Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அவளின் ஆதியானவன்

அவளின் ஆதியானவன் – 15

அத்தியாயம் 15:

ஞாயிறு காலை சந்தியாவிற்கு கால் செய்தான் ஸ்ரீதர். பயந்து கொண்டேதான் போனை எடுத்தாள்.

“ஹலோ”

“ஹலோ சந்தியா. எங்க இருக்க”



Advertisement

“வீட்லதான் இருக்கேன் ஸ்ரீதர்”

“என்ன வீட்லதான் இருக்கியா. இப்பவே அம்மா மூணு டைம் கேட்டுட்டாங்க. எங்க சந்தியா வரலையான்னு”

“ஈவ்னிங்தான பங்க்சன் சொன்னாங்க ஸ்ரீதர்”

Advertisement

“அதுக்காக நீயும் ஈவினிங்தான் கிளம்பி வருவியா. நா போய் நேர்லயே கூப்ட்ருக்கேன். இன்னும் யாரும் வரல பாருன்னு அம்மா புலம்பிட்ருக்காங்க”

Advertisement

“ஆன்ட்டி நேர்ல வந்தாங்க . ஆனா பங்க்சனுக்கு வாங்கன்னு கூப்பிடவே இல்லையாம். நாங்க வந்தா அவங்களுக்குத்தான் பிரச்சனைன்ற மாதிரி வேற எதோ” என்று சந்தியா சொல்லி முடிப்பதிற்குள்ளாகவே 

“ஸ்டாப் இட் சந்தியா. பங்க்சனுக்கு வராம இருக்கத்துக்கு எம் மேலயே எதாவது பழி போடுவாங்க பாருன்னு, இப்பதான் அம்மா சொல்லிட்ருந்தாங்க. நீயும் அதே மாதிரி சொல்ற. நா உன் பின்னாடியே வந்து திரும்ப திரும்ப கல்யாணம் பண்ணிக்க கேட்டதால உனக்கு என்னையும் என் குடும்பத்தையும் பார்த்தா இளக்காரமா இருக்கா. இல்ல எங்கம்மா சொல்ற மாதிரி இப்படி குறை சொல்றது உங்க மிடில் க்ளாஸ் புத்தியா” என்றதும்  ஒன்றும் சொல்லாமல் கால் கட் பண்ணிவிட்டாள் சந்தியா.

சிறிது நேரத்தில் கிளம்பி ஸ்ரீதரின் வீட்டிற்கு சென்றாள் . அந்த வீட்டிற்கு இரண்டு மூன்று முறை இதற்கு முன் வந்திருக்கிறாள். ஹாலில் டெக்கரேஷன் வேலை நடந்து கொண்டிருந்தது. வீட்டில் வேலையாட்கள் மட்டுமே இருந்தனர். வீட்டு ஆட்கள் அனைவரும் கோவிலுக்கு சென்றிருந்தனர். நல்ல வேளையாக வேலையாட்களுக்கு இவளை தெரிந்திருந்த காரணத்தினால் உள்ளே சென்று அமர்ந்திருந்தாள்.

Advertisement

மொபைல் பார்த்து கொண்டிருந்த சந்தியாவிற்கு  சிறிது நேரத்தில் ரெஸ்ட் ரூம் செல்ல வேண்டிய கட்டாயம். அவளுக்கு பீரியட் வரவேண்டிய நேரமாதலால் சந்தேகமாக இருந்தது. அதனால்தான் இன்று வர வேண்டாம் என்று நினைத்திருந்தாள். எங்கே விடுகிறார்கள். இப்படியே வாழ்க்கை அடுத்தவர் விருப்பத்திலேயே சென்று விடுமோ என்று பயமாக இருந்தது. ஆட்கள் எல்லோரும் பிஸியாக இருந்ததால், இவளே பக்கத்தில் இருந்த ரூமிற்க்கு ஹேண்ட் பேகை எடுத்து கொண்டு சென்றாள்.

அவள் சந்தேகம் சரியாகவே இருந்தது. ஸ்ரீதர் வந்தால் சொல்லிவிட்டு கிளம்பி விட வேண்டும் என்ற முடிவோடு அமர்ந்திருந்தாள். அதே போல் சிறிது நேரத்தில் ஸ்ரீதரும் வந்தவன் சந்தியாவை பார்த்து சிரிப்பில்லாமல் தலையை மட்டும் வரவேற்கும் விதமாக ஆட்டிவிட்டு அவளின் எதிர் இருக்கையில் அமர்ந்தான்.

