Skip to content
Post Views: 7,696
ஏழு மாதங்கள் முடிந்திருக்க, தனது ஏழாம் மாதம் வரை சென்னையில் கணவனோடுதான் இருந்தாள் பொன்மணி. பக்கத்தில் இருக்கும் உணவை பரிமாறி உண்ணவே சலிப்படைபவன் தற்போது சின்ன சின்ன சமையல் வேலை கூட கற்றிருந்தான் மனைவிக்காக.
வளைகாப்பு தேதி குறித்த பின்னேதான் தந்தையாகப் போவதை ரூபலஷ்மியிடம் பகிர்ந்தான். மனதாற வாழ்த்தினார் ரூபலஷ்மி. ஆனால் வளைகாப்பிற்கு வர முடியாது, முக்கிய வேலையிருக்கிறது என்றுவிட்டார்.
மூன்று மாதம் முன்பு கலைசெல்வியின் வளைகாப்பு முடிந்தது. அவளின் வளைகாப்பு போலவே வெகு விமரிசையாக பொன்மணிக்கும் செய்ய நினைத்தார் அசோகன்.
திருனேஷ்வரனிடம் ஆலோசனை கேட்க, பொன்மணிக்கு எப்படி விருப்பமோ அப்படி செய்ய சொல்லிவிட்டான் திருனேஷ்வரன்.
Advertisement
வெண்பாவும் வளைகாப்பிற்கு வந்திருந்தாள். தாய்மை கொடுத்த பொலிவோடு பொன்மணி பொன்னெழிலாய் ஜொலிக்க, இந்த முண்டக் கண்ணுலதான்ங்க நம்ம மகன் விழுந்துட்டான் என்று கணவனிடம் முணுமுணுத்தார் செல்லம்மாள்.
மருமகளை ரசிக்கும் மனைவியை பார்த்து சத்தமில்லாமல் சிரித்தார் வில்வராஜ். “என்ன சிரிப்பு? என்னவோ உங்க மகன் உலகழகியை கல்யாணம் செய்துக்கிட்ட மாதிரி…” என நொடித்தார் பொய்யாக.
மூன்று மாதம் முன்பு கலைச்செல்வியின் வளைகாப்பிற்கு அழைப்பு விடுத்தார் அஞ்சுகம். உடல் நிலை சரியில்லை என்று மறுத்துவிட்டார் செல்லம்மாள்.
Advertisement
அசோகன் அஞ்சுகத்தோடு செல்லம்மாவிற்கு சம்பந்தி என்ற முறையான உறவெல்லாம் பெரிதாக இல்லைதான். ஆனால் தேவைக்கு பேச தயங்குவதும் இல்லை.
Advertisement
வளைகாப்பு முடிந்து பொன்மணியோடு தானும் சென்றான் அவளின் வீட்டிற்கு. ஒரு மணி நேரம் வரை பேசியிருந்துவிட்டு கிளம்பினான் தன் வீட்டிற்கு.
மனைவி வேண்டுகோளுக்கு இணங்கி, இன்னும் ஐந்து மாதத்திற்கு இங்கிருந்த படிதான் வேலை செய்யப்போகிறான் திருனேஷ்வரன். அதனை பெற்றோரிடம் சொல்லி, பத்து நாளுக்கு ஒருமுறை சென்னை சென்று வரவேண்டும் என்று சொல்ல, பெரிதாய் மகிழ்ந்தார் செல்லம்மாள்.
நடைபயிற்சி என்ற சாக்கில் தினமும் மனைவியோடு கோவில் கிளம்பிடுவான் திருனேஷ்வரன். மாலை நான்கு மணிபோல் கிளம்புபவர்கள், இரவு ஏழு மணி போலத்தான் வீடு திரும்புவார்கள்.
Advertisement
மனைவி கர்ப்பம் தரித்தது தெரிந்த அடுத்தநாளே கார் வாங்க முடிவெடுத்து அன்னையிடம் சொல்ல, ‘உங்கப்பாவும்தான் முடியாம இருந்தார்’ என்றார் பொய் முறைப்பாக.
