Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அறம் காக்கும் அன்பு

அறம் காக்கும் அன்பு 6

அத்தியாயம் 6

“புது வீட்ல பால் காய்ச்ச போறீங்க.. சுமங்கலி பெண் வந்து காய்ச்சினா தான் வீட்டுக்கு லட்சுமி கடாச்சம் வரும். எனக்கு அலைச்சல் தான், இருந்தாலும் மணியும், பேரப்பிள்ளைகளும் நல்லா இருக்கணும்ங்கிறதுக்காக நான் வர்றேன். எனக்கும் சேர்த்து ஊருக்கு டிக்கெட் போடுங்க” என்றார் பரிமளா அன்று இரவின் உணவின் பொழுது கணவனிடம்.



Advertisement

அந்த வாரத்தில், சென்னையில் இவர்களின் புது வீட்டில் பால் காய்ச்சுவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். மகளையும் பேரப்பிள்ளைகளையும் தனியாக வைக்க முடிவு செய்த பின், சுந்தர்ராஜன் துரிதமாக செயலில் இறங்கினார்.

ராம் பிரசாத் வினோதா இருந்த அபார்ட்மெண்ட் வாடகைக்கு விட்டிருந்தார்கள். அவர்கள் உடனே காலி செய்வது இயலாது என்று கூற, அதுவும் ஒரு விதத்தில் நல்லதே என்று நினைத்து, வாடகைக்கு வீடு பார்க்கலாம் என்று முடிவு செய்தார்.

Advertisement

Advertisement

வராஹி மூலம் விஷயத்தை அறிந்த வீர்யா, அவர்கள் வீட்டிற்கு எதிர்த்த வீடு காலியாக இருக்கவே உடனே தன் அம்மா மூலம் விசாரித்து, இவர்களிடம் கூறி அந்த வீட்டையே வாடகைக்கு பேசி முடித்துவிட்டாள்.

இரண்டு படுக்கையறை கொண்ட அளவான வீடு. வீர்யா வீட்டிற்கு எதிர்த்த வீட்டிற்கு செல்கிறோம் என்று தெரிந்ததில் இருந்து வராஹிக்கு சிறகு ஒன்று தான் முளைக்கவில்லை.. வானத்தில் தான் பறந்து கொண்டிருந்தாள்.

Advertisement

வராஹியின் மூலமாக நிவேதாவும் நிரஞ்சனும் தான், ஒரு வருடமாக பிள்ளைகளை பார்த்துக்கொண்டனர் என்பதை அறிந்த பின், சுந்தர்ராஜனுக்கும் அங்கே இருப்பது பாதுகாப்பாக இருக்கும் என்று அந்த வீட்டையே முடிவு செய்திருந்தார்.

அதை அறிந்ததும் “அந்த ஏரியா கொஞ்சம் போஷ் ஏரியா இல்லப்பா” என்றார் ராம்.

“போஷ் ஏரியா வேணுமா? போடா பொசக்கெட்டவனே.. பொக்கிஷமா கிடைச்ச குடும்பத்தை உடைச்சிட்டு போஷ் ஏரியா பத்தி பேசுறான்..போக்கத்தவன்” என்று கண்டமேனிக்கு திட்ட ஆரம்பித்தார்.

“ப்பா…” என்றார் இறங்கிவிட்ட குரலில். அதற்குப்பின் அவர் எதுவும் மறுப்பு கூறவில்லை.

சுந்தர்ராஜன் இங்கே செய்யும் எந்த ஏற்பாட்டை பற்றியும் அதிகமாக மனைவி சின்ன மகனிடம் பகிரவில்லை.

‘கணவர் தன்னை கூப்பிடட்டும்.. இல்லை மகள் கேட்கட்டும்.. அப்புறம் போகலாம்’ என்று இறுமாப்பாக சுற்றி கொண்டிருந்த பரிமளா. இவர்கள் கூப்பிடப்போவது இல்லை என்று தெரிந்து அவராகவே வந்து இப்படி கூறினார்.

“நீ கஷ்டப்பட்டு ஒன்னும் வரவேண்டாம் பரிமளா.. என் பொண்ணு மகாலட்சுமி.. அவ கையாள பால் காய்ச்சி இனிமேலாவது கெட்ட சக்தி கூட இல்லாமல் அவ சந்தோசமா இருக்கட்டும்”

“அப்ப நான் என்ன கெட்ட சக்தியா?”

