Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அறம் காக்கும் அன்பு

அறம் காக்கும் அன்பு 14

அத்தியாயம் 14

மணிமேகலையின் பரீட்சை ஒரு வழியாக முடிந்தது. அதில் வருத்தம் என்னவோ வந்தியத்தேவனுக்கு தான். தேர்வுக்கு அழைத்து செல்ல வர என்று சில நேரம் மணிமேகலையுடனான தனிமை பொழுதுகளை அவர் மிகவும் ரசித்தார்.



Advertisement

இருபத்தி ஆறு வயதில் இருந்தே திருமணம் செய்து கொள்ளும்படி பெற்றோர்கள் அவரை கேட்டுக்கொண்டார்கள் தான். அப்பொழுது அவருக்கு அவர் வேலையின் மீது பிடிப்பும்.. கர்வமும் அதிகம். நாட்டுக்காக உழைப்பது பெருமையாகவும், துணிச்சலும் சவாலும் நிறைந்த வேலை ஸ்வாரஸ்யமாகவும் இருந்தது. திருமண வாழ்க்கை தன் வேலையில் முழு கவனத்தை செலுத்த விடாது என்று நினைத்தே திருமணத்தை மறுத்துவிட்டார்.

திடீர் என்று ஏற்பட்ட அப்பாவின் மறைவும் அம்மாவின் உடல் நிலை குறைவும் அவரின் சிந்தனையை மாற்றி, உயிராக அவர் நினைத்த வேலையையே விட செய்தது.

Advertisement

Advertisement

இப்பொழுது நாற்பது வயதின் தொடக்கத்தில், இது என்ன ஒரு சலனம் என்று அவரை நினைத்தே அவருக்கு குறுகுறுப்பாக இருந்தது.

கையில் தினசரி வைத்து கொண்டு இந்த சிந்தனையில் ஆழ்ந்திருந்தார் வந்தியத்தேவன்.

Advertisement

“என்ன மகனே.. யோசனை எல்லாம் பலமா இருக்கு?” என்று கூறிக்கொண்டே வந்து அமர்ந்தார் பத்மா அம்மா.

“எனக்கு என்ன யோசனை. பேப்பர் படிச்சிட்டு இருக்கேன். ஆமா, நீங்க என்ன வீட்டு பக்கம் எல்லாம் வந்திருக்கீங்க? எனக்கு கூட நீங்க இந்த வீட்ல தான் இருக்கீங்களான்னு மறந்து போச்சு” என்றார் நக்கலாக.

“பேச்சை மாத்தாத.. அரைமணி நேரமா பக்கத்தை திருப்பவே இல்லையே?”

“அப்படியா?” என்று அவர் பேப்பரையும் கடிகாரத்தையும் மாறி மாறி குழப்பமாக பார்த்தார்.

“இங்க பாரு தேவ்.. ஆல்ரெடி வயசாகிட்டே போகுது.. அதனால சட்டுபுட்டுனு யோசிச்சு முடிச்சிட்டீன்னா, செயல்ல இறங்கு.. புரியுதா?”

“என்னம்மா உளர்றீங்க?”

“நான் பேசறது எல்லாம் இப்ப அப்படி தான் தெரியும்.. “

நிவேதாவோட உறவில் ஒரு திருமணம் என்று அவரும் நிரஞ்சனும் ஊருக்கு சென்றிருந்தார்கள். அதனால் பிள்ளைகள் இருவரும் வராஹி வீட்டில் தான் இருக்கிறார்கள். நான்கு பிள்ளைகள் இருக்கவே முக்கால்வாசி நேரம் பத்மா அம்மாவும் அவர்கள் வீட்டில் தான். ஒரே சிரிப்பும் கொண்டாட்டமுமாக இருந்தது அங்கு. அதை தான் வந்தியத்தேவன் அப்படி கேட்டார்.

சற்று நேரத்தில் வல்லபன், ஹாட் பாக்ஸில் காலை உணவை கொண்டு வந்து கொடுத்துவிட்டு சென்றான்.