‘உங்க இரண்டு பேருக்கும் இல்லாதது என்னம்மா? அப்பாக்கு முடியாம இருந்தப்போ என்கிட்ட காசில்லையே… இப்போதான பணம் இருக்கு’ என்றான் உண்மையா வருத்தத்தோடு.
‘சும்மாதான் சொன்னேன்… அவளை அலைய வைக்க வேணாம். நீயும் உன் அப்பாவும் போய் பார்த்துட்டு வாங்க’ என்றார் மகிழ்வோடு.
பின் வந்த நாள்களில் பத்து நாளைக்கு ஒருமுறையாவது டிரைவர் ஏற்பாடு செய்து, எங்கேனும் சென்று வர சொல்வான். செல்லம்மாள் மறுத்தாலும் கட்டயாப்படுத்தி அனுப்பி வைத்தான் பெற்றோரை.
மருத்துவமணைக்கு அழைத்துச் செல்லும்போது தவிர, கார் எடுப்பதேயில்லை. இருவரும் கைகோர்த்தபடியும் கதை பேசியபடியும் நடந்து வருவதை பார்த்து மனம் நிறைந்து போவார்கள் திருனேஷ்வரனின் பெற்றோர்.
கலைசெல்விக்கு ஆண் குழந்தை பிறந்தது. இன்னும் மூன்று மாசத்தில் கணவன் வீட்டிற்கு சென்றிடுவோம். அதற்குள் கிடைப்பதையாவது எடுத்துச் செல்ல வேண்டும். இல்லையேல் தன் மாமியாரோடு பெரும் போராட்டமாகிடும், கணவனும் அன்னை பேச்சுத்தான் கேட்பான் என்று, வேறு வழியில்லாமல் தந்தை சொன்னது போலவே சொத்தை வாங்கிக்கொள்ள சம்மதித்தாள்.
பெற்றோரின் அருமை உன் பிள்ளை வளரும் போது தெரிய வரும் என்று உடன் பிறந்தவளைப் பற்றி நினைத்த பொன்மணிக்கு மனம் கசந்து போனது. இருவரும் ஒரே வீட்டில் இருந்த போதும், அக்காவோடு பெரிதாய் பேசிக்கொள்ள மாட்டாள் பொன்மணி.
பொன்மணி திருமணம் நடந்த விதம் வேறு என்றபோதும், அதுவும் தனது பெற்றோர் சம்மதமில்லாமல் நடந்ததுதானே? எனில் அவள் திருமணத்தை மட்டும் எப்படி ஏற்றுக்கொண்டார்கள்?
திருனேஷ்வரனுக்கும் அவனின் குடும்பத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை தனது கணவனுக்கு கொடுக்கவில்லையே என்ற ஆற்றாமை கலைசெல்வியினுள் கணன்று கொண்டே இருக்கவே, அவளால் நியாய அநியாயங்களை பிரித்து பார்க்க முடியவில்லை.
காலம்தான் இவளுக்கு புத்தி புகட்ட வேண்டும். பெற்றவர்களையும், கணவன் குடும்பத்தாரை பற்றியும் புரிந்து, என்று திருந்தி வருந்துகிறாளோ அன்று பார்த்துக்கொள்ளலாம் என்று கலையிடமிருந்து முடிந்தவரை விலகியிருந்தாள் பொன்மணி.
*** **** **** ****
நான்கு வருடங்கள் முடிந்திருக்க, இன்று தனது புதிய கட்டிடத்தை திறந்து வைக்கும் பரபரப்பில் இருந்தான் திருனேஷ்வரன். தனியாக தொழில் துவங்க வேண்டும் என்பது திருனேஷ்வரனின் ஆசை.