சந்தியாதான் அவனிடம் “ஏன் ஸ்ரீதர் காலைல அப்படி பேசினீங்க” என்றாள்.

“நீ ஏன் எங்க அம்மாவை பத்தி அப்படி சொன்ன”

“சரி நா சொன்னது தப்புதான். ஆனா இப்படி யாரும் இல்லாத வீட்டுக்கா காலைலயே என்ன வரலன்னு சொன்னீங்க”

அவளை முறைத்து பார்த்தவன், ஆட்கள் இடையில் சென்று வந்து கொண்டிருந்ததால் “மேல வா. அங்க போய் பேசலாம்” என்று விட்டு மாடிக்கு சென்றான்.

அவன் பின்னோடு சென்ற சந்தியா “ஸ்ரீதர் எனக்கு அவசரமா இப்ப வீட்டுக்கு போகணும்” என்று கூறியதை காதில் வாங்காமல் அவன் அறைக்கு சென்றவன், 

அவளை திரும்பி பார்த்து “என்ன சொன்ன. யாரும் இல்லாத வீட்டுக்கு வர சொன்னேனா. நீ காலைலயே வந்திருந்தீன்னா எல்லாரும் சேந்து கோயில் போயிருக்கலாம். நா கூப்பிட்டதும் வந்துட்டு இப்ப என்னன்னா உடனே வீட்டுக்கு போகனுன்னு சொல்ற. எங்க அம்மா அப்பாவை இன்னும் பாக்க கூட இல்ல நீ. இவ்ளோ தூரம் வந்துட்டு அவங்கள பாக்காம போனீன்னா எங்க அம்மா என்ன நினைப்பாங்க”

“இவ்ளோ  பேசற உங்களுக்கு உங்க அம்மா எப்போதுமே எங்க குடும்பத்தை மட்டமாதான் பேசறாங்கங்கிறது தெரியாதா. அதை பத்தி காலைல உங்கட்ட சொன்னா என்னமோ மிடில் கிளாஸ் புத்திங்கறீங்க. அது என்ன க்ளாஸ். எனக்கு புரியல. யாரு அடுத்தவங்க மனச நோகடிக்காம அழகா பேசறாங்களோ அவங்கதான் என்ன பொறுத்த வரைக்கும் ஹை கிளாஸ். அப்படி பாத்தா உங்கம்மா படு லோ க்ளாஸ்” என்றதும் 

“சந்தியா” என்று கடுங்கோவமாக கர்ஜித்தான் ஸ்ரீதர்.

அதற்குள் கீழே எதோ சல சலப்பு கேட்டது. ஒரு வேலையாள் வந்து “கீழ உங்கள அம்மா கூப்புட்றாங்கய்யா” என்று சொல்லிவிட்டு சென்றான்.

கோவத்தை கட்டு படுத்தி கொண்ட ஸ்ரீதர் கீழே அவசரமாக இறங்கினான். அவன் பின்னோடு இறங்கிய சந்தியா கீழே தாத்தா, பாட்டி, கல்பனா, சோபனா, அவளின் கணவன் நிஷாந்த், நிவி அனைவரும் இவளை வித்தியாசமாக பார்ப்பதை பார்த்து கொண்டே இறங்கினாள்.

சந்தியா படியிலிருந்து இறங்குவதற்குள்ளாகவே அவள் கையிலிருந்த ஹேண்ட் பேகை வெடுக்கென்று பிடுங்கி திறந்தார் கல்பனா.

அம்மா, கல்பனா என்று கலவையான குரல்கள் கேட்டது. ஆனால் அதற்குள் சந்தியாவின் பேகிலிருந்து ஒரு ஜ்வெல் பாக்சை வெளியில் எடுத்த கல்பனா சந்தியாவை பார்த்து “இது யாரோடது” என்று கோவமாக கேட்டார்.

நகை பெட்டியை ஆச்சரியமாக பார்த்த சந்தியா பிறகு கல்பனாவிடம் “தெரியல ஆன்ட்டி, இது எப்படி என்னோட பேக்ல” என்று யோசித்தாள்.

