Skip to content
Post Views: 13,539
அத்தியாயம் 7
காவ்யா இன்று வருவாள், நாளை வருவாள் என ஆவலோடு காத்திருந்தாள் விஷாலினி. ஒருவாரம் முடிந்த நிலையில் இன்னும் காவ்யா வரவில்லை.
விஷாலினிக்கு காவ்யாமேல் உள்ள பாசத்தை விட, காவ்யாவின் செயலால் கோபாலன் பிரபாவதி படும் வேதனையை காண சகிக்க முடியாமல் போக, காவ்யா வந்துவிட்டால் சிறிது காலம் கழித்து எல்லாம் சரியாகிடும் என்ற ஆவல் இருக்கவே காவ்யாவை வெகுவாய் எதிர்பார்த்த விஷாலினிக்கு ஏமாற்றமே எஞ்சியது.
அவங்க போன் செய்திருப்பாங்களா? இந்தக்கா அத்தனை முறை போன் செய்துச்சு, அப்புறம் ஏன் செய்யல? நாம கூப்பிட்டு பார்க்கலாமா? என யோசித்தவாறு அன்னையிடம் சொன்னாள் தனது யோசனையை.
Advertisement
“நாம பேசி, அவ வந்தபின்ன கோபாலண்ணன் சேர்த்துக்கலைனா என்ன பண்றது? விஷ்ணு போன் நம்பர் வாங்கி ஒரு வாரமாகிடுச்சு. தங்கை வேணும்னு இருந்தா போன் செய்திருக்கமாட்டானா?
அப்படியில்லைனாலும் நமக்கு போன் செய்யிறவ அவங்கப்பாம்மாக்கு செய்ய வேண்டியதுதான? திட்டதான் செய்வாங்க. செய்த தப்புக்கு தண்டனையா நினைச்சுக்கலாமில்ல? அப்படி என்ன வீம்பு? அங்கயும் பண்ணல, நமக்கும் திரும்ப போன் செய்யல.
அவளா செய்தா பார்த்துக்கலாம். அதிகப்பிரசங்கி தனமா ஏதும் யோசிக்காம இன்னும் எதாவது வாங்கனுமானு யோசி. நாளைக்கு காலைல ஹாஸ்டலுக்கு போகனும்” என அதட்டினார் மேகலை.
Advertisement
பெயர் தெரியாதவனுக்கு பயந்து விடுதிக்கு செல்ல முடிவெடுக்கும்போது எதிலிருந்தோ தப்பிக்கும் உணர்வு வந்தது விஷாலினிக்கு. ஆனால் நாளை விடுதிக்கு சென்றிடுவோம் என நினைக்க பெரும் கவலையாக இருந்தது.
Advertisement
இனி அன்னையோடு இருக்க முடியாது, அத்தை மாமாவை பார்க்க முடியாது. நான் இல்லையென்றால் அம்மா சரியாக உண்ண மாட்டார்கள். தனக்கொருத்திக்கு எதற்கு சமைத்துக்கொண்டு என ஒரு வேளைக்கு சமைத்து அதையே மூன்று வேளையும் உண்பார்கள்.
முக்கியமாக கடந்த ஒரு வருடமாக மாதவிடாய் நாள்களில் மேகலை மிகவும் அவதிப்படுவார். அந்த நேரம் விஷாலினிதான் அன்னையிடம் கேட்டு தனக்கு தெரிந்தவரை சமைப்பது, பாத்திரம் தேய்ப்பது.
மூன்று நாள்களுக்கு பூ கட்டித்தரவும் மறுத்திடுவார். அப்படி நேரத்தில் விஷாலினிக்கு பள்ளி விடுமுறை என்றால் பூவையும் அவளே கட்டித்தருவாள்.
Advertisement
தற்போது நான் சென்றுவிட்டால் இதையெல்லாம் யார் பார்ப்பது? சமைக்க முடியாமல் பட்டினி கிடப்பார்களோ என்ற கவலையெல்லாம் வரிசை கட்டி நிற்க கவலையோடு அமர்ந்திருந்தாள்.
