Skip to content
Post Views: 12,574
அத்தியாயம் 20
பொண்ணு வாழ்க்கையைப் பத்தி யோசிக்காம பையனுக்கு எப்படி முடிச்சிங்க? கூட்டிட்டு போய் கல்யாணம் செய்து, இரண்டு மாசம் குடும்பம் நடத்திட்டு அவன்பாட்டுக்கு விட்டுடுவான். நாம சும்மா இருக்கனுமா? என்ற சொந்தங்களின் கேள்விகளுக்கு தந்தையும், தாயும் பதில் சொல்ல முடியாமல் தவித்தத்தை பார்த்த காவ்யா மிகுந்த மன அழுத்தத்திற்குள்ளானாள்.
தான் படிக்கும் பி.ஹெ.டி படிப்பு யாருக்கும் பெரிதாய் தோன்றவில்லை. வாழ்விழந்த பெண் என்ற பரிதாபம்தான் இருந்தது. பெரியோர்கள் பார்த்து செய்த திருமணமாக இருந்திருந்தால், திருமணத்திற்கு பின்னே பெண்கள் படிப்பது பெருமைக்குரியதுதான்.
ஆனால் தானாக தேடிக்கொண்ட திருமணம். பெற்றோருக்கு துரோகம் செய்து நடத்திக்கொண்ட திருமணம்… சிறப்பாக வாழ்ந்து காட்டியிருந்தாலும் கூட தனது திருமணத்தால் பெற்றோர் அடைந்த வேதனையும், அவமானமும் இல்லையென்றாகாது.
Advertisement
திவாகர் அழைக்கும்போதே சென்றிருந்தாலும், பெற்றோர் கவலைப்போக்க தற்போது சென்றாலும் ஏற்றுக்கொள்வான்தான். ஆனால் அவன் வீட்டார் செய்யும் அவமானங்கள் தொடரும். மேலும் தன்னோடு சேர்த்து தன் தாய்தந்தையையும் இன்னும் ஏளனமாக நினைப்பார்கள். இவனும் பழையபடி தன்னைத்தான் அனுசரி என்பான்.
இப்படியாக திவாகரோடு எத்தனை பிரச்சனை இருந்தபோதும், சரிசெய்ய முடியாது என்று உரைத்தாலும், வேறொரு திருமணத்திற்கும் மனம் ஒப்பவில்லை. எனில் எப்படித்தான் தன்மீதான பெற்றேரின் வேதனையை போக்குவது என்று யோசித்து யோசித்து தலைவலி வந்தது காவ்யாவிற்கு.
பொதுப்பரிச்சை எழுதும் பிள்ளைகள் ஆதலால், “அண்ணா பிள்ளைகளை அழைச்சிட்டு அவ கிளம்பட்டும். நாளைக்கு ஸ்கூல் இருக்கு. நான் வேணும்னா இரண்டொருநாள் இருந்துட்டு போறேன்” என்றார் இராமன்.
Advertisement
மகனுக்கும் மருமகளுக்கும் இன்று சாந்திமுகூர்த்தம் ஆதலால், படிக்கும் பிள்ளைகள் இங்கெதற்கு என்று “சரிடா” என்றார் கோபாலன்.
Advertisement
இங்கே விஷ்ணுவிற்கு முக்கிய அழைப்பு வந்திருக்க, பேசிக்கொண்டிருந்தான். பத்து நிமிடமாகியும் பேச்சுகள் தொடரவே விஷாலினி ஹாலுக்கு வந்தாள். கிச்சனில் இருந்த மேகலை மகளின் கொலுசொலி கேட்டு, வெளியே வந்தவர் “என்ன விஷாலினி? தம்பிக்கு டீ வேணுமாமா?” என்றார்.
“இல்லம்மா, அவர் போன் பேசிட்டிருக்கார். நான் சேரி மாத்திக்கிறேன். ரொம்ப கஷ்டமாயிருக்கு” என்றாள்.
“மாத்திக்கோ. ஆனா மதியம் சாப்பிட்டதும் கோபாலண்ணா அழைக்க வருவார். அப்போ திரும்ப சேரி கட்டிக்கனும்” என்றார்.
Advertisement
“திரும்பவுமா?” என்று அயர்ந்தவள், “நம்ம மாமாதான? சுடிதார் போட்டுக்கிட்டாலும் அதெல்லாம் ஒன்னும் சொல்லமாட்டார்” என்றாள்.
