அ15_1 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்..
கொல்லை துளசி எல்லை கடந்தால் 15_1
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
Advertisement
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கிருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாகச் சொல்லிச் சென்றாய்
Advertisement
Advertisement
எலும்பை உருக்கும் குளிர்காற்று திறந்திருந்த ஜன்னல் வழி அறைக்குள் நுழைந்து குளிர்ந்திருந்த அவன் மனதோடு அவன் உடலையும் குளிர்வித்துக் கொண்டிருந்தது. அந்த அவன் – மனோ. அவனைக் குளிர்வித்துக் கொண்டிருப்பது அலர்விழி அனுப்பியிருந்த அவள் புகைப்படம்.
மணற்கடிகாரம் வடிவில் கண்களை நிறைத்தாள் அவன் அழகிய இராட்சசி. வேலைப்பாட்டில் மிளிர்ந்த ஆரெஞ் நிற சைனீஸ் காலர் ரவிக்கையும், அதிக வேலைப்பாடில்லாத அழகிய புடவையும் அவளுக்கே அவளுக்கென்று வடிவமைத்தது போல் இருந்தது. அவ்வளவு நேர்த்தியாய் உடுத்தியிருந்தாள்.
Advertisement
மாராப்பு முழுவதும் குட்டி குட்டி அடுக்குகள். கொஞ்சம் அதிகமாய் சுண்டி இழுத்த தேன் நிற இடை. பார்த்தவன் இதழ் விரிந்தது. “அடக்கம் ஒடுக்கமா இப்படியே நில்லுடி..”, சிரித்துக் கொண்டான்.
அவள் தேன் நிறத்திற்கு க்ரீம் நிற பட்டு புடவை அழகு தான்.
கொசுவத்திலிருந்த படி போன்ற ஆரஜ் நிற கட்டங்களும், முந்தியில் பெரிய சதுரங்க அட்டை போன்று காட்சியளித்த ஆரெஞ்சும், யானை தந்த நிறமும் தான் புடவையை ரவிக்கையோடு இணைத்தது.
நின்றிருந்தவள் பின்னால் மங்கலாய் தெரிந்த மஞ்சள் மற்றும் ஆரஜ் சாமந்தி அவளை இன்னுமே எடுப்பாய் காட்டியது.
புருவத்திற்கு அருகே தொங்கி நின்ற சுருளை முடியும், குடை ஜிமிக்கியும், ஆரஞ் சுளை உதடும் மனோவை இனிதாக இம்சை செய்யவில்லை என்றால் கண்டிப்பாக இருவரும் நண்பர்கள் தான்!
மணி நேரமாய் அவளையே பார்த்து உருகிக் கொண்டிருப்பவன் நண்பனாய் இருக்கும் தகுதியை இழந்திருந்தான். இன்னும் விரலால் வருடவில்லை அவள் பிம்பத்தை. கண்கள் மட்டுமே வருடி நின்றது அந்த நீள நயனத்தை. சிரித்த கண்கள் கதை பேசியது அவனோடு.
அவன் கைப்பேசியை அணைத்ததும் மீண்டும் அழைக்க அவகாசம் அவளுக்குக் கிடைக்கவில்லை. மாதவன் வந்துவிடவே ஒற்றை புகைப்படம் மட்டும் எடுக்கச் சொல்லி அதை மனோவிற்கு அனுப்பவும் ஜானகி ஆண்டி அழைத்திருந்தார். அனைவரிடமும் கூறிவிட்டுக் கிளம்பத் தான் நேரம் சரியாயிருந்தது.
அவளிடமிருந்து அழைப்பு வரவில்லை. ஆனால் கிடைத்த புகைப்படமே போதுமானதாக இருக்க, அதன் பின் அவனும் அழைக்கவில்லை.
‘தனக்கும் விழிக்கும் மட்டும்’ என்று ஒன்றுமில்லை என்று எண்ணியவனுக்கு அவர்களைப் பற்றி அசை போட விடயம் அதிகம் இருந்தது. முதல் நாள் பேருந்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்தவளை சுற்றி எத்தனை பேர் இருந்தனர்? அவள் தன்னை தானே பார்த்தாள். அன்றே அவள் நயனம் அவனை இழுத்ததே.. இது அவர்களுக்கு மட்டுமேயானது தானே..
