Skip to content
Post Views: 13,212
அத்தியாயம் 9
“எழுந்துரு விஷாலினி, இன்னும் நீ சாப்பிடல” என்றார் மேகலை.
நிமிர்ந்தவளுக்கு தற்போதுதான் மாமா தன்னை தவறாக நினைப்பாரோ என்று தோன்ற, “நான் வேணும்னு ஏதும் பேசல மாமா, நான் வாயாடி இல்லைனு உங்களுக்கு தெரியும்தான? என்னை கெட்ட பொண்ணுனு நினைக்கமாட்டிங்கதான?” என்றாள் தவிப்பாக.
Advertisement
“ச்ச ச்ச… இல்லடா, நீ பேசின ஒவ்வொரு வார்த்தையும் நூறு பர்சன்ட் சரி. எனக்கு ரொம்ப பெருமையாதான் இருக்கு” என்றார் பெருமையாக.
பிறகு படபடப்போடு விஷ்ணுவை பார்க்க, இத்தனை நேரம் அவளில் லயித்திருந்தவன், “யப்பா… அவங்க இருக்கும்போது அந்நியன் மாதிரியும், போன பின்ன அம்பி மாதிரியும் என்னமா ரியாக்ஷன் பண்ற?” என இலகுவாய் சொல்லி, “போய் முதல்ல சாப்பிடு” என்று அக்கறையாகவும் சொல்லி தன் வீட்டிற்குள் நுழைந்தான்.
இன்று பேசியதனைத்தும் சரியென்றாலும் அவன் பார்வையில் நீ அவமானப்படுத்தியதாய்தான் இருக்கும். பழிவாங்க நிறைய வாய்ப்பிருக்கு, கவனமா இருக்கனும். அவன் திரும்ப வந்தா எனக்கு கால் பண்ணு என்று விஷாலினியிடம் நிறைய பேச நினைத்தான் விஷ்ணு.
Advertisement
ஆனால் அவளின் அன்னை அழைப்பில் இன்னும் அவள் உண்ணவில்லை என்பது புரியவே, பிறகு பேசிக்கலாம். இந்த தாக்கத்திலிருந்து சிறிதேனும் மீண்டு வரட்டும். நாளை ஞாயிறு விடுமுறைதானே… நாளைக்கு பேசிக்கலாம் என்று உள்ளே வந்தான்.
Advertisement
அப்பா யார் என்ற கேள்வி பள்ளி சேர்த்தும் நாள் தொடங்கி தனது திருமணம் வரை பேசப்படும் என்று விஷாலினி சொன்னபோது முகம் வெட்கி அருவியாய் கண்ணீரை கொட்டிய மேகலைக்கும், வயதிற்கு மீறிய பிரச்சனைகளை சந்தித்த விஷாலினிக்கும் தனிமை வேண்டும் என்று, “போய் சாப்பிட்டு ரெஸ்ட் எடுடா, பாப்பாவை அழைச்சிட்டு போம்மா” என்று மேகலையிடம் சொல்லி கோபாலனும் உள்ளே சென்றார்.
இத்தனை வருடங்களில் ஒருமுறை கூட விஷாலினியின் குரல் இப்படி உயர்ந்து ஒலித்ததில்லை. அசுரனின் ஓயாத சத்தத்திற்கு மேல் கேட்டது அவளின் ஆக்ரோசமான வார்த்தைகள்.
ஹாலில் இருந்தபடி காவ்யாவும் பிரபாவதியும் விஷாலினியைதான் பார்த்திருந்தனர். பிரச்சனை முடிந்து விஷ்ணு உள்ளே வரும் சமயம் மகளை அவளின் அறைக்கு அழைத்து சென்றிருந்தார் பிரபாவதி.
Advertisement
“உன்னை விட மூனு வயசு சின்னபிள்ளைதான். பெத்தவ வலியை உணர்ந்து எப்படி பெருமை படுத்தியிருக்கா பார்த்தியா?” என்று காவ்யாவிடம் கேட்டார் பிரபாவதி.
