“அத்தை.. அத்தை..இங்க வந்து பாருங்க..” என்று வெளியே வாசலில் இருந்து குரல் கொடுத்தாள் வராஹி.
Advertisement
“இதோ வரேன்டா.. ஒரு நிமிஷம்” என்று அவளுக்கு குரல் கொடுத்துக்கொண்டே, வல்லபனுக்கு ராகி மால்ட் கலந்து கொண்டிருந்தார்.
காலை ஐந்தரை மணிக்கு பரப்பாக இருந்தது அவர்களது வீடு. வல்லபன் ரகுநந்தனுடன் சேர்ந்து கிரிக்கெட் கோச்சிங் செல்ல தொடங்கி இருந்தான். காலை ஆறு முதல் ஏழரை மணி வரை.
Advertisement
Advertisement
வீட்டில் இருந்து வெளியே யாரும் கிளம்புவதற்கு முன்பாக வாசலில் கோலம் போடுவது நல்லது என்று ஒருமுறை மணிமேகலை கூறியதை கேட்டதில் இருந்து, நான் போடுறேன் அத்தை என்று ஆசையாக வராஹி தினமும் கோலம் போட்டுக்கொண்டிருக்கிறாள்.
நேற்று அத்தையிடம் கற்று கொண்ட புது கோலத்தை போட்டு முடித்து அதை முதலில் அத்தையிடம் காட்டவே அவரை அழைத்து கொண்டிருக்கிறாள்.
Advertisement
வல்லபனிடம் மால்ட்டை கொடுத்து விட்டு வாசலுக்கு விரைந்தார் மணிமேகலை.
“வாவ்வ்.. வரா நீ என்னை விடவே இந்த கோலத்தை அழகா போட்டிருக்கியே.. சூப்பர்” என்று அவளது கன்னம் வழித்து கொஞ்சினார்.
வராஹியும் சரி வல்லபனும் சரி, சிரத்தையுடன் தங்களால் ஆன வேலைகளை செய்து கொள்கிறார்கள்.
பல வருடங்களுக்கு பிறகு மணிமேகலை இலகுவாக இருந்தார்.
அப்பா அம்மா தம்பி இவங்களை பார்த்த மாதிரி இனி அண்ணன் பிள்ளைகளை பார்த்துக்கொள்ள போறோம்,என்று தான் முதலில் நினைத்தார். ஆனால் இப்பொழுது பிள்ளைகளோடு சேர்ந்து அவரும் மீண்டும் ஒருமுறை வளர்வது போல இருந்தது.
“உங்களுக்கு என்ன பிடிக்கும் அத்தை?” என்று ஒரு நாள் வராஹி கேட்டாள்.
“என்ன பிடிக்கும்னா? எதை கேட்குற வரா?”
“ஹ்ம்ம்.. எனக்கு வீர்யாவை ரொம்ப பிடிக்கும்.. அவ கூட இருக்க பிடிக்கும்.. படம் வரைய பிடிக்கும், ஐஸ் கிரீம் பிடிக்கும், இப்ப நாம எல்லாம் ஒரே ஃபாமிலியா இருக்கிறது பிடிக்கும்.. இன்னும் சொல்லிட்டே போலாம்.. இப்படி உங்களுக்கு என்ன பிடிக்கும்?”
மணிமேகலை பதில் சொல்லாமல் யோசித்துக்கொண்டே இருந்தார்.
‘எனக்கு என்ன பிடிக்கும் ?’ என்று பல வருடங்களுக்கு பிறகு யோசிக்க தொடங்கினார்.
வராஹியுடன் விளையாட அடிக்கடி வீர்யா இங்கே வருவாள். சில சமயங்களில் சம்பவ்வும் வருவான். அவன் வீடு இரண்டு தெரு தள்ளி இருந்தது.
எப்பொழுதுமே விளையாட்டு மணிமேகலைக்கு பிடித்த விஷயம். பள்ளிக்கு முழுக்கு போடப்பட்டதில் இருந்து அவர் விளையாடுவதும் நின்று இருந்தது.
நீங்களும் விளையாட வர்றீங்களா என்று ஒரு முறை பிள்ளைகள் கேட்கவே, இவரும் மகிழ்ச்சியாகவே சேர்ந்து கொண்டார்.