மகள் அமர்ந்திருக்கவே கோபம் வந்தவராய், “நான் சொல்றது உன் மண்டைக்கு ஏறலையா?” என்றார் மேகலை.
“அம்மா” என்றவளுக்கு கண்கள் கலங்கவே, காவ்யாவை நினைத்து கலங்குகிறாள் என, “காரியம் சாதிக்க ஆம்பிளைங்க என்னென்னவோ பேசுவாங்க. கண்மண் தெரியாத நம்பினா வீணா போறது நம்ம வாழ்க்கைதான்னு சொன்னேன்.
அதுக்கு என்ன சொன்னா தெரியுமா? உங்களுக்கு மாதிரி எனக்கு ஆகாது ஆன்ட்டி, நான் லவ் பண்ற பையனோட நேட்டிவ், பேக்ரௌண்ட் எல்லாமும் எனக்கு தெரியும். எங்க காதல் உண்மையானது.
அவரைப் பத்தி சொன்னா அப்பாவால கூட மறுக்க முடியாது. அந்தளவுக்கு நல்லவர். நீங்க ஏதும் அவசரப்பட்டு அப்பாகிட்ட ஒன்னுக்கு இரண்டா சொல்லிடாதிங்க. சமயம் வரும்போது நானே அப்பாகிட்ட சொல்லிக்குவேன்னு சொன்னா. மறைமுகமா என் விசயத்துல தலையிடாதிங்கனு சொல்லிட்டா.
என்கிட்டயே அப்படி பேசினவ உன் பேச்சு மட்டும் கேட்டுடுவாளா? இதெல்லாத்தையும் விட முக்கியமா இனி போன் செய்தா அட்டன் பண்ண வேண்டாம்னு கோபலண்ணா சொல்லியிருக்காங்க.
விஷ்ணுவும் நான் பேசிக்கிறேனு நம்பர் வாங்கியிருக்கான். அவங்களை மீறி நாம ஏதும் செய்யக்கூடாது. அதனால அவ நினைப்பை தள்ளி வச்சிட்டு ஆகுற வேலையைப் பாரு. தேவைன்னா அவளே கூப்பிடுவா” என்றார் கட்டளையாக.
காவ்யாக்காவா இப்படி பேசினது என்ற அதிர்ச்சியோடு அன்னையின் கட்டளைக்கு சரியென்பதாய் தலையசைத்தவள், “ம்மா நான் வீட்டுலயிருந்தே காலேஜ் போய்க்கட்டுமா?” என்றாள் பாவமாக.
முறைத்த மேகலை, “இப்போ என்ன பிரச்சனை உனக்கு? ஹாஸ்டல் போய்த்தான் படிப்பேனு பிடிவாதம் செய்துட்டு கடைசி நேரத்துல இப்படி பேசுற?” என்றார் கோபமாக.
“நீ எப்படிம்மா தனியா இருப்ப?” என்றாள் அழுகையை அடக்க முயன்றபடி.
“அட பைத்தியமே… நான் கூட அந்த பையனுக்கு பயந்து சொல்றியோனு நினைச்சேன்” என இலகுவாய் சொல்லி, “நானென்ன அமேசான் காட்லயா இருக்கேன்? பத்திரமா உன் கோபால் மாமா பாதுகாப்புல இருக்கேன். எனக்கென்ன பயம்?” என்றார் சிரிப்போடு.
“ப்ச் அதில்லம்மா, உனக்கு அடிக்கடி உடம்புக்கு முடியாம போகும். சில நேரம் சாப்பிடாம படுத்துப்ப, நானும் சாப்பிடமாட்டேனு சொன்னா மட்டும்தான் கொஞ்சமா சாப்பிடுவ. நான் போய்ட்டா ரொம்ப உடம்பை கெடுத்துப்ப” என்றாள் கவலையாக.