காவ்யா மீதுள்ள கோபத்தில் எங்கே உண்ணாமல் கிளம்பிடுவானோ என, “பிரபா, சொல்லி தெரியறதில்ல பாசம்” என அதட்டி, “வந்து விஷ்ணுக்கும் எனக்கும் சாப்பாடு வை” என்றார்.
பெற்றோரின் மொத்த நிம்மதியையும் சீர்குலைத்த காவ்யா தற்போது வீட்டிற்குள் இருக்கிறாள் என்பதை கிரகிக்கவே அரும்பாடுபட்டான் விஷ்ணுவர்தன்.
பிரபாவதி உணவை எடுத்து வைக்க, “விஷ்ணு இருக்கும்போது காவ்யா பேச்சே இருக்கக்கூடாது. உனக்கு மககிட்ட பேசனும்னா விஷ்ணு இல்லாத நேரம் பேசிக்கோ” என்று கட்டளையிட்டார் மனைவிக்கு.
இப்படி கட்டளையிட்டால் மகளின் பிரச்சனையை எப்படி சொல்வது என்று மனம் சுணங்கினாலும் சரியென தலையசைத்தபடி பரிமாறினார். “நீ சாப்பிட்டியாம்மா?” என்றான்.
மகளின் பிரச்சனை, அவளின் வரவால் கேட்போர்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறோம் என்ற கவலைகள் மனதை அலைக்கழிக்க சாப்பிடும் எண்ணமேயில்லை ஆகையால் “நீங்க சாப்பிடுங்க முதல்ல, நான் அப்புறம் சாப்பிடறேன்” என்றார்.
விஷ்ணு முறைக்க, “வழக்கமா நீங்க சாப்பிட்ட பின்னதானடா நான் சாப்பிடுவேன்?” என்றார் பாவமாக.
“பரவால்ல, இனி எங்களோடவே சாப்பிடு” என்றான் கட்டளையாக.
இருவருக்கும் பரிமாறி தனக்கும் போட்டு உண்டார். உணவுண்ணும் நேரம்தான் வீடு கலகலப்பாக இருக்கும். அன்னை சமையலை பழித்துக்கொண்டே அதிகம் உண்பான் விஷ்ணு. ‘நீ சாப்பிடறதை பார்த்து உன் பொண்டாட்டி பயப்படப்போறா. உனக்கு சமைக்க என்னால ஆகாது, ஆளை விடுனு போய்டுவா’ என்று கலாட்டா செய்வாள் காவ்யா.
காவ்யா வீட்டை விட்டு சென்ற பின்னே கூட தாய் தந்தையை இயல்பாக்க நினைத்து எதாவது பேசிக்கொண்டுதான் உண்பான் விஷ்ணு. ஆனால் இன்று அமைதியாகவும் வழக்கத்தை விட வேகமாகவும் உண்டு எழுந்தவன், “அப்பா நான் கட்டிடத்தை பார்த்துக்கிறேன். இன்னைக்கு வீட்டுல இருங்க. ஆன்ட்டியை தைரியமா இருக்க சொல்லுங்க” என்று கிளம்பினான்.
“ஏங்க காவ்யா” என்று பிரபாவதி தயங்க, “ம் சொல்லு. பெத்துட்டோமே… என்ன பிரச்சனையை இழுத்துட்டு வந்துருக்கானு தெரிஞ்சிக்கத்தான வேணும்” என்றார் வேதனையோடு.
விஷ்ணு பைக் சத்தம் கேட்டதுமே தந்தையிடம் பேசலாம் என நினைத்தாள் காவ்யா. அன்னை தன்னைப்பற்றி சொல்லும்போது அவரின் பதில் என்னவாக இருக்கும் என்பதை அறிய உள்ளேயே இருந்தாள்.