அதை சொந்த ஊரில் துவங்க வேண்டும் என்பது பொன்மணியின் ஆசை. இங்கே தொழில் ஆரம்பித்தால் நாம் பெற்றோரோடு இருப்பதோடு நமது குழந்தைகளும் தாத்தா பாட்டியோடு வளர்வார்கள். இப்படி நியாயமான ஆசையை அதிலும் மனைவியின் ஆசையை நிராகரிப்பானா என்ன?
தனது பூர்வீக காட்டிற்கும் பக்கத்தில் உள்ள இடத்தை வாங்கி, ஆறு மாதம் முன்னே கட்டிடம் கட்ட ஆரம்பித்தவன், தற்போதுதான் முடித்திருக்கிறான்.
ராஜதுரைக்கும் ரூபலஷ்மிக்கும் அழைப்பு விடுத்து, அவர்களின் ஒய்வு நேரத்திற்கு ஏற்றபடிதான் கட்டிட திறப்பு விழா வைத்திருந்தான்.
இப்படி விழாவிற்கெல்லாம் நான் செல்வதில்லை என்று முதலில் ராஜதுரை மறுத்தார். எத்தனை மாதம் ஆனாலும் நீங்கள் வந்த பின்னேதான் கட்டிடம் திறப்பு விழா நடக்கும் என்று சொல்லவே, திருனேஷ்வரனின் அன்பிற்கு கட்டுப்பட்டு வர சம்மதித்தார் ராஜதுரை.
இதோ அவர்களின் வரவிற்காகத்தான் காத்திருந்தான். சற்று நேரத்தில் ராஜதுரை மனைவியோடு வர, அவ்விடமே பரபரப்பானது.
பின்னே வந்திருப்பது கமிஷ்னர் ராஜதுரையும், எஸ்.பி ரூபலஷ்மியும் அல்லவா? சீருடையில் வரவில்லை என்றபோதும் இவர்கள் வருகைக்கு மரியாதை செலுத்தும் வகையில் உள்ளூர் காவல்நிலையத்தில் வேலை செய்யும் ஆய்வாளரும், சில காவலர்களும் சீருடையில் வந்திருந்தனர்.
இவர்களின் வருகை கொண்டு திருனேஷ்வரனின் மதிப்பும் கூடியது.
நலம் விசாரிப்பிற்கு பின்னே அன்னையிடம் கத்தரி கொடுத்து கட்டிடத்தை திறக்கப்பணித்தான்.
செல்லம்மாள் தனது பேத்தியோடு ரிப்பன் வெட்ட, கைத்தட்டலோடு உள்ளே சென்றனர் அனைவரும்.
சற்று தள்ளி மனைவியோடு பேசிக்கொண்டிருக்கும் பொன்மணி கையிலுள்ள குழந்தையைப் பார்த்து, “இது எப்போடா? முதல் குழந்தை வளைகாப்புக்கு சொன்ன? இதை சொல்லல?” என கிண்டல் செய்தார் ராஜதுரை.
“சரியான அவசரகுடுக்கை சார் அவன். பாப்பாக்கு ஃபர்ஸ்ட் பர்த்டே கொண்டாடி முடிச்சதும் அவன் அம்மா வயித்துக்குள்ள வந்துட்டான்” என்றான் சிரிப்போடு.
“அவசரம் அவனுக்கா? உன்னக்காடா?” என கிசுகிசுத்தார்.
சிரித்தவன், “இரண்டு பேருக்கும் ரொம்ப கேப் இருந்தா அட்டாச்மண்ட் இருக்காது சார். அதுக்காகத்தான்” என்றான் மலர்ந்த முகத்தோடு.
இவர்கள் ரகசியம் பேசிக்கொண்டிருக்க, பொன்மணியிடம் தொழில் பற்றி விசாரித்து, “அவ்வளோதான? இல்ல இன்னும் இருக்கா?” என்றார்.
“இந்த கட்டிடம் மட்டும்தான் மேடம்” என்று பொன்மணி சொல்ல, “நான் இந்த ரிலீஸை சொன்னேன்” என்றார் குழந்தையை காண்பித்து.
