Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை அச்சம் நாணம்

ஆசை அச்சம் நாணம் 16.1

அத்தியாயம் 16

நாளை முகூர்த்த நாள் என்பதோடு வெள்ளிக்கிழமையும் ஆதலால் பூ கட்டும் வேலை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. மறுக்க முடியாத அளவிற்கு கெஞ்சுதலாய் கேட்பார்கள். வேறு வழியின்றி அன்னையும் சிரமப்பட சம்மதித்திருப்பார் என்று நினைத்தவள், “என்னால இவ்வளோ கட்ட முடியாதுனு சொல்லலாமில்லம்மா? தனியாளா எப்படி இவ்வளோ பூ கட்ட முடியும்?” என்றாள்.

“நல்ல நாளுக்கு பூகட்ட புதுசாவா ஆள் தேடுவாங்க? அதோட எனக்கும் இப்படி வேலை இருந்தாதான் பொழுது நகருது” என்றார்.

பதினொரு மணிபோல் பூ கட்ட அமர்ந்தார்கள் விஷாலினியும் மேகலையும். “படிக்கிற வேலையிருந்தா பாரு, நான் பார்த்துக்கிறேன்” என்றார் மேகலை.



Advertisement

“இன்னைக்கொரு நாள் படிக்கலனா ஒன்னும் ஆகாதும்மா” என்று சம்மங்கியை கட்ட ஆரம்பித்தாள் விஷாலினி.

“அங்க சாப்பிடாம இருந்ததுக்கு அண்ணன், அண்ணி, அப்பா எல்லாரும் ரொம்ப வருந்தினாங்க” என்றார் மேகலை.

அன்னையை சில நொடி பார்த்தவள் மீண்டும் பூ கட்டுவதில் கவனமானாள். “இந்த கிருஷ்ணன்தான் சொல்றதை புரிஞ்சிக்கவே மாட்டேங்குறான். விஷ்ணு போய் பேசியிருப்பார் போல. எதுக்கு அத்தை போலீஸ்லாம் வச்சி மிரட்டுறிங்கனு கேக்குறான்” என்றார்.

Advertisement

“இதுக்குத்தான் வீட்டுல வச்சே பாட்டிக்கு கும்பிட்டுக்கோனு சொன்னேன். நீ போகவும்தான பேச்சு வளருது. இல்லனா அவங்களுக்குள்ளயே நிறுத்திப்பாங்கதான?” என்றாள் குறையாக.

Advertisement

சாந்தியிடமிருந்து மேகலைக்கு அழைப்பு வந்தது. “கிருஷ்ணன் அங்க வந்திட்டிருக்கான். நாங்களும் வர கிளம்பிட்டோம். தன்மையா பேசி புரிய வைக்கலாம்” என்றார் கெஞ்சலாக.

“என்ன அண்ணி நீங்க… இத்தனை வருசம் இல்லாம இப்போ எதுக்கு போறனு நீங்க தடுத்திருக்கலாமில்ல? விஷாலினி வேற வீட்டுல இருக்கா” என்றார் தவிப்போடு.

“என்ன சொன்னாலும் கேட்கமாட்டேங்கிறான் மேகல” என்று சாந்தி கவலையோடு சொல்ல, “ப்ச் சரி வரட்டும். விஷாலினி இப்படி பேசிட்டானு என்கிட்ட ஏதும் சொல்லக்கூடாது” என்று இணைப்பை துண்டித்தார்.

Advertisement

அன்னை பேசியதிலேயே யூகித்தவள், “தேவையா இதெல்லாம்? பாட்டியை மட்டும் பார்த்துகிட்டு, கடையில சாப்பிட்டு இருந்திருந்தா இந்தளவுக்கு உரிமை கொண்டாட மாட்டாங்க. அங்க எல்லார்கிட்டயும் சகஜமா பேசினதோட, சாப்பிடவும் செய்ததாலதான் இவ்வளோ பிரச்சனை” என்று கடிந்து, “வரட்டும் பேசிக்கறேன்” என்று பூக்களை தொடுத்தாள் வேகமாக.