கல்பனா “ஆகா என்ன நடிப்பு. என்னோட ரூமுக்கு போய் இத திருடிட்டு வந்ததும் இல்லாம என்னட்டையே கேள்வி வேற கேக்குறியா”

சந்தியாவிற்கு ஒன்றும் புரியவில்லை. எல்லோர் முகங்களையும் மாறி மாறி பார்த்தாள்

“என்ன கேள்வி கேட்டா பதில் சொல்லாம முழிச்சிட்டு நிக்கிற” என்ற கல்பனாவிடம் “அம்மா இங்க என்ன நடக்குது” என்று கத்தினான் ஸ்ரீதர்.

“காலைல கோயில் போறதுக்கு முன்னாடி இந்த நெக்லசை போட்டு பாத்துட்டு ட்ரெஸ்ஸிங் டேபிள்ல வச்சிட்டு போயிருந்தேன் ஸ்ரீதர். இப்ப வந்து பாத்தா நகைய காணல. சரி வேலையாளுங்க யாராவது ரூம்க்கு போனாங்களான்னு பாக்கலாம் அத்தைன்னு கேமரா செக் பண்ணா நிவி. அதுல இந்த சந்தியா மட்டும் தான் என் ரூம்குள்ள பேகோட போயிட்டு வெளில வந்துருக்கா. சரி நானே சந்தேகமாத்தான் இவ பேகை புடுங்கி பாத்தா நகை அவ பேக்ல இருக்கு” என்றதும் 

இவ்வளவு நேரம் குழப்பத்தில் இருந்த சந்தியா நிவியை திரும்பி பார்த்தாள். அவளும் சந்தியாவை ஒரு நொடி பார்த்துவிட்டு தலையை திருப்பி கொண்டாள். 

அதற்குள் ஸ்ரீதர் நிவியிடம் விடியோவை கேட்டான். அதில் சந்தியா மட்டும் ஹேண்ட் பேகை எடுத்து கொண்டு அவசரமாக ரூமுக்குள் செல்வதும், திரும்பவும் சிறிது நேரம் கழித்து வெளியில் வருவதும் பதிவாகியிருந்தது. இடையில் யாரும் ரூமிற்க்கு சென்ற மாதிரி தெரியவே இல்லை. ஆனால் அங்கு இருந்தது ரொடேடிங் கேமரா. அது திரும்பும் நேரத்தில் கூட யாராவது உள்ளே  சென்று வந்திருக்கலாம் என்று யோசித்தாள் சந்தியா.

அதற்குள் ஸ்ரீதர் “என்ன சந்தியா இதெல்லாம்” என்று கேட்டான்.

“எனக்கு இந்த நெக் செட் எப்படி என் பேக்ல வந்ததுன்னு தெரியாது ஸ்ரீதர்”

“உனக்கு தெரியாம எப்படிடி வந்துருக்கும். யாரும் இல்லன்னு ரூம்குள்ள போயிட்டு வைர நகைய பாத்தோன்ன திருடிட்டு வந்துட்ட” என்றார் கல்பனா.

அதற்குள் மங்கை பாட்டி “கல்பனா. உன் நகைதான் கிடைச்சிட்டுல்ல. பிறகு ஏன் அனாவசியமா பேசற. நீ வீட்டுக்கு கிளம்பு சந்தியா” என்றார்.

“அது எப்படி. இந்த விஷயத்துக்கு முடிவு தெரியாம கிளம்ப சொல்வீங்க. அதுக்குதான் அடிச்சிக்கிட்டேன். மிடில் கிளாஸ் வேண்டாம்ன்னு. வைரத்தையே கண்ணால பாக்காதவள வீட்டுக்குள்ள கொண்டுவந்து விட்டீங்கன்னா, அவ புத்திய காட்டிட்டா பாரு. இந்த நகை பணத்துக்கு ஆசைப்பட்டுதான் புடிக்கலைன்னாலும் என் பையன கட்டிக்க தலையாட்டிருக்கா” என்றதும் ஸ்ரீதரும் சரியாக

“ஏன் இப்படி பண்ண சந்தியா. எவ்ளோ நிமிர்வா நடந்துப்ப, பேசுவ. எல்லாம் நடிப்புதானா. நீ இப்புடி நடந்துக்கிட்டு எங்கம்மாவ போய் லோ க்ளாஸ்ன்னு சொல்றியே, உனக்கு வெக்கமா இல்லையா” என்றான்.

