Skip to content
Post Views: 7,547
இங்கே பொன்மணிக்கோ நிலைகொள்ளவில்லை மனம், திருனேஷ்வரனின் தங்கை நான் சொன்னதை வீட்டில் சொல்லியிருப்பாள். தன்னை எவ்வளவு வேண்டுமானாலும் திட்டிக்கொள்ளட்டும்.
அவர்களின் மகன் தவறிழைக்கவில்லை என்பதை உணர்ந்து புரிந்துகொண்டால் போதும் என்று அத்தனை கடவுள்களையும் வேண்டிக்கொண்டாள்.
பொன்மணிக்கு அழைப்பு வர, சத்யப்ரகாஷ்தான் அழைத்திருந்தான். அழைப்பை ஏற்றதும் “திருனேஷ்வரன் வீட்டுக்கு கிளம்பிட்டியா?” என்றாள்.
“இல்ல பொன்மணி, அது… அப்படி செய்தா எல்லாருக்கும் கஷ்டம், நான் வேற மாதிரி” எனும்போதே இடையிட்டவள், “நீ சரிப்பட மாட்ட, இதை நானே டீல் பண்ணிக்கிறேன், போனை வை” என்று இணைப்பை துண்டித்தாள்.
Advertisement
மீண்டும் அழைத்தவன், “நானே போறேன், ஆனா இந்த விசயம் என் பொண்டாட்டிக்கும், குடும்பத்துக்கும் தெரிய வேண்டாம். அந்த குழந்தை இப்போ எங்க இருக்கு?” என்றான் பணிவாக.
“ஏன்? எங்க இருக்குனு தெரிஞ்சா அவளை கொன்னுட்டு சுலபமா பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வச்சிடலாம்னு பார்க்குறியா? குழந்தையை கொன்னாலும் என்கிட்ட ஆயிரம் வீடியோக்கு மேல இருக்கு. உன்னை பழி வாங்குறதுக்காகவே குழந்தை பிறந்த ஒரு மாசத்துலயிருந்து இப்போ வரைக்கும் வாரம் ஒரு வீடியோ எடுத்து வச்சிருக்கேன்.
நீ என் குழந்தையை கொன்னாலும் சரி, என்னை கொன்னாலும் சரி… நீ எதை மூடி மறைக்க நினைக்கிறியோ அது கட்டாயம் வெளிச்சத்துக்கு வரும்.
Advertisement
ஒழுங்கா நான் சொன்ன மாதிரி செய்தேன்னா என் வாழ்க்கையை பார்த்துட்டு நான் போய்டுவேன், இல்லைனா என் குழந்தை… அதாவது உன் ரத்தம்… உன் வீட்டுக்கு வாரிசு உரிமையை கேட்க வரும். எது வசதினு நீயே முடிவு பண்ணிக்கோ, உனக்கு இன்னைக்கு மட்டும்தான் டைம். இதுக்காக நான் லீவை எக்ஸ்டன்ட் பண்ண முடியாது” என்றாள் திட்டவட்டமாக.
Advertisement
இவனுக்கு யோசிக்க நேரம் கொடுத்தால் தன்னுடைய திட்டம் நிறைவேறாது என்று இன்றே திருனேஷ்வரன் குடும்பத்தை சந்திக்க வேண்டும் என்று சத்யப்ரகாஷிற்கு கட்டளையிட்டு இணைப்பை துண்டித்தாள் பொன்மணி.
அன்றெல்லாம் வெகுவாக யோசித்த சத்யப்ரகாஷ், குழந்தை எங்கிருக்கிறாள்? இவள் பின்னிலிருந்து யார் இயக்குகிறார்கள் என்ற விபரம் அறியும் வரை இவள் சொல்வதை கேட்பதைத் தவிர வேறு வழியில்லை.
உன் மகனை மாட்டிவிடும் எண்ணம் எனக்கில்லை, அந்த நேரம் அவனாக சிக்கிக்கொண்டான் என்று எப்படியாவது திருனேஷ்வரன் குடும்பத்தாரை சமாதானம் செய்ய வேண்டும்.
