Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அவள் என் பொன்னெழில்

அவள் என் பொன்னெழில் 21.1

    அத்தியாயம் 21

மொபைலில் யாருடனோ ‘என் பொண்டாட்டி சார், என்னோட ஒர்க் பண்ற பொண்ணுங்க சார்’ என்று சொல்லி, அவசரமாக கிளம்பியதும் எதோ முக்கிய காரணத்திற்காக கிளம்பியிருக்கிறான் எனப்புரிந்து தென்றல் மற்றும் ஸ்வாதிக்கு அழைத்தாள் பொன்மணி.

இருவரும் அழைப்பை ஏற்கவில்லை. பத்து நிமிடம் கழித்து தந்தையிடமிருந்து அழைப்பு வந்தது பொன்மணிக்கு.



Advertisement

சத்யப்ரகாஷை போலீசார் கைது செய்துள்ளதாகவும், என்ன குற்றம் என்று தெரியவில்லை என்றபோதும், ஏதோ பெரிய குற்றம் செய்துள்ளதாகவும், இனி அவன் வெளியே வரும் வாய்ப்பே இல்லை என்றும் பெரும் மகிழ்வோடு மகளுக்கு தகவல் கொடுத்தார் அசோகன்.

தந்தை பேசிக்கொண்டிருக்கும்போது, ஒரு வாரம் ஆண்மீக சுற்றுலா சென்று வந்தது வீண்போகவில்லை. நான் வேண்டிய அத்தனை தெய்வங்களும் நமக்கு துணையா இருந்திருக்கு’ என்று அஞ்சுகம் நெகிழ்வோடு சொன்னதை கேட்டதும் பெரும் நிம்மதி பொன்மணியினுள்.

‘அந்த பணத்தை எடுத்து வைங்கப்பா. நானே வந்து அவங்கப்பாம்மா மூஞ்சுல விட்டெறியறேன். அவங்க மகனை காப்பாத்த உபயோகமா இருக்கும்‘ என்று வெற்றிபெற்ற உணர்வோடு சொல்லி இணைப்பை துண்டித்தாள்.

Advertisement

அதன் பின்னே அரைமணி நேரம் கழித்து தென்றலிடமிருந்து அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்க, நடந்ததை விளக்கி, “குழந்தை இருக்குனு மிரட்டியிருந்தியா பொன்மணி?” என்றாள் தென்றல்.

Advertisement

‘ஆமாம்‘ என்க, ‘சூப்பர் பொன்மணி’ எனப் பாராட்டி, ‘எப்படி நம்பினான்?’ என அனைத்தும் கேட்டறிந்து, ‘சார் அவனை சும்மா விடமாட்டார். எவ்வளோ கோபமா போனார் தெரியுமா?’ என்று திருனேஷ்வரன் பெருமை பேசினாள் தென்றல்.

சத்யப்ரகாஷ் வாழ்க்கை இனி சிறையில்தான. எல்லாம் தன் கணவனால் என்ற பெருமையிலும், குழந்தைகளுக்காக தன்னை கிரகிக்க முயலும் திருனேஷ்வரனின் பெற்றோர் மாற்றத்திலும் நெகிழ்ந்தவள், கோடி நன்றிகளை கடவுளுக்கு சொன்னபடி கணவன் வருகைக்காக காத்திருந்தாள்.

தன்மீது கோபத்தோடு இருப்பான் தெரியும். ஆனால் முன்பிருந்த பயம் போய், கணவனை எப்படி சரி செய்வது என்பதும் போய், என்னவானாலும் சரி… திருனேஷ்வரனின் கோபத்தையும் இன்பமாக ஏற்க ஆயத்தமாகி துணிந்து கணவனிடம் சரணடைய காத்திருந்தாள் காதலோடு. முகமும் அவளறியாமல் மலர்ந்து இருந்தது.

Advertisement

குளித்து வந்தவன், தலைகுனிந்து அமர்ந்திருப்பவளை பார்த்தபடி டேபிள் மீதிருந்த டீசர்ட்டை எடுத்து போட்டான். திருனேஷ்வரன் வந்த அரவம் கூட தெரியாமல் கணவன் நினைவில் லயித்திருந்தாள் பொன்மணி.

திருனேஷ்வரனின் சிரிப்பும், காதல் பார்வையும், கை செய்யும் ஜாலமும் என இனிய நினைவுகளில் மூழ்கியிருந்தவள் லோயர் எடுக்க கபோர்டை திறக்கவும் பிறகுதான் நிமிர்ந்தாள்.

‘தனியா விட நினைச்சல்ல?’ என்ற கணவன் வார்த்தை மனதில் ரீங்காரமிட, ‘அப்படிலாம் நினைக்கலங்க‘ என்று சொல்ல வந்தவள், சற்று நிதானித்தாள்.

