Skip to content
Post Views: 4,703
“மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த இடத்து
மு.வ உரை:
ஒருவனுடைய பெருந்தகைமை தன் சிறப்புக்கெட நேர்ந்த போது, அவன் உடம்பை மட்டும் காத்து வாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்தோ.”
காலை நேரத்துக் குளிர் உடலைத் துளைக்க கண்ணயர்ந்த ஒரு மணி நேரத்தில் லேசாய் புரண்டு படித்தவளுக்கு விழிப்பு வர உடலை மறைத்திருந்த போர்வையை இன்னுமாய் கழுத்து வரை இழுத்துக் கொண்டாள் செங்காந்தள்.
இரவு மொத்தமும் இல்லாத வெட்கம் இப்போது தலைகேறி இருந்தது.
Advertisement
இரவு உடுத்தியிருந்த உடைகளெல்லாம் அங்கங்கு கிடக்க எப்படி எழுந்து கொள்வது எனப் புரியாமல் தவித்தாள்.
ருத்ரேஸ்வரன் இன்னமும் தூக்கத்தில் இருக்க போர்வையை இழுத்தால் அவன் தூக்கம் கலையுமே என்று சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு கட்டிலின் ஓரத்தில் இருந்த கணவனின் சட்டை கண்ணில் பட அதை எடுத்து அணிந்து கொண்டவளாய் வேகமாய் கீழேயிறங்கி புடவையை மாற்றிக் கொண்டு குளிப்பதற்காக பின்பக்கம் ஓடியிருந்தாள்.
மாமியாரின் கண்ணில் படுவதற்குள் குளித்து விட வேண்டி அவள் ஓட சரியாய் பல்துலக்கி விட்டு அவள் எதிரே வந்தார் காமாட்சி.
Advertisement
எப்போதும் நிதானமாய் இருக்கும் மருமகளின் கண்களில் இன்று கூச்சமும் பதட்டமும் தாண்டவமாட அதை விட புடவையை பெயருக்கு அவள் சுற்றியிருந்த விதமே அவருக்கு பலவற்றைத் தெளிவாய் உணர்த்தியிருக்க ஒன்றும் பேசாமல் அமைதியாய் அவளைக் கடந்திருந்தார்.
Advertisement
குளியலறைக்குள் சென்று கதவை அடைத்தவளுக்கு வெட்கத்தில் புன்னகை எழுந்தது. காமாட்சி என்றுமே அவளுக்கு மாமியாருக்கும் மேல் தாய் போன்றவர் தான்.
அவர் தன்னை கண்டுகொண்டார் என்பது அவளுக்குமே புரிந்து விட புன்னகையை அடக்குவது பெரும்பாடாய் இருந்தது.
குளித்து முடித்தவள் சாமி விளக்கை ஏற்றி கைக் கூப்பிய போது மனதில் ஆழ்கடலின் அமைதி.
Advertisement
கிடைக்கவே போவதில்லை என்று எண்ணியிருந்த கணவனின் மொத்த அன்பும் இப்போது அவள் கைகளில்.
தன் கணவன் எப்போதுமே நல்லவன் தான். எனவே இப்போது அவன் திருந்தி வந்திருக்கவில்லை தன்னுடைய அன்பை மொத்தமாய் புரிந்து வந்திருக்கிறான் என்பதே அவளின் பெருமகிழ்ச்சிக்கான காரணம்.
எப்போதுமே சுறுசுறுப்பாய் வேலை செய்பவள் இன்று இன்னமும் பரபரப்பாய் வேலையைக் கவனித்தாள்.
மாமியாருக்கு காபியைக் கொடுத்து விட்டு நகர நினைத்தவளிடம்,
“செங்கா.. இன்னும் உன் புருசன் எந்திரிச்சு வரல.. என்னனு பாரு..”
“சரி அத்தை..”, என்றவள் அதே யோசனையோடு சமையலறைக்குச் சென்று அடுப்பை அணைத்து விட்டு தங்களறைக்குச் சென்றாள்.
உள்ளே கணவனின் மீது மகள் வந்து படுத்திருக்க அவளை அணைத்த வண்ணம் ருத்ரேஸ்வரன் உறக்கத்தில் இருந்தான்.