“ஏம்மா, நமக்கும் சேர்த்து ஏன் மேகா சமைக்கிறாங்க. ஆல்ரெடி அங்கே நிறைய பேர் இருக்காங்க.. நாமளே செஞ்சுக்க மாட்டோமா? பாவம் இல்லம்மா ” என்றார் வந்தியத்தேவன் குற்றம் சாட்டும் குரலில்.

“நீ வேணும்னா போய் உதவி செய்யேன்.. என்னை தான் மேகா ‘நீங்க ஒரு உதவியும் செய்ய வேண்டாம், தயவு செஞ்சு போங்கன்னு அனுப்பிட்டா” என்று குறை படித்தார்.

“நீங்களும் வீர்யாவும் சேர்ந்து கலாட்டா பண்ணி இருப்பீங்க.. அதான் நீங்க வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்கன்னு சொல்லி உங்களை கிளப்பி இருப்பாங்க .. நீங்க சொன்ன மாதிரி எல்லாம் போங்கன்னு சொல்லி இருக்க மாட்டாங்க”

“பார்டா.. என்ன ஒரு வேவ்லென்த்.. அந்த பொண்ணு என்ன நினைக்கும் என்ன சொல்லி இருக்கும்னு கரெக்டா சொல்றியே! எப்படி டா” என்றார் ஆச்சர்யமாக கேட்பது போல.

“அம்மா நிஜமா சொல்றேன்.. பார்டர்ல வேலை செய்யும்போது கூட நான் இப்படி பதட்ட பட்டது இல்லை.. உங்க கிட்ட பேசுனாலே இப்பல்லாம் பதட்டமா வருது.. நான் என்ன சொன்னாலும் அதுல ஒன்னு கண்டு பிடிச்சு சொல்றீங்க”

“வருதா? இது தான் டா ஆரம்பம்..”

“எது?”

“பதட்டம் .. படபடப்பு இப்படி தான் ஆரம்பிக்கும்..”

“ஆளை விடுங்கம்மா.. நான் கிளம்புறேன்” என்று உள்ளே சென்றுவிட்டார்.

அவர் வந்ததும் இருவரும் சேர்ந்து காலை உணவை சாப்பிட்டு இருவரும் ஒன்றாகவே கீழே இறங்கினார்கள்.

பிள்ளைகள் நால்வரும் அப்பொழுது தான் பள்ளிக்கு கிளம்பினார்கள். ‘பாய் பத்தும்மா பாய் அங்கிள்’ என்று கோரஸ் குரலில் இவர்களுக்கு டாட்டா காட்டிவிட்டு பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தார்கள்.

“நானும் கிளம்புறேன் ம்மா.. சும்மா பேசிட்டே இருக்காம கொஞ்ச நேரம் தூங்கணும். காலையில் இருந்து சுத்திட்டே இருக்கீங்க” என்று அம்மாவிடம் கூறிக்கொண்டே அவரது பைக்கில் ஏறினார்.

“இருங்க ஒரு நிமிஷம்..” என்று அவருக்கான லன்ச் பாக்ஸுடன் ஓடி வந்தார் மணிமேகலை.

“சும்மா வேலைய எதுக்கு இழுத்து விட்டுக்கிறீங்க மேகா.. நான் என்ன குழந்தையா? நான் ஆபிஸ்ல சாப்பிட்டுப்பேன் ல..”

“நான் எங்க செஞ்சேன்.. பத்து தான் எல்லாருக்கும் இன்னிக்கு லஞ்சுக்கு பாஸ்தா செஞ்சாங்க.. காலை டிபன் கூட இன்னிக்கு பத்து ஸ்பெஷல் தான்”

இதை கேட்டதும் அவரது முகம் அஷ்டகோணலானது.

“நான் வேண்டாம்னு சொல்ல சொல்ல கேட்காம அவங்களே எல்லாருக்கும் சேர்த்து செஞ்சாங்க.. நான் அவங்களுக்கு ஹெல்ப் மட்டும் தான் இன்னிக்கு”

வந்தியத்தேவன் அசடு வழிந்து கொண்டே அம்மாவை திரும்பி பார்க்க, அவரோ

“நீ நடத்து மகனே.. நடத்து” என்றார் வந்தியத்தேவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்.