மேகலை எழவும், “அவங்களுக்கு சமைக்குறதுக்காக வாங்க போறியா?” என்றாள் ஆற்றாமையோடு.

“அவங்களோட உறவு கொண்டாட நானும் நினைக்கல விஷாலினி. நாம அங்க போனதால பேச வேண்டியதாகிடுச்சு. என்னதான் ஆகாதவங்களா இருந்தாலும் வீடு தேடி வரவங்களுக்கு ஒரு காபியாவது வச்சி தரதுதான் மனித பண்பு. கிருஷ்ணன்கிட்ட என்ன பேசனுமோ பேசிக்கோ. இன்னைக்கே இதுக்கு ஒரு முடிவு வரட்டும். ஆனா மரியாதை குறைவா பேசாத. அது உன் பெருமையை குறைக்கும்” என்று பால் வாங்க வெளியேறினார் மேகலை.

அசுரனின் ஓயாத சத்தத்தில் பிரபாவதி வெளியே வந்தார். அவரிடம் விபரம் சொன்னான்.

பிரபாவதி “மேகலை” என்று குரல் கொடுக்க, அசுரனின் சத்ததில் சந்தேகம் வந்தவளுக்கு தற்போது அத்தையின் குரலில் வந்துவிட்டான் என்று புரியவே, “அம்மா கடைக்கு போயிருக்காங்கத்த” என்றாள் உள்ளிருந்து.

“இப்படி உக்காருங்க தம்பி, மேகலை வந்திடட்டும்” என்று போர்டிகோவில் உள்ள சேரை காட்டினார் பிரபாவதி.

“இல்ல பரவால்லைங்க” என்று ஐந்து நிமிடம்வரை நின்றிருந்தான் கிருஷ்ணன். பிறகு மேகலை வர, “வா கிருஷ்ணா” என்று தனது வீட்டிற்கு அழைத்துச்சென்றார்.

கிருஷ்ணன் வந்திருப்பதாக விஷ்ணுவிற்கு குறுஞ்செய்தி அனுப்பினாள் விஷாலினி. செய்தி பார்த்து விஷ்ணு அழைக்கவே, “பேசுறேனு சொல்லிட்டு அதை சரியா செய்திங்களா?” என்று அவனிடம் கோபம் காட்டினாள்.

விஷாலினியின் உரிமை கோபத்தில் மனம் குளிர்ந்துபோக, ஸ்டேஷனுக்கு வெளியே வந்து, “அடிங்… என்னைப் பார்த்து அத்தனை பேரும் பயப்படுறானுங்க, நீ என்னை மிரட்டுறியா?” என்று இதமான மனநிலையில் பொய்யாய் சீறினான்.

“ஸ்டேஷன்ல இருக்கிங்களா?” என்றாள் சன்னக்குரலில்.

“ம், முக்கியமான விசயமா வந்திருக்கேன்” என்றவன், “ஆன்ட்டிதான் அவனை அடிக்க வேண்டாம்னு சொன்னாங்க. அதோட, பார்க்கவும் அம்மாஞ்சி மாதிரி இருந்தான். வார்ன் பண்ணினேன். இப்படி நான் அங்க இல்லாத நேரம் வருவானு தெரிஞ்சிருந்தா சின்னதா பஞ்சர் பண்ணியிருப்பேன்” என்றான்.

விஷாலினி அமைதியாகிட “இப்போ மட்டும் என்ன? நீ சும்மாவா விடப்போற? கேள்விகேட்டே சாகடிக்கப்போற. அவன் தலைதெறிக்க ஓடப்போறான்” என்றான் இலகுவாக.

“ப்ச்… போங்க” என்று பிணக்கோடு சொல்ல, “கிருஷணன்கிட்ட பேசியிருக்கேன், உன்னை பெருசா படுத்தமாட்டான். அவன் அத்தை வீட்டுக்கு வரான்றபோது நான் என்ன பண்ணமுடியும்? அண்ணன் குடும்பத்தை ஏற்கனுமா வேணாமானு ஆன்ட்டி முடிவு பண்ணட்டும்” என்றான்.

