Skip to content
Post Views: 7,463
அத்தியாயம் 11:
கௌரியின் பிறந்த நாள் அடுத்த வாரம் வருவதால், டிரஸ் எடுக்க காலேஜ் முடிந்து அப்படியே நேராக கடைக்கு சென்றார்கள் கௌரியும், சந்தியாவும்.
ஸ்கூட்டியை ஓட்டி கொண்டிருந்த சந்தியா “எந்த கடைக்கு போகணும் கௌ” என்றாள்.
“பூனம் டெக்ஸ்டைல்ஸ் சந்தியா”
Advertisement
“என்ன அரவிந்த் கடைக்கா. உங்கண்ணா ஒன்னும் சொல்ல மாட்டாரா”
“அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாங். எப்போதும் இங்கதான் எடுப்பேன். ஆனா இத்தன வருஷம் துணைக்கு அருண் வருவான். இன்னைக்கு தலைவலிக்குதுன்னு அருண் வரலன்னு சொல்லிட்டான். சரி அதான் இந்த வருஷம் நீ இருக்கியே. உன்னோடவே போய்க்கிறேன்னு சொல்லிட்டேன் அவன்கிட்ட” என்று பேசிக்கொண்டே கடைக்கு வந்து விட்டார்கள்.
கடையை பார்வையிட்டாள் சந்தியா. நான்கு மாடி கட்டிடம். பாத்திரம் மளிகை பொருட்கள், துணி மணிகள், கடைசி பிளோரில் குழந்தைகளுக்கான ஃபன் செக்ஸன் இருந்தது.
Advertisement
“நல்ல பெரிய ஷாப்பாத்தான் இருக்கு, எல்லாம் இங்கயே கிடைச்சுடும் போல”
Advertisement
“ம். அரவிந்த் அண்ணா பிஸினஸ்க்கு வந்த பிறகு நல்லா டெவலப் பண்ணிட்டார்” என்று பேசிக்கொண்டே உள்ளே சென்றார்கள்.
“என்ன டிரஸ் எடுக்க போற கௌரி”
“என்ன பெருசா எடுக்க போறேன். இங்கயெல்லாம் சுடிதார் இல்லன்னா சேரிதான். உன்ன மாதிரில்லாம் டிரஸ் எடுக்க முடியாது “
Advertisement
“என்ன கௌ அலுத்துக்கற. நா என்னமோ பெருசா அல்ட்ரா மாடர்னா ட்ரெஸ் பண்ற மாதிரி சொல்ற. இங்க வந்த பிறகு ஜீன்ஸ் டீசர்ட் கூட போட்றத விட்டுட்டேன். பிராக்லாம் ஃபுல் லென்த் போடறேன். சரி அத விடு. உனக்கு என்ன டிரஸ் வேணுன்னு மட்டும் சொல்லு. நா வாங்கி தரேன். அத்தைட்ட நா பேசிக்கிறேன்”
“அம்மா தாயே அத்தைட்ட பேசுவ. எங்க ஆதி அண்ணாட்ட யார் பேசறது”
“ஏன் அவர் திட்டுவாரா. வேணுன்னா அவர்ட்டயும் நானே பேசறேன்”
“வேணா சந்தியா. அண்ணா திட்ட வேண்டாம். இந்த ட்ரெஸ் போட்டா திட்டுவாங்களோன்னு நினைக்கிறபடியான ட்ரெஸ் கூட நா போட மாட்டேன். அப்படி ஏதும் சொல்லிட்டா என்னால தாங்க முடியாது. அதும் இல்லாம நீ போட்டு பழகிட்ட. எந்த ட்ரெஸ்ஸும் உனக்கு சூட் ஆகுது. இதெல்லாம் இப்ப நா புதுசா போட்டன்னா எனக்கு நல்லாருக்காது”
“என்னமோ சொல்ற போ” என்று சுடிதார், குர்தி பார்க்க போனார்கள்.