அதற்கு மேல் அங்கு நிற்காமல் அவர் பைக்கில் பறந்து விட்டார்.

“நீ சாப்பிட்டியா மேகா?”

“சாப்பிட்டேன் பத்து.. இனி எல்லாத்தையும் ஒதுங்க வச்சா போதும்..”

“சரி நாம ரெண்டு பேரும் கோவிலுக்கு போய்ட்டு வருவோமா?”

“ஓ போலாமே.. ஒரு அரை மணி நேரம் கொடுங்க.. நான் தயார் ஆகிடறேன். அதுவரைக்கும் நீங்க அமைதியா படுத்து ரெஸ்ட் எடுக்கணும்.. அப்ப தான் கோவில் போய்ட்டு வர முடியும் சரியா..”

“சரி.. நான் இங்கயே படுத்துக்கிறேன்.. நீ கிளம்பிட்டு என்னை எழுப்பு”

“அம்மாவும் அப்பாவும் போன் பண்ணுவாங்க.. நான் பேசிட்டே வேலைய முடிச்சு கிளம்பிடறேன்… நீங்க ரூம்ல படுங்க.. அப்ப தான் டிஸ்டர்பன்ஸ் இல்லாம தூங்க முடியும்”

அவரை படுக்க வைத்து விட்டு, சுந்தர்ராஜன் பரிமளாவிடம் பேசிக்கொண்டே வேலைகளை முடித்து, தயாராகி, பின் பத்தும்மாவை எழுப்பி அவரும் தயாராக,

இருவரும் ஆட்டோ பிடித்து அஷ்டலஷ்மி கோவிலுக்கு சென்றார்கள்.

“உங்க பையன் கிட்ட கோவிலுக்கு போறோம்னு சொல்லிட்டீங்களா, பத்து?”

“நான் அவனுக்கு அம்மாவா? அவன் எனக்கு அம்மவா? நான் எதுக்கு அவனுக்கு சொல்லணும்..”

“என்ன பத்து நீங்க.. தப்பு இது.. உங்க ஹெலேத் இஸ்யூஸ்னால எப்பவுமே அவர் கிட்ட தகவல் சொல்லணும் தானே..”

அவர் ஏற்கனவே வந்தியதேவனுக்கு மெசேஜ் போட்டிருந்தார். ஆனால் அதை அவர் கூறவில்லை. மணிமேகலை என்ன செய்கிறார் என்று பார்க்க அமைதியாக இருந்து கொண்டார்.

“போன் பண்ணி சொல்லுங்க பத்து..”

“போனை வீட்ல வெச்சிட்டு வந்திட்டேன்..”

“உங்களோட.. இருங்க நானே சொல்றேன்” என்று மணிமேகலை அவரே வந்தியதேவனுக்கு அழைத்தார்.

“ஹலோ..”

“சொல்லு மேகா ..”

அவரது உற்சாக குரல் ஸ்பீக்கரில் போடாமலே பத்தும்மாவுக்கு கேட்டது..

“இல்ல நானும் பத்துவும் கோவிலுக்கு வந்தும்.. சாரி உங்க கிட்ட சொல்லாமலே வந்ததுக்கு..”

“பரவாயில்ல.. உங்களுக்கு இருக்க பொறுப்பு கொஞ்சமாச்சும் எங்க அம்மாவுக்கு இருக்கா பாருங்க.. பத்திரமா சாமி கும்பிட்டு வாங்க. ஏதாவது அவசரம்னா எனக்கு உடனே கால் பண்ணுங்க..”

“சரி தேவ்.. ”

“அப்புறம்”

“அப்புறம் ஒன்னும் இல்லை தேவ்.. இது சொல்ல தான் கால் பண்ணேன்”

“ஓ.. சரி பாய் மேகா”

“பாய் தேவ்”

மணிமேகலை போன் பேசுவதை குறுகுறுவென பார்த்து கொண்டிருந்தார் பத்தும்மா. அதை கவனித்தாலும் கவனிக்காததை போல இருந்துகொண்டார் மணிமேகலை.

