Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை அச்சம் நாணம்

ஆசை அச்சம் நாணம் 18.2

அழைப்பை ஏற்றவன் அமைதியாகவே இருக்க, “சாரிங்க… க்ளாஸ் முடிஞ்சதும் டெலிவரி கேஸ் அட்டன் பண்ண சொல்லிட்டாங்க. இப்போதான் குழந்தை பிறந்தது. ரூம்க்கு வந்து ரெப்ஃரஸ் ஆனதும் கூப்பிட்டேன்” என்றாள்.

மூன்று மணிநேர காத்திருப்பினால் அத்தனை கோபத்தில் இருந்தவன் மனம், விஷாலினி சொன்ன காரணத்தால் காணாமல் போயிருக்க, “புடவை எடுக்க ஏன் போகல?” என்றான்.

பத்து நாள்களாக விஷாலினி அனுப்பிய குறுஞ்செய்திக்கும் பதிலளிக்கவில்லை. அழைப்பையும் ஏற்கவில்லை. அன்று பெண் பார்த்து சென்ற பின்னே கோபத்தோடு கிளம்பியவன் இன்றுதான் அழைத்திருந்தான்.

“நான் சென்னையில எடுக்கலாம்னு சொன்னேன், அம்மா காஞ்சிபுரத்துக்கேத்தான் போவேனு பிடிவாதம். அதான் போகல”



Advertisement

“ஏன் காஞ்சிபுரம் போனா என்னாகிடும்?”

“ஏதும் ஆகாது. ஆனா எனக்கு பிடிக்கல”

“காஞ்சிபுரத்துல யார் இருந்தா என்ன? நீ போற காரணம் கல்யாணத்துக்கு சாரி எடுக்க. போகப் பிடிக்கலனு சொன்னா என்ன அர்த்தம்? இன்னும் பதினைஞ்சு நாள்ல நமக்கு கல்யாணம். கல்யாணப்பொண்ணு மாதிரியா இருக்க?” என்றான் கடுப்போடு.

Advertisement

“நீங்க மட்டும் என்னவாம்? நான் போன் செய்தா எடுக்கல, மெஸேஜ்க்கும் ரிப்ளை இல்ல.” என்றாள் ஏமாற்றமாக.

Advertisement

“உனக்குத்தான் என்னைவிட முக்கியமானவ இருக்காளே” என்றான் கடுப்பாக.

விஷாலினி அமைதியாகிட, இப்போவும் நான்தான் முக்கியம்னு ஒரு வார்த்தை சொல்றாளா? என கோபமானவன், அழைத்த விசயத்தை சொல்லி இணைப்பை துண்டித்திட நினைத்து, “சேரி எடுக்க வரலைனு சொன்னியாம்? ஆன்ட்டி அம்மா எல்லாரும் வருத்தப்படுறாங்க. அவங்களோட போய்ட்டு வா” என்றான்.

“நாளைக்கு எனக்கு முக்கியமான க்ளாஸ் இருக்கு, அம்மாவும், அத்தையும் எடுக்குறதே எனக்கு பிடிக்கும்”

Advertisement

“அப்போ கல்யாணத்தை தள்ளி வச்சிருக்கலாமில்ல? எதுக்கு இந்த டேட்டை ஃபிக்ஸ் பண்ணின?”

“இதுக்கெல்லாம் என்னை கூப்பிடுவாங்கனு தெரியாதே”

“அப்போ இன்னொரு நாளைக்கு சேரி எடுக்க போக சொல்லிடவா?”

“இல்ல வேண்டாம். அப்புறம் தைக்க லேட் ஆகிடும்” என்று மறுத்தாள் அவசரமாக.

“நிஜமா முக்கியமான க்ளாஸா? இல்ல நான் கால்ஸ் அட்டன் பண்ணாததால போகலையா?” என்றான்.

விஷாலினி அமைதியாகிட, “அப்போ முக்கியமான க்ளாஸ் இருக்குனு சொன்னது பொய்… சேரி எடுக்க அவங்களோட போ, கமின் சன்டே காலேஜ்க்கு வரேன்” என்றான்.

“சன்டே அம்மா வீட்டுக்கு வர சொல்லியிருக்காங்க”

“சரி வீட்டுக்கே வரேன்”

“ஈவ்னிங் கிளம்பிடுவேன், சன்டே மார்னிங்கே வந்துடுறிங்களா?” என்றாள் ஆர்வமாக.

