பொன்மணி உதவி கேட்டாலும் தென்றல் செய்யமாட்டாள் என்பதால், “சரி கொடுத்தனுப்பு” என்று சிரிப்போடு சொல்ல, “சரி தென்றல்கிட்டயே கொடுத்து விடறேன்” என்று இணைப்பை துண்டித்தாள் ஏமாற்றத்தோடு.
மதியம் இரண்டு மணிபோல் “அண்ணா…” என்றான் ஆதவன்.
Advertisement
அலுவலகத்தில் அண்ணா என்று அழைப்பது ஆதவன் மட்டுமே ஆதலால், “என்னடா? இன்னைக்கு இங்கையே இருந்துட்டியா?” என்றான் வேலையில் கவனம் வைத்தபடி.
“ஆமாண்ணா, இன்னைக்கு சன்டேதான? என்னை விடுங்க, உங்களுக்கு ஒரு ஆர்டர் வந்துருக்கு. சாப்பிட்டு வேலை செய்யனுமாம்”
“யார் சொன்னது?” என்றான் கடுப்பாக.
சுந்தரம்தான் சொல்லியிருப்பார், அவரின் மருமகன் ராஜ்குமார் செய்த தவறால்தான் இன்று திருனேஷ்வரன் வேலை செய்ய வேண்டியதாக இருக்க, இவர் சொல்லித்தரக் கூடாதா? என்ற சுந்தரம் மீதும் கோபமாக இருந்தான்.
“பெரிய இடம் அண்ணா, உங்களால மறுக்கவே முடியாது” என்றான்.
“இதோ இதை போட்டுத்தான்” என்று அவளின் துப்பட்டாவை உருவி விரித்தான் தரையில்.
“அச்சோ” என்று தவித்தபடி கண்களை சுழல விட, “இங்க யாரும் வரமாட்டாங்க, கேமராவும் இல்ல, உக்காரு உக்காரு” என்று அவசரப்படுத்தினான்.
பிரியாணி, மட்டன் சுக்கா, சாதம் ரசம் என அனைத்தும் எடுத்து வைக்க, “இத்தனை செய்தியா?” என பாராட்டியபடி உண்ண ஆரம்பித்தவன், ரசித்து உண்டான்.
“காலைல சாப்பிடல, அதான், உனக்கு அது போதுமா?”
“சாப்பிடாம எதுக்கு வேலை பார்க்கறிங்க?” என அதட்ட,
மனைவியின் அதட்டலை ரசித்தவன் “நாளைலயிருந்து… இல்லயில்ல, இன்னைக்கு நைட்ல இருந்து அதட்டு, நான் பயந்துப்பேனாம்” என்றான் கண்சிமிட்டியபடி.
“ஹெல்த் பார்த்துக்கனும்ல?”
“எனக்கு நானே என்னை பார்த்து பார்த்து சலிப்பாகிடுச்சு. நீ வந்து பார்த்துக்கோ. இந்த விசயத்துல உன் பேச்சு ஒன்னு கூட தட்டமாட்டேன்” என உறுதியளித்தான் மனைவிக்கு.
“டிரஸ்லாம் நல்லா பண்றிங்க, அதுக்கு மட்டும் டைம் இருக்கு, சாப்பிடத்தான் நேரமில்லையா?” என குறைபட, “அப்படியா? டிரஸ் நல்லா பண்றேனா? என் டிரஸிங் சென்ஸ் உனக்கு பிடிச்சிருக்கா?” என்றான் அவளின் ரசனையான பார்வையில் மகிழ்ந்தபடி.
“என்னதான் அப்படி முடிக்க முடியாத ஒர்க்? நான் எதாவது ஹெல்ப் பண்ணட்டுங்களா?”
“நீ ஒர்க் பண்ற கம்பெனிக்கு தெரிஞ்சா உன் வேலை காலியாகிடும்”
“தெரிஞ்சாதான காலியாகும்? பணம் வாங்கிக்கிட்டுத்தான் துரோகம் பண்ணக்கூடாது, ஒரு இடத்துல வேலை செய்துகிட்டு அடுத்த கம்பெனிக்கு ஹெல்ப் பண்றதும் தப்புதான். ஆனா புருசனுக்காக செய்தா தப்பில்ல, ஸ்வாதி தென்றல்கிட்ட ப்ராஜக்ட் பத்தி கேட்டேன், நீங்க கொன்னே போட்டுடுவிங்கனு சொல்ல மாட்டேனுட்டா”
சிரித்தவன், “நான் பார்த்துக்கிறேன் விடு” என்றான்.
“வேலையை விட்டெல்லாம் தூக்கமாட்டாங்க, அப்படியே தூக்கினாலும் போடானுட்டு இங்க ஜாயின் பண்ணிக்கிறேன்” என்றாள்.
