Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kollai Thulasi Ellai Kadanthaal

அ32-2 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்

கொல்லை துளசி எல்லை கடந்தால் 32(cont…)

 

கோபப்பட்டுப் போனவனால் ஏனோ பாதி தூரம் செல்லயியலவில்லை. வேகம் மட்டுமே அவன் மூளையில் இருக்க, வீட்டில் உடல் சோர்வோடு இருந்த பெண் பின்சென்றிருந்தாள்.

 



Advertisement

சென்று கொண்டிருந்தவன் பார்வையில் விழுந்தது சாலையின் நடுவே இருந்த மதிலுக்கு மறுபுறம் விபத்துக்கு உள்ளாகியிருந்த வாகனமும், போலீசும், ஆம்புலன்சும்! அந்த வாகனத்தின் நிலை பார்த்தவன் மனம் பிசைந்தது.

 

தன் வாகனத்தின் வேகம் பார்த்தான். மனோவின் கார் 96மயில் வேகத்தைத் தொட்டிருந்தது. இந்த வேகத்தில் சென்றால் என்னாகும் என்று தோன்றவுமே வேகம் குறைந்தது. இதோ, சற்றுமுன் பார்த்தானே தலைகீழாகக் கிடந்த வாகனத்தை… அப்படி ஒரு நிலை அவனுக்கு வராமல் போனது கடவுள் கிருபை! இவனுக்கு அப்படி ஒரு நிலை வருமென்றால், அதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது விழி மட்டும் தான் என்று புரிய நொடி நேரம் எடுக்கவில்லை. அவனுக்கு கீறல் விழுந்தாலும் அவனை விட அவளுக்கு தானே வலிக்கும்.

Advertisement

 

Advertisement

‘நீங்க இல்லன்னா செத்துடுவேன் மனோ’ என்றவள் தானே அவனைச் சாடினாள். தன் மேல் உயிராய் இருப்பவளுக்கு ஆசை வார்த்தை கூற மட்டும் தான் அவர்கள் உறவில் அனுமதி உள்ளதா? அவள் கோபத்தை யாரிடம் காட்ட முடியும்? தன் மேல் தானே… மனம் விழியை மட்டுமே நினைத்தது. அன்றே அவள் மனதைத் திறக்க விடாமல் சட்டையைக் கழட்டி வம்பு செய்தது நினைவில் வந்து போனது. 

 

‘ஒற்றை வார்த்தைக்குச் செத்துவிடும் காதலா எனது?’ அவள் கேட்ட கேள்வியை, மனம் கேட்டது.

Advertisement

 

‘முடியல மனோ… போகாதீங்க மனோ’ கெஞ்சி நின்றவள் உருவம் அவனை பாடாய்ப்படுத்த, மனம் முழுவதும் பேரன்பு கொண்டவனால் மூளையை ஆக்கிரமித்த கோபத்தை இழுத்துப்பிடிக்க முடியவில்லை. வீட்டை நோக்கித் திரும்பியிருந்தான்.

 

‘அவ கேட்டா..? ஆமா டி அப்பிடி தான் நான் உன்ன பாப்பேன்னு சொல்லி, பேசின வாய்க்குத் தண்டனை கொடுக்காம ஓடி வருவியா?’ கேட்டுக்கொண்டான். ‘இருடி.. திகட்டத் திகட்ட உன் கண் சொருகி என் கையில் நீ விழற வரைக்கும்  உன் வாய்க்குத் தண்டனை கொடுக்கல, நான் உன் மனோ இல்ல..’ சிரித்துக் கொண்டே கதவைத் திறக்க, இருட்டான வீடு அவனை வரவேற்றது.

 

அலர்விழியின் அறையை எட்டிப் பார்த்தான், உறங்கியிருந்தாள். களைப்பில் அவனும் சென்று உறங்கிவிட, காலை மூன்றுக்கெல்லாம் முழிப்பு தட்டியது.

காலைக்கடன், காபி, கைப்பேசி என்று நான்கு வரை சமாளித்தவன் விழியைத் தேடி அவள் அறைக்கு வர, விளக்கை எரியவிட்ட பின்னும் பெண் விழித்தாளில்லை.

