Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை அச்சம் நாணம்

ஆசை அச்சம் நாணம் 12.1

அத்தியாயம் 12

விஷ்ணு வீட்டிற்கு வரும்போது காவ்யா வீட்டில் இருந்தாள். இவள் வந்து எட்டு மாதங்கள் ஆனபின்னும் இன்னும் கோபாலனும் மகளிடம் சகஜமாக பேசுவதில்லை. தேவைக்கு மட்டுமே பேசுவார்.

விஷ்ணு காவ்யா இருக்கும் திசை பக்கம் கூட திரும்பமாட்டான். அன்னையோடு மட்டுமே சகஜமான பேச்சு. அதுவும் மாலை நேரத்தில் மட்டுமே.



Advertisement

காலை கல்லூரி செல்லும் நேரம் தந்தையும் விஷ்ணுவும் வீட்டில் இருப்பார்கள். இரவு உணவு காவ்யாவிற்கு அவளின் அறையில் வைத்திடுவார் பிரபாவதி. ஆரம்பத்தில் காவ்யா மிகவும் வருந்தினாள்.

‘எனக்கு நீயும் முக்கியம், விஷ்ணுவும் முக்கியம். நீ செய்ததை விஷ்ணுவால இன்னும் ஏத்துக்கமுடியல. அவன் கோபம் நியாயமானதுதானே? அவன் உணர்வுக்கு மதிப்பு கொடுக்கனும்ல? நீ டைனிங் டேபிள்ல சாப்பிட்டு அவன் பட்டினி கிடந்தா என்னால தாங்க முடியாது’ என்று மகளை தேற்றுவார். தான் செயலுக்கு கிடைத்த தண்டைனை என வேதனையோடு நினைத்துக்கொண்டாள் காவ்யா.

தன் செயலால்தான் தந்தைக்கு நெஞ்சுவலி வந்தது, இந்த நிலையில் பெற்றோரை தனித்துவிட மனமில்லாமல்தான் விஷ்ணு யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றிபெற்றும் நேர்காணலுக்கு செல்லவில்லை என்று மனமுடைந்து போயிருந்தாள் காவ்யா.

Advertisement

தற்போது விஷ்ணுவிற்கு வேலை கிடைத்துவிட்டது என்று அன்னை சொன்னதும் அளவில்லா சந்தோசம் கொண்டாள். இனிப்பும் உண்டாள்.

Advertisement

விஷ்ணுவின் பைக் சத்தம் கேட்டதும் பிரபாவதி மகளைப் பார்க்க, வாடிய முகத்தோடு எழுந்து உள்ளே சென்றிருந்தாள் காவ்யா. அறைக்கதவு திறந்துதான் இருந்தது.

அன்னையின் ஆசைக்காக பணி நியமன கடிதத்தை பூஜையறையில் வைத்து பெற்றோரோடு வணங்கினான். மகிழ்வோடு இனிப்பு உண்டான். பிறகு பிரபாவதி சாப்பிட அழைக்க, விஷாலினியோடு உண்டதாக சொல்லி தாய் தந்தை உண்ண இவனே பரிமாறினான் மகிழ்வோடு.

இவையனைத்தையும் தனதறையிலிருந்து ஏக்கமாய் பார்த்திருந்தாள் காவ்யா. இவளின் காலனி வைத்து காவ்யா உள்ளே இருக்கிறாள் என்று அறிந்திருந்தான் விஷ்ணு. ஆனாலும் காவ்யா என்றொருத்தி வீட்டில் இல்லாதது போலத்தான் இருந்தான்.

Advertisement

பிரபாவதியும் கோபாலனும் உண்டு முடித்ததும், “விஷ்ணு நீயே போய் மேகலைக்கு இனிப்பு கொடுத்துட்டு வா” என்றார் கோபாலன்.

முன்பென்றால் கோபாலன் சொல்லவும் மாட்டார், சொன்னாலும் இவன் செய்யமாட்டான். ஆனால் தற்போது இரு வீட்டிற்கும் உறவு அப்படியில்லையே… தனது பக்க விளக்கத்தை கொடுத்தபின்னே விஷ்ணுவும் மேகலையோடு இயல்பாய் பேச ஆரம்பித்திருந்தான். விஷாலினி மீது அக்கறை கொள்கிறான் என்பதால் மகன் செய்வான் என்ற எண்ணத்தில் சொன்னார் கோபாலன்.

காவ்யாவின் நிலையை அனைவரும் துக்கம் விசாரிப்பது போல் விசாரித்திருந்த நிலையில் மேகலை மட்டுமே காவ்யாவிற்கு தைரியம் சொன்னார்.