“நான் அப்படி சொல்லலையே… வீட்ல கணபதி ஹோமம் செஞ்சு, பால் காய்ச்சி பூஜை செய்றதே, இதுக்கு முன்ன வீட்ல இருக்க கெட்ட எண்ணங்கள், கெட்ட சக்திகள் எல்லாம் நீங்கி, தெய்வ அருள் பெற்று ஒரு நல்ல நேர்மறை சக்தி ஏற்பட தானே?”

“சிறு பிள்ளைங்க வெள்ளாம வீடு போய் சேருமா.. நண்டும் சிண்டுமா என்னன்னு குடும்பம் நடத்துங்க? பெரியவகன்னு மதிச்சு என்கிட்டே என்ன எப்படி செய்யணும் ஒரு வார்த்தை கேட்கிறாளா உங்க பொண்ணு?”

“———–”

“உங்களைத்தான் கேட்டுட்டு இருக்கேன்.. இப்படி பிடிச்சு வச்ச பிள்ளயாராட்டம் உட்கார்ந்து இருந்தா என்ன அர்த்தம்?”

“அதுவா.. தலை ரொம்ப வலிக்குது.. அந்த தலை வலி தைலத்தை எடுத்திட்டு வா”

“எங்க இருக்கு..”

“எப்பவுமே எங்க இருக்குமோ அங்க தான் இருக்கு..”

“அதான் கேட்கிறேன், எப்பவுமே எங்க இருக்கும்?” என்றார் பரிமளா பல்லை கடித்து கொண்டு.

தாத்தாவும் பாட்டியும் பேசுவதை அங்கே சோபாவில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்த வராஹிக்கும் வல்லபனுக்கும் சிரிப்பு வரும் போல இருந்தது.

“நீ தானே பரிமளா எல்லாத்தையும் பார்த்து பக்குவமா கவனிச்சுக்கிற.. இப்ப நான் தினமும் போடற தைலம் எங்கன்னு கேட்கிற? சரி தைலம் இல்லைனா சூடா ஒரு காபி ஆச்சும் போட்டு கொடு.. தலை ரொம்ப வலிக்குது..”

மணிமேகலை சென்னைக்கு கொண்டு செல்ல சில சாமான்களை வாங்குவதற்கு கடைதெருவிற்கு சென்றிருந்தார்.

“இருங்க மணி இப்ப வந்திடுவா.. அவ வந்ததும் போட சொல்லுவோம்..”

“மணி இப்ப தானே போனா, அவ வர இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும்.. ஒரு காபி கூட போட முடியாதா?”

டங் டங் என்று காலை வேக வேகமாக ஊன்றி அடுப்படிக்கு சென்றார் பரிமளா..

செல்லுகையில் தான் அவர் மண்டையில் மணி அடித்தது.. ‘அய்யயோ மணி இங்க இருந்து போன அப்புறம், இனி நான் தான் எல்லாத்தையும் பார்க்கணுமா?’ அது வரை ஹரிப்ரசாத் பேசி பேசியே வேறு எதையும் யோசிக்க விடாமல் கடிவாளம் கட்டி வைத்திருந்தான் அம்மாவிற்கு.

அந்த நினைப்பே ஒரு பீதியை கொடுக்க, காபி போட தடுமாறி போனார்.

பால் காய்ச்சி இருக்கா, பாக்கெட்டோட இருக்கா.. பிரிட்ஜ்ல இருக்குமா? அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்ன பரிமளா ஒரு காபி போட எவ்வளவு நேரம்?”

“இவர் வேற நொய் நொய்ன்னுட்டு..”

எப்படியோ ஒரு காபியை போட்டு கொண்டு வந்து கொடுத்தார்.

“உனக்கு..?”

“நீங்க போட்டு அவசரப்படுத்துனதல எனக்கு போடணும்னு மறந்துட்டேன்..”

“விடு பரவயில்லை, இதையே பாதி பாதி குடிப்போம்” என்று கூறி அவரே சென்று ஒரு டம்ப்ளர் எடுத்து வந்து பாதியை ஊற்றி கொடுத்தார்.

அவர் போட்ட காபியை குடித்ததும், கணவரின் தலைவலி இடம்மாறி தன்னிடம் வந்ததது போல இருந்தது.

“அவ போட்ட காபியை குடிச்சிட்டு, ஒரு வழியா உங்க பாட்டி உங்க சித்தப்பா மந்திரிச்சு விட்டத்துல இருந்து எழுந்துட்டா போலா டா” என்றார் பக்கத்தில் இருந்த பேரனிடம் மெல்ல.

