது, பதினெட்டு வயது,  இந்த நொடி வரை அவள் உணவை அவனுக்கு பகிர்ந்த நினைவலைகள்……

“என்னால சாப்பிட முடியல மம்மி”

“புட் வேஸ்ட் பண்ணக் கூடாதே?”

“அம்மா! அதான் முடியலைனு சொல்றால. விடுங்க நான் சாப்பிட்டுடுறேன்”

அதன் பின் அவர்கள் எங்கு சென்றாலும் அமிழ்தினியன் தனியாய் எதுவும் வாங்கியதில்லை, அவள் பாதி உண்டுவிட்டு மீதியை அவனிடம் நீட்டுவாள், அதை உண்டு தேவைப்பட்டால் வேறு உணவு வரவழைத்து சாப்பிடுவான்.

அவள் பாட்டியுடன் எப்பொழுதுமே அவளுக்கு லடாய் தான். அதற்காகவே  ஊருக்குச் செல்ல மாட்டாள். அப்படி தவிர்க்க முடியாத சூழ்நிலையில் போய் தான் ஆக வேண்டுமென்று பாகீரதி கூறினால், கையோடு அமிழ்தினியனையும் அழைத்துக் கொண்டு தான் போவாள். அவனும் படிப்பை  விட்டுவிட்டு அவளுடன் செல்வான்.

“கர்ண கவசகுண்டலம் மாதிரி ஏண்டி அவனை  கூடவே கூட்டிட்டு சுத்துற?” பாட்டியின் கேள்விக்கு முறைத்துவிட்டு, “எல்லாம் நீ விடுற அம்புலேர்ந்து காப்பாத்ததான் கிழவி” என்ற மைன்ட் வாய்சுடன் கடந்து விடுவாள்.

பாகீரதி கூட பல முறை அவனிடம் கேட்டுள்ளார், “இனியா! அவ தான் உன்னை யூஸ் பண்ணிகிறானு தெரியுதுல. நீ ஏன் அவ சொல்றதை எல்லாம் கேட்குற? உனக்கு பிடிச்சதை செஞ்சிட்டு போயேன்”

“எனக்கு பிடிச்சதை தானே செய்யுறேன்” என்று புன்னகையுடன் முடித்து விடுவான்.

அவளுக்கு செய்வது தான் அவனுக்கு பிடித்தது. அதில் தான் அவனது சந்தோசம் அடங்கியிருந்தது. மற்றவர்கள் நினைப்பது போல் அவன் ஒன்றும் தியாகமெல்லாம் செய்துவிடவில்லை, அவனின் சந்தோஷம் அவளில் தானே அடங்கி உள்ளது. அது மற்றவர்களுக்கு புரிய வாயிப்பில்லை தான்!

அவளது பிடித்தம், அவளது படிப்பு, அவளது வாழ்க்கை என்று எல்லாவற்றிலும் அவன் நிறைந்திருப்பான், ஒரு நலம் விரும்பியாய்!!

“ரிபு! பியு முடிச்சு அடுத்து என்ன செய்ய போற?” மகாலிங்கத்தின் கேள்விக்கு “நான் BSW (Bachelor of Social Work) செய்ய போறேன் மாமா” என்று ஒரு நாள் சொன்னவள், அடுத்த நாளே அதை BA Journalism என்று மாற்றினாள், பின்பு ‘ஹோட்டல் மேனேஜ்மன்ட் ‘என்றாள், ஒரே வாரத்தில் படிப்பே சரிவராது பிசினஸ் செய்ய போகிறேன் என்றவள், இறுதியாக, “நான் ஒரு பெரிய சோசியல் மீடியா இன்ப்ளுயன்சர் ஆக போறேன். வீடியோ, ரீல்ஸ் போட்டே லட்ச லட்சமா சம்பாதிக்க போறேன்” என்று அவள் வந்து நிற்கவும், “எப்படி வந்து சிக்கிருக்கேன் பார்த்தியா?” என்ற ரீதியில் பாகீரதி முழி பிதுங்கி நிற்க, அமிழ்தினியன் தான் அவளை, “நீ பேஷன் டிசைனிங் எடுத்து படி. உனக்கு அதுல ப்ரைட் பியுடர் இருக்கும். அது மட்டுமில்லாம அது சோசியல் மீடியால உனக்கு ஹை ப்ரோபைல் கொடுக்கும். நீ நினைச்ச மாதிரி சோசியல் மீடியா இன்ப்ளுயன்சர் ஆகலாம்” அவள் வழியிலேயே சென்று அவளை தாஜா செய்து அவளை படிக்க வைத்தான்.

இதையெல்லாம் அவன் பலமுறை சிந்தித்து பார்த்ததுண்டு, அப்பொழுதெல்லாம் தன்னையே அவளுக்கு ஒரு கார்டியனாக உருவகப்படுத்திக் கொள்வான். அவளை பார்த்துக் கொள்வதே தன் வாழ்நாள் நோக்காய் கொண்டவனுக்கு, இன்று அவளை பற்றிய பார்வை புதிது!!

