Skip to content
Post Views: 2,337
வேளை 16
வனஜா சசிகலாவிடம்,
Advertisement
“ஏன் கா? உன் மருமக அந்தவார பேச்சுப் பேசுறா? எதுவும் விசேஷம் இல்லையானு அவ அண்ணியை கேட்டா அந்த புள்ளைக்கு அதுவே புரியல. உன் மருமக தீபாவளி, பொங்கல்னு சொல்றா?” என்றார்.
“ஏன் டி பொங்கல் தீபாவளியெல்லாம் விசேஷமில்லையா?” என்று சசிகலா கேட்க,
Advertisement
Advertisement
“என்னக்கா தெரியாத மாதிரி கேட்குற? உன் மருமவளுக்குக் கல்யாணமாகி ஒரு வருஷம் மேல ஆகுது, நல்ல செய்தி எதுவுமில்லையானு கேட்டா மாமியாளும் மருமகளும் இப்படி பேசுறீங்க?” என்று நொடித்தார் வனஜா.
“நாங்க ஒன்னும் தெரியாம பேசல, ஏன் என் வூட்ல விசேஷம்னா நீ வந்து எதாவது ஒத்தாசை செய்யப்போறியா?” என்று சசிகலா கேட்டதும்,
Advertisement
“என்னக்கா இப்படி கேட்குறா? ஒரு ஆசையிலதானே கேட்டேன்” என்றதும்,
“அவ்வளவு ஆசை இருக்கவ உன் புள்ளைக்குக் கல்யாணம் பண்ணி பேரப்பிள்ளையைப் பாரு. இல்லையா நீயே பெத்துக்க. விசேஷம்னு சொன்னா என் மருமவளுக்குப் பிரசவம் பார்க்க போறியா?” என்று கேட்டு விட வனஜா முகம் கன்றியது.
“என்னக்கா அநியாயமா பேசுற? ஊர்ல உலகத்துல இல்லாததையா கேட்டேன். உன் பேரப்புள்ள வந்து என்னையா பார்க்க போவுது?” என்று சொல்லிவிட்டு அவர் ஆடுகளையும் மாடுகளையும் ஓட்டிச்செல்ல,
“அப்புறம் என்னத்துக்குடி வந்து கேட்ட?” என்று திட்டிக்கொண்டு சசிகலா வீட்டின் முன்பகுதியில் இருந்த தென்னை மரங்களுக்கு நீர் ஊற்றினார்.
உதயாவோடு அவள் வீட்டுக்குச் சென்ற சரோஜினி அம்மா செய்த பஜ்ஜியை உண்டுவிட்டு புகுந்த வீட்டுக்குள் புகுந்தாள்.
உதயா லாலாவுக்காக வாசலில் காத்திருந்தாள்.
சசிகலா தனக்குள் புலம்பியபடி இருக்க,
“என்னத்த?” என்று கேட்டாள் சரோஜினி.
“என்னடி அந்த வனஜா கிட்ட வாயைக் கொடுத்தியா?” என்று சசிகலா கேட்கவும்,
“அவங்ககிட்ட வாயைக் கொடுத்திட்டா உங்ககிட்ட எப்படி பேசுறதாம்?” என்று கேட்க,
“அம்மாடியோவ்! இதுக்குத்தான் உன் மருமவளுக்கு வாய் அதிகம்னு சொல்லிட்டுப் போனாளா அவ?” என்று சசிகலாவும் சளைக்காது கேட்டார்.
உதயா காம்பவுண்ட் சுவரின் முன்பக்கம் போடப்பட்டிருக்கும் கல் பெஞ்சில் அமர்ந்து அவர்களை வேடிக்கைப் பார்த்தாள்.
சரோஜினி அந்த வனஜா கேட்டதை சொல்லியவள்,
“அண்ணியைப் பார்த்து சும்மா இருக்கியானு கேட்கறாங்கத்த” என்றாள் கோபமாக.
“என்னையும் கேட்டா டி, நல்லா கேட்டுட்டுத்தான் விட்டேன். எனக்குப் பேரப்புள்ள பொறந்தா அவளா சீராட்டப் போறா? சும்மா வேணும்னு கேட்டுப் பார்க்குறது என்னமோ பெரிய டாக்டராட்டம்” என்றவர்,
“இந்த செடிக்கெல்லாம் தண்ணீ ஊத்து, நான் போய் டீ தண்ணி வைக்கிறேன்” என்று உள்ளே செல்ல, உதயா அமர்ந்திருப்பதைப் பார்த்த சரோஜினி அந்த பக்கம் உள்ள செடிகளுக்கு நீர் விட்டாள்.
