“நீயும் வா பாரி.. பேசிக்கிட்டே நான் சாப்பிடுறேன். ஆமா இன்னிக்கு உங்க வீட்ல என்னடா ஸ்பெஷல்?”
“இடியாப்பம்.. தேங்காய் பால்”
“சூப்பர் பாரி.. நீ சொன்ன மாதிரி டேபிள்ஸ் படிச்சிட்டுட்டேன்.. மறக்காம இருக்கனும் டா”
“இப்ப பஸ்ல என்கிட்ட ஒரு தடவை சொல்லு.. டெய்லி சொன்னா மறக்காது, ஓகேவா?”
நண்பர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டே ஐந்து பூரிகளை உள்ளே தள்ளி இருந்தாள் கருணா.
“பூரி போதும் அம்மா.. அத்தை கொடுத்த ஜாமுன் ஒன்னு கொடுங்க..” என்றாள் ஆசையாக.
“நீ லன்ச் எடுத்து வை சுமதி.. நான் பிள்ளைகளுக்கு ஜாமுன் எடுத்து கொடுக்கிறேன்” என்று பாட்டி வந்து டப்பாவை திறந்தார்.
அவர் கை இடுக்குகள் தலையை நுழைத்து கொண்டு பார்த்தாள் கருணா.
ஜீராவினுள் குளித்து கொண்டிருந்த குலாப் ஜாமூங்களை பார்த்ததும் நாக்கில் எச்சில் ஊறியது அவளுக்கு.
“ஏன்டா.. உங்க அம்மாவுக்கு பெரிய தாராள பிரபாவதின்னு நினைப்பா?” என்றார் பாட்டி பாரியிடம்.
“என்னது பிரபாவதி..?”
“தாராள பிரபுவோட பெண்பால்” என்று எடுத்து கொடுத்தாள் கருணா.
“ஏன் பாட்டி நிறைய கொடுத்து விட்டாங்களா? எல்லாருக்கும் வேணும் இல்ல பாட்டி?”
“அது இல்ல.. போன தடவையே சொன்னேன்.. ஜீரா பாகை அளவா வச்சா போதும்னு.. இப்ப இவ்வளவு ஜீரா வீனா தானே போகும்?”
“பாட்டி.. அது ஏன் வேஸ்ட்டா போகணும்.. மீன் தண்ணீர்குள்ள இருந்தா தான் உயிர் வாழும்.. தண்ணீரிலே நீந்தும் போது மீன்களை பார்க்க எவ்வளவு அழகா இருக்கும். அது மாதிரி .. இந்த குண்டு குண்டு ஜாமுன் ஜீரால்ல மூழ்கி இருந்தா தான் டேஸ்ட்.. நாம மிச்ச இருக்க ஜீராவுல.. பால்கொழுக்கட்டை செஞ்சுக்கலாம் நாளைக்கு” என்றது வேறு யாரும் இல்லை.. கருணாம்பிகை தான்.
“அட சூப்பர் டீ என் தங்கம்…. ஐயோ அப்படியே என் சமத்தை கொண்டு பிறந்திருக்கியே?” என்று அவள் கண்ணம் வழித்து முத்தம் கொஞ்சினார் பாட்டி.
“என்னது? மிச்சம் இருக்க ஜீராவுல பால் கொலுக்கட்டயா?ஆங்..” என்று திறந்த வாய் மூடாமல் பாட்டியையும் பேத்தியையும் பார்த்து அமர்ந்திருந்தான் பாரி.
கருணாம்பிகை இரண்டு ஜாமூன்களை முழுங்கிவிட்டு, ஒரு ஜாமூனை எடுத்து அவனது திறந்த வாயினுள் திணித்து, “ஹாப்பி பர்த்டே பாரி வேந்தன்“ என்று கூறி விட்டு தன் ஸ்கூல் பேக்கை எடுத்துக்கொண்டு ஓடி விட்டாள்.
“ஏன்டா, நான் கொடுத்த ஜாமூனை கொடுத்து எனக்கே வாழ்த்து சொல்லிட்டு போறா பாருடா..“ என்றான் பாரி தன் நண்பனிடம்.
“அவளை விடுடா.. இன்னிக்கு பார்ட்டிக்கு என்ன எல்லாம் பிளான் வச்சிருக்க சொல்லு?” என்று பேசிக்கொண்டே இருவரும் ஸ்கூல் பஸ் ஸ்டாப் நோக்கி சென்றார்கள்.