ராமும் வினோதாவும் பிள்ளைகளுக்கு என பல போர்டு கேம்ஸ்கள் வாங்கி போட்டிருந்தனர். தினமும் ஒவ்வொன்றாக விளையாடினார்கள். விளையாடும்பொழுது மணிமேகலை மிகவும் உற்சாகமாக இருப்பார். பெரும்பாலும் அவரே வெற்றியும் பெறுவார்.
“அத்தை நீங்க ரொம்ப ஷார்ப்” என்பாள் வராஹி.
‘அத்தையை இன்னிக்கு ஜெயிக்காம விட மாட்டேன்’ என்று சபதமிடுவாள் வீர்யா.
“அத்தை எனக்கு ஹெல்ப் செய்ங்க” என்று ரகசிய கோரிக்கை வைப்பான் சம்பவ்.
மணிமேகலையை வராஹியை போலவே அத்தை என்று கூப்பிட பழகியிருந்தார்கள்.
இங்கே வந்து கொஞ்ச நாட்கள் தான் ஆகிறது. ஆனால் பல நாட்கள் பழகியது போல ஒரு நெருக்கம் உருவானது.
ஒரு நாள் கேரம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். எப்பொழுதையும் போல வராவும் வீர்யாவும் ஒரு அணி. மணிமேகலையும் சம்பவ்வும் ஒரு அணி.
அப்பொழுது, “நீங்க அவுட் டோர் ஸ்போட்ஸ் கூட விளையாடுவீங்களா அத்தை?” என்று கேட்டாள் வீர்யா.
“நான் எங்க ஸ்கூல் வாலிபால் கேப்டன் தெரியுமா?” என்றார் பெருமையாக.
“ஓ.. சூப்பர் அத்தை..” என்றனர் மூவரும்.
“நாங்க வெளியே விளையாட மாட்டேங்குறோம்னு அம்மா திட்டிட்டே இருக்காங்க” என்றாள் வீர்யா
“அம்மா சொல்றது சரி தானே.. வெளிய விளையாடறது நல்லது தானே?”
மூவருமே ஓடி ஆடி விளையாடுவதில்லை என்று நிவேதாவும் மணிமேகலையிடம் புலம்பினார்.
“இனிமே டெய்லி கொஞ்ச நேரம் நாம் வெளியேவும் விளையாடலாம் சரியா?”
“நீங்களும் எங்க கூட விளையாடுவீங்களா? இந்த அண்ணனுங்க ரெண்டு பேரும் எங்களை சேர்த்துக்கவே மாட்டாங்க”
“ஆமா அத்தை, பெரிய உலக சாம்பியன் மாதிரி சீன் போடுவாங்க”
“சரி சரி.. நாம இனிமே விளையாடலாம்..”
“இங்க பக்கத்துல பார்க் இருக்கு, நீங்க எங்களுக்கு வாலி பால் சொல்லி தர்றீங்களா?”
“ஓ.. கண்டிப்பா.. வாலிபால் வாங்கிட்டு வரலாம். ஆனா நீங்க அதுக்கு முன்னாடி முதல்ல வார்ம் அப் பண்ணனும். நாளையில் இருந்து தினமும் காலையில வல்லபனும் நந்தனும் கிரிக்கெட் கோச்சிங் போறப்ப நாமும் பார்க்கு போலாம். எக்சர்சைஸ்ல இருந்து ஆரம்பிக்கலாம்.”
“காலையிலே வா?” என்று சோகமாக கோரஸ் பாடினார்கள்.
“ஆமா..”
சொன்னதை போலவே மறுநாளில் இருந்து மூவரையும் அழைத்துக்கொண்டு பார்க்கிற்கு செல்கிறார் மணிமேகலை. முதல் இரண்டு நாட்கள் சிரமமாக இருந்தாலும் மூவரும் சேர்ந்து உடற்பயிற்சி செய்வது புத்துணர்ச்சியாக இருந்தது. மகிழ்ச்சியாகவே பிள்ளைகள் வர ஆரம்பித்தனர்.
அவர்களை விட மணிமேகலைக்கு புத்துணர்ச்சியாக இருந்தது. காலை பொழுதுகள் இவ்வளவு இனிமையாக இருக்குமா என்று ஆச்சர்யமாக இருந்தது.
இரண்டு வாரம் சென்று, சென்னை திரும்பினார் சுந்தர்ராஜன். அவர் வந்தபொழுது பிள்ளைகள் பள்ளிக்கு சென்று இருந்தார்கள்.
