Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அலைபாயுதே

அலை – 5.2

“என் பையன் யாரையும் லவ் பண்ணல தம்பி, சித்தார்த் சொல்லுடா…” மகனை உசுப்பி விட்டவர் கண்களில் அத்தனை ஆணை, ஏதாவது நல்லது கூறு என்று.

‘சொல்ல இருந்தா தான?’ என்று நினைத்தவன், அன்னையின் தீ பார்வைக்கு பயந்து, “அண்ணா பத்தி வெளிய நூறு விஷயம் சொல்லுவாங்க, ஆனா உண்மை என்னனு தெரியாம முடிவுக்கு வர வேணாமே. நாங்க பேசுனோம் அண்ணாகிட்ட, அவன் லவ் எல்லாம் பண்ணல. சும்மா ஃப்ரண்ட்லியா பழகுறாங்க…”

அத்தனை நேரம் மௌனம் காத்திருந்த திவ்யா மௌனத்தைத் தகர்த்து, “இதுதான் ம்மா எங்க பயமே… அவரோட உலகம் ரொம்பவே பறந்து விரிஞ்சது. ஆரோஹி உலகம் ரொம்பவே சின்னது.

நான், அவளோட வேலை அவ்ளோ தான் அவளோட உலகமே. இதுல இவ்ளோ பெரிய பாரத்தை என்னால அவ தலைல ஏத்தி வைக்க முடியும்னு தோனல. என்ன கஷ்டம்னாலும் வாய் தொறந்து கூட சொல்லா மாட்டா. சிரிச்சே சமாளிப்பா, வேணாமே…”



Advertisement

ஒரேடியாக தலையை ஆட்டி ஆட்டி மறுத்த திவ்யாவின் கன்னத்தில் கண்ணீர் கோடுகள் அதிகம் உருவாகியது.

“திவ்யா ச்சில்…” மாறன் அவளது உடல்நிலையை எண்ணி மனைவியை சமாதானம் செய்தான், “நான் புரிய வைக்கிறேன் அவங்களுக்கு…”

“என்ன புரிய வைக்கணும்? என்னமோ என் அண்ணன் கொடுமைக்காரன் மாதிரி பேசுறீங்க? அவன் உங்க ஃப்ரண்ட்ட விட ரொம்ப நல்லவன், ஏதோ பாப்புலரா…”

Advertisement

சகோதரனை அவர்கள் நிராகரித்தது கூட அவனுக்கு கோபமில்லை. அவனை ஏதோ அரக்கன் போல் அவர்கள் பாவித்து பேசுவது தான், சகிக்கவே முடியவில்லை. கோவத்தில் திவ்யாவை பார்த்து பேசியவனை, பார்வையாலே அடக்கி நிறுத்தினார் அன்னை.

Advertisement

“சாரி ம்மா, அவன் ஏதோ கோவத்துல பேசுறான். என்னோட அஸ்வின் நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் நிச்சயமா இல்ல. ஒரு நாள் கூட கோவம் படமாட்டான். ரொம்ப அண்டர்ஸ்டாண்டிங், என் முகத்தை பாத்தே என்னை தெரிஞ்சுப்பான்.

ஒருத்தர் மேல பாசம் வச்சிட்டா, அவங்க மேல உயிரா இருப்பான். அந்த உயிர் ஆரோஹியா இருக்கணும்னு என்னோட ஆசை. என் பையன் வேற ஒரு பொண்ண லவ் பண்றான்னு தான நீங்க யோசிக்கிறீங்க?” இருவர் முகமும் தெளிச்சியடையவில்லை இன்னும்.

“அவன் அந்த பொண்ணு கூட பழகுறது உண்மை, அதே நேரம் அவனுக்கு அந்த பொண்ணு மேல கொஞ்சம் கூட லவ் இல்ல, அதுவும் உண்மை தான்.”

Advertisement

திவ்யாவின் முகம் அப்பட்டமான விலகலைக் காட்டியது, “லிவ் இன் ரிலேஷன், பெனிபிட்ஸ் எல்லாம் இந்த காலத்துல ரொம்பவே சாதாரணம். ஆனா ஆரோ…”

“இல்ல திவ்யா, இது தப்பு. இப்பவும் சொல்றேன், என் பையனுக்கு அந்த பொண்ணு மேல ஒரு ஆசை, அட்ராக்ஷன் இருக்கலாம். அதுக்கு அவனோட எல்லை மீறி தாண்டி போறவன் இல்லை. இத ஒரு அம்மாவா என்னோட வளர்ப்பு மேல நம்பிக்கை வச்சு உறுதியா சொல்ல முடியும்.

ஆரோஹிகிட்ட என்னால நேரடியா பேசியிருக்க முடியும். ஆனா அவ ஒரே உறவா நினைக்கிற உன்கிட்ட பேசி, அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போகணும்னு தான் ம்மா வந்தேன். முன்ன பின்ன தெரியாத என்னை நம்புறது உங்களுக்கு கஷ்டமா தான் இருக்கும்.”