“பாட்டியை பார்த்தாலும் பாவமா தான் இருக்கு தாத்தா” என்றாள் வரா.

“அம்மாடி, இவங்க எல்லாம் ஐயோ பாவம்னா நம்ம கையோடு வந்துடுவாங்க.. இப்ப தான் எனக்கு புத்தி வந்து உங்க அத்தையை காப்பாத்தி வெளிய கூட்டிட்டு வர்றேன்.. திரும்ப இவங்ககிட்ட மாட்டிவிட்டுட கூடாது”

“ஓகே தாத்தா ஓகே தாத்தா” என்று பிள்ளைகள் இருவரும் தாத்தா சொன்னதை ஏற்றுக்கொண்டனர்.

இவர்களிடம் காசுக்கு எந்த குறையுமில்லை. அதுவுமில்லாமல், ராம் தேவையான பணத்தை அப்பாவின் பேருக்கு அவர் மறுக்க மறுக்க அனுப்பி வைத்திருந்தார்.

ராம் அங்கிருந்தபடியே, பிள்ளைகளின் பழைய பள்ளியில் பேசி இடம் வாங்கிவிட்டார். அதே போல இப்பொழுது படித்து கொண்டிருந்த போர்டிங் ஸ்கூலில் இருந்தும் டிசி வாங்க ஏற்பாடு செய்துவிட்டார். ஒரு நாள் மட்டும் பிள்ளைகளை நேரில் அழைத்து சென்று சர்டிபிஃகேட் வாங்கிக்கொள்ள வேண்டும்.

இடையில் சுந்தர்ராஜன் மட்டும் சென்னை சென்று, வீட்டிற்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். நிவேதாவும் நிரஞ்சனும் நிறைய உதவிகள் செய்தனர். வீட்டை ஆள் வைத்து சுத்தம் செய்து, சுந்தர்ராஜனுக்கு துணை நின்று பொருட்கள் எல்லாம் வாங்க உதவி செய்து, வீட்டை பக்கவாக தயார் செய்து கொடுத்தார்கள்.

ஞாயிற்று கிழமை இரவு ட்ரெயினில் அண்ணன் பிள்ளைகளை கூட்டிக்கொண்டு புது எதிர்காலத்தை நோக்கி தன் பயணத்தை தொடங்கினார் மணிமேகலை. சுந்தராஜன், இந்த பிள்ளைகளுக்கு இனி வாழ்க்கை நல்ல பாதையை காட்டட்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டு அவர்களுக்கு துணையாக சென்றார்.

அவர்கள் வீட்டில் இருந்து கிளம்பிய கொஞ்ச நேரத்தில், பரிமளா மலங்க மலங்க விழித்து கொண்டு அமர்ந்திருந்தார்.

“என்னம்மா இப்படி உட்கார்ந்து இருக்கீங்க? நம்மளை பிடிச்ச பீடை விட்டதுன்னு சந்தோசமா இருக்கமா?” என்று கேட்டுக்கொண்டே வந்து அவர் பக்கத்தில் அமர்ந்தான் ஹரிப்ரசாத்.

“என்ன பேச்சு இது ஹரி.. பீடைன்னு எல்லாம் பேசாதே.. இன்னொரு தடவை அப்படி சொன்னா வாயை உடைச்சிடுவேன் பார்த்துக்கோ” என்றார் காட்டமாக.

பதினைந்து வயதில் இருந்து இவரையுமே சேர்த்து பார்த்துக்கொண்டது மணி தானே.. பரிமளா மிகவும் அழகான பெண்மணி. அந்த காலத்து கதாநாயகிகளை போல இருப்பார். மற்ற பிள்ளைகள் மூவரும் இவரை போல மிகவும் அழகான தோற்றத்தை பெற்றிருந்தனர்.

இவள் என் மகள் என்று மணிமேகலையை மற்றவர்கள் முன் கூறுவது பரிமளாவிற்கு பிடிக்காது தான், அதற்காக மகளை பிடிக்காது என்று எப்படி சொல்ல முடியும்?அவளது பிரிவு இவரை வாட்டியது சத்தியம்.

“எல்லாரும் போனது ஒரு மாதிரியா தான் இருக்கு எனக்கும்.. அதுக்கு ஏன் கோவப்படறீங்க?”

“————”

இரவு உணவிற்கு இவர்கள் இருவருக்கும் சப்பாத்தி குருமா செய்து வைத்திருந்தார் மணிமேகலை.