பின் இருவருரம் கண்குளிர அஷ்டலஷ்மிகளையும் தரிசித்துவிட்டு ப்ரசாதத்தோடு அங்கே அமர்ந்தார்கள்.

“இந்த மாதிரி எங்க அம்மாகூட கோவிலுக்கு போகணும்னு சின்ன வயசுல ரொம்ப ஆசை பட்டிருக்கேன் தெரியுமா பத்து? ஆனா எப்பவுமே என்னை அம்மா அவங்க பக்கத்துல வச்சுக்க மாட்டாங்க.. என் பொண்ணுன்னு சொல்ல அவங்களுக்கு அசிங்கமா இருக்கும்” என்றார் சோகமான குரலில்.

“இந்த பாரு மேகா.. நான் ஒன்னு சொல்லவா?”

“சொல்லுங்க..”

“இப்படி முடிஞ்சு போன இத்து போன பிளாஷ் பேக் கதையை விடு.. கேட்கவே ரொம்ப போரா இருக்கு..”

உர்ரென்று மணிமேகலை முகத்தை வைத்துக்கொள்ளவே,

“மணி மணியான பிள்ளைங்க வராஹி வல்லபன். இப்ப நீ அவங்க கூட ஜாலியா சும்மா ஜம்முன்னு இருக்கிற”

மணிமேகலை முகத்தில் அழகான புன்முறுவல் பூத்தது.

“உண்மை தான் பத்து.. அது மட்டுமா.. வீர்யா, ரகு, சம்பவ், நிவேதா அக்கா, நிரஞ்சன் அண்ணா, நீங்க, தேவ் சார்… என் கூட எவ்வளவு பேர் இருக்கீங்க. இது எல்லாத்துலயேயும் ஸ்பெஷல், சின்ன வயசுல இருந்து நான் ஆசை பட்ட எனக்கே எனக்கான உண்மையான ஃப்ரெண்ட்.. என் பத்து… என் பெஸ்ட் ஃப்ரெண்ட் நீங்க இருக்கீங்க.. நான் ரொம்ப ஹாப்பி பத்து” என்று அவரை தோளோடு அனைத்து கொண்டார்.

“உண்மையான ஃப்ரெண்ட் மட்டும் தான் ஆசை பட்டியா மேகா? உண்மையான காதல் வேணும்ன்னு ஆசை படலையா?”

“அது வந்து..”

“வந்து?”

“ஆசை எல்லாம் இருக்கு.. ஆனா.. அது வந்து..”

“இங்க பாரு மேகா.. வந்து வந்துன்னு இழுத்திட்டே இருந்தா எப்படி?”

“அது…”

“என்னதான் கோவில் பிரசாதமா இருந்தாலும், வெண்பொங்கல் எல்லாம் சூடா சாப்பிட்டா தான் நல்லா இருக்கும்”

“என்ன பத்து சொல்றீங்க?” அவர்கள் கையில் இருந்த ஆறிப்போன பொங்கலை பார்த்து புரியாமல் விழித்தார் மணிமேகலை.

“இப்ப காலையில நாம் எட்டு மணிக்கு வந்திருந்தா இந்த பொங்கல் சூடா இருந்திருக்கும்.. எடுத்து வாயில் போட்டா அதுவே வழுக்கிட்டு உள்ளே போயிருக்கும். போயிருக்குமா?”

“போயிருக்கும்..”

“இப்ப நாம கஷ்டப்பட்டு உள்ளே தள்ளிட்டு இருக்கோம்.. இருக்கோமா?”

“ஆமா”

“அதே மாதிரி தான் காதலும்.. நமக்கு யாரையாவது பிடிச்சு இருந்தா, அவங்களுக்கும் நம்மளை பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சா, டையத்தை வேஸ்ட் பண்ணாம சூடா இருக்கும்போதே பேசி உள்ளே தள்ளிடணும்”

“எப்படி பத்து இப்படி?” என்று சிரித்துவிட்டார் மணிமேகலை.