“அவர் ஒன்னும் சொல்லமாட்டார். ஆனா நீ சேரிலதான் போகனும். இனி நீ பழைய விஷாலினி இல்ல. விஷ்ணுவோட பொண்டாட்டியா முதல்முறையா போகப்போற. மாமா வீடுதான்னாலும் கோபாலண்ணாவோட மருமகளா போற. முறைப்படிதான் போகனும். அதுக்குத்தான் அந்த பேபிபிங்க் பட்டுசாரி” என்றார் மகிழ்வோடு.
மீண்டும் பட்டுசாரியா? என்று மலைப்பாய் நினைத்தவள், கொஞ்ச நேரமாவது இலகுவான உடையில் இருக்கலாமென, பக்கத்து அறைக்கு சென்று வழக்கம்போல் இரவு உடை அணிந்து வந்தாள்.
“அண்ணன் அண்ணிக்கிட்ட சொல்லிட்டு வரேன்ப்பா” என்ற கனிமொழியின் குரலுக்கு ஜன்னலில் பார்த்தாள் மாமன் வீட்டினை. பின்னே “கனிமொழி வா” என்றும் குரல் கொடுக்க, “அண்ணியே கூப்பிட்டுட்டாங்க” என்று அண்ணனை அழைத்துக்கொண்டு வந்தாள் கனிமொழி.
கிச்சனிலிருந்து மீண்டும் வெளிவந்த மேகலை, “அறிவிருக்கா உனக்கு?” என்றார் முறைப்போடு.
“நான் என்ன பண்ணினேன்ம்மா?” என்றாள் புரியாமல்.
“விஷ்ணு உள்ள இருக்கும்போது, இங்க என்ன பண்ற?”
“ஓ… இதானா?” என்று நிம்மதியாகி, “கனி என்னை பார்க்க கேட்டுட்டு இருந்தா, அதான் கூப்பிட்டேன்” என்றாள்.
“சரி உள்ள போ” என்க, “ம்மா அவங்க யாரோ அக்யுஸ்ட் பத்தி டென்ஷனா பேசிட்டிருக்காங்க” என்றாள்.
வெளியே விஷ்ணு வரவும், கவியரசு, கனிமொழி வரவும் சரியாக இருக்க, “மதியம் இங்கதான் விருந்து, சாப்பிட்டு கிளம்பிக்கலாம். அம்மாகிட்ட நான் சொல்றேன்” என்று மேகலை சமையலறைக்கு விரைந்தார்.
“வாடா” என்று தம்பி தங்கையை அழைத்து அவர்களோடு பேசிக்கொண்டிருந்தான் விஷ்ணு. பிறகு மேகலையிடம் சொல்லிவிட்டு ஊருக்கு கிளம்பலாம் என்று இராமனின் மனைவி வர, “எல்லாருக்கும் சமைச்சிட்டிருக்கேன், இன்னும் பத்து நிமிஷத்துல ஆகிடும். சாப்பிட்டு போலாம் என்று பிடிவாதமாக சொல்லிச் சென்றார் மேகலை.
ஒரு மணிநேரம் கழித்து கோபாலன், பிரபாவதி, இராமன் மூவரும் வரவே, அவர்களை வரவேற்று, “காவ்யா எங்க அண்ணி?” என்றார் மேகலை.
“தலைவலி தாங்க முடியாம மாத்திரை முழுங்கிட்டு படுத்தா. ரொம்ப நேரம் தூக்கம் வராம அவதிப்பட்டு இப்போ நல்லா தூங்கிட்டிருக்கா மேகலை. அதான் எழுப்பல” என்றார் பிரபாவதி.
அனைவரும் மதிய விருந்து உண்ட பின்னே மூன்று மணிபோல் மகன் மருமகளை தனது வீட்டிற்கு அழைத்து வந்தார் கோபாலன்.
பூஜையறைக்கு சென்று விளக்கேற்றினாள் விஷாலினி. விஷ்ணுவிற்கு அழைப்பு வந்தது வக்கிலிடமிருந்து.
“ம்… இன்னைக்கே கையெழுத்து வாங்கிடலாம். நாளைக்கு கேஸ் ஃபைல் பண்ணிடலாம். தங்கைக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல. நீங்க வீட்டுக்கு வந்திடுங்க” என்றான்.
கேஸ் என்று பேசியதை அவனின் அலுவலகம் பற்றியது என்று நினைத்த கோபாலன், தங்கைக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னதை மட்டும் கெட்டியாய் பிடித்தார். மகளுக்கு முடியவில்லை என்பதற்காக யாரையோ வீட்டிற்கு வர சொல்கிறான் என்று பெரிதாய் ஆர்பரித்தது கோபாலன் மனம்.