அப்பொழுது அங்கு வந்தான் அரவிந்த் “உள்ள வரும்போதே கடை பிரகாசமா இருக்கே. இது என் கடைதானான்னு யோசிச்சுட்டு வந்தேன். அப்புறம்தான் தெரியுது. தேவதைங்கள்லாம் கடைக்கு வந்துருக்காங்கன்னு” என்று சொல்லிக்கொண்டே வந்தவனை பார்த்து
“அண்ணா உங்களுக்கு இப்படிலாம் பேச தெரியுமாங்” என்று கலகலவென சிரித்தாள் கௌரி.
சந்தியா மட்டும் வழக்கம் போல் அவனை ஆராய்ச்சியாக பார்த்தாள்.
“என்ன கௌரி. தனியா வந்துருக்க. உங்கண்ணன் விட மாட்டானே”
“ஹலோ சார். இவ்ளோ பெரிய ஆள் நா அவளோட வந்துருக்கேன். தனியா வந்துருக்கான்னு சொல்றீங்க” என்றாள் சந்தியா.
“உங்களுக்கு ஆதித்யன பத்தி சரியா தெரியல மேடம். ஏன் கௌரி. நீங்க ரெண்டு பேர் மட்டும் என் கடைக்கு வர்றது உங்கண்ணனுக்கு தெரியுமா”
“அண்ணனுக்கு தெரியாதுங்ண்ணா. ஆனா அருணுக்கு தெரியும். அவன கூப்டதுக்குத்தான், அதான் சந்தியா இருக்காளே போயிட்டு வாங்கன்னு சொல்லிட்டான்”
“ஓ” என்றவன் சந்தியாவிடம் “என்ன சந்தியா மேடம். ஃபஸ்ட் டைம் என் ஷாப்க்கு வந்துருக்கீங்க. என்ன சாப்டறிங்க” என்றான்.
“அதெல்லாம் எங்க கேன்டீன்லயே சாப்டுட்டுதான் வந்தோம் அரவிந்த் சார்”
“அதெல்லாம் முடியாது. ஏதாவது சாப்ட்டே ஆகணும் என்று கூல் ட்ரிங்க்ஸ் வரவைத்து கொடுத்தான். பிறகு கௌரியிடம் “என்னடா பாக்கிற” என்று கேட்டு அவளோடு சென்று டிரஸ் எடுத்து போட சொன்னான் பணிப்பெண்களிடம்.
முதலாளியே அதும் அழகான முதலாளியே வந்ததால் பணிப்பெண்கள் பரபரப்பாக வேலை செய்தனர்.
கௌரியும் அரவிந்தும் ட்ரெஸ் பார்த்துக்கொண்டிருக்கும்போது சந்தியா கடையை சுற்றி சுற்றி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்.
அப்படி பார்த்தவள் கடையின் வாயிலை பார்த்து வாயை பிளந்தாள்.
ஏனென்றால் ஆதி புல்லட்டிலிருந்து இறங்கி உள்ளே வந்து கொண்டிருந்தான். அதுவும் வேட்டி சட்டை இல்லாமல் பேன்ட் சர்ட்டில் வந்தான்.
லைட் ப்ளூ ஜீன், க்ரீனும் ப்ளூவும் கலந்து காட்டன் ஷர்ட் அணிந்திருந்தான், ஃபுல் ஹேண்ட் ஸ்லீவை பாதியில் மடித்து விட்டு, கையிலிருந்த காப்பை ஏற்றி விட்டு கொண்டே நடந்து வந்தான். முகத்தில் இரண்டு நாட்கள் ஷேவ் பண்ணாத தாடி. படு மேன்லியாக இருந்தான்.
நேராக கௌரியிடம் வந்தவன் “அருண் வரலன்னு சொன்னா, நாளைக்கு வர்றது. இது என்ன தனியா கிளம்பி வர்ற பழக்கம் கௌரி” என்றான்.
“இது என்னடா இது. ஒருத்தனும் என்ன ஒரு ஆளாவே கன்சிடர் பண்ண மாட்றானுங்க” என்று சந்தியா மனதில் புலம்பி கொண்டிருந்தாள்.