“பார்டா…” என மெச்சி, “உன்னை கரையேத்தும் வரைக்குமாவது என் உடம்பை பத்திரமா பார்த்துப்பேன். இங்கிருந்து ஒரு மணிநேர ட்ராவல்தான? ஒருநாள் லீவ்னாலும் நானே வந்து வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டு, திரும்ப கூட்டிட்டு போய் விடறேன்.
தினமும் வீடியோ கால்ல பேசலாம். ஹாஸ்டல்ல இருந்தாலும் என்னோடவே இருக்கிறமாதிரி ஃபீல் பண்ண வைக்கிறேன். எதைப்பத்தியும் கவலைப்படாம படிக்கிற வேலையை மட்டும் பாரு. சரியா?” என்றார் நெகிழ்வோடு.
“ம்மா ஆனாலும் ஹாஸ்டல் போக கஷ்டமா இருக்கும்மா, தனியா தூங்கனும். ஜடை பின்ன கஷ்டம்” என்றாள் பாவமாக.
“ப்ச் என்ன விஷாலினி? எனக்கு மட்டும் உன்னை ஹாஸ்டல் அனுப்ப சந்தோசமா என்ன? சில விசயங்களை விலகி நின்னுத்தான் சரிபண்ண முடியும். அந்த பையனை உன்னால சமாளிக்க முடியாதுனுதான ஹாஸ்டல் போக முடிவெடுத்தோம்? நீ கொஞ்சம் மெச்சூர்ட் ஆனதும் வீட்டுலயிருந்து போய்க்கலாம்” என எடுத்துரைத்தார் பொறுமையாக.
தன்னை தொடர்பவன், தந்தையின் தங்கை மகன் என்று அன்னை சொன்ன பின்னே அவன் மீதிருந்த பயம் போய் கோபம் வந்தது விஷாலினிக்கு. எவ்வளோ தைரியம் இருந்தா என்னை கேட்பான் என அன்னையிடம் ஆதங்கப்பட்டவள், இனி அவனை நானே பார்த்துப்பேன் ம்மா. கேக்குற கேள்விக்கு பதில் சொல்ல முடியாம இனி என்கிட்ட வச்சிக்கமாட்டான் என்றிருந்தாள்.
கடத்திக்கொண்டு போய் கல்யாணம் அப்படி இப்படி என்று எதாவது விபரீதம் நடந்துவிட்டால் என்ன செய்வதென மேகலைக்கு பயம் ஆதலால், இப்போ சின்ன பொண்ணு நீ. இன்னும் இரண்டொரு வருஷம் கழிச்சி பேசிக்கலாம்.
இன்னொரு முறை என்முன்ன வந்தான்னா நானே பேசி அனுப்பிடுவேன். அவன் மேல எனக்கு பயம் இல்ல. என்கூடவே இருந்தா உலகம் தெரியாது. வெளில போய் பலதரப்பட்ட மக்களை பார்க்க பார்க்க கொஞ்சம் கொஞ்சமா மனிதர்களை புரியும். அப்போ என்ன பிரச்சனைன்னாலும் தைரியமா ஃபேஸ் பண்ணலாம் என்றிருந்தார் மேகலை.
வேறு வழியில்லாமல் விசாலினி சரியென்பதாய் தலையசைக்க, “வேற என்ன வாங்காம விட்டுட்டோம்னு யோசி. அம்மா சமைக்கிறேன்” என்று கிச்சன் புகுந்தார் மேகலை.
அடுத்தநாள் காலை கோபாலன் நாளிதழை புரட்டிக்கொண்டிருக்க, “மாமா” என்றாள் விஷாலினி.
இன்று விஷாலினி கல்லூரிக்கு செல்கிறாள் என்று மேகலை முன்பே சொல்லியிருக்க, தன்னிடம் சொல்ல வருவார்கள் என்று காத்திருந்த கோபாலன், “ம் உள்ள வாடா” என்றார்.