“அடி… இதென்ன நம்ம கம்பெனியா?” என செல்லமாக அதட்ட,
“இல்லதான், ஆனா நீங்க சொன்னா வேலை கொடுப்பாங்கதான?” என்றாள் பெருமையாக.
“அச்சோ… சர்ட்க்குள்ள எதோ இருக்கும் போல” என நெளிந்தபடி அவசரமாக அங்கிருந்த அறைக்குள் செல்ல, பதறியபடி பின்னோடு சென்றவளை இழுத்தணைத்துக்கொண்டான் இறுக்கமாக.
இரவில் வீடியோ அழைப்பில் பேசுவான்தான். ஆனாலும் நான்கு நாள்களாய் கணவனை நேரில் காணாத தவிப்பிலிருந்தாள் பொன்மணி. காலையிலேயே உடமைகளை எடுத்துக்கொண்டு திருனேஷ்வரன் பார்த்திருக்கும் வீட்டிற்கு செல்ல நினைத்தாள்.
இன்று திருனேஷ்வரன் வேலைக்கு செல்வான் என்று தென்றல் மூலம் தெரியவர, இரவு வரை காத்திருக்க வேண்டுமா என்று ஏமாற்றமடைந்த மனது தற்போது திருனேஷ்வரனின் அணைப்பில் கட்டுண்டது.
நான் வரவில்லை என்றால் மதிய உணவும் உண்டிருப்பானோ இல்லையோ… இந்த அணைப்பும் கிடைத்திருக்காது, எத்தனை ஏக்கத்திலிக்கிறான்? என்று நினைத்தவள்,
திருனேஷ்வரன் சொன்னது போல அன்றே அவனின் வீட்டிற்கு சென்றிருக்க வேண்டுமோ. பேசிக்கொண்டிருந்தால் கூட போதுமென்றானே என்று தவித்துப்போனாள் கணவனின் இறுக்கமான அணைப்பில்.
பொன்மணியின் கண்ணீர் உணர்ந்து அவளின் முகத்தை நிமிர்த்தியவன், “என்ன?” என்றான்.
அதற்கும் சம்மதம் போல் தலையசைக்க, இன்னும் அணைப்பை கூட்டி, கன்னத்தில் முத்தம் வைத்து, வலிக்காமல் கடிக்கவும் செய்து, “அப்பாவை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போய்ட்டு வந்ததும் வருவேன், ரெடியா இரு” என்றபடி வெளியே அழைத்து வந்தான்.
சற்று முன்னே இருந்த ஆர்வம் மொத்தமாக வடிந்து போனது பொன்மணிக்கு. அவளின் முகமும் அதனை விளக்கியது. இவன் உண்ட பாத்திரங்களை எடுக்கப்போக, “நான் எடுத்துக்கிறேன்” என்று இவள் எடுத்தாள்.
தனது பெற்றோரின் வருகையால் பயப்படுகிறாள் என்று உணர்ந்தவன், துப்பட்டாவை உதறி மனைவிக்கு போட்டுவிட்டு கையை அழுத்தமாக பிடித்தபடி கீழே அழைத்து வந்தவன், “போய் ரெஸ்ட் எடு, நைட் தூக்கம் வருதுனு சொல்லக்கூடாது” என்றான்.
“சரி தனியா விட வேணாம், அந்த வீட்டுக்கு போக வேண்டாம், நான் இப்போ தங்கியிருக்க வீட்டுக்கே போலாம்” என்றான்.
“அச்சோ” என்று இவள் இன்னும் அதிகமாக பதற, “அப்போ நைட் என்னை தனியா விடப்போறியா?” என்றான்.
திருனேஷ்வரனின் நிலையும் மனதை வதைத்த்து. ஆனாலும் அவனின் பெற்றோர் இருக்கும் இடத்திற்கு செல்ல தைரியம் வராமல் போகவே செய்வதறியாது தவித்தாள்.
“என்னைக்கு ஆனாலும் அவங்களை சந்திச்சுதான ஆகனும்? அது இன்னைக்கா இருக்கட்டும். இன்னைக்கு நைட்லயிருந்து நீ என்னோடதான் இருக்கனும். போய் ரெஸ்ட் எடு, ஈவ்னிங் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்” என்று அலுவலகத்தினுள் சென்றுவிட்டான்.
சரியாக மாலை மூன்று மணிக்கு வீட்டிற்கு வந்தவன், “அப்பா ரெடியா? கிளம்பலாமா?” என்றான்.
“ம் போலாம்ப்பா, ஆனா உன் அம்மாவும் வரேன்றா” என்றார்.