Advertisement
அவர்களின் வாயை அடைக்கும் வகையில் பெரிய தொகையோடு திருனேஷ்வரன் வீட்டிற்கு கிளம்பினான் சத்யப்ரகாஷ்.
*** *** *** *** *** *** ***
முன்பு வேலை செய்த கம்பெனியின் நியாபகங்கள் வர, இரண்டு நாள் முன்பு அங்கே சென்றவன் கம்பெனியின் வாயிலில் நின்றுகொண்டு ஏக்கத்தோடு பார்த்திருந்தான்.
அந்த நேரம் அவனின் பழைய மேனேஜர் வரவும் பரவசமாக பார்த்தவன் அவரின் அருகே செல்ல நினைத்தான். ஆனால் மனதை கட்டுப்படுத்தி அங்கேயே தேங்கி நின்றுவிட்டான்.
காரில் ஏறிய மேனேஜர் கண்ணாடி வழியாக திருனேஷ்வரனைப் பார்த்து காரிலிருந்து இறங்கினார். தன்னைப் பார்த்துதான் இறங்குகிறார் என்றறிந்தபோதும் திருனேஷ்வரன் அவரை நோக்கி முன்னேறாமல் அமைதியாக நின்றிருந்தான்.
“கமான் மை பாய்” என்றழைத்த பின்னே அவரருகே வந்தான்.
“உள்ள வா” என்று காருக்குள் சென்றதும் திருனேஷ்வரனும் காரினுள் சென்றான்.
“எப்போ ரிலீஸ் ஆன?”
“ட்வன்ட்டி டேஸ் ஆச்சு சார்”
“என்ன ஐடியா?”
“இன்னும் யோசிக்கலை சார்”
“யோசிக்க என்ன இருக்கு? முன்ன யோசிச்சதையே அப்ரோச் பண்ண வேண்டியதுதான?”
“இப்போ என்னை வேலைக்கு எடுத்துக்கமாட்டாங்கனு உங்களுக்கே தெரியும்தானே?”
வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்று நினைத்த சுந்தரம், “நம்ம கம்பெனியில எடுத்துக்கமாட்டாங்க, வேற ஆப்ஸன் கொடுத்தா போவியா?” என்றார்.
“இல்லை சார், எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல”
“ஹேய்… மேன், பழசை நினைச்சிட்டு இருக்கிறதால எதையும் மாத்த முடியாது, ஆப்பர்சூனட்டி கிடைக்கிறதே பெரிய விசயம், இப்போ யூஸ் பண்ணாம விட்டு பின்னாடி வருத்தப்படக் கூடாது, ஏற்கனவே அஞ்சு வருசம் வீணா போச்சு”
திருனேஷ்வரனுக்கு மீண்டும் ஐ.டியில் வேலை செய்யும் எண்ணமெல்லாம் இல்லை, வேலைக்கு சேர்ந்து சொற்ப காலங்களிலேயே தனது திறமையால் அனைவரையும் கட்டிப்போட்டவன்.
நிமிர்வோடு வலம் வந்த இடத்தில் தற்போது குற்றவாளிக்கு மன்னிப்பளித்து மீண்டும் வேலைக்கு சேர்த்துக்கொண்ட நிலையை விரும்பவில்லை திருனேஷ்வரன்.
பழைய நினைவுகளோடு கம்பெனியை ஆசையாய் பார்த்திருந்தான் அவ்வளவே. இதோ நான் நினைத்தது சரி என்பதுபோல ஆப்பர்சூனட்டி கிடைப்பது அரிதென்று இவரே சொல்லிவிட்டாரே என, “சாரி சார், எனக்கு விருப்பமில்லை, இப்போ ஒர்க் பண்ற மூட்ல நான் இல்லை” என்று காரினுள் இருந்து இறங்கப் பார்த்தான்.
“அட வெய்ட் பண்ணு மேன், நானின்னும் பேசி முடிக்கலை” என்று திருனேஷ்வரனின் கையைப் பிடிக்கவே, அவரின் வயதிற்கு மரியாதை கொடுத்து மீண்டும் அமர்ந்தான்.