“இல்லீங்ண்ணா. சந்தியா இருக்காளேன்னுதான் வந்தனுங்க” என்றதும் திரும்பி சந்தியாவை ஒரு பார்வை பார்த்தவன்
“ஆமா. இவ உனக்கு பாடி கார்டா. ஊருக்கு திரும்பி வரும்போது இருட்டிடும். ரெண்டு பேரும் கிளம்பி எப்படி வருவீங்க” என்றவன் “சரி வாய் பாக்காம ட்ரெஸ பாரு. செலக்ட் பண்ணிட்டியா” என்று ட்ரெஸ்ஸை பாக்க ஆரம்பித்தான்.
அவன் வந்ததும் அரவிந்த் நகர்ந்து சந்தியாவின் பக்கம் வந்தவன் “நா சொல்லல. அவன உனக்கு சரியா தெரியலன்னு” என்று மெதுவாக கூறியவன் பிறகு சத்தமாக “கௌரி இங்க பாக்கட்டும். நீ வா சந்தியா. நம்ம மேல சேரி செக்சன் போகலாம். சில்க் சேரி கலக்சன்ஸ் புதுசா வந்துருக்கு” என்று கூப்பிட்டான்.
சந்தியாவும் “சரி போகலாம் அரவிந்த்” என்று அவனோடு கிளம்பினாள். அதை கடுப்பாக பார்த்து கொண்டு நின்றான் ஆதி.
அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் “என்ன கௌரி. எடுத்துட்டியா” என்றான்.
“அண்ணா இந்த அஞ்சு ட்ரெஸ் எடுத்து வச்சிருக்கேனுங். அதுலேந்து செலக்ட் பண்ணனும். இந்த சந்தியா எங்க போனாளுங்”
“அவ எங்க இங்க நிக்கிறா” என்று கடுப்படித்தவன் “சரி வா நாமளும் மேல சேரி பாக்க போகலாம்” என்று கௌரி வருகிறாளா இல்லையா என்று கூட பார்க்காமல் அவசரமாக கிளம்பி படி ஏறினான்.
அவனை ஆச்சரியமாக பார்த்து கொண்டே பின்னே சென்றாள் கௌரி.
படி ஏறி சென்றவன் பார்த்தது ஒரு சேல்ஸ் பெண் சந்தியாவிற்கு புடவையை கட்டி கொண்டிருந்ததைத்தான். ஆதிக்கு நேர் எதிரே உள்ள கண்ணாடியில் தெரிந்தாள் சந்தியா.
கருஞ்சிவப்பு நிறத்தில் டார்க் பிரௌனில் சிறிய பார்டர் வைத்த பட்டு புடவை. அவ்வளவு அழகாக பொருந்தியது அவளுக்கு.
கண்ணாடியில் அவளை வெறித்து பார்த்து கொண்டிருந்த ஆதியை பார்த்து விட்டாள் சந்தியா. இருவர் கண்களும் கண்ணாடிக்குள் சந்தித்தது.
நின்று கொண்டிருந்த ஆதியை தாண்டி சந்தியாவின் பக்கத்தில் சென்ற கௌரி “சூப்பரா இருக்கு சந்தியா இந்த சேரி உனக்கு” என்றதும் சந்தியாவின் கவனம் கௌரியிடம் சென்றது.
“கௌரி. சேரி கலக்சன்ஸ் உண்மையிலே நல்லா இருக்கு. நீயும் பாரு” என்றாள்.
சந்தியா பார்வையை விலக்கியதும் ஆதி அடுத்து பார்த்தது பேன்ட் பாக்கெட்டில் கைவிட்டு கொண்டு சந்தியாவை ரசனையாக பார்த்து கொண்டிருந்த அரவிந்தைதான்.
பெண்கள் இருவரும் புடவைகளின் பக்கம் நகர்ந்ததும் அரவிந்தும் திரும்பி ஆதியை பார்த்தான்.
இருவரும் ஒருவரையொருவர் கடுப்பாக பார்த்தார்கள்.
வேறு புடவையை பார்த்து கொண்டிருந்த சந்தியாவிடம் சேல்ஸ் பெண் “இந்த புடவையை பேக் பண்ணிடவா மேடம்” என்று கேட்டாள்.