எத்தனை கெஞ்சினாலும் கோபம் தணியமாட்டான். பெற்றோரிடம் தனக்காக அத்தனை பேசியபோதும் அறைக்குள் வந்தபோது இருந்த கோபத்தையும், தற்போதுள்ள முக இறுக்கத்தையும் யோசித்து, “பழி வாங்கப் போறிங்களா?” என்றாள் சன்னக்குரலில்.

“என்ன? என்ன கேட்ட?” என்றான் புருவம் சுருக்கி.

வர மறுத்த காரணத்திற்காக தற்போது அருகில் இருந்தாலும் தன்னை நெருங்காமல் பழி வாங்கப் போறிங்களா?’ என்று கேட்க நினைத்ததை மாற்றி,

“இல்ல… அந்த நாயை பழி வாங்க கிளம்பினிங்களே… என்னாச்சுனு கேட்டேன்” என்றவள் முகம் அத்தனை ஜொலிப்பாக இருக்கவே,

தன்னை சமாதானம் செய்ய முயல்கிறாள் எனப்புரிந்து, “வேணாம்டீ… செம்ம கடுப்புல இருக்கேன், இன்னைக்கு என்னை சீண்ட நினைச்ச… சாகடிச்சிடுவேன்” என்றான் கோபமாக.

“அடி, உதை, திட்டு இப்படி எதை கொடுத்தாலும் ஓகே. ஆனா சாகடிக்க மட்டும் நினைக்காதிங்க, என் மாமனார் மாமியாருக்கு பேரப்பிள்ளை இல்லயில்ல நிறைய பேரப்பிள்ளைகள் பெத்து தரனும்” என்றாள் சன்னக்குரலில்.

அருகே வந்து பொன்மணியின் கன்னத்தை அழுத்தமாய் பிடித்தவன், “உன்னை ஒன்னும் பண்ணமாட்டேனு என் வீக்னஷை தெரிஞ்சு வச்சிக்கிட்டுதான பேசுற? அடிக்க முடியலனாலும், உன்னை விட்டு விலகியிருக்க முடியும்டீ” என்று சவால்போல் சொல்லும்போதுதான் மனைவியை கவனித்துப் பார்த்தான்.

தலைக்கு குளித்து இரவு உடை அணிந்திருந்தாள். முதல்முறையாய் இவ்வுடையில் பார்க்கிறான். விரித்து விடப்பட்டிருந்த கேசம் பொன்மணியின் அழகை மேலும் கூட்டியிருந்தது.

“நீங்க விலகியிருங்க, நான் உங்க பக்கத்துல வந்துக்கிறேன்” என உதட்டை மட்டும் அசைக்க, இவள் இப்படி பேசுவதுதான் திருனேஷ்வரனுக்கு புரியுமே…

‘இவளை’ என பல்லை நெறித்தவன் பதில் கொடுக்கும் முன்னே, “திருனேஷ்” என உண்ண அழைத்தார் செல்லம்மாள்.

“வந்து பேசிக்கிறேன் இருடீ” என்று மிரட்டியபடி  வெளியே வர, “அவ்வளோ அவசரமா போனியா… என்னவா இருக்கும்னு ரொம்ப பயந்துட்டிருந்தேன், நல்ல விசயம்னு நீ சொன்னதுக்கப்புறம்தான் நிம்மதியாச்சு” என்ற வில்வராஜ், “என்ன நல்ல விசயம் திருனேசு?” என்றார் ஆர்வமாக.

“அதான் நல்ல விசயம்னு சொல்லிட்டானே… முதல்ல சாப்பிடட்டும், அப்புறம் விசாரிப்பிங்களாம்” என்றபடி பரிமாறினார் செல்லம்மாள்.

திருனேஷ்வரன் அமைதியாக நின்றிருக்க, “உக்காருடா” என்றவர், “உன் பொண்டாட்டியோடலாம் சாப்பிட முடியாது. எங்களுக்கு கொஞ்சம் டைம் கொடு.

அவளுக்கு கிச்சன்ல இருக்கு. எடுத்துட்டு போய் உள்ள சாப்பிட சொல்லு. நாம இங்க சாப்பிடுவோம்” என்றார் செல்லம்மாள்.

மகன் கோபம் கொள்வானோ என்று வில்வராஜ் பதற, “சரிம்மா” என்று கோபமில்லாமல் சொன்னவன், பொன்மணியை அழைத்துவிட்டு, “நீங்க ஏன்ம்மா இவ்வளோ நேரம் சாப்பிடாம இருந்திங்க? அப்பாக்கு மாத்திரை சாப்பிடனுமில்ல?” என்றான்.

பொன்மணி “நீங்க சாப்பிடுங்க, நான் அப்புறம் சாப்பிட்டுக்கிறேன்” என்றாள் உள்ளிருந்தபடியே.