எனக்கு போல் அல்ல, உன் புருசன் உன்னை மட்டும்தான் விரும்பியிருக்கான், பொண்டாட்டியை, அம்மாவை எப்படி சாமாளிக்கனும்ன்ற பக்குவம் இல்லாததால இப்படி நடந்திருக்காங்க, இப்போதைக்கு நீ பிரிஞ்சிருக்கிறதே நல்லது.

நல்லா படி, உனக்குனு ஒரு அடையாளத்தை தேடிக்கோ. உன் கையில வருமானம் இருந்தா உன்னை தரக்குறைவா பேச பயப்படுவாங்க. உண்மையான காதல்னா திரும்ப வருவாங்க.

ரிஜிஸ்தர் மேரேஜ் செய்ததால உன் அனுமதி இல்லாம இன்னொரு கல்யாணம் செய்ய முடியாது. தைரியமா இரு’ என்று அந்த நேரத்தில் மேகலையின் அனுசரனை காவ்யாவிற்கு மட்டுமின்றி பிரபாவதிக்கும் பெரும் ஆறுதலை கொடுத்தது. அதன்பின்னே பிரபாவதி மேகலையின் உறவு இன்னும் பலப்பட்டது.

எனவே, கணவன் சொன்னதை விஷ்ணு செய்வானா என்ற எதிர்பார்ப்போடு பிரபாவதி பார்க்க, அந்த நேரம் மேகலையே இவர்கள் வீட்டிற்கு வந்தார்.

கோபாலன் அழைக்கும் முன்னே “வாங்க ஆன்ட்டி” என்று இன்முகத்தோடு வரவேற்றான் விஷ்ணு.

“என்ன வேலை தம்பி கிடைச்சது? விஷ்ணுவே சொல்லட்டும்னு அண்ணா சொல்லமாட்டேனுட்டார்” என்றார் ஆவலாக.

விஷ்ணு தனது வேலையை சொல்ல “அண்ணனோட கஷ்ட காலம்லாம் இன்னைக்கோட முடிஞ்சது” என்று பெருமகிழ்ச்சி கொண்டார் மேகலை.

‘அவளும் அவங்க கோபால் மாமா கஷ்டப்படத் தேவையில்லன்றா, ஆன்ட்டியும் அப்பாக்குதான் பார்க்குறாங்க’ என மனதோடு இன்பமாய் சலித்துக்கொண்டவன், “ம்மா ஆன்ட்டிக்கு ஸ்வீட் எடுத்து வா” என்றான்.

இனிப்பை வாங்கிக்கொண்டு சற்று நேரம் பணி பற்றி கேட்டறிந்து, “பசங்க ரொம்ப கிண்டல் பண்றாங்களாமா தம்பி?” என்றார் கவலையாக.

“இல்லை ஆன்ட்டி, சின்ன விசயத்துக்கே பயந்துருக்கா, பேசிட்டு வந்திருக்கேன், இனி சரியாகிடுவா” என்றான்.

“நான் கேட்டதும் உங்க முகம் வாடிடுச்சே, என்னைக்கும் இல்லாம உங்களை கால் பண்ணி வர சொல்லியிருக்கா. எதாவது பெரிய பிரச்சனைங்களா? நான் கவலைப்படுவேனு சொல்ல வேணாம்னு சொல்லியிருக்காளா?” என்றார் தவிப்பாக.

“இனி சரியாகிடுவா ஆன்ட்டி” என்றவன், அன்னை மகளின் புரிதலில் வியந்துதான் போனான்.

எதுவானாலும் தன்னோடு பகிர்ந்துகொள்ளும் மகள் இன்று இச்சிறு விசயத்திற்காகவா விஷ்ணுவை அழைத்திருப்பாள் என்று மனம் தெளிவடையாத போதும், வேலை கிடைத்த மகிழ்வில் இருப்பவர்களின் கொண்டாட்டத்திற்கு தடையாக இருக்கவேண்டாம் என்று “சரி தம்பி, பூ கட்டனும்” என்று தனது வீட்டிற்கு கிளம்பினார் மேகலை.

எங்கே ட்ரைனிங், என்ன மாதிரியான பணி தனக்கு? தனக்கு கீழ் வேலை செய்பவர்கள் எத்தனை பேர் என்பதையெல்லாம் விஷ்ணு விளக்க, வானில் மிதந்தார் கோபாலன். மனம் கொள்ளா பெருமையோடு கேட்டுக்கொண்டிருந்தார் பிரபாவதி.

கண்களில் நீர் வழிய அண்ணனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள் காவ்யா. தன்னால் இயல்பை தொலைத்தவன் பல மாதங்களுக்கு பிறகு இன்றுதான் பழைய சிரிப்புடன் காணப்படுகிறான்.

