Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அமுதமழை சாரல்

அமுதமழை சாரல் 42.1

அத்தியாயம் 42

காலை நான்கு மணிக்கு, தமயந்தி அருந்ததி இருவரும் கோவில் வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தார்கள்.



Advertisement

“என்ன சின்னு, இதுக்கு எல்லோ கலர் ஏன் போட்ட? ஆரஞ்சு போட்டிருக்கணும்”

“என்ன தமி, இந்த பூவும் பக்கத்துக்கு பூவும் வேற வேற சைஸ்ல இருக்கு?”

Advertisement

Advertisement

ராஜி மேற்பார்வை பார்த்து இருவரையும் கடுப்பேற்றிக்கொண்டிருந்தார்.

“பாப்பா, இதுக்கு பாரி வில்வாவே பரவாயில்ல போல.. நீ தான் ராஜிம்மா வரட்டும்னு கூட்டிட்டு வந்த” என்று முணுமுணுத்து கொண்டே கோலத்தை போட்டார் தமயந்தி.

Advertisement

“முடிச்சிட்டீங்களா?” என்று கேட்டுக்கொண்டே வந்தான் பாரி. கையில் பெரிய பிளாஸ்கில் தேநீர் கொண்டு வந்திருந்தான். இவர்கள் மூவருக்கும் டம்ளர்களில்  ஊற்றி கொடுத்தான்.

“என்னத்த முடிச்சாங்க பாரி, கல்யாணத்துக்கு கோலம் போட ஆளு சொல்லலாம்னு சொன்னதுக்கு நாங்களே போடுவோம்னு சொல்லிட்டு சுமாரா ஒன்னு போட்டு வச்சிருக்காங்க” என்றார் ராஜி நக்கலாக.

தமயந்தி உர்ரென்று அவரை பார்த்து முறைத்து வைத்தார்.

கோலம் மிகவும் அழகாக இருந்தது. பூக்களும், பூக்களை சுற்றி பட்டாம்பூச்சிகளும் என்று அத்தனை அழகாக இருந்தது.

“சூப்பரா இருக்கு அம்மா… சூப்பர் பாப்பா” என்றான் பாரி அதன் அழகில் ஈர்க்கப்பட்டு.

“என்னதான் இருந்தாலும் அம்மா அம்மா தான், மாமியார் மாமியார் தான் இல்ல?” என்று அவனை  வம்பிற்கு இழுத்தார் ராஜி.

“ஆத்தி… நான் வரலை இந்த ஆட்டத்துக்கு… சீக்கிரமா உள்ள வாங்க மூனு பேரும்” என்று அவன் கோவிலுக்குள் சென்று விட்டான்.

ஆனால் கோலத்தை வித விதமாக போட்டோ எடுத்து ஸ்டேட்டஸில் வைத்து கொண்டார் ராஜி. 

அருந்ததியிடம், “தமி இப்படி நான் சொல்றதுக்கு மூஞ்சிய உர்ருன்னு வச்சி முறைச்சு பார்க்கிற அழகே அழகு, அதான் சும்மா விளையாட்டுக்கு” என்று ரகசியம் கூறினார்.

உள்ளே சுமதியும் பாட்டியும் புரோகிதர் சொன்ன பொருட்களை எல்லாம் எடுத்து வைத்து கொண்டிருந்தார்கள்.

அவர்கள் சொல்லும் வேலைகளை செய்து கொண்டிருந்தான் வில்வா.

“என் நண்பன் போல யாரும் இல்லை.. கொடு கொடு டீ குடிச்சிட்டு தெம்பா வேலை பார்ப்போம்” என்று பாரி வந்ததும் தான் உற்சாகமாகினான் வில்வா.

“டேய் டீ போட்டு கொடுத்தனுப்பிருக்கிறது உன் பொண்டாட்டி, நீ என்னடான்னா நண்பன் போல யாரு மச்சான்னு பாட்டு பாடுற” என்று நொடித்து கொண்டார் பாட்டி.

பாரியும் நண்பன் அருகில் அமர்ந்து கொண்டான்.

கோலம் முடியவும் பெண்கள் மூவரும் உள்ளே வந்து விட்டார்கள்.

“ஆச்சா சுமி, இன்னும் வேற ஏதாவது வேலை இருக்கா?” என்றார் தமயந்தி.

“கோவில்ல எல்லாம் முடிஞ்சுது… இங்க ஒருத்தர் மட்டும் இருந்தா போதும். மத்தவங்க எல்லாம் வீட்டுக்கு போயிட்டு ரெடி ஆகிட்டு வருவோம்” 

“நாங்க ரெண்டு பேரும் இங்கே இருக்கோம்..” என்றனர் பாரியும் வில்வாவும்.

“ஒருத்தர் போதுமே டா” என்றார் பாட்டி.

“வேணும்னா போன் போடுங்க …உடனே வந்துடறோம்” என்று முடித்து விட்டனர்.

இன்று காலை தான்  கருணாம்பிகை அவினாஷ் திருமணம் நடக்க உள்ளது. அவர்கள் ஏரியா பிள்ளையார் கோவிலில் தான் திருமணம்.