 

‘ஒருத்தன் கோவிச்சுகிட்டு போனானே அவன நாலு தரம் கூப்பிடுவோம்னு தோணுதா இவளுக்கு! போனா போகுதுன்னு ஒரே ஒரு வாய்ஸ் மெசேஜ்! அப்புறம் குறட்டை!! மணிக் கணக்கா தூங்கிறத பாரு.. தூங்கு மூஞ்சி’ முணுமுணுத்துக் கொண்டே வர, கட்டிலுக்குக் கீழே கிடந்த உடைகளைப் பார்த்தவன், ‘கொழுப்ப பாரு இவளுக்கு! நின்ன இடத்தில இருந்தே ட்ரெஸ மாத்துறது. அத எடுத்து அழுக்கில போட கூட சோம்பேறித்தனம்…’ என்று அதை அனைத்தையும் எடுத்து அழுக்கு கூடையில் போட்டு வந்தான்.

 

ஒலியும் ஒளியும் பெண்ணை அசைத்ததாகத் தெரியவில்லை என்றதும், “ஏய் தூங்கு மூஞ்சி.. எழுந்திரு டி… எவ்வளவு மணி நேரம் தூங்குவ?” என்று போர்வையை இழுத்த நொடி, இதயம் துடிக்க மறந்த நொடி. பயத்தில் போர்வையை அவள் மேல் விட்டெறிந்தவன் கைகளும் கால்களும் நடுங்க ஆரம்பித்தது. என்ன கோலம் இது? சுவரை முட்டி நின்றவனுக்கு மூளை உறைந்து போனது.

 

எகிறிக் குதித்த மனதை கட்டுப்படுத்தத் தெரியவில்லை. நடுக்கமும் நின்றபாடில்லை. மெல்லத் தலை தூக்கிப் பார்த்தான். அவளிடம் சலனமில்லை என்றதும் உடல் ஏகத்திற்கும் நடுங்கியது. அவன் விழிக்கு என்னானது? மூக்கின் கீழ் கை வைக்க… மூச்சிருந்தது. 

 

உள்ளம் படபடக்க, உடல் நடுங்க மெத்தையோரம் உள்ளங்கைகளில் தலைதாங்கி அமர்ந்துவிட்டான். அவன் விழியா? ஏன் இப்படி? அவன் வாங்கி கொடுத்ததென்று பிடிக்காமல் கோபத்தில் கழட்டி எறிந்திருப்பாள் என்று தன்னையே ஆறுதல் படுத்தத்தான் முயன்றான். ஆனால் அது உண்மை இல்லை என்று கூற தனி அறிவு தேவைப்படவில்லை. காலைச் சுற்றிய பாம்போடு விட்டுப்போன மடத்தனம் உரைத்தது. இப்படியும் மனுஷ ஜென்மமா?

 

முன்போலவே மூடிவிட்டான். “பட்டு…” கன்னம் தட்டினான். அசைவில்லாமல் படுத்திருந்தவள் உள்ளுக்குள் பயத்தைக் கிளப்பினாள். அப்படி என்ன தூக்கமிது? உணர்வில்லாமல்? தூக்கம் தானே? 911 அழைக்கவேண்டுமா?

 

நெஞ்சில் காது வைத்தான். ரிதம் மாறாமல் இதயம் இசைத்தது. ஓரத்தில் நிம்மதி மூச்சு வந்தது.

 

“விழிமா… பட்டு…” பெண் அசைந்தாளில்லை. மயக்கமா? பாவி என்ன செய்து போட்டிருக்கிறான் என் செல்ல சிட்டை? கண்கள் அருவியாய் கொட்ட, “அடியேய்.. பயமுறுத்தாத! விழி, எழுந்திரு டி… பட்டு ப்ளீஸ் கண்ணத்திற டி…” கெஞ்சினான்… கொஞ்சினான்.. கதறினான். அசைந்தாளில்லை.

 

“விழி எழுந்திரு டி..” பயத்தில் உலுக்கினான்.