“யாரை விஷ்ணு வீட்டுக்கு வர சொன்ன?” என்றார் கோபாலன்.
“வக்கீலைப்பா”
“காலைலதான் கல்யாணம் முடிஞ்சிச்சு, இன்னைக்கே ஆஃபீஸ் வேலை பார்க்கனுமா? இப்படி வேலை இருக்கக்கூடாதுனுதான ஞாயித்துக்கிழமைல கல்யாணத்தை வச்சோம்?” என்று குறைபட்டார்.
“இது ஆஃபீஸ் வேலை இல்லப்பா” என்றவன், விஷாலினியைப் பார்த்து, “போய் காவ்யாவை கூட்டிட்டு வா” என்றான்.
அனைவர் முகமும் பொலிவைக் காட்ட, தான் கேட்டுக்கொண்டதற்காக காவ்யா வாழ்வைப் பற்றி யோசிக்கிறான் கணவன் என்று நினைத்த விஷாலினியோ வேகமாய் சென்றாள் காவ்யாவின் அறைக்கு. “காவ்யாக்கா… காவ்யாக்கா” என்று அயர்ந்து உறங்குபவளை உலுக்கினாள் வேகமாக.
விழித்தவள், “ஹேய்… விஷாலினி, வந்துட்டியா?” என்றாள் புன்னகையோடு.
“அக்கா… உங்கண்ணன் கூப்பிடுறார், வாங்க”
“விஷ்ணு உன்னை கூப்பிட்டா நீ போ, என்னைக் கூப்பிட்டு அவன் கோபத்துக்கு ஆளாகாதே”
“அச்சோ என்னை இல்லக்கா, உங்களைத்தான் கூட்டிட்டு வர சொன்னார்”
“என்ன?” என்று காவ்யா வியக்க, “ஆமாம்க்கா, உங்களை கூட்டிட்டு வரசொல்லி என்கிட்ட சொன்னார்” என்றாள் மீண்டும்.
இப்பொழுதும் காவ்யாவால் நம்ப முடியாமல் போக, உள்ளே வந்த பிரபாவதி, “விஷ்ணு உன்னைக் கூப்பிடறான் காவ்யா. வா” என்றார் ஆர்பரிப்போடு.
அன்னை சொன்னபின்னே நம்பியபோதும் பயம்தான் காவ்யாவிற்கு. ஆனாலும் நாலரை வருடம் கழித்து பேச அழைத்திருக்கிறான். அதுவே மிகப்பெரிய விசயம். திட்டினாலும் வாங்கிக்கொள்ளலாம் என்று அன்னை பின்னோடு வந்து நின்றாள் காவ்யா.
விஷ்ணு காவ்யாவைப் பார்க்க, தற்போதுதான் சித்தார்த் காவ்யாவை பெண்கேட்டது நினைவிற்கு வந்தது விஷாலினிக்கு. அச்சோ… காவ்யாக்கா வாழ்க்கையை சரி பண்றதா நினைச்சு அந்தண்ணாக்கு கட்டிக்கொடுக்க நினைச்சிட்டாங்களோ என்று பதட்டமானாள் விஷாலினி.
விஷ்ணுவும் நாளை பேசலாம் என்றுதான் நினைத்திருந்தான். ஆனால் நாளை முக்கிய வேலையாக காஞ்சிபுரம் சென்றாக வேண்டிய சூழல், சென்றால் பத்து நாளைக்கு மேல் சென்னைக்கு வர வாய்ப்பில்லை ஆதலால் தற்போதே பேசிட முடிவெடுத்தான்.
விஷ்ணு பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலைகுனிந்தாள் காவ்யா. “இன்னும் கொஞ்ச நேரத்துல வக்கீல் வருவார். டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ணிடு” என்றான்.
காவ்யா முதற்கொண்டு மொத்த குடும்பமும் அதிர்ந்து விழிக்க, “வேணாம் விஷ்ணு, கொஞ்சம் பொறுமையா யோசிப்போம்” எனப் பதறினார் பிரபாவதி.
திருமணத்தில் காவ்யா விசயம் ஏற்படுத்திய சலசலப்புகளால் மகன் எதோ முடிவெடுத்திட்டான். தற்போது மறுத்தால் கோபப்படுவான் என்பதாலும், மறுத்தால் மீண்டும் காவ்யாவை கண்டுகொள்ள மாட்டான் என்றும், “இன்னைக்குத்தான் கல்யாணம் ஆகியிருக்கு. அபசகுணமா இதெல்லாம் இப்போ செய்தாகனுமா விஷ்ணு? இரண்டொரு வாரம் கழிச்சு பார்த்துக்கலாம். வக்கீலை வரவேண்டாம்னு சொல்லு” என்றார் கோபாலன்.