இருவருக்கும் அருகில் சென்றவளாய் மகளின் தலை வருடி அவளைக் கட்டிலில் படுக்க வைத்து விட்டு லேசாய் கணவனின் மார்பில் தலை சாய்ந்து கொண்டாள்.
“காந்தா.. நேரமாச்சா?”
“ம்ம்..”
“நீ காபி குடிச்சியா?”
“ம்ம்”
“எனக்கு காபி எங்கே?”
“எந்திரிச்சு வாங்க நான் போய் போட்டு வைக்குறேன்.”
“கொஞ்ச நேரம் தூங்குறேன் டி..”, என்றவன் பாதி தூக்கத்தில் விழி திறக்காமல் அவளிடம் பேசிக் கொண்டிருக்க செங்காந்தள் லேசாய் அவனது மீசையை வருடினாள்.
“என்ன பண்ற நீ?”
“ஒண்ணுமில்ல மாமா.. நீங்க தூங்குங்க..”, என்றவள் மாமியாரிடம் சென்று அவனுக்கு தலைவலிப்பதால் சிறிது நேரம் கழித்து வருவான் என்று கூறிவிட்டு வேலையைக் கவனிக்கச் சென்றாள்.
அன்றைய சமையல் முழுக்க முழுக்க அவளின் பழக்கத்தால் வந்தது என்று தான் கூற வேண்டும். என்ன செய்தாள் எதை சேர்த்தாள் உப்பா சக்கரையா என்ற எதுவுமே கவனத்தில் இல்லை.
மனம் மொத்தமும் ஒருவன் மட்டுமே ஆக்கிரமித்திருந்தான். தீப்தியை கருவுற்றிருந்த காலத்தில் தாய் வீட்டிற்குச் சென்றிருந்த போது அவளது பள்ளித் தோழி ஒருத்தி செங்காந்தளைப் பார்க்க வந்திருந்த நேரம் அவளிடம்,
“உங்க அம்மா சொல்லி அழுதுச்சு. இப்படி எதுக்கு டி நீ அங்கே வாழணும். பேசாம பிள்ளையைப் பெத்து இங்கேயே இருந்துரு. எதாவது படி வேலைக்கு போ.
உனக்குனு கையில் நாலு காசு வந்தா அதுவே தனி தைரியமா இருக்கும்.”
“..”
“என்ன டி அமைதியா இருக்க?”
“நீ சொல்றதெல்லாம் அவங்களை எனக்குப் பிடிக்கலைனால் தான் பண்ணணும்.
இல்ல அவுகளே என்னை வீட்டை விட்டு விரட்டினால் பண்ணனும். இரண்டுமே இல்லாதப்போ நான் ஏன் இந்த கல்யாணத்தை முறிச்சுக்கணும்?”
“!!!”
“இன்னைக்கு இப்படி பேசுற நீயே நாளைக்கு நான் இங்கே தனியா வந்த பின்னாடி உன் வீட்டு விசேசத்துக்கு என்னை முழு மனசோட கூப்பிட முடியுமா?
உங்க அம்மாவே சொல்ல மாட்டாகளா அவளை எல்லாம் தள்ளி வை கல்யாணம் குடும்பம்னு இல்லாம தனியா வந்து நிக்குறவளோட உனக்கென்ன பேச்சுனு கேட்க மாட்டாகளா?”
“செங்கா!!”
“தப்பா நினைக்காத டி. வயசு கம்மிதேன் ஆனால் வாழ்க்கையை நிறைய புரிஞ்சுகிட்டேன். இந்த உலகம் எப்படியிருந்தாலும் எதாவது பேசிகிட்டேதேன் இருக்கும்.
எப்பவும் எல்லாருக்கும் தேவைப்படுறது உத்யோகமும் காசு பணமும் இல்ல டி. இந்த உலகத்தை பொறுத்தவரை நான் முதுகெலும்பு இல்லாதவளாவே இருந்துட்டு போறேன்.
எனக்கு என் மாமாவோட எனக்கு பிடிச்ச ஒரு வாழ்க்கையை வாழணும். இல்லையா தினமும் அவரைப் பார்த்துகிட்டே பக்கத்திலேயேவாவது இருந்துடணும். அதுதேன் எனக்கு விருப்பம்.”, என்று கூறியிருந்தாள்.