சந்தியாவிற்கு ஸ்ரீதரை பார்த்து ஆச்சரியம் தான். ஒரு கம்பெனியை நடத்துபவன் இவ்வளவு முட்டாளாக இருக்கிறானே என்று.

“ஸ்ரீதர், நான்தான் இந்த நகையை எடுத்துருப்பேன்னு எப்படி உறுதியா நம்பறீங்க”

கல்பனா “நீ எடுக்கலன்னா ஏண்டி என் ரூம்குள்ள போன” என்றார்.

“நா ரெஸ்ட் ரூம் யூஸ் பண்ண போனேன் ஆன்ட்டி”

“அதுக்கு எதுக்கு ஹேண்ட் பேகோட போன. அதோட இல்லாம நா வீட்டுக்கு வந்ததும் எதுக்கு உடனே கிளம்பணும்ன்னு சொன்ன” என்று கேட்டது ஸ்ரீதர்.

எல்லோரையும் நிமிர்ந்து பார்த்த சந்தியா ஸ்ரீதரிடம் “நீங்க தனியா வாங்க ஸ்ரீதர். உங்களுக்கு நா எல்லாத்தையும் எல்லாரையும் புரிய வைக்கிறேன்” என்றதும் கல்பனா ஆவேசம் வந்தவரை போல் “என்னடி புரிய வைப்ப. தனியா கூட்டிட்டு போய், இத்தனை வருஷம் என் புள்ளைய மயக்கி வச்சிருந்த மாதிரி மயக்கலாம்னு பாக்குறியாடி” என்றதும் , இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த தாத்தா 

“கல்பனா. போதும் நீ பேசினது. சந்தியா அப்படி பொண்ணு கிடையாது. எல்லாரும் இந்த விஷயத்தை மறந்துட்டு வேற வேலைய போய் பாருங்க” என்றார் 

அதற்கு சோபனாவின் கணவன் நிஷாந்த் “அது எப்படி தாத்தா. இன்னும் அவங்கதான் நகைய எடுக்கலன்னு உறுதியாகல. வீட்டுக்கு வர பொண்ணு இப்படி இருந்தா எந்த நம்பிக்கையில எல்லாரும் இந்த வீட்ல நிம்மதியாயிருக்க முடியும்” என்றான்.

“ஏங்க, நீங்க அமைதியாருங்க. சந்தியா அப்படி கிடையாது. இதுல வேற ஏதோ விஷயம் இருக்கு” என்றாள் சோபனா.

சந்தியா ஸ்ரீதரிடம் “நல்லா யோசிச்சு பாருங்க ஸ்ரீதர். மூணு வருசமா என்ன பாக்குறீங்க. நா இப்படி செஞ்சிருப்பேனா” என்றாள்.

ஸ்ரீதர் யோசிக்க ஆரம்பிப்பதற்குள் நிவி “நீ எதுக்கு எங்க அத்தைய லோ கிளாஸ்ன்னு சொன்ன” என்றாள்.

அவ்வளவுதான் ஸ்ரீதர் யோசிக்கவே இல்லை. 

“நீ எங்கம்மாட்ட மன்னிப்பு கேளு சந்தியா எல்லாத்துக்கும். ஒன்னும் பிரச்சினையில்ல. நிச்சயம் வரை வந்துட்டு என்னால கல்யாணத்த நிறுத்த முடியாது. உன்ன இவ்ளோ நாள் என் மனைவியா நினைச்சிட்டு அத மாத்திக்கிறதும் கஷ்டம். நீ என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டா இந்த வைரம், ஸ்டேட்டஸ்லாம் உனக்கு தானா வந்துடும். இத மாதிரி அடுத்தவங்க நகையை எடுக்கணும்ன்னு அவசியம் இருக்காது. இனிமே இத மாதிரி நடந்துக்க மாட்டேன்னு வாக்கு குடு சந்தியா” என்றான்.

அதற்கு பிறகு சந்தியாவும் ஒன்றும் யோசிக்கவே இல்லை. அமைதியாக சென்று அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள். ஒருமுறை தாத்தாவை நிமிர்ந்து பார்த்தாள்.

பிறகு ஸ்ரீதரிடம் தெளிவாக “நான்தான் உங்கம்மா நகைய திருடினேன்னு நினைச்சீங்கன்னா, போலீஸ்ல கம்பளைண்ட் பண்ணிடுங்க. ஆனா இந்த கல்யாணம் வேண்டவே வேண்டாம் எனக்கு. தயவு செய்து நிறுத்திடுங்க சீனியர்” என்றாள்.