தான் மட்டும் இப்படி செய்யாமல் இருந்திருந்தால் இந்நேரம் தன்னை தூக்கி தட்டமாலையாய் சுழற்றியிருப்பான். எந்த விசயமானாலும் விஷ்ணு முதலில் பகிர்வது தன்னிடம்தான். இனி அந்த காலம் எப்போதும் வரப்போவதில்லை என்று உடைந்து போனாள் காவ்யா.

சற்று நேரம் பேசியிருந்த பின்னே தந்தையை தனியே அழைத்துச் சென்றான் விஷ்ணு. காவ்யா இருப்பதால் தனியே செல்கிறான் என்று நினைத்த பிரபாவதி மகளைப் பார்த்தார்.

தந்தையோடு வெளியேறியது காவ்யாவிற்கும் வலிதான் என்றாலும், மகள் மகன் என்று பாராமல் இருவரையும் சமமாய் வளர்த்த தந்தைக்கு துரோகம் செய்ததோடல்லாமல் அவமானத்தை தந்தேன். அண்ணன் பெற்றோரை பெருமையடைய செய்திருக்கிறான் என்று பெருமையாய் நினைத்தவள் “விஷ்ணு சந்தோசம்தான்ம்மா இப்போ முக்கியம்” என்றாள் புன்னகையோடே.

தந்தையோடு மாடிக்கு அழைத்து வந்தவன் விஷாலினிக்கு இன்று நடந்ததை விளக்க, பேரத்திர்ச்சிக்குள்ளானார் கோபாலன். பிறகு அன்னைக்கு தெரிய வேண்டாம் என்றும், ஏன் அப்படி சொன்னாள் என்றும் விளக்கியவன், “இந்த வயசுல எத்தனை பக்குவம்ப்பா அவளுக்கு?” என்றான் பெருமையாக.

“பெருமையாவும் இருக்கு, பாவமாவும் இருக்கு விஷ்ணு, பட்டாம்பூச்சியா பறக்குற வயசுல இத்தனை மனஉளைச்சல் அந்த பிள்ளைக்கு” என வருந்தியவர், “அவங்கப்பாவை பார்த்ததும் ஏதும் உணர்ச்சிவசப்பட்டாளா? அதாவது நம்ம அப்பான்ற மாதிரி?” என்றார்.

“ம்ஹும்… கொஞ்சம் கூட அப்படி ஃபீலிங் இல்லப்பா. அம்மா வாழ்க்கையை நாசமாக்கின நரகம்ன்ற ரேன்ஜ்லதான் பார்த்தா. முட்டைக்கண்ணி… கண்ல எவ்வளோ கோபத்தை வெளிப்படுத்துறா தெரியுங்களா? அவ கேட்ட ஒரு கேள்விக்கு கூட அவங்கப்பாவால பதில் சொல்ல முடியல. மனுசன் வெக்கிப் போய்ட்டார்” என்றவன்,

“ஹம்… அவளுக்கு அவங்கம்மாப்பா செய்த பாவம் துரத்துது. உங்களுக்கு பெத்தபிள்ளை துரோகம் படுத்துது” என்றான் இறுகிய முகத்தோடு.

பிறகு அவனே, “நாமளாவது சமாளிப்போம், அவ சின்ன பிள்ளை, அவங்கம்மாக்கு வலிக்காம எப்படி இந்த பிரச்சனையை சரி செய்யனு பயப்படுறாப்பா. அதான் கஷ்டமாயிருக்கு.

நிறைய பேசி தைரியம் கொடுத்துட்டுதான் வந்திருக்கேன். உங்ககிட்ட கூட சொல்ல வேண்டாம்னுட்டா, நீங்க அம்மாகிட்ட சொல்லி, அம்மா ஆன்ட்டிக்கிட்ட சொல்லிடுவாங்கனு பயம் அவளுக்கு” என்றான்.

“அப்போ நீ என்கிட்ட சொல்ல காரணம் இருந்திருக்குமே” என்றார் சந்தேகமாக.

“ம்… இருக்குதுதான். நான் ட்ரைனிங்ல இருக்கும்போது எதாவது பிரச்சனைனா உங்களுக்கு கால் பண்றேன். நீங்க அவ பக்கத்துல இருந்தா போதும். பேசுறதெல்லாம் அவளே பார்த்துப்பா” என்றான் பெருமையாக.

“நீ விஷாலினியை புரிஞ்சிகிட்டது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு விஷ்ணு. உன் துணையும் இல்லைனா பாவம் பிள்ளை ரொம்ப கஷ்டப்பட்டிருக்கும்” என்றார் மகிழ்வோடும் அக்கறையோடும்.