“ம்” என்று இணைப்பை துண்டித்து பூ தொடுக்க ஆரம்பித்தாள்.

உள்ளே வந்த கிருஷ்ணன் வீட்டினை நோட்டமிட்டான். இரண்டு படுக்கையறை, சமையலறை, ஹால் என வீடு வசதியாகத்தான் இருந்தது. ஆனால் தனது வீட்டிற்கு இவ்வீட்டினை ஒப்பிட்டால் மிகச்சிறிய வீடுதான் இது. ஹாலில் ஒருசோபா, ஒருசேர், ஒரு ஈஸிச்சேர் தவிர்த்து ஏதும் இல்லை.

அலமாரியில் டி.வியும், பாட்டியோடு மேகலையும் விஷாலினியும் இருக்கும் புகைப்படமும் இருந்தது. வீட்டினுள் வரும்போதே இரு சக்கர வாகனம் கூட இல்லை என்று புரிந்திருந்தான்.

அதிக பொருள்கள் இல்லாமல் வீடு பளிச்சென இருந்தது. சம்மங்கி, ரோஜா, மரிக்கொழுந்து, மல்லி என பூக்கள் குவிந்து இருந்தது. இவ்வளவு பூ எப்போது கட்டி முடிப்பதென மலைப்பாய் நினைத்தபடி விஷாலினியைப் பார்த்தான். “இப்போ உடம்பு பரவால்லையா விஷாலினி?” என்றான்.

“நீங்க இங்க வந்ததே எனக்கு பிடிக்கல. எதுக்கு புதுசு புதுசா உறவாக நினைக்கிறிங்க?” என்றாள் பூக்களை தொடுத்தவாறு.

“புது உறவு இல்ல, பழைய உறவை சரிபண்ண நினைக்கிறேன்”

“அதுக்கு எங்க விருப்பமும் இருக்கனும்ல?”

“பழசை நினைச்சா கசந்துட்டேதான் இருக்கும் விஷாலினி. அத்தை செய்ததை விட பல மடங்கு தப்பு என் அப்பாம்மாவும் தாத்தாவும்தான் பண்ணியிருக்காங்க. பல வருசத்துக்கு முன்ன நடந்த விசயத்துக்கு இப்போ மன்னிப்பு கேக்குறதெல்லாம் மடத்தனம். ஆனா நான் ஒரு தப்பும் பண்ணலையே. எதுக்காக என் மேல இவ்வளோ வெறுப்பு?” என்றான் வேதனையாக.

“நீங்க தப்பு பண்ணுனிங்கனு நான் சொல்லவே இல்லையே. உங்களை வெறுக்க நான் யாருங்க? என்னால புதுசா எதையும் ஏத்துக்க முடியல, இப்போனு இல்ல, எப்போவும் முடியாதுங்க. தேவையில்லாம எதையும் நினைக்காதிங்க” என்றாள் பொறுமையாகவே.

கிருஷ்ணன் “நினைக்காம இருக்க முடியலம்மா” என்று மிக்கனிவாக தன்போல் புலம்பிட, தீப்பார்வை பார்த்தாள் விஷாலினி.

“என்னை அவாய்ட் பண்றதுக்காகவே அவசர அவசரமா விஷ்ணுவை கட்டிக்க சம்மதிச்சிருக்க” என்றான் வருத்தமாக.

“உங்களை அவாய்ட் பண்ண இவ்வளோ பெரிய முடிவெடுக்கனும்னு அவசியமில்லைங்க, உங்களை அவாய்ட் பண்றதுக்கும் என் கல்யாணத்துக்கும் சம்மதமேயில்ல. முதல்ல உங்களுக்கும் எங்களுக்குமே எந்த சம்மதமும் இல்ல” என்று தற்போதும் பொறுமையாகத்தான் சொன்னாள் விஷாலினி.

மேகலையின் அண்ணியும் தந்தையும் பிரவேசித்தனர் வீட்டினுள்.

“வாங்கண்ணி” என்று சாந்திக்கு தண்ணீர் கொடுத்து, தந்தைக்கும் கொடுத்தார் மேகலை.