இப்படி நாள் ஒன்றிலிருந்து இருவருக்கும் இடையே மின்னல் கீற்றாய் வந்து சென்ற நிகழ்வுகளை அசைபோட்டுக் கொண்டே கண்ணயர்ந்தான்.
அவன் கனவை நிறைத்தவள் மாதவனோடு அவன் மகிழுந்தில் அமர்ந்திருந்தாள்.
“பட்டு வேட்டி எல்லாம் போட்டு ரொம்ப ஹேன்சம்மா இருக்க மாதுண்ணா”
“அர்ச்சனாவோட ஸ்ரிக்ட் ஆர்டர். அண்ணனுங்க அத்தானுங்க எல்லாம் பட்டு வேட்டியும் ரா சில்க் சட்டையும் போட்டே ஆகணும்னு சொல்லிட்டா.”
“இந்த க்ரீனிஷ்-ப்ளூ உனக்கு நல்லா இருக்குண்ணா.”
“தாங்க்ஸ் டி. ஆமா உன்ன போட்டோ எடுக்கும் போது கூட புடவைய அடக்கமா கட்டி இருந்த மாதிரி இருந்துது.. இப்போ என்ன இப்பிடி பறக்க விட்டுட்டு நிக்கற?”
என்ன கூறுவாள்? ஜானகி ஆன்டி அறையின் முழு நீளக் கண்ணாடியில் அடங்க மறுத்த கேசத்தை அடக்கிய பின் மனோ கூறியதே சரி என்று தோன்றவே மாற்றினேன் என்றா?
“சிங்கிள்ல விட்டா ஸ்டைலா இருக்கும்ன்னு தான்!”
“தடுக்கி விழுந்திடாத”
“ம்ம்.. எல்லாரும் மண்டபத்துக்கு வந்தாச்சா?”
“இந்நேரம் போயிருப்பாங்க!”. அடுத்த ஒரு மணி நேரம் எதை எதையோ பேசிக் கொண்டே மண்டபம் அடைந்தனர்.
வாயிலில் நின்று பேசிக் கொண்டிருந்த திருநாவுக்கரசிற்கு அலர்விழியை அடையாளம் தெரியவில்லை. மாதவனோடு வரவும் நெருங்கிய சொந்தம் என்று புரிந்தது.
மாமா அருகில் வரவும், “மாமா… தியாகு சித்தப்பா பொண்ணு அலர்விழி..”, என்று ஆரம்பிக்கவும் அபிராமியும் அங்கு வந்திருந்தார்.
“ஹேய்… அலர்விழி… வா வா! என்னங்க யாருன்னு தெரியல? நம்ம சௌந்தரியா அண்ணியோட மூத்தவ. இங்க தான் ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கிறதா அண்ணி இப்போ தான் சொன்னாங்க.”
“மூனு வருஷம் இருக்குமா பார்த்து? அதுக்குள்ள நல்ல வளர்ந்துட்ட. அது தான் சட்டுன்னு அடையாளம் தெரியல டா. அதுக்காக மாமாவ கோவிச்சுக்காத சரியா?”
“இல்ல மாமா.. அப்படி எல்லாம் இல்ல.”
“நீ நல்லா இருக்கியா மா?”
“நல்லா இருக்கேன் மாமா.. நீங்க நல்லா இருக்கீங்களா?”
“நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம். அம்மா அப்பா எல்லாம் உள்ள தான் இருக்காங்க போ. உள்ள அர்ச்சானாட்ட கூட்டிட்டு போ அம்பிகா”, பெரியம்மாவின் அண்ணனா இவர் என்று நினைக்கத் தோன்றியது.
“நீ அத்த கூட போ”, என்றுவிட்டு மாதவன் வினோத்தோடு இணைந்துக் கொண்டான்.