’ம் ரொம்ப நல்லா புரிஞ்கிட்டேன்ப்பா’ என்று நினைத்தவன் மனம் சந்தோசம் கொள்ள, முகம் பொலிவை காட்டியது.

“சரி வா கீழ போலாம், ரொம்ப நேரம் இங்கிருந்தா உன் அம்மா என்னை கேள்வி கேட்டே கொல்லுவா” என்றார் சிறு பயத்தோடு.

சிரித்தவன், “நீங்க வீட்டுக்கு போங்கப்பா, நான் கட்டிடத்துக்கு போய்ட்டு அப்படியே சித்தார்த் வீட்டுக்கு போய் நாகநாதன் அங்கிள்கிட்ட நேர்ல சொல்லிட்டு வரேன்” என்று தனது பைக்கை எடுத்தான் மகிழ்வோடு.

வேலை கிடைத்திடும் என்பதில் உறுதியாய் இருந்தான் விஷ்ணுவர்தன். எனவே வேலை கிடைத்தது எதிர்பார்த்த சந்தோசம்தான். ஆனால் தன்னுள் இருக்கும் விஷாலினியை கண்டறிந்ததுதான் தற்போதைய எதிர்பாராத சந்தோசமாக இருக்க, மனம் உல்லாசத்தில் மிதந்தது.

நாகநாதன் தற்போது வீட்டில் இருக்கமாட்டார் என்று விஷ்ணுவிற்கு தெரியும். சித்தார்த்தை போனில் தொடர்பு கொண்டு வேலை கிடைத்ததை சொல்லி, “அங்கிள்கிட்ட நாளைக்கு காலைல நேர்ல வந்து சொல்றேன்” என்று மனம் போன போக்கில் பயணித்தான் பைக்கில்.

சென்னையில் விஷ்ணுவிற்கு பிடித்த இடமான மகாபலிபுரத்திற்கு வந்திருந்தான். ‘ச்சு… என்ன இது? ஹார்ட் இப்படி அடிச்சுக்குது’ என்று இடப்பக்கம் நீவிக்கொண்டான் இன்முகத்தோடு.

பெருமூச்சிழுத்தான். மெல்ல கடற்கரை நோக்கி நடந்தான். முட்டிவரை நனையும் படி நின்றவனுக்கு அருகில் விஷாலினி இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்ற, “வேணாம்டா விஷ்ணு, இப்போதான் ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறா. கன்ட்ரோல்… கன்ட்ரோல் யுவர் செல்ஃப்” என்று தனக்குத்தானே கட்டுப்பாட்டை விதித்தான்.

விஷாலினிக்கு அழைக்கலாமா என்று நினைத்தபடியே அழைத்திருந்தான். அழைப்பை ஏற்ற விஷாலினி “ம்” என்க, ம்ப்ச் கூப்பிட்டுட்டேனா? என சுதாரித்தவன், “ரிலாக்ஸ் ஆகிட்டியா? இல்ல அந்தாளையே நினைச்சிட்டிருக்கியா?” என்றான்.

“ரிலாக்ஸ் ஆகிட்டேன்” என்றாள்.

“ம் குட்… நல்லா படிக்கனும், எதாவது பிரச்சனைனா எனக்கு கால் பண்ணனும் சரியா?”

“ம்” என்றாள். “சரி வைக்கிறேன்” என்று இணைப்பை துண்டித்தவன், உடனே பேசியாகனுமா? இவ்வளோ வீக் பர்சனாடா நீ? என தன்னைத்தானே திட்டிக்கொண்டு கடற்கரையில் நடக்கலானான்.

*** *** *** *** *** ***

மூன்று வருடங்கள் கடந்திருக்க, விஷாலினி கல்லூரியின் நான்காம் ஆண்டில் இருந்தாள். இதுவரை ஒருமுறை கூட விஷாலினி தானாக விஷ்ணுவிற்கு அழைத்ததில்லை.

அன்று கடற்கரையிலிருந்து பேசியபின்னே நான்கு மாதம் கழித்து இவனாக அழைத்து விசாரித்தான். “ஏதும் பிரச்சனையில்லை” என்றாள்.

“பிரச்சனை இல்லைனா என்ன? பத்து நாளுக்கொருமுறை கால் பண்ணு. அப்போதான் உனக்கு பிரச்சனையில்லைனு என்னால நிம்மதியா இருக்க முடியும்” என்றான் கட்டளையாக.

சம்மதித்தவள் அதன் பின்னும் அழைப்பதில்லை. சரியாக பத்து நாளுக்கொரு முறை ‘ஏதும் பிரச்சனை இல்லை, நல்லா படிக்கிறேன்’ என்று தவறாமல் குறுஞ்செய்தி மட்டும் அனுப்புவாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!