திருனேஷ்வரன் எத்தனை திறமையானவன் என நன்கறிந்தவர். தற்போது வேலையில்லாமல் இருந்தாலும் அவனின் எதிர்காலத்தை சரியாக செதுக்கிக்கொள்வான் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை திருனேஷ்வரனின் பழைய மேனேஜருக்கு.
தனது மருமகன் சொந்தமாக தொழில் துவங்க விருப்பம் சொல்லியிருக்க, அதற்கான திறமை மருமகனிடம் இல்லாததால் பணம் முதலீடு செய்ய யோசித்திருந்தார்.
சரியான தருணத்தில் திருனேஷ்வரன் கண்ணில் பட, இவனுக்கு திறமைக்கு நிகராக தற்போது யாருமில்லை என்பதால் திருனேஷ்வரனை விட்டுவிட மனமில்லாமல் போக, “சரி என்ன எதிர்பார்க்குற?” என்றார் முடிவாக.
காரணமில்லாமல் மனிதர் இத்தனை பேசமாட்டார் என்று திருனேஷ்வரனுக்கு புரிய, தேவையை அவராக சொல்லாத பட்சத்தில் தானாக கேட்டறிந்து வேலை செய்ய ஒப்புகொண்டால் தனது தன்மானம் சீண்டப்படும் என தோன்றவே, “யார்கிட்டயும் வேலை செய்யுற மூட்ல நான் இல்லைங்க சார்” என்றான் இவனும் முடிவாக.
“அப்போ வருமானத்துக்கு என்ன பண்ணுவ?”
“ஜெயில்ல வேலை செய்ததுக்கு கொடுத்த பணம் இருக்கு, இப்போதைக்கு அதை வச்சு மேனேஜ் பண்ணிப்பேன், வேலை தேடிட்டுதான் இருக்கேன்.
என்னோட தன்மானத்தை சீண்டாத எந்த இடத்துக்குனாலும் வேலைக்கு போவேன். என் ஃப்யூச்சரை நான் பார்த்துப்பேன். உங்க அக்கறைக்கு தேங்க்ஸ் சார்” என்று இன்முகமாகவே இவரின் உதவியை நிராகரித்து வெளியேற, திருனேஷ்வரனோடு இவரும் காரிலிருந்து இறங்கினார்.
இவனோட திமிர் மட்டும் அடங்கவேயில்லை என்று முணுமுணுத்தபடி “சரி… நானே ஓப்பனப் பண்றேன். எனக்கு உன்னோட ஹெல்ப் தேவை. இப்போவாவது உள்ள போய் பேசலாமா?” என்றார்.
“இங்கையே சொல்லுங்க சார்”
வெளிப்படையாக சொல்லாவிட்டால் திருனேஷ்வரனை சம்மதிக்க வைக்க முடியாதென்று புரியவே, “என் மருமகன் தனியா பிஸ்னஸ் பண்ண ஆசைப்படுறார். அந்தளவுக்கு அவருக்கு நாளேட்ஜ் கிடையாது. நீ கூட இருந்து ஹெல்ப் பண்ணனும்” என்றார்.
தற்போதும் திருனேஷ்வரன் சம்மதம் சொல்லாமல் யோசித்திருக்க, கம்பெனியைப் பற்றி சொல்லி, எந்த மாதிரியான வேலை என்பதையும் விளக்கி, “என்ன திருனேஷ்? இப்போவும் சம்மதம் சொல்ல மனசு வரலையா?” என்றார்.
“அப்படியில்லைங்க சார், ஜாப் ஓகேதான். பட் எனக்கு சில கண்டிஷன்ஸ் இருக்கு. உங்க மருமகன் அவ்வளோ டேலண்ட் கிடையாதுனு சொல்றிங்க, கமிட் ஆகிட்டா வேலையில இருந்து பின் வாங்க மாட்டேன், ஆனா என் உழைப்புக்கான பணம் எனக்கு வந்தாகனும். முழுக்க முழுக்க என் உழைப்புனா சேலரி மாதிரி எனக்கு வேண்டாம். பர்சண்ட்டேஜ் போட்டு கொடுக்குறதுனா ஓகே.