 

கண்கள் திறக்காமல், “மனோ…” என்ற தெளிவில்லாத முனகல் பதிலாக வந்தது. அவள் தலை மாட்டில் தளர்ந்தமர்ந்தவன், அவள் விழிக்கக் கண்மூடி காத்திருந்தான். கண் விழித்து, அவள் தான் கூறவேண்டும் நடந்தது என்னவென்று! பதில் தெரியாமல், என்னவென்று யோசிக்கவும் முடியாமல் கண்களில் வழியும் நீரைத் துடைக்கவும் தோன்றாமல், அமைதியாகக் கண்மூடி கிடந்தவளைப் பார்ப்பதும் கண்களை மூடுவதுமாக அமர்ந்திருந்தான்.

 

கண்கள் மூட, மூடிய கண்களுக்குள் நேற்றைய இன்ப தருணங்கள் அலைமோதி வந்தது. மோதிரம் போட்டு நிச்சயித்த பின் அவள் தனக்கானவள் தானே? நான்கு மணி நேரம் தான் வீட்டில் இல்லை! என்ன நடந்தது? எதுவரை நடந்திருக்கும்…? தொண்டை கசத்தது. கண்ட காட்சியே அவன் மனதை பிய்த்தெடுக்க, எதுவும் யோசிக்கப் பிடிக்கவில்லை. யாராக இருக்கும் என்று மட்டும் கூறாமலே அறிந்து கொண்டான். எதுவும் ஆகியிருக்கக் கூடாது என்ற வேண்டுதல் வைத்தான்.

 

பாவி…! எத்தனை நல்ல மனதோடு அவனை வீட்டில் ஏற்றி, முடியாத போதும் அவள் கையால் சோறு போட்டாளே? சோறு போட்டவளை குதறி போட்டுவிட்டானே! நாய் கூட ஒரு நாள் சோறிட்டவனை பார்த்தால் வாழ் நாள் முழுதும் வாலாட்டுமே…! எபிக்கு மனம் ஆறவே இல்லை. இதே போல் அவனைச் சிதைக்கத் தோன்றிய மனதை கட்டுப்படுத்தத் தெரியவில்லை. யாரை குற்றம் சொல்ல? காக்க வேண்டியவன் காக்காமல் போனது தானே குற்றம்! நினைத்து நினைத்து தலையில் அடித்துக் கொண்டான்.

 

விசும்பல் சத்தம் அவனை நிகழ்விற்குக் கொண்டு வர, கூந்தல் புரண்ட முதுகு அருகில் சென்றான். ஆறுதல் வார்த்தைகள் அவனுக்கே தேவைப்பட, தேடியும் கிடைக்கவில்லை, அவளுக்கு தானம் செய்ய.

 

தோள்கள் இரண்டிலும் கைகள் வைக்க, சில்லிட்ட வெற்று தோள் அவனுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்தவில்லை மாறாகக் குலுங்கி அழுபவளின் வலியை மட்டுமே கடத்தியது.

 

கைகளைத் தட்டிவிட முயன்றவளைப் பொருட்படுத்தாமல் இடையோடு அவன் கட்டிக்கொள்ள, தோளில் இறங்கிய தன்னவனின் உஷ்ணமான நீர்த் துளிகள் வழிந்து மார்பை சுற்றியிருந்த போர்வையில் மோதி நிற்க, மட்டுப்பட்டிருந்த விசும்பல்  அதிகமானது.

 

“எல்லாமே முடிஞ்சுடுச்சா மனோ…” கேட்டு முடிக்கும் முன் மீண்டும் தாளமுடியா வேதனையின் உடைந்தழ ஆரம்பித்தவளைத் திருப்பி, கன்னம் துடைத்தான். அழுகையைச் சகிக்க முடியாதவனாய் குரல் கரகரக்க, “சாரி டி பட்டு” என்றவன் கண்களும் அதன் ஊற்றை நிறுத்த முயலவில்லை.

 

கண்கள் உயர்த்தி முகம் பார்த்தாள். ஒட்டுமொத்த வலியைத் தாங்கியிருந்த கண்கள்! “ஏன் மனோ?” கேட்டவள் உதடு துடிக்க, அவன் மனம் துடித்தது.

