Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அவளின் ஆதியானவன்

 அவளின் ஆதியானவன் – 10

அத்தியாயம் 10:

வீட்டுக்கு சென்று அவள் அம்மா செய்து வைத்திருந்த ஸ்நாக்ஸை மொக்கி விட்டு கௌரி வீட்டுக்கு கிளம்பி சென்றாள் சந்தியா.

உள்ளே டிவி பார்த்து அமர்ந்திருந்த சுந்தரமூர்த்தி “வாடா மருமகளே. கையில என்ன”

“வெங்காய பக்கோடா மாமா”



Advertisement

“அடடே குடு. குடு. நீ என்ன செய்ற கண்ணு. வீட்டுக்கு போகும்போது கையோட உன்ர அத்தைய  கூட்டிட்டு போயி, உன்ர அம்மாட்ட சொல்லி அவளுக்கு  சமையலை கத்து குடுக்க சொல்லு கண்ணு”

“ஏன் மாமா. எங்க அத்தைக்கு சமைக்க தெரியாதா?”

“என்னம்ணி இப்படி கேட்டு போட்ட. உன்ர அத்தை சூப்பரா சமைப்பாளாக்கும். ஆனா அது என்னன்னுதேன் நம்மால கண்டுபிடிக்க முடியாது கண்ணு. அதாட்டம் வாயிலையும் வைக்க முடியாது பாத்துக்க”

Advertisement

“கேட்டுக்கிட்டிங்களா அத்தை” என்று சுந்தரத்தின் பின்பக்கம் பார்த்து கேட்டாள் சந்தியா. பயந்து போய் திரும்பி பார்த்தார் சுந்தரம்.

Advertisement

“கேட்டுட்டுதான இருக்கேன். அந்த தூக்கு போசிய இப்படி கொடுடா சந்தியா. அண்ணி சாப்பாட சாப்ட்டு சாப்ட்டு அவர் நாக்கு ரொம்ப கெட்டு போய்ட்டு. இது உங்களுக்கு கிடையாது. நைட் தோசை போட்டு தரேன். சாப்டுட்டு ஒழுங்கா தூங்குங்க” என்று உள்ளே செல்ல போனவரிடம் சந்தியா 

“அத்தை. பாவம் மாமா. அடில்லாம் தாங்க மாட்டார். சப்பாத்தி கட்டையெல்லாம் எடுக்க போகாதீங்க” என்று பதறியவாறு கூறிவிட்டு கௌரியின் ரூமிற்கு சென்றாள் சந்தியா. அதை கேட்டு பீதியானார் சுந்தரம். 

அவரை பார்த்து வந்த சிரிப்பை அடக்கி கொண்டே அடுக்களைக்கு சென்றார் சித்ரா.

Advertisement

ரூமில் மொபைல் பார்த்து படுத்திருந்த கௌரி “வா சந்தியா. இன்னைக்கு நீ இல்லாம பொழுதே போகல. உனக்கு எப்படி போச்சு”

“நீ இல்லாம இன்னைக்கு நிறைய நல்லது நடந்தது கௌ” என்றவளை முறைத்தாள் கௌரி.

“என்ன அப்புறம் முறைக்கலாம். இந்த ஊர்ல அரவிந்த்ன்னு ஒருத்தர் இருக்காரே. அவருக்கும் உங்கண்ணனுக்கும் என்ன பிரச்சனை”

“நீ எங்கடி அரவிந்த் அண்ணாவை பாத்த”

“நீ என்னடி அண்ணாங்கிற அரவிந்த”

“ஆமா அரவிந்த் அண்ணா எம் மேலையும் அருண் மேலையும் நல்ல பாசமா இருப்பாரு”

“ஓ”