தண்ணீர் பருகிய மேகலையின் தந்தை, “சம்மந்தம் இல்லாமலா அத்தனை வருசமா உன் பாட்டியை இங்க அனுப்பி வச்சேன்?” என்றார்.

“அது உங்களுக்கும் பாட்டிம்மாக்கும் உள்ள அன்டர்ஸ்டான்டிங். என்னைப் பொறுத்தவரை பாட்டிம்மா எங்கம்மாவோட அம்மா. அன்போடவும் அக்கறையோடவும் எங்களை பார்த்துக்கிட்டாங்க. பாட்டிமாக்காகத்தான் அந்த வீட்டுக்கு நாங்க வந்தோம். எங்களுக்கும் பாட்டிமாக்குமான உறவு அவங்க இறப்போட முடிஞ்சிடுச்சு” என்று அமைதியாகத்தான் சொன்னாள். ஆனால் விஷாலினியுன் கோபத்தை வேகம் கூட்டி பூக்களை தொடுப்பதில் உணர்ந்தார் மேகலையின் தந்தை.

என்ன பேசுவார் இதற்கு? ஆழ்ந்து பார்த்திருந்தார் பேத்தியை. பிறகு மகளிடம் “அப்போ இருந்த கோபத்துல தள்ளி வச்சிட்டோம். ஆனாலும் உன் தாத்தாவும், அம்மாவும் உன்னை நல்லபடியா பார்த்துக்கிட்டாங்கன்ற நிம்மதியிலதான் விலகியிருந்தோம். தப்புதான்” என வருந்தி,

“உன்னை இப்படி விட்டதை நினைச்சு ரொம்ப வேதனையாயிருக்கு மேகலை. எங்களை மன்னிக்க கூடாதா? எங்களை விலக்கி வச்சி, இருபது வருசத்துக்கு முன்ன நாங்க செய்த அதே தப்பை நீயும் உன் மகளும் செய்ய நினைக்காதிங்க. சின்னபுள்ள… அதுக்கு மனசுக்கு பட்டதை பேசுது. பேத்திக்கு நீ சொல்லலாமில்ல?” என்றார்.

“என்னப்பா சொல்றது? அம்மாவை இங்கயிருந்து கூட்டிட்டு போக வரும்போது கூட என் பொண்ணை பார்த்துட்டு போகனும்னு உங்களுக்கு தோணலையே… என் வீட்டுல தண்ணி கூட குடிக்காம கிளம்புனிங்கதான? அன்னைக்கு ஸ்கூல்லயிருந்து வந்ததும் பாட்டிம்மா போய்ட்டாங்களா? யார் வந்து கூட்டிட்டு போனாங்கனு கேட்டா. என் அப்பானு சொன்னேன். ஓ… சரிம்மான்றதோட முடிச்சிக்கிட்டா.

என் பொண்ணு சின்னபுள்ள இல்லப்பா. அவளை பார்க்கக்கூடாதுனுதான் அவ இல்லாத நேரம் வந்துட்டு போயிருக்கிங்கனு அப்போவே புரிஞ்சிக்கிட்டா. இப்போ அவளுக்கு இருபது வயசாகுது.

நல்லது கெட்டது தெரியுது. இப்போவும் அவ உங்களை காயப்படுத்த நினைக்கல. பிறந்ததுலயிருந்து ஒட்டுதலில்லாதவங்களோட இப்போ ஒட்டமுடியல அவளால. அவளை வற்புறுத்தாதிங்க” என்று மேகலையும் கோபமில்லாமல்தான் பேசினார்.

“என் மகன் உன் பொண்ணைத் தவிர யாரையும் கட்டிக்கமாட்டேன்றான். எனக்காக கூட பார்க்கமாட்டியா மேகலை. நான் என்ன தப்பு செய்தேன்?” என்று கலங்கினார் சாந்தி.

விஷாலினி சாந்தியை பார்த்தாள். ஆனால் ஏதும் சொல்லாமல் மீண்டும் பூ கட்டுவதில் கவனமானாள். “பிடிக்கலனு சொல்றவளை எப்படி அண்ணி கட்டாயப்படுத்துறது? அதுவும் கல்யாண விசயத்துல” என்றார்.