“ட்ரை பண்றேன்” என்றான்.

“ம்” என்க, அலுவலகத்திலிருந்து அழைப்பு வரவே, “சரி நான் அப்புறம் பேசுறேன்” என்று இணைப்பை துண்டித்தான்.

அடுத்தநாள் காலை கோபாலன் விஷ்ணுவிற்கு அழைத்து பட்டு சேலை எடுக்க வர பிடிவாதம் செய்தார். விஷ்ணு மறுக்கவே, “நான் வந்தா விஷ்ணுக்கு பிடிக்காது, விஷ்ணு கல்யாணத்துல அவன் சந்தோசம்தான் முக்கியம்னு காவ்யா வர மறுத்துட்டாடா. இப்போ நீ வரலைன்ற” என்றார் வருத்தமாக.

“பரவால்ல இந்த சென்ஸ்சாவது அவளுக்கு இருக்கே” என்றவன், “உண்மையாவே வேலையிருக்குப்பா” என்றான்.

“பத்து பத்திரிக்கை போதும்னு சொல்லிடுச்சுடா மேகலை”

“என்னப்பா சொல்றிங்க?” என்றான் அதிர்வாக.

“மேகலையோட அம்மா வீட்டுக்கு ஒரு பத்திரிக்கை, இங்க மளிகை கடைக்காரர், பூ கட்ட கொடுக்குறவங்க, அப்புறம் பக்கத்துல நாலு வீட்டுக்கு மட்டும்தான் பத்திரிக்கை வைக்குது.

காஞ்சிபுரத்துல மத்த சொந்தங்களுக்கு வைக்கிலயாம்மானு கேட்டேன். வைக்கிலண்ணா, இத்தனை வருசத்துல எத்தனை விஷேசம் செய்திருப்பாங்க. யாரும் என்னை அழைக்கலையே. என் அம்மா இங்க இருக்காங்கனு அத்தனை சொந்தங்களுக்கும் தெரியும். ஆனா யாரும் எதுக்கும் என்னை கூப்பிட்டதில்ல. அதனால நானும் கூப்பிடலனு சொல்லிடுச்சு.

மேகலை அம்மா இறப்புக்கு பங்காளி, மாமன் மச்சானு அவ்வளோ கூட்டம் வந்துச்சு விஷ்ணு. அதனாலதான் கேட்டேன். மேகலை சொன்ன பதில் எனக்கு ரொம்ப கஷ்டமாகிடுச்சு. கல்யாண வீடு மாதிரியே இல்லடா, நீ ஒருவாரம் முன்ன வரப்பாரு” என்றார்.

“ஒரு வாரம் முன்னாடி வரதுக்கு சான்ஸே இல்லப்பா” என வருந்தி சொன்னவன், “சேலை எடுக்க விஷாலினி வரலையா?” என்றான்.

“இன்னைக்கு முக்கியமான க்ளாஸ் இருக்காம். அதனால வரலனுடுச்சு, மக வரலைன்ற கவலை மேகலைக்கு நீ வந்தா காணாம போய்டும்”

‘இவளை… நான் சொல்லியும் போகல’ என மனதில் கடிந்தவன், “சரிப்பா, மதியம் மூனு மணிபோல கடைக்கு வந்துடுங்க, நான் வரேன். அரைமணி நேரத்துல எடுத்துடனும்” என்று இணைப்பை துண்டித்தான்.

விஷ்ணு வரவேண்டும் என்பதற்காக, மண்டபம், சமையலர், ஃபோட்டோகிராஃபர் என்று அனைத்தையும் நீதான் பார்க்கனும், என்னால அலைய முடியாது என்றிருந்தார் கோபாலன்.

இதெல்லாம் ஒரு விஷயமாப்பா? என்றவன், காஞ்சிபுரத்தில் இருந்துகொண்டே தந்தை சொன்ன வேலைகளையும் முடித்து, திருமண அலைச்சலில் அன்னையால் வேலை செய்ய முடியாதென்றும், திருமணத்திற்கு வரும் நெருங்கிய சொந்தங்கள் இரண்டு மூன்று நாள் தங்கி செல்வார்கள் என்றும், ஒரு வாரத்திற்கு சமைக்க, வீட்டு வேலைகள் செய்ய பணியாட்களையும் ஏற்பாடு செய்திருந்தான்.