காலங்கள் மாற மாற அவளை பற்றிய அவன் பார்வை மட்டுமே மாறியிருக்கிறது, முதலில் பாதுகாவலானாய், பின் நண்பனாய், இன்று……

இல்லை அப்படி அவளை பார்க்கக் கூடாது…இந்த பார்வை தவறு…..எது நடக்கக் கூடாது என்று கிட்டத்தட்ட ஒரு வருடமாக அவன் மனம் உருப்போட்டுக் கொண்டிருந்ததோ அதையே மீண்டும் மனம் நாட, அதிலிருந்து வலிய தன்னை இழுத்துக் கொண்டு வந்தான்….

“சார்…க்ளோசிங் டைம் சார்…யவர் ஆர்டர் ப்ளீஸ்” முழு சாப்பாடு வேண்டாம் , அவன் மனம் அவள் தந்த அரை சாப்பாடு தான் வேண்டுமென்றது! எதுவும்வேண்டாமென்று உரைத்துவிட்டு காரை எடுத்துக் கொண்டு மனம் போன போக்கில் ஓட்டினான்!!

அடுத்து அவன் நிறுத்திய இடம் கைக்கொண்டாரஹல்லி ஏரி!! மாலை பொழுதுகளில் மகாலிங்கம் மூவரையும் இங்கே அழைத்து வர, இரு ஷட்டில் பேட்டை தூக்கி கொண்டு கிளம்பினால் களைத்து தீரும் வரை விளையாடுவார்கள். ரிபு தோற்றால் ஒத்துக்கொள்ள மாட்டாள். கோபம் கொள்ளும் அவளை சமாதானப்படுத்த அவன் வேண்டும்.

கிட்டத்தட்ட ஒன்றரை கிலோமீட்டர் இருக்கும் அந்த ஏரியை சுற்றி இருவரும் ஓடி, யார் முதலில் வருவதென்று போட்டியில் யார் ஜெயிப்பதென்பது (ரிபு) தெரிந்த ஒன்று தான் என்றாலும் தவறாமல் இருவரும் ஓடுவார்கள். ஓடி முடித்து வியர்வை வழிய அங்கிருந்த குல்முஹர் மரத்தின் கீழ் அமர்ந்து முகத்தில் மோதும் காற்றை அனுபவித்து வாய் ஓயாமல் அவள் பேசிக் கொண்டே  இருக்க, அவன் கேட்டுக் கொண்டே இருப்பான். அது அவர்கள் இருவருக்குமான நேரம். அதே பெஞ்சில் அபியோ, மகாலிங்கமோ அமர விட மாட்டாள். வேறு யாரேனும் அமர்ந்திருந்தாள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அவர்கள் அங்கிருந்து நகரும் வரை காத்திருந்து அமர்ந்து பேசி விட்டு தான் செல்வாள்.

என்னதான் அவர்கள் இருப்பது மேற்கத்திய கலாசாரம் பரவலாக உள்ள பெங்களுருவாக இருந்தாலும், திரிபுரசுந்தரி வளர வளர அவர்கள் இருவரையும் பார்க்கும் மற்றவர் கண்களில் ஒரு சிறு மாற்றத்தை அமிழ்தினியன் உணர்ந்தான். அதற்கே அந்த சந்திப்பை அவன் தவிர்க்க நினைத்தாலும் திரிபுரசுந்தரி புரிந்து கொள்ளாமல் பிடிவாதம் பிடிக்க, அவன் அந்த சமயங்களை தவிர்க்க படிப்பு, வேலை என்று தன்னை பரபரப்பாய் வைத்துக் கொண்டான். அப்பொழுதெல்லாம் அவளை பற்றிய வேறு எண்ணமே வந்ததில்லையே???

சரியாக என்று அவள் மீதான அவன் பார்வை மாற்றம் வந்ததென்று அந்த நாளை நினைவு கூர்ந்தான்……

திடீரென்று ஒரு யோசனை புலப்பட்டது, ஷேடோவிடம் உதவி கேட்டால் என்ன? ஷேடோ சொன்னால் கேட்பாள் தானே? ஷேடோவிடம் சொல்லி அவளை வீடு திரும்ப சொன்னால்…..

அவன் அலைபேசியை எடுத்து ஷேடோவை தொடர்பு கொண்டான்…….

மேற்றிசையிற் சூரியன்போய் விழுந்து மறைந்திட்டான்;
மெல்லஇருட் கருங்கடலில் விழுந்த திந்தஉலகும்!
தோற்றியபூங் காவனமும் துளிரும்மலர்க் குலமும்
தோன்றவில்லை; ஆயினும்நான் ஏதுரைப்பேன் அடடா!
நாற்றிசையின் சித்திரத்தை மறைத்தஇருள், என்றன்
நனவிலுள்ள சுந்தரியை மறைக்க வசமில்லை!
மாற்றுயர்ந்த பொன்னுருக்கி வடிவெடுத்த மங்கை
மனவௌியில் ஒளிசெய்தாள் என்னதகத் தகாயம்!

 

அமிழ்தம் கமழும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!