“உன் அப்பா சாப்பிட்டார். எனக்கு பசியில்ல, நீ வரட்டும்னு வெய்ட் பண்ணினேன்” என்றார் பரிமாறியபடி.

தந்தையிடம் நடந்ததை விளக்கியவன், “ஸ்டேஷன்லாம் போய்ட்டு வந்தேன்ப்பா, போதை பொருள் கடத்தல், பொண்ணுங்களை பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தி பணிய வைக்கிறதுனு கேஸ் ஃபைல் பண்ண சொல்லியிருக்கேன், இனி அவன் வாழ்க்கை ஜெயில்லதான்’ என்று வெற்றி உணர்வோடு சொல்லி உணவுண்டான்.

பிறகு வெண்பாவிடமிருந்து அழைப்பு வர, தங்கையோடு பேசியபடி அறைக்குள் செல்லாமல் அமர்ந்திருந்தான். பெற்றோரும் இங்குதான் இருக்கிறார்கள் என்றறிந்ததும், இணைப்பை துண்டித்து வீடியோ அழைப்பு விடுத்து, அன்னை தந்தை அண்ணன் என மூவரிடத்திலும் பேசியவள், “அண்ணி எங்கண்ணா?” என்றாள்.

“உள்ள ரூம்ல இருக்கா”

“அண்ணிக்கிட்ட கொடுங்க”

“அவ நம்பருக்கு கால் பண்ணு. செம்ம டையர்ட்ல இருக்கேன், எழுந்து போக சலிப்பா இருக்கு” என்றான்.

அண்ணனும் அண்ணியும் மகிழ்வோடு இருக்கிறார்கள் என்று அறிவாள் வெண்பா. ஆனால் நம் பெற்றோர் அண்ணியை ஏற்றுக்கொண்டார்களா என்று அறிந்து கொள்ள வேண்டி, “நீங்க எழுந்து போக வேண்டாம், அண்ணியை வர சொல்லுங்க” என்றாள்.

திருனேஷ்வரன் முறைக்க, “ப்ளீஸ் ப்ளீஸ் ண்ணா, எனக்கு அண்ணி நம்பர் தெரியாது” என்றாள்.

“இப்போ பேசும்போது வாங்கி வச்சுக்கோ” என்று “பொன்மணி” என அழைத்தான்.

வெளியே வந்தவளிடம் “வெண்பா பேசனுமாம்” என்று மொபைலை நீட்ட, வாங்கிக்கொண்டு உள்ளே சென்று “நல்லா இருக்கியா வெண்பா?” என்றாள்.

“ம் நல்லா இருக்கேன் அண்ணி, என்னை பார்க்க வரேனு சொன்னிங்க, எப்போதான் வருவிங்க?”

“உங்கண்ணாக்குத்தான் டைம் இல்ல, எப்போவும் வீக் எண்ட்ல நான் ஃப்ரீதான்”

“அப்பாம்மா உங்களை ஏத்துக்கிட்டாங்களா?” என்றாள் கிசுகிசுப்பாக.

ஆமாம் என்பதாய் தலையசைக்க, பெருமகிழ்ச்சி அடைந்தவள், “அம்மாப்பா ரொம்ப நல்லவங்க அண்ணி, உங்களுக்காக எவ்வளோ வருந்தியிருக்காங்க. டேக் கேர் அண்ணி” என்று மகிழ்வோடு சொல்லி இணைப்பை துண்டித்தாள்.

செல்லம்மாவும் திருனேஷ்வரனும் உண்ட பின்னே “மாத்திரை எடுத்து கொடு செல்லம்” என்றார் வில்வராஜ்.

இன்று நல்ல நாளா? மகனை மனைவியோடு தனித்து விடலாமா? நல்ல நாள் இல்லை என்றால் மட்டும் என்ன செய்வது? உள்ளே போக வேண்டாம் என்றா சொல்ல முடியும்?

அப்படியே சொன்னாலும் மகன் அதை நல்லவிதமாக எடுத்துக்கொள்வானா? பொன்மணியை பிடிக்காததால் அப்படி சொல்கிறேன் என்றல்லவா நினைப்பான் என்ற யோசனையோடு அமர்ந்திருந்தார் செல்லம்மாள்.

“செல்லம்… மாத்திரை கேட்டேனே” என உரக்க குரல் கொடுக்க,  பிறகுதான் தந்தை தனக்காக அன்னையிடம் பேசுகிறார் எனப்புரிந்தது திருனேஷ்வரனுக்கு.

“இதோ எடுத்துட்டு வரேன்ங்க” என்று எழவே, “எனக்கும் ஒர்க் இருக்கும்மா, பார்த்துட்டு தூங்கறேன்” என்று எழுந்தான் திருனேஷ்வரன்.