பாரி வேந்தனின் பெற்றோர்கள் வீட்டாரை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இன்று வரை தமயந்தி வீட்டினில் இவர்களை ஏற்று கொள்ளவிலை. தர்மராஜ் வீட்டினில் பாரி பிறந்ததிற்கு பிறகு கொஞ்சம் சேர்த்து கொண்டார்கள். அவர்கள் ஊரில் செல்வமும் செல்வாக்கும் நிறைந்த குடும்பம். நடுத்தர வீட்டு பெண்ணான தமயந்தி மீது அவர்களுக்கு அவ்வளவு பிடித்தம் இல்லை. தர்மராஜின் சகோதரர்கள் பெரிய குடும்பத்து பெண்களை மனம் புரிந்திருந்தனர். இவர்கள் அங்கே சென்றால் அவ்வளவாக மரியாதை கிடைப்பது இல்லை. அதனால் மிகவும் முக்கியமா விஷேங்களுக்கு மட்டுமே அங்கே செல்வார்கள்.
கடவுள் சித்தமோ என்னவோ, பாரிக்கு பிறகு அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை.
இவர்கள் திருமணம் ஆகி இங்கே வந்ததிலிருந்து இவர்களுக்கு துணையாக இருப்பது கருணாம்பிகையின் குடும்பம் தான்.
எந்த சூழ்நிலையிலும் தன் குடும்பத்தின் தயவை வேண்டி நிற்க கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார் தர்மராஜ். தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து, தன் கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் பெரிய பதவியில் இருக்கிறார்.
அன்று மாலை பிறந்த நாள் விழாவிற்கு அக்கம் பக்கத்து பிள்ளைகளை அழைத்திருந்தார் தமயந்தி. வில்வநாதன் கருணாம்பிகை குடும்பத்தையும் அழைத்திருந்தார்.
தமயந்திக்கு உதவுவதற்காக பாட்டியும் சுமதியும் மதியமே வந்து விட்டார்கள்.
“குலாப் ஜாமுன் ரொம்ப நல்லா வந்து இருந்தது தமி.. “
“நிஜமாவா சொல்ற? நான் நிறைய பாகு வச்சிட்டேன். அப்புறம் தான் அம்மா சொன்னது நியாபகம் வந்துச்சு..”
“பரவாயில்ல.. ஆனா மிச்சம் இருக்கிற ஜீராவை மறக்காம எடுத்து வை.. நாளைக்கு அதுல பால் கொழுக்கட்டை செஞ்சுடலாம்.. “
“அப்படி செய்யலாமா ம்மா?”
“நல்லா செய்யலாம்.. நான் சொல்லி தரேன்.. இப்ப சாயந்தரம் என்ன செய்யலாம்னு பார்போம் வாங்க” என்று பாட்டி களத்தில் இறங்கினார். வீட்டிலே பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி பலகாரங்கள் எல்லாம் செய்தார்கள்.
பானி பூரி, பாப்கார்ன், சமோசா, தர்பூசணி ஜூஸ் என்று எல்லாம் தயார் செய்துவிட்டார்கள்.
“ரொம்ப தேங்க்ஸ் சுமி, தேங்க்ஸ் ம்மா” என்றார் தமயந்தி கண்கள் கலங்க.
“நாங்க என்ன அந்நியமா… சீக்கிரம் தயார் ஆகு.. நாங்களும் போய் கிளம்பி வரோம்.. “
மாலை சிறப்பாக நடந்தது பிறந்தநாள் விழா. முதல் துண்டு கேக்கை வில்வாவிற்கு தான் ஊட்டி விட்டான் பாரி.
———–
பாரியின் அப்பா தர்மராஜ் மிகவும் நன்றாக கிரிக்கெட் விளையாடுவார். விடுமுறை நாட்களில் பிள்ளைகளுடன் கிரிக்கெட் விளையாடுவார். தனியாக வகுப்பிற்கு செல்லவில்லை என்றாலும் அவரது கோச்சிங்கினாலே வில்வாவும் பாரியும் அவர்கள் பள்ளி கிரிக்கெட் டீமில் தேர்வாகி இருந்தனர்.
ஆனால் இவர்கள் இருவரையும் விட கருணாம்பிகை தான் நன்றாக விளையாடுவதாக தர்மராஜ் கூறுவார். அவரிடம் எப்படியாவது பாராட்டை வாங்கிட வேண்டும் என்று இருவரும் எவ்வளவோ முயற்சி செய்கிறார்கள்.
“பாப்பாவை அவுட் பண்ணி காண்பிங்க பார்க்கலாம்” என்பார் சிறுவர்கள் இருவரையும்.
ஆனால் இன்று வரை இருவராலும் அது முடியவில்லை. கருணாம்பிகையின் கையில் உள்ள பேட் அவள் சொல்வதை அப்படியே கேட்கும்.
“இன்னிக்கும் அவளை அவுட் ஆக்க முடியலையே பாரி. எனக்கு எதிரியே என் தங்கச்சி தான்டா..”
இவர்கள் பயந்ததை போலவே, தர்மராஜை அழைத்து கொண்டு போய், ஜூனியர் கிரிக்கெட் டீமில் சேர்ந்து விட்டாள். சேர்ந்தது மட்டும் அல்லாமல் மூன்றே மாதத்தில், ஜூனியர் டீம் கேப்டனாகவும் தேர்வாகி விட்டாள்.