“இன்னைக்கு டெஸ்ட்தான்ம்மா எடுப்பாங்க” என்றதும் அன்னையின் முகம் வாடவே, “சரி வாங்க, ஆட்டோல போய்க்கலாம்” என்று மூவரும் கிளம்பி சென்றனர்.
இரத்த அழுத்தம், இ.சி.ஜி என வழக்கமான சோதனைகளுக்கு பின்னே மருத்துவரை காண காத்திருந்தனர். அப்பொழுதே ஆறு மணியாகியிருக்க, இவன் பொன்மணிக்கு அழைத்து, “எல்லா திங்ஸையும் பேக் பண்ண வேண்டாம். இந்த மன்ந்த் எண்ட்ல இந்த வீட்டை காலி பண்ணப்போறேன், அங்க போகும்போது மொத்தமா எடுத்துக்கலாம். இப்போ பத்து நாளைக்கு உனக்கு தேவையான டிரஸ் மட்டும் பேக் பண்ணி வை” என்றான்.
பொன்மணிக்கு அழுகை வந்துவிட, “இன்னைக்கு மட்டும் நீ வரலைனா, நீ என் பொண்டாட்டின்றதை மறந்துடுவேன்” என்று இணைப்பை துண்டித்தான்.
மகன் பேசிக்கொண்டிருந்ததை கேட்ட செல்லம்மாவிற்கு கோபம் வர, மகனிடம் பேச நினைத்த நேரம் மருத்துவர் அழைப்பதாக செவிலி சொல்ல மூவரும் உள்ளே சென்றனர்.
உடல்நிலை நன்றாக இருக்கிறது, முன்பு எடுத்துக்கொண்ட மாத்திரைகளையே உபயோகிக்கலாம் என்று மருத்துவர் சொல்ல, நிம்மதியோடு வெளியே வந்தான் திருனேஷ்வரன்.
“உடம்பு நல்லா இருக்குனு நான்தான் சொன்னேன்லப்பா?”
“பரவால்லப்பா, இனி நிம்மதியா இருப்பேன்ல” என்று, ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வந்தவன், “அப்பாக்கு நான்வெஜ் இன்னமும் கொடுக்கிறதில்லையாம்மா?” என்றான்.
“இல்லப்பா, நான் சொன்னாலும் அவர் வேணாம்ன்றார், அதனால எடுக்குறதேயில்ல”
“சிக்கன், மீன் சாப்பிடலாம்னு டாக்டர் சொன்னார்தானே? நாளைக்கு மீன் வாங்கி செய்றிங்களா? இங்க பக்கத்துலயே மார்கட் இருக்கு, எனக்கு வாங்க தெரியாது, உங்களை கூட்டிட்டு போறேன்” என்றான்.
செல்லம்மாள் மனம் மகன் பொன்மணியிடம் பேசியதிலேயே இருக்க, “என்னம்மா யோசனை?” என்றான்.
மகன் அவளை இங்கே அழைத்து வரப்போகிறானா? அவளும் நாமும் ஒரே வீட்டிலா? என்ற எண்ணமே மனதை அலைக்கடிக்க, “என்னால அவளோட இருக்க முடியாதுப்பா” என்றார் ஒட்டாத்தன்மையோடு.
நிச்சயமாக அதுதான் உண்மை. அதோடு எப்படியாவது மகனிடம் பேசி பொன்மணியிடமிருந்து விலக்கிவிட வேண்டும் என்றும் நினைத்திருந்தார். ஆனால் அதனை ஒப்புகொள்ள தைரியம் வரவில்லை.
“அவளும் என்னை யோசிக்கல. நீங்களும் என்னை யோசிக்கல. இன்னைக்கு இதுக்கு முடிவு தெரிஞ்சாகனும்.
இதுநாள் வரை அவளை இங்க அழைச்சிட்டு வந்ததில்ல, நான் வேணும்னா அவ இன்னைக்கு வரனும். இல்லைன்னா என்னைக்கும் அவளுக்கு நான் கிடைக்கமாட்டேன்.
உங்களால அவளை ஏத்துக்க முடியலனா பரவால்ல. நான் உங்க மகன். நீங்க என்னை பெத்தவங்க. என்கிட்ட எல்லா உரிமையும் எப்போவும் உங்களுக்கு உண்டு.
ஆனா சில விசயங்கள்ல நான் உங்ககிட்டயிருந்து விலகித்தான் இருப்பேன். என்னை நீங்க வற்புறுத்த முடியாது, யார் நினைச்சாலும் அதை சரி பண்ணவும் முடியாது” என்றான் திடமாக.
என்னவாக இருக்கும் என்று இருவரும் பதறி நிற்க, இவன் பொன்மணியை அழைத்து வர கிளம்பினான்.