விஷ்ணு இருப்பானோ என “டைம் ஆச்சு, நீங்க அத்தையை அழைச்சிட்டு வெளில வாங்க மாமா” என்றாள்.
“உன் அத்தை பிரசாதம் கொடுக்கனுமாம், உள்ள வா” என்றார்.
மேகலை வெளியே நின்றிருக்க, விஷ்ணு கிரௌண்டிற்கு சென்றிருப்பான் என்றபோதும் உள்ளே போக தயக்கம்தான். ஆனாலும் கோபாலன் பேச்சை மீறமுடியாமல் உள்ளே வந்தாள் விஷாலினி. “வாங்க டாக்டரே” என்றார் பிரபாவதி.
“அத்த… இன்னும் ஒருநாள் கூட காலேஜ்க்கு போகல” என சிணுங்கினாள் இன்முகத்தோடு.
பிரபாவதி “வந்து வணங்கிக்கோ” என்று பூஜையறை அழைத்துச்சென்றார்.
மேகலையை உள்ளே அழைத்த கோபாலன் “எத்தனை மணிக்கும்மா கிளம்பனும்?” என்றார்.
நேற்றே நான் அழைத்துச் செல்கிறேன் என்றிருந்தார் கோபாலன். கோபாலன் உடல்நிலை கருதி, “வேணாம்னா, உங்களுக்கு சிரமம். டேக்ஸி புக் பண்ணிட்டேன், இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடும்” என்றார் மேகலை.
“நேத்தே சொன்னேன்தானம்மா? எதுக்கு டாக்ஸி புக் பண்ணின? பாப்பாக்காக இதை கூட செய்யமாட்டேனா? ஒரு சிரமமும் இல்ல. டேக்ஸிலாம் வேணாம். நானே அழைச்சிட்டு வரேன்” என்றார் உரிமையாக.
“இல்லைண்ணா, அங்க போய் பொருளெல்லாம் எடுத்து வச்சிட்டு திரும்ப வர மதியம் ஆனாலும் ஆகிடும். உங்களுக்கு இங்க வேலையிருக்கும்” என்றார் தயக்கமாக.
“பரவால்லம்மா, நானே வரேன். கட்டடத்துக்கு மதியம்தான் வருவேனு வேலை செய்யிறவங்ககிட்ட சொல்லிடறேன். அதோட தினமும் விஷ்ணு என்னோட கட்டடத்துக்கு வரான். அவன் பார்த்துப்பான்” என்றார் கோபாலன்.
உள்ளே கடவுளை வணங்கியவள், “மாமாகிட்ட ப்ளஸிங் வாங்கனும்த்த” என்று கோபாலனிடம் வந்தவள், பிரபாவதியையை இணைந்து நிற்க பணித்து, பாதம் பணிந்தாள்.
விஷாலினியின் செயலை எதிர்பாராத கோபலன், “மருத்துவத்துல பெரிய சாதனை பண்ண வாழ்த்துக்கள்டா” என வாழ்த்தினார் உளமாற.
“மாத்திரைலாம் சரியா சாப்பிடுங்க மாமா. வேலை வேலைனு ரொம்ப படுத்திக்காதிங்க” என்று கெஞ்சலாய் சொல்லி, “தினமும் எனக்கு கால் பண்றிங்களா?” என்றாள் ஆர்வத்தோடு.
“பண்றேன்டா” என்றார்.
“டைம் ஆகிடுச்சு விஷாலினி, எல்லாம் எடுத்து வச்சாச்சானு செக் பண்ணனும் வா” என்று தனது வீட்டிற்கு கிளம்பினார் மேகலை.
கேட் வெளியே நின்றிருந்த டேக்ஸியைப் பார்த்தவாறு உள்ளே வந்தான் விஷ்ணுவர்தன்.
அன்னை கிளம்பியதும் “மாமா” என்றாள் பெரும் தயக்கத்தோடு.