“நான் இது எல்லாம் சொல்ல கூடாதுதான்.. என்ன செய்ய, காதல் விஷயத்துல நீ ஒரு மக்கு பிளாஸ்திரியா இருக்க.. அவன் உனக்கு மேலே பெரிய மக்கு பிளாஸ்திரியா இருக்கான்”

“அவர் ஒன்னும் மக்கு எல்லாம் இல்ல” என்றார் மணிமேகலை ரோஷமாக.

“யெவரு?”

தப்பு செய்து மாட்டிக்கொண்ட சிறுமியை போல பாவமாக முகத்தை வைத்து கொண்டார் மணிமேகலை.

“இங்க பாரு மேகா… நான் கொஞ்சம் டீசென்ட்டான ஆள். இந்த விஷயத்துல நான் மூக்கை நீட்டுன்னா நல்லா இருக்காது. அதனால, இன்னும் ஒரு வாரம் டைம். அதுக்குள்ள நீங்க ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க.. இல்லன்னா அப்புறம் நான் இந்த டீசென்சி எல்லாம் பார்க்க மாட்டேன் சொல்லிட்டேன்”

“எனக்கு கொஞ்சம் பயமா இருக்கே பத்து”

“நான் இங்கவே உட்கார்ந்து இருக்கேன்.. அதோ, அங்க பாரு தைரிய லக்ஷ்மி தாயார். திரும்ப அங்க போய் நல்லா வேண்டிட்கிட்டு வா.. தைரியம் தானா வரும்”

அவர் சொன்னதை போல மணிமேகலை சென்று மீண்டும் வேண்டிக்கொண்டு வந்தார்.

அதன் பிறகு இருவரும் அதை பற்றி பேசவில்லை. பொதுவான விஷயங்களை பேசிக்கொண்டே இருவரும் வீடு திரும்பினார்கள்.

————————

மணிமேகலைக்கு ஆயிரம் சிந்தனைகள் மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

‘இந்த பத்துக்கு என்ன தெரிஞ்சிருக்கும்? எப்படி தெரிஞ்சிருக்கும்? நாம் நினைக்கிறது பேராசையா? ஒரு வேலை நாம போய் விருப்பத்தை சொன்னா, தேவ் நான் ஃப்ரெண்டலியா தான் பேசினேன் சொல்லிட்டா? இல்ல இல்ல அவருக்கும் என்னை பிடித்துத்தான் இருக்கு.. அவரே வந்து முதல்ல சொன்னா நல்லா இருக்குமே.. அய்யய்யோ அப்படி சொன்னா நான் எப்படி ரியாக்ட் பண்ணன்னு தெரியலையே.. ‘

மாலை பிள்ளைகள் வந்த பிறகு அவர்களோடு பேசிக்கொண்டு பொழுது சென்றது. இரவு படுத்த பிறகு மீண்டும் கேள்விகள் அணிவகுத்து கண்முன்னே நின்று தூக்கத்தை கெடுத்தது.

வந்தியதேவன் வேலை முடித்து வீட்டிற்கு வந்ததும் “என்ன ம்மா கோவிலுக்கு போய்ட்டு வந்தாச்சா?” என்றார் உற்சாகமாகவே.

“வந்தாச்சு வந்தாச்சு..”

“நான் கூட உங்க கூட கோவிலுக்கு வந்திருப்பேனே ம்மா.. போகணும்னு என் கிட்ட சொல்லவே இல்ல”

“திடீர்ன்னு தோணுச்சு.. அதான் மேகாவை கூட்டிட்டு போய்ட்டு வந்தேன். நீ என்ன சீக்கிரம் வந்துட்ட இன்னிக்கு?”