“வா டா வா டா. மூனு வருஷம் முன்ன சின்ன பொண்ணா சுத்திட்டு இருந்த. காலம் எவ்வளவு வேகமா போகுன்னு உங்கள எல்லாம் பாக்கும் போது தான் தெரியுது. நீ எப்பிடி இருக்க டா? நல்லா இருக்கியா..?”, அம்பிகா நலம் விசாரிப்போடே ஆரம்பித்தார்,
“என்ன படிக்கிற? படிப்பு எப்பிடி போகுது?”
”ஃப்ரீயா இருக்கும் போது சொல்லு.. ஒரு நாள் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்..”
“அழகா கிளம்பி வந்திருக்க. வீட்டுக்கு போனதும் எல்லா பிள்ளைகளுக்கும் அண்ணிய திருஷ்டி கழிக்க சொல்லணும்!”
“உன் தலை கலைஞ்சு போச்சு அலர். தல வார ஏதாவது ஹெல்ப் வேணும்னா அர்ச்சனாவ கிளப்ப வந்த ப்யூடிஷியன்ட்ட கேளு செஞ்சு விடுவா!”.
அவர் கேள்விகளுக்குப் பதில் கொடுத்தும், அவள் பங்கிற்குக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டும் மற்றவர்கள் இருந்த அறை நோக்கிச் சென்றனர்.
இது சொந்தங்களின் தன்மை. தன் வீட்டாள் என்ற உரிமையும் பாசமும் சொந்தத்தின் அருமை தெரிந்தவர்களுக்கு மட்டும் தான் பார்த்ததும் வரும். மகனும் மகளும் படிப்புக்காக வெளிநாடு/வெளியூர் சென்றுவிட… கணவனும் தொழில் என்று அவ்வப்போது வெளியூர் சென்றுவிடுவதால் தனிமையில் இருப்பவருக்குத் தோழமையான உறவுகள் மிகவும் பிடிக்கும். இளையவர்களோடு சட்டென்று பொருந்திக் கொள்ள அவரால் முடியும். அவர் மட்டுமா அவர் மகனும் மகளும் கூட அப்படி தான்.
இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது நிச்சயம் ஆரம்பிக்க. அலங்காரம் முதல் பந்தி வரை சிறியவர்களே எடுத்துப் போட்டுச் செய்தனர். சற்று நேரத்திற்கெல்லாம் மாப்பிள்ளை வீட்டுக் கூட்டமும், பெண் வீட்டுக் கூட்டமும், சிறியவர் பெரியவர் என்று இடம் களை கட்டியது. வருடங்கள் முன் பார்த்த பல உறவுகள் மீண்டும் ஒன்று சேர அந்த இடமே பேச்சும் சிரிப்புமாய் உயிருள்ள ஓவியமாய் மாறி.. நிகழ்ச்சி உற்சாகமாய் நடந்து முடிந்தது.
பெரியம்மா மட்டும் அவர் வாயை அவ்வப்போது திறந்து தன் இருப்பை காட்டிக் கொண்டே இருந்தார். சிரித்த முகத்தோடு பொலிவாய் சுற்றி திரிந்த அலர்விழி தான் எப்பொழும் போல் அவர் வாயில் விழுந்தாள். “சௌந்தரியா உன் பொண்ணு என்ன சினிமா காரி மாதிரி சீவி சிங்காரிச்சுட்டு வந்து நிக்கிறா? அடக்கி வை இல்ல எவனாது இழுத்துட்டு போயிட போறான்”, என்று அவர் பங்கிற்குக் கொளுத்திப் போட… அவள் போட்டிருந்த ரவிக்கைக்கு, சௌந்தரியா பாடி தீர்த்தார். ஏனோ அவர் அவ்வளவு பேசியும் பெண் அசரவில்லை. ரவிக்கையை மாற்ற மறுத்துவிட்டாள்.
“நான் சினிமான்னா வசந்தி ட்ராமாவா பெரியம்மா?”, என்று அவள் கேட்டுவிட அடுத்து என்ன நடக்கும் என்று தெரிந்த அம்பிகா தான், “அண்ணி இப்போல்லாம் பிள்ளைங்க இப்படி தான் போடுறாங்க. ஏன் அர்ச்சனாவும், வசுவும் இப்படி தானே போட்டிருக்காங்க. நல்ல நாள் அதுவுமா பிள்ளைய திட்டிகிட்டு! அலர்.. கொஞ்சம் வா டா”, என்று இழுத்துக் கொண்டு வெளியே சென்றார்.