“ஆமா. அரவிந்த் அப்பா கிருஷ்ணன் மாமா இந்த ஊருதான். அவங்களும் நல்ல பெரிய குடும்பம்தான். மாமா படிச்சுட்டு நார்த் இண்டியாக்கு வேலைக்கு போனவர் அங்கவே ஒரு பஞ்சாபி பொண்ண லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. இங்க யாரும் அவங்கள ஏத்துக்கல. அதனால அங்கேயே இருந்தாரு. அரவிந்த் அண்ணா ரெண்டாம் கிளாஸ் படிக்கும்போது அவங்க அம்மா இறந்துட்டாங்களாம். அதனால இந்த ஊருக்கு அரவிந்த் அண்ணாவை அழைச்சுட்டு வந்தவரு இங்கவே ஸ்கூல் சேத்து விட்டாரு. அங்கதான் ஆதி அண்ணாவும் படிச்சிருக்காங்க. ஒரே கிளாஸ். அது வரை கிளாஸ்ல ஆதி அண்ணாவ சுத்திட்டிருந்த பசங்க பாதி பேர் அரவிந்த் அண்ணா பக்கம் போய்ட்டாங்க. அது ஆதி அண்ணாக்கு பிடிக்கல. 

அதே மாதிரி இதுவரை படிச்ச ஸ்கூல்ல எல்லாத்திலையும் பஸ்ட்டா இருந்த அரவிந்த் அண்ணாக்கு, இங்க எல்லாத்திலையும் ஆதி அண்ணாக்கு அடுத்துதான் வர முடிஞ்சிருக்கு. அது அவருக்கு பிடிக்கல. ஸ்கூல்ல இப்படியே முட்டிகிட்டு இருந்தவங்க, வேற வேற காலேஜ் போய்ட்டாலும், இப்பவரை எதிர் எதிர்தான். ஊர்ல நடக்கிற நோம்பில ஆரம்பிச்சு பஞ்சாயத்து வரைக்கும் எல்லாத்திலயும் முட்டிப்பாங்க. அதும் ஆதி அண்ணா நிறைய விஷயங்கள்ல கண்டுக்காம போய்டுவாரு. அரவிந்த் அண்ணா வீணா வம்பு பண்ணுவாரு.

டெக்ஸ்டைல்  இன்ஜினியரிங் படிச்ச அரவிந்த் அண்ணா அவங்க பேமிலி பிசினஸ் பாத்துக்கிறாரு. இப்பகூட அண்ணாக்கு புடிக்காதுங்கிறதுக்காகவே அவங்க வயல்ல மால் கட்ட போறேன்னு போனாரு. அண்ணாதான் கோர்ட்ல கேஸ் போட்டு ஸ்டே வாங்கி வச்சிருக்காரு. ரெண்டு பேரும் ஒரு இடத்தில இருந்தா ஈஸியா சண்டை வந்துரும்” என்று கௌரி சொன்ன கதையை கேட்ட சந்தியா 

“இது என்னடி. நானும் பெரிய மஹாபாரத போர் ரேஞ்சுக்கு யோசிச்சிடிருந்தா, இது சின்ன புள்ள தனமால்ல இருக்கு” என்றாள்.

“ஹா ஹா ஆமா. நமக்கு அப்படித்தான் இருக்கும்”

“சரி அரவிந்த் என்ன பிசினஸ் பண்ராரு”

“பூனம் காட்டன் மில். பூனம் டெக்ஸ்டைல்ஸ் இருக்குல்ல. அதெல்லாம் அவங்களோடதுதான்”

“ஓ” என்று கேட்டு கொண்டாள் சந்தியா.

ஆதி வீட்டில் சாப்பிட அமர்ந்திருந்த அருண் சிவகாமியிடம் “அம்மா ஒரு விஷயம் தெரியும்ங்களா”

“என்ன கண்ணு”

“நம்ம வீட்டு அண்ணாத்த, ரூல்ஸ் ராமானுஜம் இன்னைக்கு அவர் புல்லட்ல சந்தியாவ கூட்டிட்டு வந்துருக்கார்”

“என்ன கண்ணு, உண்மையாவா சொல்ற” என்று வாயை பிளந்தார் சிவகாமி.

“ஆமாங்ம்மா” என்று அருண் கூறி கொண்டிருக்கும் போதே சாப்பிட வந்தமர்ந்த ஆதி பலத்த யோசனையிலிருந்தான்.

அவனுக்கு டிபன் எடுத்து வைத்த சிவகாமி அருணிடம் “சந்தியாவையும், கௌரியையும் இந்த பக்கட்டே பாக்க முடியலையே. ஏன் கண்ணு?” என்று விசாரித்தார்.