மணிமேகலை உற்சாகமாக அப்பாவை வரவேற்றார். இரண்டு வாரம் முன்பு நான் விட்டு சென்ற மகளா இது என்று ஆச்சர்யமாக இருந்தது அவருக்கு. முகமெல்லாம் அவ்வளவு பூரிப்பாக இருந்தது.
குளித்து மகள் கையால் காலை உணவை முடித்துக்கொண்டு ஓய்வாக அமர்ந்தார்.
“உன் கையால சாப்பிட்டா தான் மணி சாப்பிட்ட மாதிரியே இருக்கு” என்றார் உண்மையான குரலில்.
மணிமேகலை சின்ன சிரிப்பை மட்டும் பதிலாக கொடுத்தார்.
“இங்க எல்லாம் செட் ஆயிடுச்சா ம்மா.. உனக்கு பிடிக்கலைன்னா சொல்லிடு, இங்க பசங்களை பார்த்துக்க நான் வேற ஏற்பாடு செஞ்சுக்கிறேன் மணி.”
“அய்யோ அப்பா.. நான் இப்ப தான் கொஞ்சம் சந்தோசமா இருக்கேன்.. என்ன சொல்றீங்க?”
“இல்லம்மா, உனக்கு பிடிக்கலைன்னா தான்”
“நான் இங்க ரொம்ப நிம்மதியா இருக்கேன் ப்பா.. சரி ஹரிக்கு பொண்ணு எல்லாம் பார்த்திட்டு வந்துட்டீங்களா?”
சுருக்கமாக ஊரில் நடந்தவைகளை கூறினார்.
“சூப்பர் அப்பா, அப்ப கல்யாண தேதி குறிச்சாச்சா?”
“இன்னும் ஆறு மாசம் கழிச்சு தான் மணி கல்யாணத்தை வச்சிக்க முடிவு செஞ்சிருக்கேன். இதுல உன் தம்பிக்கு வருத்தம்.”
“எதுக்கு ப்பா அவ்வளவு நாள் தள்ளி?”
“உனக்கு ஒரு வழி செய்யாம அவன் கல்யாணத்தை முடிக்க மனசு கேட்கலை ம்மா..”
மணிமேகலைக்கு ஆறு ஏழு வருடமாக மாப்பிள்ளை பார்த்து கொண்டு தான் இருக்கிறார். ஒன்றும் அமையவில்லை.
“எனக்கு கல்யாணம் முடிஞ்சா தான் அவனுக்குன்னா அது நடக்கிற விஷயமா ப்பா?”
“ஏன் மணி அப்படி சொல்ற.. அப்பா உன்னை அப்படியே விட்டுடுவேனா? அப்பா மேலே நம்பிக்கை இல்லையா உனக்கு?”
“இப்ப இப்படி சொல்ற நீங்க ஏன்பா என் படிப்பை நிறுத்தின அப்ப ஒன்னும் செய்யலை? நான் உங்களை தான் மலைப்போல நம்பி இருந்தேன். ஊர்ல இருந்து அப்பா வந்ததும் என்னை திரும்ப ஸ்கூல் அனுப்பிடுவீங்கன்னு எத்தனை நாள் தூங்காம காத்திருந்தேன் தெரியுமா? வந்து திரும்ப என்னை ஸ்கூல்ல சேர்ப்பீங்கன்னு எதிர்பார்த்திட்டே இருந்தேன்..”
என்ன பதில் சொல்ல முடியும்? காலம் சென்று தான் தன் தவறை உணர்கிறார். மௌனமாக இருந்தார்.
“அந்த தடவை நீங்க வந்துட்டு என்கிட்ட எதுவுமே பேசாம போயிட்டிங்க.. எதுவுமே செய்யலை.. சரி இந்த வருஷம் போனா அடுத்த வருஷம் சேர்பீங்கன்னு நினைச்சேன்.. அடுத்த வருஷமும் எதுவும் மாறலை. “
“—————–”
“ப்ச்ச்…”
“உங்க அம்மா தான் மணி சொன்னா, ‘மணிக்கு ஸ்கூல் போக விருப்பமில்லை.. அவளை எல்லாருமே ரொம்ப கிண்டல் செய்றாங்க. அவளுக்கு தாழ்வு மனப்பான்மை அதிகமாகிட்டே வருது. படிக்கலைன்னா கூட பரவாயில்லை, பிள்ளை சந்தோசமா இருக்கணும் இல்லைங்கன்னு.. ஏற்கனவே நொந்து போய் இருக்கிற பிள்ளைக்கிட்ட நீங்க எதுவும் கேட்காதீங்க, நானே பேசிக்கிறேன்னு’ சொன்னா.. அவ சொன்னதை நம்பி…”
“அம்மா எப்படி பேசுவாங்கன்னு உங்களுக்கு தெரியாதா அப்பா.. நான் எப்பயாவது தாழ்வு மனப்பான்மையோட இருந்து நீங்க பார்த்து இருக்கீங்களா?”