“அச்சோ வேண்டாங்க. நா சும்மா அழகா இருக்கேன்னு வச்சு பாத்தேன்” என்றதும் கௌரி “ஏய் உனக்கு அந்த சேரி அட்டகாசமா இருந்தது டி. எடுத்துக்க”
“வேண்டாம் கௌரி. புடவையெல்லாம் எடுத்து வேஸ்ட்டாதான் பீரோல இருக்கும். அந்த விலைக்கு நாலு சுடிதார் எடுத்தா காலெஜுக்காது போடலாம்” என்றதும் அவளின் பக்கம் நின்ற அரவிந்த்
“ஹே சந்தியா. ஃபஸ்ட் டைம் என் கடைக்கு வந்துருக்க. அந்த சேரி என்னோட கிப்ட் உனக்கு” என்றான்.
அதற்கு சந்தியா பதில் சொல்வதற்குள் ஆதி “அவ எங்க வீட்டு பொண்ணு. அவளுக்கு யாரும் புடவைல்லாம் ஃபிரீயா கொடுக்க முடியாது” என்றான்
அரவிந்த் “அவ என் பிரென்ட். என் கடைக்கு வந்துருக்கா. அவ முதல் முதலா வாங்குற ட்ரஸ்க்கு நா பணம் வாங்க மாட்டேன்” என்றான்.
ஆதி “அவ என் கூட கடைக்கு வந்துருக்கா. அவ என்ன வாங்குனாலும் நாந்தான் பே பண்ணுவேன்” என்றான்.
அரவிந்த் “பில் போட்டாத்தான பே பண்ண முடியும்” என்றான்
ஆதி “பில் போடலன்னா நாங்க எடுக்கவே மாட்டோம்” என்றான்.
இருவரையும் கடுப்பாக பார்த்து கொண்டிருந்த சந்தியா “ஸ்டாப் இட். ரெண்டு பேரும் வாய மூடுங்க. இன்னைக்கு எடுக்கிற எல்லா ட்ரஸ்க்கும் நான்தான் பே பண்ண போறேன்” என்றாள்.
“அது எப்படி” என்று ஆதி அரவிந்த் இருவரும் ஒன்றாக ஆரம்பித்தார்கள்.
“இப்ப ரெண்டு பேரும் அமைதியா இல்லன்னா, நாங்க ஒண்ணுமே எடுக்க மாட்டோம். இப்படியே கிளம்பிடுவோம்” என்றாள்.
அதற்கு பிறகு இருவரும் அமைதியானார்கள். ஆனால் ஒருவரையொருவர் முறைத்து கொண்டு நிற்க மட்டும் மறக்கவில்லை.
கௌரிக்கும் ஒரு புடவையை எடுத்து கொண்டவர்கள் அங்கிருந்து சுடிதார் செக்சன் போனார்கள்.
சந்தியாவும் கௌரியும் நகர்ந்ததும் அரவிந்த் ஆதியிடம் “என்னோட கடைக்கெல்லாம் வந்துருக்க” என்றான்.
அதற்கு ஆதி “ஊருக்கு நடுவுல கடை வச்சா யார் வேணாலும் வருவாங்க” என்றான்.
“இத நான் நம்பணுமா. சந்தியா என் கடைக்கு வந்துருக்கான்னு பயந்துகிட்டு தான பின்னாடியே வந்துருக்க”
“என்ன பயமா . எனக்கா. என்னத்துக்கு?”
“ஆமா. அழகா இருக்க உன்னோட முறை பொண்ண, எங்க நா கரெக்ட் பண்ணிடுவேன்னு பயந்துதான இன்னைக்கு இங்க வந்துருக்க. அன்னைக்கும் என்னோட கார்ல வந்துடுவான்னுதான புல்லட்ல பொண்ணுங்களையே ஏத்தாத நீ , அவளை மட்டும் ஏத்திட்டு போன”
“என்ன நீ கரெக்ட் பண்ணுவியா. சந்தியாவையா? முடிஞ்சா ட்ரை பண்ணு” என்று சொல்லிவிட்டு கிளம்ப போனான் ஆதி.