“சந்தியாக்கு தண்டனை கொடுத்து போட்டார் எங்க ஹெச் ஓ டி. பத்து அசைன்மென்ட் கொடுத்துருந்தாரு. அதுனால பிஸியா இருக்குமாக்கும்” 

“ஏன் கண்ணு. இந்த புள்ள என்ன தப்பு பண்ணிச்சி”

“அதுங்ளாம்மா” என்று கதையை சொல்ல ஆரம்பித்தான் அருண்.

சந்தியாவும் ஷரத்தும் கேன்டீனில் அருகருகே அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். இரண்டு நாட்களாக பஸ்ட் இயர் மாணவர்கள் கல்லூரிக்கு வருவதால் கேன்டீனில் நிறைய புது ஆட்களாக இருந்தனர்.

அப்பொழுது ஒருவன் ஷரத்தை இடித்துவிட்டு அவனை தாண்டி சென்று அமர இடம் தேடினான்.

ஷரத் சந்தியாவிடம் “பாத்தியா மச்சி. இடிச்சி போட்டு மருவாத இல்லாம ஒரு சாரி கூட சொல்லாம போறான் இந்த ஜூனியர் பையன். அவன கூப்பிடு மச்சி என்னன்னு விசாரிச்சு போடுவோம்” என்றான்.

சந்தியாவும் “ஒய் நீல சட்டை” என்று கூப்பிட்டாள்.

அந்த நீல சட்டை காரனும் தன்னை ஒருமுறை ஆச்சரியமாக குனிந்து பார்த்தவன் “என்னையா” என்று கேட்டான்.

சந்தியாவும் “உன்னைத்தான் தம்பி” என்றாள்.

அருகில் வந்தவனை பார்த்து “என்ன இடிச்சிட்டு நீ பாட்டுக்கு போய்க்கிட்ருக்க. சீனியருக்கு ஒரு மரியாதை வேண்டாமா” என்றாள்.

“சாரி நான் கவனிக்கலை”

“சாரி மட்டும் சொன்னா போதுமா. நாங்கல்லாம் சீனியர்ஸ். ஒரு விஷ் கூட பண்ண மாட்டியா. சரி சரி உனக்கு மரியாதையே தெரியல. சார் யார் தெரியுமா. கொங்கு தமிழ் வாத்தியார். அவர்ட்ட வந்து டெய்லி மரியாதையா எப்படி பேசணும்ன்னு டியூஷன் எடுத்துக்கோ தம்பி. ஆமா நீ எந்த டிபார்ட்மென்ட்”

“I T  சீனியர்”

“பேர் என்ன”

“ராஜேஷ் சீனியர்”

“நல்ல பேர்தான். பயப்படாத தம்பி . உங்க டிபார்ட்மெண்ட்ல என் கசின் படிக்கிறா. என்ன ஹெல்ப்ன்னாலும் அவள்ட்ட  கேளு” என்ற சந்தியா அப்பொழுது அங்கு வந்த கௌரியிடம்

“கௌ, இது உன்னோட ஜூனியர். நம்ம பையன்தான். பாத்துக்க” என்றதும் கௌரி பதட்டத்துடன் நீல சட்டைக்காரனை பார்த்து “சாரி சார், குட் மார்னிங் சார்” என்று உளறினாள்.

பிறகு சந்தியாவை பார்த்து “ஏய் சார் புதுசா ஜாயின் பண்ணிருக்க லெக்சரர்” என்றதும் சந்தியாவும் சரத்தும் அவசரமாக எழுந்தனர்.

சந்தியா “சாரி சார். யூ ஆர் லுக்கிங் வெரி யங் சார். அதான் ஸ்டூடண்ட்ன்னு நினைச்சுட்டோம்.  நா அப்பவே சொன்னேன். சார பாத்தா நல்ல படிச்சவரா, மரியாதை தெரிஞ்சவரா இருக்காருன்னு. இவன்தான் நம்பவே இல்ல சார்” என்றாள்.