“அப்ப ஸ்கூல்ல உன்னை கிண்டல் செஞ்சது..”
“என்னை முதல்ல பார்க்கிறவங்க கிண்டல் செய்வாங்க தான். ஆனா நான் அதை எல்லாம் ஒரு பொருட்டா எப்பவுமே நினைச்சது இல்லை. என் கூட பழகினவங்க யாரும் என் பழக்கத்தை இதுவரை நிப்பாட்டினதே இல்லைப்பா..”
“———————–”
“கிண்டல் செஞ்சாங்கன்னு சொன்னது ஹரி.. அவன் கூட நான் வரக்கூடாதுன்னு சொன்னது ஹரி.. நான் வந்தா படிப்பை விட்டுடுவேன்னு அம்மாகிட்ட மிரட்டுனது ஹரி. அதுக்கு துணை போனது அம்மாவும் ராம் அண்ணாவும். பேசாமலே ஆதரிச்சது நீங்களும் அக்காவும்”
“இல்ல, தப்பு உங்க மேலேன்னு என்னை நானே இத்தனை வருஷமா ஏமாத்திட்டு இருந்திருக்கேன்னு இப்ப தான் புரிஞ்சுக்கிட்டேன். இப்ப நான் கேட்டதும் எனக்குள்ளே பல வருஷமா இருந்த கேள்விகள் தான். இனியும் அது உள்ள இருக்க வேண்டாம்னு தான் கேட்டேன்”
அவர் கேள்வியாக பார்க்கவும்,
“பத்து வயசு ப்பா வராஹிக்கு.. வல்லபனுக்கு பன்னெண்டு.. எத்தனை பெரிய கஷ்டம் இந்த வயசுல.
ஆனா அந்த பிள்ளைங்க அவங்களுக்காக போராடுறாங்க.. அவங்களுக்கு தேவையானதை செய்ய போராடுறாங்க.. இதோ, ஒரு குடும்பத்தையே அவங்க உருவாக்கி இருக்காங்க.. ஆனா நான் எனக்காக போராடவே இல்லை ப்பா.. படிக்கணும்னு உங்க கிட்ட கேட்டிருக்கணும்.. உனக்கு பிடிக்கலைன்னா நீ படிப்பை விடுன்னு ஹரி கிட்ட சொல்லி இருக்கணும்.. நானும் உன் வயித்துல தானே பொறந்தேன்னு அம்மாகிட்ட கேட்டிருக்கணும்.. எனக்கு நியாயமா கிடைக்க வேண்டியதை எப்படி நிப்பாட்டுலாம்னு எதிர்த்து நின்னிருக்கணும்” சொல்லும்போது மணிமேகலை மிகவும் உணர்ச்சிவசத்தில் இருந்தார்.
“அம்மாடி…”
“ரொம்ப வருஷம் ‘நான் பாவம்’ன்னு நானே ஒரு ஸெல்ப் பிட்டில இருந்துட்டேன்ப்பா.. அது தப்புன்னு இப்ப தான் புரிய ஆரம்பிக்குது.. நான் அதுல இருந்து வெளிய வர ஆரம்பிச்சிருக்கேன் ப்பா.. நீங்க ஹரி கல்யாணத்தை பாருங்க.. எனக்கான வழியை நான் யோசிக்கிறேன்..”
“மணி..”
“நாம இதை பத்தி அப்புறமா பேசுவோமே ப்பா..”
“சரி ம்மா.. ஆனா நான் செஞ்ச தப்பை சரி பண்ண நினைக்கிறேன். நீ எடுக்கிற எந்த முடிவுக்கும் இனி உன் அப்பா உன் கூட நிப்பேன்.. அதை நியாபகத்துல வச்சு முடிவு செய் “
“தேங்க்ஸ் ப்பா. “
மாலை பிள்ளைகளுக்கு தாத்தாவை பார்த்ததும் முகமெல்லாம் பூவாக மலர்ந்து போனது.
மாலை சிற்றுண்டி முடித்துவிட்டு வல்லபன் நந்தனுடன் விளையாட சென்றுவிட்டான்.