அதிர்ந்து போய் அவளை பார்த்தான் ஸ்ரீதர்

“இதுல நினைக்கிறதுக்கு என்ன இருக்கு. அதான் தெளிவா புரியுதே நீதான் திருடினேனு. இப்படி ஒருத்திய என் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்கு எங்களுக்கு என்ன பைத்தியமா. நீ என்ன கல்யாணம் வேண்டான்னு சொல்றது. சனியன் இதோட விட்டதுன்னு தல முழுக வேண்டியதுதான். போலீஸ் ஸ்டேஷன்லாம் ஒன்னும் வேண்டாம். ஏன் எங்க குடும்ப விஷயம் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போய், மானம் போகணுமா” என்றார் கல்பனா.

தாத்தா “அவசர படாத சந்தியாம்மா. இது எடுத்தோம் கவுத்தோம்ன்னு செய்ற விஷயம் இல்லம்மா. உங்கம்மா அப்பாவை யோசிச்சு பாரு” என்றார்.

“இல்ல தாத்தா. இது இப்போ இன்னைக்கு நடந்த விஷயத்துனால மட்டும் எடுத்த முடிவுன்னு நினைக்காதீங்க. கடந்த ரெண்டு மாசமா நடந்ததையும் யோசிச்சுதான் சொல்றேன். இந்த கல்யாணத்துக்கு நா ஒத்துக்கிட்ட ஒரே காரணம் நம்மள நல்லா புரிஞ்சுகிட்ட வாழ்க்கை துணை அமையிறது கஷ்டம். ஸ்ரீதர் இவ்ளோ நாள் நம்மள பாத்துட்ருக்கார். நம்மள நல்லா புரிஞ்சிக்கிட்ருப்பார். வாழ்க்கை நல்லாருக்கும்ன்னு நம்பினேன். அந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமா ஆட்டம் கண்டுட்டு வந்து, இப்ப முழுசா  உடைஞ்சிடுச்சி. அவரு வெறும் வெளி தோற்றத்தை மட்டும் பாத்துட்டு முடிவு பண்ணிருக்கார். சந்தியா அப்படீன்னா யாருன்னு ஒரு பெர்சன்ட் கூட அவருக்கு தெரியல. இது சரி வராது தாத்தா. இந்த கல்யாணம் நடந்தா ரெண்டு பேருக்குமே கஷ்டம். இதோட நிறுத்திடுங்க” என்று தீர்மானமாக கூறினாள்.

இவ்வளவு நடந்தும் பயம் கொள்ளாமல், அதிர்ச்சியடையாமல், அழாமல் தெளிவாக பேசிய பெண்ணை வியந்து பார்த்து கொண்டிருந்தார் தாத்தா. இப்படி ஒரு பெண் மனைவியாக அமைய இருந்தும் இப்படி கெடுத்து கொண்டானே இந்த முட்டாள் பையன் என்று பேரனை பார்த்து வேதனை பட்டார்.

சந்தியா நிவியை பார்த்து “அடிக்கடி எங்களை மிடில் க்ளாஸ்ன்னு சொல்றாங்களே. எப்பொழுதும் அடுத்தவங்கள காயப்படுத்தாம நல்ல வார்த்தைகள பயன்படுத்தறவங்கதான் ஹை கிளாஸ். அப்படி பாத்தா உங்கம்மா பக்கா லோ க்ளாஸ்ன்னு உங்க அத்தான் கிட்ட சொன்னேன் நிவி. போதுமா விளக்கம். அப்புறம் உனக்கு ரொம்ப தேங்க்ஸ்” என்றவள் எல்லோரையும் பார்த்து பொதுவாக “குட் பை” என்று சொல்லி கிளம்பிவிட்டாள்.

அவளுக்கு பின்னால் “யாரை லோ கிளாஸ்ன்னு சொல்ற” என்று கல்பனா எதோ பேசி கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. 

இது எதையும் காதில் வாங்காமல் இன்னமும் அதிர்ச்சியிலிருந்து வெளிவராமல், செல்லும் சந்தியாவை பார்த்து கொண்டிருந்தான் ஸ்ரீதர்.

   

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!