 

என்ன கூற? பெண் முகத்தை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான். திமிறியவளை விடமனமில்லாமல் அணைத்தான். தனக்குள் இறுக்கிப் புதைக்க முயன்றான். “மடையன் நான்! பெரிய தப்பு பண்ணிட்டேன் டி. சாரி டி பட்டு” என்றவன் கண்களின் ஈரம் பெண்ணின் தலையை நனைத்தது. அவன் கண்ணீர் பெண்ணிற்குச் சகிக்கவில்லை. மனோவோடு போராட முயலவுமில்லை. மனமுமில்லை.

 

அரை மணி நேரக் குளியல் கண்ணீரை மட்டுப்படுத்தியது. என்ன யோசித்தும் ஒன்றுமே நினைவில் வரவில்லை. எப்படி இது சாத்தியம்…? ஏன் எதுவுமே தனக்கு தெரியவில்லை? போட்டுக்கொண்ட மாத்திரையாக இருக்கும் என்றது அறிவு. மயங்கிப் போனாளா இல்லை நினைவு மட்டும் இல்லையா? தெரியவில்லை! சில மாத்திரைகள் போதை போல்! டேட்-ரேப் ட்ரக்(Date-rape drug) என்பார்கள் அதை. மருந்தை எடுத்தபின் விழித்திருந்தாலும் நிகழ்வுகளை நினைவில் வைத்துக்கொள்ள அது விடுவதில்லை. அப்படி தான் ஏதோ நடந்திருக்கும் என்று தோன்றியது.

 

மனோவால் மயங்கிக் கிடப்பவள் மேல் அவன் ஆசையை தணித்துக்கொள்ள முடியுமா? கண்டிப்பாக முடியவே முடியாது.

மனோவால் திருமணத்திற்கு முன் அவள் அனுமதியின்றி அவளோடு படுக்கையை பகிர்ந்துகொள்ள முடியுமா? முடியாது! நிச்சயம் மாட்டான்.

 

பின் என்ன நடந்திருக்கும்? தான் தான் இதற்கு காரணமா? மனோவின் தவிப்பான முகம் முன்வர, அவனைக் குற்றவாளிக் கூண்டில் மனம் ஏற்ற மறுத்தது. கண்டிப்பாக மனோ முன்னேறியிருக்க மாட்டான் என்பது நிச்சயம். போட்ட மாத்திரையின் தாக்கத்தால், தான் தான் மனோவின் உணர்வுகளைத் தூண்டியிருக்க வேண்டும், அவளால் தான், அவர்கள் இருவரும் தங்கள் எல்லை மீறியிருக்க வேண்டும்! மனம் முழுமையாக நம்பியது. மருத்துவன் கிளம்புவதாக உள்ளே பெட்டியை எடுக்கச் செல்லவும் அவனைப் பற்றி  நினைக்கக் கூட இல்லை.

 

நடந்தது தன் மனோவோடு தானே… என்றானாலும் அவனோடு நடக்கப்போவது தானே… ஏதேதோ கூறி தன்னை ஆறுதல் படுத்திக்கொண்டாள். மனம் ஓரளவிற்கு சமன்பட்டது.

 

உடல் சோர்வோ.. உள்ள சோர்வோ முழு நாளும் மெத்தையில் கழிந்தது, அலர்விழிக்கு. மனதைக் குழப்பிக்கொள்ளவில்லை. அவள் மனோவோடு தானே என்ற எண்ணத்தினால் அவளை வருத்திக் கொள்ளவில்லை. முதல் கூடல் நினைவிலிருந்திருக்கலாம் என்று ஒரு ஓரத்தில் தோன்றியது.

 

அன்று முழுவதுமே மனோவின் கண்கள் சூனியத்தை வெறிக்க, மனமும் அப்படி தான் இருந்தது. அவனால் வெளிவர முடியவில்லை. அலர்விழியிடம் உண்மையை உரைக்க வேண்டுமா? அவன் விழியால் கண்டிப்பாகத் தாங்கிக்கொள்ள இயலாது என்பதைவிட அவனுக்கு உண்மையை அவன் வாயால் கூற திராணியில்லை எனலாம்.