மேகலை வீடு கல்யாண வீடுபோல இல்லை என்று தந்தை வருந்தியதை நினைத்தவன், தன் வீட்டைப் பற்றி யோசித்து, ஆன்ட்டியைப் பத்தி யோசிக்காம விட்டுட்டோமே என்று வருந்தியவன், இப்போ கிளம்பினா கூட கடைக்கு வந்திடலாம் என்று நினைத்தபடி விஷாலினிக்கு அழைத்தான். அவள் அழைப்பை ஏற்கவில்லை. க்ளாஸ்க்கு போய்ட்டா. சரியான அடமெண்ட் என நினைத்தான் கடுப்போடு.

விஷ்ணுவர்தன் சொன்ன நேரத்தில் கடைக்கு வந்திருந்தனர் அனைவரும். மேகலையின் அண்ணியும் வந்திருந்தார். பிரபாவதி மகனுக்கு அழைத்தார். “வந்துட்டு இருக்கேன்ம்மா, நீங்க பார்த்துட்டு இருங்க” என்றவன், அரைமணி நேரம் கழித்து கடைக்கு வந்தான்.

சீருடையில் வரவும், முக்கிய பணியில் இருக்கிறான் என்று புரிந்திருந்தார் கோபாலன். விஷ்ணு வருகை மேகலைக்கு அத்தனை சந்தோசத்தை கொடுக்க, “இதெல்லாம் எடுத்து வச்சிருக்கோம் தம்பி, உங்களுக்கு பிடிக்கலனா வேற பாருங்க” என்றார் மகிழ்வோடு.

மேகலைக்கு செலவு வேண்டாமே என்று, “எதுக்கு ஆன்ட்டி இத்தனை சேரி?” என்றான்.

“விஷாலினிக்கு செய்யாம யாருக்கு செய்யபோறேன்?” என்று தனது தேர்வுகளை காண்பித்தார்.

நலங்கு, பெண்ணழைப்பு, மூகூர்த்தம், மறுவீட்டிற்கு செல்வதற்கு, சாந்திமுகூர்த்தம் என ஐந்து சேலைகளை தேர்வு செய்திருந்தார் மேகலை. ஒவ்வொன்றும் முப்பதிலிருந்து முப்பத்தி ஐந்தாயிரத்திற்குள்ளான விலையில் இருந்தது.

மேகலையின் தேர்வு அத்தனை திருப்தியாக இல்லை சாந்திக்கு. ஆனாலும் ஏதும் சொல்ல முடியாது. திருமணத்தில் ஒவ்வொரு விசயத்திற்கும் இவ்வளவுதான் பட்ஜட் என்று நிர்ணயம் செய்திருந்த மேகலை அதனை சாந்தியிடமும் சொல்லியிருந்தார். மேகலையின் பட்ஜட்டிற்கு அவர் தேர்ந்தெடுத்த சேலைகள் திருப்திதான் என்ற வகையில் அமைதிகாத்தார் சாந்தி.

அனைத்து சேலைகளும் நன்றாக இருக்கவே, “உங்க செலக்‌ஷனே ரொம்ப அழகா இருக்கு ஆன்ட்டி. இதையே வாங்கிடுங்க” என்றவன், ஐந்து நிமிடம் பேசியிருந்து கிளம்பினான்.

அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வருகிறேன் என்றவன், சனிக்கிழமை மாலையே வந்திருந்தான். பிரபாவதிக்கும் கோபாலனுக்கும் மிகுந்த சந்தோசம். விஷ்ணுவின் பார்வை விஷாலினி வீட்டு ஜன்னலில் இருக்க, “எவ்வளோ உத்து பார்த்தாலும் விஷாலினியை பார்க்க முடியாது. ஏன்னா… காவ்யாவும் விஷாலினியும் மாடில இருக்காங்க” என்று சிரித்தார் கோபாலன்.

தானும் சிரித்தவன் முகம் கழுவி, இலகுவான உடைக்கு மாறி மாடிக்கு சென்றான். விஷ்ணுவை கண்டதும் விஷாலினியைப் பார்த்து மகிழ்வோடு கண்ணிமைத்து கீழே சென்றாள் காவ்யா.