திருனேஷ்வரன் அறைக்குள் செல்லவிருக்கும் பதட்டத்தில், “அவ இன்னும் சாப்பிடலயே” என்றார் அவசரமாக.

“நீங்க போய் அப்பாக்கு மாத்திரை எடுத்துக்கொடுத்துட்டு படுங்க, அவ வந்து சாப்பிட்டுக்குவா” என்று இவன் உள்ளே சென்றான்.

“வா செல்லம்” என்று வில்வராஜ் குரல் இம்முறை கட்டளையாக வர, மாத்திரை எடுக்க தனது உடமைகள் இருக்கும் அறைக்குள் சென்றார்.

மனைவி பின்னோடு வந்தவர் “மருமகளோட பேச பிடிக்காது, ஆனா வெளிலயே இருப்பியா? அந்த பொண்ணு சாப்பிட வேண்டாமா?” என்றார்.

“ஏங்க… நான் அதை யோசிக்கல, இன்னைக்கு நல்ல நாளா என்னனு தெரியல, இங்க காலேண்டரும் இல்ல, இவங்க இரண்டு பேரும் தனியா” என்றார் தயக்கத்தோடு.

“மகனுக்கு கல்யாணம் ஆகி இரண்டு மாசம் ஆகிடுச்சு. நல்ல நேரம் பார்க்குறதா இருந்தா எப்போவோ பார்த்திருக்கனும், இவ்வளோ நாள் கழிச்சு நாள் நல்லாயில்லனு சொன்னா நல்லா இருக்குமா?

சரி… நல்ல நாள் பார்க்குறேனு சொல்றேன்னே வை… நம்ம வீட்டுக்கு அழைச்சு, குலதெய்வத்துக்கு பூஜை செய்து, மருமகளுக்கு அலங்காரம் பண்ணி, திருனேசையும் அவன் ரூமையும் அலங்காரம் செய்து, ஆசிர்வாதம் பண்ணி சாந்தி முகூர்த்தத்துக்கு அனுப்பி வைப்பியா?” என்றார்.

செல்லம்மாள் இயலாமையோடு பார்க்க, “உன்னால முடியாதுனு இல்ல, இப்போ இருக்க மனநிலைல இப்படிலாம் பண்ண எனக்கும் கஷ்டம்தான். நம்ம மனசு சரியாகும் வரை வெய்ட் பண்றதுக்கு அவனுக்கு வயசு கிடையாது.

மகனுக்கு எதுவும் முறைப்படி நடக்கலயேனு கஷ்டமா இருந்தாலும், உடனே ஊருக்கு அழைச்சிட்டு போய் முறைப்படி செய்ய நம்மளுக்கும் தெம்பில்ல.

அவனுக்கும் முப்பது வயசாகுது. நம்மளை விட எல்லா விசயத்துலயும் பக்குவமா யோசிக்கிறான். இரண்டு மாசமா பிரிஞ்சுதான் இருந்திருக்காங்க.

இவ்வளோ நாள் வேற மாதிரி யோசிச்சோம். இனி நம்ம மகன் சந்தோசத்தை மனசுல வச்சுதான் எதையும் யோசிக்கனும். மருமகளை பிடிக்குதோ இல்லையோ. நம்ம மகனோட சந்தோசம் அந்த பொண்ணு கையிலதான் இருக்கு.

இன்னைக்குத்தான் மருமகளை கூட்டிட்டு வந்துருக்கான். ரூமுக்குள்ள போன பையனை வெளில கூப்பிடுறது அநாகரீகம். கதவை சாத்திட்டு வந்து படு” என்றார் கட்டளையாக.

ஒரே மகன்… எப்படி நடந்திருக்க வேண்டிய திருமணம்? மகனின் சந்தோசம் நிலைக்கவும், வம்ச விருத்திக்காகவும் குல தெய்வ வழிபாடு செய்து, பெற்றவர்கள் ஆசியோடு நடக்க வேண்டிய சாந்திமுகூர்த்தம்.

இப்படி யாரோ ஒருவர் வீட்டில் நடப்பதை எண்ணி மனம் தாளவில்லை செல்லம்மாவிற்கு. கணவனுக்கு மாத்திரை கொடுத்து, “அவங்களை டிஸ்டர்ப் பண்ணமாட்டேன்ங்க. சித்த நேரம் வெளில இருந்துட்டு வரேன்” என்றார்.

“இப்போ வேணாம், மருமக சாப்பிட வந்துருக்கும், பத்து நிமிஷம் கழிச்சு போ” என்றார்.

பத்து நிமிஷமல்லாது அரைமணி நேரம் கழித்து ஹாலுக்கு வந்தார் செல்லம்மாள்.

கீழே அமர்ந்து வேலை செய்துகொண்டிருந்தான் திருனேஷ்வரன். “தூங்கப்போகலயா திருனேசு?” என்றார் செல்லம்மாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!