“வேலை கொஞ்சம் கம்மியா இருந்துச்சு… அதான்.. சரி, இன்னிக்கு நைட் நான் சமைக்கிறேன் ம்மா? உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க”

“எனக்கு ஒரு பேரனும் ரெண்டு பேத்தியும் வேணும்”

“ஹா ஹா ஹா.. அது எல்லாம் எப்படி ம்மா இன்ஸ்டன்ட்டா கிடைக்கும்”

“இன்ஸ்டென்ட்டா கிடைக்குதா இன்ஸ்டால்மெண்ட்ல கிடைக்குதான்னு பேச்சு இல்ல.. நீ தானே எனக்கு என்ன வேணும்னு கேட்ட”

“நீங்க கேட்டது சீக்கிரம் கிடைச்சா நல்லா தான் இருக்கும். என்ன செய்ய ம்மா, அது அதுக்குன்னு காலநேரம் இருக்கு இல்ல?அதை விடுங்க.. இப்ப என்ன சமைக்க அதை சொல்லுங்க”

“இங்க பாரு தேவ்.. நானும் சரி உங்க அப்பாவும் சரி.. எப்பவுமே எந்த விஷயத்துக்கும் உன்னை கட்டாயப்படுத்தினது இல்ல.. ஆனா இப்ப நான் கேட்கிறது உன் மனசுக்கு பிடிச்ச விஷயத்தை தான். என்ன லேட்டா பண்ணாம சீக்கிரமா செய்னு தான் சொல்றேன்”

“புரியுது ம்மா.. சீக்கிரம் பேசிட்டு உன்கிட்ட சொல்றேன் சரியா”

“சரி சரி.. பார்க்கிறேன், உன் சீக்கிரம் எப்பன்னு.. ”

“அது என்னம்மா ஒரு பேரன் ரெண்டு பேத்தி கணக்கு”

“உங்க அப்பா அப்பவே சொன்னாரு டா.. விறைப்பா இருக்கிற மிலிட்டரிகாரனை நம்பாதேன்னு.. வெளியே தான் விறைப்பா இருப்பான் உள்ளாரா அம்புட்டு ஆசையை ஒளிச்சு வச்சிருப்பான்னு”

“அப்பாவே அப்படி சொன்னாங்களா ம்மா.. என்கிட்டே ஒன்னும் சொல்லாமலே அப்பா போயிட்டாங்க இல்ல” சொல்லும்போதே குரல் கரகரத்தது.

பத்தும்மாக்கும் மனதிற்கு சங்கடமாக தான் இருந்தது. அத்தனை அன்யோன்யமாக வாழ்ந்தவர்கள் இருவரும். இருந்தாலும் அவர் உடைந்தால் மகன் உடைந்துவிடுவான் என்று திடமாக இருப்பதை போல காட்டிக்கொண்டு பேச்சை மாற்றிவிட்டார்.

“சரி ம்மா.. மேகாக்கு இடியாப்பம் பாயான்னா ரொம்ப பிடிக்கும்ன்னு சொன்னா . நான் எல்லாருக்கும் சேர்த்தே இடியாப்பம் செஞ்சிடறேன்.. மாவு இருக்கு தானே.. நீங்க மேகா கிட்ட சமைக்க வேண்டாம்னு சொல்லிடுங்க”

“அடப்பாவி.. அதானா சங்கதி… நெல்லுக்கு பாய்ச்சிற நீர் புல்லுக்கும் பாயுதா? நீ போற ஸ்பீட் பார்த்தா நான் கேட்டதும் சீக்கிரமா கிடைச்சிடும் போலவே”

அதன் பின் வந்தியதேவன் போதும் போதும் என்கிற வரைக்கும் அவரை ஒரு வழி செய்துவிட்டார் பத்தும்மா.

சொன்னதை போலவே அனைவருக்குமான உணவை அவரே சமைத்து, அவரே கொண்டுபோய் மணிமேகலையிடமும் கொடுத்துவிட்டு வந்தார்.

‘எனக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சு எனக்காக செஞ்சு அவர் கையாலே கொடுத்திட்டு போறாரே..’ மணிமேகலை ரெக்கை இல்லாமல் வானத்தில் பறக்க தொடங்கினார்.

பிள்ளைகளுடன் சேர்ந்து ரசித்து ருசித்து ஒவ்வொரு வாய் உணவையும் சாப்பிட்டார்.

காதலித்து பார்.. உலகம் அழகாக தெரியும்.. என்று எப்பொழுதோ படித்த வரி நியாபகத்திற்கு வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!