அன்று தனது வீட்டிலிருந்தபோது கோபாலனை போனில் ‘மாமா‘ என்று விஷாலினி அழைத்ததில் அந்த பாசம் தனக்கானது இல்லை என்று ஏமாந்தபோதே பெரும் வலியை உணர்ந்தார் வேலவன்.

தனது வீட்டில் இருந்தவரை விஷாலினியின் அமைதியும், தனது அன்னையை கவனித்த விதமும், கொட்டிய கண்ணீரும் சொன்னது அவளின் குணத்தை. தங்கை மகளை இனி விடக்கூடாது என்று எண்ணம் தோன்றிய நேரம் தன் மகன் விஷாலினியை விரும்புவது அத்தனை சந்தோசத்தை கொடுத்தது வேலவனுக்கு.

மகளை விஷ்ணுவிற்கு கொடுக்க முடிவெடுத்துவிட்டோம் என்று மேகலை சொன்னபோது பெரிதாய் அடிவாங்கினார் மனதோடு. விஷாலினி வேண்டாம் என்று மகனுக்கும் எடுத்துரைத்தார். ஆனால் கிருஷ்ணன் கேட்டால்தானே?

மகன் இங்கு பேச கிளம்பிவிட்டான் என்றதும் கடைசிமுறையாக நாமும் முயற்சிப்போம் என்று கிளம்பியிருந்தார் வேலவன். விஷாலினி மறுப்பை விட, தங்கை மறுப்பு இன்னும் வலியை கொடுக்க, “விஷாலினி பழைய பகையை நினைச்சு சொல்லுது மேகலை. என் மகனுக்கு என்ன குறைச்சல்?” என்றார் ஆற்றாமையோடு.

“கிருஷ்ணனுக்கு குறைனு நான் சொல்லலண்ணா, கோபாலண்ணாவும் அண்ணியும் என்னோட எல்லா கஷ்டத்துலயும் பக்கபலமா இருந்தவங்க. என் பொண்ணை மகனுக்கு கேட்கும்போது என்னால மறுக்க முடியல.

அதுக்காக நன்றிக்காக பொண்ணை கொடுக்கறேனு நினைச்சிடாதிங்க. விஷ்ணு நான் பார்த்து வளர்ந்த தங்கமான பையன். விஷ்ணுவை மருமகனாக்கிக்க எனக்கும் பிடிச்சிருந்தது. அதனாலதான் உடனே சம்மதம் சொன்னேன்” என்றார் மேகலை.

“உன் கூடப் பிறந்த அண்ணன் மகனை விட, உன் வீட்டுல குடியிருக்கவங்க பெருசா போய்ட்டாங்களா?” என்றார் வேலவன்.

வீட்டில் குடியிருப்பவர்கள் என்று இளப்பமாய் பேசியதும் விஷாலினிக்கு கோபம் வந்திட, “எங்க வீட்டுல குடியிருந்தா கேவலமானவங்களா?  அவங்க ஒன்னும் சும்மா இருக்கல, மாச மாசம் வாடகை கொடுத்துதான் இருக்காங்க.

தப்பானவனை கட்டிக்கிட்டதால மட்டும் என் அம்மாவை நீங்க ஒதுக்கல. ஜெகதீசன் குழந்தை தங்கை வயித்துல இருக்குன்றதாலதான் ஒதுக்குனிங்க.

நான் தப்பானவனுக்கு பிறந்தவனு தெரிஞ்சேதான் கோபால் மாமா என்மேல பாசம் வச்சார். என் அம்மாவை கூடப்பிறந்தவங்க போல பார்த்துக்கிட்டார்.

கர்பத்தை கலைச்சிடுனு சொன்னவங்களை விட, எங்க வீட்டுல குடியிருந்துகிட்டு எங்களுக்கு பாதுகாப்பா இருந்தவங்க, இப்போ வரைக்கும் இருக்கிறவங்க பல ஆயிரம் மடங்கு உசத்திதான்” என்றாள் கோபமாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!