முக்கியமா என் பர்சனலை அவர் பேசக்கூடாது. அவர் பர்சனலையும் நான் பேசமாட்டேன். இதுக்கு ஓகேன்னா எப்போ எங்க வரனும்னு சொல்லுங்க” என்றான்.
“பர்சண்ட்டேஜா?” என்று இவர் யோசிக்க, “உங்களுக்கு விருப்பமில்லைனா வேண்டாம் சார்” என்றான்.
“ஹம்… நம்பர் கொடுத்துட்டு போ, நைட் கால் பண்றேன்” என்றதும் தனது எண்ணை கொடுத்துவிட்டு கிளம்பினான் திருனேஷ்வரன்.
சொன்னது போலவே அன்றிரவே அழைத்து, “ஒர்க் பத்தி நேர்ல பேசிக்கலாம். மத்த டீடெய்ல்ஸ் மெஸேஜ் பண்றேன், நாளைக்கு வந்திடு” என்றார்.
அடுத்தநாள் காலை ஒன்பது மணிபோல சுந்தரம் சொன்ன இடத்திற்கு கிளம்பியிருந்தான். சுந்தரத்தின் மருமகன் சற்று திமிரோடுதான் பார்த்தான்.
முதல் பார்வையிலேயே திருனேஷ்வரனுக்கு அவனின் குணம் புரிந்த போதும் இங்கேதான் தன்னை தனித்துவமாக நிலைபடுத்திக்கொள்ள முடியும் என்று நிதானமாக யோசித்து, சுந்தரத்தின் மருமகன் முன்னே அமர்ந்தவன், தன்னை அறிமுகம் செய்துகொண்டான்.
“ம் மாமா சொன்னார்” என்று தொழில் முறையிலான பேச்சுகள் சென்றபின்னே, “ஸோ… இன்வஸ்ட்மண்ட் மட்டும்தான் உங்களோடது, மத்தபடி உழைப்பு, க்ளைண்ட் பிடிக்கிறது, கம்பெனி ரன் பண்றதுனு எல்லாமே நான்தான் செய்யனும்…
ஹம்… எனக்கு ஒகேதான். ஆனா எனக்கு ஃபிஃப்டி பர்சண்ட் ஷேர் வேணும்” என்றான்.
“என்ன? ஃபிஃப்டி ஃபிஃப்டியா?” என்று அதிர்வை காட்டிய ராஜ்குமார் “அவ்வளோலாம் முடியாது. ஒன் தேர்ட்… ஐ மீன், எனக்கு செவன்ட்டிஃபைவ் பர்சண்ட், உனக்கு ட்வன்டி ஃபைவ் பர்சண்ட் கொடுக்குறேன்” என்றான்.
“ஓ… அப்போ வேற ஆள் பார்த்துக்கோங்க, என்னால முடியாது” என்று எழுந்துவிட்டான்.
“பேசி முடிக்கும் முன்ன என்ன திருனேஷ்?” என்று உரிமையோடு கடிந்து திருனேஷ்வரனை அமரச்செய்தார் சுந்தரம்.
“மாமா… சேலரிக்குத்தானே பார்க்க சொன்னேன்? இவன் ஷேர் கேட்குறான், முதல்ல அதுக்கே சம்மதிக்கக்கூடாது, இதுல இவன் கேட்குற ஷேரை கொடுத்தா நாம தலையில துண்டை போட்டுட்டு போக வேண்டியதுதான்” என்றான்.
அவன் இவன் என்று பேசியதிலேயே திருனேஷ்வரனுக்கு கோபம் வர, “சார்… இவனுக்கும் எனக்கும் செட் ஆகாது. பேஸிக் மேனர்ஸ் கூட தெரியாதவனோட என்னால ஒர்க் பண்ண முடியாது. நீங்க வேற ஆள் பார்த்துக்கோங்க” என்று வெளியேறினான் திருனேஷ்வரன்.