“அவளும் பி.ஹெச்.டி பண்ணிட்டிருக்கா, க்ளாஸ் போகவேண்டியிருக்கும், எனக்கும் நாளைக்கு காலைலயே கிளம்பனும்ப்பா. இதுவும் நல்ல விஷயம்தான்ப்பா, பண்ணனும்னு முடிவெடுத்துட்டேன், எப்போ பண்ணினா என்ன?” என்றான்.
“ஏங்க… அந்த சித்தார்த் அண்ணா கேட்டதால இப்படி யோசிச்சிங்களா? காவ்யாக்கா மனசுக்கு பிடிக்க வேணாமா?” என்று கலக்கத்தோடு விஷாலினி கேட்க, “மூச்… நீ வாயே திறக்கக்கூடாது” என்றான் கட்டளையாக.
விஷ்ணு டிவோர்ஸ் என்று சொன்னதை விட, தற்போதுதான் மேலும் பயமானது காவ்யாவிற்கு. “சித்தார்த் என்ன சொன்னாங்க விஷாலினி?” என்றாள் கண்ணீரோடு.
“ஓஹ்… அவளை விசாரிக்காம நான் சொன்னதை செய்ய மாட்டியா?” என்றான் முறைப்பாக.
“இன்னொரு கல்யாணம்… சத்தியமா என்னால முடியாது விஷ்ணு” என்றாள் கெஞ்சலாக.
அழைப்பு மணி ஒலிக்கவே, ‘வக்கீல்தான் வந்திருப்பார்’ என நினைத்து “வாங்க மெய்ஞானம்” என்றான்.
வக்கீல் உள்ளே வர, பயந்துபோனாள் காவ்யா. திவாகரோடு வாழ தன்மானம் இடம்கொடுக்கவில்லைதான். ஆனால் அவனைத்தவிர வேறொருவனை தன் வாழ்வில் இணைத்துக்கொள்ள நிச்சயம் முடியாது. அப்படி இதுவரை யோசித்ததும் இல்லை.
தனது சித்தப்பாவை பார்த்தாள் கெஞ்சலாக. “எடுத்மோம் கவிழ்த்தோம்னு முடிவெடுக்க வேண்டாம் விஷ்ணு. என்னதான் பிரிஞ்சிருந்தாலும் அந்த பையனும் இன்னும் இப்படி நோட்டிஸ் அனுப்பலை. ஒருமுறை பேசிப்பார்ப்போம்” என்றார் இராமன்.
“எப்படி சித்தப்பா பேசுவிங்க? கூட்டிட்டு ஓடின வேகத்துலயே துரத்தியும் விட்டுட்டான். அவனோட வாழ முடியாமத்தான இங்க வந்தா? அப்படிபட்டவன்கிட்ட என்ன பேசுவிங்க? என் பொண்ணை ஏத்துக்கோனு கெஞ்சப்போறிங்களா? நம்ம குடும்பத்துல இப்படி எண்ணத்தோட ஒருத்தரும் அவன் முன்ன போய் நிற்கக்கூடாது” என்று இராமனிடம் சொல்லி, “பேப்பர்ஸ் ரெடிங்களா?” என்றான் வக்கீலிடம்.
ஆமாம் என்பதாய் தலையசைத்து, தாள்களை எடுத்து வெளியே வைத்தார் மெய்ஞானம். “அவருக்கு நிறைய வேலையிருக்கு, நான் கேட்டதால வீட்டுக்கே வந்திருக்கார். சீக்கிரம் கையெழுத்து போடு” என்றான் காவ்யாவிடம்.
கண்கள் அருவியாய் கண்ணீரை கொட்ட, கைகள் நடுங்கியது காவ்யாவிற்கு. “விஷ்ணு” என்று இயலாமையோடு பார்க்க, “பெத்தவங்க வேணாம், அவன் மட்டுமே போதும்னு நம்பி போனவளை மனுஷியாக் கூட மதிக்காதவனுக்காக இத்தனை யோசிக்கிற? பெத்து வளர்த்த அப்பாம்மாவை யோசிக்கவேமாட்டியா?” என முறைத்து, “அப்பாம்மா நிம்மதி முக்கியம்னு நினைச்சா கையெழுத்து போடு” என்றான் அதட்டலாக.