விஷ்ணுவை கண்டதும் மனம் இதமாய் படபடக்க, அதை மறைக்க நினைத்து, “சேலை எடுக்க நீங்களும் போவிங்கனு சொல்லவேயில்ல” என்றாள் குறையாக.

“சொல்லியிருந்தா”

“சொல்லியிருந்தா நானும் வந்திருப்பேன்”

“வந்து?”

“வந்து…” என இழுத்தவள், “உங்களை பார்த்திருப்பேன்” என்றாள் தயக்கம் உடைத்து.

“பார்த்து”

“பார்த்து… சைட் அடிச்சிருப்பேன். போதுங்களா?” என்றாள் சற்றே உயர்ந்த குரலில்.

சிரித்தவன், “சரி இப்போ அடி” என நெருங்கி நின்றான்.

“இப்போல்லாம் அடிக்க முடியாது. உங்களுக்கு தெரிஞ்சு பார்க்குறதுக்கு பேர் அதில்ல” என்றாள் உள்ளே போன குரலில்.

விஷாலினி விலகாமல் ஒன்றி நின்றது மகிழ்வை தர, சுற்றும் பார்த்தவன் “தள்ளிப்போடி… இல்ல அன்னைக்கு மாதிரி கட்டிப்பிடிப்பேன்” என்றான்.

“கோபம் போய்டுச்சுங்களா?”

“என்ன கோபம்?”

“பத்து நாளா போன் அட்டன் பண்ணாம இருந்திங்களே, அந்த கோபம் போய்டுச்சுங்களா?”

காவ்யாவை நினைத்ததும் கோபம் வர, “அது அப்படியேத்தான் இருக்கு. உன்னை பார்க்க வந்தா முதுகை காட்டிட்டு உக்காருற? எனக்கு பிடிக்காதுனு தெரிஞ்சே காவ்யாவை பக்கத்துல கூப்பிடுற?” என்றான் முறைப்பாக.

“உங்களை கோபப்படுத்தனும்னு கூப்பிடல, எல்லாரும் ஒன்னா உக்கார்ந்திருக்கும்போது காவ்யாக்கா தனியா நின்னுட்டிருந்தாங்க. அதனாலதான் கூப்பிட்டேன்” என்றாள் சின்னக்குரலில்.

காவ்யாவைப் பற்றி சொன்னதும், விஷ்ணு முகத்தில் சற்று முன்னிருந்த சந்தோசம் தொலைந்திருந்தது.

தனது திருமண பேச்சு ஆரம்பித்ததிலிருந்து பிரபாவதி மகளை நினைத்து படும் பாட்டை பார்க்கிறாள் விஷாலினி. சண்டை வந்தாலும் பேசாமல் விமோட்சனம் பிறக்காது என்று யோசித்தவள், “பாட்டி நகை எனக்குத்தான். அம்மாக்கான பங்கை கொடுக்குறேன், அப்படியிப்படினு அம்மாவோட அண்ணி நிறைய கேட்டாங்க. எனக்கு பிடிக்கலனு சொல்லிட்டேன். கோபத்துல அம்மாகிட்ட அவங்களைப் பத்தி நிறைய பேசவும் செய்திட்டேன்.

பணம், சொத்துனு அவங்ககிட்ட வாங்கிக்க என் அம்மாக்கும் பிடிக்கலதான். ஆனாலும் உறவு வச்சிக்க நினைக்கிறாங்க. இருபது வருசமா பாசத்தை காட்டி வளர்த்துருக்காங்க. பாசம் இருக்கத்தான் செய்யும். எல்லாமும் எனக்கு புரியுது. ஆனா என்னால எதையும் ஏத்துக்க முடியல.

பெத்தவங்களே கண்டுக்கலன்றதாலதான் மத்த சொந்தங்களும் என் அம்மாவை உதாசினப்படுத்தியிருக்காங்க. என் அம்மாவோட அப்பாம்மாக்கு அந்த ஊர்ல பாதிபேருக்கு மேல சொந்தமாம்.

கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் ராணி மாதிரி வாழ்ந்திருக்காங்க. அத்தனை பெரிய குடும்பத்துல பிறந்து வளர்ந்து, இன்னைக்கு பத்து பத்திரிக்கை போதும்னு சொல்லும்போது அவங்க மனசுல எத்தனை வலியிருக்கும்?