 

தன்னோடு தான் உறவாடியதாக நம்புகிறாள். இப்பொழுதும் காயம் தான். ஆனால் ஆராத காயமாகாது, நாளடைவில் வலியோடு காயமும் காணாமல் போய்விடும்! கண்டிப்பாக வடுவாக மாறாது என்பது திண்ணம் என்பதால் அலர்விழிடம் கூறுவதில்லை என்ற முடிவோடு கைக்கட்டி மரத்தில் தாவி விளையாடிக் கொண்டிருந்த பறவைகளை வெறித்தான். ஒரு பறவை பறந்திருக்க, மற்றொன்று தனித்திருந்தது. எங்கிருந்தோ பூனை ஒன்று பாய, கிளையில் அமர்ந்திருந்த குட்டி குருவி தொப்பென்று கீழே விழுந்தது.

 

வாழ்க்கை விசித்திரமான ஒன்று. எப்பொழுது யாருக்கு என்ன நடக்கும் தெரியாது. எதுவுமே நிரந்தரமல்ல என்பதை எடுத்து காட்டியது, நடந்த நிகழ்வு! விதி வலியது போலும்!

 

திரும்பியவன் கண்களில் பட்டது, ஜன்னலருகே அலர்விழி வைத்திருந்த துளசிச் செடி. சென்ற முறை பிரிட்ஜ்வாட்டர் கோவிலுக்கு சென்றபோது பொக்கிஷமாய் வாங்கியது. கூடவே அவள் கூறிய வார்த்தைகளும் உள்ளுக்குள் எதிரொலித்தது.

 

‘இங்ளிஷ்ல இதுக்கு ஹோலி பேசில்ன்னு பேரு! ஹோலின்னா தெரியும்ல்ல? பரிசுத்தம்! பாட்டி சொல்லுவாங்க மனோ…. நம்ம எண்ணங்கள் துளசி மாதிரி இருக்கணும்னு! பரிசுத்தமா, மேன்மையானதா!

மனுஷனே எண்ணங்களோட குவியல் தானே. நம்ம எண்ணங்கள், கோட்பாடுகள், நம்பிக்கைகள் எல்லாம் சரின்னு நாம நினைக்கிறனால தான் அத பொக்கிஷமா நினைச்சு, நம்ம எண்ணபடி வாழ்க்கைய வாழறோம்.

நம்ம யாருன்னா… நம்ம எண்ணம் தான் நாம! அதனால் தான் நம்ம எண்ணமும் கொல்லையில இருக்க துளசி மாதிரி பரிசுத்தமா, உயர்ந்ததா இருக்கணும்.  

நம்ம எண்ணங்கள் அதோட பரிசுத்தத்தை இழக்கும் போது நாம மனுஷங்கிற தகுதிய இழந்திடுவோம்ன்னு பாட்டி சொல்லுவாங்க மனோ.’

 

பிடிக்காத பெண்ணை அடைய அவள் விருப்பமே இல்லாமல் உறவு வைத்துக் கொள்ள சில மனித மிருகங்களால் எளிதில் முடிகிறது. ஆனால் எளிதில் நடத்தி முடிக்கும் ஒழுக்கம் கெட்ட செயல் அவள் ஆயுசுக்கும் வடுவாய் வலியாய் நின்றுவிடும்! காலபோக்கில் அதைத் தாண்டிவிடலாம் தான். ஆனால் அது எடுத்துக்கொள்ளும் காலம் ஒரு ஆயுள் என்று அவனுக்குப் புரிவதே இல்லை என்பது தான் வேதனை!

 

ஒழுக்கம் என்ற எல்லையை மீறியிருந்த பிரவீன் எந்த வகையில் சேருவான்?

 

ஒருவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்ற கோட்பாட்டில் வளர்ந்தவன் மனதில், ‘எப்படி தன் வலியை பிரவீனுக்கு கடத்துவது’ என்ற எண்ணம் ஓடிகொண்டிருக்கிறதே! மேன்மையான எண்ணத்தின் எல்லைகளைக் கடந்துகொண்டிருக்கும் மனோவா எந்த வகையில் சேருவான்?

 

காதலில் தப்பேது தவறேது?! –  எந்த முட்டாள் எந்த முட்டாளுக்கு கூறியதோ!

 

 

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!