இருவரும் அதிகம் பேசாமல் உணவை உண்டனர்.

“நாளைக்கு காலையில நாம வெளியே போய் சாப்பிடுவோம் அம்மா.. நீங்க ரொம்ப அப்செட்டா இருக்கீங்க. பேசாம தூங்குங்க. காலையில எல்லாம் சரி ஆயிடும்” என்று அம்மாவிடம் கூறி சென்று படுத்துவிட்டான் ஹரி.

காலையில் மேல் வேலைகளுக்கு ஆள் வரும் தான்.. ஆனால் டைனிங் டேபிளில் இருக்கும் பாத்திரத்தை எல்லாம் எடுத்து போட்டா கழுவுவார்கள்?

பழக்க தோஷத்தில் சாப்பிட்டுவிட்டு கைகளை மட்டும் கழுவி அம்மா மகன் இருவரும் தூங்கிவிட்டனர்.

காலையிலே வேலை செய்யும் பெண் வந்து மின்னல் என எல்லாம் முடித்து விட்டு சென்று விட்டார்.

அவர் சென்றதும், அம்மாவுடன் பைக்கில் பக்கத்தில் இருந்த உணவகம் சென்றான் ஹரி.

இருவரும் நன்றாக சாப்பிட்டு அங்கேயே காபியும் குடித்துவிட்டு, நிதானமாக வீடு திரும்பினார்கள். அம்மாவை வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு அவன் கல்லூரி கிளம்பினான். மதியம் வெளியே சாப்பிட்டு கொள்வதாக கூறி சென்றான்.

பரிமளா வீட்டிற்குள் நுழைந்ததும் தான் கவனித்தார். இரவு சாப்பிட்டு வைத்தது எல்லாம் அப்படி அப்படியே டேபிள் மேலே இருந்தது. சிங்கில் இருந்த பாத்திரத்தை மட்டுமே கழுவி சென்றிருந்தாள் வேலை செய்யும் பெண்.

“இவளை..” என்று பல்லை கடித்துக்கொண்டு, டேபிளை சுத்தம் செய்தார்.

பாத்திரங்களில் வாசனை வந்துவிடவே, மறுநாள் வரை அப்படியே எப்படி வைப்பது என்று அவரே அதனை கழுவி போட்டுவிட்டு அப்பாடா என்று உட்கார்ந்தார்.

“சூடாக ஒரு டீ குடித்தால் எப்படி இருக்கும்?” என்று யோசிக்கையில், கேட்காமல் பத்து மணிக்கு மகள் கொடுக்கும் தேநீரின் நினைவு வலியுடன் தொண்டையில் இறங்கியது.

அப்பொழுது தான் நினைவிற்கு வந்தது பால், வெளியே பையில் போட்டு சென்று இருப்பார்களே? என்று.. பத்து மணிக்கு சென்று அதை எடுத்து அடுப்பில் வைத்தால் அது தன் உயிரை விட்டிருந்தது.

பாவமாக அதை பார்த்துவிட்டு பெருமூச்சு ஒன்றைவிட்டு ஹாலில் வந்து அமர்ந்தார்.

எப்பொழுதில் இருந்து நான் இப்படி மாறினேன். நான்கு பிள்ளைகளை பெற்று வளர்த்தது நான் தானே. அப்பொழுது எல்லாம் பம்பரமாக சுற்றி நான்கு பிள்ளைகளையும் காலையில் பள்ளிக்கு அனுப்புவது நினைவுக்கு வந்தது.

‘இப்ப பால் எடுக்க கூட நியாபகம் இல்லாம போச்சே?’

பதினாறு வயதில் மணிக்கு கொஞ்சம் கொஞ்சமாக வேலைகளை பழகிவிட்டது நினைவிற்கு வந்தது.. அவருக்கு அப்பொழுது மெனோபாஸ் சமயம். அவரின் உடல் நலத்தை முன்னிட்டு மெல்ல மெல்ல வேலைகளை அவளிடம் முழுதாக கொடுத்து விட்டார். அப்படியே இத்தனை வருடங்கள் அதுவே பழகியும் போனது.

பத்து மணிக்கு வாசலில் யாரோ அழைப்பு மணியை அழுத்தினார்கள்.

“யாரு?” என்று எழுந்து பார்க்க சென்றார்.

நடுத்தர வயது பெண் ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.

“யாரு வேணும்?”