“என்னடா? அந்த பையனை நினைச்சு பயமாயிருக்கா?”
“முன்ன இருந்தது, இப்போ இல்லை மாமா. எனக்கு வேற ஒன்னு சொல்லனும். ஆனா பயமாயிருக்கு”
“என்கிட்ட என்ன பயம்? எதுவானாலும் சொல்லுடா”
தைரியத்தை வரவழைத்தவள், “காவ்யாக்கா பண்ணினது பெரிய தப்புதான். அது… அதுக்காக என் அம்மாவை அவங்கம்மா வீட்டாளுங்க ஒதுக்கின மாதிரி நீங்களும் செய்திடாதிங்க மாமா… அக்கா பாவம்” என்றவள் கண்களில் விஷ்ணு பட, “நான் கிளம்பறேன் மாமா” என்று விஷ்ணுவை கடந்து தலைகுனிந்த நிலையிலேயே வெளியேறினாள்.
இன்று கல்லூரிக்கு செல்கிறாள் என்று விஷ்ணுவிற்கு தெரியும். ஆனால் அதற்கெதற்கு அழுகிறாள்? வீட்டிற்குள் வேறு வந்திருக்கிறாள். காவ்யா திரும்பவும் போன் செய்திருப்பாளோ? உயிர் தோழிக்காக அப்பாகிட்ட பேச வந்திருப்பாளோ கண்ணு வேற கலங்கியிருக்கு என்ற யோசனையோடு, “என்னவாம் அவளுக்கு? எதுக்கு அழுதுட்டு போறா?” என்றான் விஷ்ணு.
விஷாலினி காவ்யாவைப் பற்றி சொன்னதை மறைத்து, “ஹாஸ்டலுக்கு போறா இல்ல. அவங்கம்மாக்கு நிகரா நம்மளையும் மிஸ் பண்றா விஷ்ணு. என்னை பத்திரமா இருக்க சொல்றா. தவறாம மாத்திரை சாப்பிடனுமாம் நானு. பெரிய மனுஷி எனக்கு புத்தி சொல்லிட்டு போறாங்க” என்றார் நெகிழ்வோடு.
“ஹாஸ்டல்ல சேரப்போறாளா? ஏன்ப்பா? காலேஜ்க்கு ஒன் ஹார்தான ட்ராவல்? வீட்டுலயிருந்து போயக்கலாமே” என்றான்.
விஷாலினி மீது அக்கறை காட்டும் மகனை அதிசயமாய் பார்த்து, “உனக்கு விசயம் தெரியாதா? உன் அம்மா சொல்லியிருப்பாளே” என்றார் மனைவியை பார்த்தவாறு.
“என்ன விசயம்ப்பா? எனக்கேதும் அம்மா சொல்லலை”
“அவங்களை விட்டுட்டு வந்து சொல்றேன் விஷ்ணு, இல்லைனா டேக்ஸில போய்டுவாங்க” என்று அவசரமாய் வாட்சை அணிந்து கார் சாவி, மொபைல் எடுத்து வெளியே வர, விஷ்ணுவும் வெளியே வந்தான். “அண்ணா எங்களுக்கு ஒரு சிரமமும் இல்ல. மணி ஏழுதான் ஆகுது. டிபன் கூட சாப்பிட்டிருக்கமாட்டிங்க” என்று மறுத்தார் மேகலை.
“விஷாலினியை சுத்தி எவ்வளோ பெரிய பிரச்சனை இருக்கு? இப்போவும் என் உதவியை மறுத்தா என்னம்மா அர்த்தம்? அந்த பையனேது வந்தா காலேஜ் முதல்நாளே அப்சட் ஆகிடாதா?” என சிறு கோபத்தோடே கேட்டார் கோபாலன்.
மேகலை பதில் சொல்லும் முன்னே, “எந்த பையன்ப்பா? அப்படி என்ன பிரச்சனை அவளை சுத்திட்டிக்கு?” என்றான் விஷ்ணு.
error: Content is protected !!