கோபம் இருந்தபோது கணவன் மகளை அறிய முற்படுவதே பெருத்த நிம்மதியை தர, அவளின் பிரச்சனையை சொன்னார் வருத்தத்தோடு.
“ம்… கவலைப்படாதிங்கப்பா, அவளுக்கொரு பிரச்சனைன்னா கண்டிப்பா நம்மளைத்தான் தேடி வருவானு அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல இருக்கும்போதே விஷ்ணு சொன்னான். அவன் சொன்னது போலவே நடந்துடுச்சு” என்றவர், “இப்போவும் அவளுக்கு பிரச்சனைனுதான் வந்திருக்காளே தவிர, இவ செய்த செயலால நாம அடைஞ்ச வேதனையும் தெரியல. பெத்தவங்க வருத்தமும் புரியல” என்றார் விரக்தியாக.
“ஏங்க… இது அப்படியில்லங்க. காவ்யா செய்தது தப்புதான். அதை உணர்ந்ததாலதான் உங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டா. நாம பார்த்துபோம்ன்ற நம்பிக்கை இருக்கவும்தான வந்துருக்கா?” என்றார் மகளுக்கு பரிந்து.
“அவ பிரச்சனை என்னனு உன்கிட்ட சொன்ன பிறகும் அவளை உனக்கு புரியலயா பிரபா? அவ கால்ல விழுந்தது தப்பை உணர்ந்து இல்ல. அவ பிரச்சனையை சரி செய்ய நம்ம துணை வேணும். அதாவது அவ வீட்டுல அவ கௌரவத்தை நிலைநிறுத்த பிறந்த வீட்டு சீர் வேணும். அதுக்காகத்தான் என் கால்ல விழுந்திருக்கா.” என்றதும் கண்ணீரோடு வெளியே வந்தாள் காவ்யா.
கோபாலன் மகளை பார்க்க பிடிக்காமல் இறுக்கமாக அமர்ந்திருந்தார். “என் பிரச்சனையை சரி செய்ய வரலப்பா. என் தப்பை உணர்ந்துதான் வந்தேன்” என்றாள்.
“ஓ… அப்போ இனி அங்க போகமாட்ட… அப்படியா?”
ஆமாம் என்பதாய் தலையசைத்தாள் காவ்யா. அதற்கும் கோபம்தான் வந்தது கோபாலனுக்கு. “சரி டிவோர்ஸ் பண்ணிடுறியா?” என்றார்.
காவ்யா அதிர்வாய் விழிவிரிக்க, “என்ன முழிக்கிற? அங்க போகமாட்டேன்னா டிவோர்ஸ் பண்ணித்தான ஆகனும்? அதுதான இதுக்கு நிரந்தர முடிவு. ஓடிப்போய் கல்யாணம் செய்துட்டு வாழவும் மாட்டேன்னா அவன் சும்மா விடுவானா? ஒருவேளை அவன் டிவோர்ஸ் கேக்கலனாலும் உனக்குத்தான் பிரச்சனை. ஏன்னா இன்னும் கொஞ்ச காலம்தான் என்னால உழைக்க முடியும்.
சம்பாத்தியம் இருக்கும்வரை பெத்த கொடுமைக்கு நான் உனக்கு சோறு போடுவேன். என் உழைப்பு நின்னுடுச்சுனா எங்களை மகன் பார்த்துப்பான். உன்னையும் சேர்த்து பார்க்கனும்னு விஷ்ணுக்கு என்ன இருக்கு?” என்றார்.
“நான் யாருக்கும் பாரமா இருக்கல” என்று உள்ளடக்கிய அழுகையோடு அறைக்குள் சென்றிட, பதறிப்போனார் பிரபாவதி.