சிவந்த முகத்தோடு தலைகுனிந்தவள், “ஃபேமலி ப்ளானிங் பண்ணியாச்சு மேடம்” என்றாள் சின்னக்குரலில்.
“இன்ட்டீரியர்லாம் பயங்கரமா இருக்கு, எவ்வளோ பணம்டா வச்சிருக்க? டேக்ஸ் சரியா கட்டுறியா?” என்றார் விசாரணையாக.
“எல்லாத்துக்கும் ப்ராப்பர் டாக்குமண்ட்ஸ் இருக்குது சார்” என பெருமையாக சொன்னவன், “ஃபோர்ஜரி பண்ணியிருந்தா உங்களை கூப்பிடுவேனா? டொப்பு டொப்புனு சுட்டுட மாட்டிங்க” என்றான் சிரிப்போடு.
கடந்த இரண்டு வருடத்தில் இரண்டொரு முறைதான் ராஜதுரையிடம் பேசினான். யுகன் யுகதி படிப்பை பற்றி விசாரித்து வைத்திடுவான்.
“ஸோ… நீ கால் பண்ணலைனா ஃபோர்ஜரி பண்றேனு அர்த்தம்… ஆமாவா?” என்று அவனின் இரண்டாம் மகவை பார்த்தபடி கேட்க, “சார்… அது ஃபோர்ஜரி இல்ல. காதல் சார்…” என்றான் முன்பை விட பெருமையாக.
மாடிக்கு சென்றவர் சுற்றிலும் பார்வையிட்டு, “அவுட் லுக்கும் செம்மையா இருக்குடா, ரிலாக்ஸ் பண்ண இங்க வந்தாலே போதும். பச்சை பசேல்னு வயலும், சிட்டுக்குருவியும்னு மனசை லேசாக்கிடும்” என பாராட்டியவர், “காட்டுகாரன் பிரச்சனை பண்ணலயா?” என்றார்.
“எங்க காடுதான் சார்” என்க, “ம்… பெரிய ஆள்தான் போல” என பாராட்டி, பின்னே விருந்துண்டு, தொழில் சிறக்க வாழ்த்து சொல்லி கிளம்பினர் இருவரும்.
அடுத்து வந்த நாள்களில்தான் பொன்மணியின் திறமைப் பற்றி முழுதாய் அறிந்தார் செல்லம்மாள். ஆசிரியர் பணி, கார்மண்ட்ஸ் என வேலைக்கு சென்று எப்பொழுதும் தன்னை பிஸியாகவே வைத்திருந்தவர்.
பேத்தியை கே.ஜி பள்ளிக்கு அனுப்பிவிட்டு மதிய உணவுண்ட பின்னே பேரனோடு இங்கே வந்திடுவார் செல்லம்மாள். திருனேஷ்வரன் பொன்மணி இருவருக்கும் மதிய உணவு அஞ்சுகத்திடமிருந்து வந்துவிடும்.
திருனேஷ்வரன் பொன்மணி தவிர்த்து மொத்தமாய் ஆறு பேர்தான் வேலை செய்கிறார்கள். கணவன் இங்கும் வேலை பார்த்துக்கொண்டு ராஜ்குமார் கம்பெனிக்கும் உதவி செய்து கொண்டிருப்பதால் முடிந்தவரை தானே பார்த்துக்கொள்வாள்.
இவர்களுக்கு வேலையை விளக்குவதும், தவறென்றால் திட்டுவதும் பொன்மணிதான். ஆங்கிலத்தில்தான் திட்டுவாள். சாதாரண வார்த்தை என்றபோதும் அவளின் முகம் அத்தனை கண்டிப்பையும் ஆளுமையையும் காண்பிக்கும்.
இத்தனை திறமையை வைத்துக்கொண்டுதான் தன்னிடம் ஏதும் அறியாதவள் போல் இருந்திருக்கிறாள். பேசத் தெரியாமல் இல்லை. தனக்கு மரியாதை கொடுத்து பணிந்து போகிறாள் என்று புரிந்துகொண்டார் செல்லம்மாள்.