தன்னுடைய கணவனின் விசிட்டிங் கார்டை கொடுத்தவர், “இது சித்தார்த் அப்பா விசிட்டிங் கார்ட். எங்களை பத்தி வெளிய விசாரிச்சுக்கோங்க. என்கிட்ட ஒளிவு மறைவு எதுவும் இருக்காது திவ்யா. ஆரோஹிய நான் என்கூடயே வச்சுக்க, என் பையன் அஸ்வின் ஒரு சாக்கு அவ்ளோ தான், யோசிங்க.

எவ்ளோ நாள் வேணும்னாலும் யோசிங்க, ஆனா எந்த முடிவு எடுக்க முன்னாடியும், அஸ்வினை ஒரு செலிப்ரட்டியா பாக்காம சாதாரண மனுசனா தெரிஞ்சிட்டு, முடிவு பண்ணுங்க. அதை மட்டும் தான் உங்ககிட்ட கேக்க முடியும்.”

அன்னை, மகன் இருவரும் வீட்டை விட்டு வெளியேற, அன்னையை விசித்திர பிறவி போல் திரும்பி திரும்பி பார்த்து வந்த சித்தார்த்தை காரில் ஏறியதும் மொத்திவிட்டார் மதி.

“ஏன்டா அமைதியாவே இருக்க மாட்டியா? பொறுமையா பேசணும்னு சொல்லி தான கூட்டிட்டு போனேன்?”

“ம்மா… சும்மா என்னையே சொல்றிங்க, எனக்கு முன்னாடி அவன் பண்ண அழிசாட்டியத்தை நீங்க தான சொன்னிங்க?”

அன்னையை ஏகத்திற்கும் முறைத்து வைத்தவன் முகம், அடுத்த நொடியே கேலியாக மாறியது. “ஆனா, போட்டீங்க பாருங்க ஒரு ட்ராமா… எப்பா நெஞ்சு வலியாம்? ஹார்ட்ல பிளாக்காமாம்? இவங்க பையனுக்கு கோவம்னா என்னன்னே தெரியாதாமாம். எப்பா…! உலக மகா நடிப்புடா சாமி!”

அதெற்கெல்லாம் சிறிதும் அசரவில்லை மதி, “நான் சொன்னது பொய் தான், ஆனா என் பையன் குணம் இப்பவும் தங்கம் தான்டா. எங்க, உன்னால தப்பு சொல்லிட முடியுமா?”

இதற்கு சித்தார்த்திடம் எந்த பதிலும் இல்லை.

“வண்டிய ஆபீஸ்க்கு விடு, உன் அப்பாகிட்ட பேசணும்.”

“ம்ஹ்ம்… பேச வேண்டிய ரெண்டு ஜீவன்களை தவர, மத்த எல்லார்கிட்டயும் பேசுங்க.” அலுத்துக்கொண்டு வாகனத்தை தந்தையின் இருப்பிடத்தை நோக்கி விட்டான்.

அதன்பிறகு வந்த நாட்களில் ஆரோஹி, அஸ்வின் இருவருக்கும் தங்களை இணைக்க மதி துடிப்பது தெரியாமலே, போனது. திவ்யாவும் சரி, மாறனும் சரி யோசனையில் மூழ்கி போக, ஆரோஹியிடம் மதி வந்ததை மட்டும் கூறி, அவர் பேசிய சமந்தத்தை பற்றி வார்த்தை கூட விடவில்லை. ஆதலால் இருவருக்கும் இருவரும் இன்னமும் மூன்றாம் மனிதர்கள் தான்.

***

அன்று சரவெடியாய் துவங்கிய ஒரு நாள் போட்டியில், ஏன் என்றே தெரியாத அளவிற்கு அஸ்வின் உள்ளம் உறுதியோடு நின்றது. தனக்கு முன்பு இறங்கிய இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களும் சொற்ப இலக்கில் தங்கள் ஆட்டத்தை இழந்திருக்க, நிலையான வீரன் துணைக்கு நில்லாமல் தள்ளாடிய இந்திய அணியின் தூணாய், நம்பிக்கை நாயகனாய் அஸ்வின் மட்டுமே களத்தில் நின்றான்.

எந்த விதமான சந்தேகமும் இல்லை, சிறு அச்சம் கூட அவனிடம் இல்லை. எப்பொழுதும் இருக்கும் அதே அசுர வேகம், அதோடு இம்முறை ஒரு ஆக்ரோஷம் அவனிடம் சற்று அதிகமாகவே தென்பட்டது.

உடன் நிற்கும் வீரன் கூட, “பொறுமையா ஆடு அஸ்வின், முதல் அஞ்சு ஓவர்லயே ரெண்டு விக்கெட் போச்சு. நிறுத்தி ஆடுனா தான் ரன் ரேட் அதிகமாகும், அவசரப்படாத…”

அழுத்தி அவன் கூறியும் நிற்கவில்லை இவன். வந்த ஒவ்வொரு பந்தும் எல்லையைக் கடந்து செல்ல, அவனது எண்ணும் ஏறிக்கொண்டு சென்றது. இருபதே பந்துகளில் அரைசதம் அடித்தவன், அடுத்த முப்பது பந்துகளில் சதம் அடித்து ரசிகர்களின் ஆரவாரத்தைக் கூட்டியிருந்தான்.