இதற்கு முன்பு இங்கே திருமணங்கள் எல்லாம் நடந்தது இல்லை. அதனால் இங்கே திருமணத்தை வைத்து கொள்ளலாமா என்று கோவிலில் கேட்டனர். விஷயத்தை கூறியதும் கோவில் புரோகிதருக்கு மிகவும் மகிழ்ச்சி பெருமை, “பேஷா செய்யலாம். நான் பார்க்க வளர்ந்த குழந்தை கருணா. கல்யாணத்துக்கு கோவில் பக்க வேலைகளை எல்லாம் நான்  ஜமாய்ச்சிடறேன், ஒன்னும் கவலை படாதீங்க.. இது நம்ம ஆத்து கல்யாணம் மாதிரி.. நம்ம சக்தி விநாயகர் கண் பார்வையில் வளர்ந்த பிள்ளைங்க.. அவர் அருளால் அவர் சன்னதியில் கல்யாணம்  நடக்கிறது ரொம்ப சிறப்பு..” என்றார்.

பெரிய கோவிலிலாவது திருமணத்தை வைத்து கொள்வோம் என்று வீட்டினர் கேட்டதிற்கு கருணா, “என்னோட சந்தோசம், துக்கம், மகிழ்ச்சி, கனவு, ஆசை, ஏமாற்றம், வெற்றி இப்படி எல்லாத்தையும் நம்ம விநாயகர் கூட தானே பகிர்ந்துக்கிட்டேன். அதே போல என் வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வும் இங்கேயே நடக்கட்டும்” என்று கூறி விட்டாள். 

அனைவரும் அவினாஷை பார்க்கவும், அவன் கருணாவையே பார்த்து கொண்டிருந்தான். இனிமேல் அவனை பார்க்கிறது வேஸ்ட்.. என்று அனைவருக்கும் புரிந்து போனது.

“கருணாம்பிகை, வேதா தாத்தாவிற்கும் ஆசை இருக்கும் இல்லையா? அவர் பேரன் கல்யாணம், நாமளே முடிவு செய்ய கூடாது” என்றார் வீரராகு தாத்தா.

கருணா சங்கடமாக அவரை பார்க்கவும்,

“அப்படி எல்லாம் எனக்கு ஆசை இல்லை பாப்பா.. என் பேரன் அவன் பொஞ்சாதி கூட கண் நிறைஞ்ச மணக்கோலத்துல பார்த்தா போதும்.. அவன் நிம்மதியா  சந்தோசமா வாழனும். உன்கூட இருந்தா நிச்சயம் அவன் நல்லா இருப்பான்னு  எனக்கு நம்பிக்கை இருக்கு பாப்பா.

அதே மாதிரி  நாங்க இங்க வந்ததிலிருந்து இந்த சக்தி விநாயகர் தானே எங்களுக்கு துணையா இருக்காரு.. கல்யாணம் இங்கேயே நடக்கட்டும். நான் என்ன நினைப்பேன்னு யாரும் யோசிக்க வேண்டாம்… நீங்க எல்லாரும் சொல்ற மாதிரியே செஞ்சுப்போம்..” என்று விட்டார்.

“ஏன் தாத்தா, நாம எல்லாரும் சொல்றது ஒன்னு கூட நடக்காது.. கருணா சொல்றது தான்.. “ என்று குறைபட்டுக்கொண்டான் வில்வா. அவனுக்கு தங்கை கல்யாணத்தை பெரிதாக செய்ய வேண்டும் என்று ஆசை.

கருணாவிற்கு திருமணத்திற்கான பட்டும் தாலியும் அவினாஷ் வாங்கிவிட்டான். அதற்கு மேலே வேறு  துணி மணிகள் வாங்க வேண்டாம் என்று கருணா கூறிவிட்டாள். இப்பொழுது தானே பாரி வில்வா கல்யாணத்திற்கு நிறைய துணிமணிகள் எடுத்தோம். அதற்காக காசு ஒதுக்கி இருந்தால் அதை கொடுக்கும் படியும், அதனை என்ன செய்வது என்று பிறகு கூறுவதாகவும் கூறி விட்டாள்.

நெருங்கிய உறவினர்களையம் நண்பர்களையும் மட்டுமே அழைத்திருந்தார்.

பாரி வீட்டிலும், கருணா வீட்டிலும், அவினாஷ் வீட்டிலும், சீதாலட்சுமி மிஸ் வீட்டிலும் என்று உறவினர்கள் தங்கி கொள்ள ஏற்பாடு செய்யதனர். ரூம் பிடிப்பது போன்ற செலவுகளும் இல்லை. ஆனால், அப்படி ரூம் பிடித்தால் அதற்கு ஆகும் பணத்தையும் தனியே எடுத்து வைக்குமாறு கூறினாள் கருணா. 