“இந்த செடில இருந்து ஒரு ரோஸ் எனக்கு சக்தி கொடுத்ததுக்கு எங்கத்த ஊரையே கூட்டினாங்க. இன்னிக்கு செடியே எனக்குத்தான்” என்று வேண்டுமென்றே கத்தி சசிகலாவை வெறுப்பேற்றினாள் சரோஜினி.
‘அச்சோ’ என்று பார்த்தாள் உதயா.
“செடிதான் டி உனக்கு. வீடு என் மாமனார் பேர்லதான் இருக்கு” என்று உள்ளிருந்து குரல் கொடுத்தார் சசிகலா.
உதயாவுக்கு என்ன இவர்கள் இப்படி கத்தி சண்டையிடுகிறார்கள் என்று தோன்ற,
“இப்படி பேசினா அவங்க கோச்சுக்க மாட்டாங்களா சரோ?” என்று கவலையாகக் கேட்டாள்.
“யாரு அவங்களா? அட போங்கண்ணி, நாங்க டெய்லி இப்படித்தான் பேசிப்போம். நானும் கூட இவங்களுக்கும் எனக்கும் எப்படி செட்டாகப்போவுதுனு யோசிச்சிருக்கேன். அவங்க வீட்டுக்கு வெளியே இருக்கவங்களுக்கு எப்படியோ வீட்டாளுங்களுக்கு ரொம்ப நல்ல மாதிரி”
“சக்தி அவங்களுக்கு ஒரே பையன். அதுக்காக எந்த வேலையும் தெரியாம வளர்க்கல. இப்போ யோசிச்சுப் பார்த்தா சக்தியை எனக்குப் பிடிக்க காரணம் அவனோட வளர்ப்பு. நம்ம வீட்டு ஆளுங்க மாதிரி அவன் கிடையாது. அதுக்குக் காரணம் அவங்கம்மா அப்பா வளர்ப்புதானே?”
“இதே எங்கூட பொறந்தவன் தண்ணீ வேணும்னா கூட என்னைத்தான் கேட்பான். டீ கூட போட்டுக் குடிக்க மாட்டான், தெரியாது. எங்கம்மாவுக்கு மகன் மட்டும் என்னமோ வானத்துல இருந்து வந்த மாதிரி நினைப்பு” என்று நொடித்தாள்.
சரோஜினி பேசியதெல்லாம் உண்மையென்றால் உதயாவின் உள்ளம் லாலாவைப் பற்றி குறை சொன்னால் ஏற்குமா? அதைவிட லாலா இப்போது அப்படியில்லையே?
“உங்கண்ணா இப்போ நல்லா டீ போடுறார் சரோ, தோசை கொஞ்சம் சுமாரா செய்வார். பட் பாத்திரம் வெளக்கித் தரது அவர் வேலைதான்”
“ஓஹ் சமையல் உன்னோடது, பாத்திரங்கள் என்னோடதா?” என்று விளம்பர வசனத்தைப் பேசி சிரித்த சரோ,
“நிஜமா அவனா செய்றான். மைசூர் மகாராஜா மாதிரி இல்ல நாட்டாமை பண்ணுவான் அந்த பய” என்று யோசிக்க
“இல்ல சரோ. நிஜமா எனக்கு ஹெல்ப் பண்றார், தெரியலன்னாலும் அட்லிஸ்ட் ட்ரை பண்றார்” என்று கணவனைப் பாராட்டினாள் பாவை.
“பரவாயில்லை டீ குடிச்ச டம்ளரை கூட எடுக்காத திருவாளர் லாலா பாத்திரம் வெளக்குறதே பெரிய சாதனைதான் அண்ணி” என்று சிரித்தாள் சரோஜினி.
இப்படியாக அவர்களுக்குள் பேசிக்கொள்ள லாலாவும் சக்திவேலும் ஒன்றாக வீடு வந்தனர். அவர்கள் வரவும் அவரவர் வீட்டுக்குள் சென்றனர்.
மகளும் மருமகளும் பேசியதைக் கேட்ட சித்ராவின் உள்ளம் நியாயமாக குளிர்ந்திருக்க வேண்டும்.
ஆனால் அவர் கொண்ட மாமியார் அவதாரம் அப்படி இருக்கவிடவில்லை.
‘என் மகன் அவளுக்கு வேலை செய்யணுமா?’ என்று உள்ளம் வெம்பினார்.