“அவன் டேலண்ட் தெரியாம அலட்சியமா பேசிட்ட ராஜ்குமார்” என மருமகனை முறைத்தார் சுந்தரம்.
“என்ன டேலண்ட்டா இருந்தாலும் இங்க ஒர்க் பண்ணத்தானே வரான்? பேக்கேஜ் எவ்வளோ கொடுக்கனும்னு நாமதானே முடிவு பண்ணனும் மாமா? இப்போவே இவ்வளோ இடம் கொடுத்தா அப்பறம் அவன் ஓனராகிடுவான்” என தணிவாக சொன்னான் ராஜ்குமார்.
ஆம் தணிவாகத்தான் சொன்னான். சுந்தரத்தின் சொந்த அக்காள் மகன்தான் ராஜ்குமார். சிறு வயதிலிருந்தே கேட்டதை அல்ல… நினைத்ததை எல்லாம் நிறைவேற்றி மருமகனை சந்தோசத்தில் ஆழ்த்துவார் என்றாலும் கண்டிக்க வேண்டிய இடத்தில் மிகவும் கண்டிப்புடன்தான் இருப்பார் ஆகையால் சுந்தரத்தின் மீது பயமும் உண்டு.
திருனேஷ்வரனின் முந்தைய வேலைத்திறனை சொல்லி, அவனின் பிரச்சனையையும் சொல்லி, “திருனேஷ்வரன் அப்படிபட்ட ஆளில்ல. அந்த தப்பை அவன் செய்திருக்க வாய்ப்பே இல்லை. அவன் அழகிற்கும் திறமைக்கும் எங்க ஆஃபீஸ்லயே எத்தனையோ பொண்ணுங்க ட்ரை பண்ணி பார்த்திருக்காங்க.
மறுப்பை கூட பொண்ணுங்களுக்கு வலிக்காம சொல்லும் பக்குவம் தெரிஞ்சவன். பொண்ணுங்ககிட்ட ரொம்ப கண்ணியமா பழகுவான். அவனோட பேட் டைம் செய்யாத தப்புக்கு உள்ள போய் வந்திருக்கான்.
அதுக்காக அவனை சாதாரணமா எடை போட்டுடாத. இந்த வேலையில்லைனாலும் அவன் பிழைச்சிப்பான். ஆனா அவனை போல டேலண்ட் உள்ளவன் உனக்கு கிடைக்கமாட்டான். அவனை பார்ட்னரா சேர்த்துக்கிறதுனா மட்டும்தான் நான் இன்வஸ்ட் பண்ணுவேன்” என்றார் முடிவாக.
மேலும் பத்து நிமிட வாக்கு வாதத்திற்கு பின்னே மருமகனை சம்மதிக்க வைத்தார் சுந்தரம்.
சுந்தரம் திருனேஷ்வரனுக்கு அழைத்து பேச, “பிஸ்னஸ் நானும் உங்க மருமகனும்தானே செய்யப்போறோம்? அவரை பேச சொல்லுங்க சார்” என்று இணைப்பை துண்டித்திருந்தான்.
திருனேஷ்வரனை பிடிக்கவேயில்லை ராஜ்குமாருக்கு. ஆனால் தனது மாமா முடிவு செய்துவிட்டால் மாறமாட்டார். இப்போதைக்கு மாமா சொல்வது போல் கேட்போம். பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று திருனேஷ்வரனிற்கு அழைத்து சற்று தணிவாகவே பேசினான்.
திருனேஷ்வரனுக்கும் ரூபலஷ்மியிடமிருந்து முடிந்தவரை சீக்கிரம் விலகவேண்டியிருக்க, இந்த வாய்ப்பை நழுவ விடாமல் நாளை வருவதாக சொல்லி இணைப்பை துண்டித்தான்.
இன்று புதிய தொழில் துவங்க செல்ல வேண்டும். ஆனால் தனது சான்றிதழ்கள் ரூபலஷ்மியிடம் இருப்பதில் அத்தனை கோபம் திருனேஷ்வரனுக்கு, கோபத்தோடே ரூபலஷ்மிக்கு அழைத்து, “மேடம் என் சர்டிஃபிகேட்ஸை கொடுத்தனுப்புங்க” என்றான்.