நிச்சய விழா ஆரம்பிக்க, மேடையில் அர்ச்சனா அருகில் வசந்தியோடு நகு-வும் நின்று கொள்ள, அலர்விழியை அம்பிகா அவர் உதவிக்கு இழுத்துக் கொண்டார்.
அண்ணனாக வினோத் அர்ச்சனாவிற்கு அனைத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்ய.. மேடையில் அர்ச்சனாவின் அருகில் நின்றிருந்தவள் மீது பார்வை அவ்வப்போது பட்டு மீண்டது. பாவாடை சட்டையில் இரட்டை ஜடையில் பார்த்த உருவம் முழு பெண்ணாய் மாறியிருந்தாள்.
தாவணி கட்டிய பைங்கிளி ஈர்த்தாள், அவள் கொள்ளைக் கொள்ளும் அழகால்! முழு வளர்ச்சியில்லாத ஒற்றை கை அவளைப் பல வாலிபர்களிடமிருந்து காக்க.. வினோத்திற்கு அது ஏனோ பெரிய குறையாகத் தெரியவில்லை போலும். பால்நிலா பெண்ணின் தெற்றுப்பல் சிரிப்பில் கிறங்கி கிடந்தான்.
மதிய உணவோடு கூட்டம் குறைய ஆரம்பித்தது. இரண்டு மணி வாக்கில் வெறும் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே இருக்க.. மண்டபம் காலியானது.
சௌந்தரியா, பாக்கியம், அபிராமி என்று பெரியவர்கள் ஒரு ஓரமாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்க.. ஆண்கள் சிலர் கதையடிக்க.. சிலர் சின்ன சின்ன வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்ய.. சிறியவர்கள் ஒரு கூட்டமாகக் கைப்பேசியில் புகப்படம் எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தனர்.
வேலையை முடித்து கைப்பேசியில் யாரிடமோ பேசிக்கொண்டே ஒரு ஓரமாய் அமர்ந்த அம்பிகாவின் பார்வை முழுவதும் அலர்விழி மேல். சித்தியை பார்த்த பிரவீன் கூட்டத்தை விட்டு அவர் பின்னோடு வந்தான்.
“என்ன சித்தி.. மணி மூணாகப் போகுது. கிளம்பலாமா?”, கேட்டுக் கொண்டே அருகே வந்தமர்ந்தான் அந்த இள மருத்துவன்.
இரவு ஒரு சிக்கலான அறுவை சிகிச்சைக்கு துணை நின்றிருக்க.. அவனுக்கோ தூக்கமின்மையால் அசதி. கை கால் நீட்டிப் படுத்தால் போதும் என்றது உடல். இருந்தும் ஒருத்திக்காக இழுத்துப் பிடித்துச் சுற்றித் திரிகிறான்.
“கொஞ்ச நேரம் உக்காரு டா. நாலு வரைக்கும் மண்டபம் நமக்குத் தான்! எல்லாரும் பேசிட்டு இருக்காங்க. எப்பவாது ஒன்னு சேர்றோம்.. இருந்து பொறுமையா போவோமே..”, பேச்சு பிரவீனிடம் என்றாலும் அவர் பார்வை அலர்விழியின் மீதே.
“என்ன சித்தி..?”, அவர் பார்வை சென்ற திசையை நோக்கினான். ஏதோ புரிவது போல் தோன்றியது, இருந்தும் அமைதி காத்தான்.
“அர்ச்சனாக்கு முடிச்சதும் அடுத்த வருஷமே வினோக்கும் முடிச்சிடணும்.”, அவர் பார்வைக்கான பொருள் உணர்ந்த பின்னும் பதறவில்லை.
“ம்ம்.. அவனுக்கு என்ன அவசரம்?”, என்றான் பொறுமையாக.