“நான் நிதர்சனத்தை சொன்னேன் பிரபா. நம்ம வீட்டுலயும் ஒரு மேகலை வேணாமேனுதான் இவளை வீட்டுல சேர்த்துக்கிட்டேன். அதுக்காக இவ செய்த துரோகத்தை மறந்துட்டேன், மன்னிச்சுட்டேனு நினைக்காத” என்றார் கோபத்தோடு.
“இதே தப்பை செய்த மேகலைக்காக பார்ப்பிங்க. மகளுக்காக பார்க்க மாட்டிங்களா?” என்றார் ஆற்றாமையோடு.
“மேகலை கல்யாணம் செய்ததும் தப்புதான்னாலும், அதுக்கு மனசாட்சி உறுத்தியிருக்கு. அதனாலதான் கல்யாணம் செய்தும் புருசனோட போகாம அவங்கம்மா வீட்டுக்கு போனுச்சு. வீட்டுல விசயத்தை சொல்லி பெத்தவங்களை சம்மதிக்க வச்சிருக்கு. அவன் ஏமாத்துக்காரன்றதாலதான் மேகலைக்கு இந்த நிலை.
ஆனா உன் பொண்ணு அப்படியா? வீட்டை விட்டு போகும்வரை அமுக்கமா இருந்துட்டு, யார் வேதனைபட்டா என்ன? செத்தா என்னனு கிளம்பிட்டா.
காதலிக்கும்போது ஒரு மாதிரியும், கல்யாணம் செய்துக்கிட்டபின்ன ஒரு மாதிரியும் நடந்துக்கிறவனும் ஏமாத்துக்காரன்தான். கட்டினவன் ஏமாத்துக்காரனு தெரிஞ்சதும் கையில குழந்தையோட இத்தனை வருசம் ரோசமா மேகலை வாழ்ந்து காட்டியிருக்கு. உன் பொண்ணால அது முடியுமா? மேகலையோட இவளை ஒப்பிடாத” என்றார் கட்டளையாக.
“ஏங்க அதுக்குனு அப்படியே விட்டுடலாமா?”
“நான் என்ன செய்யனும்னு எதிர்பார்க்குற? திருட்டு கல்யாணம் செய்தவனுக்கு சீர் கொடுத்து, அவ புருசன்கிட்ட போய் என் மகளை ஏத்துக்கோனு போய் கெஞ்சட்டுமா?” என்றார் முறைப்பாக.
தன் கணவனுக்கு அப்படியொரு நிலையை கொடுக்க பிரபாவதிக்கும் விருப்பமில்லை. ஆனால் அவளுக்காக சேர்த்து வைத்த நகைகளையும், ரொக்கப்பணத்தையும் கொடுத்து கணவனோடு சேர்த்து வைக்கும் எண்ணத்திலிருந்தார் சராசரி அன்னையாக.
“ச்ச ச்ச… நான் அப்படிலாம் நினைக்கலங்க. காவ்யாக்காக யார் முன்னவும் நீங்க தலை குனிஞ்சி நிற்கவேணாம். அவளுக்கான சீரை மட்டும் கொடுத்தனுப்பிடலாம். ஏதும் செய்யலனுதான் அவங்க வீட்டுல எல்லாரும் இளப்பமா பார்க்குறாங்க. அதை தாங்க முடியாமத்தான் வந்துட்டா” என்றார் கோரிக்கையாக.
“பெத்தவங்க சம்மதம் வேணாம். ஆனா அவங்க கஷ்டப்பட்டு சேர்த்த பணம் மட்டும் வேணும்” என்று மகளை சாடி, “பெத்து வளர்த்தவங்க சம்மதமில்லாம பொண்ணையும் கட்டிக்கிட்டு அவங்கம்மா தரக்குறைவா பேசும்போது இவளை அட்ஜஸ்ட் பண்ண சொல்றவன் என்ன பிறவியா இருப்பான்?
அப்படிபட்டவனை மதிச்சு நான் நகை பணம் கொடுத்தனுப்பனுமா? இவகிட்ட கொடுத்தனுப்பினாலும் அவங்க பேச்சுக்கு பயந்து கொடுத்ததாதான் நினைப்பாங்க.