ஒரு பக்கம் நிலையில்லாத பார்ட்னர் இருக்க விக்கெட் விழுந்துகொண்டே சென்றது. அந்த நிலையிலும் ரசிகர்கள் மனதில் பெரிய ஆசுவாசம், அஸ்வின் நாராயண் களத்தில் உள்ளான் என்பது மட்டுமே.

ஒவ்வொரு ஓவரும் மக்களின் கூச்சலில் அந்த அரங்கமே அதிர, அஸ்வினின் அதிரடியான நிதான ஆட்டம் எதிரணியினரை கதிகலங்க வைத்தது.

அந்த நேரம் அவனோடு களத்தில் நின்ற அந்த அணியின் கேப்டன் நிதின், “என் பிளாக்மெயில் இப்டி எல்லாம் வேலை செய்யும்னா, டீம் மொத்தத்துக்கும் இதையே பண்ணலாம் போலயே…”

விளையாட்டாக அவன் கூற, கூட்டத்தின் மேலே கவனம் வைத்திருந்த அஸ்வின் இதழ்கள் சிரிப்பில் அழகாய் மலர்ந்தது.

“சரி, இனிமேலாவது நிதானமா ஆடு. லாஸ்ட் பத்து ஓவர்ல ஸ்டேபிலிட்டி ரொம்ப முக்கியம். எனக்கு அடுத்தது பௌலர்ஸ் தான்…” ஒரு கேப்டனாக நிதின் துணை கேப்டனுக்கு அறிவுரைகள் வழங்க, அவன் கவனம் எதிரில் இருப்பவனிடம் சுத்தமாக இல்லை.

“நீங்க நின்னு நிதானமா ஆடுங்க பாய். இன்னைக்கு என்னோட டாஸ்க்கே வேற… டபுள் சென்சுரி இல்லனா ட்ரிபிள் சென்…”

கண் முன்னே தெரிந்த அந்த இரண்டு நொடி காட்சியில் வார்த்தைகள் மறந்து, கண்கள் தன்னுடைய தேடலை அந்த கூட்டத்தினுள்ளே துவங்கியது. புள்ளியாய் தெரிந்த ஜன கூட்டத்தின் நடுவே, அந்த ஒரு பலகையை எப்படி கண்டறிவது? அதுவும் இத்தனை ஆயிரம் மக்களிடையில்…?

“என்னது ட்ரிபிள் சென்சுரியா?” அதிசயித்து அஸ்வினைப் பார்த்தவன், “டேய், என்னாச்சு உனக்கு இன்னைக்கு?” கேட்ட கேள்விக்கு உரியவனிடமிருந்து பதில் வரவில்லை, தேடல் தொடர்ந்துகொண்டே இருந்தது.

“என்னடா தேடுற?”

நிதின் மீண்டும் கேட்க, “பாய் ஒரு போர்ட் ஸ்க்ரீன்ல வந்துச்சு பாத்திங்களா? டூ ஹண்ட்ரட் ஆர் த்ரீ ஹண்ட்ரட்னு வந்துச்சே?”

“அது சாதாரணம் தானே அஸ்வின், ஃபேன்ஸ் எஸ்பக்ட் பண்றது தான?”

அஸ்வின், “இல்ல பாய், இது வேற…” என்றவன் முகம் எல்லாம் பிரகாசம் பரவ, தன்னுடைய இடத்திற்கு சென்று நின்று விட்டான் அடுத்த பட்டாசை கொளுத்த.

ரசிகர்களின் ஆரவாரம், மனதின் உந்துதல் என அனைத்தும் அவனுக்கு போதை கொடுக்க, அணியின் இலக்கோடு அவனுடைய இலக்கும் வெகு சீக்கிரமே உச்சியைத் தொட்டது.

இரட்டை சதம் அடித்தும் வெறி அடங்காதது போல் பந்துகளை பறக்க விட்டவன், இருநூற்றி ஐம்பது அடித்த பொழுது மக்களின் வாழ்த்துகளை பெற, மட்டையை உயர்த்தி தன்னுடைய மகிழ்ச்சியை வைக்க, தன்னாலே பளிச்சென விரிந்தது அவன் மனம்.

ரசிகர்களின் ஆதரவிற்கு நன்றி கூறி வானை நோக்கி கண்கள் மூடி திறந்தவன் கண் முன்னே, வானவில்லாய் பளிச்சென மின்னியது அவளது அழகிய சிரித்த முகம்.

சில நேரங்களில் சில மனிதர்களின் நினைவுகள் மனதின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து விடுகிறது, அவள் கள்ளமில்லா சிரிப்பை போல்.

தவறு தான், ஆனாலும் மீண்டும் அவள் நினைவில் மூழ்கி, அந்த பௌர்ணமி முகம் ஒத்தவளைக் கொண்டாடிவிட தூண்டிய மனம், சற்று பின்வாங்கி தற்காலிகமாக நன்றியை மட்டும் வைத்தது, ‘தாங்க் யூ பட்டாம்பூச்சி!’

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!