இன்று அது கை கூடியிருப்பது அவளைப் பொறுத்தவரை எட்டு வருட தவத்திற்கு கிடைத்த வரம். அதை இனி வாழ்வு முழுவதற்குமாய் பாதுகாப்பாய் பார்த்துக் கொள்வாள்.
இப்படியான யோசனையில் நின்றிருந்தவள் அடுப்பில் இருந்த பால் பொங்கி வழிவதைக் கவனிக்காமல் இருக்க ருத்ரேஸ்வரன் சட்டென அடுப்பை அணைத்திருந்தான்.
“மன்னிச்சுருங்க மாமா.. கவனிக்கலை.”
“கவனம் வேற எங்கே இருக்கு?”, என்றவன் புருவத்தை உயர்த்த புன்னகையோடு தலை குனிந்து கொண்டாள்.
“புடவை ரொம்ப நல்லாயிருக்கு”
“நீங்க எடுத்தது நல்லாதேன் இருக்கும்.”
“வா அம்மாவை திருநீறு பூசி விடச் சொல்லுவோம்.”
“அத்தை ஏற்கனவே..”, என்றவளுக்கு காலையில் நடந்தது நினைவிற்கு வந்தது.
“இன்னும் இரண்டு மாசம் போனால் ஊருக்கேத் தெரியதேன் போகுது. விடு.”, என்றவனின் வாயை மூடி வெளியே இழுத்து வந்திருந்தாள் செங்காந்தள்.
தம்பதியராய் தன் முன் வந்து நின்ற மகனையும் மருமகளையும் பார்த்த காமாட்சி விஷயம் தெரிந்தும் என்னவென பார்த்திருக்க ருத்ரேஸ்வரன்,
“பிறந்தநாளுக்கு ஆசீர்வாதம் பண்ணு மா..,”
“உனக்கு பிறந்தநாளு சரி. இவளுக்கு என்ன?”
“அப்போ உனக்கு எதுவுமே தெரியாது?”
“தெரியாது டா ருத்ரா.”
“தெரியவே வேணாம் சேர்ந்து வந்தா ஆசீர்வாதம் பண்ண மாட்டியா நீ?!”
“இதுக்கொண்ணும் குறைச்சல் இல்ல.”, என்றவர் மருமகளின் கையிலிருந்த திருநீறை வாங்கிக் கொள்ள இருவருமாய் காமாட்சியின் காலில் விழுந்து நமஸ்கரித்தனர்.
மகனுக்கு பூசி விட்ட பின் மருமகளின் நெற்றியில் திருநீறை வைத்த நேரம் மூடியிருந்த அவளது கண்களில் இருந்து கண்ணீர் கன்னம் தொட காமாட்சி தனது கண்களை வேகமாய் துடைத்துக் கொண்டார்.
“என்ன டி பழக்கமிது நல்ல நாளும் அதுவுமா கண்ணை கசக்குறது. போ போய் வேலையை பாரு.”
“…”
“கோயிலுக்கு போயிட்டு வரலாம்ல?”
“இப்போ வேலை கிடக்கு சாயிந்திரம் வந்து கூட்டிகிட்டு போறேன் மா.”
“ம்ம் நல்லது.”, என்றவர் வெளியேறி விட மனைவியின் கரத்தை அழுந்தப் பற்றி விடுவித்தான்.
அவனுக்குப் பிடித்த காலை உணவும் கூடவே பக்கத்தில் சிறு கிண்ணத்தில் அவனுக்குப் பிடித்த பால் பாயாசமும். இப்போது யோசித்தால் அத்தனை பிறந்தநாளுக்கும் இது இருந்திருக்கிறது.
தீப்தியோடு அவர்கள் மூவர் மட்டுமே உணவு மேசையில் இருக்க முதல் கரண்டி பாயாசத்தை எடுத்து மனைவியின் உதட்டருகில் நீட்டியிருந்தான்.
“மாமா!!”
“வாங்கிக்கோ காந்தா. எப்பவும் இப்டியே சிரிச்சிட்டு இருக்கணும் நீ.”, என்றதில் அதை வாங்கிக் கொண்டவள் பதட்டமாய் மகளைப் பார்க்க அன்னையைப் பார்த்து புன்னகைத்தது பூச்செண்டு.
“நீ அப்பாக்கு கொடுக்கலை?”
“!!”
“அப்பாக்கும் பிறந்தநாள் தானே?”