‘நானெல்லாம் என் வீட்டுக்காரர், கொழுந்தனார், மாமனார், மாமியார், ரெண்டு புள்ளைங்கனு பார்க்கலயா? எனக்கு யார் ஒத்தாசை செஞ்சா?’
‘என் மகனை பொத்தி பொத்தி வளர்த்தது இவளுக்கு சேவகம் செய்யவா?’ என்று ட்ரம்பின் வரி போல இஷ்டத்துக்கு அவர் கேள்விகள் இருந்தன.
உதயா இரவு உணவுக்கு உதவி செய்ய சமையலறையில் இருந்தாள். வசுந்த்ரா சாம்பார் வைக்க, உதயா தோசை செய்தாள். சித்ரா கழுவிய பாத்திரங்களை அடுக்கினார்.
வசுந்த்ரா சாம்பாரை வைத்து முடித்தவர், “அக்கா, சாம்பார் ரெடி. நான் பகத்’துக்கு எக்ஸாம்க்கு சொல்லித்தரணும். மாடிக்குப் போறேன். நீங்க பார்த்துக்கோங்க” என்று சென்றுவிட, அவர் சென்றதும்
“லாலா அங்க உனக்கு வீட்டு வேலை செஞ்சுக்கொடுப்பானா?” என்று கேட்டார் சித்ரா.
“ஆமாத்த” என்று பூகம்பம் வரப்போகிறது என்ற அச்சத்தோடு ஆமோதித்தாள் உதயா.
“ஏன் ரெண்டு பேர் புழங்குற சாமானை உன்னால கழுவ முடியாதா? என் புள்ளையை எந்த கஷ்டமும் இல்லாம எப்படி வளர்த்தேன் தெரியுமா? நீ அவனை வேலைக்காரனா நடத்ததான் அவசர அவசரமா கட்டிக்கிட்டியா?” என்று சித்ரா கோபத்திலும் ஆற்றாமையிலும் வார்த்தைகளை கொட்ட, அது உதயாவின் மனத்தில் வடுவாய்ப் பதிந்தது.
‘வேலைக்காரன்’ என்ற அவரின் வார்த்தை அதன் வேலையை சரியாக அவ்வேளையில் செய்தது.
“ஏன் அத்த? வேலை செஞ்சா வேலைக்காரனா? அதுவும் யார் வீட்டு வேலை எங்க வீட்டு வேலைதானே செஞ்சார்? நானும் ஆஃபிஸ்ல வேலை செஞ்சுட்டுதானே வரேன்”
“என் புள்ளையும்தான் செய்றான். இப்படி உனக்கு சேவகம் செஞ்சுட்டு இருந்தான், அவன் எப்படி படிக்கிறது? பரீட்சையில பாஸ் ஆகுறது? உனக்கு வேலை செஞ்சிட்டே இருக்கணுமா? கொஞ்சம் பொறுமையா இருந்து கல்யாணம் பண்ணல.” என்று சித்ரா இருக்கிற எல்லா ஆத்திரத்தையும் கொட்டினார். சென்ற முறை லாலா மனைவிக்காக பரிந்து பேசியதை அவரால் தாங்க முடியவில்லை.
அதுவரை அவர் வீட்டில் யாருமே அவருக்காக பேசியதில்லை. அப்படியிருக்க மனைவிக்காக மகன் பேசுகிறான், எனக்காக பேசவில்லை என்ற ஆதங்கம்.
ஆதங்கம் தவறில்லை. அதனை காட்ட வேண்டிய இடம்தான் தவறாகிப்போனது.
“இனிமே உங்க பையன் எந்த வேலையும் செய்யாம படிப்பார் போதுமாத்த?” என்று உதயா கேட்க, அதற்கு எப்படி சண்டையிடுவது? அமைதியாக
“போதும் போதும்” என்றார். உதயாவுக்கு மானேஜரும் மாமியாரும் ஒன்று என்று தோன்றியது.
அவர்களை கையாளவே தனியாக படிக்க வேண்டும் போல. இத்தனைக்கும் அவர் மகளும் மாமியாரும் போல எல்லாம் பேச்சு இல்லை, அவர்கள் இருவரும் எவ்வளவு அன்யோன்யமாக பேசிக்கொள்கிறார்கள் என்று நினைக்க ஒரு நொடி ஏக்கம் வந்தாலும், அந்த பெண்ணாவது சந்தோஷமாக இருக்கட்டும் என்று நினைத்தது உதயாவின் மனம்.
லாலா அன்று இரவு அறைக்கு வர சித்ரா போட்ட வெடி அப்போது வெடித்தது.