அம்மாவோட அண்ணன் என்னைத்தான் கொல்ல நினைச்சார். அதுவும் அம்மாக்கு நல்ல எதிர்காலம் அமைச்சுக் கொடுக்குறதுக்காக. அவங்க பாயிண்ட்டாஃப் வியூல இது சரிதானும் தோணுது. என்னைப் பெத்ததாலதான் என் அம்மாக்கு இவ்வளோ கஷ்டம்.

எனக்கு கன்ஃபூஸா இருக்கு. நீங்க சொல்லுங்க. என் அம்மா எனக்காக பார்க்கனுமா? இல்ல… வயசு வித்யாசம் பார்க்காம செய்த தப்பை நினைச்சு வருந்தி மன்னிப்பு கேட்குறவங்களை மன்னிக்கலாமா?” என்றாள் விஷ்ணுவிடம்.

“அதை ஆன்ட்டியும் நீயும்தான் முடிவு செய்யனும்”

“எனக்கு நீங்க என்ன நினைக்கிறிங்கனு தெரியனும். மன்னிப்பு கேக்குறது தூரத்து உறவில்ல, என் அம்மாவை பெத்தவரும், கூடப்பிறந்தவரும். என் அம்மா இடத்துல நீங்க இருந்தா இப்போ அவங்களை மன்னிப்பிங்களா? இல்ல விலகியிருப்பிங்களா?”

“ஆன்ட்டி இடத்துல நானிருந்தா கண்டிப்பா மன்னிக்கமாட்டேன்”

விஷாலினி நினைத்த பதிலே விஷ்ணுவிடமிருந்து வரவும் கண்கள் கலங்கியது. கண்ணிமைக்காமல் விஷ்ணுவைப் பார்த்தாள். “ப்ச் எதுக்கு கலங்குற?” என்றான்.

“தப்பு செய்யாத மனுஷங்க ரொம்ப குறைவு. காதலிச்சவன் ஏமாத்திட்டா எத்தனையோ பேர் தற்கொலை செய்துக்குறாங்க. காவ்யாக்கா அப்படி பண்ணாம, போடா… நீயில்லன்னாலும் எனக்கு என் குடும்பம் இருக்குனு தைரியமா இங்க வந்துட்டாங்க.

அத்தை மாமாவும் என் அம்மாவோட அப்பா போல கௌரவம் பார்க்காம காவ்யாக்காவை ஏத்துக்கிட்டாங்க. அவங்களுக்கு காவ்யாக்கா பத்தின கவலையிருக்கு. உங்களுக்கு பிடிக்காதுன்றதுக்காக ஏதும் செய்ய முடியாம தவிச்சிட்டிருக்காங்க.

நீங்க மனசு வைக்காம காவ்யாக்கா வாழ்க்கை சரியாகாது. காவ்யாக்கா வாழ்க்கை இப்படியே இருந்தா யாருக்கும் நிம்மதியிருக்காது. என் புருசன் இன்னொரு வேலவனா இருக்க வேண்டாம்ங்க” என்றாள் கெஞ்சலாக.

விஷ்ணு சட்டன்று எழுந்திட, அவனின் கைப்பிடித்தாள் தவிப்போடு.

“கையை விடு” என்றான் சிவப்பேறிய கண்களோடு.

விஷ்ணுவின் கோபத்தில் பயந்தவள் கை தன்போல் அவனின் கையை விட, அவ்விடம் விட்டு அகன்றான் விஷ்ணு.

விஷ்ணு பின்னோடே வந்தவள், தனது வீட்டின் ஜன்னலருகே நின்று விஷ்ணுவை ஆராய, “ம்மா டீ போடு” என்று டைனிங் டேபிளில் அமர்ந்தான்.

விரல்கள் போடும் தாளத்திலேயே அவனின் டென்ஷன் புரிந்தது. கோபப்பட்டாலும் தான் சொன்னதை யோசிப்பான் என்ற நம்பிக்கை பிறந்தது விஷாலினிக்கு.

(எப்படியாவது அடுத்த எபிசோட்ல இந்த புள்ளைங்களுக்கு கல்யாணத்தை பண்ணி வச்சிடறேன். மறக்காம வந்துடுங்க ஃப்ரண்ட்ஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!