ஷரத் “இல்லீங் சார், நா அப்பவே சொன்னனுங். சார் யங்கா இருந்தாலும், படிச்ச கலை முகத்துல தெரியிதுன்னேனுங் . இவதேன் நம்பவே மாட்டேனுட்டாளுங்” என்றான்.

அவர்களை பார்த்து முறைத்து விட்டு சென்ற நீல சட்டைக்காரன் அவர்கள் ஹெச்ஓடியிடம் பற்ற வைத்து விட்டான்.

கதையை சொல்லி முடித்த அருண் “அதான் இந்த புள்ள பிஸியா இருக்கும்ங்ம்மா”

“சரத்துக்கு ஒன்னும் தண்டனை இல்லியா கண்ணு”

“ஹா ஹா அம்மா அவனை இனிமே கோயம்புத்தூர் பாஷைல காலேஜ்ல பேசவே கூடாதுன்னு சொல்லிட்டாருங்ம்மா சார்” 

“நல்ல புள்ளைங்க போ” என்று வாய்விட்டு சிரித்தார் சிவகாமி.

இது அனைத்தையும் கேட்டுவிட்டு ஒன்றும் சொல்லாமல் எழுந்து சென்றான் ஆதி.

மேலே ரூமிற்க்கு வந்தவன் சந்தியாவை நினைத்து அடக்க மாட்டாமல் சிரித்தான்.

மறுநாள் மாலை சந்தியாவும் கௌரியும் ஆதி வீட்டுக்கு வந்தனர்

சிவகாமிதான் “அடடே வாங்க புள்ளைங்களா. நெம்ப நாளா காணுமேன்னு அருணுட்ட  நேத்துதேன் கேட்டேன்” என்றார்.

“வந்துட்டேன் அத்தை. எப்படி இருக்கீங்க. எனக்கு பசிக்குது. என்ன சாப்பிட வச்சுருக்கீங்க”

“வா வா தங்கம் உனக்காகவே சீடை, அதிரசம் எல்லாம் செஞ்சு வச்சுருக்கேனல்லோ. நீதேன் இந்த பக்கம் ஆளையே காணோம்”

“பெரியம்மா. ஏற்கனவே திங்கிறதுக்காகவே இங்க வர்றா அவ. இதில நீங்க ஸ்பெசலா வேற செஞ்சு வச்சுருக்கீங்களா” என்றாள் கௌரி 

“நீ போய் வேற வேலை இருந்தா பாரு கௌ. அத்தை. இந்த ட்ரடிஷனல் பலகாரமெல்லாம் நீங்க செஞ்சாதான் சூப்பரா இருக்கு. எங்க அம்மா செஞ்சா நல்லாருக்க மாட்டேங்குது” என்று சாப்பிட்டாள் சந்தியா.

“நா போய் மருதாணி பறிச்சிட்டு வரேன் பெரியம்மா” என்று கௌரியும் தோட்டத்து பக்கம் சென்றாள்

சாப்பிட்டு முடித்த சந்தியாவிடம் சிவகாமி கேட்டார் “எப்படி கண்ணு உன்ன வண்டில உட்கார சொன்னான் என்ற மகன்” என்று கேட்டார்.

அதற்கு சந்தியா “அது ஒண்ணுமில்ல அத்தை. நா வண்டி ரிப்பேர்ன்னு அரவிந்த் சாரோட கார்ல ஏற போனேன். அது பொறுக்காமத்தான் உங்க மகன் என்ன அவர் வண்டில ஏத்துனார்” 

“அதான பாத்தேன். போட்டிக்குதேன் இப்படி பண்ணானா. ஆனா நீதேன் கண்ணு அவனை கொஞ்சம் அவன் கூட்ட விட்டு  வெளில வர வைக்கிற. இடையில நெம்ப பொக்குன்னு போய்ட்டான் என்ற புள்ள” என்றவர் அவளிடம் டீயை கொடுத்து ஆதியிடம் கொடுத்து வர சொன்னார்.