மருமகளிடம் இயல்பாக பேசுவதில்லை என்றபோதும், மகனுக்கு இணையாக அக்கறையோடு இருப்பார். ‘ஒரு வருசம் ஆகிடுச்சு, தாய்பாலை நிறுத்திடுனு சொன்னாலும் கேட்கமாட்டேங்குறா. குழந்தை பாவமா பார்க்கும்போது மனசு கேட்க மாட்டேங்குதுன்றா…
பால்குடிக்கிற குழந்தையை வச்சிக்கிட்டு திருனேசுக்கு இணையா வேலை பார்க்குறாங்க’ என்று தற்போதெல்லாம் கணவனிடமும் கூட மருமகளைப் பற்றி பெருமையாக பேசுவதுண்டு.
அத்தனை இன்னல்களோடு துவங்கிய இவர்களின் இல்லறம் தற்போது எல்லா துன்பங்களும் நீங்கி இன்பம் மட்டுமே நிறைந்த இல்லறமாக மாறியிருந்தது.
அசோகன், அஞ்சுகம், வில்வராஜ் செல்லம்மாள் என குழந்தைகளை பார்த்துக்கொள்ள நான்கு பேர் இருக்க, பொன்மணியும் திருனேஷ்வரனும் கவலையின்றி தொழிலை கவனித்தனர்.
கர்ப்பமாக இருக்கும் போது ஆரம்பித்த நடைப்பழக்கம். இன்று வரை மாலை ஒரு மணி நேரமேனும் கிளம்பிடுவார்கள். முன்னே வெகு நேரம் கழித்து வருபவர்கள்.
தற்போது மகன் தானில்லாமல் உறங்கமாட்டான் என்பதற்காக ஒருமணி நேரம், அல்லது அரைமணி நேரம் என சூழலுக்கு தகுந்தாற் போல் வீட்டிற்கு திரும்பிடுவார்கள்.
காலையில் பெற்றோரோடு, இரவில் குழந்தைகளோடு, பகல் வேளையில் கம்பெனியில் என இருப்பதால் நடைப்பயிற்சி நேரத்தை தங்களுக்கான நேரமாக எடுத்துக்கொண்டனர் பொன்மணியும் திருனேஷ்வரனும்.
“ம்மா… நான் படிக்கப்போறேன், நீங்க வாக்கிங் போகல?” என கேட்டாள் பொன்மணியின் புதல்வி.
“இதோ கிளம்பிட்டோம்டா பட்டு” என்று மகளுக்கு கன்னத்து முத்தம் வைத்து, தானும் பெற்றுக்கொண்டு அவனின் பொண்ணுமணியோடு கைகோர்த்தபடி கிளம்பினான்.
“இப்போ முடி கொட்டுறது நின்னுடுச்சா?” என பின்னலை வருடினான்.
எவ்வளவு பேசினாலும் பொன்மணியிடம் பேச விசயங்கள் இருந்துகொண்டேதான் இருக்கும் திருனேஷ்வரனுக்கு. பொன்மணிக்கும் அப்படித்தான்.
தனியாக விடமாட்டேன் என்று அன்று சொன்னதை இன்றுவரை கடைபிடிக்கும் மனைவி மீது காதல் அதிகமாகிக்கொண்டே போனது கணவனுக்கு.
“நல்ல வேளைடீ… ஃபேமலி ப்ளானிங் பண்ணலைனா இந்நேரம் இன்னொரு கண்ணுமணி வந்துருக்கும்” என்றான் சிரிப்போடு.
முகம் சிவந்து சிரித்த மனைவி திருனேஷ்வரன் பார்வைக்கு எப்பொழுதும் போல் ஜொலித்தாள் பொன்னெழிலாய்.
இனி எல்லாம் சுபம் சுபமே…
error: Content is protected !!