“அவள பாரேன். அழகா இருக்கா டா. அழகுன்னா வெளி அழக சொல்லல. அவ எல்லாமே.. அவ சிரிப்பு, பேச்சு, அறிவு, அப்பிடி எல்லாமே. எவ்வளவு வேலை சொன்னேன் தெரியுமா? கொஞ்சம் கூட முகம் சுளிக்கல. வேலைல நேர்த்தி, சுத்தம் ரொம்ப பிடிச்சுது. எறும்பு மாதிரி சுறுசுறுப்பு. உன் தங்க அவ கிட்ட இருந்து கத்துக்கலாம்.
என்ன சொன்னாலும் மாடு மாதிரி தல ஆட்டாம சரின்னு படாட்டி மரியாத குறையாம எடுத்து சொல்ற குணம் தான் எனக்கு அவள திரும்பி பாக்க வச்சுது. ரொம்ப அருமையான பொண்ணு டா. ரெண்டாவது வருஷம் தான் முடிச்சிருக்கா.. இப்போவே அவ கை செலவுக்கு சம்பாரிக்கிறா! சமத்து! போனா கிடைக்காதுன்னு சொல்லுவாங்களே… அந்த மாதிரி பொண்ணு. அவ போயிட கூடாதேன்னு தான் அவசரம்.”
“ம்ம்ம்..”
“அடுத்த வருஷம் படிப்ப முடிச்சிடுவா. யாருக்காவது அவங்க வாக்கு கொடுக்கதுக்கு முன்ன, வினோக்கும் அவளுக்கும் விருப்பம்ன்னா எனக்கு மருமகளா கேக்கலாம்ன்னு பாக்கறேன்..”
“ம்ம்…”
“என்ன டா..? யாருன்னே கேக்கல”
“சுருள் முடிய லூசா கொண்ட போட்டு… நட்சத்திரம் மாதிரி அதுல அங்கங்க வெள்ள முத்த சொருகி.. முகத்துல சுருள் சுருளா முடியத் தொங்க விட்டுகிட்டு… ஆரஞ் கலர்ல உதடு மினுக்க… அந்த பெரிய ஜிமிக்கி ஆட ஆட சிரிச்சுப் பேசிட்டு இருக்காளே.. அவ தானே? அலர். அலர்விழி!”
அம்பிகாவிற்கு பேச்சு வரவில்லை.
“ஒன்னர வருஷமா தெரியும்! அவள பார்த்ததும் பிடிச்சு போச்சு சித்தி. யார் கிட்டயும் சொன்னதில்ல. அவட்ட கூட! உங்கட்ட தான் என் மனச சொல்றேன்.”
“பிரவீன்…?”
“ஆறு மாசம் முன்னமே என் பேஷண்ட் ஒருத்தங்க அவ அப்பாவோட ஃப்ரெண்டுன்னு தெரிஞ்சுட்டு அவர் மூலமா கல்யாணத்துக்குத் தோதா மாப்பிள இருக்குன்னு மேலாப்பில பேசச் சொன்னேன்..”
“டேய்..?”
“அவ படிச்சு முடிச்சு ஒரு வருஷம் வேலை பார்த்த பிறகு தான் கல்யாணம் பண்ணுவாளாம். அவ கொள்கையாம்!”
“பிரவீன்?”
“என்ன சித்தி?”
“அவ உனக்கு பொருத்தமில்ல டா. உன் டைப்புக்கு சரி வர மாட்டா கண்ணா.. நீ நினைக்கிற அமைதி டைப் இல்ல. உன் அம்மாக்கு அடங்க மாட்டா. அவ காட்டாறு மாதிரி நீ அணை போட முடியாது. ஃப்ரீ டைப். அர்ச்சனா ப்லௌஸ் கொஞ்சம் இறக்கி போட்டாலே நீ திட்டுவ.,. அவ ப்லௌச பாத்தியா? பின்னாடி இருந்த ஓட்டை சைஸ்ச பாத்தியா? என்ன டா இப்படி பேசறாளேன்னு நினைக்காத! இது அவ சுதந்திரம். அவ அம்மா கேட்டதுக்கே அப்படி தான் சொன்னா!