இன்னைக்கு நகை பணத்துக்கு தரக்குறைவா பேசுறவங்க, நாளைக்கு வேற காரணம் சொல்லி பேசுவாங்க. அதுக்காக அவங்க இஷ்டத்துக்கு நான் ஆடனுமா?” என்றார் கோபமாக.
“ஏங்க…” என்று பிரபாவதி கலங்க, “இவளை கட்டிக்கிட்டவன் படிச்சு முடிச்சு கம்பெனி ஆரம்பிச்சதுக்கப்புறம்தான் காதலிச்சிருக்கான், கல்யாணமும் செய்திருக்கான். ஆனா உன் பொண்ணு… யுஜி படிக்கும்போதே காதலிச்சிருக்கா.
பொண்டாட்டி கௌரவம் முக்கியம்னு நினைக்கிறவனா இருந்தா படிச்சிட்டிருக்க பிள்ளையை கல்யாணம் செய்துப்பானா? அவன் கல்யாணத்துக்கு அவசரப்படுத்தினாலும், உன்னை மாதிரி நானும் நல்லா படிச்ச பின்னதான் கல்யாணம் செய்துக்குவேன், அதுவரை வெய்ட் பண்ணுனு இவ சொல்லியிருக்கலாமில்ல.
இவளோட நாத்தனாரும் படிப்பை முடிச்சு பேங்க்ல வேலை வாங்கின பின்னதான் கல்யாணம் செய்திருக்கு. அப்போ இவளை கேவலமாத்தான் நினைக்கும்.
ஒருத்தர் தரக்குறைவா நினைக்கிற மாதிரியான சூழலை நாம கொடுக்கவும்தான அவங்க பேசுறாங்க? அவங்க தம்பி பொண்டாட்டி திறமையான பொண்ணா இருக்கனும்னு இவ நாத்தனார் ஆசைப்படுறதில என்ன தப்பிருக்கு?
திருட்டு கல்யாணம் செய்தாலும் உன் பொண்ணு புருசன் அவங்கப்பாம்மாகிட்ட பேசி சமாதானம் செய்திருக்கான். இப்போவரைக்கும் அவங்களோடதான் இருக்கான்.
ஆனா உன் பொண்ணு… போன்ல கூட அவளை கான்ட்டாக்ட் பண்ணிடக்கூடாதுனு அதையும் இங்கையே வச்சிட்டு போய்ட்டா. கல்யாணம் முடிஞ்சி இரண்டு மாசம் கழிச்சு வந்திருக்கா. அதுவும் காரியத்தோட வந்திருக்கா” என்றார் காவ்யாவை முறைத்தபடி.
இருவருக்கும் பேச வார்த்தையில்லை. தந்தையின் விளக்கத்திற்கு பின்னேதான் தனது கணவனின் சுயநலம் புரிந்தது. திருமணத்திற்கு அவசரப்படுத்திய போது, நீ இல்லாம என்னால ஒருநாள் கூட இருக்க முடியாது என்று எத்தனை கெஞ்சினான்? என்னை போல உனக்கு ஏதும் ஃபீலிங் இல்லையா என்று உரிமையாய் கோபப்பட்டான். அனைத்தும் அவன் உடல் தேவைக்காகத்தானோ என்று இப்பொழுதுதான் யோசித்தாள்.
மகள் மீது அக்கறை இல்லாமல் கணவன் இத்தனை பேசமாட்டார் என்று பிரபாவதிக்கு தோன்ற, “உங்களுக்கு என்ன தோணுதோ அதையே செய்ங்க” என்றார்.
“எதுக்கு? நான் எதாவது ப்ளான் செய்து, இவ திரும்பவும் சொல்லாம கொள்ளாம ஓடுறதுக்கா?” என்றார் இறுகிய முகத்தோடு.
error: Content is protected !!