“வீட்டுக்கு வந்து வாங்கிட்டு போ”
அவரின் அலட்சியமான பதிலில் மேலும் கோபம் வர, “அதை நீங்களே வச்சிக்கோங்க” என்று கோபமாக சொல்லி இணைப்பை துண்டித்து, சுவற்றில் வேகமாக குத்தியவன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்.
ரூபலஷ்மியிடம் மீண்டும் கேட்டாலும் சான்றிதழ்களை தரமாட்டார் என்று, சுந்தரத்திற்கு அழைத்து, “சார் என் ஒர்ஜினல் சர்டிஃபிகேட்ஸ் என்கிட்ட இல்ல” என்றான்.
லீகல் விசயம் பார்க்கும்போது சான்றிதழ் இருந்தால் போதும், தற்போது விரைவில் வருமாறு சுந்தர் சொல்ல, குளித்து தயாராகி கிளம்பினான்.
இம்முறை சுந்தர் சொன்ன இடத்திற்கு வந்தவன் பிரமித்துதான் போனான். அத்தனை உயர்தரமாக இருந்தது அலுவலகம். வாடகைக்கு என்றாலும் ஒரே நாளில் எப்படி இந்த இடத்தை ஏற்பாடு செய்திருப்பார்? ஒருவேளை சொந்த இடமாக இருக்குமோ என யோசித்தவன் கண்கள் அலுவலகத்தினுள் செல்ல, அங்கே எதோ நிறுவனம் இயங்கிக்கொண்டிருப்பது புரிந்தது.
“எங்க ப்ராப்பர்ட்டிதான் திருனேஷ், என் மகளுக்கு ஹாஸ்பிட்டல் கட்ட வாங்கினேன். ஆனா அவளுக்கு மெடிக்கல் படிக்க விருப்பமில்லைனுட்டா, இன்ஜினியரிங் படிச்சதையும் மறந்துட்டு அத்தை மகனே கதினு இருக்கா” என்றார் சிரிப்போடு.
தானும் சின்னதாய் புன்னகைத்தான். “பொண்ணு கல்யாணம் ஃபிக்ஸ் ஆன உடனே அக்ரிமண்ட் எக்ஸ்டண்ட் பண்ண முடியாதுனு காலி பண்ண சொல்லிட்டேன், இன்னும் பத்து நாள்ல இவங்க அக்ரிமண்ட் டேட் முடியுது. காலி பண்ணிடுவாங்க. இங்கதான் நம்ம கம்பெனி ஆரம்பிக்கப்போறோம்” என்றார்.
சுந்தரத்தோடு சற்று நேரம் பேசி முடித்த பின்னே, ரூபலஷ்மியிடமிருந்து அழைப்பு வந்தது. சற்று தனியே வந்து ஏற்றவன், விசயத்தை சொல்ல, “யாரை கேட்டு கமிட் ஆன?” என்று கொந்தளித்தார் ரூபலஷ்மி.
“யாரை கேட்கனும்னு உங்ககிட்ட கேட்கத்தான் தோணுது, ஆனா என்னால கேட்க முடியல. அப்படி கேட்குற சூழலை உண்டாக்கிடாதிங்க. நான் அப்புறம் பேசுறேன்” என்று இணைப்பை துண்டிக்க, அடுத்து தங்கையிடமிருந்து அழைப்பு.
இணைப்பை துண்டிக்க, மீண்டும் அழைத்தாள். அழைப்பை ஏற்றவன், “ஒருமுறை கட் பண்ணினேன்னா பிஸியா இருக்கேனு புரிஞ்சிக்கமாட்டியா வெண்பா? நான் அப்புறம் கால் பண்றேன்” என்றான்.
“அண்ணா, அப்பாவை ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருக்கோம், ரொம்ப கிரிட்டிக்கல் பொஸிஸன். நீ வாண்ணா” என்றாள் வெம்பிய குரலோடு.
error: Content is protected !!