நீ இத செய்யாத அத செய்யாதன்னு கண்டிஷன் போடற டைப்… அவ உனக்கு அடங்க மாட்டாடா. அப்புறம் அவ வசதிக்கு உன் அம்மா ஒத்துக்கவே மாட்டா! அவ சத்தம் போட்டா இவ போடின்னு போய்டுவா… நித்தம் சண்டை தான் வீட்டுல! யோசி!
எந்த காரணம் கொண்டும் வேலைய எல்லாம் விடுவான்னு தோணல. அவ படிப்ப ரொம்ப விரும்பி படிக்கிறா.. ஒரு கனவோட. உனக்கு எதுலையுமே அவ பொருத்தமில்ல கண்ணா. உனக்காகக் கண்டிப்பா அவ மாற மாட்டா பிரவீன். மாற மாட்டான்னு சொல்றத விட.. அவளால மாற முடியாது!”
“அப்போ அவளுக்கு பிடிச்ச மாதிரி நான் மாறிக்கிறேன் சித்தி. அவ அமைதியா பொம்மை மாதிரி இருக்கத விட இப்பிடி சத்தமா சிரிச்சா அழகா இருக்கா இல்ல. படிக்கட்டும். வேலைக்குப் போகட்டும்.. இன்னும் அவளுக்கு என்ன என்ன தோணுதோ அப்பிடி எல்லாம் இருக்கட்டும் சித்தி… ஆனா என் கூட இருக்கட்டும். என மனைவியா!”
“கண்ணா நீ கத்தி பிடிக்கிறவன்.. அவர் கம்ப்யூட்டரோட வாழறவ. ரெண்டு பேரும் ரெண்டு துருவம் டா.. ஒத்து வருமா?”
“எல்லாம் ஒத்து வரும். அத நான் பாத்துக்கிறேன். உங்க மூத்த பையனுக்கு கேளுங்க சித்தி.”
இப்படி எல்லாம் ஒரு பெண்ணிடம் இவன் மனதை பறிகொடுப்பான் என்று யார் நினைத்தா? மனம் நிறைந்து போனது அவனை பெறாத தாய்க்கு.
“நல்ல பொண்ணு டா.. ரெண்டு பேரும் நல்லா இருப்பீங்க. அக்காட்ட சொல்லவா?”
“அதுக்கு பதில் என் ஆசைக்கு கொஞ்சம் விஷம் கொடுத்து… ஆறடி பள்ளம் நோண்டி அத உள்ள தள்ளி… பெட்ரோல் ஊத்தி கொளுத்தி பொதச்சிடுங்க சித்தி!”
“டேய்…”, அவன் தோளில் தட்டி சிரித்தார்.
“நான் சொன்னது கரெக்டா இல்லியா?”
“100%”, வாய் விட்டுச் சிரித்தார்.
மருத்துவனாய் இல்லாமல் போனால் கேட்டிருப்பான்.. “ட்வின்சா இருந்தும் ஏன் சித்தி அம்மா உங்கள மாதிரி இல்ல?”, என்ற கேள்வியை!
“இப்போவே அவங்க வீட்டுல பேசி முடிவு பண்ணிட்டோம்னா நாளைக்கு பின்ன பிரச்சினை இல்ல பாரு! அண்ணி காதுல போட்டு வைக்கிறேன் சரியா?”
“சரி அம்மாட்ட பக்குவமா சொல்லிட்டு.. நீங்களே பேசுங்க சித்தி. என்னனாலும் எனக்கு அவ வேணும். அம்மா வேண்டாம் சொன்னா அம்மா இல்லாமலே கல்யாணம் நடக்கும்ன்னு சொல்லிடுங்க!”
“அவ விருப்பமாது கேக்கட்டுமா வேண்டாமா?”, விளையாட்டு போல் கேட்டார்.