“என்ன உதயா டல்லா இருக்க?” என்று கேட்டபடி அவளை பின்னிருந்து அணைக்க,
அவன் கையை உதறியவள், “விடுங்க” என்றாள் எரிச்சலாக.
அப்போதைக்கு சித்ராவை சமாளித்து விட்டாலும் இப்படி பேசுவதெல்லாம் உதயாவுக்கு உவப்பானதாக இல்லை. ‘நேர் நேர் தேமா இல்லைன்னா போம்மா’ என்று வளர்ந்தவள்.
குத்தல் பேச்சு, குதர்க்க பேச்சு எல்லாம் அவளுக்கு வராது. புரியாது. அப்படியானவளுக்கு இப்படி வார்த்தை சண்டை அதுவும் தேவையில்லாத விஷயத்துக்குப் போடுவது அவள் மன அமைதியைக் கெடுத்தது.
லாலாவுக்காக அமைதியாக போனாலும், அவனும் அவன் அம்மாவைப் போல திருமணத்தை சொல்லி பேசியிருக்கிறான் தானே?
அந்த கடுப்பு மிச்சமிருக்க சித்ரா வைத்த சட்டியில் குழம்பானான் லாலா.
“உங்களுக்கு வீட்டு வேலை செய்றது கஷ்டமா இருக்கா ஸர்?” என்று உதயா கொஞ்சம் கடுப்பான பாவனையில் கேட்க,
எண்ணெய் சூடாக இருப்பது தெரியாமல் அப்படியே அதில் விழுந்தான் லாலா லஜபதி ராய்.
“கஷ்டமாத்தான் இருக்கு. பேசிக்கலி நான் ஒரு சொகுசு குழந்தை” என்று உண்மையை சொல்லிவிட, தாங்கள் பேசியதை சித்ரா கேட்டிருப்பார் என்ற உண்மை தெரியாமல் லாலா அவன் அம்மாவின் சொல்லியிருக்கிறான் என்று தவறாக நினைத்தாள் உதயா.
“ஓஹ்ஹ்ஹ்” என்று உதயா போட்ட நெடிலின் நெடியை உணராதவன், குஷியான மனத்தோடு
“ஏன் எனக்கு வேலை இனிமே கொடுக்க போறதில்லையா?” என்று விட்டத்தைப் பார்த்தபடி தோளை இருபக்கமும் ஜோராக ஆட்ட, உதயாவும் எழுந்து உட்கார்ந்தவள் அவனை முறைத்தாள்.
“என்ன முறைக்கிற?” என்று லாலா புருவம் உயர்த்த,
“உங்களுக்கு வேலை செய்ய இஷ்டமில்லன்னா எங்கிட்ட சொல்லணும். அதைவிட்டு போய் உங்கம்மா கிட்ட குறை சொல்லுவீங்களா?” என்று கேட்க, லாலாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.
இந்தி தெரியாமல் வடக்கில் சிக்கியவன் போல பேந்த பேந்த விழித்தான்.
“நீ சொல்ற சம்பவமெல்லாம் எப்போ நடந்துச்சு? முதல்ல அதெல்லாம் எங்க நடந்துச்சு? எனக்கே தெரியலயே” என்று லாலா உண்மையைப் பேசினால் கூட, உதயா இருந்த மன நிலைக்கு நம்பவில்லை. அவன் கிண்டல் செய்கிறான் என்றே தோன்றியது.
“இங்க பாருங்க உங்க நக்கல் கிண்டலையெல்லாம் எண்டர்டெயின் பண்ற ஸ்டேஜ்ல நான் இல்லை. லீவுக்குனு ஊருக்கு வந்தா உங்கம்மா என்னை டென்ஷன் பண்ணிட்டே இருக்காங்க” என்று சொல்லும்போதே அவள் கண்கள் கசிந்தன.
“ஹேய் உதயாம்மா என்னடி இது? நான் அம்மாவை கேட்கிறேனு போனவாட்டி சொன்னதுக்கு நீயே பார்த்துக்கிறேனு சொன்ன இப்போ இப்படி பேசுற?” என்று லாலா குளத்திலிருந்து எடுக்கப்பட்ட கெண்டை மீனாக தத்தளித்து தவித்துப்போனான்.
“அப்புறம் ஏன் போய் உங்கம்மா கிட்ட நான் வேலை வாங்குறேனு கம்ப்ளையண்ட் பண்ணுனீங்க?” என்று உதயா கேட்க,
“நானா? நானா?” என்று அதிர்ந்தான் லாலா.
error: Content is protected !!