“என் பெயர் ரஞ்சிதம்.. மணி பாப்பா தான் சமையல் வேலைக்கு ஆள் தேவைப்படும். நான் வெளி ஊருக்கு போறேன். காலையில பத்து மணிக்கு வாங்க.. அம்மாகிட்ட மத்த விவரம் பேசிக்கோங்கன்னு சொல்லுச்சு”

“மணிக்கு உங்களை எப்படி தெரியும்?”

“உங்க தெருவுல காய்கறி வண்டியில கொண்டுட்டு வரும்ல.. சரசு.. அது என்னோட தங்கச்சி தானுங்க.. நான் எப்பயாவது சரசுக்கு துணையா வருவேன். அப்ப மணி பாப்பா பழக்கம்”

“ஓ..”

“எங்க வீட்டுக்காரர் போன மாசம் தானுங்க தவறி போனாரு. இப்ப சரசு வீட்டு பக்கத்துல தான் குடி இருக்கேன். வேலை இருந்தா சொல்ல சொல்லியிருந்தேன்”

“உனக்கு நல்லா சமைக்க தெரியுமா?”

“நல்லா செய்வேனுங்க.. நீங்க உங்க வீட்டு பக்குவத்தை ஒரு தடவை காமிச்சு கொடுத்தீங்கன்னா அது மாதிரியே செஞ்சுடுவேன்”

ரஞ்சிதம் பார்க்க சுத்தமாக இருந்தார், தெளிவாகவும் பேசினார். பரிமளாவிற்கு எப்படியும் அவரால் இனி சமையல் எல்லாம் செய்து பார்த்துக்கொள்ள முடியும் என்று தோன்றவில்லை. அதை புரிந்தே மகள் இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறாள் என்று மனதிற்குள் மகளை மெச்சிக்கொண்டார்.

ரஞ்சிதத்தை அன்றிலிருந்தே வேலைக்கு சேர கூறி விட்டார்.

“முதல்ல கடைக்கு போய் ஒரு பால் பாக்கெட் வாங்கிட்டு வந்து எனக்கு டீ போட்டு கொடு ரஞ்சிதம்..” என்று கூறினார்.

அவரும் மகழ்ச்சியாக வேலையில் சேர்ந்து முதலில் பால் காய்ச்சி, டீ போட்டு கொடுத்தார்.

டீயை குடித்ததும் கொஞ்சம் தெம்பாக இருந்தது பரிமளாவிற்கு. சமாளிப்போம் என்று தனக்கு தானே தைரியமும் சொல்லி கொண்டார்.

————–

இங்கே சென்னையில் மணிமேகலையின் கைகளால் பால் காய்ச்சி எளிமையாக பூஜையை முடித்தனர்.

அன்று காலை மதியம் என்று இரண்டு வேலையும் வீர்யா வீட்டில் தான் இவர்களுக்கு விருந்து. “நான் உங்க பொண்ணு மாதிரி அப்பா” என்று அன்பால் சுந்தர்ராஜனின் மறுப்பை நிராகரித்திருந்தார் நிவேதா.

மணிமேகலையை பார்த்து சகஜமாகவே பேசினார்கள் அனைவரும். அதுவே மணிமேகலையை இயல்பாக இருக்க செய்தது. மேகலா மேகலா என்று அன்பாய் அழைத்து நட்புக்கரம் நீட்டினார் நிவேதா. அவரது அழைப்பே மணிமேகலைக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.

அடுத்த இரண்டு நாட்கள், பிள்ளைகளின் பள்ளிக்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்தனர். நிவேதாவிடம் கேட்டு தினசரி வாழ்க்கைக்கு தேவையானதை எல்லாம் விசாரித்து வைத்துக்கொண்டார் மணிமேகலை.

இன்னும் பள்ளி திறக்க ஒரு வாரம் இருந்த நிலையில்,

“நான் ஊருக்கு போய்ட்டு ஒரு வாரத்துல வந்துடறேன்.. நீங்க பத்திரமா இருங்க” என்று கூறி கும்பகோணம் வந்து சேர்ந்தார் சுந்தர்ராஜன்.

மகள் தங்கள் குடும்பத்தையே இத்தனை நாட்கள் நிறுவகித்தவள்.. இங்கே சமாளித்து கொள்வாள் என்று அவருக்கு தெரியும்.

சுந்தர்ராஜன் வந்தவுடனே, “நீங்க வந்தததும் பொண்ணு பார்க்க வர சொன்னாங்க..” என்று ஆரம்பித்தார் பரிமளா.