அவினாஷ் வீட்டு மாடியில் அனந்தன் தாத்தா குடும்பம் குடிபெயர்ந்து மூன்று மாதம் ஆகிவிட்டது. ராகவ் அண்ணா அண்ணா என்று அவினாஷுடன் ஆசையாக பழகினான். மீரா அருந்ததியுடனும் ஹர்ஷ் வர்ஷுடனும் நன்றாக ஒட்டிக்கொண்டாள். ரஞ்சி அனைவருடனும் ஒரு எல்லையோடு நிறுத்திக்கொள்வார். ஒட்டி உறவாடவும் இல்லை, வெட்டி விலகி நிற்கவும் இல்லை. அனந்தன் தாத்தா மற்ற தாத்தாக்களோடு சேர்ந்துகொண்டார்.

பியூட்டி பார்லர் எல்லாம் வேண்டாம் என்று விட்டாள் கருணா.. இன்னும் நிறைய விஷயங்களை வேண்டாம் என்று கூறி இருந்தாலும் ஒவ்வொரு செலவிற்கான பணத்தை மட்டும் தனியே எடுத்து வைத்துகொள்ளுமாறு கூறிவிட்டாள்.

அந்த கணக்கை வர்ஷித்தாவை பார்க்கும்படி பொறுப்பை ஒப்படைத்திருந்தாள்.

சீதாலட்சுமி மிஸ்ஸிற்கு அவ்வளவு மகிழ்ச்சி, “இப்படி ஒரு ஜோடி அமைவது எல்லாம் அபூர்வம்.. கருணா அதிர்ஷ்டசாலியா அவினாஷ் அதிர்ஷடசாலியான்னு சொல்லவே முடியாது.. ரெண்டு பேரும் வைரம் தான்” என்று சொல்லி சொல்லி பெருமை பட்டுகொண்டார்.

“போட்டோகிராஃபி இல்லாமல் எப்படி கல்யாணம் நடக்கும்” என்று சண்டைக்கு வந்தனர் பாரியும் வில்வாவும்.

“கல்யாணம்னா வர்றவங்க எல்லாம் போட்டோ எடுத்துட்டு  கிப்ட் கொடுத்துட்டு போனா தானே முடியும்?”

“அதானே?”

“போட்டோகிராஃபிக்கு என்ன செலவாகும்ன்னு கணக்கிட்டு நோட் பண்ணிக்கோங்க அண்ணி” என்றாள் வர்ஷித்தாவிடம். ஆம் வயதில் சிறிய பெண்ணாக இருந்தாலும் உறவு முறை வைத்து தான் அழைக்க வேண்டும் என்று பாட்டி கூற அப்படியே பழகிக்கொண்டாள் கருணா.

பாரியும் வில்வாவும் செலவு கணக்கை குறைத்து கூறவும், ஹர்ஷிதா வந்து, எங்க மேரேஜ் அப்ப இவ்வளவு கொடுத்திருக்கோம், நிச்சயதார்த்தத்திற்கு இவ்வளவு கொடுத்திருக்கோம்” என்று புள்ளி விவரத்தோடு எடுத்து கொடுத்தாள்.

“டேய், நமக்கு சாதகமான ஒரு வார்த்தை பேச மாட்டாங்க.. ஆனா நம்மளை மாட்டி விட மட்டும் எல்லாரும் ஒன்னு கூடிர்றாங்க பாரி”

“விடு வில்வா, ஆல் ஸ்மால் கிட்ஸ்”

இவர்கள் பேசுவதை யாரும் கண்டுகொள்ளவே இல்லை.

“போட்டோகிராஃபி  செலவை இவங்க கிட்ட இருந்து வாங்கிக்கோ அண்ணி” என்று முடித்து விட்டாள்.

“ராகவிற்கு போட்டோகிராஃபின்னா ரொம்ப இன்டரஸ்ட்டாம் கருணா. அவனையே எடுக்க சொல்வோமே” என்றான் அவினாஷ்.

“சூப்பர் அண்ணா, நான் போய் அந்த ரவா உப்மாகிட்ட சொல்லி அவனை கூட்டிட்டு வரேன், அவனுக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கும்” என்று எழுந்து ஓடினாள் அருந்ததி.

 

அவனிடம் ஒரு பழைய மாடல் கேமரா தான் இருந்தது. “என்கிட்டே லேட்டஸ்ட் மாடல் கேமராயிருக்கு, தர்ஷ் யூ எஸ்ல இருந்து கொடுத்தது”, என்று ஹர்ஷ் அவளது கேமராவை கொண்டு வந்து கொடுத்தாள்.

“நீங்க கவலையே படாதீங்க அண்ணா ப்ரோப்பஷனல் போட்டோ கிராபர் விட நான் நல்ல எடுப்பேன்” என்றான்.

இப்படியாக அனைவரையும் சேர்த்துக்கொண்டு ஆளுக்கொரு வேலைகளை பிரித்து கொடுத்தாள் கருணா.

நிதி அமைச்சர் வர்ஷித்தா என்றால் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷித்தா.

பெரியவர்கள் என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்று சொல்ல சொல்ல சிறியவர்கள் அனைவரும் சேர்ந்து எல்லா வேலைகளையும் செய்தார்கள்.

கலாட்டாவும் கலகலப்பாகவும் எல்லா ஏற்பாடுகளும்  நடந்து, இதோ இன்று திருமண நாள் காலை பொழுதும் அழகாக விடிந்துவிட்டது.

—————————

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!