“அவட்ட சரியான நேரம் பாத்து நான் சொல்லிக்கிறேன். அவ விரும்பினாலும், விரும்பாட்டாலும்.. அவ கழுத்துல நான் தான் தாலி கட்டுவேன் சித்தி. யாருக்காகவும் அவள விடுறதா இல்ல…”
அம்பிகா இப்படி ஒரு தீவிரத்தை அவனிடம் எதிர்பார்க்கவில்லை. வார்த்தையின் வீரியம் முகத்திலோ குரலிலோ இல்லை. அவன் பார்வை அலர்விழியை துளைத்துக் கொண்டிருந்தது.
மூத்தவன் அவருக்கு என்றுமே ஸ்பெஷல் தான். அவன் மேல் தனி பிரியம் உண்டு. பிரவீன் விருப்பம் தான் அவர் விருப்பமும் கூட! இன்று அவன் பார்வையையும்.. அலர்விழியையும் அவர் பார்த்திராவிட்டால் பிரவீன் வார்த்தைக்கு இத்தனை கனம் கொடுத்திருப்பாரா என்றால்.. இல்லை எனலாம். அலர்விழியை மிகவும் பிடித்துப்போனது அவருக்கு. அதனால் அவரின் செல்ல மகனுக்கு அவளை முடிக்க அவர் இன்றே சௌந்தரியாவிடம் பேசிவிடும் அவசரம் அவரிடம்.
“நான் பாத்துக்கிறேன் கவலையை விடு! எப்படியோ நம்ம வீட்டு மருமகளானா சாரி தான்! இருந்தாலும் பிரவீன் உனக்கு அவ தங்க தான் டா சரி மேச். சமத்து பொண்ணு”
“சித்தி அவ கைய பாத்தீங்களா?”
“ஏன் அதுக்கு என்ன குறை?”
“குறை தான் குறை!”
“எனக்கு அப்படி ஒன்னும் தோணல. போடா.. இன்னைக்கு மண்டபத்துல வந்த பொண்ணுங்கள்ல ஒருத்தி அவ கிட்ட நிக்க முடியுமா? என்ன ஒரு அழகு! முகத்துலயும் சரி குணத்துலயும் சரி.. இன்னும் அந்த இன்னொசன்ஸ் அப்பிடியே இருக்கு.”
“அப்போ அவ உங்களுக்கு மருமகளா இருக்க ஓகேவா?”
“வினோக்கும் அவளுக்கும் ஓகேன்னா.. எனக்கும் ஓகே தான்! ஆனா அவ ரொம்ப சின்ன பொண்ணுடா.”
“கொஞ்சம் பொறுங்க. அர்ச்சனா கல்யாணம் போது நமக்கு தெரிஞ்சுடும் அவ உங்க மருமகளா இல்லையான்னு..”
“என்ன டா பேசற? புரியற மாதிரி பேசேன்..”
“வினோவ கவனீங்க. அவன் பார்வையை கவனீங்க..”, கூறியவன் மீண்டும் மாதவன் எதிரே சென்று அமர்ந்துகொண்டான். அதாவது அலர்விழி அருகே.
“அம்மா… ஐயா பார்க்கிங் கிட்ட உங்கள கூப்பிட்டாங்க..”. வேலையாள் ஒருவன் வரவே, “அர்ச்சனா.. நகைய கழட்டிட்டு போக ரெடி ஆகு. வசந்தி கொஞ்சம் வா..”, என்று கூறிவிட்டு அம்பிகா எழுந்து வேலையை பார்க்க சென்றுவிட்டார்.
அர்ச்சனாவோடு அலர்விழி சென்றுவிட, கரத்தில் இருந்த பனிக்கூழை நகுநா கையில் திணித்துவிட்டு வசந்தி அவள் அத்தையோடு சென்றுவிட.. ஒரு ஓரமாக அமர்ந்த நகுநா உலகம் மறந்து பனிக்கூழோடு ஐக்கியமானாள்.
மாதவனும் வினோத்தும் நகர்ந்துவிட, அங்கிருந்த நாற்காலியில் தனித்துக் கிடந்த கைப்பேசியை பிரவீன், வீட்டாருடையதாக இருக்கும் என்ற நினைப்பில் சட்டைப்பையில் போட்டுக் கொண்டு நகர்ந்தான்.