ஆதியின் கான்பிடன்ட்டை பார்த்த அரவிந்திற்கு நிதானம் தவறியது “ஆதி நில்லு” என்றுவிட்டு அவன் அருகில் சென்ற அரவிந்த் “எல்லாத்துலயும் நீ ஃபஸ்ட் இல்ல. ஆனா இப்ப நீ கல்யாணம் பண்ணா உனக்கு ரெண்டாம் கல்யாணம். அதேமாதிரி உன்ன யார் கல்யாணம் பண்ணிக்கிறாங்களோ அவங்களையும் ரெண்டாவது பொண்டாட்டின்னு தான சொல்லுவாங்க” என்றதும் ஆதிக்கு கண் நரம்புகள் எல்லாம் சிவந்தது.
அவன் கோபத்தை பார்த்த அரவிந்த் நக்கலாக சிரித்தான். அதை பார்த்த ஆதி சிறிது சிறிதாக அமைதியாகி ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து சென்றான்.
கீழே பில் பே பண்ணி கொண்டிருந்த சந்தியாவிடம் கௌரி கேட்டாள் “இங்க என்னடி நடக்குது”
“என்ன என்ன நடக்குது”
“எப்போதும் ஏதாவது காரணத்துக்காக சண்டை போடுவாங், இப்ப உனக்காக சண்டை போட்ற மாதிரி தெரியுது”
“எனக்காகல்லாம் இல்ல கௌ. ப்ரஸ்டீஜ்க்காக இருக்கும்”
“ம்ஹும், அரவிந்த் அண்ணா எப்போதும் இப்படித்தான். ஆனா ஆதி அண்ணா சரி கிடையாது. அரவிந்த் அண்ணா கடைக்கு எனக்கு தெரிஞ்சு வந்ததே இல்ல ஆதி அண்ணா. இன்னைக்கு வந்ததே வித்தியாசம்தான்”
“அட என்ன கௌ. நீ எதோ ஆராய்ச்சில்லாம் பண்ணிக்கிட்ருக்க”
“உண்மையா சொல்லு. ஒன்னும் வித்தியாசமா இல்லையா” என்று கௌரி கேட்டு கொண்டிருக்கும் போதே அங்கு வந்த ஆதி சந்தியாவிடம் பில்லை கேட்டு வாங்கினான்.
பேண்டிலிருந்து பர்ஸை எடுத்தவன் கௌரிக்கு வாங்கிய துணிகளுக்கான பணத்தை மட்டும் எடுத்து சந்தியாவிடம் கொடுத்தான்.
“என்ன இது” என்றாள் சந்தியா.
“கௌரி ட்ரஸ்க்கு பணம்”
“ஓ. ஏன் நா அவளுக்கு வாங்கி கொடுக்க கூடாதா”
“நீ வேணுன்னா வேற வாங்கி கொடு. இது எப்போதும் அவளுக்கு நா வாங்கி தரது”
“சரி, ஆனா கௌரிக்கு மட்டும் தானா. எனக்கு கிடையாதா”
“அதான் உனக்கு நீ பே பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டியே”
“அப்ப கௌரிக்கும் சேத்து தான் சொன்னேன். இப்ப வந்து கௌரிக்கு மட்டும் பணம் தரீங்க. அங்க அரவிந்த்ட்ட மட்டும் எங்க வீட்டு பொண்ணுன்னு வீர வசனம்லாம் பேசுனீங்க. இப்ப மட்டும் நா வேற வீட்டு பொண்ணாயிட்டேனா”
“ப்ச் இப்ப உனக்கு என்ன பிரச்சனை. உனக்கு புடவை வாங்கி கொடுக்கத்தான் நிறைய பேர் இருக்காங்களே. நா ஏன் வாங்கி கொடுக்கணும்” என்று வள்ளென்று விழுந்தான் ஆதி
அதற்கு பிறகு ஒன்றும் பேசாமல் அங்கிருந்து சென்றாள் சந்தியா. இதுவரை இருவரையும் அமைதியாக வேடிக்கை பார்த்த கௌரி ஒன்றும் பேசாமல் சந்தியாவின் பின் சென்றாள்.
வேகமாக செல்லும் சந்தியாவை பார்த்து கொண்டிருந்த ஆதி முடியை கோதி கொண்டு சிறிது நேரம் நின்றான். பிறகு ஒரு பெருமூச்சை வெளியிட்டவன் அங்கிருந்து சென்றான்.
error: Content is protected !!