“முழுசா என் பொண்ணும் பேரப்பிள்ளைகளும் இங்க இருந்து கிளம்பிட்டாங்கன்னு தெரிஞ்சு அதுக்கு அப்புறமா நம்மள வர சொல்லி இருக்காங்க.. அப்படித் தானே”

“நீங்க ஏன் ப்பா எல்லாத்தையும் தப்பாவே பார்க்குறீங்க? நீங்க ஊருக்கு போனதா அம்மா சொல்லி இருக்காங்க, அதான் நீங்க வந்ததும் வாங்கன்னு சொல்லி இருக்காங்க.”

“சரி .. அப்ப நாளைக்கு சாயந்திரம் போய்ட்டு எல்லாத்தையும் தெளிவா பேசிட்டு வந்துடலாம்”

“என்னங்க நீங்க பொண்ணு பார்க்க போலாம்னா நீங்க என்னமோ பஞ்சாயத்துக்கு போற மாதிரி சொல்றீங்க..”

“நான் வரணுமா வேணாமா?”

“அம்மா நீ சும்மா இரும்மா.. சரி ப்பா நாளைக்கு ஆறுமணிக்கு அங்க இருக்க மாதிரி போலாம்.. அம்மா நீ அவங்க கிட்ட சொல்லிடு..”

மகிழ்ச்சியாக ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டே தனதறைக்குள் சென்றான் ஹரிப்ரசாத்.

“ஏங்க, நான் நீங்க ஊருக்கு போனதை பத்தி சொல்லவே இல்லைங்க. அப்புறம் எப்படி அவங்க சரியா இன்னிக்கு போன் போட்டு நீங்க வந்தததும் வாங்கன்னு சொன்னாங்க”

“பரவாயில்லயே.. என் பொண்டாட்டிக்கு மூளை வேலை செய்றது நின்னு பல வருஷம் ஆச்சதுன்னு இல்ல நினைச்சேன்.. லேசா வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு போலயே?” என்றார் நக்கலாக.

உர்ரென்று அவரை முறைத்து பார்த்தார் பரிமளா.

“சரி.. இந்த பொண்ணு உனக்கு எப்படி சொந்தம்?”

“அது எங்க அப்பாவோட..பெரிய அத்தைக்கு மச்சினர் வந்து பொண்ணுக்கு..என்னமோ சொந்தமாம்”

“உனக்கு என்ன சொந்தம்னே தெரியலை.. அவங்க எப்படி நம்ம ஹரியை பத்தி தெரிஞ்சு கல்யாணத்துக்கு கேட்டாங்க..”

“அது.. எங்க அப்பா அவங்களுக்கு தெரிஞ்சவங்க கிட்ட எல்லாம் பேரனுக்கு பொண்ணு இருந்தா சொல்ல சொல்லி இருக்காங்க”

“சரி அதை விடு.. பொண்ணு என்ன பண்ணுது?”

“காலேஜ்ல க்ளர்க்கா இருக்காம்”

“எந்த காலேஜ்..”

“அது நான் கேட்கலையே.. முதல்ல எல்லாம் ஒத்து வந்தா கேட்போம்னு விட்டுட்டேன்”

“ஒத்து வந்தா எல்லாம் இல்ல பரிமளா.. உன் சீமந்த புத்திரன் அவளை தான் உனக்கு மருமகளாவே கூட்டிட்டு வருவான். அந்த பொண்ணு இவன் காலேஜில் தான் வேலை செய்யுது. இப்ப மணியை இங்க இருந்து அனுப்ப சொன்னது இவன் யோசனையா இல்ல அந்த பொண்ணு யோசனையான்னு எனக்கு தெரியணும்”

“என்னங்க சொல்றீங்க?” என்றார் பரிமளா கொஞ்சம் பயந்து போய்.

“எதுக்கு பயப்படற இப்ப? நான் அவனுக்கு அப்பன் டீ.. பார்த்துக்கலாம்.. நீ தெரிஞ்ச மாதிரி காமிச்சிக்காத.. இன்னும் எவ்வளவு தூரம் போறான்னு பாரு. இப்ப கூட நீ புரிஞ்சுக்கணும் தான் உன்கிட்ட சொன்னேன்..” என்று எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.

ஹரி வைய்த்த புள்ளியில் கோலம் போட தயாராக இருந்தார் சுந்தர்ராஜன்.

அது கலர் கோலமா? பூ கோலமா? சிக்கு கோலமா? என்று காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

———

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!