டீயுடன் ஆதியை தேடி மாடிக்கு சென்றாள் சந்தியா. மைல்டு எல்லோ கலரில் மேக்ஸி கவுன் அணிந்திருந்தாள். நெற்றிக்கு மேலே வலதுபக்கம் மட்டும் சிறிதளவு முடியை எடுத்து சுருட்டி டிக் டாக் பின் போட்டிருந்தாள் குழந்தைகள் போட்டு கொள்வது போல. மிக அழகாக இருந்தாள்.

பால்கனியில் அமர்ந்திருந்த ஆதி இவளை நிமிர்ந்து பார்த்தவன் ஒரு நொடிக்கும் அதிகமாக அவளை பார்த்துவிட்டு பிறகு மீண்டும் கையிலிருந்த புக்கை பார்க்க ஆரம்பித்து விட்டான். 

அவனை பார்த்து உதட்டை பிதுக்கியவள் டீயை அங்கிருந்த டீபாயில் வைத்துவிட்டு திரும்பினாள்.

“நில்லு” என்று அவன் குரல் கேட்டும் நிக்காமல் சென்றாள்

பிறகு “சந்தியா உன்னத்தான் கூப்பிடறேன்” என அவன் அழைத்ததும்தான் திரும்பி அவன் எதிரில் வந்து நின்றாள்.

“வசந்த என்ன சொல்லி எக்ஸாம்க்கு ஒத்துக்க வச்ச”

“கௌரியை பொண்ணு கேக்கும் போது கவர்ன்மென்ட் வேலையில இருந்தா எங்க அத்தைய அதாவது உங்க சித்திய கன்வின்ஸ் பண்ண ஈஸியா இருக்கும்ன்னு, நீங்க நினைக்கிறீங்கன்னு சொன்னேன்” என்றதும் ஆதியின் விழிகள் வியப்பில் விரிந்தன.

 “என்னை பார்த்து ஒரு ரெண்டு மாசம் இருக்குமா நீ. அதுக்குள்ள நா என்ன எப்படி யோசிப்பேன்னு எப்படி தெரிஞ்சிகிட்ட” என்று அவள் கண்களை பார்த்து ஆழ்ந்த குரலில் கேட்டான்.

இந்த ரெண்டு மாசமா படிப்பை பார்ட் டைமா வச்சிக்கிட்டு , உங்கள பத்தி யோசிக்கிறததான ஃபுல் டைம் ஜாபா வச்சிருக்கேன் என்று மனதுக்குள் நினைத்தவள், வெளியில் “தெரியும்…” என்றாள் அவன் கண்களில் விழுந்து கொண்டே.

இருவரும் எவ்வளவு நேரம் ஒருவர் பார்வையை ஒருவர் கவ்வி கொண்டு, அந்த மோன நிலையில் இருந்தார்கள் என்று தெரியவில்லை. 

கீழிருந்து கௌரி “சந்தியா ” என்று அழைத்ததும்தான் இருவரும் நினைவுக்கு திரும்பினார்கள்.

மேலிருந்த எட்டி பார்த்த சந்தியாவிடம் “கிளம்பலாமா” என்றாள் கௌரி.

“வரேன் கௌரி” என்ற சந்தியா ஆதியை பார்த்தாள். அவன் புக்கில் பார்வையை பதித்திருந்தான்.

சரியென்று கிளம்பிய சந்தியா திடீரென “ஆமா எனக்கு மஞ்ச மொளகாய்ன்னு பேர் வச்சிருக்கீங்களாம். என்ன பாத்தா அப்படியா தெரியுது” என்று கேட்டாள்.

அவளை நிமிர்ந்து பார்த்தவன் “போய் கண்ணாடில பாரு, அதும் இந்த ட்ரெஸ்ல அப்படியேத்தான் இருக்கே” 

தன்னை ஒருமுறை குனிந்து பார்த்தவள் “ப்ச். இருந்தாலும் ஏதாவது ஸ்வீட்டா பேர் வச்சிருக்கலாம்” என்று சொல்லிக்கொண்டே அவனை பார்த்தாள்.

அவன் கண்டுகொள்ளவில்லை என்றதும் கடுப்பாகி திரும்பி நடந்தாள்.

அவளுக்கு பின்னால் அவளை பார்த்து அழகாக சிரித்து கொண்டிருந்தான் ஆதி.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!