“எம் மக சொன்னா சரியாதேன் இருக்கும்.”, என்றவன் கிண்ணத்தை மனைவியிடம் நீட்ட அவ்வளவு ஆசையாய் ஒரு வாய் பாயாசத்தை எடுத்து கணவனுக்கு ஊட்டியிருந்தாள் செங்காந்தள்.
அந்த நேரம் சர்வேஸ்வரன் உணவிற்காக வர இவர்களைப் பார்த்ததும் அப்படியே திரும்பிச் செல்ல நினைத்தவனை ருத்ரேஸ்வரனின் குரல் நிறுத்தியிருக்க வேறு வழியின்றி அமைதியாய் வந்து அமர்ந்தான்.
ருத்ரேஸ்வரன் உணவை முடித்து எழுந்து கை கழுவச் செல்ல செங்காந்தள் எதார்த்தமாய் கொழுந்தனின் தட்டில் இட்லி காலியாவதை உணர்ந்து ஒரு இட்லியை எடுத்து வைத்தாள்.
“ப்ச் இப்போ உங்ககிட்ட இட்லி வைங்கனு கேட்டேனா? எனக்கு வேணும்னால் நானே போட்டு சாப்பிட மாட்டேனா?”
“டேய் சர்வா!”, என்ற அண்ணனின் குரலில் கடுப்பாய் அப்படியே அமர்ந்திருந்தான் சர்வேஸ்வரன்.
“என்ன டா மதினினு மரியாதை இல்லையா? இட்லி போதும்னால் பொறுமையா சொல்லு.
அதென்ன வெடுக்குனு பேசுறது?”, என்ற நேரம் பொன்னி உள்ளே நுழைய,
“நல்லா சொல்லுங்க ஐயா. எப்பவும் இதே கதைதேன் எல்லாருக்கும் எங்க செங்கா அக்கானால் இளப்பமாதேன் இருக்கு.”
“ஏய் பொன்னி என்ன வாய் நீளுது?”
“ம்ம் உண்மையை சொல்றதுக்கு எனக்கு என்ன பயமா?”
“கை நீட்டி சம்பளம் வாங்குற உனக்கு இம்புட்டு ஏத்தம் இருக்க கூடாது.”, என்றவன் அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க செங்காந்தள் அவளைத் தன் பின் நிறுத்திக் கொள்ள ருத்ரேஸ்வரன் தம்பியைப் பிடித்து நிறுத்தியிருந்தான்.
“சர்வா ஏன் டா இப்படி இருக்க நீ?”
“எனக்கென்ன நான் நல்லாதேன் இருக்கேன். கல்யாணம் பண்ணின உனக்கே அவங்களைப் பிடிக்காத அப்போ எனக்கு எப்படி மதினினு பிடித்தம் இருக்கும்?”
“!!”
“சும்மா எல்லாத்துக்கும் என்னைக் குத்தம் சொல்லித் திரியாத ண்ணே..”, என்ற தம்பியின் கூற்றில் ஒரு நொடி உள்ளுக்குள் சுருக்கென்றது ருத்ரேஸ்வரனுக்கு.
கணவனின் ஒரு நொடி முகமாற்றத்தைக் கவனித்தவளுக்கு அதற்கு மேல் அமைதியாய் இருக்க முடியவில்லை.
“நீங்க எல்லாரும்தேன் இதையே இத்தனை வருசமும் சொல்லிட்டு இருக்கீங்க..”, என்றதில் பொன்னியும் சர்வேஸ்வரனும் அதிர்ச்சியாய் செங்காந்தளைப் பார்க்க ருத்ரேஸ்வரனோ ஆச்சரியமாய் மனைவியைப் பார்த்திருந்தான்.
“எல்லா கல்யாணமும் மனமொத்து பிடிச்சு நடந்து அப்படியே கடைசி வரை இருக்கப் போறது கிடையாது.
அவுக எதிர்பார்ப்புக்கு கல்யாணம் நடக்கலைனு ஆதங்கம் இருந்தது உண்மைதேன். அதுக்காக அதையே ஆளாளுக்கு சொல்லிட்டு இருப்பீகளா?”, என்ற நேரம் லிங்க மூர்த்தியும் ராணியோடு கீழே வந்திருந்தான்.
error: Content is protected !!