கையெழுத்து போட்டு அறைக்குள் சென்றவளுக்கு அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. வக்கீலை அனுப்பிட்டு உள்ளே வந்தான் விஷ்ணுவர்தன்.
“என் பொண்டாட்டியா இன்னைக்குத்தான் வீட்டுக்கு வந்திருக்க. வந்தன்னைக்கே எதுக்கு இப்படி அழற?” என் காய்ந்தான் விஷாலினியிடம்.
விஷாலினி கண்களைத் துடைக்க, “போய் டீ வச்சு எடுத்து வா” என்றான்.
“விஷாலினி இன்னைக்கு அடுப்படிக்கு போகக்கூடாது” என்றார் பிரபாவதி.
“அப்போ நீ வச்சு எடுத்துவாம்மா” என்க, சமையலறைக்குள் சென்றார் பிரபாவதி.
இவள் காவ்யா அறைக்குள் செல்ல எத்தனிக்க, “இப்படி வந்து உக்காரு” என்று தனதருகே இடத்தை காண்பித்தான்.
“இல்ல, காவ்யாக்கா” என்று விஷாலினி தவிக்க, “வந்து உக்காருனு சொன்னேன்” என்றான் கட்டளையாக.
விஷ்ணு அருகே வந்தமர்ந்தாள் விஷாலினி. சற்று நேரம் அமைதியில் கழிய, பிரபாவதி டீயை கொடுத்தார் மகனிடம். வாங்கிப்பருகியவன், தந்தையைப் பார்த்தான்.
கோபாலனின் வேதனை அவரின் முகத்தில் தெரிய, காவ்யாவை நினைத்து நெஞ்சுவலி வந்திடுமோ என்று பயந்தவன், தந்தையையும் சித்தப்பாவையும் மாடிக்கு அழைத்துச் சென்றான்.
திவாகர் பற்றி விசாரித்ததை சொன்னவன், “திவாகர் பொண்ணு பின்னாடி சுத்துறவனா இருந்திருந்தா வேற மாதிரி யோசிச்சிருப்பேன்ப்பா. அவனும் காவ்யாவைத் தவிர யாரையும் யோசிக்கல. ஆனாலும் அளவுக்கதிகமான பணத் திமிரு இருக்கு. அவன் பணத்துக்காகவே எத்தனை வருசம் ஆனாலும் காவ்யா தேடி வருவானு நினைச்சிட்டிருக்கான்.
டிவோர்ஸ் நோட்டிஸ் பார்த்ததும் தானா காவ்யாவை தேடி வருவான். முதல்ல கத்துவான், காவ்யாவை கேவலமா பேசுவான். அப்புறம் வேற வழியே இல்லாம கெஞ்சுவான். என் பொண்ணுக்கு வேற இடம் பார்க்கப்போறோம். நீ தேவையில்லனு மட்டும் சொல்லுங்க. மத்ததை நான் பார்த்துக்கிறேன்.
“அஞ்சாறு நாளைக்குள்ள அவன் கைக்கு நோட்டீஸ் கிடைக்கும். காவ்யாவை தேடி காலேஜ்க்கு போவான். நமக்குள்ள இனி ஒத்து வராதுனு காவ்யாவை சொல்ல சொல்லிடுங்க” என்றான்.
கோபாலனுக்கும், இராமனுக்கும் பெருத்த நிம்மதியானது. மகனை தழுவிக்கொண்டார் ஆத்மார்த்தமாக. “உங்க நிம்மதிக்காகத்தான் செய்யிறேன். அதுக்காக அவ செய்த துரோகத்தை மறந்துட்டேனு நினைச்சிடாதிங்கப்பா. இனி எப்போவும் அவளோட பழைய விஷ்ணுவை அவ பார்க்கப்போறதில்ல” என்றான் இறுகிய முகத்தோடு.
மகன் இந்தளவிற்கு யோசித்ததே பெரும் மகிழ்வை உண்டாக்க, “சரிப்பா, உனக்கு பிடிக்கலனா பேசாத” என்றார் கோபாலன்.
“பொண்டாட்டியை மதிக்கத் தெரியாதவனுக்காக காவ்யா வாழ்க்கையை வீண் பண்ணக்கூடாது, அவனை டிவோர்ஸ் பண்ணாம வேற வரன் பார்க்க முடியாதுனு நான் சொன்னதா அம்மாகிட்டயும் காவ்யாகிட்டயும் சொல்லுங்க” என்று இன்னும் சில விசயங்களை சொல்லி, வீட்டிற்கு அழைத்து வந்தான்.
error: Content is protected !!